title


தில்லு முல்லு

”பச்சைக் கிளிகள் தோளோடு”, கிருத்திகாவுக்கு மிகவும் பிடித்த பாடல்களுல் ஒன்று. அந்தப்பாடலின் இடையில் அப்பாவுக்கு மகள் “ஷேவிங்” பண்ணிவிடும் காட்சி வரும். அந்தப்பாடலை விரும்பி கேட்கத்துவங்கியதற்கு மறுவாரம் நான் ஷேவிங் பண்ணும்போது ஆசையாய் ஓடி வந்தவள் “அப்பா, நானு நானு” என கொஞ்சத்துவங்கினாள். ஆர்வத்துடன் நான் ப்ரஷை தந்தேன். நுரை நிரம்பிய ப்ரஷை, கையில் வாங்கியவள் என் முகமெங்கும் அப்பினாள், கிட்டத்தட்ட செவுத்துக்கு பெயிண்ட் அடிக்கறமாதிரின்னு வைங்க. நல்லவேளை வாயையும் கண்ணையும் முடீக்கொண்டிருந்ததால் தப்பினேன். அன்னிக்கு மட்டும் எம்பட மூஞ்சிய நீங்க பாத்திருந்தா, டெஸ்ட் கிரிக்கெட்ல வர பவுலர் ரேஞ்சுக்கு இருந்திருப்பேன். அதுக்கப்புறம், எம்மேல பரிதாபப்பட்டோ, இல்ல அவளுக்கே பாக்க சகிக்கலையோ என்னவோ, அந்தளவுக்கு பண்ணுறதில்லை. ஆனா, நான் எப்போது ஷேவிங் பண்ணத்துவங்கினாலும் அருகில் அமர்ந்து, ப்ரஷ், கிரீம் ஏதாவது எடுத்துக் கொடுப்பது அல்லது கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம்.
*
வூட்ல அம்மாவுக்கு நாம மீச இல்லாம இருந்தா ஆவாது. அருணாவுக்கு நாம கொஞ்சம் சுமார தெரியற எந்த கெட்டப்புமே ஆவாது. அதனால, மீச வக்காம இருக்கறதுக்கு, “வெள்ள முடி இருக்கு”, “ரொம்ப நேரமாகுது”, “ மீச, எச்சுக்கம்மியா போவுது” அப்படின்னு ஆயிரம் காரணம் சொன்னாலும் அத கேட்கறதேயில்லை. சரி, ஊரு ஒலகமே நமக்கு எதிரா இருப்பது வழக்கம்தானேன்னு நெனச்சுகிட்டு நானும் இப்பெல்லாம் மீச வச்சுக்கறது. சென்ற வாரம் அப்படித்தான், ஷேவிங் பண்ணிட்டு இருக்கும்போது வழக்கம்போல பக்கத்தில் இருந்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள் கிருத்திகா. திடீரென எதோ நினைத்துக் கொண்டவளாய் சொன்னாள்
“அப்பா, மீச வேணாம்பா”
பொங்கி வரும் சந்தோசத்துடன் கேட்டேன் “ஏம்பாப்பா ?”
“இல்லப்பா, முத்தா கொடுக்கயில குத்துதுப்பா”
சோகமாய் “இல்லமா, மீச வைக்காட்டி அம்மா திட்டுவாங்க” என்றேன்.
கொஞ்ச நேரம் என்னை பார்த்துக் கொண்டிருந்தவள், கேட்டாள் அந்த மில்லியன் டாலர் கேள்வியை
“ஏம்பா, மீச உங்களோடயது தானே…?”
”ஹீம் அதெல்லாம் ஒரு காலம் பாப்பா” என மனதில் நினைத்துக் கொண்டு ஒரு பரிதாபப் பார்வை பார்த்தேன்..
புரிந்தது போல ஒரு புன்னகை பூத்தாள் என் இளவரசி

ததாஸ்து

அனைவரையும் வகைப்படுத்தும்
உரிமையை
உங்களுக்கு நீங்களே
தந்துவிட்டீர்கள்
*
யார் நீ?
உன் அப்பன்? தாத்தன் ?
தாத்தனின் தகப்பன்?
அவரின் தந்தை ?
மொழி எது?
எந்த நிலம்?
கேள்விகளால் துளைக்கிறீர்கள்…
பதில்களில் சமாதானம் கொள்ளாமல்
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை
மீண்டும் ஒருமுறை நிறுவிக்கொள்கிறீர்கள்…
*
அனைத்துக்கும் மூலமாய்
இருந்தது ஒரு
ஆதிக்குரங்கு…
அதற்கென ஒரு வனம்
கனிமரங்கள்…
நீரோடை..
பசும்மரங்கள் சூழ் பெரு நிலம்…
அதுவே
என்னுடையது
உன்னுடையது
அவர்களுடையது
நம்முடையது….
*
ததாஸ்து…
#யாவரும்_கேளிர்

