title


மோட்சம்


இரவின் கொடுந்துயர்கூட்டும்

தனிமை அறுத்தெறிகிறது

காலத்துடனான பிணைப்பை…



இன்றிலிருந்து நேற்றுக்கும்

பின்னர் அதற்கு முன்பும்

ஊஞ்சலாட்டம் துவங்குகிறது

எண்ணம்



ரணப்பட்ட என் மனது

தனிமையில்

குத்திக்கிழித்த வாளும்

வாதை குறைக்கும் மருந்தும்

உன்னிடம்



என்னதான் சூடுபட்டிருந்தாலும்

அடுப்பன்றி வேறு அபயமில்லை

உன்னை நாடாமலிருக்க

மனம் ஒன்றும் பூனையல்ல

குரங்கு.

வதைப்படலம்…


நீண்ட நாட்களுக்குப்பின் எழுத வைத்த நண்பனுக்கு நன்றி.

நமக்கு இது எப்போதுமே நடப்பதுதான் என்றாலும், இந்த முறை கொஞ்சம் அதிகம். 

வர வர இந்த வார்த்தைகளின் தொந்தரவு தாங்க முடிவதில்லை. சொல் பேச்சு கேட்காமல் அவைகளாகவே வந்து குவிகின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் பேசுவது தவிர்த்து சேமித்துவைக்கும் வார்த்தைகள் உள் நிரம்பி பின் தானாகவே வழிகின்றன. தொட்டிக்கு நீரேற்றும் இயந்திரத்தில் இருப்பது போல் வார்த்தைகளை நிறுத்திவைக்கும் வசதியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். இத்தனைக்கும் வார்த்தைகளின் மீதான காதல் ஒன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் அதைக் குறைசொல்லியும் பயனில்லைதான்.
**
இப்போதெல்லாம் நண்பர்களிடம் பேசும்போது கூட மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது. மனதிலிருந்து ஊற்றெடுக்கும் சொற்களை வடிகட்டி பேசுவது கூட சங்கடமாய்ப்படவில்லை. மாறாக நம்முடைய பிம்பத்திடமே அவ்வேலையை செய்ய நேர்ந்தது நிச்சயம் துரதிஷ்டவசமானதுதான். என்னதான் சொல்லவந்த விசயத்தை தெளிவாக விளக்கிவிடும் போதிலும் மனதிலிருந்து வரும் வார்த்தைகள் தரும் அருகாமையை புத்தி தேர்வுசெய்து தரும் வார்த்தைகளில் பெறமுடிவதில்லை. மொத்தத்தில் தண்ணீர்தான் என்றாலும் அருவியும் ஷவரும் வேறுவேறுதானே!
**
மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே ஆகக் கடினமானது. அதிலும் மூலத்தின் பொருள் மாறாமலும் அழகியல் அழியாமலும் மொழிபெயர்ப்பது சவாலானது. இருப்பினும் துணிந்து சொல்வேன், அத்தகைய சவால்கள் இல்லாத போதும், தமிழிலிருந்து தமிழுக்கே மொழிபெயர்க்கும் சூழல் வாய்ப்பது நிச்சயம் சாபம்தான். முதலில் என் எண்ணங்களை எனக்கான சொற்களில் சொல்லிவிட்டு (அல்லது எண்ணிவிட்டு) பின்னர் அதையே உனக்கேற்றபடி மாற்றிச் சொல்லமுயலும் போது நான் மட்டுமல்ல மொழியே கூட கொஞ்சம் குழம்பித்தான் போகும்.
**
நான் சொல்லவந்தது அல்லது சொல்லிப்போனது எதுவுமே உன்னை நோகடிக்கும் எண்ணம் கொண்டதல்ல என்பதை வார்த்தைகள் மூலம்தான் விளக்கமுடியுமென்பது உறவுக்கு எதிராக கோரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம்தானே. தீர்மானம் தோற்கவேண்டுமென்பதுதான் என் ஆசை. என்றாலும் அரசியலைப் போலத்தான், சதுரங்கத்தை போலத்தான் நம்முடைய வெற்றியிலும் தோல்வியிலும் எதிராளிக்கு இருக்கிறது சமபங்கு.
**
இதோ மேலே எழுதியிருக்கும் எல்லாவற்றையும் கூட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைதான். ஆனாலும் ஒரு பயம், மீண்டும் நேர்ந்து விடுமோ ஒரு அவலம்? தமிழிலிருந்து தமிழுக்கே மொழிபெயர்ப்பது ஆகப் பெரிய சோகம்.