title


முகவரி



அனலிலிட்ட பொன்னாய்
உருகியோடும் தார் ஆற்றின்
நடுவிருக்கும்
ஒற்றைச் செருப்பின் முகவரி
தோய்ந்த ரத்தம்…

***

எல்லைகளும் அடையாளமுமற்ற
மிக நீண்ட வான்பரப்பில்,
வழிந்தோடும் காற்றில்
ஒரு பறவையின்
சிறகசைப்பு பதித்துப்போவது
திரும்ப கூடடைவதற்கான
தடம்!

வாஸ்து

மேற்கே கதவு வைக்காதே
கிழக்கே உயரமாக்காதே
வடக்கே பீரோ கூடாது
தெற்கே வாசல் சிறக்காது

இன்னும் இன்னும்
ஆயிரமாயிரம் கட்டளைகள் உண்டு
ஒரு வீடு கட்ட
மட்டுமல்ல
கோவில் கட்டவும்

எத்தனை விதிகள்
அனுதினம் வந்தாலும்
எந்த சாஸ்திரத்தாலும்
கட்டமுடிந்ததேயில்லை
துக்கம் சமீபிக்காத
ஒரேயொரு வீட்டை…

மாதொருபாகன் (நாவல்)



தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை எந்தச் சொல் மிக மிக உருக்குலைக்கும்? ஒரு ஆணை எந்த வசை மிகக் கொடுமையான வதை புரியும்? நம்முடைய சூழலில் எது ஒரு நிறைவான வாழ்க்கையாக மதிப்பிடப்படுகிறது? இவை அனைத்துக்கும் விடை ஒரு குழந்தையை அடிப்படையாகக் கொண்டது. “மலடிஎன்ற ஒற்றை சொல் கொடுக்கும் வலி பிரசவ வலியை விடவும் பல மடங்கு மிகக் கொடூரமானது. எந்த தர்ம நியாயம் பேசும் ஆணாலும், இகழ வேண்டிவறடன்என்று ஏசுபவர்களின் இழிசொல்லுக்கு பதிலுரைக்க முடிவதில்லை. என்னதான் மற்றவர் போற்ற வாழ்ந்தாலும் சந்ததி இல்லாவிட்டால் வாழ்வுக்கே அர்த்தமில்லை என்னும்படியான ஒரு பெரும்போக்கு இன்னும் உயிர்த்திருக்கிறது.

இந்த பிரச்சனையை மையமாக வைத்து “திருச்செங்கோடு” மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களை, அதன் மக்களை பின்புலமாகக் கொண்டு ”திரு. பெருமாள்முருகன்” அவர்கள் எழுதியுள்ள நாவல் “மாதொருபாகன்”. மாதொருபாகன் என்பது சிவனின் பெயர் (மாது ஒரு பாகன் – பெண்ணை ஒர் பாகமாக கொண்டவன்). உண்மையில் பெண்களை தெய்வமாக கொண்டாடப்படுவதான பிம்பம் கொண்ட, தன் உடலின் சரிபாதியை மனைவிக்கு தந்த கணவரை தெய்வமாக கருதும் சமூகம் நம்முடையது. ஆனால் உண்மையில் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலான இந்தியப் பெண்கள். முன்னர் சொன்ன குழந்தையில்லாத தம்பதிகளிலும் முதலில் (அல்லது முற்றாக) பாதிக்கப்படுவது பெண்தான். அத்தகைய பெண்களைப் பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை பற்றியும் ஓரளவுக்கு பதிவுகள் இருக்கின்றன. ஆனால் (எனக்குத் தெரிந்து) ஒரு கணவனின் துயரை அவன் எதிர்கொள்ளும் வலிகளை பெரும்பாலும் நாம் பதிவு செய்ததேயில்லை. அந்த குறையை மிக செறிவான தனது இந்த நாவல் மூலம் தீர்த்துள்ளார் “திரு. பெருமாள்முருகன்”.


