title


டைரி - தொலைந்த கனவுகள்

ஏழு நாள் சாட்டியிருந்த திருமுருகன்பூண்டி காமாட்சியம்மன் பொங்கல் நேற்று வெகு சிறப்பாய் முடிந்தது. அருணாவுக்கு அரசு விடுமுறை, நான் விடுப்பெடுத்திருந்தேன். நீண்ட நாட்களுக்கு பின்னர் கோவிலின் பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. புதன் காலை 9 மணியளவில் மாவிளக்கு எடுக்கும் படலம் கோவிலில் இருந்து துவங்கியது. வீதி உலா வந்து மீண்டும் கோவிலுக்கு திரும்ப ஏறத்தாழ 2 மணி நேரங்கள் ஆனது. அதைப் போலவே மாலையில் அலகு குத்தி தேர் இழுக்கும் வைபவமும். மிகவும் நல்ல கூட்டம். இந்த முக்கியமான இரண்டு நிகழ்வுகளிலும் நான் முழுவதுமாக கலந்துகொண்டேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்க நேரிட்ட சிலர், அவர்களுடனான மிகச் சுருக்கமான உரையாடல் இவற்றைத் தவிர்த்து பொதுவாக நான் தனித்திருந்தேன். என் நெருங்கிய நண்பர்கள் என உள்ளூரில் யாரையும் சொல்லமுடியாதது எனக்கு ஒரு குறையாகவே இருக்கிறது.
*
இத்தனைக்கும் பால்யத்தில் நண்பர்களுடன்தான் பெரும் பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். அம்மா கடையில் இருந்த ஒரு மதிய வேளையில், வீட்டுக்கு அருகிருந்த கிணற்று மேட்டு பனைமரத்தடிக்கு நானும் கண்ணனும் சென்று ”நொங்கு போடு, நொங்கு போடு” எனக்கேட்ட போது எங்களுக்கு ஐந்து வயது (கோபத்துடன் தேடி வந்த அப்பா எங்களை நொங்கி எடுத்தது தனிக்கதை); கிருஷ்ணமூர்த்தியும் நானும் பிசிக்ஸ் ட்யூசன் போவதாய் சொல்லிவிட்டு பாப்பீஸ் ஹோட்டல் எதிரே கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த நாட்கள்; சின்னண்ணன் காட்டில் கொட்டும் வெய்யிலில் கிரிக்கெட் ஆடியே கழித்த கோடை விடுமுறைகள்; குடியிருந்த காம்பவுண்டின் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து விளையாடிய ஐஸ் நம்பர்; நந்தண்ணன், பாஸ்கர் அண்ணன், அங்குராஜ் அண்ணன், சண்முகம் அண்ணன், ரஞ்சித் அண்ணன், ரவி இன்னும் இன்னும் பால்யத்தின் மகிழ்ச்சியை பங்குபோட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் பெயர் பட்டியலில் அடங்காதது. கிட்டத்தட்ட அத்தனை பேரும் ஒரே பள்ளி; பெரும்பாலும் ஒரே ட்யூசன்; வீடுகளும் ஒரே காம்பவுண்டில் அல்லது சற்றுத் அருகில்; என பெரும்பாலான நேரங்கள் சேர்ந்திருக்கும் வரம் பெற்ற அற்புத நண்பர்கள். திருமுருகநாதர் தேர், காமாட்சியம்மன் பொங்கல், முத்து மாரியம்மன் பொங்கல் என் உள்ளூர் திருவிழாக்களில் சேர்ந்து சுற்றித்திரிந்த நாட்கள் என்றும் மறவாதவை.
*
பின்னர், பள்ளிக்கல்வி முடிந்து, கல்லூரி சென்ற நாட்களில் விடுதியில் தங்கிவிட, கொஞ்சம் கொஞ்சமாய் பால்யத்தின் சிநேகிதங்களை மறக்கலானேன். இதோ இப்போது என் நெருங்கிய நட்புவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான நண்பர்கள், பள்ளி இறுதியாண்டில், இளங்கலை/முதுநிலை கல்லூரியில், பணிபுரியும் இடத்தில் பழகியவர்கள்தான். மனம் விட்டுப் பேசக்கூடிய மிக நெருக்கமான தோழமைகள்தான். என்ற போதிலும் பால்யத்தின் ஏதேனும் ஒரு நட்பையாவது பேணிக்காத்திருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி எழும். ஒற்றை மாங்காய் கீற்றில், சிறிய துண்டு தர்பூசணிப்பழத்தில், உடைந்துபோன சின்ன சிலேட்டுப் பென்சிலில், கடனாய்த் தந்த/வாங்கிய சொட்டு இங்கில் மிகப்பெரிய கோபங்களையும் தீர்க்க முடிந்த கனாக்காலம் அது. மற்ற எல்லா தருணங்களையும் விட, உள்ளூரில் நடக்கும் பண்டிகைகள் என் பால்ய சிநேகிதர்களின் நினைவை, அவர்களின் சிநேகிதத்தை தொடராமல் விட்ட என் அறியாமையை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
*
பெருங்கூட்டத்தில் தனித்திருப்பது சில சமயம் வரம்; பல சமயங்களில் சாபம்.
:(

No comments: