title


கொடை



அரிசி பருப்பு
சாமான்கள் விலை அறியாதபோது
அவனை எல்லோரும்
பொறுப்பில்லாதவன் என்றனர்
*
நல்லதாய் ஒரு துணி
வாங்கத் தெரியாத போது
அவனை ஒன்றும்
அறியாதவன் என்றனர்
*
வீடு மனை வில்லங்கங்கள்
புரியாத போது
அவனை எதுவும்
விளங்காதவன் என்றனர்
*
மனிதத்தின் மகத்துவத்தை
பேசும் போதெல்லாம்
அவனை நடைமுறை
தெரியாதவன் என்றனர்
*
இயற்கையின் மோகனத்தில்
லயித்திருந்த போது
அவனை எதற்கும்
உதவாதவன் என்றனர்
*
எல்லோரிடமும் ஜாதி
மறந்து பழகிய போது
அவனை கடவுளின்
எதிரி என்றனர்
*
கடையனின் துயரை
தன் துயராக்கி அழும்போது
அவனை பைத்தியம்
என்றே பரிகாசம் செய்தனர்
*
கடைசியாக மரித்துப்போன
பின்புதான் அவனை
“மகாகவி” என்றனர் !

(எல்லா நாளும் நினைக்கப்பட வேண்டிய பாரதிக்கு)

சுழற்சி

சுவைப்பதற்கு இடைஞ்சலென்று
விதைகளே இல்லாத
பழங்களை உண்டாக்கி
புரட்சி செய்தோம்

இப்போது விதைகளின் முறை

மறு உருவம் கொண்டு
நம் கைகளில்
தவிர்க்க இயலா
மாத்திரைகளாக !

வறட்சி

ஒரு coin ஒரு ரூபாய்
என வாங்கிச்செல்கிறார்கள்
குழந்தைகள்..

இயந்திரத்தில் Coin ஐ செலுத்தி
கார் ரேஸ்
பைக் ரேஸ்
பொம்மையை கற்பனை
எதிரியாக்கி அழிப்பது
என
கண நேரத்தில்
பெரியவர்களாக ஆளாய்ப்பறக்கிறார்கள்…

Coin தீர்ந்தபின்பு
எஞ்சும் நேரத்தினையும்
அனிமேசன் CD-களுக்குள்
அமிழ்த்திவிடுகிறார்கள்

பிஞ்சுப் பொன்மலர்
பாதம் படாமல்
கொஞ்சும் மழலையொலி
கேளாமல்

ஏங்கி ஏங்கியே
உயிர் இளைக்கிறது
கம்மாக்கரை
காடு கழனிக்கும்
கதை சொல்லி
தாத்தா பாட்டிகளுக்கும் !

காதல் நதி

மிகத் தேர்ந்த ரசனையுடன்
தரப்படும் முத்தம்

பொங்கிவரும் பேரன்புடன்
கிடைக்கும் அணைப்பு

ஆயிரம் கிலோமீட்டர் தொலைவைக்கூட
அன்பால் நிரப்பிய உரையாடல்கள்

அலைபுரளும் கடல்வெளியில்
இணைந்திருந்த கைகளின் அழுத்தம்

சின்னச்சின்ன திட்டுக்கள்
செல்லக் கொஞ்சல்கள்

இவை எல்லாவற்றைக் காட்டிலும்
நமக்கிடையேயான சண்டையின் முடிவில்
நீ சிந்திய கள்ளப்புன்னகையில்
அதிகமாய் வழிந்தோடியது
காதல் !

வெறுமை

உனக்கான கடிதங்கள் யாவும்
என்னிடமே தங்கிவிட்டன…

உனக்கான முத்தங்கள்
உறைந்து விட்டன
என் இதழ்களிலேயே…

சேர்ந்தலைய துடித்த
கரங்கள்கூட இப்போது
காற்றின் கரம்பற்றி…

மனம் மட்டும் உன்னுடனே
நீ கூட அறியாமல்…
என்னைப் போலவே
சீண்ட ஆளின்றி தனியாக
என் கண்ணீரும்…
காதலும்…
மற்றும்
இந்தக் கவிதையும்…

மழலை

எல்லாக் குழந்தைகளும்
ஒரே மாதிரியானவைதான்…
வேறுபடுத்திக் காட்டத்தான்
“வளர்க்கிறோம்” நாம் !

நான்

எவ்வித
முன்முடிவும் அச்சமுமில்லாமல்
என்னால்
யாரையுமே அணுகமுடிவதில்லை
என்னைக் கூட….