எல்லா கிராமங்களிலும் சுணங்காமல் வேலை செய்யும் மன வலிமையும் உடல் தினவும் கொண்ட இளைஞர்களை பார்த்திருப்போம். அப்படியொரு மனிதன்தான் “காளி”. அவனது உற்ற நண்பனின் தங்கை “பொன்னாள்”. ஆசை ஆசையாய் நண்பனின் தங்கையையே மணம் புரிந்து ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவந்த போதும், வாரிசு இல்லை என்பதை கனமான சுமையாக சுமப்பவர்கள். சமயங்களில் அவர்கள் அதை மறந்தாலும் சமூகம் விடாமல் நினைவூட்டிகொண்டே இருக்கும் சாபம் பெற்றவர்கள். அடிப்படையில் இருவரும் ஒருவர்மீது ஒருவர் அபரிமிதமான காதல் கொண்டவர்கள். அதனால்தான் ”காளி”க்கு (வழக்கம்போல) இன்னொரு பெண்ணை திருமணம் செய்யும் யோசனையை “பொன்னா”வின் அம்மாவே முன்வைத்தாலும் அவனால் அதை ஒப்பமுடியவில்லை. குழந்தை வேண்டி எல்லாவிதமான பரிகாரங்களையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றிய பின்னரும் எந்த மாற்றமும் நிகழவில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் ஊராரின், உற்றாரின் விஷம் தோய்ந்த வார்த்தைகளுக்கு அரணாகவாவது ஒரு குழந்தை வேண்டுமென்னும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என்றாலும் நாளாக நாளாக காதல் கூடியதேயல்லாமல் குறையவில்லை.

இதன் பிண்ணனியில், இப்படிப்பட்ட மக்களின் துயர்தீர்க்க சென்ற நூற்றாண்டின் முற்பகுதிவரை “திருச்செங்கோடு” ஆண்டவரை முன்னிருத்தி இருந்த (வெளியில் யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்காத) வழக்கத்தையும் பதிவு செய்துள்ளார். எந்த ஆணும், பெண்ணும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத, நமக்கெல்லாம் அதிர்ச்சியளிக்கக் கூடிய வழக்கம் அது. இப்படியான செறிவான கதையில் சமூகத்தை, அதன் மூளைமழுங்கிப்போன மூடக்கருத்துக்களை சாடும் ஒரு பாத்திரமாக வருபவர் காளியின் சித்தப்பா “நல்லுப்பையன்”. திருமணம், குழந்தை, சாதி என எல்லா நம்பிக்கைகளையும் நக்கலடிக்கும் ஒரு கலக்ககாரராக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவரது பாத்திரம்தான் இந்த படைப்பில் என்னைக் கவர்ந்த பாத்திரம்.

கிராம மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, உறவுகளுக்கிடையேயான மெல்லிய முடிச்சுகள், அற்புதமாக வாசிப்புத்தீனி என எல்லாவிதத்திலும் ஒரு நிறைவைத்தந்த படைப்பு. நாவலின் உச்சமான இறுதி அத்தியாயங்கள் (எனக்கு) கொஞ்சம் ஒட்டாமல், சினிமாத்தனமாக இருந்தது மட்டுமே ஒரு சின்ன உறுத்தல். மற்றபடி ஒரு அற்புதமான நாவல் “திரு.பெருமாள்முருகன்” எழுதிய “மாதொருபாகன்”.
காலச்சுவடு பதிப்பகம் – 190 பக்கங்கள் – ரூபாய்: 140/-

பகடையாட்டம் (2013)

எல்லாக் கனவுகளையும்
குலைத்துப்போடும்
வெறிகொண்ட சர்ப்பங்களும்
எப்பாடுபட்டாவது
மேலேற்றிவிடும்
ஏணிகளும்
காத்திருக்கின்றன…

எங்கே போவது
எப்படிப் போவது
எதையும் முடிவுசெய்ய
முடிந்ததில்லை…

முடிவே காணமுடியா
பரமபத ஆட்டத்தில்
நம்மை பிணைவைத்து
தானே பகடையாகி
உருளத் துவங்குகிறது காலம்…

மீண்டுமொருமுறை !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !