title


காலகண்டம் - உருகியோடும் பொன்னுலகம்

அருணாவின் தாலிக்கொடிக்குள் இருக்கும் வெள்ளிசரடு நெகிழ்ந்து விட்டது. அதை சரிசெய்வதற்காக, சென்ற வாரம் நானும் அப்பாவும் அவினாசி சென்றிருந்தோம். அவினாசி “தம்பியண்ணன் சில்வர்ஸ்” கடைக்கு முன் அமர்ந்திருந்த ஆசாரியண்ணன் தாலிக்கொடியை கொஞ்ச நேரம் ஆராய்ந்தார்.

“வெள்ளிசரட பத்த வெச்சா மறுபடியும் இதே பிரச்சன வரும்; பேசாம உருக்கி கம்பி மாதிரி செஞ்சுரலாமா? ஒரு முந்நூறுபா ஆகும்” என்றார்.

“எது நல்லாருக்குமோ அதுமாதிரியே செஞ்சிருங்க” 

பதிலைக் கேட்டதும், வேலையை துவங்கினார். முதலில் தாலிக்கொடிக்குளிருந்து வெள்ளிச்சரடை உருவியெடுத்தார். தன்னிடமிருந்த மரக்கட்டையின் குழிவான ஒரு பகுதியில் வெள்ளிச்சரடை வைத்து மற்றொரு பகுதியை பிடித்துக்கொண்டார். கிட்டத்தட்ட கேஸ் லைட் மாதிரி இருக்கும் விளக்கை பற்றவைத்தார். முனை வளைந்த மெல்லிய ஊதாங்குழலை எடுத்து மரக்குழிக்குள் இருக்கும் வெள்ளிச்சரடின் மீது நெருப்பு படுமாறு “ப்பூ, ப்பூ” என ஊதலானார். இரண்டு நிமிடங்களில் மரக்குழி முழுதும் தீக்கங்குகளாய் மாறியது, தொடர்ந்து பாய்ந்து கொண்டேயிருந்த நெருப்பு மழையால் மெல்ல மெல்ல உருகத்துவங்கியது வெள்ளிச்சரடு.

நம்பி, கிருட்டிணன் ஆசாரி, சன்னாசி, முத்துராஜ், சோலையப்பன், சென்றாயல் என பல பெயர்கள் என்னுள் ஓடத்துவங்கின. இந்த பெயர்கள் எதுவும் நிகழ்காலத்தை சேர்ந்தவை அல்ல. ஆனால் இந்த பெயர்களுக்கும் 2015 செப்டம்பர் மாதம் அவினாசியில் வெள்ளிச்சரடை உருக்கிக்கொண்டிருந்த ஆசாரியண்ணனுக்கும் ஒரு இணைப்பிருக்கிறது. என்னுள் ஓடிய பெயர்களின் சொந்தக்காரர்கள் அனைவரும் வேறு வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்த ஆசாரிமார்கள். என்ன சொன்னேன் (எழுதினேன்?) காலகட்டம் என்றா, இல்லை இல்லை இவர்கள் “காலகண்டத்தில்” வாழ்ந்திருந்த நகை ஆசாரிகள்.

“காலகண்டம்” திரு.எஸ்.செந்தில்குமார் எழுதி உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நாவல் (விலை : ரூ400/-).



ஆபரணத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு சமூகத்தின், 500 ஆண்டு காலவரலாறிலிருந்து, ஒரு 150 ஆண்டு காலத்தை சித்தரிப்பதன் வாயிலாக ஏறத்தாழ ஐந்து தலைமுறைகளின் வாழ்வை, அதனூடாக தங்க வேலை செய்யும் பொன் ஆசாரிமார்களின் ஏற்றத்தாழ்வை சிறப்பாக பதிவு செய்திருக்கும் நாவல் “காலகண்டம்”. பொன் வேலை செய்யும் போனூர் கிருட்டிண ஆசாரியில் துவங்கி, கிருட்டிண ஆசாரியின் குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறையான நம்பி ஆசாரியின் மரணத்தில் முடிகிறது நாவல். கதை என்றெல்லாம் எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது, மாறாக இந்த நாவல் வாழ்க்கையை, அதன் அசலான இன்ப துன்பங்களை, வலியுடனும் வருத்தங்களுடனும் பதிவு செய்கிறது.