பரிணாமம்

கார் வாங்கின பின்னர், நடப்பதே பெரும்பாலும் அரிதாகிவிட்டது. சில சமயங்களில் நேரத்தின் அருமை கருதியும், பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளை சாக்கிட்டும், காரிலோ பைக்கிலோதான் பயணிப்பது வழக்கம். குறைவான படிக்கட்டுகள் இருந்தபோதும், ஊத்துக்குளி கதித்தமலைக்குக் கூட அடிவாரத்தில் இருந்து காரில்தான் செல்வோம். ஆனால் இன்று மாலை, கோவிலுக்கு செல்லும்போது, அடிவாரம் அடைந்தவுடன் கார்த்திக் படிக்கட்டில் நடந்து செல்லவேண்டும் என அடம் பிடித்தான். நாங்கள் அனைவரும் இறங்கி நடக்கலானோம்.
*
மென்காற்றுதான் இருந்தாலும் நன்கு வேகமாக வீசுக்கொண்டிருந்தது. குழந்தைகள் வேகமாக ஓட அவர்களுக்கிணையாய் நாங்கள் வேகமாய் நடந்து கொண்டிருந்தோம். பாதித்தூரம் கடந்திருப்போம். ”அருணா” என்று யாரோ ஒரு பெண் அழைக்கும் குரல் கேட்டு சற்றே நிதானித்தோம். அருணாவுக்கு நன்கு பழக்கமானவர் அவர். அவருடன் பேசிக்கொண்டே அருணா வர நாங்கள் நடக்கலானோம். நீண்ட நாட்கள் கழித்து பார்த்த ஒரு பரவசத்தில் அவ பல விசயங்களை பகிர்ந்து கொண்டு வந்தார். அதில் பெரும்பாலானவை அருணாவின் பால்யம் / பள்ளி சம்பந்தப்பட்டவை. அவர்கள் பேசிக்கொண்டே வர, தொந்தரவாயிருக்குமோ என சற்றே முன்னால் நான் நடந்து கொண்டிருந்தேன். இருந்தபோதும் அவர்கள் பேசியது எனக்கும் கேட்டது.
.
எவ்வளவுதான் நாம் வளர்ந்திருந்தாலும் நம்முள் நம் பால்யம் உயிர்ப்புடன் தான் இருக்கும். ஏதேனும் சம்பவங்கள் அல்லது உரையாடல்களால் அவை வெளிப்படும் தருணம் அற்புதமானது. இன்று அந்த அக்காவின் வார்த்தைகளில் அருணாவின் பால்ய / பள்ளி நினைவுகள் மீண்டெழுந்து வந்தன. அதில் பல சம்பவங்கள் ஏற்கனவே அருணா எனக்கு சொன்னதுதான். இருந்தபோதும் இன்னொருவர் அதை சொல்லுவதை நான் கேட்பது இதுவே முதல்முறை. அதில் ஒரு சம்பவம் அருணா பள்ளிக்கு கிளம்பும் சமயத்தில், ஒருவர் தலைவாரிவிட, அருணாவின் பாட்டி அவளுக்கு ஊட்டிவிட, அவள் படிப்பாளாம் (ஆத்தாடி! நாமெல்லாம் கிளாஸ்ல உக்காந்தே டிபன் போசியை தொறந்துபாத்த பரம்பரை). இந்தக்கதையை அருணா என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள். அதனால் மெல்லிய சிரிப்புடன் நான் திரும்பிப்பார்த்தேன்.
.
அருணா மீண்டும் அந்த காலத்துக்கே (தன் நினைவுகள் வாயிலாக) சென்ற மாதிரி இருந்தது. அங்கிருப்பவர் எவரையும் பார்க்காமல், தன் நினைவுகள் தந்த, பரவசம் கலந்த நெகிழ்ச்சியில் இருந்தாள் அருணா. ஏதாவது சொல்ல வேண்டும் போல் தோன்ற அவள் முகம் பார்த்தேன். அதில் தெரிந்தது என் மகள் முகம்.
*
பால்யத்தின் நினைவுகள் மேலெழும் தருணம் இயல்பாகவே மிக அழகானது. இன்றைய மாலைப் பொழுதின் ரம்மியத்தால் அது இன்னும் இன்னும் அழகாய் மாறியது.
:)

மெளனத்தின் சாரல்

ஒரு வட்டப்பாதையில்
எதிரெதிர் திசைகளில்
நடந்து கொண்டிருந்தோம் நாம்
*
ஆசிர்வதிக்கப்பட்ட
அரை நொடியில் ...
தீண்டிக்கொண்டோம் பார்வைகளால்
அடக்கமாட்டாமல் உதிர்த்தோம்
சிறு புன்னகையை
வெறுப்பதாய் காட்டிக்கொண்டு
கடந்தோம்
சிறு தலையசைப்பில்
*
பொன் முலாம் பூசிய இம்மாலையில்..
மெல்லிய சாரலுடன்
மணம் வீசும்
மகிழ மரத்தருகே...

நம்முன் இருக்கின்றன
ஆவி பறக்கும்
இரு தேநீர்க் கோப்பைகள்..

அதன் வெம்மையில்
கரைந்துகொண்டிருக்கிறது
நம் மெளனம் !

தென்றலின் தேன்மலர்

சில பாடல்கள் முதல்முறை கேட்டவுடனே பிடித்துப்போய் நம் விருப்பப்பட்டியலில் நிரந்தர இடம் பிடித்துவிடும். சில பாடல்களோ வெளிவந்த புதிதில் நமக்கு மிகவும் பிடித்துப்போய் காலப்போக்கில் நம்மிடமிருந்து விலகிப்போய்விடுபவை. இன்னும் சில பாடல்களை, நாம் எப்படியோ தவறவிட்டிருப்போம்; ஒரு மாயம் போல் திடீரென ஏதேனும் ஒரு வகையில் (பெரும்பாலும் FM வாயிலாக) நம்முன் வந்து நம்மை நிறைத்து விடுபவை. வெகு சில பாடல்களின் பல்லவி நமக்கு மிகப்பிடித்திருக்கும் (யாருயா அது பல்லவி என்று பல்லிளிக்க வேண்டாம் மக்களே.. அது பாடலின் துவக்கம்) ஆனால் போகப் போக சரணத்தில் நம்முடைய ரசனைக்கு தோதுப்படாமல் சறுக்கியிருக்கும். இது எதிலும் அடங்காத சில பாடல்கள் உண்டு; சரணமோ அல்லது பாடல் துவங்கும் விதமோ நமக்குப் பிடிக்காமல் போய் நாம் அதை தவறவிட்டிருப்போம். ஊர் ஒலகமே அந்தப் பாட்டை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், நம்முடைய ரசனைக்கேறப இல்லாததால் நாம் அந்தப்பாடலில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம். பின்னர் அப்பாடல் நம்மீது கருணை கொண்டிருந்தால், என்றேனும் ஒருநாள் அதனடியில் நாம் இளைப்பாற அனுமதிக்கும்.
*
ஒரிரு மாதங்களுக்கு முன்னர் வந்த ஒரு பின்மதியப் பொழுது அது. கோடைகாலம் என்றபோதும், வெப்பம் இல்லாமல், கொஞ்சம் மேகமூட்டமாய் இருந்த சமயம். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, நானும் என் நண்பனும் நடந்து வந்து கொண்டிருந்தோம். பேச்சு பலவிசயங்களை சுற்றிச்சுற்றி வந்தது. பேச்சின் காரணமாக, கடந்து செல்பவர்களை அசுவாரசியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தேவகணத்தில், ஆற்றின் அடியாழத்தில் கிடக்கும் கூழாங்கல் தன் எடையிழந்து மேலெழும்புவதைப் போல, எழுந்து வந்தது அந்த வரி.
.
பாடலின் இடையில் வரும் வரிதான். பாடலும் நிச்சயம் நன்கு ஹிட்டான பாடலாகத்தான் இருக்கவேண்டும்; ஆனால் நான் அடிக்கடி கேட்கும் பாடல் அல்ல. எவ்வளவு யோசித்தும் அது எந்தப்பாடல் என்பது நினைவுக்கு வரவில்லை. அன்று முழுவதும், வழக்கம்போல வேலை செய்தபோதும், நண்பர்களுடன் கூடிப்பேசிக் களித்த தருணங்களிலும், மனதின் ஒரு மூலையில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருந்தது அந்த வரி.
.
இரவில் வீடு திரும்பியபின்னர், கூகுளாண்வர் மற்றும் யூ-ட்யூப் துணையுடன் அந்தப்பாடலை கண்டுபிடித்தேன். அன்றிரவு மட்டும் குறைந்தபட்சம் ஒரு 5 முறையாவது கேட்டிருப்பேன். அதன்பின்னர் என் விருப்பப்பாடல் பட்டியலில் அந்தப்பாடலும் நிரந்தர இடம் பிடித்துவிட்டது. இன்றும் அப்பாடலின் பிற வரிகளைக் காட்டிலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான வரி அதுதான்.
*
ஒரு அழகான பாடலை நானடைய வழிகாட்டியாக இருந்த அந்த வரி
“தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே…”
.
ஒற்றை வரியால் என்னை அலைக்கழித்து, பின்னர் என்னை விட்டு நீங்காதிருக்கும் அந்தப்பாடல் :

https://www.youtube.com/watch?v=D4DcyAl_tiM
:)

Back to the Heaven

லெளகீக வாழ்க்கையின் எவ்விதமான சிக்கல்களும், நிர்பந்தங்களும் இல்லாமல், இலகுவான மனதோடு இருந்த நாட்களில் நமக்கு வாய்க்கும் உண்மையான நட்பு வட்டம் ஒரு வரம். என் பதின்ம வயதின் இறுதியில் எனக்கு வாய்த்ததோ வெறும் வரமல்ல; அது ஒரு பெரும்வரம். மனதில் தோன்றும் விசயங்களை ஒளிவுமறைவின்றி, சாதி, பால் பேதமின்றி கட்டற்று பேசும் சுதந்திரத்தை நமக்குத் தந்த நட்பு பெருவரமன்றி வேறென்ன. அதிலும், பொதுவாக எல்லாருக்கும் அவர்களுடைய நட்புவட்டம் சுருங்கிப்போய், அந்த இடத்தை பாடப்புத்தகங்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் உண்டான நட்பு எங்களுடையது என்பது தனிச்சிறப்பு.
*
நான் மேல்நிலை பள்ளிக்கல்வியை முடித்த ஆண்டு 2001.எங்கள் நண்பர் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் PSG Tech, அமிர்தா, PSG கலைக்கல்லூரி, நந்தா என திசைக்கொன்றாய் பிரிந்து போக, நான் கொங்கு கல்லூரியில் BSc சேர்ந்தேன். அதன் பிறகு ஒரிரு முறை ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்திருந்தபோதும், நாங்கள் பிரிந்த வருடம் என்றால் அது 2001தான்.
சமீபத்தில் முகநூல் வாயிலாக (ஒரு பதிவை தொடர்ந்து) பரஸ்பரம் ஒரு ”Hi”, “Hello”,”Hai, how are you ?” பரிமாறிக்கொண்டோம். அதன் பின்னர், ஒரு குழுவாய் அன்றாடம் குறுஞ்செய்திகள் வாயிலாகவும், சில Conference Callகள் மூலமாகவும் தொடர்பில் இருந்தோம். அதன் ஒரு பகுதியாகத்தான் திட்டமிட்டோம் ஒரு சின்ன சந்திப்பை. இந்த வாரம் Long Weekendஎன்பதால் சந்திக்கும் தேதி ”25-ஜூன்” என முடிவெடுத்தோம். உண்மையைச் சொல்லவேண்டுமானால் இந்த சந்திப்புக்காய் நாங்கள் உருப்படியாய் திட்டமிட்டதும், திட்டமிட்டபடி சரியாய் அமைந்ததும் சந்திக்கும் தேதி மட்டுமே. அப்படியே, சரியாக 16 வருடங்கள் கழித்து நாங்கள் 5 நண்பர்கள் நேற்று கோவையில் சந்தித்தோம்.
*
”நாம மீட் பண்ணலாம் அவ்வளவுதான் மத்ததெல்லாம் Runtimeல ப்ளான் பண்ணிக்கலாம்” என typical IT மொழியில் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததால், சந்திப்பைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் மனதில் இல்லை.
.
06-25-2017 ஞாயிறு – உத்தேசமாக காலை 10:30 மணி
-
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து துவங்கியது எங்கள் பயணம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்ததால் கார் முன் நோக்கி சென்றுகொண்டிருக்க, சிந்தனைகளும் காலமும் பின்நோக்கி சென்றுகொண்டிருந்தன. போகும் இடம் பற்றி எந்த ஒரு இலக்கும் இல்லாதபோதும் ஏதேனும் ஒரு திசையில் பயணித்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் ஈஷாவுக்கு செல்லலாம் என முடிவெடுத்து R.Sபுரம்தாண்டி வடவள்ளி சாலையில் பயணிக்கத் துவங்கியிருந்தோம். வார்த்தைகளால், எண்ணங்களால், மனதில் நிறைந்திருந்த நினைவுகளால் மீண்டு வந்தது கடந்துபோன எங்கள் வசந்தகாலம். பெரும்பாலான சம்பவங்களை, அந்தந்த நேரத்து உணர்ச்சிகளுடன் துல்லியமாக மீட்டெடுக்க முடிந்ததில் தெரிந்தது, அந்த காலகட்டத்துக்கு / அந்த சம்பவங்களுக்கு நாங்கள் எங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்திருந்தது. இதற்கிடையே, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை “பார்த்து”விட்டு, பூண்டிக்கு சென்றோம் அங்கு வெள்ளியங்கிரி ஆண்டவரை “தரிசித்து”விட்டு கோவைக்கு திரும்ப காரில் ஏறினோம். அந்த நாளின் மகிழ்ச்சி பெருமகிழ்ச்சியாகும்படி பெய்தது மழை.
.
அடித்துப்பெய்யும் பெருமழையல்ல, மண்ணைக் கொஞ்சும் செல்ல மழை. நாசியை நிறைத்த மண்வாசத்துடன் பழங்கதைகள் பேசியபடியே சென்ற பயணத்தை அழகை உணரவேண்டுமானால் நீங்களும் அத்தகைய பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். மதிய உணவு அன்னபூர்ணா Peoples Parkல் முடித்துவிட்டு எங்கள் பயணத்தைத் (நினைவுகளை) தொடர்ந்தோம். எங்கள் சந்திப்பு அவிநாசியில் முடியும் போது மணி மாலை 6:30.
*
பல வருடங்கள் கழித்து நாங்கள் சந்தித்தபோதும், அப்போது நாங்கள் விட்ட இடத்திலிருந்து எங்கள் உரையாடலைத் துவக்கமுடிந்ததும்… “நம்ம ப்ரண்டுடா...” எனும் உரிமை இன்றும் தொடர்வதும் அற்புதம்தான். இந்த ஒட்டுமொத்த பயணத்தையும் சிரிப்பால் நிறைத்துக்கொண்டோம். கண்ணில் நீர் வழிய சிரித்தும்; சிரித்து சிரித்தே வயிறு வலித்ததுமான இந்தப்பயணம் எங்கள் நினைவில் வெகுகாலம் நிலைத்திருக்கும்.
*
வாழ்வில் நூறானந்தம் :) வாழ்வே பேரானந்தம் :)
A Special Thanks to Facebook :)

