title


பொன் வீடு

வீதி மண்ணின் ஒரு பங்கை
வீடெங்கும் இறைத்து வைத்தாள்…
.
காகிதத்தை துகள்களாக்கி
கடைபோல விரவி வைத்தாள்..
.
கதவு நிலை ஜன்னல்களில்
கணக்கின்றி கிறுக்கி வைத்தாள்
.
காய்கறிகள் தானியங்கள் என
கண்டதெல்லாம் பரப்பி வைத்தாள்…
.
குப்பைகளால் தூசுகளால்
முழு வீட்டை அலங்கரித்தாள்..
.
பச்சை இலை, சருகுகளால்
பாதையொன்றை அமைத்து வைத்தாள்..
.
பொரி கடலை வகைகளையோ
பூக்களாய் தூவி வைத்தாள்
.
பொன்னால் இழைக்கப்பட்டதாய்
மோட்சமடைந்தது
என் வீடு !
:)

மருந்தாகும் ஆயுதம்

தயக்கம் தவிர்த்து
உதிர்க்கப்படும் சில சொற்கள்
தகர்க்கக்கூடும் பலவருடப்
பகையை…
*
நம் அறியாமை இருளின்மீது
வெளிச்சம் பாய்ச்சக் கூடும்
அறிவார்ந்த சில உரையாடல்கள்
*
இமைகளை தூக்கம்
பிடித்திழுக்கும் நள்ளிரவுகளைக் கூட
உற்ற தோழமையுடன்
உரையாடிக் கழி(ளி)க்க முடியும்
*
வெம்மைசூல் பெரும் பகலை…
நெடுந்தொலைவு பயணங்களை..
வெறுமை வழியும் கொடும் நாட்களை
தீராப் பெருந்துயரை
உரையாடல்களின் துணைகொண்டு
உறுதியாய் கடக்க முடியும்
*
இப்பேரண்டம் கண்ட
பெரும் ஆயுதம் எதுவோ….
ஆழ்காயம் ஆற்றும்
அருமருந்தும் அதுவே….
.
சொற்கள் !

ஹி ஹி...

அருணாவுக்கு அன்றாடம் 8 மணி டியூட்டி. அம்மா உணவு தயாரிப்பார்கள்; அப்பா மாவு விற்பனை. பாத்திரம் துலக்கி, கிளம்புவே அருணாவுக்கு நேரம் சரியாக இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகளை பல் துலக்கி, குளிப்பாட்டும் பொறுப்பு (சாப்பாடு ஊட்டுவது தனிக்கணக்கு) என்னுடையது. காலை வேளைகளில் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்புவதுபோல் டென்சனாக்கும் வேலை பிறிதொன்றில்லை. நாம் ”குளிக்க வாடா” என அவசரத்தில் கத்தும்போதுதான் கார்த்திக் மும்முரமாக ஏதாவதை ரசித்துக்கொண்டிருப்பான். ”பாப்பா, வாய திற பல்லு வெளக்கலாம்” என கதறும்போதுதான், மற்றெல்லா சமயத்திலும் வாய் மூடாது பேசிக்கொண்டிருக்கும் கிருத்திகா, ஃபெவி குயிக் போட்டதுமாதிரி வாயை மூடிக்கொண்டிருப்பாள். ஆக, இவிங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பறதும் பத்துப்பதினஞ்சு ராக்கெட் விடுறதும் கிட்டத்தட்ட ஒண்ணு.
*
இன்றும் வழக்கம்போலதான், 7:15 மணியளவில் கார்த்திக்கையும் கிருத்திகாவையும் எழுப்பினேன். அடுத்தகட்ட நடவடிக்கை பல்லு விலக்கிவிடுவது. இந்த இடத்துல முக்கியமான ஒரு குறிப்பு இருக்குது; கிருத்திகாவ பொருத்தமட்டில் இந்த மாதிரி விசயங்களில் ஓரளவு பரவாயில்லை; அதாவது பல் துலக்க வாய திறக்க வைக்கிறது மட்டும்தான் கஷ்டம்; அதுக்கப்புறம் இறக்கத்துல சைக்கிள் ஓட்டுற மாதிரி வண்டி ஓரளவுக்கு ஸ்மூத்தா போயிடும். ஆனா, பயபுள்ள கார்த்திக் இருக்கானே, அவன வாய திறக்கவைக்கறதும் கஷ்டம், பல்துலக்கி விடுறதும் கஷ்டம். வேறொன்னுமில்ல, கரெக்டா பல் விலக்க ஆரம்பிச்சா சொல்றதுக்குன்னே அவன்கிட்ட நிறைய விசயம் ஸ்டாக் இருக்கும்; ஒருவழியா அத எல்லாம் கவனிக்காம அவன டைவர்ட் பண்ணி பல் துலக்கி விடுறது பெரிய கலை. இன்னைக்கும் அப்படித்தான், கரெக்டா பல் விலக்க துவங்கும்போது ஏதோ சொல்ல வாயெடுத்தான். (உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல) அதிகாலையிலேயே எழுந்துவிட்டதால் எனக்கும் சற்று தூக்கக்கலக்கம், போதாதற்கு நம்மாளு ஹிஸ்டரிப்படி, பல் விலக்கும்போது சொல்லும் கதைதான் என்று, மீண்டும் மீண்டும் ஏதோ சொல்லவந்தவனை அதட்டி உருட்டி அடக்கி பல் துலக்கிவிடத் துவங்கினேன்.
.
இரண்டு தேய்ப்புதான் தேய்த்திருப்பேன், கையை தட்டிவிட்டான். எப்போதும் இது வழக்கமில்லை; ஆக, ஏதோ சீரியசான விசயம் இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு வாயை ரிலீஸ் பண்ணினதுதான் தாமதம். வாய் நிறைய நுரையுடன் கதறும் குரலில் குழறலாகச் சொன்னான்
“அப்பாஆஆஆஆஆஆ, அது பாப்பா ப்ரஸ்சுப்பா…”
தகப்பனின் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா… :)

கேள்வியின் நாயகர்கள்

பேரன்புடையீர்,
சற்றே கருணை வையுங்கள்…
*
ஆயுள் முழுவதும் பேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும் சொல்ல
ஆயிரம் கதைகள் உண்டு
என்னிடம்
*
ஒற்றைக்கோப்பையில்
எச்சில் தேநீரை நாம்
பரஸ்பரம் பகிர்ந்து அருந்துவதில்
யாதொரு தயக்கமும் இல்லை
எனக்கு
*
வலி மிகுந்த உங்கள் துயரங்களை
எனதென எண்ணி மருகும் மனதும்
உங்கள் விழி நீர் துடைக்கும்
கரமும் என்னிடமுண்டு….
*
சொன்னவனை கருதாது
சொற்களைக் கருதும்
பகுத்தறியும் புத்தி
கொஞ்சம் உண்டு.
*
உங்களைப் போலத்தான் நானும்...
அடித்தால் எனக்கும் வலிக்கும்
என்னுடைய அன்பு வீணாகுந்தோறும்
கண்ணீர் சிந்துவேன்
பசித்தால் உண்பதும்
என்னுடலில் கீறினால் ரத்தம் வருவதும்
அப்படியே உங்களைப் போலத்தான்…
*
ஆகவே, தயவுசெய்து
என் முகத்தெதிரே நீட்டாதீர்
உங்கள் ஜாதியை…
.
அப்படியே அருள் கூர்ந்து
நேரடியாகவோ மறைமுகமாகவோ
கேட்காதீர் அந்தக் கேள்வியை….
.
“நீ என்ன ஜாதி ?” எனும்
அந்தக் கேள்வியை…

11 ஜீன் 2017

2009 ஆம் வருட மத்தியில் ஒரு நாள்…
சென்னையிலிருந்து கோவை செல்லும் intercity ரயில் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பப்போகிறது... திருமணம் முடிந்து மறுவீடு வைக்கும் சடங்குக்காக சென்னை வந்திருந்த அத்தையையும் மாமாவையும் வழியனுப்ப நானும் அருணாவும் சென்னை சென்ட்ரலில் இருந்தோம். ரயில் கிளம்புவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தன. என் கைகளை பிடித்துக்கொண்டு, கலங்கிய கண்களுடன் நெகிழ்ந்த குரலில் என் மாமனார் சொன்னார், "மாப்ள, அருணா கொஞ்சம் கோவக்காரி, சின்ன விசயத்துக்கு கூட சட்டுன்னு டென்சன் ஆகிடுவா... கொஞ்சம் பாத்துக்குங்க" என்றார். ”அதுக்கென்னங்க மாமா பாத்துக்கலாம்ங்க” என தைரியம் சொல்லி அனுப்பினேன். ஆனால், இவ்வளவு வருட திருமண வாழ்க்கையில் நான் அடிக்கடி நினைத்துப்பார்க்கும் தீர்க்கதரிசி என் மாமனார்தான். அதுமட்டுமல்ல, அன்று அவர் கண் கலங்கியதும், கொஞ்சம் பாத்துக்கோங்க என சொன்னதும் என்னை நினைத்துத்தான் என்பது புரிய எனக்கு இவ்வளவு வருடங்கள் ஆனது :)
*
Jokes apart...
சனிக்கிழமை இரவு க்ளாசிக் சினிமாக்கள், வாசிப்பும் பகிர்தலும், இலக்கில்லாத பயணங்கள், எப்போதும் இசைமழை, ஓயாத நெடும்பேச்சு என திருமணம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் / கற்பனைகள் இருந்தன; அதில் சில விசயங்கள் நிறைவேறியிருக்கின்றன. சில விசயங்கள் கனவாகவே போயிருக்கின்றன. இதைப்போலவே, வேறு சில எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் உனக்கும் இருந்திருக்கக்கூடும். நிராசையாய்ப் போன கனவுகளையும் தாண்டி இதுவரை நான் வாழ்ந்திருப்பது ஒரு சந்தோசமான வாழ்க்கையைத்தான். நன்றிகள் அருணா.
*
2009 – ஜீன் -11 அதிகாலை 5 மணியளவில், கரியகாளியம்மன் திருக்கோவிலில் உன் கழுத்தில் மங்கல நாண் அணிவித்த தருணத்திலும், கண்ணீர் வழிய உன் கரத்தை உன் பெற்றோர்கள் என் பெற்றோரிடம் ஒப்படைத்த தருணத்திலும், நான் நினைத்த ஒன்றுண்டு… “பெண் என்கின்ற ஒரே காரணத்துக்காகவோ அல்லது நீ என் மனைவி என்கிற சாக்கை முன்வைத்தோ, ஒருபோதும் உன் சுயத்தை நான் அழித்து விடக்கூடாது” என்பதுதான் அது. இந்த நாளிலும் நான் அதையே மீண்டும் ஒருமுறை எண்ணிக்கொள்கிறேன்.
*
வாழ்ந்த வாழ்க்கைக்கும் இனி வாழப்போகும் வாழ்க்கைக்கும் மனம் நிறைந்த நன்றிகள் Aruna Kalees...

கூடவே இந்நாளுக்கான வாழ்த்துக்களும் :)
Happy wedding anniversary dear :)
May God save Me :) :)

கலை - தட்சணை

அப்பாவுக்கும் கார்த்திக்கும் இருக்கும் நெருக்கம் சமயத்தில் எனக்கு பொறாமையை வரவழைக்கும். சாதாரணமா நான் ஒரு நாலு நாள் கஷ்ட்டப்பட்டு அனுமதி வாங்குற ஒரு விசயத்துக்கு அவன் அதிகபட்சம் அஞ்சு நிமிசம் எடுத்துக்குவான். ஒரு “ப்ளீஸ் தாத்தா” போதும்; ஒருவேளை அதுக்கு மசியாவிடில் கொஞ்சம் சோகமாக (நடிப்பாதான் இருக்கும்) உக்கார்ந்திருந்தால் போதும் கேட்டது தானே கிடைக்கும். வீட்டில் இருந்தால், பெரும்பாலும் அப்பா செல்லும் அனைத்து இடங்களுக்கும் தவறாமல் உடன் செல்வது கார்த்திக்கின் வழக்கம். இம்மாதிரியான விசயங்களில் ”ஓவர் செல்லம்” என அடுத்தவரை விமர்சிக்கும் அப்பாவும் “அவன் பாட்டுக்கு அமைதியா வரான்; அதுல என்ன பிரச்சனை” என அனுமதிப்பது வழக்கம். இன்றும் அப்படித்தான். மாலை ஒரு கல்யாணத்துக்கு அப்பா கருமத்தம்பட்டி சென்றிருக்கிறார்; உடன் நம்ம தலைவரும். திருமணம் முடிந்து வந்தவன் நான் வருவதற்காக காத்திருந்தான். 11:30 மணியளவில் நான் வந்தவுடன் சொக்கும் தூக்கத்திலும் வெகு உற்சாகமாக கையில் உள்ள தாளைக் காட்டினான்.
*
அந்தத் திருமணவீட்டார் நிச்சயமாக நல்ல ரசனை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
ஆர்க்கெஸ்ட்ரா, பரத நாட்டியம், வீணை / வயலின் இசை, பாடல்கள் என ஏதாவது ஒரு கலைவடிவம் திருமணவீடுகளில் நிறைந்திருப்பது வழக்கம்தான். ஆனால் இன்றைய விழாவில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விசயம் நான் கேள்விப்படாத ஒன்று.
இரண்டு ஓவியர்களை வைத்து, விருப்பப்படும் அனைவரின் கோட்டோவியத்தை வரைந்து தர ஏற்பாடு செய்திருந்தார்களாம். பெரும் ஆர்வத்துடன் கூடியிருந்த திரளில் பெரும்பாலும் நிரம்பியிருந்தவர்கள் குழந்தைகள். கூட்டம் அதிகமாயிருந்தபோதும் நிச்சயம் வரைந்தே ஆகவேண்டும் என காத்திருந்து தன் ஓவியத்தை வாங்கி வந்திருந்தான் கார்த்திக். என்னிடன் அவன் காட்டிய தாளில் இருந்தது கார்த்திக்கை நகலெடுத்த அட்டகாசமான ஓவியம். அதை வரைந்து முடிக்க வெறும் 10 நிமிடங்கள் கூட ஆகவில்லை என அப்பா சொன்னார். <ஓவியத்தை பின்னர் பதிவேற்றுகிறேன்....>
*
நண்பர்களே, நம்மிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கக்கூடும்; பாட்டோ, இசையோ, எழுத்தோ, ஓவியமோ, கவிதையோ, நடனமோ.. இப்படி ஏதாவது ஒன்று. அடுத்தவர் ஏளனத்தின் பாற்பட்ட அச்சமோ அல்லது அன்றாட வாழ்வின் சுழலில் சிக்கிக்கொண்ட நியாயமான காரணமோ, இப்படி ஏதாவது ஒன்றால் நீங்கள் அந்தக் கலையை மறந்திருக்கவும் கூடும். உங்களிடம் சொல்லிக்கொள்ளவும் மன்றாடிக்கேட்கவும் என்னிடம் ஒரு விண்ணப்பம் உள்ளது….
.
மற்றவர்களுக்கு எப்படியோ, இன்று திருமண மண்டபத்தில் தன் கலை தந்த பரவசத்தில் குதித்தோடும் குழந்தைகளால் ஒரு கணமேனும் பெருமிதம் அடைந்திருப்பான் அக்கலைஞன். பணம், சொத்து, புகழ்வெளிச்சம் எல்லாம் கடந்து ஒரு அப்பழுக்கற்ற புன்னகையை அவன் நிச்சயம் பூத்திருப்பான். அது அவன் புன்னகை அல்ல; அவனது கலையின் புன்னகை. ஏதேனும் ஒரு கலையில் ஆர்வமிருக்கும் நாம் அனைவரும் செல்லவேண்டியது நம் கலையும் புன்னகைக்கும் அத்தருணம் நோக்கியே.
அந்தப்பயணத்தில் இருப்பதுதான் நம் வாழ்க்கையே அன்றி.. வெறுமனே வாழ்வதில் இல்லை,
எதன் பொருட்டும் வெறுமனே வாழ்வதில் இல்லை.