காசாய் இருக்கும் தங்கம் ஆபரணமாக மாறுவது ஏற்றம், நகையை உருக்கி மீண்டும் காசாக்குவது ஏதேனும் ஒரு வகையில் இறக்கம் என வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் நகை வேலையுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பட்டறைகளில் ஆபரணங்கள் செய்ய ஆர்வம் காட்டுவதும், நகையை உருக்கி காசாக்கும் வேலையை கொஞ்சம் மட்டாக கருதுவதும் பதிவு செய்யப்பட்டிருப்பது அதன் நீட்சி என எண்ணுகிறேன். நேரடியாக மக்களிடமிருந்து ஆர்டர் எடுத்து நகை செய்து பட்டறை முதலாளியாக வாழ்ந்த காலம் போய் முதலாளிகளிடமிருந்து ஆர்டர் எடுத்து வேலை பார்த்துத்தரும் காலம் வருகிறது. அன்றாடம் தர வேண்டிய வேலைக்காக முதலாளி சமூகத்துக்கு கூழைக்கும்பிடு போடவேண்டிய காலம் அது. இடையில், செல்வாக்கு கொஞ்சம் சரிந்து, அடுத்தவர் பட்டறைக்கு வேலைக்கு செல்லும் அவலமும், பொன் நகை செய்யும் வேலை இல்லாமல் பட்டறையில் ஒட்டு வேலை செய்ய நேரும் காலமும் என வேறு வேறு பாத்திரங்களின் வாயிலாக ஆபரணத்தொழிலின் பரிமாணங்கள் சிறப்பாக வெளிப்படுகின்றன. இடையிடையே மனித மனத்தின் இருளடைந்த பகுதிகளும், காலத்தின் கைகளில் மனிதன் வெறும் பகடைதான் என்பதும் நிறுவப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தை அதன் வாழ்க்கையை, குறிப்பாக அதன் வலிகளை பதிவு செய்திருக்கிறது “காலகண்டம்”. ”புலிநகக் கொன்றை”போலவே இந்த நாவலும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தைத் தந்தது.


பைக் சுற்றிப் புராணம் 1 - ஸ்டார்ட், க்ளட்ச், கியர் புஸ்

என் வாழ்க்கையில் நான் ஓட்டிய முதல் டூ வீலர் என் மாமாவின் “HERO HONDA CD 100”, அது என் பள்ளிப்பருவத்தில். அவிநாசி அருகில் உள்ள ராயன்கோவிலில் என் தாய்மாமாக்கள் லீசுக்கு ரைஸ்மில் எடுத்து ஓட்டிவந்தார்கள். அப்போதெல்லாம் வார இறுதிகளில் நான் பெரும்பாலும் ராயன்கோவிலுக்கோ அல்லது காங்கேயம்பாளையத்துக்கோ செல்வது வழக்கம். ராயன்கோவில் செல்லும்போதெல்லாம் சனிக்கிழமை பகல் முழுவதும் சாப்பிட்டு தூங்கிவிட்டு இரவுகளில் நெல் வேக்காடு போடும் ஈஸ்வரண்ணன், ராஜா அண்ணனுடன் நானும் அமர்ந்து, (நெல் வேகவைக்கும் பெரிய அடுப்பில் எரியும் நெருப்புக்கு) உமித்தள்ளுவது வாடிக்கை. (பெரும்பாலும், எல்லா அரிசி ஆலைகளும் ”மாடர்ன் ரைஸ் மில்” ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் இந்த வேக்காட்டு முறை கிட்டத்தட்ட மறந்துபோன ஒன்று).

