title


கொடுங்கோளூர் கண்ணகி

“ரொம்ப முக்கியமான புக் கிடைச்சதுடா. இப்ப ப்ரிண்ட்ல இல்ல. ஜெராக்ஸ் எடுத்துட்டு கொடுக்கணும். நீ ப்ரீயா இருந்தா சொல்லு, போலாம்” அழைத்தது நரேன். அவருடன் சென்று அப்புத்தகத்தின் ஒரு நகலை நானும் எடுத்துவந்தேன். கிட்டத்தட்ட 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது. இடைப்பட்ட தருணங்களில் அப்புத்தகத்தைப் பற்றி நான் மறந்தே போனேன். சமீபத்தில் திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய புதுக்காப்பியமான கொற்றவையின் முன்னுரையில், கொற்றவையுடன் இணைத்துப் படிக்க வேண்டிய முக்கிய நூல் என அப்புத்தகத்தை குறிப்பிட்டிருந்த பின்னர்தான், அப்புத்தகம் என்னிடம் இருக்கும் நினைவே வந்தது. கொற்றவை படித்து முடித்த பின்னர் அப்புத்தகத்தையும் படித்தேன். ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதை வாசிக்கவேண்டிய ஒரு தருணம் அமையும் என நான் நம்புவதுண்டு. முனைவர். திரு. வி.ஆர்.சந்திரன் அவர்களால் எழுதப்பட்டு, ஆசான் திரு.ஜெயமோகன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட “கொடுங்கோளூர் கண்ணகி” எனும் ஆய்வு நூலை அப்படி அமைந்த ஒரு சரியான தருணத்தில்தான் நான் வாசித்திருக்கிறேன். . ஏறத்தாழ 110 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய ஆய்வு நூல், ஆலய வரலாறு, பதிட்டைகள், திருவிழாக்கள், மீனபரணி திருவிழா என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ஐதீகங்கள், விளக்கக் குறிப்புகள், திருவஞ்சிக் குள கோவில் வரலாறு ஆகிய பகுதிகள் பிற்சேர்க்கைகளாகவும் இணைப்புகளாகவும் தரப்பட்டுள்ளன. பொதுவாக, கேரள வரலாற்றின் தவிர்க்கமுடியாத தமிழ்ப் பின்புலமும், போலவே தமிழ் ஆய்வுகள் கேரளப் பண்பாட்டை கணக்கில் கொள்ள வேண்டியதன் அவசியமும் முன்னுரையில் விளக்கப்பட்டுள்ளன. . கேரள கோவில்களில் பகவதி வழிபாடு, கொடுக்கோளூர் கோவிலின் புராதனத்தன்மை, கொடுங்கோளூர் கோவில் உருவாக்கம் சம்பந்தமான ஐதீகங்கள், யூகங்கள் ஆகியவை மிகச்சுருக்கமான வகையில் ”ஆலய வரலாறு” பகுதியில் கூறப்பட்டுள்ளன. கூடவே, இவ்வாலயத்தின் பழங்கால நாட்டார் வழிபாடு, திராவிடர்கள் மீதான ஆரிய ஆதிக்கம் நிகழந்தபோது, படிப்படியாக ஆரியமயமாக்கப்பட்டிருக்கலாம் என்பதும், அந்த மேலாதிக்கத்தினால், பூஜை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இப்பகுதியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. . கோவில் அமைப்புகள், பல்வேறு பதிட்டைகள், பலமுறை மாற்றப்பட்ட மூலச்சிலை, அப்படி இருந்தும் தொடர்ந்துவரும் சிலம்பு, மரத்தாலான மூலச்சிலை கெடாமலிருக்கும் பொருட்டு செய்யப்படும் சாந்தாடுதல் ஆகியவை ”பதிட்டைகள்” பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க விசயங்கள், கோவிலில் மனோதரி எனும் நாட்டார் தெய்வம் வசூரிமாலாவாக மாறிய நிகழ்வும், கோவில்களில் நரபலி இருந்ததற்கான ஆதாரங்களும், அதன் தற்போதைய குறியீட்டு / மாற்றப்பட்ட வடிவமும் ஆகும். மேலும் இப்பகுதியில் கோவில் அமைப்பு விவரிக்கப்பட்டுள்ள விதமும், கோவிலைச் சுற்றிலும் காணப்படும் பல்வேறு பதிட்டைகள் பற்றிய தகவல்களும், கற்பனையில் கோவிலைக் காண வழிவகுக்கின்றன. . திருவிழாக்கள் பகுதியில் நவராத்திரி திருவிழா, தாலப்பொலித் திருவிழா என விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சடங்குகள், ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கும் உரிமைகள், அதனூடாக இன்று தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் சாதியினர் பண்டைய காலத்தில் அரசாண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் (உதாரணம் : புலையர்), கோவில் பூசாரியாய் இருந்தபோதும் (பூசாரிக்கு) தேவி மீது எள்ளல் நிலவியிருக்கக்கூடிய நகைமுரண், தேவதாசி முறை மற்றும் அதன் மாற்றங்கள் என திருவிழாக்களை விவரிப்பதனூடே பல வரலாற்று சம்பவங்களை நாம் அறியவருகிறோம். . நான்காவதும், மிகவும் முக்கியமானதுமானதுமான பகுதி “மீனபரணி திருவிழா”. கொடுங்கோளூர் கண்ணகி கோவிலின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா மீன மாதத்தின் பரணி விழா. இத்திருவிழாவின் கொடியேற்றலில் துவங்கி ஒவ்வொரு சடங்கும் இப்பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளன. சடங்குகளின் நோக்கம், அச்சடங்கைச் செய்ய உரிமையுள்ள சமூகங்கள், கூடவே அவ்வுரிமை கிடைக்கப்பெற்றதன் வரலாற்றுப் பின்புலம் என ஒரு முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. இவ்விவரிப்புகளினூடே, கோவிலுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இடைப்பட்ட தொடர்பும் நமக்கு விளங்குகிறது. சிலப்பதிகாரத்தின் முக்கிய சம்பவங்களின் தொடர்ச்சியாகவோ அல்லது மாறுபட்ட வடிவங்களாகவோ இச்சடங்குகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது (உதாரணம் : வெளிச்சப்பாடு). போலவே, தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான பண்பாட்டுத் தொடர்பை விளக்கும் பல குறிப்புகள் (இப்பகுதியில் மட்டுமல்ல, நூல் முழுவதிலுமே) காணக்கிடைக்கின்றன. கேரள மண்ணில் நிகழும் “வேலனும் வெறியாட்டும்” நிகழ்வு, கொடுங்கோளூர் கோவிலில் பூசை செய்பவர்கள் “அடிகள்” என்று தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுதல் என பல சான்றுகளை இந்நூல் நமக்குச் சுட்டுகிறது. * பொதுவாகவே ஆய்வுநூல்கள்கள் ஒரு இறுக்கமான எழுத்து நடையைக் கொண்டிருக்கும். அதனாலேயே, ஒரு வாசகனாக நாம் செலவளிக்கும் உழைப்பு இருமடங்காகிவிடும். ஆனால், இந்நூலினை வாசிப்பு சார்ந்து எவ்வித தடையுமின்றி இலகுவாக அணுகமுடிகிறது. ஆசான் திரு.ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு அதற்கொரு முக்கியமான காரணம். அதைப் போலவே, மூல நூலில் இல்லாத / தவற விட்ட மேலதிக விசயங்களை மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளாக தந்திருப்பதும் மிகச்சிறப்பு. தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்றின் மீதும் குறிப்பாக சிலப்பதிகாரத்தின் மீது ஆவல் கொண்டவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல் இது. * கொடுங்கோளூர் கண்ணகி (முனைவர். வி.ஆர்.சந்திரன் – தமிழில் ஜெயமோகன்). #வாசிப்பு_2020 #பிடித்த_புத்தகங்கள்

நகுமோ லேய் பயலே

2007ல் துவங்கி ஒரு நான்கு வருடங்கள் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் நான்கு வாரங்களாவது சொந்த ஊருக்கு பஸ் ஏறிடுவேன். பஸ் என்றால் முன்பதிவு செய்து பின் சாயும் வசதியுள்ள பஸ்களல்ல. பயண நேரம் முன்பின் ஆனாலும் கிடைத்த பேருந்தில் ஏறிக்கொள்ளும் வசதி படைத்த சாதாரண கட்டண அரசுப்பேருந்துகள். வெள்ளி இரவில் சென்னை To சேலமும், திரும்ப ஞாயிறு இரவில் சேலம் To சென்னையும் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத ஒரு கண்டக்டர் போலத் திரிந்தேன். அப்படிப்பட்ட ஒரு ஞாயிறு இரவு அது. வழக்கம்போல அடித்துப்பிடித்து ஜன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்தால், இருவர் மட்டுமே அமரும் அந்த இருக்கையில் நமக்கருகே வாய்த்தது நடுத்தரவயதுடைய ஒரு ஜென்டில்மேன். பஸ் கிளம்பும்வரை ஒரு பிரச்சனையுமில்லை. பின்னர் சம்பிரதாயமான சொற்றொடர்களுடன் பேச்சைத் துவங்கினார். அப்போதுதான் ஒரு விசயம் எனக்குப் புரிந்தது. ஜென்டில்மேன் மட்டும் தனியாக வரவில்லை துணைக்கு பக்கத்தில் இருப்பவனும் உளறுமளவுக்கு சரக்கும், அறிந்தவன் ஓடுமளவுக்கு ஆங்கிலமும் கைக்கொண்டிருந்தார். என் பணியைப் பற்றி விசாரிக்கும்போதே புத்தியுள்ளவனாயிருந்தால் தூங்குவதுபோல் நடித்திருக்கவாவது வேண்டும். நமக்கு IT வேலை என்பது பெரும் மதிப்பை ஈட்டித்தந்த காலம் அது. சொன்னேன். அந்த ஜம்பம் அவரிடம் பலிக்கவில்லை. பில் கேட்ஸ்லில் துவங்கி அவருக்குத் தெரிந்த எலி மருந்து வியாபாரி வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிணியுடன் சம்மந்தப்பட்டவர்களின் பெருமையை அடுக்கலானார். அதுவும் பஸ்ஸில் இருப்பவர்கள் என்னை பரிதாபமாகப் பார்க்கும் வண்ணம் கணீர்க்குரலில். கடவுளின் கருணையினாலோ அல்லது கவர்மெண்டின் புண்ணியத்தாலோ அடுத்த அரைமணி நேரங்களில் தூங்கிப்போனார். அன்றைக்கு என்னை கிட்டத்தட்ட அழ வைத்துவிட்ட அச்சம்பவம் பின்னெப்போது நினைவில் வந்தாலும் சிரிக்கவைக்கும். எனக்கிணையாக அல்லது கொஞ்சம் என்னைவிட கொஞ்சம் சுமாரான ஆங்கில அறிஞரை நான் சந்தித்த முதலும் கடைசியுமான சந்தர்ப்பம் அது.
.
நீண்ட நாட்கள் கழிந்து அந்த இரவுப் பயணத்தின் நினைவுகள் என்னுள் எழக் காரணம் அதேபோன்ற ஒரு இரவின் பேருந்துப்பயணம் கூடவே குடிமகன்களின் சலம்பல் நினைவுகள். ”நகுமோ, லேய் பயலே” என கேட்டபடி என்னிடம் அச்சுவாரசிய சம்பவத்தை, தன் புத்தகம் வாயிலாக பகிர்ந்து கொண்டிருந்தவர் அண்ணன் செல்வேந்திரன்.
.
பால்யத்தில் கிரிக்கெட் விளையாடாத மக்களின் எண்ணிக்கையை ஒரு ஓவருக்குள் அடக்கிவிடலாம். அவ்விளையாட்டின் சுவாரசியத்துக்கு சற்றும் சளைத்ததல்ல மைதானத்தில் நிகழும் சம்பவங்கள். ஓரளவுக்காவது விளையாடுவான் என்பதைத் தவிர மற்றெல்லா காரணங்களும் துணை நிற்க, அணித்தலைமையேற்று துவக்க வீரராகவும் களம் காணும் நாயகர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார்கள்தானே. யார்க்கருக்கும் தூஸ்ராவுக்கும் புது விளக்கம் சொல்கிறது “தூஸ்ரா” கட்டுரை. இக்கட்டுரையை படிக்கும்போது நினைவில் வந்த இன்னொரு கட்டுரை திரு.சுஜாதா அவர்கள் எழுதியது (ஸ்ரீரங்கத்து தேவதைகள் - கிரிக்கெட்டும் பகடியும் கலந்தது அக்கட்டுரை).
.
பேருந்துப் பயணங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல ரயில் பயணங்கள். “ரயில் பயணங்களில்” என் தனித்தொகுப்பே போடுமளவுக்கு, ஆசான் திரு.ஜெயமோகன் துவங்கி திரு. நெல்லை கண்ணன் வரை “இடுக்கண் வருங்கால் நகுக்க” வைத்த அனுபவங்களை படித்திருக்கிறேன். ஆனாலும், இந்த “நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்” காட்டும் குத்தவைச்சாசனங்களும், கரண்டு பில் மிச்சம் பிடிக்கும் கண்ணியவான்களும் நம் சிரித்தே தீரவேண்டிய கதைகள்.
.
பள்ளியில் தமிழ் கற்றுத்தரும் சில ஆசிரியர்களின் தமிழ்ப்புலமை மீதல்ல, தமிழ் ஆர்வம் மீது கூட நாம் சந்தேகம் கொள்ளத்தேவையிருக்காது. ஐயந்திரிபற ஆசிரியர்கள் சரியாக தமிழ் என எழுதுவதற்கே குறைந்தபட்சம் மூன்றுமுறையாவது முயல வேண்டும். அத்தகைய ஒரு அறிவுச்சூழலில் ஆங்கில இதழ்களை சலுகை விலையில் விற்கச் சென்ற எழுத்தாளர் மீது காலம் கொஞ்சம் சலுகை காட்டியிருக்க வேண்டுமல்லவா (அறிவினில் உறைதல்).
.
திரு. நாஞ்சில் நாடனின் “கும்பமுனி” அவதாரம் எனக்கெல்லாம் ஒரு Stress Buster. இரவு 10 மணிக்கு, (வல்விருந்து தொகுப்பை படித்துக்கொண்டு) கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தவன், பஸ் என்பதை மறந்து கெக்கெ பிக்கே என நான் சிரித்து வைக்க பஸ்ஸில் இருந்த பத்து பேரும் தவசிப்பிள்ளையாக மாறி தலையிலடித்துக் கொண்ட சம்பவம் ஒன்று போதும் உதாரணத்துக்கு. அவ்வகையில் பி.மாசானமுத்து கும்பமுனிக்கு ஒன்றுவிட்ட அண்ணனோ தம்பியோ எனச்சொல்லலாம். புத்தகத்தில் மாசானமுத்து வரும் கட்டுரைகளில் (மோடி வரட்டும் சாடி, இலக்கிய மேற்கோள்கள், பொன்மொழிகள், கவிதைகள், ட்வீடுகள்) எல்லாம் “விசில்” சத்தம் காதைப் பிளக்காதது ஒன்றுதான் குறை.
.
இன்கிரிமெண்ட் பெற இனிய வழிகள், இலக்கிய வாசகனின் பாவனைகள், பத்தாயிரம் புத்தகங்கள் விற்பனையாக என கட்டளைகளைப் பட்டியலிடும் கட்டுரைகள், கொரோனா கவிதைகளுக்கு சவால் கொடுக்கும் பாடல்கள் (கேட்டிருக்கீர்களா?), “டானென்று” வீட்டுக்குப் போய்விட நேரும் டானின் கவிதை, இலக்கிய வாசகனின் பாவனைகள், மாசனமுத்துவின் ட்வீட்ஸ் பகுதியில் வரும் எஸ்ரா பவுண்ட் பெயர் ஆராய்ச்சி முடிவு, மொழிக்கொடை வரிசை (அய்யோக்கியன், இழகி) என எண்ணிச் சிரிக்கும் தருணங்கள் ஏராளம்.
.
பகடிக் கட்டுரைகள் எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கிறது. ஒன்று உண்மையிலேயே நகைக்க வைக்கும் அனுபவங்களை மிகச்சரியாக நாம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது நாம் எழுதியிருப்பது நகைச்சுவை இரு பத்திகளுக்கு ஒருமுறையாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கடும் சிரத்தையோடு அனைத்தையும் வாசித்துமுடித்த பின்னர் ஆமா எங்க அந்த பகடிக்கட்டுரை என ஒரு அப்பாவி வாசகன் கேட்டுவிட நேரிடும். ஆனால், இத்தடையை தனது “தூஸ்ரா” கலந்த “யார்க்கரால்” அற்புதமாக தகர்த்திருக்கிறார் திரு. செல்வேந்திரன்.

நகுமோ, லேய் பயலே - மின்னூல் வாங்க சுட்டி :
https://www.amazon.in/%E0%AE%A8%E0%AE%95%E0%A…/…/ref=sr_1_1…

#வாசிப்பு_2020
#பிடித்த_புத்தகங்கள்

வாசிப்பது எப்படி

”வாசிப்பதனால் ஆய பயனென்கொல் வரவன்
போறவனெல்லாம் கழுவியூற்றா விடில்”

என ஒரு புதுக்குறளே எழுதிவிடலாம். அந்த அளவுக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை ஏதோ வேற்றுகிரகவாசி போல ஒதுக்குவது அல்லது படிச்சவரைக்கும் போதும் ரகத்தில் அறிவுரை மழை பொழிவது என சங்கடத்துக்குள்ளாக்குவதில் நமக்கு நிகர் நாமே. உண்மையில் வாசிப்பு ஒருவனது வாழ்க்கையில் நிகழ்த்தும் அற்புதங்களை இந்தச் சமூகம் வெறுக்கிறது. வெறுமனே வாட்ஸப் பார்வேர்டுகளை நம்பிக்கொண்டு, கூடவே அனைத்தையும் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் லாபத்துக்கேற்ப பேசிக்கொண்டு வாழ்வதில் இருக்கும் சுகம் வாசிப்பவனால் தடைபடக்கூடும் என்பதும் அந்த வெறுப்புக்கு ஒரு முக்கியமான காரணம். ஏன் வாசிப்பு ஒரு சமூகத்துக்கு தேவைப்படுகிறது என்பதை மிக எளிமையாக அதே சமயம் அழுத்தமாக பதிவுசெய்யும் கட்டுரைகளுடன் துவங்குகிறது "எப்படி வாசிப்பது ?" எனும் நூல்.

வாசிப்பு என்பதை இலக்கிய வாசிப்பு என சுருக்கிக்கொள்ளாமல் பொதுவாகவே வாசிப்பதனால் வரும் நன்மைகளின் பட்டியல் மிகப்பெரியது. அன்றாடம், குறைந்தபட்சம் ஒரு நாளிதழாவது வாசிக்கும் பழக்கம் உள்ளவன் பதின்ம வயதில் துவங்கி பல் போகும் வயதுவரை செய்யும் செயல்களிலும் செல்லும் இடத்திலும் தனித்துவம் பெறுவான் என்னும் உண்மை மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.

வாசிக்க விரும்பும் ஒருவரின் ஆர்வத்தை குறைக்கக்கூடிய காரணிகளின் பட்டியலும் நீண்டதுதான். வாசிக்கும் ஆர்வத்தை நீர்த்துப் போகச் செய்யும் முக்கிய விசயங்களான சுவாரசியமில்லா எழுத்து நடையையும், அதே சமயம் வெகு சுவாரசியமாக எழுதப்படும் மேம்போக்கான கட்டுரைகளின் போதாமையையும், தொடர் வாசிப்பைத் தடை செய்யும்  டிவைஸ்களையும் நாம் கையாள வேண்டிய வித்தையை இந்நூல் நமக்குக் கற்றுத்தருகிறது. தொடர்ச்சியாக வாசித்தல், வாசிப்புக்கான மனநிலை, வாசிக்கும் நண்பர்கள், நமக்கான ஒரு வாசிப்புப் பழக்கம் / அட்டவணையின் தேவை, வாசிக்கும் போது குறிப்புகளின் தேவை, அதே போல் வாசித்த பின்னர் அப்புத்தகம் பற்றிய ஒரு சின்ன பகிர்தல் என ஒரு எளிய வாசகன் தன்னுடைய வாசிப்பை மேபடுத்திக்கொள்ளும் வழிமுறைகளை இப்புத்தகம் சுருக்கமாக அதேசமயம் தெளிவாகப் பேசுகிறது.

பொதுவாக வாசிப்பின் வரையறைக்குள் அதிகம் பேசப்படாதவை நாளிதழ்கள். ஒரு நல்ல நாளிதழுக்கான அடையாளங்களையும், அன்றாடம் நாளிதழ் வாசிக்கப்பட வேண்டிய அவசியத்தையும், நாளிதழ் வாசிப்புக்கு நம்மை பழக்கப்படுத்திக்கொள்வதற்கான எளிய வழிமுறைகளையும் இந்நூல் கவனப்படுத்துகிறது. புத்தகங்களை / இலக்கிய ஆக்கங்களைப் படிக்கும்போது அதன் வகைமை தெரிந்துகொண்டு படிப்பது அப்புத்தகத்திலிருந்து நாம் எதைக் கண்டடையலாம் எனும் தெளிவைத் தரும். கூடவே மதிப்பற்ற நூல்களை படித்து கால விரயம் செய்யாமல் வாசிக்கும் நண்பர்கள், விமர்சகர்கள் /ஆளுமைகளின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் தரலாம். நான் நாஞ்சில் நாடன் எனும் பேராளுமையை கண்டறிந்தது, அவரது ”இடலாக்குடி ராசா” எனும் கதையைப் பற்றிய திரு.பாலா அவர்களின் பதிவின் மூலமே (”இவன்தான் பாலா” -விகடன் பிரசுரம்).  எல்லாவற்றையும் கடந்து வாசிப்பு வெறுமனே ஒரு பொழுதுபோக்கோ அல்லது தூக்கம் தருவிக்கும் மருந்தோ இல்லை என்பதை நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு வாசகனுக்கு, இப்போது கொட்டிக்கிடக்கும் வாசிப்பு சார்ந்த வசதிகள் பெரும் வரம். நூலகங்கள், எழுத்தாளர்களின் தளங்கள், சிறுகதைகள் என பலவும் இணையத்தில் இலவசமாகவே கொட்டிக்கிடக்கும் காலம் இது. வாசிக்கும் ஆசைக்கு பணவசதி தடைபோடுவதை ஓரவுளுக்கு இல்லாமலே ஆக்கிவிடலாம். இந்த அனுகூலங்களை இந்நூல் பட்டியலிடுகிறது. ஏற்கனவே வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள், தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றிய ஒரு சின்ன உரையாடலின் மூலமே கூட சிலரையாவது வாசிப்பின் பக்கம் கரையேற்ற இயலும்.

இந்தப் புத்தகம் மிக அழுத்தமான விசயங்களைப் பற்றி பேசினாலும் எழுத்து நடை மிகவும் அற்புதம். வாசிப்பின் பக்கம் மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான காரணி சுவாரசியம். அதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது பேசுபொருள் கூடவே பேசுபொருளின் மீதான எழுத்தாளரின் பாண்டித்யம். இவை அனைத்தையுமே இப்புத்தகம் உள்ளடக்கியது என தயங்காமல் சொல்லுவேன்.
*
வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் - அமேஸான் கிண்டில் பதிப்பு.

சுட்டி -- https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-vasippathu-eppadi-Tamil-ebook/dp/B086HPBW13/ref=sr_1_1?crid=1PVYGT6XILHRB&dchild=1&keywords=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&qid=1586616023&sprefix=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%2Caps%2C380&sr=8-1

சுதந்திரத்தின் நிறம்


சில வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை அது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக அவிநாசி கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் நின்று கொண்டிருந்தேன். பில்லிங் கவுண்டருக்கு பக்கமிருந்த ஒரு புத்தக அலமாரியில்தான் முதன்முதல் அந்தப்புத்தகத்தைப் பார்த்தேன். அட்டை கொஞ்சம் சேதமடைந்திருந்தாலும் பக்கங்கள் பழுதின்றி இருந்தன. அந்தப் புத்தகத்தை மட்டுமல்ல, அப்புத்தகத்தில் பேசப்பட்டிருந்தவர்களின் பெயர்களையும் நான் அப்போதுதான் முதன்முதல் கேள்விப்படுகிறேன். ஓரிரு மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்த நண்பன், படித்துவிட்டு தருகிறேன் என்று அப்புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றவன் இன்னும் தந்துகொண்டே இருப்பதால், அப்புத்தகத்தை இன்னும் நான் வாசிக்கவில்லை. அதன்பின்னர், அப்புத்தகத்தின் நாயகர்களைப் பற்றி சில செய்திகளிலும் கட்டுரைகளிலும் (குறிப்பாக ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களின் தளம் வாயிலாக) அடிக்கடி வாசிக்கலானேன். அந்தப் புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வந்திருந்த லாரா கோப்பாவால் எழுதப்பட்ட, “கத்தியின்றி ரத்தமின்றி”.
*
அந்தப் புத்தகத்தை படிக்காத குறைசுதந்திரத்தின் நிறம்புத்தகத்தைப் படித்ததன் வாயிலாக தீர்ந்தது. இந்தப் புத்தகமேகூட கத்தியின்றி ரத்தமின்றி புத்தகத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்று நினைக்கிறேன். இப்புத்தகம் காந்தியர்கள் திரு. ஜெகந்நாதன், திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்களின் வாழ்க்கை வரலாறு. இத்தாலியைச் சார்ந்த லாரா கோப்பா அவர்கள் திரு. ஜெகந்நாதன், திருமதி. கிருஷ்ணம்மாள் இருவரையும் பேட்டி கண்டு, அதை புத்தகமாக இத்தாலி மொழியில் வெளியிட அப்புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் “The Color of freedom” எனும் பெயரில் வெளியானது. அதன் தமிழாக்கமேசுதந்திரத்தின் நிறம்”.  
.
காந்தியவாதிகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு ஒரு காலகட்டத்தின் வரலாற்றையே சொல்லும். குறிப்பாக காந்திய வழிமுறைகளை அதன் சாத்தியக்கூறுகளை, சாதனைகள் மற்றும் எல்லைகளை. இந்தப் புத்தகத்திலும் அத்தகைய வரலாறு உண்டு. என்றாலும் இதில் நான் அறிந்தது இதுவரை வெறுமனே ஒரு பெயராக மட்டுமே தெரிந்துவைத்திருந்தபூதான இயக்கம்பற்றி. கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இருவருமே இந்திய அளவிலான பூதான இயக்கத்தின் களப்பணியாளர்கள் என்பதும் தமிழக அளவில் பூதான இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் என்பதும் அவ்வியக்கத்தை நாம் தெளிவாக அறிந்துகொள்ள உதவுகின்றன. உண்மையில் பூதான இயக்கத்தின் வெற்றி என்பது பெரும் நிலக்கிழார்களாக இருந்தவர்களின் மனசாட்சியுடன் நேரடியாக அன்பின் மொழியில் உரையாடியதுதான். அப்பெரும்பணியை வினோபா பாவே போன்ற ஆன்மபலம் மிக்க தலைவர் எப்படி செய்தார் என்பதை நாம் அறிந்துகொள்ளும் அதே வேளையில், நடைமுறை சார்ந்த திட்டமிடல்களில் உள்ள போதாமையே அவ்வியக்கத்தின் குறைபாடாகவும் மாறிவிடும் தகவலும் இப்புத்தகத்தில் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நடைமுறை சார்ந்த அணுகுமுறையையே காந்தி கைக்கொண்டிருப்பார் என்பதும் தெரியவருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தானாக முன்வந்து நிலங்களை தானம் தந்த சம்பவங்களை கண்கலங்காமல் என்னால் கடக்க முடியவில்லை. குறிப்பாக ராமகிருஷ்ண ரெட்டி எனும் மாமனிதனை. உண்மையான ஒரு காந்தியவாதியால் மட்டுமே செய்யமுடிந்த செயல்கள் அவருடையது.
.
நம் வரலாற்றில் மறக்கப்பட முடியாத பெயர் கீழ்வெண்மணி. அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடத்துவங்கி, 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனிதத்தின் மீதான தீராக்கறை. சில ஆண்டுகள் கழித்து அதே கிராமத்தில் 74 குடும்பங்களுக்கு சொந்த நிலம் பெற்றுத் தந்தது காந்தியத்தின் மூலம் சாத்தியமானதையும், வைக்கம் சத்யாகிரகம் போலவே நிகழ்ந்த ”வலிவலம் சத்யாகிரகத்தை”யும் இப்புத்தகத்தில்தான் நான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன்.
.
இப்புத்தகம் கவனப்படுத்தும் இன்னொரு முக்கிய பிரச்சனை சூழியல் சார்ந்தது. வளமிக்க நிலத்தை அழித்து உருவாக்கப்படும் இறால் பண்ணைகளால் விளையும் சூழியல் கேடுகள், அதனால் விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அழிதல், ஒருமுறை இறால் பண்ணையாக்கப்பட்ட நிலம் மீண்டும் விவசாயத்துக்கு திரும்பமுடியாத சிக்கல், கடல் வாழ் உயிரினங்கள் சந்திக்கும் ஆபத்து என இத்தனை பாதகங்கள் இருந்தும் அதிகாரத்தின் துணையோடு நடந்துவந்த இறால் பண்ணைகளை, பன்னாட்டு நிறுவனங்களை, ஒரு சாமானிய காந்தியவாதி எதிர்த்து நின்ற நம் சமகால வரலாறும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
*
திருமதி.கிருஷ்ணம்மாள் மற்றும் திரு.ஜெகந்நாதன் இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நம்முடைய சமூகம் சார்ந்த பிரச்சனைகளும், அதன் தீர்வுகளுமே பெருமளவில் பதிவாகியுள்ளது. படிக்க மிக சுவாரசியமான நடையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை வாசித்து முடிக்கையில், ஒரு உண்மை காந்தியவாதிக்கு தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று இருப்பதற்கான சாத்தியமே இல்லை எனும் என் எண்ணம் மேலும் வலுப்பெறுகிறது.
*
ஒடுக்கப்படும் மக்களின் பக்கமே எப்போதும் நின்ற, வெறுப்புக்கும் பதிலாக அன்பையே கைக்கொண்ட, வெறும் பெயராகக் கூட நாம் அறிந்துகொள்ளாத ஆயிரமாயிரம் காந்தியவாதிகளையும், அத்தகைய பெருமனிதர்கள் நெஞ்சில் காந்தியம் என்னும் விளக்கை ஏற்றிச்சென்ற அந்த மாமனிதனையும் மீண்டும் மீண்டும் நன்றியுடன் நினைக்க வைத்தது இப்புத்தகம்.
**
சுதந்திரத்தின் நிறம் – லாரா கோப்பா
தமிழில் : B.R.மகாதேவன்
தன்னறம் பதிப்பகம்.

சங்கிலிப் பூதத்தான்

மனதில் கவலையோ வெறுமையோ கவிழும் தருணங்களில் நீங்கள் நாஞ்சில் நாடனைப் படிக்கவேண்டும். நாஞ்சில் நாடனை என்றால் வாழ்வின் வலிகளைப் பேசும் அவரது கதைகளையல்ல. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கிவிடும். அவரது பகடிக்கதைகளை. குறிப்பிட்டுச் சொல்வதானால் அவரது கும்பமுனி கதைகளை. அதற்கினையாகவே மாடன், ஏக்கி, ஏவல் கதைகளும்.
*
நம் மண்ணின் தெய்வங்கள் பேசுவதை நாஞ்சில் நாடனின் சொற்களில் படிப்பது பெரும் பேறு. தெய்வங்கள் என்றால் கோட்டை மதில் கொண்டு, குறித்த வேளை பூஜை கண்டு, நெய்வேத்திய அனுசரனைகள் அனுபவிக்கும் தெய்வங்களல்ல. வீட்டில் ஒருவனைப் போல் இருந்து ஏச்சும் பேச்சும் கேட்டாலும், ”போட்டும், நம்ம மக்கதான” என எதார்த்தமாய் எடுத்துக் கொள்ளும் சிறு தெய்வங்கள் எனப்பட்ட தேவதைகள். தெய்வங்களே ஆனாலும், அவர்களுக்கும் நமக்குண்டான , பசி, பட்டினி, கோப தாபம் எல்லாம் உண்டு தானே. போலவே, என்னை இப்படி அலைய வுட்டுட்டானே படைச்சவன் என்னும் பொருமல்களுக்கும் குறைவில்லை.