கவியும் இசையும்

அப்பா அதிதீவிர சிவாஜி ரசிகர். பெரும்பாலான சிவாஜி படங்களை காட்சிக்கு காட்சி நினைவு வைத்திருப்பவர். அதைப்போலவே சிவாஜி நடித்த ஹிட் பாடல்கள் அனைத்தின் வரிகளும் அப்பா மனதில் பதிந்தவை. அவரிடமிருந்துதான் பழைய பாடல்களை ரசிக்கக் கற்றுக்கொண்டேன். பல நூறு பாடல்களை அவரின் ரசனையில் இருந்து நான் சுவீகரித்துக்கொண்டாலும், இந்தப் பாடல் அந்த liStல் முன்னணியில் இருப்பது.
*
திருமண வாழ்வி்ன் முதல் வருடத்தை நானும் அருணாவும் வாழ்ந்தது சென்னையில். எப்படியும் மாதம் ஒருமுறை ஊருக்கு வரும் போதும், மெரினா பீச்சுக்கு செல்லும் போதும், வேளச்சேரி to Beach Station செல்லும் ரயிலில்தான் பயணித்திருக்கிறோம். அப்போதெல்லாம், ஒற்றை headsetன் வலதுமுனையை என் காதிலும் இடதுமுனையை அருணா காதிலும் பொருத்திக்கொண்டு கேட்ட பல பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல் இது.
*
இன்றும் எனக்கு மிகப்பிடித்த பழைய பாடல்கள் என ஒரு பட்டியல் எடுத்தால் அதில் எப்படியும் முதல் ஐந்து பாடல்களுக்குள் இந்தப்பாடலும் இருக்கும்.
.
இன்று பிறந்த கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதனும் நமக்குத் தந்த ஆயிரமாயிரம் கொடைகளுல் மிக முக்கியமான ஒன்று இதோ :

https://m.youtube.com/watch?v=0Ded74fqkOA

என் வாழ்வை வசந்தமாக்கும் மேதைகளுள் முக்கியமான இருவருக்கு இந்த நன்நாளில் வணக்கங்கள்  :)

கொடக்கோனார் கொலை வழக்கு

ஒரு மனிதனையோ அல்லது ஒரு குடும்பத்தையோ முன்னிருத்தி, அதன் மூலமாக நாம் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கச் செய்யும் நாவல்கள் ஒருவகை என்றால், ஒரு காலகட்டத்தை எடுத்துக்கொண்டு அக்காலகட்டத்தில் ஒரு நிலப்பரப்பை மையப்படுத்தி பல மனிதர்களின் வாழ்க்கைக்குள் நம்மையும் ஒரு மெளன சாட்சியாக்கும் நாவல்கள் இன்னொரு வகை. திரு. அப்பணசாமி அவர்கள் எழுதி ”எதிர் வெளியீடு” பதிப்பித்திருக்கும் “கொடக்கோனார் கொலை வழக்கு” என்னும் நாவல் இரண்டாம் வகையைச் சார்ந்தது.
*
டவுன் பஜாரில் உள்ள ஏகாம்பர முதலியார் ஜவுளிக்கடையில்தான் நாவலின் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகின்றனர். நாவல் தலைப்பின் நாயகனான கொடக்கோனாரை கொலை செய்யும் முயற்சியில் துவங்கும் நாவலில், இறுதியான சில பக்கங்களில்தான் வழக்காக மாறும் கொலை அரங்கேறுகிறது. இடைப்பட்ட பக்கங்களில் நிறைந்திருப்பதெல்லாம் 1980களின் வாழ்க்கை.. பலதரப்பட்ட மனிதர்களின் வலியும் களிப்பும் நிரம்பிய வாழ்க்கை. மில் வேலைக்கும் தீப்பெட்டி ஆபிஸ் வேலைக்கும் போகும் நடுத்தர வர்க்க மக்களுக்கான பல நவ நாகரீக கடைகளுக்கு மத்தியில், கரிசல் காட்டு விவசாய சம்சாரிகளின் தேவைக்காய் இருக்கும் சிறுகடைகளில் ஒன்றுதான் ஏகாம்பர முதலியார் ஜவுளிக்கடை. ஜவுளிக்கடை திண்ணைதான் பல முக்கியஸ்தர்களின் ஜமா. இயல்பான உரையாடல்களாலும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் உரிமையான பேரங்களாலும் நிரம்பி வழியும் திண்ணை அது. மாறி வரும் நாகரீக கூத்துகளுக்கு மத்தியிலும் எளிய மனிதர்களுக்கான ஒரு பற்றுக்கோல் இருப்பதற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது அந்த ஜவுளிக்கடை.
.
கதையில் சொல்லப்படும் பல மனிதர்களின் வாழ்க்கையில் நான் மிகவும் நெருக்கமாக உணர்ந்தது “உமர் சாயிப்பின்” கதையைத்தான். கடலங்குடி ஜமீன் என சொல்லும் அளவுக்கு பணமும் புகழும் கொண்டது வாப்பிசட்டப்பாவின் குடும்பம். வாப்பிசட்டப்பாவின் செல்லப்பேரன் உமர்சாயபு. துணிகளில் பொத்தான்களுக்கு பதிலாக விலை உயர்ந்த கற்களைப் பதித்துக்கொள்ளும் அளவுக்கு செல்வம் மிகுந்திருந்த கடலங்குடி ஜமீனின் வாரிசுகளில் ஒருவரான உமர்சாயபு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைச்சுமையாய் துணிகளை சுமந்து சந்தைகளில் ஜவுளி வியாபாரம் செய்து கழிக்க நேர்ந்ததில் இருக்கிறது வாழ்க்கையின் விசித்திரங்கள்.
.
அதைப்போலவே, தலைச்சுமை வியாபாரியாய் தன் வாழ்க்கைத்துவங்கும் ஏகாம்பர முதலியார், ஜவுளிக்கடை அதிபராகிறார்; அவரே தன் வாழ்வின் அந்திமத்தில் யாரும் எதிர்பாரா வகையில் மீண்டும் தலைச்சுமை வியாபாரியாய் அலைய நேர்வதில் இருக்கிறது காலத்தின் சுழற்சி கணிக்க முடியாதது எனும் உண்மை.
.
பலதரப்பட்ட மனிதர்கள் உலவும் நாவலில் நான் சுவாரசியமான இரண்டு கதாபாத்திரங்களாகக் கருதுவது கோமளவண்ணனையும், ஏகாம்பர முதலியாரின் மூத்த மருமகளையும்தான். பொதுவாக, பிறந்தவீட்டுப் பெருமை பேசும் பெண்கள்தான் அதிகம்; அதிசயமாய் புகுந்த வீட்டின் பெருமையை அங்கீகரிக்கும் பெண்களும் உண்டு. ஆனால், தனம் இந்த இரண்டு விதத்திலும் சேராதவள். புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் மீது குற்றம் சொல்லிக்கொண்டும்; பிறந்த வீட்டில் புகுந்த வீட்டின் குறைகளை முன்னிருத்திக் கொண்டும் அவள் அடைய விரும்புவது, அக்கரையிலும் சரி இக்கரையிலும் சரி தன் முக்கியத்துவத்தை மட்டும்தான். சில பக்கங்களே வந்தாலும் இடத்துக்குத் தக்கபடி மாறிக்கொள்ளும் அவளின் இயல்பு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
.
தான் விரும்பும் செயல்களை செய்துகொண்டு, தன் மனம் விரும்பும் வாழ்க்கையை வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதிலும், புரிந்துகொண்டோ அல்லது திருத்த முடியாமலோ, அவன் செயல்களை ஏற்றுக்கொள்ளும் குடும்பம் அமைந்தவர்கள் பாக்கியவான்கள். கோமளவண்ணனுக்கு வாழ்க்கையே சினிமாதான்; சினிமாவுக்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்துவிட்ட அவன் ப்ரியத்தை பெற்றவர்களும் மனைவியும் புரிந்துகொண்டுவிட, குடும்பம் குழந்தை என்றான பின்னரும் தன் ரசனைப்படி அமைந்த கோமளவண்ணன் வாழ்வது கிட்டத்தட்ட ஒரு connoisseur-ன் வாழ்க்கை.
*
இவை மட்டுமல்ல, இந்த நாவல் காட்டும் வாழ்க்கையும், மனிதர்களும் காலகட்டமும், முக்கியமாக கொடக்கோனார் கொலையும் அதன் விளைவுகளும் என அனைத்து அம்சங்களும் அருமை. ஒரு வாசிப்பின் வழியே இந்த நாவல் நமக்கு தானமிட்டிருப்பது பலதரப்பட்ட வாழ்க்கையை அருகிருந்து பார்த்த ஒரு அனுபவத்தை.
.
அனுபவங்களால் அமைகிறது நம் வாழ்க்கை...
 :)

ரெண்டோடும் சேராத பொன் நேரம்

அப்போது நான் படித்துக்கொண்டிருந்தது பதினொன்றாம் வகுப்போ, பனிரெண்டாம் வகுப்போ நினைவில்லை. ஆனால் அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பின் மதியப்பொழுது என்பது மட்டும் நினைவிருக்கிறது. காரணம் மத்தியானம் சாப்பிட்ட கறிக்கொழம்பு. உண்ட களைப்பில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பினார் அப்பா. கொஞ்சம் பலமாகத் தட்டியதால் உடனே எழுந்துவிட்டேன். என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் டிவியை ஆன் செய்து சன் ம்யூசிக் சேனல் வைத்துவிட்டு, என்னை முறைத்தபடியே கடைக்குள் சென்றுவிட்டார். அந்த சேனலில் அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது எனக்கு மிகப்பிடித்த பாடல். இப்போது போல Youtubeம், தொடுதிரை கைப்பேசிகளும் இல்லாத காலம் அது; நமக்குப்பிடித்த பாடல்களை இந்தமாதிரியான தருணங்களில்தான் கேட்கமுடியும். அந்த extra மகிழ்ச்சியில் சட்டென்று தூக்கம் கலைந்தவனாக அந்தப்பாடலை மெய்மறந்து பார்க்கத் துவங்கினேன். பாடல் முடிந்த பின்னர்தான் எனக்கு அந்த முக்கியமான கேள்வி தோன்றியது. “ஆமா, நமக்கு அந்தப்பாட்டு புடிக்கும் செரி. அதெப்படி அப்பாவுக்குத் தெரியும் ?” எவ்வளவு யோசித்தாலும் விடை கண்டுபிடிக்க முடியாதிருந்த அந்தக்கேள்விக்கு பதில் அன்றிரவே எனக்குத்தெரிந்தது.
*
அப்பா எதற்குமே என்னை அடித்ததேயில்லை, திட்டிய சந்தர்ப்பங்களும் மிக மிகக் குறைவு. அதுதான் அப்பாவின் ஸ்டைல்; என்மீது ஏதாவது கோபம் என்றால் என்னிடம் பேசமாட்டார். ஒன்று நான் சமாதானப்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் அவரே தானாக சமாதானமடைய வேண்டும் அவ்வளவுதான். அன்றிரவு, கடை மூடியபின்னர் அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மதியம் என்னை எழுப்பி அந்தப்பாடலை பார்க்கவைத்த பின்னர் அப்பா என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. என்மீது செம கோபத்தில் இருக்கிறார் எனப்புரிந்தது. அப்போதும் என்ன காரணத்தால் கோபம் என்பது தெரியவில்லை. சரி கொஞ்சமாவது நல்ல பேர் எடுக்கலாம் என்று பக்கத்து அறையில் நான் படிப்பதாக பாவ்லா காட்டிக்கொண்டிருந்தேன். கண் வெறுமனே புத்தகத்தில் நிலைத்திருக்க, என் உடம்பில் இருந்து காது மட்டும், அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்த விசயத்தை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தது. என் பெயர் அதில் அடிபட்டதுதான் அத்தனை உன்னிப்புக்குக் காரணம்.
.
அப்பா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்…
“இவன் கூடப்படிக்கற பொண்ணு போன் பண்ணி, அங்கிள் காளீஸ் இருக்கானான்னு கேட்குது. நான் அவன் தூங்கறான்மான்னு சொல்றேன். அதுக்கு அந்தப்பொண்ணு சொல்லுது, பரவாயில்லை அங்கிள் அவனை எழுப்பி சன் ம்யூசிக் பாக்க சொல்லுங்க, அவனுக்கு புடிச்ச பாட்டு ஓடிட்டு இருக்குன்னு. கடை யாவாரத்தை உட்டுட்டு இவனை எழுப்பி அந்தப்பாட்டை போட்டுவிட்டு நான் கடைக்கு வந்திட்டேன். இவனெல்லாம் ஸ்கூல்ல என்ன லட்சணத்துல படிப்பான்னு பாரு”
.
வெகு வேகத்தில் பேன் சுத்திக்கொண்டிருந்த போதும், அந்த உரையாடலைக் கேட்டமாத்திரத்தில் குப்புன்னு வேர்த்திருச்சு எனக்கு. அதுவேற என் வீட்டுக்கு போன் வந்திருந்த புதுசு. ஆர்வக்கோளாறாய் ஒரு துண்டு சீட்ல போன் நம்பர் எழுதி, பள்ளிக்கூடத்தில எனக்குத் தெரிஞ்ச எல்லாத்துக்கும் பிரசாதம் போல கொடுத்திருந்தேன். அதனால் போன் பண்ணின தோழியை என்னால் உடனே கண்டுபிடிக்க முடியல. அத்தனை களேபரத்திலும் ஒரே ஆறுதல், நான் ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்ததுதான். இல்லாவிட்டால் ஒன்று கறிக்கொழம்பை தியாகம் செய்திருக்கவேண்டும்; இல்லாட்டி சாப்பிட மீண்டும் முன்னறைக்கு செல்ல வேண்டிய தர்மசங்கடத்தை சமாளித்திருக்க வேண்டும். அப்போது இரண்டுமே தேவைப்படாததால் கொஞ்சம் ஆறுதல்தான். சற்று நேரம் ஆங்கிலம் படிப்பதாய் சத்தம் போட்டுவிட்டு ஒருவழியாய் தூங்கினேன்.
.
மறுநாள் பள்ளியில் சம்பந்தப்பட்ட தோழி “என்ன Jack, பாட்டு பாத்தியா ?” எனக்கேட்க, பதிலுக்கு நான் நடந்த கதை சொல்ல.. ஒரே சிரிப்புமயம்தான்.
இன்றும் அப்பாடலை நான் கேட்கும்போதெல்லாம், “உன்னையெல்லாம்,…“ என எண்ணியபடியே அப்பா என்னை முறைக்கும் காட்சியும் வந்துபோகும்
என் வாழ்வில், பல வகைகளில் நான் மறக்கவே முடியாத அப்பாடல் :
https://www.youtube.com/watch?v=12rHbb79J8s

மரகத நாணயம்

வேலை கொஞ்சம் சீக்கிரமாய் முடிந்துவிடும் தருணங்களில் பெரும்பாலும் கோவையிலேயே இரவுக்காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். என்னுடைய ரசனை புரிந்த காரணத்தால் (அல்லது, இவன் சொன்னாலும் கேட்கமாட்டான் என்பது புரிந்து, தண்ணி தெளிச்சு விட்டுவிட்டதால்) அப்பாவும் அருணாவும் எளிதில் அனுமதித்துவிடுவார்கள். பொதுவாக மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது அப்படி இரவுக்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த வழக்கம் கடந்த 6 – 7 மாதங்களாக இல்லாமல் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று அலுவலக நண்பர்களுடன் இரவுக்காட்சிக்கு கோவை சத்யம் சினிமாஸ்க்கு சென்றிருந்தேன். படம் “மரகத நாணயம்”.
*
பேரழகியான நாயகி படம் முழுவதும் பேசுவதோ நாம் சற்றும் எதிர்பாரா விதத்தில், தமிழாசிரியர் பாத்திரம், ஒவ்வொரு நிகழ்வுக்கும் அட்டகாச ரியாக்ஷன் காட்டும் முனீஸ்காந்த், மற்றவர்களுடன் ஆனந்தராஜ் டீல் பேசும் வழிமுறை, அவரது அடியாட்கள் என படம் முழுவதும் சுவாரசியங்கள். ஆரம்பத்தில் சில காட்சிகள் தவிர, படம் எந்த இடத்திலும் தொய்வின்றி அற்புதமாக நகர்கிறது, இது ஒரு பேய்ப்படம். பொதுவாக ஏழுகடல் ஏழுமலை தாண்டி எவனாவது பேய்ப்படம் பாத்தாலே, கண்ணையும் காதையும் பயந்து மூடிக்கொள்ளும் தைரியசாலி நான். ஆனால், இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வாய்மூடாமல் சிரித்துக்கொண்டிருந்தேன். கடைசியாக இப்படி சிரித்துகொண்டு (பயந்துகொண்டும்) பார்த்த ஒரு (பேய்ப்)படம் “யாமிருக்க பயமே”. இந்தப்படமும் அப்படியொரு ரகளையான காம்பினேசன்தான். அதிலும் குறிப்பாக முனிஸ்காந்த் வரும் காட்சிகளிலும், ஆனந்தராஜ் வரும் காட்சிகளிலும் கண்ணில் நீர்கோர்க்குமளவு, வயிறு வலிக்க வலிக்க சிரித்து மகிழ்ந்தோம்.
*
மரகத நாணயம் – தவறவிடவேண்டாம்; இன்புற்றிருக்க ஒரு நல்வாய்ப்பு  :)

வாழும் மதம்

நான் அணியும் குல்லாவோ
என் முகத்தின் தாடியோ
அன்றி வெறும் பெயரோ
எதேனும் ஒன்றால்
என்னை முகமதியன் என்றீர்கள்….
.
அதிகாலையில் ஸ்ரீசூரணமும்
மாலையில் திருநீரும்
நெற்றியில் துலங்க.....
உங்களுக்கும் குழப்பம்தான் – எதற்கும்
இருக்கட்டும் என ”இந்து” ஆக்கினீர்கள்
.
சிரசில் முள்முடி அணிந்த
தேவகுமாரனை நோக்குந்தோறும்
சிலுவைக்குறியுடும் இயல்பினன் - ஆதலால்
என்னை கிறித்தவ வட்டத்தில்
நிறுத்தினீர்கள்
.
வெறுத்துப்போய் இது எதுவும்
வேண்டாமென துறந்த நாளில்
அதற்கும் ஓர் மதம் உண்டு - என
அதிலே தள்ளினீர்கள்…
.
உங்களுக்குத் தோதான
மார்க்கத்தில் / பாதையில் என்னை
அடைக்குந்தோறும்
இன்னும் இன்னும் வீரியமாய்
வாழ்தலில் / பயணத்தில் கரைகிறேன் நான்…

தந்தையர் தினம்

எட்டாவது படிக்கும் மாணவனின் தமிழ் நோட்டில் சில பக்கங்களில் மட்டுமே பாடம் சம்பந்தப்பட்ட குறிப்புகள். அதைத்தவிர பெரும்பாலான பக்கங்களில் இருந்தவை கவிதைகள். அதிலும் பெரும்பாலானவை காதல் கவிதைகள். ஒரு சுப யோக சுபதினத்தில் அந்த தமிழ் நோட்டு அவன் அப்பாவிடம் சிக்கிவிட்டது.. கூடவே அவனும்தான். அப்பா அப்படியொன்றும் மெத்தப்படித்தவரில்லை. ஒரு சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருப்பவர் அவ்வளவுதான். என்றாலும் மகனை அருகில் அழைத்து அவன் கவிதைகளில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டினார். கூடவே எதுகை மோனைகளை பயன்படுத்துவதன் அழகையும். இதுமட்டுமல்ல இதைப்போல பல சம்பவங்களில் அவர் இப்போதிருக்கும் modern அப்பாக்களைப் போலத்தான் நடந்திருக்கிறார். இன்று அவர் மகனும் ஒரு அப்பா.
.
என் வாழ்க்கையில், என் அப்பா அளவுக்கு ஒரு நல்ல அப்பாவாக நான் இருந்தால் போதும். ஆனால் அதுவே ஆகப்பெரிய சவால் :)
.
கருவில் சுமக்கும் அன்னையையும் பிள்ளைகளுடன் சேர்த்து நெஞ்சில் சுமக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்... :)