அப்போதெல்லாம் பின்னிரவுகளிலும், அதிகாலையிலும் அப்பச்சி வைத்துத்தரும் வரக்காப்பியை நடுக்களத்தில் அமர்ந்துகொண்டு குடிப்போம். ராயன் கோவில் கொஞ்சம் மேடான பகுதி, ஆகவே இயல்பாகவே அங்கு குளிரும் அதிகம். அடிக்கும் குளிருக்கு அதுவரை உமிஅடுப்பின் கதகதப்பில் இருந்துவிட்டு, அடுப்பை விட்டு கீழிறங்கி களம் வந்து சேரும்வரையிலான கொஞ்ச நேரம் கடும் குளிரை அனுபவித்துவிட்டு, பின்னர் அருந்தும் வரக்காப்பி தரும் இதம் சொல்லில் அடங்காதது. அப்படிப்பட்ட ஒரு நடுஇரவில்தான், முதன் முதலில் அசட்டுத்துணிச்சலுடன் மாமாவின் வண்டியை ஓட்டினேன்.

இந்த இடத்தில் மாமாவின் வண்டியைப் பற்றி கொஞ்சம் சொல்லித்தான் ஆகவேண்டும். வார வசூலுக்கு புளியம்பட்டிக்கு செல்லும் மாமா மாலையில் திரும்பி வரும்போது மில் கேட்டருகே வந்ததும் இஞ்சினை அணைத்துவிடுவார். படிப்படியாக வேகம் குறைந்து சரியாக வண்டி நிறுத்தும் இடமருகே வந்து நிறுத்துவார். இந்த Calculation ஒருமுறைகூட நானறிந்து தவறியதில்லை. ஒருமுறை சென்னிமலைக்கு “சேகர்” மாமாவும் ”பிரகாஷ்” அண்ணனும் வரும்போது ”எவ்வளவு வேகந்தான் போகும்?” என ஆர்வக்கோளாறில் வண்டியை செம விரட்டு விரட்டி “Speedo Meter” குளறுபடியாகிப்போன சோகக்கதையை கிருஷ்ண மாமா பலமுறை சொல்லியிருக்கிறார். ”பாருங்க மாப்ள, இவ்வளவுதான் 60 கி.மீ வேகங்கறது” சாமிநாத மாமா வண்டியை ஓட்டிக்கொண்டே அப்பாவிடம் சொன்னதை நான் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தது, கோபியிலிருந்து அவிநாசிக்கு ட்ரிபிள்ஸ் வந்தபோது. இப்படி சொல்லித்தீராத கதைகள் ஏராளம் உண்டு.

மில் என்பதாலும் பெரும்பாலும் எல்லா இரவுகளிலும் ஆட்கள் இருப்பதாலும் வண்டியில் எப்போதும் சாவி இருப்பது எனக்கு வசதியாகப் போய்விட்டது. துவக்கத்தில் வண்டியை ”ஸ்டார்ட்” செய்வது முதல் கியர் போடுவது சடக்கென கிளட்சை ரிலீஸ் செய்து வண்டியை ஆஃப் செய்து விடுவது என மிகச் சரியாக தவறிழைத்தேன். அப்போதெல்லாம், இந்த பெரியவண்டி பொமெட் மாதிரி முறுக்கினவுடன் பறந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்” என்கிற ரீதியிலான மெக்கானிக்கல் ஐடியாவும் தோன்றும்.

என்றாலும், ஆட்கள் யாரும் இல்லா இரவுகளில் இழைத்த தவறுகள் அவமானமாயில்லை மாறாக ஒரு அனுபவமாக இருந்தன. கூடவே, ஆனவரைக்கும் ஓட்டுடா, பாத்துக்கலாம் என்கிற ரீதியில் ஈஸ்வரண்ணன், ராஜா அண்ணன் அவர்களது ஆறுதல் வார்த்தைகளும் சேர்ந்துகொள்ள, ஓரிரு வாரங்களில் கியர் வண்டி ஓட்டும் சூட்சுமம் கொஞ்சம் கைகூடி, முதல் கியரில் வெற்றிகரமாக வண்டியை சில அடிகள் நகர்த்திய அதிகாலையில்தான் தம்பி மாமாவிடம் கையும் வண்டியுமாக சிக்கினேன்.  


ஆக, இப்படியாக ஒரு முடிவுக்கு வந்தது என் முதல் இரு சக்கர வாகன சாகசம்.

