title


பள்ளிக்காலம்

நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை என் வீட்டுக்கு அருகிலிருந்த ”திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி” யில்தான் படித்தேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் அவரே சகலகலா வல்லவர்.

ஐந்தாம் வகுப்பிற்கு அர்ச்சுனன் அய்யா, நான்காம் வகுப்பிற்கு மாரிமுத்து அய்யா, மூன்றாம் வகுப்பிற்கு சண்முகவடிவு டீச்சர், இரண்டாம் வகுப்பிற்கு மாரிமுத்து அய்யாவின் மனைவிதான் (எவ்வளோ யோசித்தும் அவர்கள் பெயர் எனக்கு நினைவில் இல்லை) டீச்சர், ஒன்றாம் வகுப்பிற்கு காவேரி டீச்சர். இப்படி ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர். அவரே அந்தந்த வகுப்பிற்கான பொறுப்பாளி. தலைமை ஆசிரியர் என்கின்ற சுழற்கோப்பையும் இவர்களுல் ஒருவரிடம்தான் இருக்கும்.

ஏறத்தாழ அனைவரும் உள்ளுர் மாணவர்கள். ஆசிரியர்களிலும் இருவர் உள்ளூரிலேயே இருந்துவிட்டதால் எந்த விசயமாக இருந்தாலும் எந்த நேரத்திலும் ஆசிரியர்களை அழைக்கலாம் என்பதான சுதந்திரமிருந்தது. சமயத்தில் அதுவே சுதந்திரத்தையும் பறித்தது.

ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் எங்கள் ஊருக்கு மிக அருகிலிருக்கும் “பெரியாயிபாளையம்” அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். துவக்கப்பள்ளியில் ஒரே ஆசிரியர் சகல பாடங்களையும் கற்பித்த சூழலில் படித்த எனக்கு, இங்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் இருந்தது ஆனந்தமாகவும், அதே சமயம் கிராமப்புற பள்ளிகளுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடாக பாதி பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாத கொடுமை அதிர்ச்சியாகவும் இருந்தது.


அந்த அறியாத வயதில் என்னுள்ளும் என்போன்ற பலருள்ளும் நல்லெண்ணம் விதைத்தது இப்பள்ளிகள்தான். என்னுடைய வாழ்வை வடிவமைத்ததில் பெரும்பங்காற்றிய இந்தப் பள்ளிக்காலத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.

உறவு

வரம் வருமென்றெண்ணி
இறுமாந்திருக்கையில்
சபித்துப் பறக்கின்றன
தேவதைகள்......

சாபத்திற்கஞ்சி
விலகி நடக்கையில்
வரம் தந்தணைக்கின்றன
சாத்தான்கள்.....

தேவதைகளால் சபிக்கப்பட்டதால்
நானேதான் சாத்தானோ ?

ஆசிர்வதித்து அனுசரிக்கும்
சாத்தான்கள்தான் தேவதைகளோ ?

அனுதினமும்
அடையநேரிடும்
குழப்பத்தின் அவஸ்த்தை
சொல்லிமாளாதது....

நெருங்கிச் சென்றால்
தள்ளிவைத்து...
தள்ளி நின்றால்
அள்ளிச்செல்லும்
கணிக்கவியலா மாற்றங்கள்
எல்லாக் கணங்களிலும்
நிரம்பி வழிகின்றன...

மனம் வெறுத்து
சூனியமான அந்த நொடியில்
அறிவித்தது காலம்....

சாத்தானென்பதும் கடவுளென்பதும்
கண்ணாடியின் பிம்பங்கள்....

முன் நிற்பது
எதுவோ அதையே
உருவாய் மாற்றும்
தருணங்கள்.......

அடிப்பிரதட்சணம்

”ஏங்க, நானும் உங்ககிட்ட எத்தனையோ தடவ சொல்லியாச்சு…. நம்ம கல்யாணம் நல்லபடியா நடந்தா அடிப்பிரதட்சண்ம் பண்ணுறேன்னு முருகனுக்கு வேண்டியிருக்கேன். கைத்தமலை கோவிலுக்கு போய் வேண்டுதல நிறைவேத்தனுங்க”

திருமணமான நாள் முதற்கொண்டே என் மனைவி என்னிடம் கூறிவரும் விசயம் இது. அப்போதெல்லாம் எனக்கு ரொம்ப மகிழ்வாய் இருக்கும். ”பரவாயில்ல, நம்மளை கல்யாணம் பண்ணனும்னு இவ கோவிலுக்கெல்லாம் வேண்டியிருக்கா” என்று எண்ணிக் கொள்வேன்.

அதோ இதோ என இழுத்துக்கொண்டே வந்த வேண்டுதல் நிறைவேற்றும் படலம் ஒரு வழியாய் இந்த தீபாவளி விடுமுறையில் சாத்தியமானது. தீபாவளி முடிந்த அடுத்த நாள் கைத்தமலை கோவிலுக்கு சென்றோம். அன்று கந்த சஷ்டியானதால் கோவிலில் மிகவும் கூட்டமாக இருந்தது. அதைவிட கடுமையான வெய்யில் வேறு.

என் மனைவி வேண்டியிருந்ததோ ஆறு முறை அடிப்பிரதட்சணம் செய்யவேண்டுமென்று. அடிப்பிரதட்சணம் என்பது அடிமேல் அடிவைத்து பிரகாரத்தை வலம் வருவது ஆகவே நெடுநேரம் பிடிக்கும். அதுவும் ஆறு முறை என்பதால் இன்னும் அதிக நேரமாகும். எனவே கோவிலினுள் சென்றவுடன் இருவரும் நடக்கத்துவங்கினோம். என் மனைவி அடிப்பிரதட்சணம் செய்து வர அவளுக்கிணையான வேகத்தில் நானும் மெல்ல நடக்கலானேன். முதல் நான்கு சுற்றுக்கள் எதுவும் பேசாமல் வந்தோம். கொளுத்தும் வெயிலில் அவள் வேண்டுதலை நிறைவேற்றுவதைப் பார்க்கப் பார்க்க எனக்கு மிக நெகிழ்வாக இருந்தது.

பொங்கிவரும் பாசத்துடன் அவளைக் கேட்டேன் “ஏம்மா, ரொம்ப கால் சுடுதா? எனக்காக எதுக்கு இப்படியெல்லாம் வேண்டிக்குற ?”

அதற்கு அவள் சொன்ன பதிலில் என்னை வாயடைத்துப் போகச்செய்தாள்.

“சே சே காலெல்லாம் ஒண்ணும் வலிக்கலைங்க.... நான் எப்பயுமே இப்படித்தான், பரிச்சைல பாசாகணும், Practical பரிச்சைல நல்ல மதிப்பெண் வாங்கணும், இப்படியெல்லாத்துக்கும் ஆறு சுத்து எட்டு சுத்துண்னு அடிப்பிரதட்சணம்தான் பண்ணுவேன்”.


அந்த நிமிடம்வரை ஏதோ எனக்காக மட்டுமே அவள் இவ்வளவு சிரமப்படுகிறாள் என்றெண்ணி இறுமாந்திருந்தவன் அக்கணமே அடங்கிவிட்டேன்.

”அடக்கஷ்டகாலமே நம்மளை கல்யாணம் பண்ணுறதும், பரிச்சைல பாஸாகறதும் இவங்களுக்கு ஒண்ணா? அதுலயும் இருக்கறதுலயே கம்மியா 6 சுத்துன்னு வேண்டியிருக்கா”

என்ன கொடுமை சார் இது ......

தலைகீழ் விகிதங்கள் (நாவல்)

பெரும்பாலும் ஒரு ஆண்மகனுக்கு அவனுடைய வாழ்வின் அதிகபட்ச மரியாதை தரப்படும் இடமாக தன்னுடைய மாமியார் வீடு இருக்கவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் சமுதாயம் அதை ஒரு கடமையாகப் பார்க்கின்றது. ஆனால், அதே சமுதாயத்தில் பொதுவான இடங்களில்/விசயங்களில் ஒருவருக்கு தரப்படும் மரியாதை என்பது அவருடைய பணபலத்தையே அடிப்படையாகக் கொண்டது. ஆகவேதான், கிராமங்களில் ஒரு சொலவடை சொல்லப்படும் “எப்பயும் நம்மளவிட கீழான கையில[பணவசதி குறைந்த இடம்]தான் பொண்ணெடுக்கனும், அப்பதான் நமக்கு ஒரு கெளரதை இருக்கும்”.

அவ்வாறே, மாப்பிள்ளையானவருக்கு பெண்வீட்டில் ஏகதடபுடல் மரியாதைகள், கவனிப்புகள் நடக்கும்; ஆனால் மருமகளுக்கு தன் புகுந்தவீட்டில் அப்படி இருப்பதில்லை. எல்லாவற்றைப் போலவே இதற்கும் விதிவிலக்குகள் உண்டு. “தலைகீழ் விகிதமாக” மருமகளை மகளுக்கு இணையாக தாங்கும் குடும்பமும், மாப்பிள்ளை என்றபோதும் அவன் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே என்னாத குடும்பங்களும் இருப்பதையும் ம்றுக்க இயலாது.

திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய “தலைகீழ் விகிதங்கள்” அப்படிப்பட்ட ஒரு விதிவிலக்கின் கதை. மிகவும் வறுமையான குடும்பத்தில், தம்பி, தங்கைகள் என பொறுப்புகள் மிகுந்த இளைஞன், அக்குடும்பத்தின் மூத்தமகன் “சிவதாணு”. படித்தவர்கள் மிக மிகக் குறைவான ஒரு சாதியில் பிறந்து பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு மனுப்போட்டு முயன்றுகொண்டிருக்கும் எளிய, சாதாரணமான, தன்மானமிக்க இளைஞன் சிவதாணு.



நல்ல செல்வச் செழிப்பான குடும்பத்தில், இரு பெண்களில் மூத்தவள் “பார்வதி”. உடன்பிறந்த ஆண்மக்கள் என்று எவருமில்லை. தகப்பனாரோ நன்கு வியாபாரம் நடக்கும் காப்பிக்கடை முதலாளி. பெரும் தனக்காரர் ஆகையால் மூத்தமகளுக்கு நன்கு படித்த வரன் வேண்டுமென விரும்புகின்றார். பெரும்பாலும் யாரும் படித்திராத அவரது சாதியில், எளிய குடும்பத்தில் பிறந்து, வேலையே இல்லாதபோதும் நன்கு படித்த சிவதாணு பற்றி கேள்விப்படுகின்றார்.

பின்னர் நடப்பதெல்லாம் விதிவசம். தன்மான உணர்வுமிக்கவன் என்றபோதும் தன்னுடைய பெற்றோர், தம்பி, தங்கை, குடும்ப சூழல் என பல காரணங்களால் தனக்கு சம்மதமில்லை என்றபோதும் திருமணத்திற்கு சம்மதிக்கின்றான். இந்தத் திருமணம் நிச்சயமானதும் அதைக்கலைக்க சிலர் செய்யும் சூழ்ச்சிகளும், எல்லாவற்றையும் கடந்து மணமுடித்தபின்பும் விடாமல் துரத்தும் கேலிகளும் என மிக மிக தத்ரூபமாக கிராமத்தை கண்முன்னே நிறுத்தியுள்ளார் திரு. நாஞ்சில் நாடன்.

திருமணத்திற்கு பின்னர் தானும், தன் சுற்றத்தாரும் கேலிப்பொருளாக ஆக்கப்படுவதை சகிக்கமாட்டாமல், சிவதாணு பொருமலடைகின்றான். அதேசமயம் தன் தாய் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் இருக்கும் பார்வதி, சிவதாணு பணிந்து போகவேண்டுமென்று எதிர்பார்க்கின்றாள். கணவனின் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் மனைவியும், மனைவியைப் புரிந்து கொண்டும் ஏதும் செய்யவியலா கணவனுமாக இருவரும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கத் துவங்குகின்றனர். இவ்வாறாக விரிசலடையும் உறவு மெல்ல மெல்ல சிதிலமடைவதும், அதைத் தொடர்ந்து கூடுவதும் என சிறப்பான ஓட்டத்தில் செல்கின்றது கதை.

இது திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய முதல் நாவல். தான் ஒரு மிகச்சிறந்த கதை சொல்லி என்பதை தன்னுடைய முதல் நாவலின் எல்லா இடங்களிலும் உறுதிப்படுத்துகின்றார். ஆகச்சிறந்த பாத்திரப்படைப்பு கிராமத்தையே கண்முன்பு நிறுத்தும் சொல்லாடல்கள், நல்ல மக்களையும் மாறிவிடச்செய்யும் சம்பவங்கள் என எல்லாவற்றிலும் ஆசிரியரின் கதைசொல்லும் திறன் பளிச்சிடுகிறது.

இந்நாவல் “சொல்ல மறந்த கதை” என திரைப்படமாகவும் வந்துள்ளது. நான் முதலில் திரைப்படம் பார்த்துவிட்டேன். பின்னர்தான் இந்த நாவலை வாசித்தேன். என் பார்வையில் திரைக்காட்சிகள் வாயிலாக அறிந்த / அடைந்த உணர்வுகளைவிட இந்த நாவலில் மூலம் மனக்காட்சிகள் உண்டாக்கிய அதிர்வுகள் மிக அதிகம்.

மிக மிகச் சிறப்பானதொரு நாவல்.

நூல் : தலைகீழ் விகிதங்கள் (நாவல்)
எழுத்தாளர் : திரு. நாஞ்சில் நாடன் அவர்கள்
பதிப்பகம் : விஜயா பதிப்பகம்
விலை : 130 ரூபாய்

வானம் வசப்படும்

நான் சென்னை வந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்னை வந்த நாள் முதற்கொண்டே பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு. இன்னும் சொல்லப் போனால் பாண்டிச்சேரி செல்லவேண்டும் என்ற எண்ணத்தின் மூலக்காரணம் அம்மாநிலத்தின் மீது எனக்குள்ள வியப்பே.

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி (PEC), ”உலகத்தரத்தில்திருட்டு டி.வி.டிக்கள், என் தாய் மொழி பேசும் இன்னுமோர் மாநிலம் என பல காரணங்கள் என் வியப்புக்கு அடித்தளமாய் உள்ளன. இவற்றுடன் தமிழ்நாட்டை விட விலைவாசி மிக மிகக் குறைவு என சிலாகிக்கும்குடிமகன்களின் பாண்டிச்சேரி புகழ் சொல்லிமாளாது [ நம்புங்கள் நண்பர்களே.... எனக்கும்டாஸ்மாக்க்கும் உள்ள ஒரே சம்பந்தம் நான் ராவாகசெவன் அப் / பெப்ஸிகுடிப்பதற்கு சைடு டிஸ் கேட்பேன் என்பது என்பது மட்டுமே].

நிற்க, இவ்வாறாக பாண்டிச்சேரி செல்லவேண்டும் என்ற என்னுடைய ஆசைக்கு திரு. பிரபஞ்சன் அவர்கள் எழுதியவானம் வசப்படும்நாவல் இன்னுமொரு பெரிய தூண்டுகோளாய் அமைந்தது.

அடிப்படையில் இந்த நாவல் ஒரு சரித்திரப்பதிவு. ஆனால் வரலாற்றைப் பதிவு செய்த விதத்தில் இந்நாவலே சரித்திரமாகிவிட்டது. பிரஞ்சுதேசத்தின் காலனிப் பகுதிகளில் ஒன்றான பாண்டிச்சேரியின் குவர்னர் (கவர்னர் ?) துய்ப்ளெக்ஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், அக்காலத்திய பாண்டிச்சேரி மக்கள் வாழ்வையும் பதிவு செய்துள்ளது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு தகுந்தவாறுஜால்ராபோட்டால் மட்டுமே பிழைக்கமுடியும் என்ற நிலையிலும் நல்லனவற்றை கொஞ்சம் திணிக்க முற்படும் ரங்கப்பர், கணவனை காட்டிலும் ஆட்சியை காட்டிலும் ஏன் மக்களைக் காட்டிலும் மதமே முக்கியம் எனக் கருதும் மதாம் ழான், மதத்தலைவர்கள், அரசுப்பதவி கிடைக்க என்ன வேண்டுமானாலும் தர, செய்யத் தயாராக இருக்கும் மக்கள், வெளிப்படையான லஞ்சம் மூலமாக காரியங்கள் நடக்கும் அவலம், தீண்டாமையைக் கண்டு மனம் வெறுத்துப்போகும் பாதிரியார்கள், மென்மேலும் தவறு செய்யும் மனைவியை தட்டிக் கேட்காத குவர்னர் துரை இப்படி பலதரப்பட்ட பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் வாயிலாக மிகச் சிறப்பான முறையில் இந்நாவலை எழுதியுள்ளார் திரு. பிரபஞ்சன் அவர்கள்.

பொதுவில் வரலாற்று நாவல்கள், அக்காலத்திய மக்களின் வாழ்க்கை முறை, மொழி, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பதிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. இந்நாவல் அவற்றுடன் அரசியல் ரீதியான பதிவுகளையும் கொண்டுள்ளது. அரசியல் களத்தில் எதிரி காக்கப் படலாம், நண்பன் அழிக்கப்படலாம். நண்பனோ எதிரியோ அழித்தழில் / காத்தலில் தனக்கு நேரும் ஆதாயங்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும் இன்ன பிற அறங்கள் யாவும் அடிபட்டுப்போகும் என்பது பல சம்பவங்கள் வாயிலாக கூறப்பட்டுள்ளது.

திரு. பிரபஞ்சன் அவர்களால் மிகத்தரமான முறையில் எழுதப்பட்டிருக்கும் நல்லதொரு புத்தகம் “வானம் வசப்படும்”

நூல் : வானம் வசப்படும் (சரித்திர நாவல்)
எழுத்தாளர் : பிரபஞ்சன் அவர்கள்
பதிப்பகம் : கவிதா
விலை : 200 ரூபாய்

பிரிதலென்னும் பசப்பு

வெறும் காற்றால்
நிரம்பி வழிகின்றன
நம்முடைய தேநீர் கோப்பைகள் !

மெளனமே வார்த்தைகளாய்
கோர்க்கப்பட்டுள்ளதுதான்
நமக்கிடையே நடக்கும் உரையாடல்கள் !

அடிக்கடி நேரிடும்
சந்திப்புகள் யாவுமே
விபத்துகளாக மட்டுமே
முற்றுப் பெறுகின்றன !

எப்போதாவது அதிசயமாய்
மோதிவிடும் பார்வைகளுமிழும்
தாங்கவியலா கோபமூட்டும் வெறுப்பை !

அரிதினும் அரிதாக
பூத்தெழும் புன்னகையிலும்
பெருக்கெடுத்து ஓடுகின்றது கசப்பு !

என்றாலும்

விழிகளின் ஓரத்தில்
துளிர்த்திடும் சொட்டுக்
கண்ணீர் நிறுவும்
” பிரிதலென்பது வெறும் பசப்பு ” !

பல நேரங்களில் பல மனிதர்கள்

எந்த ஒரு மனிதனுக்கும் எல்லா விதமான வாழ்க்கையும் வாழக்கிடைத்துவிடுவதில்லை. அதைப்போலவே, எல்லா நாடுகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் சென்றவரென்று எவருமில்லை. நன்மைகள், தீமைகள், உறவு, பகை, வசதி, வறுமை என எல்லா அனுபவங்களும் எல்லாருக்கும் நிச்சயம் வாய்க்குமென்று கூறவியலாது. என்னைப் பொருத்தமட்டில் நல்ல நூல் என்பது பல தரப்பட்ட வாழ்க்கை முறைகளையும், கலாச்சாரங்களையும், மனித மனங்களின் நுட்பமான வேற்றுமைகளையும் இயல்பான முறையில் செய்யப்படும் ஒரு பதிவு.

அவ்வகையில் தன்னுடைய தலைநகர் வாழ்க்கையை, சந்தித்த மனிதர்களை, தன் அனுபவங்களை கட்டுரைவடிவில் படைத்துள்ளார் திரு. பாரதிமணி. சுடுகாடு துவங்கி ஏர்போர்ட் வரை தான் பார்த்தறிந்த, அனுபவித்த முக்கிய நிகழ்வுகளை மிகச்சிறப்பான நடையில் அளித்துள்ளார். “பாரதிதிரைப்படத்தில் பாரதியாரின் தகப்பனாராக நடித்திருப்பவர், பல வருடங்களாக தேர்ந்த நாடக நடிகர், எழுத்தாளர் விமர்சகர் கா.நா.சு. அவர்களின் மருமகன் என பல அடையாளங்களுடன் இந்த புத்தகத்தின் மூலமாக தேர்ந்த எழுத்தாளராகவும் தன்னை நிலை நாட்டிக்கொண்டுள்ளார் திரு. பாரதிமணி அவர்கள்.


அரசியல் காரணங்களை முன்வைத்து ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் அதை அவர் எடுத்துக்கொண்ட விதம், டெல்லியின் நிகம்போத் சுடுகாட்டுடன் தனக்குள்ள உறவு, தேசிய விருதுகள் தேர்வுசெய்யப்படும் முறை, நாமெல்லாம் சொல்லிச் சொல்லி சிரிக்கின்ற சர்தார்ஜீ ஜோக்குகளில் வரும் ”சிங்” கள் உண்மையில் எவ்வளவு சிறந்தவர்கள் என விளக்கும் “சிங் இஸ் கிங்” பதிவு, டெல்லியில் தன் நாடக வாழ்க்கை, நாடகத்துடன் தனக்குள்ள உறவு, பூர்ணம் விஸ்வநாதன் பற்றிய பதிவு என பல விதமான அனுபவங்களையும் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்.

திரு. பாரதிமணி அவர்களின் சரளமான எழுத்தின் வாயிலாக அவருடைய அனுபவங்களூடாக நாமும் டில்லி வாழ்வின் சாரல்களை அனுபவிக்க இயலுகின்றது.


நூல் : பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரைகள்)
எழுத்தாளர் : பாரதிமணி அவர்கள்
பதிப்பகம் : உயிர்மை
பக்கங்கள் : 192
விலை : 110 ரூபாய்

துரோகம்

நூற்றாண்டு கால
கசப்பைச் சுமந்துகொண்டு
அலைகின்றது துரோகம்!

காலம் வளர வளர
துரோகத்தின் விடமும்
பல்கிப் பெருகுகின்றது

யுகந்தோறும் அலைந்தும்
ஓயாத அலைகளென
முடிவேயில்லாதது
துரோகத்தின் சரித்திரம்...

ஆதியில் ஆதாம் ஏவாள்
ஆப்பிள் துவங்கி
கடந்துபோன கடைசி நொடிவரை
யாராவது எப்போதும்
துரோகத்தின் பெயரால்
வஞ்சிக்கப்பட்டுள்ளனர்

நமக்கு நாமே எதிரியாவோம்
எதிரியின் எதிரியென்பதால்
எல்லோரும் எதிரியாம்
துரோகத்தின் உலகில்...

பெருங்கடல் நடுவே நீந்துபவனின்
தாகம் போன்றது..
துரோகத்தால் காயம்பட்ட
மனம் உணரும் தனிமை...

இருப்பதிலேயே
பெருங்கொண்ட துயரம்
துரோகம் உணர்த்தும் வலி...

உலகிலேயே
மிகக் கொடுமையானதும்
குரூரம் கொண்டதும்
துரோகத்தினுடைய முகம்...

எல்லாத் திரவங்களையும் விட
மிகமிக அடர்த்தியானது
கண்ணீர்...
துரோகத்தின் கொடையான
கண்ணீர்...

தனிமையானதும்
மிக நீண்டதுமான
இரவுப்பயணத்தில்...

மிகத்துயர்கூட்டும்
கசப்பேறிய பாடலின்
சாரமும்.... மூலமும்...
துரோகம் !

கதர்க்கடையும் சனிக்கிழமையும் – 2

என்னுடைய முக்கியமான நோக்கமே வீட்டுக்குத் தேவையான பொருட்களை காதியில் வாங்க வேண்டுமென்று இருந்ததால் முதலில் நான் நுழைந்தது மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் பகுதிக்கு. ஊதிபத்தி, கற்பூரம் துவங்கி குங்குமப்பூ, பாதாம், ஜாம் வரை அனைத்துப் பொருட்களும் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காதி என்றாலே விலை அதிகமாயிருக்கும் என பொதுவான ஒரு கருத்துண்டு ( அடேங்கப்பா கதர்க்கடைக்கு போனா ஆன (யானை ?) வெலை குதர (குதிரை !) வெலை சொல்லுவான் என ஒரே ஒரு முறை கூட அந்தப்பக்கம் போகாத ஆசாமிகளும் சொல்லுவார்கள்). ஆனால் நானறிந்தவரை காதியில் தரமான பொருட்கள் அந்த தரத்துக்கேற்ற விலையுடன் இருக்கும் (இன்னும் கூட என் அம்மாவின் சொந்த ஊர் / அப்பாவின் சொந்த ஊர் பெரியவர்கள் தன் கல்யாணத்துக்கு வாங்கின காதி செருப்பு பேரனைப் பார்க்கப் போகும்போது அறுந்து போனதென்னி வருந்துவதாக கேள்வி ).