4 ஜீன் - பாலு சார்

இந்தப் பாடலை பிறகொரு தருணத்தில்தான் பகிர்வதாய்த்தான் உத்தேசம்... ஆனால் இன்று ஒரு சிறப்பான நாள்... அதன் பொருட்டு இப்பாடல் குறித்த ஒரு சிறுகுறிப்பு மட்டும் இன்று ....
*
2007 ஜுலை 2ஆம் தேதி நொய்டாவில் துவங்கியது TCS training. அதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருந்த / படித்திருந்த, உணவில் துவங்கி உணர்வு /கலாச்சாரம் வரையிலான வட மற்றும் தென் இந்திய வேறுபாடுகளை நேரடியாக உணர்ந்த இரண்டு மாதங்கள் அவை. அந்த பயிற்சிக்காலத்தின் இரவுப்பொழுதுகளை விடுதியின் முன்பிருக்கும் புல்வெளியில் PSG Tech நண்பர்கள் கூடி உரையாடல்களால் கழிப்போம். சமயங்களில் அத்தகைய உரையாடல்களில் வட இந்திய மாணவர்களும் கலந்துகொள்வதுண்டு. வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் இல்லாத போதும், சிந்தனையில், ரசனையில் அவர்களுடன் குறிப்பிடத்தகுந்த இடைவெளியை உணர்ந்த உரையாடல்கள் அவை. அன்றைய தினம் கொஞ்சம் சிறப்பானது. தன் வாழ்நாளில் தான் சந்திக்கவிருப்பும் ஒரு மனிதரைப் பற்றி பரவசமாக பேசிக்கொண்டிருந்தான் ஒரு வட இந்திய நண்பன். அவன் தான் சந்திக்க விரும்புவதாகச் சொன்னது ஒரு பின்னணிப் பாடகரை. அவர், ஆறு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்; இந்தியாவின் பல மொழிகளில் பாடும் புலமை பெற்றவர்; எல்லாவற்றும் மேலாக, ஒரு கின்னஸ் சாதனையாளர். முக்கியமாக ஒரு தென்னிந்தியர்.
*
மிகச்சிறந்த நடிகர், பெரும் புகழ் பெற்ற இசையமைப்பாளர் என சில பாடல்கள் வெகு புகழ் பெற்றிருக்கும்; நாமும் அதை தேடித் தேடிக் கேட்டிருப்போம். ஆனால், இத்தகைய அடையாளங்கள் ஏதுமற்றபோதும் நமக்கான சில பாடல்கள் நம்மைத்தேடி வரும். கொங்கு கல்லூரியில் படிக்கும் போது, அவினாசியில் இருந்து பெருந்துறை வந்த பேருந்தில் அப்படித்தான் இந்தப்பாடல் என்னைச் சேர்ந்தது. கேட்டவுடன் பிடித்துப்போன அந்த பாடல் ஒருவேளை மறந்துவிடக்கூடும் என்ற படபடப்பில் பெருந்துறையில் இறங்கியவுடன் நடந்து சென்றது நாதன் மியூசிகல்ஸ்க்கு. படம் பேர் தெரியாமல், இசையமைப்பாளரும் தெரியாமல், மனதில் (அப்போது) நின்றிருந்த முதல் இரண்டு வரிகளை மட்டுமே சொல்லிச் சொல்லி ஒருவழியாக அந்தப்பாடலை கண்டறிந்தேன். இன்றும் ஒலிக்கும்போது என்னை ஒப்புக்கொடுத்துவிடும் சில பாடல்களுல் அப்பாடலுக்குத்தான் முதலிடம். பின்னாளில் தேடிப்பிடித்து இந்தப்படம் பார்த்தேன். படமும் பிடித்தது. படம் மட்டுமல்ல படத்தின் அத்தனை பாடல்களும். (இன்றுவரை, இப்பாடல் பற்றி பலரிடம் சிலாகித்தாலும், நெருங்கிய நண்பன் ஒருவனைத்தவிர, மற்றெல்லாருக்கும் அப்படியொன்றும் விசேஷமாக தோன்றவில்லை என்பதுதான் இப்பாடல் குறித்த ஒரே வருத்தம்)
*
வட இந்திய நண்பன் தன் வாழ் நாளில் காண விரும்பிய அந்த பின்னணிப் பாடகர் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். மேற்ச்சொன்ன என் வாழ்நாளின் சிறந்த பாடல்களுல் ஒன்றைப் பாடியவர்; பாடியவர் மட்டுமல்ல, அந்தப் படத்தின் நாயகனும் அவர்தான். பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பாய் அமைந்த அந்தத்திரைப்படத்தின் இசையமைப்பாளரும் அவரே.
*
நெல்லூரில் 4-June-1946ல் பிறந்து இன்று 71 வயதை நிறைவு செய்யும் அவர்தான் “சிகரம்” திரைப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் நாயகன்.
*
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கள் பாடும் நிலாவுக்கு…
*
தனிப்பட்ட முறையில், ஒரு பாடகர் என்பதை விடவும் ஒரு இசையமைப்பாளராய் அவரை நெருக்கமாக உணரவைத்த அப்பாடல் இதோ :
https://www.youtube.com/watch?v=a5ZXz4Hm6_o