முதலாளி சொற்படி அம்மனைக் கடத்தும் பூனைக்கண்ணன் தன்னுள் ஒலித்த குரலுக்கு இணங்கி கிழக்குப் பக்கம் போகாமல் மேற்கே செல்வதில் துவங்குகிறது அவனுக்கும் விலைமதிக்க முடியாத அம்மன் சிலைக்குமான உறவு. கதையிலே சொல்லப்படுவதுவைப் போல தாய் - மகனோ அன்றி தகப்பன் - மகளோ என்றுமட்டுமில்லாது சிநேகிதத்தை விவரிக்கும் உரையாடல்கள் கொஞ்சம் என்றாலும் நிறைவு. சிலைக் கடத்தல் பூனைக்கண்ணன் சாமியாராக்கப்படுவதும், நல்லவன் கெட்டவன் பேதமறியா அம்மனை "போட்டீ, புத்தி கெட்டவளே" என திட்டுவதாகவும் முடியும் கதை "பூனைக்கண்ணன் ". அன்னைக்கு அவள் குழந்தைகள் அத்தனையும் முத்துக்கள் என்பதாகவும் எனக்குத் தோன்றியது.

சொத்துபத்துகளை சரிசமமாகப் பிரித்துக்கொண்ட அண்ணன் தம்பிகள், காத்தவரைக்கும் போதும் என புலைமாடன், மாடத்தியை கைவிடுகிறார்கள். உண்ட வீட்டுக்கு ரண்டகம் நினைக்க மனசாட்சி இடம்கொடாததால் கோபத்தை சுவற்றின்மீது காட்டி வேறு இடம் தேடி அலைகிறார்கள் மாடனும் மாடத்தியும். இருப்பதற்கு கிடைத்த ஒரு இடத்தையும் அதற்கென கேட்கப்பட்ட திருஷ்டாத்தை நிறைவேற்ற முடியாமல் அதே பரிதாப உணர்ச்சியால் இழக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அலையும் மாடனும் மாடத்தியும் “அன்றும் கொல்லாது நின்றும் கொல்லாது” தலைப்புக்கேற்ற சரியான தெய்வங்கள்!

சாதுவாய் இருக்கும் போது எவரும் கண்டுகொள்ளாததால் எம்எல்ஏ வைப்பின் மீதிறங்கி கொடை கேட்டுச் செல்லும் சுடுகாட்டு மாடனின் கதை உண்மையில் மாடனுக்கு மட்டுமேயானதா எனும் சந்தேகம் எழாமலில்லை. சுடுகாட்டு சுடலைமாடன் சமூகத்தையும், சுடலைமாடனுக்கு வழிகாட்டும் கழுமாடனையும் ஒப்பிட்டுப் பார்க்கவல்ல சங்கதிகள் இங்கும் ஓராயிரம் உண்டு (கறங்கு).

கடாரம் நிறைய கருப்பட்டி கருப்பட்டியாய் தங்கம் இருந்தாலும் அதைச் சுமந்தலையும் விதி சங்கிலிப் பூதத்தானுக்கு. நல்லவன் என எவனையாவது தேடிப்பிடித்து கைமாற்றி விடலாம் என்றாலும் கொள்வாரில்லை. அதை வைத்துக்கொண்டு யாதொரு பயனுமில்லாமல், எங்கு சென்றாலும் (கடாரத்தை பிணைத்த) சங்கிலியை இழுத்துக்கொண்டே செல்லும் வரமே சாபமான பூதத்தான் கைலாயம் திரும்பும் முடிவையே ஓர் அகப்பை அரிசிப் பாயாசமே தீர்மானிக்கிறது.

இந்தக் கதைகள் மட்டுமில்லாது வாழ்வின் அவலத்தைப் பேசும் சிறந்த சிறுகதைகள் (தன்ராம் சிங், தெரிவை, கான் சாகிப், கொங்கு தேர் வாழ்க்கை, தாலிச்சரண்) கொண்ட தொகுப்பு “சங்கிலிப் பூதத்தான்”. நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பான இந்நூலில் அத்தனை கதைகளும் அற்புத வாசிப்பனுபவம் தரும் சிறுகதைகள்.

பொதுவாகவே நாஞ்சில் நாடனின் கதாப்பாத்திரங்களுக்கிடையேயான உரையாடலில் அவரது பாண்டித்யம் வெளிப்படும். கதையையும் தாண்டி அந்த உரையாடல்களின் வசீகரமே மனதை ஆட்கொள்ளும் சாத்தியக்கூறுகளும் உண்டு. இத்தொகுப்பின் கதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

சங்கிலிப் பூதத்தான் – நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்