title


தகப்பன் தினம்

கிட்டத்தட்ட ஆறு / ஏழு வருடங்களுக்கு முன்னர், நான் சென்னையில் பணியில் இருந்தேன். கார்த்திக் கைக்குழந்தை. அருணாவும் ஊத்துக்குளியில் இருந்த நாட்கள் அவை. திருமணத்துக்கு பின்னர் கிடைக்கும் பேச்சுலர் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்தாலும் எல்லா வார இறுதிகளிலும் ஊருக்கு கிளம்பிவிடுவேன். Planning என்பது ஏதோ மேல் நாட்டில் இருக்கும் ஒரு சிற்றூர் என்ற அளவுக்குதான் நம்ம புரிதல் என்பதால், எல்லாப் பயணங்களுமே சாதாரண அரசுப் பேருந்துகளில்தான். சென்னை – சேலம், சேலம் – ஈரோடு, ஈரோடு – ஊத்துக்குளி என்று மாறி மாறி வரும் பயணங்கள் அவை. பெரும்பாலும் தூக்கம் இல்லா இரவுப்பயணம் என்ற போதிலும் அதிகாலையில் இறங்கும்போது பெரும் உற்சாகமாய் உணர்வேன். அதற்கு காரணம் ”கார்த்திக்”.
*
நான் வீடடையும் போது, கார்த்திக் அப்போதுதான் தூங்கி எழுந்திருப்பான். கதவைத் திறந்து, இருட்டறையில் ஒளிரும் zero watts விளக்கொளியில் அவனது செயல்களை நான் கவனித்துக் கொண்டிருப்பேன். தூக்கத்தில் இருக்கும் அருணாவிடம் அவனுக்கு மட்டுமே புரியும் தேவபாஷையில் பேசிக்கொண்டிருப்பான். எதேச்சையாகவோ அல்லது தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வாலோ திரும்பி கதவைப் பார்ப்பான். முதல் சில நொடிகள் “யார்டா இவன்?” என்ற ரியாக்சன் தான் வெளிப்படும். அடையாளம் கண்டுகொண்ட மறுநொடியில் வெகுவேகமாக தவழ்ந்து வந்து மேலே ஏற முயல்வான். ஒருவாரம் பிரிந்திருந்த களைப்புத் தீர, ஓரிரு மணி நேரங்கள் கார்த்திக்குடன் நன்றாக விளையாடுவதுடன் சரி. பின்னர், காலை உணவு. அதற்குப் பின்னர் களைப்பு தீர நல்ல தூக்கம். அப்புறம் பழைய கதைதான், கார்த்திக் அவன் போக்கில் விளையாட நான் சித்தன் போக்கில் ஏதாவது செய்துகொண்டிருப்பேன். சமயங்களில், பாசம் மேலிட தம்பி என நான் கொஞ்சும் போது “அடப்போய்யா, உனக்கு இதே பொழப்பு” என்ற ரீதியில் அவன் கண்டுகொள்ளாதிருப்பது; தூங்குவது உள்ளிட்ட வேறு வேலைகளில் நான் பிஸியாக இருக்கும்போது கார்த்திக் எடுத்துக்கொள்ளச் சொன்னால், அவனை அருணாவிடம் கொடுப்பது என ஒருவருக்கொருவர் மாறி மாறி பல்ப் கொடுத்துக் கொள்வது வழக்கம்தான். இந்தக் கூத்தெல்லாம் ஞாயிறு மாலை வரை மட்டும்தான்.
*
ஞாயிறு இரவு மீண்டும் சென்னை திரும்ப, சோல்டர் பேக்கை எடுத்து மாட்டும்போது எங்கிருந்தாலும் தவழ்ந்து ஓடிவந்து என்மீது ஏறிக்கொள்வான் கார்த்திக். அந்த பாய்ச்சல் சனிக்கிழமை காலை என்னைக் கண்டதும் தாவி வருவதை விட வேகமாய் இருக்கும். ”தம்பி, அப்பா கிளம்பட்டா?” எனக் கேட்டவுடன், ”வேண்டாம்” என்ற பாவத்துடன், என் தோளில் இருந்து பையைக் கழற்ற முயற்சிப்பான். “என்ன பொழப்புடா இது?” என என்னை நானே நொந்து கொண்ட நாட்கள் அவை. “ஏங்க, சீக்கிரமா கோயம்புத்தூர் CTS க்கு வரப் பாருங்க” என அன்றாடம் அருணா சொன்னபோதும்; கோவை வந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தை வெகு தீவிரமாக்கியது கார்த்திக்கின் செயல்தான். இந்த கோவை வேலை, சுற்றமும் நட்பும் சூழ் நல்வாழ்க்கை, இரவில் எவ்வளவு காலம் கடந்தாலும் கூடடையும் சுகம் என எல்லாவற்றுக்கும் விதை போட்டவன் கார்த்திக்தான்.
*
முதன்முதலாக, கார்த்திக் (செல்போனின்) ”அப்பா” என்றழைத்த நாளில் அலுவலகம் மறந்து, என்னை மறந்து நான் அழுதிருக்கிறேன். ஏழு வருடங்கள் முன்பு, நாங்கள் சிரித்திருக்க, கார்த்திக் முதன் முதலாக அழுத நாள் இன்று (17-ஆகஸ்ட்-2010).

பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக்.

: