title


நாளை நீ

சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்
என் நேற்றைய மற்றும் நாளைய
நண்பர்கள்...

என்னை குறிவைத்து
எறியப்படுகின்றன
கேலிக்கணைகள்...

குத்திக் கிழித்து
குருதி சிந்தவைக்கும்
கேலிக்கணைமழை...

என்னை மறைத்தபடி
ஏராள ஏமாற்றங்கள்
எண்ண விடுவதில்லை
எதைப்பற்றியும்...

என்னை காட்சிப்பொருளாக்கி
கழித்திடும் நண்பர்களே
நான் மீண்டுவரும் நாள்
வெகு தொலைவிலில்லை...

அதுவரை நன்கு சிரித்துக்கொள்ளுங்கள்
அதன்பின் அவஸ்த்தைகளும்
ஆச்சர்யங்களும் மட்டுமே
உங்களுக்கு...

அழுகையும் வலியும்
வேதனையும் புறக்கணிப்பும்
மரணம் போன்றவை...

இன்று நான்...

நாளை நீ...!

இழப்பும் பேரிழப்பும்

இன்னும் தீர்ந்துவிடவில்லை
என் வாழ்க்கை

சகியே மீதமிருக்கின்றன
நான் கடக்கவேண்டிய தொலைவுகள்...

கண்ணீருடன் வந்தாலும்
புன்னகை ஒன்றும்
நீர்த்துப்போகவில்லை...

உன் துணை இழந்தபோதும்
தொலைந்து போகவில்லை
பாதைகள்...

உன் வாசம் இல்லாதபோதும்
ஆக்சிஜனோடு அனுசரிக்க
கற்றுவிட்டேன்...

உன்சாயல் போனபின்னும்
மழையும் வானும்
அழகாய்த்தான் உள்ளன...

உதறிய உன்னால்
சிதறிய நெஞ்சம்
சீரடையும் ஓர்நாள்...

இறுதியாய் ஒன்று
தோழியே....
என்னுடையது இழப்பு...
உன்னுடையது பேரிழப்பு...

வேற்றுகிரகவாசி

மழை
மழலை
மலர்
வானம்
தண்ணீர்
காற்று
நிலம்
நெருப்பு
கவிதை
மொழி
.
.
.
.
இப்படி எல்லாவற்றிலும்
உன் சாயல் கண்டே
பழகிவிட்டேன்...

இனி நீயின்றி வாழ்வதற்கு
வேறுகிரகம் வேண்டுமெனக்கு...

அதே மழை நாள்

சுழன்று கொண்டேயிருக்கின்றது
எப்போதும் போல பூமி...

சாலைகளில் மெதுவாய்
எறும்பைப் போல
ஊர்கிறது வெயில்

துவங்கி விட்டது
மற்றுமொரு நாள்..

உடல் உணர்கிறது
யாவையும்....

மனம் நங்கூரமடித்து
நிற்கிறது...

நீ விட்டுப் போன
அதே மழை நாளில்...

மழை

ஆயிரம் யானை
ஊர்வலம் போல
மேகம் நடக்கிறது
வானில் மேகம் நடக்கிறது...

கோடி மேளங்கள்
கூடி இசைத்திடும்
ஒலியும் கேட்கிறது
இடி ஒலியும் கேட்கிறது...

வெள்ளி மலையொன்று
உருகி வழிகின்ற
ஒளியும் தெரிகிறது
விண்ணில் மின்னல் தெறிக்கிறது...

கண்ணீர் திறக்கும்
ஆறுதல் மொழியாய்
காற்றும் வருகிறது
மேகம் மழையாய் மாறியது...

காய்ந்து கிடக்கின்ற
நிலமெல்லாம் மழையை
வாரி அணைக்கிறது
நீராடை உடுத்தியது...










இலங்கை

நான்கு புறமும்
நீரிருந்தும்...
அணைக்க முடியவில்லை
யுத்த நெருப்பை!

முரண்

மென்பொருள் கற்றவள்...

மனம் மட்டும்
வன்பொருளாய் !

வேண்டுதல்

எவ்வளவு தூரம்
கடந்தாலும் வளர்ந்தாலும்
தொடர்கின்றன நினைவுகள்
நிழலைப் போல...

ஆனால்...
நிழலைப் போலல்ல நினைவுகள்
தொடர்கின்றன இரவிலும்...

பகலும் இரவும்
முழுவதும் சூழ்ந்து
இயக்கம் மறக்கடிக்கின்றன
இரக்கமற்று...

பேச்சொலிகளாலும் சிரிப்பினாலும்
இன்னபிற ஆசை
கனவுகளாலும் நிரம்பியிருந்ததது
கடந்துபோன காலம்...

ஒன்றுமேயில்லாத
நிகழ்காலம் தன்னிச்சையாய்
கடந்து கொண்டிருக்கிறது
வெறுமையை சுமந்துகொண்டு...

வறண்டு வெடித்த வெம்பரப்பில்
விழும் துளி நீர்போல
எழும் சிறு மகிழ்வும்
உறிஞ்சப்படும் உடனடியாக...

உறக்கமோ மரணமோ
இல்லை வேறுஏதாவதோ
அமைதி வேண்டுமெனக்கு...

கூடவே
நிறைய மறதியும்...

நீயும் காலமும்

கண்களிலிருந்து இன்னமும்
வழிகின்றது கண்ணீர்...

கவிதை எழுதி சுகித்த
கைகளின் வழியே கவலை...

மாறிக்கொண்டேயிருக்கும் உன்திசை
நாடும் கால்களில் களைப்பு...

எதைப் பற்றிய
கவலையுமின்றி
கடந்து போனது காலம்
உன்னைப் போலவே !

எப்படி மறப்பேன் ? !

காணும் பொழுதெல்லாம்
என்னை விடுத்து
உன் நலம் விசாரிக்கும்
நண்பர்களே அதிகமெனக்கு

எப்படி மறப்பேன்
உன்னை....

தரிசனம்


மூலவர் திரையால்

மறைக்கப்பட்டிருந்த போதிலும்.....


கருவறை முன்பு

பறந்து கொண்டிருந்தன

வெண்புறாக்கள் !

தூண்களை நாவால்

நக்கி ஆடிக்கொண்டிருந்தன

குழந்தைகள் !



திரைச்சீலையை கலைத்து

தீண்டிப் போனது

தென்றல் !


தள்ளாத வயதினரை

தாங்கி அமர வைக்கும்

பல பேர் !


எது மறைக்கப்பட்டிருந்ததோ

அதுவே மறையாததுவும் ஆகும் !

மழை....

விண்ணிலிருந்து
இடைவிடாது
எய்யப்படுகின்றது
மழை அம்பு !

அமைதியாய்
ஏற்றுக்கொள்ளும்
மண்ணில்
தேங்கும் நீர்
கொப்பளிக்கும் குருதி !

உயிர் குடிக்க
வருவதுதான் அம்பு...
என்றாலும்
உயிர் தரவே
தைக்கும் மழை !