title


ஒரு பிறந்தநாள் என்பது…


ஒரு பிறந்தநாள் என்பது
தெருவடைத்துப் பந்தலிட்டு
ஊரழைத்து விருந்துவைத்து
வம்படியாய் வாங்கப்படும்
வாழ்த்துக்களால்
கடந்துபோகலாம்

ஒரு பிறந்தநாள் என்பது
நட்சத்திர ஹோட்டல்களின்
ஆள்தெரியா இருட்டில்
பெயர் தெரியா உணவுகளுடன்
போதையேற்றியோ ஏறியோ
தள்ளாட்டத்துடன்
முடிந்துபோகலாம்

ஒரு பிறந்தநாள் என்பது
அழித்து அழித்து மாளாத
குறுஞ்செய்து வாழ்த்துக்கள்
பேசி முடிக்க முடிக்க
அடித்துக்கொண்டே இருக்கும்
செல்போன் மணியோசைகள்என
எழுத்துக்களாலும் குரல்களாலும்
ஆராதிக்கப்படலாம்

ஒரு பிறந்தநாள் என்பது
அதிகாலை தன்பெயரில்
முதல் பூசையுடன் துவங்கி
நள்ளிரவில்குழறானவாழ்த்துக்கள்
கூடவேடாஸ்மாக்வாந்திகளுடன்
நிறைவு பெறலாம்….

ஒரு பிறந்தநாள் என்பது
போலியாய் புன்னகைத்து
பெயருக்கு புதுத்துணியுடுத்தி
கடமைக்கு காலில்விழும் வெறும்
சம்பிரதாயங்களால் மட்டுமே
கடக்கப்படலாம்

ஒரு பிறந்தநாள் என்பது
தெருமுனைப் பிள்ளையார் துவங்கி
திருப்பதி ஏழுமலையாண்டவர் வரை
எல்லா கடவுளருக்கிணையாக
தன் பெயரையும் சேர்த்து
அர்ச்சனைசெய்யக்கிடைத்த
வாய்ப்பாகக்கூட
பார்க்கப்படலாம்

ஒரு பிறந்தநாள் என்பது
பிதுங்கிவழியும் பேருந்து நெரிசல்களிலோ
வயிற்றைக் கவ்விப்பிடிக்கும் பசியாலோ
சிறைக்கம்பிகளுக்கு பின்னாலோ
கடன்காரங்களுக்கு பயந்துகொண்டோ
சமயங்களில் மரணத்தாலோ
மறக்கப்பட்டு வெறுமனே
மற்றுமொரு நாளாக
முடிந்தும்போகலாம்

வேற்றுமையில்


எல்லா கிராமங்களின்
தெருக்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை
வீடுகளும்விளைநிலங்களும்
கோவில்களும்பள்ளிகளும்
ஏன் சாராயக் கடைகளும்
பஞ்சாயத்து டிவிகளும் கூட
வேறுவேறானவையே

எல்லா கிராமங்களும்
ஒரே மாதிரியானவையல்ல
சாதியின் பெயரால் சபிக்கப்பட்டவர்களும்
மாதவிலக்கான பெண்களும்
புழக்கடையில் மட்டும்
புழங்கலாம் என்பதைத் தவிர !

காதல் காலம்


வாழ்க்கைப் புத்தகத்தின்
தீரா பக்கங்களில்
காதல் சுமந்த
பக்கங்கள் மட்டும்தான்
கலர்பக்கங்கள் !
**
மாபெரும் கோவிலில்
ஆயிரம் தெய்வங்கள்
சூழ்ந்திருந்தாலும்
மூலவருக்கு எப்போதும்
முதல் மரியாதைதான் !
அப்படியே
பேருந்து நிறுத்தத்தின்
கன்னியர்கள் கூட்டத்தில் நீ !
**
நகம் கொறிக்கும் போதெல்லாம்
கெட்ட பழக்கம்என
செல்லமாய்க் கோபித்து
வலிக்காமல் கொட்டுகிறாய்
அடடா
நகம் கொறிப்பதுதான்
எவ்வளவு நல்லபழக்கம் !

அளவில்லா விளையாட்டு


விதியின் மாயக்கரங்கள்
செய்யும் விளையாட்டு
அளவில்லாதது
அதுதான் பிணைத்துவைத்துள்ளது
வாழ்க்கையை
ரஜினி ரசிகர்களுக்கு
கமல் ரசிகர்களுடன் !