2 ஜீன் - ராஜா சார்

அன்பின் ராஜா சார்,
உடலின் ரத்தமெல்லாம் கண்ணீராய் வெளியேறுமளவு துக்கத்தை உங்கள் இசையால் கடந்திருக்கிறேன். தூக்கம் தொலைத்த இரவுகளின் வெறுமையை உங்கள் பாடல்களால் நிரப்பினீர்கள். உடன்வர யாருமற்ற தனிமையின் துக்கத்தை உங்கள் படைப்புகள் போக்கியிருக்கின்றன. காதலோ, அன்போ, பக்தியோ, நட்போ உங்கள் இசையின் எல்லைக்குள் அடங்காத ஏதுமில்லை. காரிலோ, பைக்கிலே, பேருந்திலோ அல்லது நடந்தோ, உங்கள் பாடல்கள் இல்லாத பயணங்களும், ஏதேனும் ஒருமுறையாவது உங்கள் இசை தீண்டாத நாட்களும் என் வாழ்வில் வெகு சொற்பம்.
*
புதிய பாடல்கள் வெளியாகும்போதும் அல்லது மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் மனதை கவரும் போதெல்லாம், அந்தப்பாடல்களையும் ரசிப்பதுண்டு; ஆனால் அவை எதுவும் உங்கள் இசையில் உணரும் நெருக்கத்தை தந்ததில்லை. இதோ சமீபத்தில், நண்பன் ஒருவனுக்காய் கேட்கத் துவங்கி, பின்னர் கிட்டத்தட்ட உங்கள் பாடல்களுக்கு இணையாக திரு. A.R.ரஹ்மான் அவர்களின் பாடல்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்றாலும் எனக்கான நிறைவு உங்கள் இசையில்தான் இருக்கிறது.
.
நம் எல்லோருக்கும், எப்போதும் எவரிடத்தும் பகிர்ந்துகொள்ளமுடியாத துக்கங்கள் இருக்கும். நம்மால் செரிக்கவே முடியாதவை அவை. ஒருபோதும் தவிர்க்கவோ, இறக்கி வைக்கவோ முடியாமல் கிட்டத்தட்ட உடலின் ஒரு அங்கமாகவே மாறிப்போன சில துக்கங்கள். எனக்கான துக்கத்தை, அதை சுமப்பதின் வலியை கொஞ்சமாவது மறக்கச்செய்யும் மாமருந்து உங்கள் இசை. மருத்துவன் நீர்.
*
நாம் மகிழ்ந்திருக்கும் தருணங்களில் நம்முடன் இருக்கலாம் ஆயிரம் உறவுகள்; நம் வெற்றியை கொண்டாடலாம் பல நண்பர்கள்; மற்றவர்களின் பாடல்கள் எனக்கு அப்படித்தான். ஆனால், பிறர் யாரும் அறியாமல், உயிர் உருக்கும் பெருவலியால் அழ நேர்கையில் நாம் தேடுவது, ஆறுதலான ஒரு அண்மையை, தலை சாய ஒரு மடியை, தழுவி அழும் தோள்களை. உங்கள் இசை எனக்கு அப்படியானது. நான் முன்பொருமுறை எழுதியது போல, மகிழ்ந்திருக்கையில் பாராட்டவும் தழுவவும் கைகுலுக்கவும் நீளும் கரங்களை விடவும்; துக்கத்தில் வழிந்தோடும் விழிநீர் துடைக்கும் கரங்கள் மிகவும் நெருக்கமானவை. அது கை கொடுக்கும் கை. எனக்கு அந்தக் கை இளையராஜாவின் கை.
*
(ராஜா சார் பிறந்தநாளை (2June) முன்னிட்டு எழுத நினைத்த பதிவு இது; வேலைப்பளுவால் IST பிறந்தநாள் தாண்டிவிட்டபடியால், பெரிய மனசு பண்ணி, எல்லாரும் EST Timezoneல் இருப்பதாய் எண்ணி இதைப்படிக்கும்படி வெகு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)
:)

பாடலும் பயமும்

ஒரு பாடல்; சூப்பர் ஹிட் பாடல்.. அதுவும் நமக்கு மிகப்பிடித்த பாடல். ஆனால் அந்த பாடலை கேட்டாலே தலை தெறிக்க ஓடுமளவு அந்தப்பாடலின் மீது பயமிருந்தால் எப்படியிருக்கும்?
இது அப்படி ஒரு சோகக்கதை..
*
கொங்கு பொறியியல் கல்லூரியில் இளநிலை இரண்டாமாண்டு. விடுதி அறையில் எப்பவும் பேச்சும், கிண்டலும், சிரிப்பும் மிக முக்கியமாக வாக்மேனும் பாட்டும் என மகிழ்ந்திருந்த நாட்கள். அது ”Unit Test” நடந்து கொண்டிருந்த சமயம். நமக்கெல்லாம் செமஸ்டர் பரிச்சையையே On the Spot எழுதின வரலாறு உண்டு. அந்த பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும்படி, சாதாரண நாட்களில் இருக்கும் கொண்டாட்டம் தேர்வு சமயங்களில் மேலும் பெருகும். அந்த சமயம் ஒரு முன்னணி நடிகரின் புதுப்படத்தின் பாடல் வெளியாகியிருந்தது. வழக்கம்போல் பெருந்துறை நாதன் மியூசிகல்ஸில் இருந்து கேசட் வாங்கி வந்திருந்தான் அறை நண்பன். படத்தின் அத்தனை பாடல்களும் நன்றாக இருந்த போதும், படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காதல் தோல்விப் பாடல் எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. தொடர்ந்து வந்த அத்தனை நாட்களும் (வாக்மேன் பிரச்சனை செய்த ஓரிரு நாட்கள் தவிர) அப்பாடல் எங்கள் அறையை நிறைத்தது. இதற்கிடையே அதுபாட்டுக்கு ஒருபக்கம் Unit தேர்வுகளும் நடந்து முடிந்தன. அன்றாடம் அந்தப்பாடலை கேட்பது ஒரு அன்னிச்சைச் செயலாகவே மாறிப்போனது.
.
ஒருவழியாக எல்லா தேர்வு முடிகளும் தெரிய வந்த வார இறுதி அது. அறையில் இருந்த நால்வரில் ஒரு நண்பன், ரெண்டு பேப்பர் தவிர எல்லாத்துலயும் கப்பு வாங்கியிருந்தான். (கப்பு – பெயில்). பையனும் கொஞ்சம் நல்லா படிக்கிற பயதான். பரிச்சையும் சுமாரா எழுதியிருந்ததாக சொல்லியிருந்தான். அதுல பாருங்க, பாஸாயிருந்தவற்றில் ஒரு பேப்பர் செம கஷ்டம். பெயிலாயிருந்த பரிச்சைகள் அப்படி ஒன்றும் கஷ்டமானவையும் இல்லை. பிறகெப்படி பெயிலானான் என திரும்பத்திரும்ப யோசித்து அந்த காரணத்தை அவனே கண்டுபிடித்து சொன்னான். அது வேறொன்னுமில்லை, அவன் பெயிலான பரிச்சை நடந்த எல்லா நாட்களுமோ அல்லது அதற்கு முந்தின தினமோ, நான் மேற்சொன்ன that great songஐ கேட்டுக்கொண்டிருந்தான். அவன் அறையில் இல்லாத ஒரு நாளும், வாக்மேன் பழுதாயிருந்ததற்கு மறுநாளும் நடந்த தேர்வுகளில் மட்டும்தான் தலைவர் பாஸ். நம்பறதுக்கு கஷ்ட்டமா இருந்தாலும் அவன் கைவசமிருந்த DATA POINTS அதை உறுதிப்படுத்தியது. அப்பக்கூட நாங்க அதை நம்பல. ஆனா நாங்க எல்லாரும் அதை ஏத்துக்கற மாதிரி கண்ணார ஒரு Proofing கிடைச்சுது.
.
அன்றைய தினம் லேப் Model exam, கொஞ்சம் ஈஸியான லேப்தான்; ஏற்கனவே நம்மாளுக்கு பாட்டு ராசி இருந்ததால ரெண்டு மூணு நாளா அந்தப்பாட்டு மட்டுமில்லை ரூம்ல எந்தப்பாட்டும் கேட்கல. விடுதி மெஸ்ல சாப்பாடு ரெடியானதுக்கு அடையாளமா பாட்டு போட்டார்கள். நாங்கள் நால்வரும் சாப்பிடப்போனோம். பாதி சாப்பாடுதான் இறங்கியிருக்கும். மெஸ்ஸின் ஸ்பீக்கரிலிருந்து மெல்லிய புல்லாங்குழல் இசை ஒலிக்கலானது. நம்மாளு முகத்துல கோவமா/கவலையா/அழுகையான்னே தெரியாத ஒரு reaction. வேறொன்னுமில்லைங்க, அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த ஹிந்திப்பாடலை எந்தப்புண்ணியவானோ மாத்தி நம்மாளு பாட்டை போட்டுட்டான். சிரிப்பை அடக்கிக்கொண்டு நாங்கள் ஆறுதல் சொன்னோம்; “டேய், லேப் மாடல்ல எல்லாம் எவனையும் பெயிலாக்க மாட்டாங்க.. நீயா எதாவது நினைச்சுக்காம ஒழுங்கா பண்ணு…”. போகும்போது நல்லா தெரிகியமாதான் போனான், வரும்போது மார்க்கோட வந்தான். இம்முறையும் கப்பு. இப்ப அந்த பாட்டுக்கும் அவனுக்குமான ராசியை நாங்களே நம்பத்தொடங்கியிருந்தோம்.
அதன்பின் வந்த மற்றெல்லா பரிச்சைக்கும் நாங்கள் அந்தப்பாடலில் இருந்து அவனை மட்டுமல்ல எங்களையும் காத்துக்கொண்டோம். அடுத்தடுத்து வந்த மற்ற பாடல்களால், கிட்டத்தட்ட அப்பாடல் கேட்பதும், அப்படி ஒரு பாடல் இருக்கிறது என்பதும் மறந்து போயிருந்தது.
*
அந்த வருடத்தின் செமஸ்டர் தேர்வு, இறுதிப்பரிச்சையோ அல்லது அதற்கு முந்தின தேர்வோ நினைவில்லை. தேர்வுக்கு முந்தின நாள் மாலை, கல்லூரி மேட்டில் இருக்கும் கடைக்கு தேநீர் அருந்த சென்றிருந்தோம். கடையில் ஏதோ ஒரு பழைய பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நண்பன் ஜாக்கிறதையாய் அதை நிறுத்திவிட்டான். வெகு சந்தோஷமாய் தேநீர் அருந்தியாகிவிட்டது. திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கடையில் ஒலித்துக்கொண்டிருந்த டேப் ரிக்கார்டரை நண்பன் நிறுத்திய காட்சியை சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம். அந்த சந்தோஷம் 5 நிமிடம் கூட நிலைக்கவில்லை. ஒரு மினி பேருந்து கடந்து சென்றது. அத்தனை பேரும் பேயறைந்தது போலானோம், நண்பனோ திகிலடித்து நின்றிருந்தான். கடந்து சென்ற மினி பேருந்தில் வெகு சத்தமாய் ஒலித்துக்கொண்டிருந்தது அந்தப்பாடல்...
அப்புறமென்ன அந்த பரிச்சையை அவன் அடுத்த செமஸ்டரில்தான் க்ளியர் பண்ணினான்.
*
இவ்வளவு சிறப்புக்குரிய அப்பாடலின் சுட்டி இதோ :
https://www.youtube.com/watch?v=zOj2p01XkIc
மிக முக்கியமான குறிப்பு : பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல
UPDATE :
நேற்றிரவுதான் இந்த போஸ்ட்டை பதிவேற்றினேன்... இன்று காலை அலுவலகம் கிளம்பினேன்... பாதி வழியில் வண்டி பஞ்சர்... :(
:)

ஆதிரா

பெருமரங்கள் சூழ் அடர்வனத்துள்
பொன்பாதம் பதித்தாள்
ஆதிரா…
.
ஓங்கி வளர்ந்த நெடுமரங்கள்
ஓயாத வண்டுகள் இசை
தடம் மறைக்கும் செடிகொடிகள்
தானாய் திரியும் ஆநிரைகள்
நன்னீர் ஓடைகள்
இன்சுவை பழவகைகள்
அரிதாய்த் தெரியும் கதிரொளி
அகன்று விரிந்த பெரும்பாறை
பார்த்துப் பார்த்து
அதிசயித்தாள் ஆதிரா
.
தேவதை மண் வந்த
பேரதிசயத்தால்
பூத்துக் குலுங்கியது
பெருவனம்..
:)