title


தில்லு முல்லு

”பச்சைக் கிளிகள் தோளோடு”, கிருத்திகாவுக்கு மிகவும் பிடித்த பாடல்களுல் ஒன்று. அந்தப்பாடலின் இடையில் அப்பாவுக்கு மகள் “ஷேவிங்” பண்ணிவிடும் காட்சி வரும். அந்தப்பாடலை விரும்பி கேட்கத்துவங்கியதற்கு மறுவாரம் நான் ஷேவிங் பண்ணும்போது ஆசையாய் ஓடி வந்தவள் “அப்பா, நானு நானு” என கொஞ்சத்துவங்கினாள். ஆர்வத்துடன் நான் ப்ரஷை தந்தேன். நுரை நிரம்பிய ப்ரஷை, கையில் வாங்கியவள் என் முகமெங்கும் அப்பினாள், கிட்டத்தட்ட செவுத்துக்கு பெயிண்ட் அடிக்கறமாதிரின்னு வைங்க. நல்லவேளை வாயையும் கண்ணையும் முடீக்கொண்டிருந்ததால் தப்பினேன். அன்னிக்கு மட்டும் எம்பட மூஞ்சிய நீங்க பாத்திருந்தா, டெஸ்ட் கிரிக்கெட்ல வர பவுலர் ரேஞ்சுக்கு இருந்திருப்பேன். அதுக்கப்புறம், எம்மேல பரிதாபப்பட்டோ, இல்ல அவளுக்கே பாக்க சகிக்கலையோ என்னவோ, அந்தளவுக்கு பண்ணுறதில்லை. ஆனா, நான் எப்போது ஷேவிங் பண்ணத்துவங்கினாலும் அருகில் அமர்ந்து, ப்ரஷ், கிரீம் ஏதாவது எடுத்துக் கொடுப்பது அல்லது கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம்.
*
வூட்ல அம்மாவுக்கு நாம மீச இல்லாம இருந்தா ஆவாது. அருணாவுக்கு நாம கொஞ்சம் சுமார தெரியற எந்த கெட்டப்புமே ஆவாது. அதனால, மீச வக்காம இருக்கறதுக்கு, “வெள்ள முடி இருக்கு”, “ரொம்ப நேரமாகுது”, “ மீச, எச்சுக்கம்மியா போவுது” அப்படின்னு ஆயிரம் காரணம் சொன்னாலும் அத கேட்கறதேயில்லை. சரி, ஊரு ஒலகமே நமக்கு எதிரா இருப்பது வழக்கம்தானேன்னு நெனச்சுகிட்டு நானும் இப்பெல்லாம் மீச வச்சுக்கறது. சென்ற வாரம் அப்படித்தான், ஷேவிங் பண்ணிட்டு இருக்கும்போது வழக்கம்போல பக்கத்தில் இருந்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள் கிருத்திகா. திடீரென எதோ நினைத்துக் கொண்டவளாய் சொன்னாள்
“அப்பா, மீச வேணாம்பா”
பொங்கி வரும் சந்தோசத்துடன் கேட்டேன் “ஏம்பாப்பா ?”
“இல்லப்பா, முத்தா கொடுக்கயில குத்துதுப்பா”
சோகமாய் “இல்லமா, மீச வைக்காட்டி அம்மா திட்டுவாங்க” என்றேன்.
கொஞ்ச நேரம் என்னை பார்த்துக் கொண்டிருந்தவள், கேட்டாள் அந்த மில்லியன் டாலர் கேள்வியை
“ஏம்பா, மீச உங்களோடயது தானே…?”
”ஹீம் அதெல்லாம் ஒரு காலம் பாப்பா” என மனதில் நினைத்துக் கொண்டு ஒரு பரிதாபப் பார்வை பார்த்தேன்..
புரிந்தது போல ஒரு புன்னகை பூத்தாள் என் இளவரசி

ததாஸ்து

அனைவரையும் வகைப்படுத்தும்
உரிமையை
உங்களுக்கு நீங்களே
தந்துவிட்டீர்கள்
*
யார் நீ?
உன் அப்பன்? தாத்தன் ?
தாத்தனின் தகப்பன்?
அவரின் தந்தை ?
மொழி எது?
எந்த நிலம்?
கேள்விகளால் துளைக்கிறீர்கள்…
பதில்களில் சமாதானம் கொள்ளாமல்
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை
மீண்டும் ஒருமுறை நிறுவிக்கொள்கிறீர்கள்…
*
அனைத்துக்கும் மூலமாய்
இருந்தது ஒரு
ஆதிக்குரங்கு…
அதற்கென ஒரு வனம்
கனிமரங்கள்…
நீரோடை..
பசும்மரங்கள் சூழ் பெரு நிலம்…
அதுவே
என்னுடையது
உன்னுடையது
அவர்களுடையது
நம்முடையது….
*
ததாஸ்து…
#யாவரும்_கேளிர்

பரிணாமம்

கார் வாங்கின பின்னர், நடப்பதே பெரும்பாலும் அரிதாகிவிட்டது. சில சமயங்களில் நேரத்தின் அருமை கருதியும், பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளை சாக்கிட்டும், காரிலோ பைக்கிலோதான் பயணிப்பது வழக்கம். குறைவான படிக்கட்டுகள் இருந்தபோதும், ஊத்துக்குளி கதித்தமலைக்குக் கூட அடிவாரத்தில் இருந்து காரில்தான் செல்வோம். ஆனால் இன்று மாலை, கோவிலுக்கு செல்லும்போது, அடிவாரம் அடைந்தவுடன் கார்த்திக் படிக்கட்டில் நடந்து செல்லவேண்டும் என அடம் பிடித்தான். நாங்கள் அனைவரும் இறங்கி நடக்கலானோம்.
*
மென்காற்றுதான் இருந்தாலும் நன்கு வேகமாக வீசுக்கொண்டிருந்தது. குழந்தைகள் வேகமாக ஓட அவர்களுக்கிணையாய் நாங்கள் வேகமாய் நடந்து கொண்டிருந்தோம். பாதித்தூரம் கடந்திருப்போம். ”அருணா” என்று யாரோ ஒரு பெண் அழைக்கும் குரல் கேட்டு சற்றே நிதானித்தோம். அருணாவுக்கு நன்கு பழக்கமானவர் அவர். அவருடன் பேசிக்கொண்டே அருணா வர நாங்கள் நடக்கலானோம். நீண்ட நாட்கள் கழித்து பார்த்த ஒரு பரவசத்தில் அவ பல விசயங்களை பகிர்ந்து கொண்டு வந்தார். அதில் பெரும்பாலானவை அருணாவின் பால்யம் / பள்ளி சம்பந்தப்பட்டவை. அவர்கள் பேசிக்கொண்டே வர, தொந்தரவாயிருக்குமோ என சற்றே முன்னால் நான் நடந்து கொண்டிருந்தேன். இருந்தபோதும் அவர்கள் பேசியது எனக்கும் கேட்டது.
.
எவ்வளவுதான் நாம் வளர்ந்திருந்தாலும் நம்முள் நம் பால்யம் உயிர்ப்புடன் தான் இருக்கும். ஏதேனும் சம்பவங்கள் அல்லது உரையாடல்களால் அவை வெளிப்படும் தருணம் அற்புதமானது. இன்று அந்த அக்காவின் வார்த்தைகளில் அருணாவின் பால்ய / பள்ளி நினைவுகள் மீண்டெழுந்து வந்தன. அதில் பல சம்பவங்கள் ஏற்கனவே அருணா எனக்கு சொன்னதுதான். இருந்தபோதும் இன்னொருவர் அதை சொல்லுவதை நான் கேட்பது இதுவே முதல்முறை. அதில் ஒரு சம்பவம் அருணா பள்ளிக்கு கிளம்பும் சமயத்தில், ஒருவர் தலைவாரிவிட, அருணாவின் பாட்டி அவளுக்கு ஊட்டிவிட, அவள் படிப்பாளாம் (ஆத்தாடி! நாமெல்லாம் கிளாஸ்ல உக்காந்தே டிபன் போசியை தொறந்துபாத்த பரம்பரை). இந்தக்கதையை அருணா என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள். அதனால் மெல்லிய சிரிப்புடன் நான் திரும்பிப்பார்த்தேன்.
.
அருணா மீண்டும் அந்த காலத்துக்கே (தன் நினைவுகள் வாயிலாக) சென்ற மாதிரி இருந்தது. அங்கிருப்பவர் எவரையும் பார்க்காமல், தன் நினைவுகள் தந்த, பரவசம் கலந்த நெகிழ்ச்சியில் இருந்தாள் அருணா. ஏதாவது சொல்ல வேண்டும் போல் தோன்ற அவள் முகம் பார்த்தேன். அதில் தெரிந்தது என் மகள் முகம்.
*
பால்யத்தின் நினைவுகள் மேலெழும் தருணம் இயல்பாகவே மிக அழகானது. இன்றைய மாலைப் பொழுதின் ரம்மியத்தால் அது இன்னும் இன்னும் அழகாய் மாறியது.
:)

மெளனத்தின் சாரல்

ஒரு வட்டப்பாதையில்
எதிரெதிர் திசைகளில்
நடந்து கொண்டிருந்தோம் நாம்
*
ஆசிர்வதிக்கப்பட்ட
அரை நொடியில் ...
தீண்டிக்கொண்டோம் பார்வைகளால்
அடக்கமாட்டாமல் உதிர்த்தோம்
சிறு புன்னகையை
வெறுப்பதாய் காட்டிக்கொண்டு
கடந்தோம்
சிறு தலையசைப்பில்
*
பொன் முலாம் பூசிய இம்மாலையில்..
மெல்லிய சாரலுடன்
மணம் வீசும்
மகிழ மரத்தருகே...

நம்முன் இருக்கின்றன
ஆவி பறக்கும்
இரு தேநீர்க் கோப்பைகள்..

அதன் வெம்மையில்
கரைந்துகொண்டிருக்கிறது
நம் மெளனம் !

தென்றலின் தேன்மலர்

சில பாடல்கள் முதல்முறை கேட்டவுடனே பிடித்துப்போய் நம் விருப்பப்பட்டியலில் நிரந்தர இடம் பிடித்துவிடும். சில பாடல்களோ வெளிவந்த புதிதில் நமக்கு மிகவும் பிடித்துப்போய் காலப்போக்கில் நம்மிடமிருந்து விலகிப்போய்விடுபவை. இன்னும் சில பாடல்களை, நாம் எப்படியோ தவறவிட்டிருப்போம்; ஒரு மாயம் போல் திடீரென ஏதேனும் ஒரு வகையில் (பெரும்பாலும் FM வாயிலாக) நம்முன் வந்து நம்மை நிறைத்து விடுபவை. வெகு சில பாடல்களின் பல்லவி நமக்கு மிகப்பிடித்திருக்கும் (யாருயா அது பல்லவி என்று பல்லிளிக்க வேண்டாம் மக்களே.. அது பாடலின் துவக்கம்) ஆனால் போகப் போக சரணத்தில் நம்முடைய ரசனைக்கு தோதுப்படாமல் சறுக்கியிருக்கும். இது எதிலும் அடங்காத சில பாடல்கள் உண்டு; சரணமோ அல்லது பாடல் துவங்கும் விதமோ நமக்குப் பிடிக்காமல் போய் நாம் அதை தவறவிட்டிருப்போம். ஊர் ஒலகமே அந்தப் பாட்டை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், நம்முடைய ரசனைக்கேறப இல்லாததால் நாம் அந்தப்பாடலில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம். பின்னர் அப்பாடல் நம்மீது கருணை கொண்டிருந்தால், என்றேனும் ஒருநாள் அதனடியில் நாம் இளைப்பாற அனுமதிக்கும்.
*
ஒரிரு மாதங்களுக்கு முன்னர் வந்த ஒரு பின்மதியப் பொழுது அது. கோடைகாலம் என்றபோதும், வெப்பம் இல்லாமல், கொஞ்சம் மேகமூட்டமாய் இருந்த சமயம். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, நானும் என் நண்பனும் நடந்து வந்து கொண்டிருந்தோம். பேச்சு பலவிசயங்களை சுற்றிச்சுற்றி வந்தது. பேச்சின் காரணமாக, கடந்து செல்பவர்களை அசுவாரசியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தேவகணத்தில், ஆற்றின் அடியாழத்தில் கிடக்கும் கூழாங்கல் தன் எடையிழந்து மேலெழும்புவதைப் போல, எழுந்து வந்தது அந்த வரி.
.
பாடலின் இடையில் வரும் வரிதான். பாடலும் நிச்சயம் நன்கு ஹிட்டான பாடலாகத்தான் இருக்கவேண்டும்; ஆனால் நான் அடிக்கடி கேட்கும் பாடல் அல்ல. எவ்வளவு யோசித்தும் அது எந்தப்பாடல் என்பது நினைவுக்கு வரவில்லை. அன்று முழுவதும், வழக்கம்போல வேலை செய்தபோதும், நண்பர்களுடன் கூடிப்பேசிக் களித்த தருணங்களிலும், மனதின் ஒரு மூலையில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருந்தது அந்த வரி.
.
இரவில் வீடு திரும்பியபின்னர், கூகுளாண்வர் மற்றும் யூ-ட்யூப் துணையுடன் அந்தப்பாடலை கண்டுபிடித்தேன். அன்றிரவு மட்டும் குறைந்தபட்சம் ஒரு 5 முறையாவது கேட்டிருப்பேன். அதன்பின்னர் என் விருப்பப்பாடல் பட்டியலில் அந்தப்பாடலும் நிரந்தர இடம் பிடித்துவிட்டது. இன்றும் அப்பாடலின் பிற வரிகளைக் காட்டிலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான வரி அதுதான்.
*
ஒரு அழகான பாடலை நானடைய வழிகாட்டியாக இருந்த அந்த வரி
“தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே…”
.
ஒற்றை வரியால் என்னை அலைக்கழித்து, பின்னர் என்னை விட்டு நீங்காதிருக்கும் அந்தப்பாடல் :

https://www.youtube.com/watch?v=D4DcyAl_tiM
:)

Back to the Heaven

லெளகீக வாழ்க்கையின் எவ்விதமான சிக்கல்களும், நிர்பந்தங்களும் இல்லாமல், இலகுவான மனதோடு இருந்த நாட்களில் நமக்கு வாய்க்கும் உண்மையான நட்பு வட்டம் ஒரு வரம். என் பதின்ம வயதின் இறுதியில் எனக்கு வாய்த்ததோ வெறும் வரமல்ல; அது ஒரு பெரும்வரம். மனதில் தோன்றும் விசயங்களை ஒளிவுமறைவின்றி, சாதி, பால் பேதமின்றி கட்டற்று பேசும் சுதந்திரத்தை நமக்குத் தந்த நட்பு பெருவரமன்றி வேறென்ன. அதிலும், பொதுவாக எல்லாருக்கும் அவர்களுடைய நட்புவட்டம் சுருங்கிப்போய், அந்த இடத்தை பாடப்புத்தகங்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் உண்டான நட்பு எங்களுடையது என்பது தனிச்சிறப்பு.
*
நான் மேல்நிலை பள்ளிக்கல்வியை முடித்த ஆண்டு 2001.எங்கள் நண்பர் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் PSG Tech, அமிர்தா, PSG கலைக்கல்லூரி, நந்தா என திசைக்கொன்றாய் பிரிந்து போக, நான் கொங்கு கல்லூரியில் BSc சேர்ந்தேன். அதன் பிறகு ஒரிரு முறை ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்திருந்தபோதும், நாங்கள் பிரிந்த வருடம் என்றால் அது 2001தான்.
சமீபத்தில் முகநூல் வாயிலாக (ஒரு பதிவை தொடர்ந்து) பரஸ்பரம் ஒரு ”Hi”, “Hello”,”Hai, how are you ?” பரிமாறிக்கொண்டோம். அதன் பின்னர், ஒரு குழுவாய் அன்றாடம் குறுஞ்செய்திகள் வாயிலாகவும், சில Conference Callகள் மூலமாகவும் தொடர்பில் இருந்தோம். அதன் ஒரு பகுதியாகத்தான் திட்டமிட்டோம் ஒரு சின்ன சந்திப்பை. இந்த வாரம் Long Weekendஎன்பதால் சந்திக்கும் தேதி ”25-ஜூன்” என முடிவெடுத்தோம். உண்மையைச் சொல்லவேண்டுமானால் இந்த சந்திப்புக்காய் நாங்கள் உருப்படியாய் திட்டமிட்டதும், திட்டமிட்டபடி சரியாய் அமைந்ததும் சந்திக்கும் தேதி மட்டுமே. அப்படியே, சரியாக 16 வருடங்கள் கழித்து நாங்கள் 5 நண்பர்கள் நேற்று கோவையில் சந்தித்தோம்.
*
”நாம மீட் பண்ணலாம் அவ்வளவுதான் மத்ததெல்லாம் Runtimeல ப்ளான் பண்ணிக்கலாம்” என typical IT மொழியில் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததால், சந்திப்பைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் மனதில் இல்லை.
.
06-25-2017 ஞாயிறு – உத்தேசமாக காலை 10:30 மணி
-
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து துவங்கியது எங்கள் பயணம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்ததால் கார் முன் நோக்கி சென்றுகொண்டிருக்க, சிந்தனைகளும் காலமும் பின்நோக்கி சென்றுகொண்டிருந்தன. போகும் இடம் பற்றி எந்த ஒரு இலக்கும் இல்லாதபோதும் ஏதேனும் ஒரு திசையில் பயணித்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் ஈஷாவுக்கு செல்லலாம் என முடிவெடுத்து R.Sபுரம்தாண்டி வடவள்ளி சாலையில் பயணிக்கத் துவங்கியிருந்தோம். வார்த்தைகளால், எண்ணங்களால், மனதில் நிறைந்திருந்த நினைவுகளால் மீண்டு வந்தது கடந்துபோன எங்கள் வசந்தகாலம். பெரும்பாலான சம்பவங்களை, அந்தந்த நேரத்து உணர்ச்சிகளுடன் துல்லியமாக மீட்டெடுக்க முடிந்ததில் தெரிந்தது, அந்த காலகட்டத்துக்கு / அந்த சம்பவங்களுக்கு நாங்கள் எங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்திருந்தது. இதற்கிடையே, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை “பார்த்து”விட்டு, பூண்டிக்கு சென்றோம் அங்கு வெள்ளியங்கிரி ஆண்டவரை “தரிசித்து”விட்டு கோவைக்கு திரும்ப காரில் ஏறினோம். அந்த நாளின் மகிழ்ச்சி பெருமகிழ்ச்சியாகும்படி பெய்தது மழை.
.
அடித்துப்பெய்யும் பெருமழையல்ல, மண்ணைக் கொஞ்சும் செல்ல மழை. நாசியை நிறைத்த மண்வாசத்துடன் பழங்கதைகள் பேசியபடியே சென்ற பயணத்தை அழகை உணரவேண்டுமானால் நீங்களும் அத்தகைய பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். மதிய உணவு அன்னபூர்ணா Peoples Parkல் முடித்துவிட்டு எங்கள் பயணத்தைத் (நினைவுகளை) தொடர்ந்தோம். எங்கள் சந்திப்பு அவிநாசியில் முடியும் போது மணி மாலை 6:30.
*
பல வருடங்கள் கழித்து நாங்கள் சந்தித்தபோதும், அப்போது நாங்கள் விட்ட இடத்திலிருந்து எங்கள் உரையாடலைத் துவக்கமுடிந்ததும்… “நம்ம ப்ரண்டுடா...” எனும் உரிமை இன்றும் தொடர்வதும் அற்புதம்தான். இந்த ஒட்டுமொத்த பயணத்தையும் சிரிப்பால் நிறைத்துக்கொண்டோம். கண்ணில் நீர் வழிய சிரித்தும்; சிரித்து சிரித்தே வயிறு வலித்ததுமான இந்தப்பயணம் எங்கள் நினைவில் வெகுகாலம் நிலைத்திருக்கும்.
*
வாழ்வில் நூறானந்தம் :) வாழ்வே பேரானந்தம் :)
A Special Thanks to Facebook :)

கவியும் இசையும்

அப்பா அதிதீவிர சிவாஜி ரசிகர். பெரும்பாலான சிவாஜி படங்களை காட்சிக்கு காட்சி நினைவு வைத்திருப்பவர். அதைப்போலவே சிவாஜி நடித்த ஹிட் பாடல்கள் அனைத்தின் வரிகளும் அப்பா மனதில் பதிந்தவை. அவரிடமிருந்துதான் பழைய பாடல்களை ரசிக்கக் கற்றுக்கொண்டேன். பல நூறு பாடல்களை அவரின் ரசனையில் இருந்து நான் சுவீகரித்துக்கொண்டாலும், இந்தப் பாடல் அந்த liStல் முன்னணியில் இருப்பது.
*
திருமண வாழ்வி்ன் முதல் வருடத்தை நானும் அருணாவும் வாழ்ந்தது சென்னையில். எப்படியும் மாதம் ஒருமுறை ஊருக்கு வரும் போதும், மெரினா பீச்சுக்கு செல்லும் போதும், வேளச்சேரி to Beach Station செல்லும் ரயிலில்தான் பயணித்திருக்கிறோம். அப்போதெல்லாம், ஒற்றை headsetன் வலதுமுனையை என் காதிலும் இடதுமுனையை அருணா காதிலும் பொருத்திக்கொண்டு கேட்ட பல பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல் இது.
*
இன்றும் எனக்கு மிகப்பிடித்த பழைய பாடல்கள் என ஒரு பட்டியல் எடுத்தால் அதில் எப்படியும் முதல் ஐந்து பாடல்களுக்குள் இந்தப்பாடலும் இருக்கும்.
.
இன்று பிறந்த கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதனும் நமக்குத் தந்த ஆயிரமாயிரம் கொடைகளுல் மிக முக்கியமான ஒன்று இதோ :

https://m.youtube.com/watch?v=0Ded74fqkOA

என் வாழ்வை வசந்தமாக்கும் மேதைகளுள் முக்கியமான இருவருக்கு இந்த நன்நாளில் வணக்கங்கள்  :)

கொடக்கோனார் கொலை வழக்கு

ஒரு மனிதனையோ அல்லது ஒரு குடும்பத்தையோ முன்னிருத்தி, அதன் மூலமாக நாம் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கச் செய்யும் நாவல்கள் ஒருவகை என்றால், ஒரு காலகட்டத்தை எடுத்துக்கொண்டு அக்காலகட்டத்தில் ஒரு நிலப்பரப்பை மையப்படுத்தி பல மனிதர்களின் வாழ்க்கைக்குள் நம்மையும் ஒரு மெளன சாட்சியாக்கும் நாவல்கள் இன்னொரு வகை. திரு. அப்பணசாமி அவர்கள் எழுதி ”எதிர் வெளியீடு” பதிப்பித்திருக்கும் “கொடக்கோனார் கொலை வழக்கு” என்னும் நாவல் இரண்டாம் வகையைச் சார்ந்தது.
*
டவுன் பஜாரில் உள்ள ஏகாம்பர முதலியார் ஜவுளிக்கடையில்தான் நாவலின் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகின்றனர். நாவல் தலைப்பின் நாயகனான கொடக்கோனாரை கொலை செய்யும் முயற்சியில் துவங்கும் நாவலில், இறுதியான சில பக்கங்களில்தான் வழக்காக மாறும் கொலை அரங்கேறுகிறது. இடைப்பட்ட பக்கங்களில் நிறைந்திருப்பதெல்லாம் 1980களின் வாழ்க்கை.. பலதரப்பட்ட மனிதர்களின் வலியும் களிப்பும் நிரம்பிய வாழ்க்கை. மில் வேலைக்கும் தீப்பெட்டி ஆபிஸ் வேலைக்கும் போகும் நடுத்தர வர்க்க மக்களுக்கான பல நவ நாகரீக கடைகளுக்கு மத்தியில், கரிசல் காட்டு விவசாய சம்சாரிகளின் தேவைக்காய் இருக்கும் சிறுகடைகளில் ஒன்றுதான் ஏகாம்பர முதலியார் ஜவுளிக்கடை. ஜவுளிக்கடை திண்ணைதான் பல முக்கியஸ்தர்களின் ஜமா. இயல்பான உரையாடல்களாலும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் உரிமையான பேரங்களாலும் நிரம்பி வழியும் திண்ணை அது. மாறி வரும் நாகரீக கூத்துகளுக்கு மத்தியிலும் எளிய மனிதர்களுக்கான ஒரு பற்றுக்கோல் இருப்பதற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது அந்த ஜவுளிக்கடை.
.
கதையில் சொல்லப்படும் பல மனிதர்களின் வாழ்க்கையில் நான் மிகவும் நெருக்கமாக உணர்ந்தது “உமர் சாயிப்பின்” கதையைத்தான். கடலங்குடி ஜமீன் என சொல்லும் அளவுக்கு பணமும் புகழும் கொண்டது வாப்பிசட்டப்பாவின் குடும்பம். வாப்பிசட்டப்பாவின் செல்லப்பேரன் உமர்சாயபு. துணிகளில் பொத்தான்களுக்கு பதிலாக விலை உயர்ந்த கற்களைப் பதித்துக்கொள்ளும் அளவுக்கு செல்வம் மிகுந்திருந்த கடலங்குடி ஜமீனின் வாரிசுகளில் ஒருவரான உமர்சாயபு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைச்சுமையாய் துணிகளை சுமந்து சந்தைகளில் ஜவுளி வியாபாரம் செய்து கழிக்க நேர்ந்ததில் இருக்கிறது வாழ்க்கையின் விசித்திரங்கள்.
.
அதைப்போலவே, தலைச்சுமை வியாபாரியாய் தன் வாழ்க்கைத்துவங்கும் ஏகாம்பர முதலியார், ஜவுளிக்கடை அதிபராகிறார்; அவரே தன் வாழ்வின் அந்திமத்தில் யாரும் எதிர்பாரா வகையில் மீண்டும் தலைச்சுமை வியாபாரியாய் அலைய நேர்வதில் இருக்கிறது காலத்தின் சுழற்சி கணிக்க முடியாதது எனும் உண்மை.
.
பலதரப்பட்ட மனிதர்கள் உலவும் நாவலில் நான் சுவாரசியமான இரண்டு கதாபாத்திரங்களாகக் கருதுவது கோமளவண்ணனையும், ஏகாம்பர முதலியாரின் மூத்த மருமகளையும்தான். பொதுவாக, பிறந்தவீட்டுப் பெருமை பேசும் பெண்கள்தான் அதிகம்; அதிசயமாய் புகுந்த வீட்டின் பெருமையை அங்கீகரிக்கும் பெண்களும் உண்டு. ஆனால், தனம் இந்த இரண்டு விதத்திலும் சேராதவள். புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் மீது குற்றம் சொல்லிக்கொண்டும்; பிறந்த வீட்டில் புகுந்த வீட்டின் குறைகளை முன்னிருத்திக் கொண்டும் அவள் அடைய விரும்புவது, அக்கரையிலும் சரி இக்கரையிலும் சரி தன் முக்கியத்துவத்தை மட்டும்தான். சில பக்கங்களே வந்தாலும் இடத்துக்குத் தக்கபடி மாறிக்கொள்ளும் அவளின் இயல்பு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
.
தான் விரும்பும் செயல்களை செய்துகொண்டு, தன் மனம் விரும்பும் வாழ்க்கையை வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதிலும், புரிந்துகொண்டோ அல்லது திருத்த முடியாமலோ, அவன் செயல்களை ஏற்றுக்கொள்ளும் குடும்பம் அமைந்தவர்கள் பாக்கியவான்கள். கோமளவண்ணனுக்கு வாழ்க்கையே சினிமாதான்; சினிமாவுக்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்துவிட்ட அவன் ப்ரியத்தை பெற்றவர்களும் மனைவியும் புரிந்துகொண்டுவிட, குடும்பம் குழந்தை என்றான பின்னரும் தன் ரசனைப்படி அமைந்த கோமளவண்ணன் வாழ்வது கிட்டத்தட்ட ஒரு connoisseur-ன் வாழ்க்கை.
*
இவை மட்டுமல்ல, இந்த நாவல் காட்டும் வாழ்க்கையும், மனிதர்களும் காலகட்டமும், முக்கியமாக கொடக்கோனார் கொலையும் அதன் விளைவுகளும் என அனைத்து அம்சங்களும் அருமை. ஒரு வாசிப்பின் வழியே இந்த நாவல் நமக்கு தானமிட்டிருப்பது பலதரப்பட்ட வாழ்க்கையை அருகிருந்து பார்த்த ஒரு அனுபவத்தை.
.
அனுபவங்களால் அமைகிறது நம் வாழ்க்கை...
 :)

ரெண்டோடும் சேராத பொன் நேரம்

அப்போது நான் படித்துக்கொண்டிருந்தது பதினொன்றாம் வகுப்போ, பனிரெண்டாம் வகுப்போ நினைவில்லை. ஆனால் அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பின் மதியப்பொழுது என்பது மட்டும் நினைவிருக்கிறது. காரணம் மத்தியானம் சாப்பிட்ட கறிக்கொழம்பு. உண்ட களைப்பில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பினார் அப்பா. கொஞ்சம் பலமாகத் தட்டியதால் உடனே எழுந்துவிட்டேன். என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் டிவியை ஆன் செய்து சன் ம்யூசிக் சேனல் வைத்துவிட்டு, என்னை முறைத்தபடியே கடைக்குள் சென்றுவிட்டார். அந்த சேனலில் அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது எனக்கு மிகப்பிடித்த பாடல். இப்போது போல Youtubeம், தொடுதிரை கைப்பேசிகளும் இல்லாத காலம் அது; நமக்குப்பிடித்த பாடல்களை இந்தமாதிரியான தருணங்களில்தான் கேட்கமுடியும். அந்த extra மகிழ்ச்சியில் சட்டென்று தூக்கம் கலைந்தவனாக அந்தப்பாடலை மெய்மறந்து பார்க்கத் துவங்கினேன். பாடல் முடிந்த பின்னர்தான் எனக்கு அந்த முக்கியமான கேள்வி தோன்றியது. “ஆமா, நமக்கு அந்தப்பாட்டு புடிக்கும் செரி. அதெப்படி அப்பாவுக்குத் தெரியும் ?” எவ்வளவு யோசித்தாலும் விடை கண்டுபிடிக்க முடியாதிருந்த அந்தக்கேள்விக்கு பதில் அன்றிரவே எனக்குத்தெரிந்தது.
*
அப்பா எதற்குமே என்னை அடித்ததேயில்லை, திட்டிய சந்தர்ப்பங்களும் மிக மிகக் குறைவு. அதுதான் அப்பாவின் ஸ்டைல்; என்மீது ஏதாவது கோபம் என்றால் என்னிடம் பேசமாட்டார். ஒன்று நான் சமாதானப்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் அவரே தானாக சமாதானமடைய வேண்டும் அவ்வளவுதான். அன்றிரவு, கடை மூடியபின்னர் அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மதியம் என்னை எழுப்பி அந்தப்பாடலை பார்க்கவைத்த பின்னர் அப்பா என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. என்மீது செம கோபத்தில் இருக்கிறார் எனப்புரிந்தது. அப்போதும் என்ன காரணத்தால் கோபம் என்பது தெரியவில்லை. சரி கொஞ்சமாவது நல்ல பேர் எடுக்கலாம் என்று பக்கத்து அறையில் நான் படிப்பதாக பாவ்லா காட்டிக்கொண்டிருந்தேன். கண் வெறுமனே புத்தகத்தில் நிலைத்திருக்க, என் உடம்பில் இருந்து காது மட்டும், அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்த விசயத்தை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தது. என் பெயர் அதில் அடிபட்டதுதான் அத்தனை உன்னிப்புக்குக் காரணம்.
.
அப்பா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்…
“இவன் கூடப்படிக்கற பொண்ணு போன் பண்ணி, அங்கிள் காளீஸ் இருக்கானான்னு கேட்குது. நான் அவன் தூங்கறான்மான்னு சொல்றேன். அதுக்கு அந்தப்பொண்ணு சொல்லுது, பரவாயில்லை அங்கிள் அவனை எழுப்பி சன் ம்யூசிக் பாக்க சொல்லுங்க, அவனுக்கு புடிச்ச பாட்டு ஓடிட்டு இருக்குன்னு. கடை யாவாரத்தை உட்டுட்டு இவனை எழுப்பி அந்தப்பாட்டை போட்டுவிட்டு நான் கடைக்கு வந்திட்டேன். இவனெல்லாம் ஸ்கூல்ல என்ன லட்சணத்துல படிப்பான்னு பாரு”
.
வெகு வேகத்தில் பேன் சுத்திக்கொண்டிருந்த போதும், அந்த உரையாடலைக் கேட்டமாத்திரத்தில் குப்புன்னு வேர்த்திருச்சு எனக்கு. அதுவேற என் வீட்டுக்கு போன் வந்திருந்த புதுசு. ஆர்வக்கோளாறாய் ஒரு துண்டு சீட்ல போன் நம்பர் எழுதி, பள்ளிக்கூடத்தில எனக்குத் தெரிஞ்ச எல்லாத்துக்கும் பிரசாதம் போல கொடுத்திருந்தேன். அதனால் போன் பண்ணின தோழியை என்னால் உடனே கண்டுபிடிக்க முடியல. அத்தனை களேபரத்திலும் ஒரே ஆறுதல், நான் ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்ததுதான். இல்லாவிட்டால் ஒன்று கறிக்கொழம்பை தியாகம் செய்திருக்கவேண்டும்; இல்லாட்டி சாப்பிட மீண்டும் முன்னறைக்கு செல்ல வேண்டிய தர்மசங்கடத்தை சமாளித்திருக்க வேண்டும். அப்போது இரண்டுமே தேவைப்படாததால் கொஞ்சம் ஆறுதல்தான். சற்று நேரம் ஆங்கிலம் படிப்பதாய் சத்தம் போட்டுவிட்டு ஒருவழியாய் தூங்கினேன்.
.
மறுநாள் பள்ளியில் சம்பந்தப்பட்ட தோழி “என்ன Jack, பாட்டு பாத்தியா ?” எனக்கேட்க, பதிலுக்கு நான் நடந்த கதை சொல்ல.. ஒரே சிரிப்புமயம்தான்.
இன்றும் அப்பாடலை நான் கேட்கும்போதெல்லாம், “உன்னையெல்லாம்,…“ என எண்ணியபடியே அப்பா என்னை முறைக்கும் காட்சியும் வந்துபோகும்
என் வாழ்வில், பல வகைகளில் நான் மறக்கவே முடியாத அப்பாடல் :
https://www.youtube.com/watch?v=12rHbb79J8s

மரகத நாணயம்

வேலை கொஞ்சம் சீக்கிரமாய் முடிந்துவிடும் தருணங்களில் பெரும்பாலும் கோவையிலேயே இரவுக்காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். என்னுடைய ரசனை புரிந்த காரணத்தால் (அல்லது, இவன் சொன்னாலும் கேட்கமாட்டான் என்பது புரிந்து, தண்ணி தெளிச்சு விட்டுவிட்டதால்) அப்பாவும் அருணாவும் எளிதில் அனுமதித்துவிடுவார்கள். பொதுவாக மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது அப்படி இரவுக்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த வழக்கம் கடந்த 6 – 7 மாதங்களாக இல்லாமல் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று அலுவலக நண்பர்களுடன் இரவுக்காட்சிக்கு கோவை சத்யம் சினிமாஸ்க்கு சென்றிருந்தேன். படம் “மரகத நாணயம்”.
*
பேரழகியான நாயகி படம் முழுவதும் பேசுவதோ நாம் சற்றும் எதிர்பாரா விதத்தில், தமிழாசிரியர் பாத்திரம், ஒவ்வொரு நிகழ்வுக்கும் அட்டகாச ரியாக்ஷன் காட்டும் முனீஸ்காந்த், மற்றவர்களுடன் ஆனந்தராஜ் டீல் பேசும் வழிமுறை, அவரது அடியாட்கள் என படம் முழுவதும் சுவாரசியங்கள். ஆரம்பத்தில் சில காட்சிகள் தவிர, படம் எந்த இடத்திலும் தொய்வின்றி அற்புதமாக நகர்கிறது, இது ஒரு பேய்ப்படம். பொதுவாக ஏழுகடல் ஏழுமலை தாண்டி எவனாவது பேய்ப்படம் பாத்தாலே, கண்ணையும் காதையும் பயந்து மூடிக்கொள்ளும் தைரியசாலி நான். ஆனால், இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வாய்மூடாமல் சிரித்துக்கொண்டிருந்தேன். கடைசியாக இப்படி சிரித்துகொண்டு (பயந்துகொண்டும்) பார்த்த ஒரு (பேய்ப்)படம் “யாமிருக்க பயமே”. இந்தப்படமும் அப்படியொரு ரகளையான காம்பினேசன்தான். அதிலும் குறிப்பாக முனிஸ்காந்த் வரும் காட்சிகளிலும், ஆனந்தராஜ் வரும் காட்சிகளிலும் கண்ணில் நீர்கோர்க்குமளவு, வயிறு வலிக்க வலிக்க சிரித்து மகிழ்ந்தோம்.
*
மரகத நாணயம் – தவறவிடவேண்டாம்; இன்புற்றிருக்க ஒரு நல்வாய்ப்பு  :)

வாழும் மதம்

நான் அணியும் குல்லாவோ
என் முகத்தின் தாடியோ
அன்றி வெறும் பெயரோ
எதேனும் ஒன்றால்
என்னை முகமதியன் என்றீர்கள்….
.
அதிகாலையில் ஸ்ரீசூரணமும்
மாலையில் திருநீரும்
நெற்றியில் துலங்க.....
உங்களுக்கும் குழப்பம்தான் – எதற்கும்
இருக்கட்டும் என ”இந்து” ஆக்கினீர்கள்
.
சிரசில் முள்முடி அணிந்த
தேவகுமாரனை நோக்குந்தோறும்
சிலுவைக்குறியுடும் இயல்பினன் - ஆதலால்
என்னை கிறித்தவ வட்டத்தில்
நிறுத்தினீர்கள்
.
வெறுத்துப்போய் இது எதுவும்
வேண்டாமென துறந்த நாளில்
அதற்கும் ஓர் மதம் உண்டு - என
அதிலே தள்ளினீர்கள்…
.
உங்களுக்குத் தோதான
மார்க்கத்தில் / பாதையில் என்னை
அடைக்குந்தோறும்
இன்னும் இன்னும் வீரியமாய்
வாழ்தலில் / பயணத்தில் கரைகிறேன் நான்…

தந்தையர் தினம்

எட்டாவது படிக்கும் மாணவனின் தமிழ் நோட்டில் சில பக்கங்களில் மட்டுமே பாடம் சம்பந்தப்பட்ட குறிப்புகள். அதைத்தவிர பெரும்பாலான பக்கங்களில் இருந்தவை கவிதைகள். அதிலும் பெரும்பாலானவை காதல் கவிதைகள். ஒரு சுப யோக சுபதினத்தில் அந்த தமிழ் நோட்டு அவன் அப்பாவிடம் சிக்கிவிட்டது.. கூடவே அவனும்தான். அப்பா அப்படியொன்றும் மெத்தப்படித்தவரில்லை. ஒரு சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருப்பவர் அவ்வளவுதான். என்றாலும் மகனை அருகில் அழைத்து அவன் கவிதைகளில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டினார். கூடவே எதுகை மோனைகளை பயன்படுத்துவதன் அழகையும். இதுமட்டுமல்ல இதைப்போல பல சம்பவங்களில் அவர் இப்போதிருக்கும் modern அப்பாக்களைப் போலத்தான் நடந்திருக்கிறார். இன்று அவர் மகனும் ஒரு அப்பா.
.
என் வாழ்க்கையில், என் அப்பா அளவுக்கு ஒரு நல்ல அப்பாவாக நான் இருந்தால் போதும். ஆனால் அதுவே ஆகப்பெரிய சவால் :)
.
கருவில் சுமக்கும் அன்னையையும் பிள்ளைகளுடன் சேர்த்து நெஞ்சில் சுமக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்... :)

பொன் வீடு

வீதி மண்ணின் ஒரு பங்கை
வீடெங்கும் இறைத்து வைத்தாள்…
.
காகிதத்தை துகள்களாக்கி
கடைபோல விரவி வைத்தாள்..
.
கதவு நிலை ஜன்னல்களில்
கணக்கின்றி கிறுக்கி வைத்தாள்
.
காய்கறிகள் தானியங்கள் என
கண்டதெல்லாம் பரப்பி வைத்தாள்…
.
குப்பைகளால் தூசுகளால்
முழு வீட்டை அலங்கரித்தாள்..
.
பச்சை இலை, சருகுகளால்
பாதையொன்றை அமைத்து வைத்தாள்..
.
பொரி கடலை வகைகளையோ
பூக்களாய் தூவி வைத்தாள்
.
பொன்னால் இழைக்கப்பட்டதாய்
மோட்சமடைந்தது
என் வீடு !
:)

மருந்தாகும் ஆயுதம்

தயக்கம் தவிர்த்து
உதிர்க்கப்படும் சில சொற்கள்
தகர்க்கக்கூடும் பலவருடப்
பகையை…
*
நம் அறியாமை இருளின்மீது
வெளிச்சம் பாய்ச்சக் கூடும்
அறிவார்ந்த சில உரையாடல்கள்
*
இமைகளை தூக்கம்
பிடித்திழுக்கும் நள்ளிரவுகளைக் கூட
உற்ற தோழமையுடன்
உரையாடிக் கழி(ளி)க்க முடியும்
*
வெம்மைசூல் பெரும் பகலை…
நெடுந்தொலைவு பயணங்களை..
வெறுமை வழியும் கொடும் நாட்களை
தீராப் பெருந்துயரை
உரையாடல்களின் துணைகொண்டு
உறுதியாய் கடக்க முடியும்
*
இப்பேரண்டம் கண்ட
பெரும் ஆயுதம் எதுவோ….
ஆழ்காயம் ஆற்றும்
அருமருந்தும் அதுவே….
.
சொற்கள் !

ஹி ஹி...

அருணாவுக்கு அன்றாடம் 8 மணி டியூட்டி. அம்மா உணவு தயாரிப்பார்கள்; அப்பா மாவு விற்பனை. பாத்திரம் துலக்கி, கிளம்புவே அருணாவுக்கு நேரம் சரியாக இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகளை பல் துலக்கி, குளிப்பாட்டும் பொறுப்பு (சாப்பாடு ஊட்டுவது தனிக்கணக்கு) என்னுடையது. காலை வேளைகளில் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்புவதுபோல் டென்சனாக்கும் வேலை பிறிதொன்றில்லை. நாம் ”குளிக்க வாடா” என அவசரத்தில் கத்தும்போதுதான் கார்த்திக் மும்முரமாக ஏதாவதை ரசித்துக்கொண்டிருப்பான். ”பாப்பா, வாய திற பல்லு வெளக்கலாம்” என கதறும்போதுதான், மற்றெல்லா சமயத்திலும் வாய் மூடாது பேசிக்கொண்டிருக்கும் கிருத்திகா, ஃபெவி குயிக் போட்டதுமாதிரி வாயை மூடிக்கொண்டிருப்பாள். ஆக, இவிங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பறதும் பத்துப்பதினஞ்சு ராக்கெட் விடுறதும் கிட்டத்தட்ட ஒண்ணு.
*
இன்றும் வழக்கம்போலதான், 7:15 மணியளவில் கார்த்திக்கையும் கிருத்திகாவையும் எழுப்பினேன். அடுத்தகட்ட நடவடிக்கை பல்லு விலக்கிவிடுவது. இந்த இடத்துல முக்கியமான ஒரு குறிப்பு இருக்குது; கிருத்திகாவ பொருத்தமட்டில் இந்த மாதிரி விசயங்களில் ஓரளவு பரவாயில்லை; அதாவது பல் துலக்க வாய திறக்க வைக்கிறது மட்டும்தான் கஷ்டம்; அதுக்கப்புறம் இறக்கத்துல சைக்கிள் ஓட்டுற மாதிரி வண்டி ஓரளவுக்கு ஸ்மூத்தா போயிடும். ஆனா, பயபுள்ள கார்த்திக் இருக்கானே, அவன வாய திறக்கவைக்கறதும் கஷ்டம், பல்துலக்கி விடுறதும் கஷ்டம். வேறொன்னுமில்ல, கரெக்டா பல் விலக்க ஆரம்பிச்சா சொல்றதுக்குன்னே அவன்கிட்ட நிறைய விசயம் ஸ்டாக் இருக்கும்; ஒருவழியா அத எல்லாம் கவனிக்காம அவன டைவர்ட் பண்ணி பல் துலக்கி விடுறது பெரிய கலை. இன்னைக்கும் அப்படித்தான், கரெக்டா பல் விலக்க துவங்கும்போது ஏதோ சொல்ல வாயெடுத்தான். (உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல) அதிகாலையிலேயே எழுந்துவிட்டதால் எனக்கும் சற்று தூக்கக்கலக்கம், போதாதற்கு நம்மாளு ஹிஸ்டரிப்படி, பல் விலக்கும்போது சொல்லும் கதைதான் என்று, மீண்டும் மீண்டும் ஏதோ சொல்லவந்தவனை அதட்டி உருட்டி அடக்கி பல் துலக்கிவிடத் துவங்கினேன்.
.
இரண்டு தேய்ப்புதான் தேய்த்திருப்பேன், கையை தட்டிவிட்டான். எப்போதும் இது வழக்கமில்லை; ஆக, ஏதோ சீரியசான விசயம் இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு வாயை ரிலீஸ் பண்ணினதுதான் தாமதம். வாய் நிறைய நுரையுடன் கதறும் குரலில் குழறலாகச் சொன்னான்
“அப்பாஆஆஆஆஆஆ, அது பாப்பா ப்ரஸ்சுப்பா…”
தகப்பனின் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா… :)

கேள்வியின் நாயகர்கள்

பேரன்புடையீர்,
சற்றே கருணை வையுங்கள்…
*
ஆயுள் முழுவதும் பேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும் சொல்ல
ஆயிரம் கதைகள் உண்டு
என்னிடம்
*
ஒற்றைக்கோப்பையில்
எச்சில் தேநீரை நாம்
பரஸ்பரம் பகிர்ந்து அருந்துவதில்
யாதொரு தயக்கமும் இல்லை
எனக்கு
*
வலி மிகுந்த உங்கள் துயரங்களை
எனதென எண்ணி மருகும் மனதும்
உங்கள் விழி நீர் துடைக்கும்
கரமும் என்னிடமுண்டு….
*
சொன்னவனை கருதாது
சொற்களைக் கருதும்
பகுத்தறியும் புத்தி
கொஞ்சம் உண்டு.
*
உங்களைப் போலத்தான் நானும்...
அடித்தால் எனக்கும் வலிக்கும்
என்னுடைய அன்பு வீணாகுந்தோறும்
கண்ணீர் சிந்துவேன்
பசித்தால் உண்பதும்
என்னுடலில் கீறினால் ரத்தம் வருவதும்
அப்படியே உங்களைப் போலத்தான்…
*
ஆகவே, தயவுசெய்து
என் முகத்தெதிரே நீட்டாதீர்
உங்கள் ஜாதியை…
.
அப்படியே அருள் கூர்ந்து
நேரடியாகவோ மறைமுகமாகவோ
கேட்காதீர் அந்தக் கேள்வியை….
.
“நீ என்ன ஜாதி ?” எனும்
அந்தக் கேள்வியை…

11 ஜீன் 2017

2009 ஆம் வருட மத்தியில் ஒரு நாள்…
சென்னையிலிருந்து கோவை செல்லும் intercity ரயில் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பப்போகிறது... திருமணம் முடிந்து மறுவீடு வைக்கும் சடங்குக்காக சென்னை வந்திருந்த அத்தையையும் மாமாவையும் வழியனுப்ப நானும் அருணாவும் சென்னை சென்ட்ரலில் இருந்தோம். ரயில் கிளம்புவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தன. என் கைகளை பிடித்துக்கொண்டு, கலங்கிய கண்களுடன் நெகிழ்ந்த குரலில் என் மாமனார் சொன்னார், "மாப்ள, அருணா கொஞ்சம் கோவக்காரி, சின்ன விசயத்துக்கு கூட சட்டுன்னு டென்சன் ஆகிடுவா... கொஞ்சம் பாத்துக்குங்க" என்றார். ”அதுக்கென்னங்க மாமா பாத்துக்கலாம்ங்க” என தைரியம் சொல்லி அனுப்பினேன். ஆனால், இவ்வளவு வருட திருமண வாழ்க்கையில் நான் அடிக்கடி நினைத்துப்பார்க்கும் தீர்க்கதரிசி என் மாமனார்தான். அதுமட்டுமல்ல, அன்று அவர் கண் கலங்கியதும், கொஞ்சம் பாத்துக்கோங்க என சொன்னதும் என்னை நினைத்துத்தான் என்பது புரிய எனக்கு இவ்வளவு வருடங்கள் ஆனது :)
*
Jokes apart...
சனிக்கிழமை இரவு க்ளாசிக் சினிமாக்கள், வாசிப்பும் பகிர்தலும், இலக்கில்லாத பயணங்கள், எப்போதும் இசைமழை, ஓயாத நெடும்பேச்சு என திருமணம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் / கற்பனைகள் இருந்தன; அதில் சில விசயங்கள் நிறைவேறியிருக்கின்றன. சில விசயங்கள் கனவாகவே போயிருக்கின்றன. இதைப்போலவே, வேறு சில எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் உனக்கும் இருந்திருக்கக்கூடும். நிராசையாய்ப் போன கனவுகளையும் தாண்டி இதுவரை நான் வாழ்ந்திருப்பது ஒரு சந்தோசமான வாழ்க்கையைத்தான். நன்றிகள் அருணா.
*
2009 – ஜீன் -11 அதிகாலை 5 மணியளவில், கரியகாளியம்மன் திருக்கோவிலில் உன் கழுத்தில் மங்கல நாண் அணிவித்த தருணத்திலும், கண்ணீர் வழிய உன் கரத்தை உன் பெற்றோர்கள் என் பெற்றோரிடம் ஒப்படைத்த தருணத்திலும், நான் நினைத்த ஒன்றுண்டு… “பெண் என்கின்ற ஒரே காரணத்துக்காகவோ அல்லது நீ என் மனைவி என்கிற சாக்கை முன்வைத்தோ, ஒருபோதும் உன் சுயத்தை நான் அழித்து விடக்கூடாது” என்பதுதான் அது. இந்த நாளிலும் நான் அதையே மீண்டும் ஒருமுறை எண்ணிக்கொள்கிறேன்.
*
வாழ்ந்த வாழ்க்கைக்கும் இனி வாழப்போகும் வாழ்க்கைக்கும் மனம் நிறைந்த நன்றிகள் Aruna Kalees...

கூடவே இந்நாளுக்கான வாழ்த்துக்களும் :)
Happy wedding anniversary dear :)
May God save Me :) :)

கலை - தட்சணை

அப்பாவுக்கும் கார்த்திக்கும் இருக்கும் நெருக்கம் சமயத்தில் எனக்கு பொறாமையை வரவழைக்கும். சாதாரணமா நான் ஒரு நாலு நாள் கஷ்ட்டப்பட்டு அனுமதி வாங்குற ஒரு விசயத்துக்கு அவன் அதிகபட்சம் அஞ்சு நிமிசம் எடுத்துக்குவான். ஒரு “ப்ளீஸ் தாத்தா” போதும்; ஒருவேளை அதுக்கு மசியாவிடில் கொஞ்சம் சோகமாக (நடிப்பாதான் இருக்கும்) உக்கார்ந்திருந்தால் போதும் கேட்டது தானே கிடைக்கும். வீட்டில் இருந்தால், பெரும்பாலும் அப்பா செல்லும் அனைத்து இடங்களுக்கும் தவறாமல் உடன் செல்வது கார்த்திக்கின் வழக்கம். இம்மாதிரியான விசயங்களில் ”ஓவர் செல்லம்” என அடுத்தவரை விமர்சிக்கும் அப்பாவும் “அவன் பாட்டுக்கு அமைதியா வரான்; அதுல என்ன பிரச்சனை” என அனுமதிப்பது வழக்கம். இன்றும் அப்படித்தான். மாலை ஒரு கல்யாணத்துக்கு அப்பா கருமத்தம்பட்டி சென்றிருக்கிறார்; உடன் நம்ம தலைவரும். திருமணம் முடிந்து வந்தவன் நான் வருவதற்காக காத்திருந்தான். 11:30 மணியளவில் நான் வந்தவுடன் சொக்கும் தூக்கத்திலும் வெகு உற்சாகமாக கையில் உள்ள தாளைக் காட்டினான்.
*
அந்தத் திருமணவீட்டார் நிச்சயமாக நல்ல ரசனை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
ஆர்க்கெஸ்ட்ரா, பரத நாட்டியம், வீணை / வயலின் இசை, பாடல்கள் என ஏதாவது ஒரு கலைவடிவம் திருமணவீடுகளில் நிறைந்திருப்பது வழக்கம்தான். ஆனால் இன்றைய விழாவில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விசயம் நான் கேள்விப்படாத ஒன்று.
இரண்டு ஓவியர்களை வைத்து, விருப்பப்படும் அனைவரின் கோட்டோவியத்தை வரைந்து தர ஏற்பாடு செய்திருந்தார்களாம். பெரும் ஆர்வத்துடன் கூடியிருந்த திரளில் பெரும்பாலும் நிரம்பியிருந்தவர்கள் குழந்தைகள். கூட்டம் அதிகமாயிருந்தபோதும் நிச்சயம் வரைந்தே ஆகவேண்டும் என காத்திருந்து தன் ஓவியத்தை வாங்கி வந்திருந்தான் கார்த்திக். என்னிடன் அவன் காட்டிய தாளில் இருந்தது கார்த்திக்கை நகலெடுத்த அட்டகாசமான ஓவியம். அதை வரைந்து முடிக்க வெறும் 10 நிமிடங்கள் கூட ஆகவில்லை என அப்பா சொன்னார். <ஓவியத்தை பின்னர் பதிவேற்றுகிறேன்....>
*
நண்பர்களே, நம்மிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கக்கூடும்; பாட்டோ, இசையோ, எழுத்தோ, ஓவியமோ, கவிதையோ, நடனமோ.. இப்படி ஏதாவது ஒன்று. அடுத்தவர் ஏளனத்தின் பாற்பட்ட அச்சமோ அல்லது அன்றாட வாழ்வின் சுழலில் சிக்கிக்கொண்ட நியாயமான காரணமோ, இப்படி ஏதாவது ஒன்றால் நீங்கள் அந்தக் கலையை மறந்திருக்கவும் கூடும். உங்களிடம் சொல்லிக்கொள்ளவும் மன்றாடிக்கேட்கவும் என்னிடம் ஒரு விண்ணப்பம் உள்ளது….
.
மற்றவர்களுக்கு எப்படியோ, இன்று திருமண மண்டபத்தில் தன் கலை தந்த பரவசத்தில் குதித்தோடும் குழந்தைகளால் ஒரு கணமேனும் பெருமிதம் அடைந்திருப்பான் அக்கலைஞன். பணம், சொத்து, புகழ்வெளிச்சம் எல்லாம் கடந்து ஒரு அப்பழுக்கற்ற புன்னகையை அவன் நிச்சயம் பூத்திருப்பான். அது அவன் புன்னகை அல்ல; அவனது கலையின் புன்னகை. ஏதேனும் ஒரு கலையில் ஆர்வமிருக்கும் நாம் அனைவரும் செல்லவேண்டியது நம் கலையும் புன்னகைக்கும் அத்தருணம் நோக்கியே.
அந்தப்பயணத்தில் இருப்பதுதான் நம் வாழ்க்கையே அன்றி.. வெறுமனே வாழ்வதில் இல்லை,
எதன் பொருட்டும் வெறுமனே வாழ்வதில் இல்லை.

4 ஜீன் - பாலு சார்

இந்தப் பாடலை பிறகொரு தருணத்தில்தான் பகிர்வதாய்த்தான் உத்தேசம்... ஆனால் இன்று ஒரு சிறப்பான நாள்... அதன் பொருட்டு இப்பாடல் குறித்த ஒரு சிறுகுறிப்பு மட்டும் இன்று ....
*
2007 ஜுலை 2ஆம் தேதி நொய்டாவில் துவங்கியது TCS training. அதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருந்த / படித்திருந்த, உணவில் துவங்கி உணர்வு /கலாச்சாரம் வரையிலான வட மற்றும் தென் இந்திய வேறுபாடுகளை நேரடியாக உணர்ந்த இரண்டு மாதங்கள் அவை. அந்த பயிற்சிக்காலத்தின் இரவுப்பொழுதுகளை விடுதியின் முன்பிருக்கும் புல்வெளியில் PSG Tech நண்பர்கள் கூடி உரையாடல்களால் கழிப்போம். சமயங்களில் அத்தகைய உரையாடல்களில் வட இந்திய மாணவர்களும் கலந்துகொள்வதுண்டு. வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் இல்லாத போதும், சிந்தனையில், ரசனையில் அவர்களுடன் குறிப்பிடத்தகுந்த இடைவெளியை உணர்ந்த உரையாடல்கள் அவை. அன்றைய தினம் கொஞ்சம் சிறப்பானது. தன் வாழ்நாளில் தான் சந்திக்கவிருப்பும் ஒரு மனிதரைப் பற்றி பரவசமாக பேசிக்கொண்டிருந்தான் ஒரு வட இந்திய நண்பன். அவன் தான் சந்திக்க விரும்புவதாகச் சொன்னது ஒரு பின்னணிப் பாடகரை. அவர், ஆறு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்; இந்தியாவின் பல மொழிகளில் பாடும் புலமை பெற்றவர்; எல்லாவற்றும் மேலாக, ஒரு கின்னஸ் சாதனையாளர். முக்கியமாக ஒரு தென்னிந்தியர்.
*
மிகச்சிறந்த நடிகர், பெரும் புகழ் பெற்ற இசையமைப்பாளர் என சில பாடல்கள் வெகு புகழ் பெற்றிருக்கும்; நாமும் அதை தேடித் தேடிக் கேட்டிருப்போம். ஆனால், இத்தகைய அடையாளங்கள் ஏதுமற்றபோதும் நமக்கான சில பாடல்கள் நம்மைத்தேடி வரும். கொங்கு கல்லூரியில் படிக்கும் போது, அவினாசியில் இருந்து பெருந்துறை வந்த பேருந்தில் அப்படித்தான் இந்தப்பாடல் என்னைச் சேர்ந்தது. கேட்டவுடன் பிடித்துப்போன அந்த பாடல் ஒருவேளை மறந்துவிடக்கூடும் என்ற படபடப்பில் பெருந்துறையில் இறங்கியவுடன் நடந்து சென்றது நாதன் மியூசிகல்ஸ்க்கு. படம் பேர் தெரியாமல், இசையமைப்பாளரும் தெரியாமல், மனதில் (அப்போது) நின்றிருந்த முதல் இரண்டு வரிகளை மட்டுமே சொல்லிச் சொல்லி ஒருவழியாக அந்தப்பாடலை கண்டறிந்தேன். இன்றும் ஒலிக்கும்போது என்னை ஒப்புக்கொடுத்துவிடும் சில பாடல்களுல் அப்பாடலுக்குத்தான் முதலிடம். பின்னாளில் தேடிப்பிடித்து இந்தப்படம் பார்த்தேன். படமும் பிடித்தது. படம் மட்டுமல்ல படத்தின் அத்தனை பாடல்களும். (இன்றுவரை, இப்பாடல் பற்றி பலரிடம் சிலாகித்தாலும், நெருங்கிய நண்பன் ஒருவனைத்தவிர, மற்றெல்லாருக்கும் அப்படியொன்றும் விசேஷமாக தோன்றவில்லை என்பதுதான் இப்பாடல் குறித்த ஒரே வருத்தம்)
*
வட இந்திய நண்பன் தன் வாழ் நாளில் காண விரும்பிய அந்த பின்னணிப் பாடகர் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். மேற்ச்சொன்ன என் வாழ்நாளின் சிறந்த பாடல்களுல் ஒன்றைப் பாடியவர்; பாடியவர் மட்டுமல்ல, அந்தப் படத்தின் நாயகனும் அவர்தான். பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பாய் அமைந்த அந்தத்திரைப்படத்தின் இசையமைப்பாளரும் அவரே.
*
நெல்லூரில் 4-June-1946ல் பிறந்து இன்று 71 வயதை நிறைவு செய்யும் அவர்தான் “சிகரம்” திரைப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் நாயகன்.
*
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கள் பாடும் நிலாவுக்கு…
*
தனிப்பட்ட முறையில், ஒரு பாடகர் என்பதை விடவும் ஒரு இசையமைப்பாளராய் அவரை நெருக்கமாக உணரவைத்த அப்பாடல் இதோ :
https://www.youtube.com/watch?v=a5ZXz4Hm6_o

2 ஜீன் - ராஜா சார்

அன்பின் ராஜா சார்,
உடலின் ரத்தமெல்லாம் கண்ணீராய் வெளியேறுமளவு துக்கத்தை உங்கள் இசையால் கடந்திருக்கிறேன். தூக்கம் தொலைத்த இரவுகளின் வெறுமையை உங்கள் பாடல்களால் நிரப்பினீர்கள். உடன்வர யாருமற்ற தனிமையின் துக்கத்தை உங்கள் படைப்புகள் போக்கியிருக்கின்றன. காதலோ, அன்போ, பக்தியோ, நட்போ உங்கள் இசையின் எல்லைக்குள் அடங்காத ஏதுமில்லை. காரிலோ, பைக்கிலே, பேருந்திலோ அல்லது நடந்தோ, உங்கள் பாடல்கள் இல்லாத பயணங்களும், ஏதேனும் ஒருமுறையாவது உங்கள் இசை தீண்டாத நாட்களும் என் வாழ்வில் வெகு சொற்பம்.
*
புதிய பாடல்கள் வெளியாகும்போதும் அல்லது மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் மனதை கவரும் போதெல்லாம், அந்தப்பாடல்களையும் ரசிப்பதுண்டு; ஆனால் அவை எதுவும் உங்கள் இசையில் உணரும் நெருக்கத்தை தந்ததில்லை. இதோ சமீபத்தில், நண்பன் ஒருவனுக்காய் கேட்கத் துவங்கி, பின்னர் கிட்டத்தட்ட உங்கள் பாடல்களுக்கு இணையாக திரு. A.R.ரஹ்மான் அவர்களின் பாடல்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்றாலும் எனக்கான நிறைவு உங்கள் இசையில்தான் இருக்கிறது.
.
நம் எல்லோருக்கும், எப்போதும் எவரிடத்தும் பகிர்ந்துகொள்ளமுடியாத துக்கங்கள் இருக்கும். நம்மால் செரிக்கவே முடியாதவை அவை. ஒருபோதும் தவிர்க்கவோ, இறக்கி வைக்கவோ முடியாமல் கிட்டத்தட்ட உடலின் ஒரு அங்கமாகவே மாறிப்போன சில துக்கங்கள். எனக்கான துக்கத்தை, அதை சுமப்பதின் வலியை கொஞ்சமாவது மறக்கச்செய்யும் மாமருந்து உங்கள் இசை. மருத்துவன் நீர்.
*
நாம் மகிழ்ந்திருக்கும் தருணங்களில் நம்முடன் இருக்கலாம் ஆயிரம் உறவுகள்; நம் வெற்றியை கொண்டாடலாம் பல நண்பர்கள்; மற்றவர்களின் பாடல்கள் எனக்கு அப்படித்தான். ஆனால், பிறர் யாரும் அறியாமல், உயிர் உருக்கும் பெருவலியால் அழ நேர்கையில் நாம் தேடுவது, ஆறுதலான ஒரு அண்மையை, தலை சாய ஒரு மடியை, தழுவி அழும் தோள்களை. உங்கள் இசை எனக்கு அப்படியானது. நான் முன்பொருமுறை எழுதியது போல, மகிழ்ந்திருக்கையில் பாராட்டவும் தழுவவும் கைகுலுக்கவும் நீளும் கரங்களை விடவும்; துக்கத்தில் வழிந்தோடும் விழிநீர் துடைக்கும் கரங்கள் மிகவும் நெருக்கமானவை. அது கை கொடுக்கும் கை. எனக்கு அந்தக் கை இளையராஜாவின் கை.
*
(ராஜா சார் பிறந்தநாளை (2June) முன்னிட்டு எழுத நினைத்த பதிவு இது; வேலைப்பளுவால் IST பிறந்தநாள் தாண்டிவிட்டபடியால், பெரிய மனசு பண்ணி, எல்லாரும் EST Timezoneல் இருப்பதாய் எண்ணி இதைப்படிக்கும்படி வெகு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)
:)

பாடலும் பயமும்

ஒரு பாடல்; சூப்பர் ஹிட் பாடல்.. அதுவும் நமக்கு மிகப்பிடித்த பாடல். ஆனால் அந்த பாடலை கேட்டாலே தலை தெறிக்க ஓடுமளவு அந்தப்பாடலின் மீது பயமிருந்தால் எப்படியிருக்கும்?
இது அப்படி ஒரு சோகக்கதை..
*
கொங்கு பொறியியல் கல்லூரியில் இளநிலை இரண்டாமாண்டு. விடுதி அறையில் எப்பவும் பேச்சும், கிண்டலும், சிரிப்பும் மிக முக்கியமாக வாக்மேனும் பாட்டும் என மகிழ்ந்திருந்த நாட்கள். அது ”Unit Test” நடந்து கொண்டிருந்த சமயம். நமக்கெல்லாம் செமஸ்டர் பரிச்சையையே On the Spot எழுதின வரலாறு உண்டு. அந்த பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும்படி, சாதாரண நாட்களில் இருக்கும் கொண்டாட்டம் தேர்வு சமயங்களில் மேலும் பெருகும். அந்த சமயம் ஒரு முன்னணி நடிகரின் புதுப்படத்தின் பாடல் வெளியாகியிருந்தது. வழக்கம்போல் பெருந்துறை நாதன் மியூசிகல்ஸில் இருந்து கேசட் வாங்கி வந்திருந்தான் அறை நண்பன். படத்தின் அத்தனை பாடல்களும் நன்றாக இருந்த போதும், படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காதல் தோல்விப் பாடல் எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. தொடர்ந்து வந்த அத்தனை நாட்களும் (வாக்மேன் பிரச்சனை செய்த ஓரிரு நாட்கள் தவிர) அப்பாடல் எங்கள் அறையை நிறைத்தது. இதற்கிடையே அதுபாட்டுக்கு ஒருபக்கம் Unit தேர்வுகளும் நடந்து முடிந்தன. அன்றாடம் அந்தப்பாடலை கேட்பது ஒரு அன்னிச்சைச் செயலாகவே மாறிப்போனது.
.
ஒருவழியாக எல்லா தேர்வு முடிகளும் தெரிய வந்த வார இறுதி அது. அறையில் இருந்த நால்வரில் ஒரு நண்பன், ரெண்டு பேப்பர் தவிர எல்லாத்துலயும் கப்பு வாங்கியிருந்தான். (கப்பு – பெயில்). பையனும் கொஞ்சம் நல்லா படிக்கிற பயதான். பரிச்சையும் சுமாரா எழுதியிருந்ததாக சொல்லியிருந்தான். அதுல பாருங்க, பாஸாயிருந்தவற்றில் ஒரு பேப்பர் செம கஷ்டம். பெயிலாயிருந்த பரிச்சைகள் அப்படி ஒன்றும் கஷ்டமானவையும் இல்லை. பிறகெப்படி பெயிலானான் என திரும்பத்திரும்ப யோசித்து அந்த காரணத்தை அவனே கண்டுபிடித்து சொன்னான். அது வேறொன்னுமில்லை, அவன் பெயிலான பரிச்சை நடந்த எல்லா நாட்களுமோ அல்லது அதற்கு முந்தின தினமோ, நான் மேற்சொன்ன that great songஐ கேட்டுக்கொண்டிருந்தான். அவன் அறையில் இல்லாத ஒரு நாளும், வாக்மேன் பழுதாயிருந்ததற்கு மறுநாளும் நடந்த தேர்வுகளில் மட்டும்தான் தலைவர் பாஸ். நம்பறதுக்கு கஷ்ட்டமா இருந்தாலும் அவன் கைவசமிருந்த DATA POINTS அதை உறுதிப்படுத்தியது. அப்பக்கூட நாங்க அதை நம்பல. ஆனா நாங்க எல்லாரும் அதை ஏத்துக்கற மாதிரி கண்ணார ஒரு Proofing கிடைச்சுது.
.
அன்றைய தினம் லேப் Model exam, கொஞ்சம் ஈஸியான லேப்தான்; ஏற்கனவே நம்மாளுக்கு பாட்டு ராசி இருந்ததால ரெண்டு மூணு நாளா அந்தப்பாட்டு மட்டுமில்லை ரூம்ல எந்தப்பாட்டும் கேட்கல. விடுதி மெஸ்ல சாப்பாடு ரெடியானதுக்கு அடையாளமா பாட்டு போட்டார்கள். நாங்கள் நால்வரும் சாப்பிடப்போனோம். பாதி சாப்பாடுதான் இறங்கியிருக்கும். மெஸ்ஸின் ஸ்பீக்கரிலிருந்து மெல்லிய புல்லாங்குழல் இசை ஒலிக்கலானது. நம்மாளு முகத்துல கோவமா/கவலையா/அழுகையான்னே தெரியாத ஒரு reaction. வேறொன்னுமில்லைங்க, அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த ஹிந்திப்பாடலை எந்தப்புண்ணியவானோ மாத்தி நம்மாளு பாட்டை போட்டுட்டான். சிரிப்பை அடக்கிக்கொண்டு நாங்கள் ஆறுதல் சொன்னோம்; “டேய், லேப் மாடல்ல எல்லாம் எவனையும் பெயிலாக்க மாட்டாங்க.. நீயா எதாவது நினைச்சுக்காம ஒழுங்கா பண்ணு…”. போகும்போது நல்லா தெரிகியமாதான் போனான், வரும்போது மார்க்கோட வந்தான். இம்முறையும் கப்பு. இப்ப அந்த பாட்டுக்கும் அவனுக்குமான ராசியை நாங்களே நம்பத்தொடங்கியிருந்தோம்.
அதன்பின் வந்த மற்றெல்லா பரிச்சைக்கும் நாங்கள் அந்தப்பாடலில் இருந்து அவனை மட்டுமல்ல எங்களையும் காத்துக்கொண்டோம். அடுத்தடுத்து வந்த மற்ற பாடல்களால், கிட்டத்தட்ட அப்பாடல் கேட்பதும், அப்படி ஒரு பாடல் இருக்கிறது என்பதும் மறந்து போயிருந்தது.
*
அந்த வருடத்தின் செமஸ்டர் தேர்வு, இறுதிப்பரிச்சையோ அல்லது அதற்கு முந்தின தேர்வோ நினைவில்லை. தேர்வுக்கு முந்தின நாள் மாலை, கல்லூரி மேட்டில் இருக்கும் கடைக்கு தேநீர் அருந்த சென்றிருந்தோம். கடையில் ஏதோ ஒரு பழைய பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நண்பன் ஜாக்கிறதையாய் அதை நிறுத்திவிட்டான். வெகு சந்தோஷமாய் தேநீர் அருந்தியாகிவிட்டது. திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கடையில் ஒலித்துக்கொண்டிருந்த டேப் ரிக்கார்டரை நண்பன் நிறுத்திய காட்சியை சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம். அந்த சந்தோஷம் 5 நிமிடம் கூட நிலைக்கவில்லை. ஒரு மினி பேருந்து கடந்து சென்றது. அத்தனை பேரும் பேயறைந்தது போலானோம், நண்பனோ திகிலடித்து நின்றிருந்தான். கடந்து சென்ற மினி பேருந்தில் வெகு சத்தமாய் ஒலித்துக்கொண்டிருந்தது அந்தப்பாடல்...
அப்புறமென்ன அந்த பரிச்சையை அவன் அடுத்த செமஸ்டரில்தான் க்ளியர் பண்ணினான்.
*
இவ்வளவு சிறப்புக்குரிய அப்பாடலின் சுட்டி இதோ :
https://www.youtube.com/watch?v=zOj2p01XkIc
மிக முக்கியமான குறிப்பு : பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல
UPDATE :
நேற்றிரவுதான் இந்த போஸ்ட்டை பதிவேற்றினேன்... இன்று காலை அலுவலகம் கிளம்பினேன்... பாதி வழியில் வண்டி பஞ்சர்... :(
:)

ஆதிரா

பெருமரங்கள் சூழ் அடர்வனத்துள்
பொன்பாதம் பதித்தாள்
ஆதிரா…
.
ஓங்கி வளர்ந்த நெடுமரங்கள்
ஓயாத வண்டுகள் இசை
தடம் மறைக்கும் செடிகொடிகள்
தானாய் திரியும் ஆநிரைகள்
நன்னீர் ஓடைகள்
இன்சுவை பழவகைகள்
அரிதாய்த் தெரியும் கதிரொளி
அகன்று விரிந்த பெரும்பாறை
பார்த்துப் பார்த்து
அதிசயித்தாள் ஆதிரா
.
தேவதை மண் வந்த
பேரதிசயத்தால்
பூத்துக் குலுங்கியது
பெருவனம்..
:)

சாதிகள் இல்லையடி



நாம் கற்றுத்தேரும் மதிப்பெண்களை அடிப்படியாகக் கொண்ட கல்வியால் நல்ல Xerox machineகளை அல்லது நடமாடும் Storage deviceகளை உருவாக்க முடியுமேயன்றி, ஒருபோதும் அறிவுசார் சமூகத்தை உண்டாக்கவே முடியாது என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

.

கல்லூரிக்காலங்களில் விடுதியில் கொஞ்சம் நெருங்கிப்பழகிய நண்பர்களுக்கிடையே பொதுப்பிரச்சனையை முன்னிறுத்தி வாக்குவாதங்கள் ஏற்படும். அந்த தனிப்பட்ட உரையாடல்களின் உணர்ச்சிமேலிடும் தருணங்களில், சிலர் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் பிற ஜாதி / மதத்தினர் மீதான வன்மம் வெளிப்பட்டிருக்கிறது. அத்தருணங்களில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் கல்லூரி மறைந்து, அணிந்திருக்கும் பகட்டான ஆடைகள் மறைந்து, அவர்களின் சுயம் தெரியவந்திருக்கிறது. மெத்தப்படித்திருந்தாலும், நுனி நாக்கு ஆங்கிலம் வசப்பட்டாலும், ஐந்திலக்கத்தில் சம்பளம் வாங்கினாலும் கிட்டத்தட்ட அதே மனநிலையை, இப்போது IT துறையிலும் சில நண்பர்களிடம் பார்க்கிறேன்.
.
“படிக்காம உங்கப்பன் ஆத்தாதான் வீணாப்போய்ட்டாங்க நீயாவது படிச்சு முன்னேறு”


“நல்ல படிங்கடா அப்பத்தான் வாழ்க்கைல முன்னேறலாம்”


போன்ற அறிவுரைகளை நம் பள்ளிக்காலங்களிலும் கல்லூரிக்காலங்களிலும் நிச்சயமாய் கடந்து வந்திருப்போம். அந்த சொற்றொடர்களில் உள்ள முன்னேற்றம் எனும் வார்த்தை வெறுமனே சம்பளத்தையோ அல்லது வயிறு சார்ந்த வாழ்க்கையையோ மட்டும் குறிப்பிடுபவை அல்ல. அவை வாழ்க்கை முறையையும் அறிதலையும் சேர்த்ததுதான்.

.

மனிதர்களை அவர்கள் கருத்தை, உணர்வை சமமாய் பார்க்கும் எளிய உண்மையை கற்றுக்கொடுக்கும் அறிவு, ஆரம்ப பாட சாலைகளில் இருந்து பெரும்புகழ் கொண்ட IIT வரை இல்லையென்பது ஆகப்பெரிய சோகம்….


ஜாதி / மதம் / இனம் மறப்போம்; மனிதம் நினைப்போம்..


நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்…- பாரதி.

லீவு மாமே...



பொதுவா நமக்கு அர நாளு லீவு வுட்டா, அதுக்கு ஆயிரம் வேல லைன் கட்டி நிக்கும். இது தீவாளி, பொங்கலுக்கும் பொருந்தும், சாதாரண சனி, ஞாயிறுக்கும் பொருந்தும். சமயத்துல திங்கள் to வெள்ளி ஆபிசுல செய்யுற வேலைய விட விடுமுறை நாட்களின் வேலை அதிகமாயிடும்.

.

ஆனா, இந்த Onsite லீவு இருக்கே, என்னதான் அவிங்க லீவுன்னாலும் கொண்டாட்டம் நம்மளுக்கும் சேத்தித்தான். பொதுவா மாலை 6-7 மணியளவில் இருக்கும் onsite calls ம், இருக்கோ இல்லையோ அனுப்பவேண்டிய update mailsம் தேவையில்லைங்கறதே நெம்மப் பெரிய நிம்மதிங்க. எப்பயும் போல அரக்கப்பரக்க ஆபீசுக்கு கிளம்புறமாதிரி ஊட்ல சீன் போட்டுட்டு (மனசுக்குள்ள ஒரு லல்லல்லா பாட்டு ஓடிட்டு இருக்கும்கறது வேற விசயம்) ஆபீசுக்கு வந்துட்டா போதும். நம்மள மாதிரியே அம்புட்டு பயலுகளும் ஒரு தினுசா திரியறத பாக்குறதே ஒரு கொடுப்பினை. எத்தனை மணிக்கு கடய தொறக்கறோம்கறதும், ஷட்டர் எத்தனை மணிக்கு க்ளோஸ் ஆகுதுங்கறதும் தனி கணக்குதான்.
.
இன்னிக்கு அப்படியொரு நன்னாள்ங்கறதால 7 மணிக்கே ஆபீச விட்டு கெளம்பியாச்சு (எங்கணக்குக்கு இது அரை நாள்தான் பாத்துக்கங்க). கீரணத்தம் கிராமம் வழி கோவில்பாளையம் அடைந்து, அங்கிருந்து கருவலூருக்கு கிராமங்கள் வழி செல்லும் மனம் கவர்ந்த பாதையில், மெல்லிய இசையுடன் ஒரு அழகான பைக் டிரைவ். கூடடையும்போது மணி 8. குழந்தைகளுடன் ஒரு சின்ன விளையாட்டு கூடவே இரவுணவு. 9 மணியளவில் திரைப்படத்துக்கு செல்லலாம் என திடீரென முடிவெடுத்து, அப்பா, அம்மா, அருணா, கார்த்திக், கிருத்திகா என குடும்பமே சென்றது “தொண்டன்” படத்துக்கு.
.
படம் முடிந்து வரும்போது அம்மாவும் கிருத்திகாவும் சொன்ன review தான் Top. எழுத்துப்போடும் போதே இருவரும் தூங்கி விட்டார்கள். அவ்வப்போது முழிப்புவந்து படம் பார்த்த அம்மா சொன்னது “சரியான சண்டைப்படம்”; எதற்கும் அசையாமல் கருமமே கண்ணாய் இறுதிவரை தூங்கிய கிருத்திகாவின் கருத்து “சூப்பர் படம்”.
படம் கொஞ்சம் சுமார்தான்; ஆனால் இன்றைய நாள் வெகு சூப்பர் 
.
பேசாம நம்ம லீவ பூராம் பத்திவுட்டுட்டு, அதுக்கும் சேத்து ஆன்சைட் லீவா வச்சுக்கலாம் :)

துளிர்



எனக்கு “யாக்கை திரி, காதல் சுடர்” ரீதியிலான அதிரடிப்பாடல்கள் எவ்வளவு போதை தருமோ, அதற்கிணையாக… இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக “மலர்கள் கேட்டேன்; வனமே தந்தனை” என மனம் வருடும் பாடல்கள் மிகவும் நிறைவைத் தரும்.

*

அக்கா வீட்டில் நடைபெறும் ஒரு விசேசத்துக்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைக்க இன்று பொள்ளாச்சி சென்றிருந்தோம். காலை 10 மணியளவில் பூண்டியில் இருந்து கிளம்பி, காரணம்பேட்டை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியிலும் அதன் அருகிலும் பல உறவினர் வீடுகளை அழைத்து முடிக்கையில் மணி மாலை 5 இருக்கும். அடுத்து என் பெரியப்பா ஒருவரை அழைப்பதற்காக உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள ”கோமங்கலம் புதூர்”க்கு செல்வதாக திட்டம். பொள்ளாச்சி சுங்கத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு 15 கி.மீ சென்றபின் “கோமங்கலம்புதூர்” என வழிகாட்டப்பட்டிருந்த இடத்தில் இடப்புறமாக திரும்பி செல்லத்துவங்கினோம். கிராமங்களுக்கிடையே செல்லும் பாதை அது. ஒரு பேருந்து மட்டுமே செல்லுமளவு அகலம் கொண்ட அப்பாதை நீண்டது சற்றேறக்குறைய 8 கி.மீ.கள்.
.
சமீப காலங்களில் செல்லும் பயணங்களில் எல்லாம் நிறைந்திருக்கும் ஒரு பொதுவான அம்சம், நிலத்தில்.. செல்லும் இடங்களில் கண்ணுறும் வெம்மையும் வெறுமையும். அதன் பாதிப்பு மனதில் ஏற்படுத்தும் சலனங்களை, சமன்படுத்தும் விதமாக மழையோ, மழலையோ, நண்பர்களோ குறைந்தபட்சம் பாடல்களோ அந்தந்தப் பயணங்களில் அமைந்துவிடுவது என் நல்லூழ். இந்தப்பயணம் அப்படியல்ல, அவற்றைகாட்டிலும் மேம்பட்டது. மேற்சொன்ன 8 கி.மீ.களும் நாங்கள் மட்டும் பயணப்படவில்லை. எங்களுடன் பயணப்பட்டது பசுமை. சாலையின் இருமருங்கிலும் பெரும்பாலும் இருந்தவை தென்னைமரங்கள். தென்னைமரங்கள் குறையும் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தவை கொய்யா மரங்கள், எள்ளுச்செடி மற்றும் தானியப் பயிர்கள்.
.
மொத்தத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிறைந்திருந்தது பசுமை. கடந்த ஓரிரு வாரங்களாக பொள்ளாச்சியின் சுற்றுப்புறங்களில் (மாலையில்) பெய்யும் நல்ல மழையின் தானம் இந்தப்பசுமை.
அகலம் குறைவான சாலையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு மிக மெதுவாகத்தான் அந்த 8 கி.மீ.களும் கார் ஓட்டினேன். வேகமாக கார் ஓட்டும்போது கிடைப்பது ஒரு போதை; ஆனால் இன்று அமைந்தது போன்ற நிறைவான பாதைகளில் / தருணங்களில் கார் தானே ஓடுவதுபோல் மெதுவாக ஓட, மனம் லயிக்கும் பயணம் தருவது நிறைவு.
*
வறட்சி பற்றிய செய்திகளாலும், வெடித்துக்கிடக்கும் நீர் நிலைகளாலும் நிரம்பிய சமீப நாட்களின் சோகம் கொஞ்சம் மாற, இன்றைய பயணம் நம்பிக்கை விதைத்தது.


”நம்பிக்கையே நல்லது; எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது”

(“அகரம் இப்போ சிகரம் ஆச்சு” பாடல் வரிகள் – வைரமுத்து – படம்: சிகரம்)


:)

Walking with ...



ஐந்து வருட கோவை வாழ்க்கையின் பெரும் மகிழ்ச்சிகளுல் ஒன்று பேருந்துப்பயணம். ஒரு நாளில், ஏறத்தாழ இரண்டரை மணி நேரங்களை பயணத்தில் செலவளிப்பது எனக்கு ஒருவகையில் இலகுவானது. பெரும்பாலும் மனதுக்குகந்த செயல்களை பயணத்தில் செய்வது வழக்கம். புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது, படங்கள் என இப்படி ஏதாவது ஒன்று; மனம் இவை எதிலும் லயிக்காத நாட்களும் உண்டு. பயணம் என்பதே மனதுக்குகந்த விசயமென்பதால், அந்நாட்களும் வேடிக்கை பார்ப்பதில் நிறையும். இப்போது மட்டுமல்ல, எப்பவுமே பயணம் எனக்கு மிகப்பிடித்த விசயம், அதிலும் வெறுமனே பயணியாக நம்மை ஓட்டுனர் கையில் ஒப்புக்கொடுக்கும் பேருந்துப்பயணங்கள் தனி சுகம்; அது பெங்களூர் நாட்களோ, சென்னை நாட்களோ பெரும்பாலும் மாதம் நான்கு முறை (அதை எல்லா சனி ஞாயிறுன்னும் சொல்லலாம்) திருப்பூருக்கு வந்த சாதாரண பேருந்து பயணங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் படிப்பு, பாட்டு, படம் என கழிவதால், நள்ளிரவுகளிலோ அல்லது அதிகாலையிலேயோதான் பயணத்தில் உறக்கம் வரும். அந்த உறக்கம் தரும் போதை ஒரு அற்புதம். அப்படி ஒரு அற்புத தூக்க நாள் கொஞ்சம் துக்க நாளாக மாறின சம்பவம் ஒண்றுண்டு.
.
அந்த சம்பவத்தின் வயது கிட்டத்தட்ட 7 வருடங்கள். சென்னையில் இருந்து சேலம் வந்தடையும் போது மணி நள்ளிரவு 1 இருக்கும். நிறைய கோவை பேருந்துகள் இருந்தன; அதிகம் கூட்டமில்லாத ஒரு பேருந்தில் பயணப்பட்டேன் அவிநாசிக்கு. அதிகாலை 4 மணியளவி்ல் அற்புத தூக்கத்தை கலைத்து என்னை எழுப்பினார் நடத்துநர், “தம்பி, அவிநாசி வந்திருச்சு, எறங்கு”; அரை விழி திறந்து பார்த்தவன், கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரிடம் “ஒரு கோயம்புத்தூர்” என டிக்கட் வாங்கி காந்திபுரம் சென்று திரும்பிவந்த நாளின் தூக்கம் என் நினைவில் நிலைத்த ஒன்று.
*
அதன் பின் வேறெந்த பயணத்திலும் அதற்கிணையான அனுபவம் கிடைத்ததில்லை. கோவையிலிருந்து பூண்டி வரும் நாட்களிலும் சில சமயம் கரும்மத்தம்பட்டியோ, தெக்கலூரோ தாண்டி உறங்குவதுண்டு; ஆனால் அந்த உறக்கம் சரியாக அவினாசி வந்ததும் கலைந்துவிடும்; நானும் என்னென்னவோ யோசித்தும் புரிபடாத ரகசியம் அது. ஆனா அந்த பெருமையும் முந்தா நேத்தோட போச்சு(புதன் இரவு);


அது ஒரு தூக்கம் கலந்த பயணம்; தெக்கலூரில் கண் அசந்தவன் வழக்கம்போல அவினாசியில் முழித்தேன்; அடுத்த நிறுத்தம் பூண்டி அதற்கின்னும் 5-10 நிமிடங்கள் ஆகுமே அதுக்குள்ள ஒரு சின்னதூக்கம் என்ற அடிப்படையில் தூங்கினவன் முழித்தது பூண்டிக்கு அடுத்த நிறுத்தமான அம்மாபாளையத்தில். ஏறத்தாழ 1.5கி.மீ. தாண்டியாகிவிட்டது. தூக்கத்தில் நான் இறங்கிய ஸ்டைல் புல் போதையில் இருப்பவன் அட்டேன்சனின் நிற்பதுபோல தடுமாற்றமானது

*

நிக்கறதுக்கே துப்பில்லாத லட்சணத்தில் எப்புடிடா 1.5 கி.மீ நடக்கறதுன்னு மனசுக்குள்ள ஒரே ரோசன. ஆனா பாருங்க.. ”கடவுள் ஒரு கதவை அடைச்சா மறுகதவை தொறப்பாருன்னு” சொல்லுவாங்க; அது மத்தவிங்களுக்கு; நமக்கு எப்பவுமே ஜன்னலை அடைச்சுட்டு கதவு, ஷட்டர் எல்லாத்தையும் திறந்து வச்சுட்டு ”நீ வாழுடா மகனே” அப்படிம்பாரு. நிக்கக்கூட முடியாம தூக்கத்தில (Note this point தூக்கத்துல) தள்ளாடிட்டு இருந்தவன் வெகு மகிழ்ச்சியாய் 1.5 கி.மீ நடந்தேன். அதுக்கு காரணம் “மழை”. பெருமழையல்ல; கொஞ்சமே கொஞ்சம் பெரிதாய் விழுந்த செல்லத்தூரல்; முதல் சில நொடிகளிலேயே தூக்கம் தெளிந்துவிட, அவசரமேயில்லாமல் மழையில் நனைந்தபடி வீடடைந்தேன்.

*

மாற்றுத்துணி உடுத்தி அசதியில் படுக்கையில் சாய, அப்போதும் மண்ணுடன் முணுமுணுத்துக்கொண்டிருந்தது மழை.

:)

மழை.. மாமழை

சென்னையின் வெய்யில் காலங்களை விட மனதில் நிறைந்திருப்பவை அதன் மழை நாட்கள். அதுவும் கொஞ்சிப் பேசுவதைப் போன்ற மென்மழையில் நனைந்த தருணங்களை விடவும், அடிப்பதைப் போல கொட்டிய மழையில் நனைந்த நாட்கள்தான் அதிகம். மழையில் நனைவது என்னதான் சுகம் என்றாலும், அலுவலகம் செல்லும் மழை நாட்களில், கிட்டத்தட்ட ஒரு விண்வெளி வீரனைப் போல என் ஆயத்தம் இருக்கும். பெருங்குடி வீட்டிலிருந்து கிளம்பும்போது ஹெல்மெட், ரெயின்கோட், ஷீ என வெகுகவனமாக மழையில் நனைவதைத் தவிர்த்ததற்க்குப் பரிகாரம் போலத்தான் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவேன். பெரும்பாலும் இரவு கிளம்பும்போது மழை சற்று தூரலாகத்தான் இருக்கும்; அதிவிரையில் அது கன மழையாய் மாறும் என்ற நிலை தெரிந்த போதும் ரெயின்கோட்டை கவனமாகத் தவிர்த்த பயணங்கள் அவை. வெய்யிலானாலும் மழையானாலும் சென்னை extremeதான். ஒரளவு தரமானவைதான் OMR சாலைகள், ஆனால் அந்நாட்களில், நான் இரு சக்கர வாகனம் ஓட்டியது தார் சாலையில் அல்ல; நீர் சாலையில். பழக்கப்பட்ட பாதை என்பதால் மேடு பள்ளங்களை மனதறியும்; கிட்டத்தட்ட தானே வீடடையும் மாட்டு வண்டியைபோல, Yamaha gladiator ஓடிக்கொண்டிருக்கும். மனதோ மழையில் லயித்திருக்கும். இது ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த கதை.
***
கோவை வந்த இந்த ஐந்து வருடங்களில் பெருமழையில் நான் நனைந்த நாட்கள் கிட்டத்தட்ட ஏதுமில்லை. பொதுவாக, சிலசமயம் இரவில் அலுவலகம் விட்டு கிளம்பும்போது மென் தூரல் இருக்கும்; ஆனால் சரவணம்பட்டியில் பார்த்தால் மழை பெய்த சுவடே இருக்காது. கடந்த திங்கள் இரவு அந்த நம்பிக்கையில்தான், கொஞ்சம் வலுத்த மழையில் அலுவலகத்திலிருந்து வண்டியை கிளப்பினேன். சரவணம்பட்டி காவல் நிலையம் கடக்கும் வரை எந்த வேறுபாடும் காட்டாத மழை, அதன் பின்னர் ஆடியது ஒரு 20- 20 போட்டியின் இறுதி ஓவர்கள். பெருந்துளிகள் பாதையை மறைக்கலாயின; அணிந்திருந்த ஆடைகளைத் தாண்டி ஈரம் மெய் தீண்டலானது. ஆரம்பத்தில் இருந்தது மெல்லிய சில்லிப்பின் அசெளகரியம்; முழுவதும் நனைந்த பின்னர் அதுவே அழகானது. சித்ரா பேருந்து நிலையத்தில் இருந்த பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தும் போது கிட்டத்தட்ட குளித்திரு்ந்தேன். பேருந்தில் பூண்டி வந்து சேரும்வரை, ஜன்னலில் தெரிப்புகளாய், மண் வாசமாய், காற்றில் ஈரமாய் உடன் வந்தது மழை.
*
மண் குளிர்ந்தது கூடவே மனமும்...

கூழாங்கல் நினைவுகள்

மிக நீண்ட நாட்கள் கழித்து
சாதாரணமாகத் துவங்கும்
ஒரு உரையாடலின் வழி
உயித்தெழுகிறது பள்ளிக்காலம்

*
சிரிப்பால் நிரம்பிய வகுப்பறைகள்
செல்லச் சண்டைகள் போட்ட மரத்தடிகள்
வேடிக்கை பார்த்திருந்த ஆய்வகங்கள்
வெறுமனே பேசித்தீர்த்த தனிப்பயிற்சி
மாலை நேரத்தின் பெருநடைகள்
மறக்கமுடியா சில நபர்கள்
விசனத்தில் கழித்த தேர்வறைகள்
விரும்பிச் சுமந்த சில வலிகள்
மானம் பறக்கும் மதிப்பெண்கள்
என
மனதை நிறைத்த நினைவலைகள்
*
முன்பொரு நாள் ஆற்றின் ஆழத்தில்
தனித்து விழுந்தது
ஒரு கனத்த கூழாங்கல்...


பின்பொரு தருணம் நினைவுகளின்
தீண்டலால்
அது தன் எடையிழந்து மேலெழுந்தது…
.
பள்ளியின் நினைவுகள் மீண்டெழுந்தோறும்
உடன் வருகிறது
ஒரு பிஞ்சுக்குழந்தையின்
மென்பாதம் முத்தமிடும் பரவசம்

வால்பாறை



“ஒண்ணுமே சொல்லாம இருந்தா எப்படிப்பா ? நான் என்ன பண்ணுறது?” எனக் கேட்ட அருணாவை ஸ்டைலாக (பார்ப்பதாக நினைத்துக்கொண்டு) பார்த்துக்கொண்டே சொன்னேன், “உனக்கென்ன அதப்பத்தி, லீவு போடு; மத்தத நான் பாத்துக்கறேன்…” இப்படித்தான் துவங்கியது அருணாவின் பிறந்தநாள் Special Trip. நேற்றிரவு வரை எந்த இடத்துக்குப் போகிறோம் என்பதைகூட தெளிவாக முடிவு செய்திருக்கவில்லை. எல்லோரும் தெளிவாய் இருந்த ஒரே விசயம் நாளைக்கு அருணா பிறந்தநாள், எங்காவது Trip போறோம் என்பது மட்டுமே. ஏற்காட்டில் துவங்கி, புன்னகை மன்னன் அருவி, ஊட்டி, கொடிவேரி, பவானி சாகர் அணை என ஏதேதோ திட்டமிட்டு, இறுதியாக இன்று காலை 7:30 மணிக்கு நாங்கள் குடும்பத்துடன் கிளம்பியது வால்பாறைக்கு.

*

பூண்டியிலிருந்து மங்கலம், பல்லடம், பொள்ளாச்சி வழியாக ஆழியாறு அறிவுத்திருக்கோவிலை கடக்கையில் மணி 9:15 இருக்கும். நாங்கள் திட்டமிட்டிருந்த முதல் இடம் “Monkey Falls” வந்தது, எங்கள் கார் கொஞ்சம் Slowஆவது தெரிந்தவுடன், அருவி முன்பிருந்த கோவிலில் அமர்ந்திருந்த காவலாளி சொன்னார்; “ நிறுத்த வேண்டியதில்லைங்க… சொட்டுத் தண்ணியில்லீங்க சார்”. தன் பிறந்தநாளுக்கு Tripபோகும் அதிர்ச்சியிலிருந்தே மீளாத அருணாவுக்கு இது இரண்டாவது அதிர்ச்சி. என்னைப் பொருத்தமட்டில் அடியையும் சரி அதிர்ச்சியையும் சரி (வேறு வழியில்லாமல்!) அனுபவமாய் கருதுவதால், ”பயணம்தான் முக்கியம்; இலக்கில்லை” எனும் தத்துவத்தை (தூங்கிக்கொண்டிருந்த) எல்லோருக்கும் புரியும்படி சொல்லியவாறே, மலைப்பாதையில் கார் ஓட்டத்துவங்கினேன். 40 கொண்டைஊசி வளைவுகள் கொண்ட பாதை, மிகவும் பொறுமையாகவே வண்டி ஓட்டினேன். 11ஆவது வளைவில் இருந்த View Pointல் நிறுத்தி ஆழியாறு அணையைப் பார்த்தோம். கொஞ்சமே தண்ணீர் இருந்த அணையும், சொட்டுத்தண்ணீர் இல்லாத குரங்கு அருவியும் நாம் இயற்கைக்குச் செய்த துரோகத்தின் சாட்சியாகத் தோன்றின. சங்கடம் நிறைந்த மனதுடன் மீண்டும் பயணம் துவங்கியது; வேறெங்கும் நிற்காமல், நாங்கள் செல்வதாய் திட்டமிட்டிருந்த “கூழாங்கல் ஆற்றை” அடையும் போது மணி 11 இருக்கும்.

.

வால்பாறை பஸ் டிப்போ தாண்டி சென்றால் கிட்டத்தட்ட 2 கி.மீ. தொலைவில் வரும் ஒரு பாலம்; பாலத்தின் அடியில் கூழாங்கல் ஆறு. பாலத்தில் இடப்புறம் அதிக ஆழமாக இருப்பதால்; வலப்புறம் ஆழம் மிகவும் குறைவாக இருந்த இடத்தில் நானும், கார்த்திக்கும், கிருத்திகாவும் அப்பாவுடன் இறங்கினோம். தண்ணீர் எங்கோ ப்ரீஸரில் இருந்து வருவதாகத் தோன்றுமளவு சில்லிட்டிருந்தது. கிருத்திகா முதலில் தண்ணீரில் இறங்க மறுத்ததும், பின்னர், கிளம்பும் தருவாயில் தண்ணீரை விட்டு எழ மறுத்ததும் என ஏக ரகளை. கார்த்திக் தண்ணீரைக் கண்டால் மீனாகும் ரகம். என்ன கரைக்கருகிலேயே நீந்தும் மீன். 2 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. பின்னர் அங்கிருந்து ஏறத்தாழ 12 கி.மீ தொலைவில் இருக்கும் ”நீரார் அணைக்கு” பயணப்பட்டோம். அங்கும் தண்ணீர் குறைவுதான்; போதாததற்கு நாங்கள் அங்கு சென்று இறங்கவும், மழை மண்ணிறங்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் மட்டுமே அங்கிருந்தோம் பின்னர் வானிலை கொஞ்சம் இருட்டடிக்கத்துவங்கியதால், திரும்பலானோம். இந்த அணைக்கு வரும் வழியில் ரோடு இருந்ததை விட, குழிகளும், கற்களும் இருந்ததே அதிகம். கிட்டத்தட்ட ஒரு சாகசப்பயணம் செல்வதற்கிணையாய் இருந்த பயணம் அது.

.

கொஞ்சம் துளிக்கத் துவங்கியிருந்த மழை, இரவுக்குள் வீடு திரும்ப வேண்டிய சூழல் போன்ற காரணங்களால், வால்பாறையை விட்டு கிட்டத்தட்ட 3 மணியளவில் இறங்கத்துவங்கினோம். அணைக்கட்டை விட ஆற்றில் நாங்கள் மகிழ்ந்திருந்தோம்; அது ஒருவகையில் இந்த பயணம் மோசமில்லை என்ற நிறைவைத்தந்தது.

.

திரும்பி வரும் வழியில் விட்டு விட்டுப் பெய்த மென் தூரல், பயணத்தின் அழகை இரட்டிப்பாக்கியது. வால்பாறை மலையிறங்கி பொள்ளாச்சி ரோட்டில் விரைகையில் மணி 5 இருக்கும். பொள்ளாச்சிக்கு சற்று முன்னர் சுங்கத்தில் இருக்கும் “தாஜ் பிரியாணி” ஹோட்டலில் வண்டியை நிறுத்தினோம்; இந்த நாளில் அடுத்த கொண்டாட்டம் “பிரியாணி”. அளவான மசாலா, அட்டகாசமான பிரியாணி கூடவே பெப்பர் சிக்கன் , மட்டன் கொத்து என ரகளையான கூட்டணி. நிறைவான உணவு.

*

அதுவரை இந்த நாள் சிறப்பாய்த்தான் இருந்தது. அதன் பின்னர்தான் வெகு சிறப்பாய் மாறியது. அதுவும் உணவகத்தை விட்டு நாங்கள் வெளியே வந்தவுடனே. வேறென்ன, மழைதான்; வெறும் மழையல்ல மாமழை. சுங்கம் துவங்கி, நெகமத்துக்கு சற்று முன்பு வரை பெய்தது பெருமழை. கொஞ்சம் இடி, மின்னல், கூடவே செமயான காத்து என பெய்யெனப் பெய்தது. முன்னால் செல்லும் ஓரிரு வண்டிகளில் Danger Lightன் ஒளியை மட்டுமே கணக்கிட்டு கார் ஓட்டியது ஏறத்தாழ 40 நிமிடங்கள்தான் என்றாலும், பெருமழை தந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது. நெகமம் தாண்டி மழை சுத்தமாய் இல்லை. களைத்துபோய் வீடு திரும்புகையில் மணி 7:40 ஆகியிருந்தது.

*

இன்றைய பயணத்தின் பெருஞ்சிறப்பே மழைதான் என்று தோன்றியது.


அருணாவும் நினைத்திருக்கக்கூடும், “கல்யாணமாகி இவ்வளவு வருசத்துல, என்னைக்குமில்லா திருநாளா திடீர்ன்னு, பொறந்தநாளைக்கெல்லாம் Tour கூட்டிட்டு போனா, மழை மட்டுமா வரும், வானமே இடிஞ்சு விழும்…”


மீண்டும் ஒருமுறை ”ஹேப்பி பொறந்தநாள் அருணா “ Aruna Kalees :)

HBD



மாம்பலம் ரயில் நிலையம், மருந்தீஸ்வரர் கோயில், ஜாமூன், மாயாஜால், ஆழி சூல் உலகு, FINGER FISH, அபியும் நானும் திரைப்படம், HOT AND SOUR SOUP, ஜெ.சைத்தன்யாவின் சிந்தனை மரபுகள், சோலையில் சஞ்சீவனம் உணவகம், பெருங்குடி ஜெய்ஹிந்த் flat, பெசண்ட் நகர் பீச், Fried Rice, நாவல் பழம், நீரோடும் வைகையிலே பழைய பாடல் ,முருகன் இட்லிக் கடை, அடையாறு மருத்துவமனை, திருவான்மியூர் ரயில் நிலையம்....இன்னும் இன்னும்....


அன்பின் அருணா,
நம்மைத் தவிர இவ்வுலகின் மற்றெல்லா உயிர்க்கும், மேற்கண்டவை வெறும் சொற்கள். நமக்கோ ஒரு நாளும் மறக்கவியலா தடயங்கள்.

*
என் மீது நீ பொழியும் பேரன்பின் ஒரு பகுதியையேனும் திருப்பித்தருவதற்கே நான் செல்லவேண்டிய தூரம் இன்னும் மிக அதிகம்.

*
வலிகளை தாங்கிக் கொண்டும்
கசப்பை செரித்துக் கொண்டும்
வாழும் நாள்வரை
புன்னகை பூக்க விரும்பும் ஒருவனிடமிருந்து

அவன் புன்னகைக்கும் தருணங்களை விஸ்தரிக்கும் ஒருத்திக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

Happy birthday Aruna Kalees :)

பாதாம்...கூடவே ஒரு பல்டி



கோபம் இருக்கும் இடத்துலதான் குணம் இருக்கும். நம்மள ஒருத்தர் ரொம்பவும் திட்டினாலோ அல்லது அடிச்சாலோ, அவங்களுக்கு நம்ம மேல பாசம் அதிகமுன்னு அர்த்தம். எப்பயுமே அப்பாவே அம்மாவோ என்னை அடிச்சதோ, பெரிய அளவில் திட்டினதோ இல்ல. திரைப்படங்கள்ல வர மாதிரி தர்ம அடி வாங்குற அளவுக்கு நான் நடந்துகிட்டாலும் அருணா (இன்னும்) அந்த லெவலுக்கு போகல (பப்ளிக்ல அப்படித்தான் சொல்லமுடியும்கறது வேற விசயம்). என்னதான் கோவம் வந்தாலும் கார்த்திக்கும் நம்ம மேல கைவச்சதில்லை. அப்ப ”அடிக்கிற கைதான் அணைக்கும்”ன்னு பீலிங்க்ஸ் காட்டவைச்சது யாரு ?.
வேற யாரு என் மகள் கிருத்திகாதான்.
.
பாப்பா, (குறிப்பா என்னை) அடிக்கற விசயத்துல கிட்டத்தட்ட ஒரு விஜயசாந்தி மாதிரி. அதுலயும் அவள் ஏதாவது தப்பு பண்ணிட்டா, நாம அடிக்கறதுக்கு முன்னாடி நம்மள அடிச்சுட்டு, நாம் அந்த அதிர்ச்சில நிக்கும் போது, “அப்பா, திட்டிட்டாரு”ன்னு கண் நிறைக்கும் கண்ணீருடன் என் அப்பாவிடமோ, அம்மாவிடமோ குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பாள். அப்புறமென்ன, அடிச்சவள சமாதானப்படுத்த, வீடே சேர்ந்து என்னை கழுவிக் கழுவி ஊத்தும் கொடுமையும் நடக்கும். கோப ஸ்டோரி போதும், இப்ப குணத்துக்கு வருவோம். என்னதான் தர்ம அடி கொடுத்தாலும் , பாப்பாவுக்கு அப்பான்னா Specialதான். பல் விளக்கி விடுறதுல இருந்து, சாப்பாடு ஊட்டுற வரைக்கும் நான் செய்யும் போது கொஞ்சம் சமத்தா இருந்துக்கிறாள் என்பது வீட்டில இருப்பவர்கள் கண்டறிந்த உண்மை (அல்லது, அப்படி சொல்லியே எந்தலைல வேலைகளை கட்டுற வித்தையோ?!). அதை நானும் உணர்ந்து கொள்ளும் சம்பவம் சமீபத்தில் நடந்தது.
.
இரவில் ஊற வைத்த பாதாம் பருப்பை காலையில் கார்த்திக்கும், கிருத்திகாவுக்கும் தருவது வழக்கம். சென்ற வாரம் அப்படித்தான் ஒரு நாள் (அந்தனைக்கு பாப்பா, காலைல இருந்தே அப்பா, அப்பான்னு ஒரே கொஞ்சல்ஸ்), ஊற வைத்த பாதாம் பருப்பை கிருத்திகாவுக்கு ஊட்டினேன். இரண்டு முறை மென்ற பின் பாப்பா சொன்னாள்
“அப்பா, பாதாம் நீங்க ஊற வச்சதா?, ரொம்ப சூப்பரா இருக்கு”


“இல்ல பாப்பா, அம்மா ஊற வைச்சிருப்பாங்க” என்றேன். அட தர்மேந்திரா என அதிர்ச்சி reaction காட்டினவள்; அடுத்த நொடியிலேயே, அம்மாவிடம் சென்றவள், கொஞ்சம் கோவமாக கேட்டாள் “ஏம்மா, நீயா பாதாம் ஊற வச்ச?”. எங்கள் உரையாடலை முழுவதும் கேட்டுக்கொண்டிருந்த அம்மா ஒரு பாராட்டை எதிர்பார்த்தவாறே சொன்னார் “ஆமா, தங்கம்”;


“பாதாம் நல்லாவே இல்ல; நல்லா கலக்கி ஊற வைக்கோணூம்” என் மெல்லமாய் ஒரு அடி வைத்தாள், எப்போதும் நான் காட்டும் “அடிப்பாவி” reaction இப்போது அம்மாவிடம்.

:)

புத்தம் சரணம்...

புத்தனை எனக்கும் பிடிக்கும்
"ஆசையே அழிவுக்கு காரணம்" என்றதோடு
”அன்பே அனைத்துக்கும் மூலதனம்” என சொல்லியிருந்தால்

*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
மக்களின் கண்ணீர் நனைந்த அரியணை
அறத்தின் கேடு என அருளியிருந்தால்

*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
பற்றற்று இருப்பது, பெளத்தத்தின் மீதும்
என புரியும்படி விளக்கியிருந்தால்
*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
அதிகாரத்தின் கொடூரமுகம் அனைவரையும்
சமமாய் அரவணைத்திருந்தால்
*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
அரியணையையும் ஆட்சியையும் விட்டுவந்த
அவன் புகழ் பாடிக்கொண்டே,
அதன் பொருட்டே நிகழும் வன்கொடுமைகளை
தடுத்திருந்தால்
*
புத்தனை எனக்கு மிகவும் பிடிக்கும்;
என்ன, ஒரே வருத்தம்,
அவன் சித்தார்த்தனாகவே இருந்திருக்கலாம்.

துணை



ஆசைக்காய்

தகப்பன் விரல் பிடித்து

நடக்கிறாள் ஆதிரா...


பிஞ்சுப்பொன் கரத்துள்
தன் விரல் பொதித்த
தகப்பன் உணர்ந்தான்
பெருந்தெய்வம் உடன்வரும்
பாதுகாப்பை !

766









”மாமா, எனக்கு படம் வரையறது கூட கஷ்டம்; என்னப்போயி..”







காரணங்களை நான் சொல்லத் துவங்கும் முன்பே இடைமறித்தார் தம்பி மாமா. “எதெடுத்தாலும் முடியாது, தெரியாதுன்னு சொல்லாம, ஒரு முயற்சி பண்ணிப்பாருடா”;







அப்போதைக்கு மாமா சொல்வதுதான் சரியென்று பட்டது. ஓரளவு நன்றாக படிப்பவன் என்ற பிம்பம் எனக்கு இருந்ததால் என்னை டாக்டர் ஆக்கிவிடும் கனவு மாமாவுக்கு இருந்தது. பத்தாம் வகுப்பில் நான் வாங்கிய 416 மதிப்பெண்கள் அவருக்கு, “சரி பையன் ஓரளவு படிச்சுக்குவான்” என்ற நம்பிக்கையைத் தந்திருந்தது. அதன் வெளிப்பாடாக, மேல்நிலைக்கல்விக்கு பயாலஜி எடுக்கச்சொன்னார். எனக்கு மாமாவின் கனவு புரியும் என்பதால், ஒருவழியாக நானும் மனதளவில் பயாலஜியை கஷ்டப்படுத்தும் முடிவுக்கு வந்திருந்தேன். பத்தும் பத்தாததுக்கு, பள்ளியில் சேர்த்துவிட வந்திருந்த கிருஷ்ண மாமாவும் ”சரி, அப்படித்தான் நல்லா ஊக்கமா படிடா, நம்ம குடும்பத்துலயும் ஒரு டாக்டர் இருக்கட்டும்” என நம்பிக்கை ஊட்டினார். ஏற்கனவே தம்பி மாமாவிடம் பேசிமுடிக்கும்போது மானசீகமாக வெள்ளைக்கோட் அணிந்திருந்தவன், கிருஷ்ண மாமாவின் சொற்களைக் கேட்டதும் ஸ்டெதஸ்கோப்பையும் எடுத்துக்கொண்டேன். ஆயிரம் பேரைக் கொன்னு அரை வைத்தியன் ஆகும் முயற்சியில் இறங்காததும், “சிஸ்டர், அந்த ஆப்பரேஷன் தியேட்டரை ரெடி பண்ணுங்க” என்று சொல்லாததும் மட்டும்தான் பாக்கி.




*




பதினொன்றாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வில் பயாலஜியில் நான் வாங்கிய 169 மதிப்பெண்கள்தான், மேல்நிலைக் கல்வியின் இரண்டு வருடங்களில் நான் வாங்கிய அதிகபட்ச மதிப்பெண் என்பது மட்டுமல்ல; நான் பயாலஜி பாடத்தில் மூன்று இலக்கத்தில் மதிப்பெண் வாங்கிய முதலும் கடைசியுமான பரிச்சையும் அதுதான். கிட்டத்தட்ட பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரிக்கும் அதே கதிதான். ஆக, என் வாழ்க்கையில் மருத்துவமனைக்கு, நேயாளியாகவோ அல்லது பார்வையாளனாகவோ மட்டுமேதான் போக முடியும் என்பது எனக்கு பதினொன்றாம் வகுப்பிலேயே தெரிந்துவிட்டது. அந்நிலையில் மட்டுமல்ல எந்நிலையிலும் என்னைக் கைவிடாத பாடம் “கணக்கு”தான். அதன் கருணையால் மட்டுமே 766 மதிப்பெண்களுடன் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன்.




*




இன்றும், அலுவலகத்தில், என் உடன் பணிபுரியும் நண்பர்களில் 1000க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தும், ”யோசிக்கறதெல்லாம் நமக்கு ஆவாது பாஸ்” என்பவர்கள் உண்டு. ஹிந்தியில் “ராஷ்ட்ரபாஷா” வரைக்கும் தேர்ச்சி பெற்றிருந்தும் “ஹிந்தி எனக்கு மாளாது ஹே” சொல்லும் நெருங்கிய நண்பன் எனக்குண்டு. அவ்வளவு ஏன், 170 க்கும் மேல் ஆங்கிலத்தில் மதிப்பெண் பெற்றிருந்தும் Spelling என்பதற்கே தப்பாய் Spelling எழுதும் நண்பர்களை நீங்களும் அறிவீர்கள்தானே (ஒடனே எம்பட நெனப்பு வந்துச்சுன்னா, அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல). பெரும்பாலும் இந்த மதிப்பெண்களும் தேர்வும் “Selection”னுக்காக அல்ல, “Filtering”குக்காக என்பது என் நம்பிக்கை. லிப்ட்டோ நடந்தோ மொத்தத்தில் மேலேறினால் போதும்தான்.




*




பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிகள் வந்த உடனே எழுத நினைத்த விசயங்கள் இவை. ஆனால் இரண்டு மூன்று தினங்களாக கொஞ்சம் busyயாக இருந்துவிட்டதால் எழுதமுடியவில்லை. நமக்குத் தெரிந்த சில மாணவர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கக்கூடும். அதை கடக்கவே முடியாத மிகப்பெரிய துக்கமாக அனுசரிப்பதும்; குறைவான மதிப்பெண்களால் “வாழ்க்கையையே WASTE பண்ணிட்டயே” ரீதியில் கவலைப்படுவதும் தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன். எதிர்காலம் மனிதன் மனதில்தான் இருக்கிறதே ஒழிய, மதிப்பெண்களில் இல்லை; நிச்சயம் இல்லை.”




.




”நாமாய் விரும்பினால் ஒழிய, வீணாய்ப் போவதற்க்கும், வீணாக்குவதற்கும் வாழ்க்கை விடாது !”




.




வாழ்வோம் :)

Speed - Limited :)



நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ அல்லது தனியாகவேயேனும் பயணங்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் கார் ஓட்டுவது மிகவும் பிடித்தமானது. உற்ற நண்பர்கள் துணையுடனோ, அந்நிலை வாய்க்காத போது மனம் கவர்ந்த பாடல்களின் தொகுப்பு நிரம்பி இருக்கும் “Pendrive”ன் துணையுடனோ நீண்ட பயணங்கள் சென்றிருக்கிறேன்.

*

”அண்ணா, படம் 4 மணிக்கு; டைமண்ட் தியேட்டர் வந்திருங்க, நாங்க ஊத்துக்குளியிலிருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவோம்” ஹரீஷ் என்னிடம் சொன்னபோது பிற்பகல் 2:30 மணி இருக்கும். அலுவலக தோழர் ஒருவரின் புதுவீடு கெடா வெட்டுக்கு சென்றிருந்த நான் இருந்தது ஈரோட்டில். எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது மணி 2:45 இருக்கும். நசியனூர் பைபாஸ்லில் இணைந்த சற்று நேரத்தில் மீண்டும் அழைப்பு ஹரீஷிடமிருந்து.
“அண்ணா நாங்க இப்பதான் கிளம்புறோம்; நீங்க எங்க இருக்கீங்க?”
“தம்பி, நான் வரதுக்கு நேரமாயிரும்ன்னு நினைக்கிறேன்; நீங்க போங்க நான் தியேட்டர்ல வந்து Joinபண்ணிக்குறேன்” என்றேன். அதன் பின்னர் ஓட்டு ஓட்டு என ஓட்டி ஒருவழியாக தியேட்டருக்குள் கார் நுழையும் போது மணி 3:55. அதுவல்ல விசயம். ஊத்துக்குளியிலிருந்து சகலைகளும், ஹரீஷ்ம் எனக்கு சற்று முன்னர்தான் வந்திருந்தார்கள். ஒரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் நானும் என்னை உணர்ந்த தருணம் அது. என்னதான் வேகமென்றாலும் ஒருபோதும் நான் risk எடுத்ததில்லை. ஏன்னா, அடிப்படையில நான் கொஞ்சம் (அருணாவுக்கு?!) பயந்தவன்.
*
அதைபோலவேதான் நேற்று அலுவலக நண்பன் ஒருவன் திருமணத்துக்கு சேலம் சென்றிருந்த பயணமும். திருமணம் முடிந்த பின்னர் திரும்பி வரும் வழியில் கொஞ்ச நேரம் நானும் அலுவலக நண்பர் ஒருவரும் ரேஸ் விட்டோம். இந்த ரேஸ் கண்மூடித்தனமாக அல்ல; ஆங்கிலத்தில் “Calculative Risk” என்பார்களே, அவ்வகையில் சேர்ந்தது. முந்துவது அல்ல நோக்கம். “ஜி, நீங்க முன்னால போன லாரிய பாக்கவேயில்ல, கொண்டுபோய் மோதிருவீங்கன்னுதான் நினைச்சேன்”, அதுவரைக்கும் நன்றாக பேசிக்கொண்டுவந்த நண்பர் கார்த்திக்கின் குரலில் இருந்தது திகில். அப்போதுதான் இரண்டு லாரிகளுக்கிடையேயான இடைவெளியில் நுழைந்து திரும்பியிருந்தேன். அதைபோலவே சில பல ஜெர்க்குகளுக்குப் பிறகு ஒருவழியாக அவரை ஊத்துக்குளியில் இறக்கிவிட்டேன். எனக்கு பயணங்கள் மிகவும் பிடித்தவை; அதிலும் Drive செய்வது இன்னும் இன்னும் பிடித்தது. அப்படித்தான் நேற்றைய பயணமும்.
*
இன்று காலை ஊத்துக்குளியிலிருந்து பூண்டி வரும்போது அருணாவிடம் இந்த கதையை சொன்னேன். பொறுமையாக அனைத்தையும் கேட்டவள், வழக்கம்போல இறுதியாக ஒரு சிக்ஸர் அடித்தாள் “சூப்பர், இந்த கதையை அப்படியே அத்தை (என் அம்மா)கிட்ட சொன்னா, அதுக்கப்புறம் கார் சாவியை நீங்க தொடக்கூட முடியாது”
.
என் முகத்தில் எப்போது பல்ப் எரிந்தாலும், அதை அக்கணமே ப்யூஸ் போக வைக்கும் வித்தை கற்றவள் அருணா :)

டைரி - தொலைந்த கனவுகள்

ஏழு நாள் சாட்டியிருந்த திருமுருகன்பூண்டி காமாட்சியம்மன் பொங்கல் நேற்று வெகு சிறப்பாய் முடிந்தது. அருணாவுக்கு அரசு விடுமுறை, நான் விடுப்பெடுத்திருந்தேன். நீண்ட நாட்களுக்கு பின்னர் கோவிலின் பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. புதன் காலை 9 மணியளவில் மாவிளக்கு எடுக்கும் படலம் கோவிலில் இருந்து துவங்கியது. வீதி உலா வந்து மீண்டும் கோவிலுக்கு திரும்ப ஏறத்தாழ 2 மணி நேரங்கள் ஆனது. அதைப் போலவே மாலையில் அலகு குத்தி தேர் இழுக்கும் வைபவமும். மிகவும் நல்ல கூட்டம். இந்த முக்கியமான இரண்டு நிகழ்வுகளிலும் நான் முழுவதுமாக கலந்துகொண்டேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்க நேரிட்ட சிலர், அவர்களுடனான மிகச் சுருக்கமான உரையாடல் இவற்றைத் தவிர்த்து பொதுவாக நான் தனித்திருந்தேன். என் நெருங்கிய நண்பர்கள் என உள்ளூரில் யாரையும் சொல்லமுடியாதது எனக்கு ஒரு குறையாகவே இருக்கிறது.
*
இத்தனைக்கும் பால்யத்தில் நண்பர்களுடன்தான் பெரும் பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். அம்மா கடையில் இருந்த ஒரு மதிய வேளையில், வீட்டுக்கு அருகிருந்த கிணற்று மேட்டு பனைமரத்தடிக்கு நானும் கண்ணனும் சென்று ”நொங்கு போடு, நொங்கு போடு” எனக்கேட்ட போது எங்களுக்கு ஐந்து வயது (கோபத்துடன் தேடி வந்த அப்பா எங்களை நொங்கி எடுத்தது தனிக்கதை); கிருஷ்ணமூர்த்தியும் நானும் பிசிக்ஸ் ட்யூசன் போவதாய் சொல்லிவிட்டு பாப்பீஸ் ஹோட்டல் எதிரே கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த நாட்கள்; சின்னண்ணன் காட்டில் கொட்டும் வெய்யிலில் கிரிக்கெட் ஆடியே கழித்த கோடை விடுமுறைகள்; குடியிருந்த காம்பவுண்டின் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து விளையாடிய ஐஸ் நம்பர்; நந்தண்ணன், பாஸ்கர் அண்ணன், அங்குராஜ் அண்ணன், சண்முகம் அண்ணன், ரஞ்சித் அண்ணன், ரவி இன்னும் இன்னும் பால்யத்தின் மகிழ்ச்சியை பங்குபோட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் பெயர் பட்டியலில் அடங்காதது. கிட்டத்தட்ட அத்தனை பேரும் ஒரே பள்ளி; பெரும்பாலும் ஒரே ட்யூசன்; வீடுகளும் ஒரே காம்பவுண்டில் அல்லது சற்றுத் அருகில்; என பெரும்பாலான நேரங்கள் சேர்ந்திருக்கும் வரம் பெற்ற அற்புத நண்பர்கள். திருமுருகநாதர் தேர், காமாட்சியம்மன் பொங்கல், முத்து மாரியம்மன் பொங்கல் என் உள்ளூர் திருவிழாக்களில் சேர்ந்து சுற்றித்திரிந்த நாட்கள் என்றும் மறவாதவை.
*
பின்னர், பள்ளிக்கல்வி முடிந்து, கல்லூரி சென்ற நாட்களில் விடுதியில் தங்கிவிட, கொஞ்சம் கொஞ்சமாய் பால்யத்தின் சிநேகிதங்களை மறக்கலானேன். இதோ இப்போது என் நெருங்கிய நட்புவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான நண்பர்கள், பள்ளி இறுதியாண்டில், இளங்கலை/முதுநிலை கல்லூரியில், பணிபுரியும் இடத்தில் பழகியவர்கள்தான். மனம் விட்டுப் பேசக்கூடிய மிக நெருக்கமான தோழமைகள்தான். என்ற போதிலும் பால்யத்தின் ஏதேனும் ஒரு நட்பையாவது பேணிக்காத்திருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி எழும். ஒற்றை மாங்காய் கீற்றில், சிறிய துண்டு தர்பூசணிப்பழத்தில், உடைந்துபோன சின்ன சிலேட்டுப் பென்சிலில், கடனாய்த் தந்த/வாங்கிய சொட்டு இங்கில் மிகப்பெரிய கோபங்களையும் தீர்க்க முடிந்த கனாக்காலம் அது. மற்ற எல்லா தருணங்களையும் விட, உள்ளூரில் நடக்கும் பண்டிகைகள் என் பால்ய சிநேகிதர்களின் நினைவை, அவர்களின் சிநேகிதத்தை தொடராமல் விட்ட என் அறியாமையை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
*
பெருங்கூட்டத்தில் தனித்திருப்பது சில சமயம் வரம்; பல சமயங்களில் சாபம்.
:(

ஆலகாலம்



இன்னும் பலப்பட்டிருக்கும்

சில உறவுகள்

நான் உதிர்த்த சில சொற்களைத்

திரும்பப்பெற முடிந்திருந்தால்

*
எந்த நட்பும்
பிரிந்திருக்காது
ஆளுக்குத் தக்க முகமூடியை
அடியேனும் அணிந்திருந்தால்
*
நற்பெயரை நான்
காத்திருக்க முடியும்
உள்ளொன்று வைத்து
புறமொன்று உரைத்திருந்தால்
*
என்னுடைய பயணம்
இன்னும் இலகுவாயிருந்திருக்கும்
எல்லோருடைய அடியொற்றி
என் பாதையையும் நான் அமைத்திருந்தால்
*
இதோ
இருள் கவிழும் இந்த மாலையில்
நான் தனித்தருந்தும்
என் இறுதிக் கோப்பைத் தேநீரில்
இறங்கியிருக்கிறது
உண்மையின் விஷம்.

பாகுபலி-2



சனிக்கிழமை இரவு திருப்பூர் டைமண்ட் தியேட்டரில் இரண்டாவது முறையாக “பாகுபலி-2” பார்த்தேன். இம்முறை குடும்பத்துடன். கதை, திரைக்கதை, இசை, பிரம்மாண்டம் என ஜாம்பவான்கள் பலமுறை விவாதித்த விசயங்களைப் பற்றியதல்ல இப்பதிவு. மாறாக, இப்படத்தில், என்னைக் கவர்ந்த ஒரு பாத்திரப்படைப்பு (Characterization) பற்றிய சிறு பகிர்வு. அது, தன் மகனுக்கும் மேலாக இன்னொருத்தி மகனைக் கருதிய ராஜமாதா சிவகாமியோ, அன்னை கற்றுத்தந்த தர்மத்தின் வழி நின்று அன்னையையே எதிர்த்து நின்ற பாகுபலியோ, எந்நிலையிலும் விசுவாசம் மாறாத கட்டப்பாவோ அல்ல; எந்நிலையிலும், யார் முன்னும், எதன் பெருட்டும் தன் சுயம் விட்டுத்தராத ”தேவசேனா”. அந்த பாத்திரப்படைப்பும், அவள் பேசும் வசனங்களும் அட்டகாசம்.

*

தன் மண்ணுக்கு நலம் பயக்கும் என்ற போதிலும், பொன் மலை குவித்து மணம் பேச வந்த போதிலும், தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் சிவகாமிக்கு பதில் மடல் எழுதும் தருணம்; என்னதான் தன் மனம் கவர்ந்தவனாக இருந்தாலும், அவனே மகிழ்மதியின் முடி இளவரசனாக இருந்தபோதிலும், போர்த்திறம் பொருந்திய மாவீரனான போதும், பாகுபலியுடன் கைதியாக செல்ல மறுக்கும் காட்சி, பெண்ணின் விருப்பம் அறியாமல், தன் மகனுக்கு வாக்கு தந்த சிவகாமியை, அவள் நாட்டு அரசவையிலேயே எதிர்த்துப் பேசுவது, தனிப்பட்ட வஞ்சத்தால் தன் கணவன் பதவி பறிக்கப்படும் போது, அதைக் கண்டு, தவறு எனத்தெரிந்தும் மெளனமாயிருக்கும் சிவகாமியை நோக்கி நேர்படப் பேசுவது என பல காட்சிகளில் தேவசேனையின் ஆளுமையின் காட்சியமைப்பு அட்டகாசம்.

*

அதே சமயம், மகிழ்மதி பேரரசின் ராஜமாதாவை கோவப்படுத்தும் விதமாய் தன் தங்கை மடல் எழுதும் போது, அதை தடுக்கக் கோருபவர்களிடம் குந்தல நாட்டு மன்னர் சொல்லும் “அது அவள் விருப்பம்” என்னும் ஒற்றை வசனத்தில் அவளின் ஆளுமைக்கு கிடைக்கிறது அங்கீகாரம். சமகாலத்தில் நாம் கடந்து வரும் ”கொஞ்சம், அனுசரிச்சு போம்மா”, “பொண்ணுக்கு இவ்வளவு திமிரு ஆகாது”, “எல்லாம் போக போக சரியாயிரும்; கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுங்க” தருணங்களால், தேவசேனையின் அண்ணன் characterம் அந்தக் காட்சியும் முக்கியமாய் தோன்றியது. அதைப்போலவே, என்னதான் பாசமான மனைவியாய் இருந்தாலும், பொது அரங்கில் தன் அன்னையை எதிர்த்துப் பேசுவதையும்; தன் தேசத்தின் சட்டதிட்டங்களை விமர்சிப்பதையும் தடுக்காமல் அதிலுள்ள நியாயத்தின் பொருட்டு அமைதிகாக்கும் பாகுபலியின் Characterம் அருமை.

*

சமீபத்தில் பார்த்த ”காற்று வெளியிடை” படத்தின் நாயகி அதிதீயின் பாத்திரப்படைப்பும் காதலனே ஆனாலும், தன் சுயமரியாதையை விட்டுத்தராத ஒரு பெண்ணாய் அமைக்கப்பட்டிருந்ததாலோ (தேவசேனையின் ஆளுமை அளவுக்கு காட்சிப்படுத்தப்படாத போதும்) என்னவோ, படம் பார்த்துமுடித்த பின் தேவசேனை குறிந்த காட்சிகளை நினைக்கும்போது அதிதீயின் பாத்திரமும் நினைவுக்கு வருகிறது

*

சரி, இப்ப நம்ம சோகக் கதைக்கு வருவோம்; நான் பாகுபலி-2 திரைப்படத்தை இரண்டாவது முறை பார்ப்பதால், அருகிருந்த அருணாவிடம் தேவசேனா வரும் மேற்சொன்ன காட்சிகளில், “ஹே, இப்ப ஒரு வசனம் வரும் பாரு; அவ கோவத்தை கவனி” ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக்கிட்டிருந்தேன். ஒரிரு காட்சிகளை மிக அமைதியாய் உற்று கவனித்தாள்; மூன்றாம் முறை அதைப்போலவே சொல்ல முற்பட்ட என்னை இடைமறித்து (படத்துக்கு கூட்டிட்டு வரதே எப்பயாவது ஒருக்கா, இதுலயும் பாக்கவுடாம தொண தொணன்னு பேசிட்டே இருக்கிறேன் என்ற கோபத்தில் ??) சொன்னாள், “அவ கட்டியிருக்கற சேலை சூப்பரா இருக்குல்ல, அத மொதல்ல Note பண்ணுங்க”


அந்த AC தியேட்டரிலும் எனக்கு குப்பென்று வியர்த்ததன் காரணம் கல்யாணமான பசங்களுக்கு மட்டும்தான் புரியுமுங்க :)

ஆலகாலம்

ன்னும் பலப்பட்டிருக்கும்
சில உறவுகள்
நான் உதிர்த்த சில சொற்களைத்
திரும்பப்பெற முடிந்திருந்தால்
*
எந்த நட்பும்
பிரிந்திருக்காது
ஆளுக்குத் தக்க முகமூடியை
அடியேனும் அணிந்திருந்தால்
*
நற்பெயரை நான்
காத்திருக்க முடியும்
உள்ளொன்று வைத்து
புறமொன்று உரைத்திருந்தால்
*
என்னுடைய பயணம்
இன்னும் இலகுவாயிருந்திருக்கும்
எல்லோருடைய அடியொற்றி
என் பாதையையும் நான் அமைத்திருந்தால்
*
இதோ
இருள் கவிழும் இந்த மாலையில்
நான் தனித்தருந்தும்
என் இறுதிக் கோப்பைத் தேநீரில்
இறங்கியிருக்கிறது
உண்மையின் விஷம்.

வேறேதும் அறியாதவன்

எப்போதாவது நீ காண்பாய்
எனும் நம்பிக்கையில்
அன்பை
மொழிபெயர்த்துக் கொண்டே இருக்கிறேன்
சொற்களாய்
வேறேதும் அறியாதவன் நான்
*
உன் புன்னகையின் வீச்சு
மிகப்பெரியது
உன் வீட்டில் நீ சிரிக்க
என் கைப்பேசி நாணுது இங்கே !

*

அன்பின் ஆதிரா-2

அன்பின் ஆதிரா,

எந்த விசயத்துக்காய் நான் பயந்தேனோ, அந்த விசயம் மெல்ல மெல்ல நடந்துகொண்டிருக்கிறது. அனுதினமும் இடைவெளி அதிகாரித்துக் கொண்டே இருக்கிறது. ஆயுளுக்குமான ஒரு மிகச்சிறந்த நட்பாய்த் தொடரவேண்டுமென்றால், அந்த நட்பில் எவ்வளவு உண்மையிருக்க வேண்டும். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது, என்னால் நட்பில் பொய்யை கலக்க இயலாது. இத்தனை வலிக்கும் காரணம் ஒரு உண்மை சொன்னதுதானே.

இந்த இருதினங்களாக, எத்தனையோ முறை உனக்காக Type செய்த செய்திகளை நானே அழித்திருக்கிறேன். சிலமுறை மனது கேட்காமல் உன் எண்ணை dial செய்துவிட்டு ஆனால் அழைக்காமல் விட்டிருக்கிறேன். என் மீதான உன்னுடைய கோபத்துக்கு நியாயமான காரணம் இருக்கக்கூடும். நான் உன்னை தொந்தரவு செய்யமாலிருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இயல்பாகவே, என்னுடன் இருப்பவர் யார் மனதும் புண்படக்கூடாது என்பது மட்டுமல்ல எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்க வேண்டும் என எண்ணுபவன் நான். கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களுடன் கூட மனம் நோகும்படியான விவாதங்களை தவிர்ப்பவன் நான். ஆனால் நாம் தொலைப்பேசியில் பேசிய கடைசி இரு உரையாடல்களில் நீ என்னால் மனம் கஷ்டப்பட்டது எனக்குப்புரிந்தது. என்னுடனான உரையாடல்களால் நீ புண்படுவாயானால் அதை தவிர்க்கின்ற (தவிர்ப்பது எனக்கு கடினமென்றாலும்) வலியை நானே கரைத்துகொள்கிறேன். ஒருவகையில் விளக்கமுடியாத கீழ்மை படிந்த என் மனதுக்கு இந்த தண்டனை அவசியம்தான் என்றால் அது அப்படியே ஆகட்டும்.

ஒன்றை மட்டும் புரிந்துகொள், இந்த கடிதம் மட்டுமல்ல, இதற்கு முன்பாக நான் பேசிய அத்தனை சொற்களுக்கும் பின்னால் இருப்பது அன்புதானேயன்றி வேறெதும் இல்லை.

-    நான்

அன்பின் ஆதிரா

அன்பின் ஆதிரா,

இந்தக் கடிதத்தை எப்படித்துவக்குவது என்றே அறியாமல் துவக்குகிறேன். நீ என்னை தவிர்ப்பதாய் உணர்ந்த கணத்தில் விழுந்தது இந்த கடிதத்திற்கான வித்து.

என்னையறியாமல் நான் சேமித்து வைத்துக் கொண்ட நினைவுகள், ஞாபக அடுக்கிலிருந்து ஒவ்வொரு கணமும் மீண்டெழுகின்றன. ஒற்றை ஆயுளுக்கான ஒட்டுமொத்த சுமையையும் இப்போது உணர்கிறேன். இதில் உன் பிழையென்று எதுவுமில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இது நான் விரும்பிச்செய்த பிழையல்ல என்பதும். என்றாலும், இந்தப் பிழைக்கு தண்டனை நீ என்னை தள்ளிவைப்பது என்றால் அந்த வலியை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லாதவன் நான்.

உன் அருகாமையை யாசிக்க எந்த ஒரு உரிமையும் அருகதையும் எனக்கில்லை என்பதை நான் நன்கறிவேன். அதைப் போலத்தான் உன்னுடைய கனவு வாழ்க்கையில் கல்லெறிவது எவ்விதத்திலும் அறமல்ல என்பதும். என்ன செய்ய, புத்திக்கு புரியும் எல்லாமும் மனதுக்கும் புரிந்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் சந்தோசமாய் இருந்திருப்பேன். ஒன்று மட்டும் நிச்சயம், என்னை விட்டு நீ விலகி விலகிச் செல்லும் ஒவ்வொரு அடியிலும், மேலும் மேலும் நினைவால் சூழ்கிறாய்.

உனக்கே தெரியும், என்னுடைய இந்த வலியை, என்னுடைய சுமையை உன்னையன்றி வேறு யாரிடமும் என்னால் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாது. நள்ளிரவில் ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் பைக் ஓட்டும்போது பாதையை மறைக்கும் கண்ணீர் துளிகளுடன் பயணம் செய்த அனுபவம் உனக்கிருக்கிறதா ? நேற்று வரை எனக்கும் அந்த அனுபவம் இல்லை.

உன்னிடமிருந்து எனக்கான சில சொற்களை எதிர்பார்த்து எதிர்பார்த்தே ஏமாறுகின்றேன் ஒவ்வொரு நாளும். ஒரு எளிய மனதின் அன்பை புரிந்துகொள் என்பதை மட்டுமே உன்னிடம் சொல்ல எண்ணுகிறேன். இந்தக்கடிதத்தின் ஒரு சில சொற்களாவது (என்னைப் போல் இல்லாமல்) உன் காலடி அடையும் என்ற நம்பிக்கையுடன்….


  -    நான்.

தொடுவான் தூரம்

பகிந்துகொள்ள யாருமேயில்லாமல்
ஒவ்வொரு கோப்பைத் தேநீரையும்
தனியே அருந்துகிறேன்…

கேட்பதற்கு யாருமேயில்லாத
கவிதைகளை
என்னிடமே மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொள்கிறேன்

இணைந்து வர பாதங்கள் இல்லாத
ஒரு பயணம்
எப்போதும் போகிறேன்…

சாய்ந்து அழ தோள்களில்லாமல்
விழி நீர் துடைக்கும் கரங்களில்லாமல்
ஒரு பெருந்துக்கம்
நானே விழுங்கி
என்னுள்ளே செமிக்கிறேன்

மொத்தத்தில்...

ஒருபோதும் நெருங்கமுடியாத
அடிவானம் நோக்கியே
அத்தனை அடிகளையும்
எடுத்து வைக்கிறேன் :(

முகாரி

ஒரே சூரியன்
சுட்டெரிக்கிறது
மொத்த பூமியையும்

ஒரே நிலவு
குளிர்விக்கிறது
மொத்த வெப்பத்தையும்

ஒரே ஒருத்திதான் நீயும்...
எரிந்து கொண்டே
குளிர்கின்றேன் நான் !
*

நீ அறியாமல்
உன் நிழலைத் தீண்டி
மோட்சமடைகின்றன
கல்லும் மண்ணும்
மரம் செடி கொடிகளும்

அப்படியே இருந்துவிட்டுப்
போகிறேன் நானும்...

உயிர் வளி

எட்டாவிட்டாலும்
நிலவைப் பார்த்தே சோறுண்ணும்
குழந்தையைப் போலவே

உன்னைப் பார்த்தே
ஒட்டிக்கொள்கிறேன் வாழ்க்கையை
நான் !
*

எல்லோரையும்போல்தான் நீயும்
ஆக்சிஜனை சுவாசிக்கிறாய்

முடிவில்
எனக்கான ஆக்சிஜனை
வெளியிடுகிறாய்

அறிவியல் மறுக்கும்
அதிசயம் நீ
*

ரசவாதி

அதிகாலை கோலமிட
வாசல் தெளிக்கிறாய்…
சாணிக் கரைசல் மணக்கிறது
சந்தனக் கரைசலாய்
*

8 புள்ளி 16 வரிசை என கணக்கிட்டு
விரல்களிடையே வழிய விடுகிறாய்
கோலமாவை
மண்ணில் எழுந்து வந்தது
சர்க்கரைப்பந்தல்
*

ஆங்கிலத்தில்
உன் விரல் வரையும்
எழுத்துக்களை மொய்க்கிறேன்
சர்க்கரை கண்ட எறும்பாக

அழகு தமிழ் நீ எழுத
ஆகிறேன் நான்
தேனீயாய் !

பித்தன் மொழி

ஒற்றை வளையணிந்தவை
உன்னுடைய மென்கரங்கள்
மணிகளே இல்லாதவை
உன் பாதக்கொலுசுகள்
இருப்பினும்
பித்தேறி உணர்கிறேன்
மெல்லிசையை
உன் அசைவில்…
*
எதேச்சையாகவாவது சற்றே
மெய் தீண்டு
இல்லையென்றால்
மலரிதழ் விரித்து தானமிடு
எனக்கான சில சொற்களை
அதுவும் ஆகாதென்றால்
ஓர விழியிலாவது அனுப்பு
ஒரு பார்வையை
எதுவும் முடியாதென்றால்
பேசாமல் அருகே இரு.
உன்னைத் தழுவி வரும்
காற்றில் குளித்து
சொஸ்த்தப்படுத்திக் கொள்கிறேன்
என்னை…