முதன்முதலாக நான் தேர்வுசெய்து எடுத்த பொருள் பாரா புகழ் (பாரா -> பா. ராகவன்) அபராஞ்சி குளியல் சோப், தொடர்ந்து ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, ஜாம், பருப்பு வகைகள், பனங்கற்கண்டு என தேவையான பொருட்களனைத்தையும் வாங்கிமுடித்தேன். மொத்தத் தொகையையும் கடனட்டை மூலமாக செலுத்திவிட்டு (கடனட்டை உபயோகிக்க பில் தொகை குறைந்தபட்சம் ரூ 250/- இருக்கவேண்டும்) மற்ற இடங்களுக்குச் சென்றேன்.

தோல் பொருட்களான ஷூ, செருப்பு, பெல்ட் மற்றும் பிற பொருட்களுக்கென்று தனித்தனியாக ரேக்குகள் நேர்த்தியான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காதியில் தரத்தைப் பற்றிய கவலை தேவையில்லாதது, அதிலும் தோல் பொருட்கள் சிறந்த தரத்துடன் இருக்கும். கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யுமிடம் பெரியது. சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள் துவங்கி, மிகப்பெரிய சிலைகள் வரை காணக்கிடைத்தன (மரத்தினால் ஆனவை / உலோகத்தால் ஆனவை). எந்த விலையில் வேண்டுமானாலும் நல்ல பரிசுப்பொருட்கள் வாங்க தாராளமாய் காதியை நாடலாம்.

என்னைக் கவர்ந்த மற்றுமொரு முக்கிய அம்சம், ஒரு சிலர் தவிர அங்கு பணிபுரிந்த அத்தனை பேருமே வாடிக்கையாளர்களிடம் மிகத்தன்மையாக நடந்து கொண்டதுதான் (என் சொந்த ஊரில் இருக்கும் கதர்க்கடை ஊழியர் வாடிக்கையாளர்களிம் காட்டும் பரிவைக்(?) கண்டால் காந்திகூட அவரை கல்லால் அடிப்பார்). எது எப்படியானாலும் இந்தியத்தயாரிப்புகளை உபயோகிக்க வேண்டுமெனும் என் ஆசை மீண்டுமொரு முறை துவங்கப்பட்டது. (இம்முறை சற்றே வீரியமாக.)

வெளியே வரும் போது நன்னாரி சர்பத் மற்றும் பதனீர் இரண்டையும் ஒரு பிடி பிடித்தேன் (குடி குடித்தேன் !). வெளியேரும் முன்னர்தான் கவனித்தேன் புத்தகங்கள் கூட அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை. தன் சுயசரிதையிலிருந்த மகாத்மா புன்னகைத்து விடைகொடுத்தார்.

(முற்றும்)

கதர்க்கடையும் சனிக்கிழமையும் - 1

என்னால் இயன்றவரையில் இந்தியத் தயாரிப்பான பொருட்களை மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்பது என் நீண்டகால ஆசை. அவ்வப்போது அதை முயற்சித்துப் பார்க்கவும் தவறியதில்லை. டாபர் பேஸ்ட் துவங்கி வீக்கோ கிரீம் வரை எல்லவற்றையும் புதிது புதிதாய் முயல்வதும் பின் தவிர்க்கவியலாத காரணங்களால் மீண்டும் கிடைக்கின்ற பொருட்களை உபயோகிப்பதும் என மாற்றி மாற்றி விளையாடிக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் எழுத்தாளர் பா. ராகவன் அவைகளின் காதி ( நம்ம பாசைல சொல்லோணும்ன கதர்க்கடைங்கோ) அனுபவங்களை படிக்க நேர்ந்தது (இணைப்பு தர இயலவில்லை. ம்ன்னிக்க). அவ்வளவுதான் எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த சுதேசி தாகம் விழித்தெழுந்தது. பதிவைப் படித்த நாள் முதற்கொண்டே அண்ணாசாலை காதி கிராமோத்யோக் பவன் (பெயர் தவறாக இருப்பின்.... ஒண்ணும் செய்யவேண்டாம், சரியாக எடுத்துக் கொள்ளுங்கள் ) பற்றிய கற்பனைகளில் மிதப்பது, கூகுள் மேப்பில் தேடுவது என ஏகத்துக்கும் ரகளை செய்து கொண்டிருந்தேன். ஒரு வழியாக அந்த வார இறுதியில் சனிக்கிழமையன்று வண்டியை எடுத்துக்கொண்டி காதியை நாடி ஓடினேன் (ஓட்டினேன் ?).

சென்னை அண்ணாசாலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்திற்க்கு நேர் எதிரில் அமைந்திருந்தது “காதி கிராமோத்யோக் பவன்”. வண்டியை நிறுத்த போதுமான இடமின்றி சற்றே சிரமப்பட நேர்ந்தது (தனியாக பார்க்கிங் இடமென்று ஏதுமில்லை, கடையின் முன்புறமிருக்கும் 15 * 15 அளவுள்ள இடம்தான் வண்டிகளை நிறுத்த). ஒரு வழியாக கிடைத்த சந்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழையும்போதே ”பதனீர் : ரூ 6/-”, “நன்னாரி சர்பத் : ரூ 6/- ” என அறிவிப்புப் பதாகைகள் வரவேற்றன. எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் (சிங்கம் எங்கயாவது சர்பத் சாப்பிட்டுமா? போன்ற அறிவுப்பூர்வமான் விவாதங்கள் வேண்டாம்) லேசாக முழித்தது. சரி சரி வரும் போது ஒரு கை (வாய் ?) பாத்துக்கலாமென்று அதை சமாதானம் செய்துவிட்டு வலது காலை வைத்து உள்ளே நுழைந்தேன் ( நாம உள்ள போனாலே பிரச்சனைதான் இதுல எந்த காலை வச்சு உள்ள போனா என்ன?).

