title


புலிநகக் கொன்றை

காலம் தனக்குள் அடக்கிவைத்துள்ள மர்மங்கள் யாராலும் கணிக்கவியலாதவை. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் (குறிப்பாக படுத்த படுக்கையாய்) வயது முதிர்ந்தவர்களுக்கு, தாங்கள் கடந்துவந்த வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கும் அனுபவம் (கொடுமை??) கிடைக்கும். ஒரு நல்ல நாவலை வாசிப்பதும் கிட்டத்தட்ட அதற்கு நிகரான அனுபவம்தான். என்ன ஒரு சின்ன வித்யாசம், அடுத்தவர்களது வாழ்க்கையை நாம் வாழ்ந்து பார்க்க முடியும். ஏறத்தாழ கூடுவிட்டு கூடு பாய்வதைப்போல. அந்த உன்னதத்துக்காகவே கவிதையைவிட, கட்டுரையைவிட தனிப்பட்ட முறையில் என் தேர்வாக இருப்பவை நாவல்கள் (என்றாலும் வரலாறும், சுயசரிதமும் கொஞ்சம் special).

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் முற்படுத்தப்பட்ட(பிராமண) சமூகத்தை, அவர்களின் வாழ்க்கைமுறையை பதிவுசெய்த நாவல்கள் கொஞ்சம் குறைவுதான். ஆனால், மிகச்சிறந்த முறையில் அவர்களது வாழ்வியலை திரு பி.ஏ.கிருஷ்ணன் தனது “புலிநகக் கொன்றை” நாவல் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார். நாவலின் அடிப்படை என்னமோ, தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் (உண்டியல் கடைக் குடும்பம்) நான்கு தலைமுறை வாழ்க்கையைச் சொல்வதுதான்; என்றாலும் அப்படி போகிறபோக்கில் நாவலை சுருக்கிவிட முடியாது. அதற்கு முக்கியமான காரணம், உண்டியல் கடைக் குடும்பத்தின் வரலாறோடு கூடவே அந்தந்த காலகட்டத்தின் அரசியல் / சமூகப்பார்வையும், முக்கிய நிகழ்வுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதுதான். அதிலும் சிறப்பு எந்த நிகழ்வும் துருத்திக்கொண்டிராமல் கதையின் போக்கிலேயே புனையப்பட்டிருப்பது.

உண்டியல் கடைக் குடும்பத்தின் வாரிசு “ராமன்”; வெறும் ராமனல்ல, சாப்பாட்டு ராமன். ராமனுக்கு மட்டும் எண்ஜான் உடம்புக்கு வயிறே (நாக்கே??) பிரதானம். உண்பதன்றி வேறொன்றும் அறியாதவன். எல்லா உதவாக்கரைகளுக்கும் எப்படியோ கிடைத்துவிடும் பொறுப்பான மனைவி பொன்னா. அவர்களின் மூன்று பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சி, ஆண்டாள். ஆண்டாளின் பிள்ளைப்பிராயத்தில் நடந்த திருமணம் அவளுக்கு பரிசளித்தது கைம்பெண் வாழ்க்கையை. நம்மாழ்வாரின் சந்ததி அவர் மகன் மதுரகவி, மதுரகவியின் மகன் நம்பி, நம்பியின் மகள் இந்து. ஆனால் மதுரகவி பிறந்தபின் விட்டைவிட்டு நம்மாழ்வார் கிளம்பிவிட; நம்பி பிறந்தபின் மதுரகவி ஒரு அரசியல் போராட்டத்தில் மரணமடைய; இந்து பிறந்தபின் ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை ”விசாரித்ததில்” கம்யூனிஸ்ட் ஆதரவாளரான நம்பி இறந்துவிடுகிறார். மொத்ததில் நம்மாழ்வாரின் சந்ததியும் ஆண்டாளின் வாழ்வும் குறைப்பட்டு நிற்க, உண்டியல் குடும்பத்தின் சந்ததியில் ஓரளவு நிறைவான வாழ்க்கை வாய்த்தது பட்சியின் வம்சத்துக்கு மட்டுமே.

வீட்டை விட்டு சென்ற நம்மாழ்வார் திரும்பிவந்து தன் அந்திமக்காலத்தை கொள்ளுப்பேத்தியுடன் கழிக்கிறார். நம்மாழ்வாரின் சந்ததியில் இளையவர்கள் யாவரையும் மரணதேவதை வட்டமிட, சாகும் தருவாயிலிருக்கும் நம்மாழ்வாருக்கோ மரணம் தள்ளிப்போகிறது. ஒரு கட்டத்தில் தன்னுடையே நீண்ட ஆயுளுக்கு காரணம், தன் குடும்பத்தின் இளையோர்களின் ஆயுளும் தனக்கு சேர்ந்துவிட்டதால்தானோ என எண்ணுகிறார் நம்மாழ்வார். ஒருவகையில் பொறுப்புகளை துறந்த நம்மாழ்வாருக்கான மாபெரும் பாரம் இந்த எண்ணம்தான். இன்னொருபக்கம், அருகிருந்து கவனித்துக்கொண்ட பட்சியை விடவும் நம்மாழ்வாரின் மீதே பொன்னா பாட்டியின் பாசம் “மந்தை தவறிய ஆட்டையோ” அல்லது “தாய்க்கு தலைமகனையோ” நினைவூட்டுகிறது.

கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளின் கதை என்றபோதும், கதைசொல்லலில் தென்படும் நேர்த்தியின் காரணமாக, மிக எளிதாக நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது “புலிநகக் கொன்றை”. மிகச் சிறந்த வாசிப்பனுபவம் தரும் இந்நாவல் அவசியம் படிக்கவேண்டியது.

புலிநகக் கொன்றை
பி.ஏ.கிருஷ்ணன்
காலச்சுவடு
ரூபாய் 250