title


உறைப்புளி

மொத்தம் பத்து கட்டுரைகள் கொண்ட ஒரு நூல். எழுத்தாளரின் முந்தைய நூல்கள் மிக இலகுவான வாசிப்பு நடை கொண்டவை. எழுத்தும் வெகு சுவாரசியமானது. ஆகவே, அவ்வனுபவத்தால், இந்நூலையும் ஓரிரு நாட்களில் படித்து முடித்துவிடும் என் எண்ணத்திற்கு சவால் விட்டது அந்நூலின் ஆறாவது கட்டுரை. முதல்முறை அக்கட்டுரையை படித்து முடித்தவுடன், மேற்கொண்டு ஒரு எழுத்தைக் கூட என்னால் படிக்கமுடியவில்லை. அக்கட்டுரையின் தாக்கம் அப்படிப்பட்டது. முதல்முறை மட்டுமல்ல, தொடர்ந்து வந்த சில தினங்களிலும், அந்நூலை வாசிக்க கிண்டிலை எடுத்தாலே, விரல் தானாக அக்கட்டுரையை சொடுக்கலானது. வாசித்த ஒவ்வொரு முறையும் சில துளிகள் கண்ணீரில்லாது முடிக்க முடியாத அளவுக்கு நெகிழ வைத்தது அக்கட்டுரை. அனைவருக்குமான எழுத்தையும், நெருங்கிப் பழகினவர்கள் மனதில் நீக்க முடியாத நினைவுகளையும் தந்துவிட்டுப்போன ஒரு கலைஞனைப் பற்றிய கட்டுரை. முன்னரே அவரைப் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளை படித்திருந்தாலும், இக்கட்டுரை எழுதப்பட்டுள்ள கோணம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. எழுத்தாளர் க.சீ.சிவக்குமாரின் நினைவை நம்முள் கிளர்த்தும் அக்கட்டுரையின் தலைப்பும், திரு. க.சீ.சி.யின் நண்பர்களின் குறிப்புகள் வாயிலாக எனக்குக் கிடைத்த அவரைப் பற்றிய “இனித்துக் கிடக்கும்” பிம்பமும், இந்நூலில் தலைப்பும் ஒன்றுதான். உறைப்புளி.
*
இலக்கியம், தொழில் முனைவோருக்கான சொற்கள், சூழியல், மிஷ்கின், கவிதை ரசனை, மாணவர் மீதான அக்கறை என அனைத்தும் கலந்த ஒரு தொகுப்பு உறைப்புளி. செல்வேந்திரன் அண்ணன் பாஷையில் சொல்வதானால் சகல காய்கறிகளும் கலந்த சாம்பார்.
*
ஊருக்கெல்லாம் சேவை செய்பவர்களைப் பற்றி நாளிதழ்களில் சில வரிகளேனும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால், நாளிதழ்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் பேப்பர் போடுபவர்களின் கடமை உணர்ச்சி எவ்விதத்திலும் குறைந்ததல்ல. ஒரு நல்ல நாளு கெழமைல கூட ஊட்ல உக்காரமுடியாத ஒரு பொழப்பு என, நாம் அறிந்த மனிதர்களின் அறியா வாழ்வைப் பேசும் “சார் பேப்பர்!” கட்டுரை இத்தொகுப்பின் முக்கிய கட்டுரைகளுல் ஒன்று. ஊட்டியில் நிலச்சரிவின் போதும் கடமை தவறாமல் நாளிதழ்களை கொண்டு சேர்ப்பித்த, சிக்கன் குனியா காலத்திலும் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு (ஊர்ந்து) சென்று பேப்பர் போட்ட உள்ளூர் மனிதர்களில் துவங்கி, உலக அளவில் பிரபலங்கள் நாளிதழுக்கும் அதை மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் “பேப்பர் பாய்”களுக்கும் தரும் முக்கியத்துவம் வரை பல புதிய செய்திகளை விவரிக்கிறது இக்கட்டுரை.
*
”நீயெல்லாம் என்னத்துக்கு படிக்கற ?”, “இல்ல, படிச்சு படிச்சு என்ன ஆவப்போகுது?”, “இப்புடி படிச்சுகிட்டே இருக்கறது நல்லதுக்கில்ல” என நாம் எதிர்கொள்ளும் ”எதுக்கு வாசிப்பு” ரக கேள்விகளுக்கு தன் வாழ்க்கையையே சாட்சியாகக் காட்டும் ”இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்” கட்டுரை நம்மால் எளிதில் கடந்துவிட முடியாதது. குறிப்பாக, ”6 மாசம் ஆச்சு சாமி…. இன்னிக்குத்தான் சாமி சிரிக்கிறேன்” என எழுதப்பட்டிருக்கும் வரிகளை படிக்கும்போதே ஐயருக்கு முன்பாகவே என்னுடைய கண்கள் பொங்கின.

இதைப் போலவே, வாசிப்பின் இன்னொரு கோணத்தை, நம்முடைய அன்றாடத்திலும் அது செலுத்தும் ஆதிக்கத்தை எளிமையாகப் புரியவைக்கிறது “மொக்கை” கட்டுரை. ஒரு கல்லூரியில் பேசப்பட்ட அந்த உரை பகிரப்பட்டபோத மிகப்பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
*
”போடா இந்தப்படம் போனா இன்னொன்னு” என கர்வத்தில் கொப்பளிக்கும் மிஷ்கின் கொஞ்சம் நெருங்கிப் பழகின உடனே ”அவன் என தம்பி” உருகவும் செய்வார். ”கத்தாழை கண்ணால” காலம் தொட்டே மிஷ்கினின் பல பேச்சுகளில் வெளிப்பட்ட அவரது “madness”ன் ரசிகன் நான். மிஷ்கின் எனும் கலைஞனுக்குள் இருக்கும் மாமனிதன் வெளிப்பட்ட முக்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் கட்டுரை “மிஷ்கின் எனும் சைக்கோ!”. ”நந்தலாலா” காலகட்டத்தில் உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைக்கப்பட்டு பின்னர் “தேகம்” சர்ச்சையில் அதே அளவுக்கு கிழித்துத் தொங்கவிடப்பட்ட அழுத்தத்தை “ரைட்டருக்கு அந்த ரைட்ஸ் இருக்கு சார்” எனக்கடந்து போகும் மிஷ்கின் என்ற கலைஞனை நாம் சிறுமைப்படுத்த இயலாது.
*
நம் வீட்டுப் பொங்கல் நினைவுகளைக் கிளர்த்தும் (இன்பம் பொங்கும் எங்கள் இந்தியப் பொங்கல்) கட்டுரை, பெரியதாகத் திட்டமிடு சிறிதாகத் தொடங்கு என அக்கறையோடு தொழில் முனைவோரிடம் சொல்லும் கட்டுரை, பாவப்பட்ட பழந்தின்னி வவ்வால், திரைப்பட தோசத்தால் உயிரிழந்த சாரைப் பாம்புகள், இவற்றுக்காகவேனும் சூழலியல் சொற்களில் கவனம் செலுத்தவேண்டியதன் தேவை (வெல்லும் சொல்), தனிப்பட்ட தன் கவிதை ரசனை, அதனூடாக கவிதைகளின் போக்கு, நவீன கவிதையின் தாக்கம் பற்றிப் பேசும் (மறவோம்) கட்டுரை என இத்தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையுமே அதனதன் தளத்தில் முக்கியத்துவம் மிக்கவை. கூடவே, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “நகுமோ, லேய் பயலே” என நமக்கு சிரிப்பாணி காட்டும் தருணங்களுக்கும் குறைவில்லை.
*
எவ்வளவு கடினமான விசயமாக இருந்தாலும், அதையும் கொஞ்சம் கூட போரடிக்காமல் மிக இலகுவாக எழுதமுடியும் என்பதற்கான உதாரணம் இந்நூல்.
*
உறைப்புளி - செல்வேந்திரன்-அமேசான் மின்நூல்.

சுட்டி :
https://www.amazon.in/%E0%AE%89%E0%AE%B1%E0%A…/…/ref=sr_1_1…

#வாசிப்பு_2020
#பிடித்த_புத்தகங்கள்