அண்ணாசாலை காதிபவன் இரண்டு தளங்கள் கொண்டது. மேல்த்தளம் முழுவதும் கைத்தறி ஆடைகளுக்கானது. கீழ்த்தளத்தில் நுழைந்தவுடன் இடதுகைப்புறம் மளிகைப்பொருட்கள் மற்றும் பூஜை / வாசனைப் பொருட்கள் வாங்கலாம். வலதுகைப்புறம் தோல் பொருட்கள் (கைப்பை / செருப்பு / பெல்ட்) விற்பனை செய்யுமிடம். நீண்ட கூடத்தின் கடைசியில் கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்களின் அணிவகுப்பு. முன்புறத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பூஜையறை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

(தொடரும்...)

கடற்கரை தடங்கள்



அலைகள் கவர்ந்து சென்றன

கடற்கரை மணலில் பதித்த தடத்தை

மனதில் பதிந்த தடங்களோ

புதுப்பிக்கப்படுகின்றன அன்றாடம்

பசுமையாய் ..


நித்யகன்னி

பண்டையகாலம் துவங்கி இன்று வரை பெண்கள் மீதான அடக்குமுறையும் அத்துமீறல்களும் அன்றாடம் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அது புராண, இதிகாசங்களாக இருந்தாலும், நம் வீட்டில் தெருவில் நடக்கும் சம்பவங்களாக இருப்பினும் பெண்மை எப்போதும் ஆண்மையின் ஆளுமைக்கு உட்பட்டதே என எண்ணும்படியான நிலைமைதான் தொடர்கின்றது.

இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான “மஹாபாரதமும்” இதற்கு விதிவிலக்கல்ல. எண்ணற்ற கதாபாத்திரங்கள், கண்மூடித்தனமான பக்தியை வளரவைக்கும் கதையோட்டம், ஊடே கணக்கில்லா தத்துவங்கள் என சகலமும் நிறைந்த மஹாபாரதத்தில் பெரும்பாலும் யாரும் பெரிய அளவில் கவனித்திராத ஒரு கிளைக்கதைதான் நித்யகன்னியான மாதவியின் கதை. அதை சற்றே புனைவு கலந்து மிகச்சிறந்த முறையில் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்.



பாரதக்கதை நடந்ததாக நம்பப்படும் காலகட்டத்துக்கும், தற்போதைய காலகட்டத்துக்கும் பெருமளவில் இடைவெளி இருப்பினும், பல வகையில் உலகம் மாறியிருந்தாலும், நாகரீகமடைந்திருந்தாலும் (குறிப்பாக) வீட்டுக்குள் பெண்களின் நிலையில் பெரியளவில் எந்தமாற்றமும் இல்லை. தகப்பனென்றும், உடன்பிறந்தவரென்றும், காதலனென்றும், கணவனென்றும் வெவ்வேறான உறவுமுறைகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் மிக குறைவான அளவே அளிக்கப்பட்டுள்ளது.

என்றுமே அழியாத இளமையை வரமாகப் பெற்றவள் நித்யகன்னி “மாதவி”. ஆனால், அந்த வரத்தின் பொருட்டே உலகத்தின் தூற்றலுக்கு ஆளாகிறாள். வரத்தை சாபம் என்றெண்ணும் நிலைக்கு அவளை ஆளாக்கியதில் தகப்பன், காதலன் மற்றும் முற்றும் துறந்த முனிவன் என எல்லாத்தரப்பும் சமபங்கு வகிக்கின்றனர். அவளின் நிலையெண்ணி அவளுக்காக பரிந்து பேசுபவர் மிகச்சொற்பமே.

சுருங்கச் சொல்லின், தன் நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாமல் போகும்வண்ணம் “வரம்” என்னும் போர்வையில் “சாபம்” பெற்ற நித்யகன்னியின் கதையை சிறப்பாக சொல்லியுள்ளார் எம்.வி.வி.


நாவல் : நித்யகன்னி (நாவல்)
எழுத்தாளர் : எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பகம் : காலச்சுவடு (கிளாசிக் வரிசை)
பக்கம் : 182
விலை : ரூ 100/-

M.R.ராதாயணம்

பொதுவாகவே தமிழ் சினிமா கதாநாயகர்களின் ஆதிக்கம் நிரம்பியது. ஒரு படத்தின் வெற்றி / தோல்வி பெருமளவில் பாதிப்பது அப்படத்தின் நாயகனைத்தான். கதாநாயகியின் எல்லை பெரும்பாலும் சில காதல் வசனங்களும், பாடல்களும் மட்டுமே. வில்லன்களின் நிலையும் அப்படியே. விவகாரமான வசனங்கள், வெடிச்சிரிப்பு, முடிவில் நாயகன் கையால் மரணம் அல்லது சிறைவாசம். தமிழ் சினிமாவின் இப்போக்கு நாயகனைத் தெய்வமாக்கியது. அனைத்து கைதட்டல்களும் நாயகனைச் சென்றடைய, வில்லன்களுக்கோ திட்டுக்கள் மட்டுமே பாராட்டுக்களாகின. நானறிந்தவரை இந்த போக்கினை மாற்றியமைத்து, கைதட்டல் வாங்கிய, ரசிக்கப்பட்ட, கைதட்டல் வாங்கிய முதல் (திரை)வில்லன் திரு.M.R.ராதா அவர்கள்.

”M.R.ராதாயணம்” எனும் இந்த வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டுவது நாம் பெரும்பாலும் அறிந்திராத ராதாவின் அசல் முகம்



தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களால் கவரப்பட்டு, வலிமையான திரைப்பட ஊடகத்தை புரட்சிக் கருத்துக்கள் பரப்பும் தளமாக மாற்றியதில் திரு.N.S.கிருஷ்ணன் மற்றும் திரு.M.R.ராதா அவர்களின் பங்களிப்பு அபாரமானது. நாடகம் மூலமாக தன் கலைவாழ்வைத்துவக்கிய திரு.M.R.ராதா அவர்கள் தான் இறப்பதற்கு முன்னால் வரை நாடகங்கள் நடத்திவந்துள்ளார். மற்றவர் படும் துயரங்களுக்கும், தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கும் தன்னால் இயன்றதை செய்தும், இயலாத நிலையில் நாடகம் நடத்தி அந்த வருமானத்தைத் தந்தும் வேதனையைப் போக்கிய ஒரு நிஜ நாயகன் திரு.M.R.ராதா அவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தன் மனதுக்கு சரி என்று பட்டதை எவ்வித சமரசமும் இன்றி செய்துவந்திருக்கின்றார். அது எம்.ஜி.ஆர் ஆனாலும் சரி தந்தை பெரியாரானாலும் சரி.

தன் வாழ்நாளெல்லாம் சிறந்த வில்லனாக அறியப்பட்ட ஒரு நிஜ நாயகனின் வாழ்க்கை வரலாறு ”M.R.ராதாயணம்”. திரு.முகில் அவர்களால் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூல்.

நூல் : M.R.ராதாயணம் (வாழ்க்கை வரலாறு)
எழுத்தாளர் : முகில்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 196
விலை : 100 ரூபாய்

நிழல்முற்றம்

சின்ன வயதில் சினிமா பார்த்த கிராமத்து டெண்ட் கொட்டகைகளின் நினைப்பு மனதில் நீங்காத ஒன்றாகும். படம் துவங்கும் முன்பும், இடைவேளையிலும் விற்கப்படும் திண்பண்டங்களுக்கென தனி ருசி உண்டு. வெளிக்கடைகளில் வாங்கி உண்ணும்போது கிட்டாத தனி ருசிக்கு, திரையரங்கின் மீதான கவர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பெருமாள்முருகன் தன் நிழல்முற்றம் நாவலில் அந்த திண்பண்டங்களை விற்பனை செய்யும் சிறுவர்களின் வாழ்க்கையை மிகச்சிறந்த முறையில் பதிவுசெய்துள்ளார்.


ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வும் ஏதேனும் ஒரு தற்காலிக இலக்கினை நோக்கியே பயணிக்கின்றன. திரையரங்கில் திண்பண்டம் விற்கும் சிறுவர்களின் வாழ்வின் அத்தகைய பயணத்தில் நம்மையும் இணைத்து அழைத்துச் செல்லும் சிறப்பான நாவல் இது. பொதுவாகவே சிறுவர்கள் தொழிலாளிகளாவது மிகக் கொடுமையானது. அதிலும் கண்காணிக்கவும், கண்டிக்கவும் யாருமேயில்லாமல் தொழிலாளியாகும் சிறார்கள் வெகு சீக்கிரத்தில் ”வளர்ந்து”விடுவார்கள்.

நாமறிந்த மனிதர்கள்தான் என்றபோதும் அவர்களது வாழ்க்கை வேறுபட்டது. என்னதான் உழைத்தாலும் மிக மிக சாதாரணமான எதிர்பார்ப்புகள் கூட பொய்த்துப்போகின்றன. என்றபோதிலும், அன்றாட வாழ்வினை அவர்கள் மகிழ்வுடனே முடிக்கிறார்கள்.

ஒரு திரையரங்கம், கோவில், சந்தைக்கடை, சாப்பாடு, சைக்கிள் ஸ்டேண்டு, பீடி, கஞ்சா, தூக்கம் இப்படி மிகச் சிறிய வட்டத்துக்குள் கதை சுழன்றாலும், சூழ்ந்துள்ள மனிதர்களால் சுவாரசியமடைகின்றது வாழ்க்கை. இவர்கள் நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் மனிதர்கள்தான், ஆனால் நாம் அறிந்திராத இவர்களின் வாழ்வை மிக சிறப்பாக பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் பெருமாள்முருகன்.

சிறப்பான நாவல்.

நாவல் : நிழல்முற்றம் (நாவல்)
எழுத்தாளர் : பெருமாள்முருகன்
பதிப்பகம் : காலச்சுவடு