செப்டம்பர் 17, 2013

”எப்பப் பாத்தாலும், எல்லா விசயத்துலயும் உம்மட சவுரியத்துக்கே நடக்கணும்னு நெனச்சா, அது ஆவாது “

வழக்கம்போல முதல் எதிர்ப்பு தெரிவித்தார் அம்மா.

“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல, ஆனா அம்மாவோட விருப்பத்தையும் பாக்கணும்ல”

அப்பாவிடமிருந்து வழக்கமான ரியாக்சன்தான் இது ”எனக்கு ஓகே, ஆனா அம்மா கோவிச்சுக்குவா அதனால ஓகே இல்ல” ரகம்.

ஆனா பாருங்க, அருணாவ இந்த விசயத்துல நான் பாராட்டியே தீருவேன். எப்பயுமே எம்பட பக்கம்தான் பேசுவா. அதுவும் எப்படித் தெரியுமா?

“உங்களுக்கு புடிச்சிருந்தா செரி” இது எங்கிட்ட சொல்லுறது. அதே விசயத்துக்கு சபைல சொல்லுறது இது : “விடுங்க மாமா, அவரு யாரு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அவரு சொல்லுறத தான் நாம கேட்கோணும்”

மீண்டும் அம்மா துவங்கினார் “அப்படித்தான் பையனுக்கு பேர் வக்கிறதுக்கும் ஒரேயடியா புடிவாதம் புடிச்சான்.”

“அப்படியில்லமா” எனச்சொல்லத் துவங்கியவனுக்கு, “அடப்போ, உனக்கெல்லாம் ஒண்ணுந்தெரியாது.” என கோபமான பதில்தான் கிடைத்தது.

நான் ஒரு பூடிசு (Shoe) வாங்கணும்னு சொன்னாலே, நார்மலா நாலு ரவுண்டு டிஸ்கசன் ஓடும், இப்ப பேசுறதோ பெரிய விசயம் நாயமா நாப்பது ரவுண்டு டிஸ்கசன் ஓடியிருக்கணும்.

ஆனா, கொஞ்ச நேரம் கெஞ்சியபின் என் விருப்பத்துக்கே (வழக்கம்போல) அனைவரும் இசைந்தார்கள்.

”செரி, ஒம்பட ஆசப்படியே செவ்வாக்கிழமை வச்சுக்கலாம்.” விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அப்பா. நான் அவ்வளது தூரம் அடம்பிடித்தற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு.

செப்டம்பர் 17, 2013 ஒரு செவ்வாய்க்கிழமை, எனக்கு மிகப்பிடித்த முருகருக்கு உகந்த நாள். இரண்டாவது காரணம் சமுதாய மறுமலர்ச்சி, சாதி/மத வேறுபாடுகளை ஒழிக்கப் பாடுபட்ட “தந்தை. பெரியார்” பிறந்த தினம் செப்டம்பர் 17.

இந்த முறை சிசேரியன் என்பது மருத்துவரால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதற்கான நாள் தேர்ந்தெடுக்கத்தான் இவ்வளவு அக்கப்போர்களும்.


செப்டம்பர் 17, 2013 – செவ்வாய்க்கிழமை – காலை சுமார் 8:50 மணிக்கு, பெண்ணுரிமைக்காக(வும்) போராடிய தந்தை பெரியார் பிறந்தநாளில், அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில், என் மகள் “கிருத்திகா” பிறந்தாள் J

பிறந்தநாள் வாழத்துகள் பாப்பு, இது உனக்காக

https://www.youtube.com/watch?v=HcLjkBdzunY


ஆகஸ்ட் 17

”ஏங்க, என்னங்க ஆச்சு ?”

கடந்த 5 நிமிடங்களில் இரண்டாவது முறையாக அருணா கேட்டாள். ஓன்றுமில்லை என்பதாக சைகை செய்தேன்.

“பின்ன என்ன, ரொம்ப நேரமா எதுவுமே பேசாம எங்கேயோ வெறிச்சு பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?” அருணாவின் ஆதங்கம் நியாயமானதுதான் என்றாலும், பேசக்கூடாது என்றில்லை; எனக்கு பேச்சு வரவில்லை.

*
இது நடந்து ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது சென்னை அடையாறில் உள்ள மகப்பேறு மருத்துவமனை. முகங்கள் தெரியுமளவு மட்டும் வெளிச்சம் கொண்ட அந்த அறையில் நான், அருணா மற்றும் மருத்துவமனையின் “ஸ்கேன்” மைய உதவியாளர் என மூன்று பேர் மட்டும் இருந்தோம். ஸ்கேன் செய்யும் கருவியை இயக்கியவாறு உதவியாளர் சொன்னார், இது “Babyயோட Heartbeat” அறையின் நிசப்தத்தை மறைத்துக்கொண்டு ஒலிக்கத்துவங்கியது என் மகனின் இதய துடிப்பு. 5 நிமிடங்கள் கழித்து அறையை விட்டு வெளியே வந்த நான் பரவசத்தில் பேச்சை மறந்தேன். பார்க்கும் பொருள் எல்லாம் புதிதாய் தெரிய கொஞ்ச நேரம் எல்லாப்பொருட்களையும் வெறித்துப்பார்த்தேன்.
*

எப்போதும் உயிருள்ள FM Radio மாதிரி பேசிக்கொண்டிருப்பவன் திடீரென பேச்சை நிறுத்தி எல்லோரையும் வெறித்துப்பார்ப்பது நிச்சயம் கலவரமூட்டும் செயல்தான். அந்த கலவரத்தோடு மீண்டும் ஒருமுறை அருணா கேட்டாள்.

”ஏங்க, என்னண்ணு சொன்னாதான தெரியும்?”

இடைப்பட்ட நேரத்தில் ஓரளவு ஆசுவாசம் கிடைத்திருந்தது. மெல்லிய புன்னகையுடன், துளித்திருந்த சொட்டுக்கண்ணீரை துடைத்தபடி சொன்னேன்

“ஒண்ணுமில்லப்பா”

***

இன்று (ஆகஸ்ட் 17) “கார்த்திக்” பிறந்தநாள் :) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக் :)

ஒரு பழைய பதிவு :
http://kaleeswarantk.blogspot.in/2012/08/flashback.html

சொயம்புலிங்கம் VS த்ரிஷ்யம்

வெள்ளிக்கிழமை (ஜூலை 3), மதியம் 2:30 மணி, கோவை சென்ரல் தியேட்டர். பட அறிவிப்பு வந்த நாளிலிருந்தே மனதுக்குள் தோன்றிக்கொண்டிருந்த சின்ன சந்தேகம் அதன் உச்ச கட்ட அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இத்தனைக்கும், சின்ன வயதிலிருந்தே அடிப்படையில் நான் ரஜினி ரசிகன், என்றாலும் வளர வளர ”நம்மவருக்கும்” ரசிகனானேன். சந்தேகத்தின் துவக்கப்புள்ளி வேறொன்றுமில்லை, என்னதான் நம்மாளு புத்திசாலியானாலும், சமயத்தில் 15 வருஷம் கழிச்சு “சே, என்னா படம்டா”ன்னு எல்லாரும் சொல்லுற படத்த இப்பவே எடுத்துட்டு (குருதிப்புனல், ஹேராம்) அது யாருக்கும் புரியாம (புடிக்காம) ப்ளாப் ஆகுற ராசி உள்ளவரு. அதுமாதிரி ஏதாவது ஆகிடுமோ அப்படின்னுதான்.

துவக்கத்திலிருந்தே எனக்கு அந்த சிந்தனை தோன்றிக்கொண்டே இருந்தது. ஏற்கனவே “த்ரிஷ்யம்” பார்த்திருந்த காரணத்தால், ”பாபநாசம்” படத்தில் காட்சிக்கு காட்சி ஒரு ஒப்பீடு எனக்குள் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. அதற்கு தகுந்த மாதிரியே, ஒரு சமயமும் ஒப்பீட்டில் த்ரிஷ்யமும், மறுசமயம் பாபநாசமும் மாறி மாறி சிறப்பாயிருப்பதாக தோன்றின. ஆனாலும் எனக்கென்னவோ, சுயம்புலிங்கத்தை விட ஜார்ஜ்குட்டியின் கை ஒருபடி மேலிருந்ததாகவே தோன்றியது. இது எல்லாம் இறுதிக்காட்சி வரையில்தான்.

படத்தின் இறுதிக்காட்சியில், “ஐ.ஜி” கீதாவிடமும், அவரது கணவர் பிரபாகரிடமும், சுயம்புலிங்கம் பேசும் அந்த ஒரு காட்சியிலேயே, அதற்கு முந்தய 3 மணி நேர ஒப்பீட்டையும் உடைந்தெறிந்து விட்டார் நம்ம “சொயம்புலிங்க” அண்ணாச்சி. இந்த மொழிமாற்ற படத்தில் மொழி மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளது. ஆன்மா அப்படியே.

அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும், அது அடிக்கடி நிகழ்ந்தால் அதன் பெயர் “கமல்”.
smile emoticon

புலிநகக் கொன்றை

காலம் தனக்குள் அடக்கிவைத்துள்ள மர்மங்கள் யாராலும் கணிக்கவியலாதவை. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் (குறிப்பாக படுத்த படுக்கையாய்) வயது முதிர்ந்தவர்களுக்கு, தாங்கள் கடந்துவந்த வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கும் அனுபவம் (கொடுமை??) கிடைக்கும். ஒரு நல்ல நாவலை வாசிப்பதும் கிட்டத்தட்ட அதற்கு நிகரான அனுபவம்தான். என்ன ஒரு சின்ன வித்யாசம், அடுத்தவர்களது வாழ்க்கையை நாம் வாழ்ந்து பார்க்க முடியும். ஏறத்தாழ கூடுவிட்டு கூடு பாய்வதைப்போல. அந்த உன்னதத்துக்காகவே கவிதையைவிட, கட்டுரையைவிட தனிப்பட்ட முறையில் என் தேர்வாக இருப்பவை நாவல்கள் (என்றாலும் வரலாறும், சுயசரிதமும் கொஞ்சம் special).

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் முற்படுத்தப்பட்ட(பிராமண) சமூகத்தை, அவர்களின் வாழ்க்கைமுறையை பதிவுசெய்த நாவல்கள் கொஞ்சம் குறைவுதான். ஆனால், மிகச்சிறந்த முறையில் அவர்களது வாழ்வியலை திரு பி.ஏ.கிருஷ்ணன் தனது “புலிநகக் கொன்றை” நாவல் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார். நாவலின் அடிப்படை என்னமோ, தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் (உண்டியல் கடைக் குடும்பம்) நான்கு தலைமுறை வாழ்க்கையைச் சொல்வதுதான்; என்றாலும் அப்படி போகிறபோக்கில் நாவலை சுருக்கிவிட முடியாது. அதற்கு முக்கியமான காரணம், உண்டியல் கடைக் குடும்பத்தின் வரலாறோடு கூடவே அந்தந்த காலகட்டத்தின் அரசியல் / சமூகப்பார்வையும், முக்கிய நிகழ்வுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதுதான். அதிலும் சிறப்பு எந்த நிகழ்வும் துருத்திக்கொண்டிராமல் கதையின் போக்கிலேயே புனையப்பட்டிருப்பது.

உண்டியல் கடைக் குடும்பத்தின் வாரிசு “ராமன்”; வெறும் ராமனல்ல, சாப்பாட்டு ராமன். ராமனுக்கு மட்டும் எண்ஜான் உடம்புக்கு வயிறே (நாக்கே??) பிரதானம். உண்பதன்றி வேறொன்றும் அறியாதவன். எல்லா உதவாக்கரைகளுக்கும் எப்படியோ கிடைத்துவிடும் பொறுப்பான மனைவி பொன்னா. அவர்களின் மூன்று பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சி, ஆண்டாள். ஆண்டாளின் பிள்ளைப்பிராயத்தில் நடந்த திருமணம் அவளுக்கு பரிசளித்தது கைம்பெண் வாழ்க்கையை. நம்மாழ்வாரின் சந்ததி அவர் மகன் மதுரகவி, மதுரகவியின் மகன் நம்பி, நம்பியின் மகள் இந்து. ஆனால் மதுரகவி பிறந்தபின் விட்டைவிட்டு நம்மாழ்வார் கிளம்பிவிட; நம்பி பிறந்தபின் மதுரகவி ஒரு அரசியல் போராட்டத்தில் மரணமடைய; இந்து பிறந்தபின் ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை ”விசாரித்ததில்” கம்யூனிஸ்ட் ஆதரவாளரான நம்பி இறந்துவிடுகிறார். மொத்ததில் நம்மாழ்வாரின் சந்ததியும் ஆண்டாளின் வாழ்வும் குறைப்பட்டு நிற்க, உண்டியல் குடும்பத்தின் சந்ததியில் ஓரளவு நிறைவான வாழ்க்கை வாய்த்தது பட்சியின் வம்சத்துக்கு மட்டுமே.

வீட்டை விட்டு சென்ற நம்மாழ்வார் திரும்பிவந்து தன் அந்திமக்காலத்தை கொள்ளுப்பேத்தியுடன் கழிக்கிறார். நம்மாழ்வாரின் சந்ததியில் இளையவர்கள் யாவரையும் மரணதேவதை வட்டமிட, சாகும் தருவாயிலிருக்கும் நம்மாழ்வாருக்கோ மரணம் தள்ளிப்போகிறது. ஒரு கட்டத்தில் தன்னுடையே நீண்ட ஆயுளுக்கு காரணம், தன் குடும்பத்தின் இளையோர்களின் ஆயுளும் தனக்கு சேர்ந்துவிட்டதால்தானோ என எண்ணுகிறார் நம்மாழ்வார். ஒருவகையில் பொறுப்புகளை துறந்த நம்மாழ்வாருக்கான மாபெரும் பாரம் இந்த எண்ணம்தான். இன்னொருபக்கம், அருகிருந்து கவனித்துக்கொண்ட பட்சியை விடவும் நம்மாழ்வாரின் மீதே பொன்னா பாட்டியின் பாசம் “மந்தை தவறிய ஆட்டையோ” அல்லது “தாய்க்கு தலைமகனையோ” நினைவூட்டுகிறது.

கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளின் கதை என்றபோதும், கதைசொல்லலில் தென்படும் நேர்த்தியின் காரணமாக, மிக எளிதாக நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது “புலிநகக் கொன்றை”. மிகச் சிறந்த வாசிப்பனுபவம் தரும் இந்நாவல் அவசியம் படிக்கவேண்டியது.

புலிநகக் கொன்றை
பி.ஏ.கிருஷ்ணன்
காலச்சுவடு
ரூபாய் 250


ஏழுமலை ஜமா


பெரும்பாலும் பொழப்புக்காக சொந்த ஊரை விட்டு தூர தேசங்களிலும் வெளியூர்களிலும் சென்று அவஸ்த்தைப்படுபவர்கள் பெருகிவிட்ட காலகட்டம் இது. அவர்கள் எல்லாருடைய மனதிலும் சொந்த ஊர் குறித்த ஒருவித பெருமை, ஏக்கம் நிறைந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் கணிணித்துறையில் கைநிறைய(?) சம்பாதித்தாலும் “ஒனக்கென்ன மாப்ள ஊரோட செட்டிலாயிட்ட” என மளிகைக்கடை நண்பனிடம் பொறாமை பேசுபவர்கள் நாம். நல்ல சம்பாதித்யத்துடன் வசதியான வாழ்க்கை வாழும் மக்களுக்கே சொந்தஊர் மீதான மோகம் மிகுந்திருந்தால், கிராமங்களில் கெளரவமாக வாழ்ந்துவிட்டு, நகரத்தின் நெரிசலில் மானம் மரியாதையை நசுங்கவிட்டவர்கள் மனம் எவ்வளவுதூரம் புழுங்கும்? கையளவு நிலமாக இருந்தாலும் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துவிட்டு, வளமும் வானமும் பொய்த்துப்போய், மேஸ்த்திரியின் வசவுக்கு மத்தியில் செங்கல் சுமக்கும் முன்னாள் முதலாளியின் கண்ணீர் மட்டும்தான் அதை அறியும். இதையெல்லாவற்றையும் விட மோசமானது, சொந்த ஊர் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல ஊரிலும் ஒரு நாயகனாக வாழ்ந்துவிட்டு, பிழைப்புக்காக அவமரியாதையை சகித்துக்கொண்டு வாழ்வது.

அந்த மனவலியை பதிவு செய்திருக்கும் அற்புதமான ஒரு கதை “ஏழுமலை ஜமா”. திரு. பவா செல்லத்துரை அவர்களின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” எனும் தொகுப்பில் (வம்சி பதிப்பக வெளியீடு) இடம் பெற்றுள்ள கதை இது.

 

தமிழகத்தின் திருவிழா இரவுகளை கூத்துக்கலை அலங்கரித்த காலகட்டத்தில், சுத்துப்பட்டு ஊர்களில் கொடிகட்டிப் பறந்த கூத்து வாத்தியார் ஏழுமலை. சென்ற ஊர்களிலெல்லாம் விடிய விடிய கூத்து நடத்தி மக்கள் மனதில் ஒரு நாயகன் அந்தஸ்த்தில் வாழ்ந்த ஏழுமலை, கால மாற்றத்தால் கூத்தின் மவுசு குறைந்துபோனதால், பெங்களூரில் மூட்டை சுமப்பவனாக இருந்துவிட்டு, அவமானம் சகிக்காமல் மீண்டும் சொந்த ஊர் திரும்பும் இடத்தில் துவங்குகிறது கதை. மொத்தமே ஏழு பக்கங்களுக்குள் அடங்கிவிடும் கதையில் ஏழுமலையின் மார்க்கெட் வாழ்க்கை குறித்தோ அங்கு அவன் சந்தித்த அவமானம் குறித்தோ பெரும் விவரணைகள் ஏதுமில்லை. தன் மகன் வயதொத்த ஒருவனால் ஒருமையில் ஏழுமலை அழைக்கப்பட்ட ஒரு நிகழ்வும் தொடர்ந்து சில குறிப்புகளும் மட்டுமே உண்டு. ஆனால், ஏழுமலையின் மனவலி உணர்த்த அவையே போதுமானதாக உள்ளது. அதேபோலவே ”கூத்து” நடத்திக்கொண்டிருந்த ஏழுமலையின் சுகவாழ்க்கையும் சில பத்திகளில் விளக்கிவிடுகிறார் திரு.பவா செல்லத்துரை.

சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தன் பழைய சகாக்களை சந்திக்கிறார் ஏழுமலை. கதாபாத்திரங்கள் எல்லாரும் கூலிகளாகவும், தரகர்களாகவும் மாறிவிட்டதால், மனம் நொந்துபோய் குடித்துவிட்டு திருப்பிவரும் வழியில் ஏழுமலைக்கு தொலைவில் நடக்கும் கூத்துப்பயிற்சியின் சத்தம் கேட்கிறது. உடம்பெல்லாம் காதுகளாகி, காதே உடம்பாகி சைக்கிளுடன் பயிற்சி நடக்கும் இடத்தை அடைகிறார் ஏழுமலை. அங்கு தப்பும் தவறுமாக நடக்கும் பயிற்சி கண்டு கொதித்து, ஆடி களைத்துவிழும் ஏழுமலையை அவர்கள் அணைத்துக்கொள்வதாக முடிகிறது கதை. திரு. பவா செல்லத்துரையின் வார்த்தைகளில் நீங்கள் ஏழுமலையின் கதையை வாசித்து…. அல்ல அல்ல வாழ்ந்து பாருங்கள்.

“மாப்ள எங்கூர்ல என்னப்பத்தி கேட்டுப்பாத்தா தெரியும், ராசா மாதிரி இருந்தேன், என் போறாத காலம் இவங்கிட்டெல்லாம் ஏச்சுப்பேச்சு வாங்க வேண்டியிருக்கு” எனச்சொல்லும் எல்லாருக்குள்ளும் ஒரு ஏழுமலை இருக்கக்கூடும்.