title


யாருடைய எலிகள் நாம் ?

நடுநிலை என்பது அடித்தவன் பக்கமும், அடிவாங்கியவன் பக்கமும் சரிசமமாய் நின்று பேசுவதல்ல; தரப்புக்கு இருவார்த்தை என்பது தரகுதானன்றி வேறில்லை. எப்பக்கம் சரியிருப்பினும் அது எவர் பக்கம் என்பதைப் பொருட்படுத்தாது, அப்பக்கம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதுமே நடுநிலை. வேறெந்த துறைகளையும் விட அரசியலுக்கே நடுநிலையான பார்வை வெகு அவசியம். காரணம், நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் திசையினைத் தீர்மானிக்கும் அம்சம். அரசின் பெரும்பாலான திட்டங்களை, கொள்கை முடிவுகளை, அதன் பரிமாணங்களை புரிந்து கொள்ள, விருப்பு வெறுப்பின்றி எழுதப்படும் அரசியல் பத்திகள் / கட்டுரைகளை அடிப்படையாக்க் கொள்வது உத்தமம். அவ்வகையில், பெரும்பாலும் நேரடியான அரசியல் கட்டுரைகள் கொண்ட தொகுப்பான “யாருடைய எலிகள் நாம்?” (திரு. சமஸ்) மிகவும் முக்கியமானதொரு புத்தகம்.
*
பேசு பொருளை மையப்படுத்தி இப்புத்தகத்தின் கட்டுரைகள் “தமிழ் அரசியல்”, “கடல்-நிலம்-காடு-சூழல்”, “மொழியும் கல்வியும்”, “சுதந்திரம்-ஜனநாயகம்”, “சாதி, மத, இன அரசியல்”, “பொருளாதாரம்”, “வாழ்க்கை”, “சர்வதேசம்”, “ஓர் ஆட்சி ஓர் ஆவணம்”, ”ஊடகம்” போன்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருப்பினும் அனைத்துக் கட்டுரைகளையும் இணைக்கும் நூலாக அரசியலை சொல்லலாம். மாநில / தேச அரசியல் மட்டுமல்ல. சர்வதேச அரசியலும் கூட. தொகுப்பின் மிகப்பெரும்பாலான கட்டுரைகள் மிக மிக காத்திரமானவை. அவற்றுள் என் மனதுக்கு மிக மிக நெருக்கமானவை ”மொழியும் கல்வியும்” என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் (கல்வி, குழந்தை வளர்ப்பு, பள்ளிகள் குறித்த கட்டுரைகள்).

இந்திரா நூயி vs சுகுமார் சென் ஒப்பீட்டை தேசத்தின் பின்புலத்தில் நிகழ்த்தும் “ நமக்குத் தேவை சுகுமார் சென்கள்” கட்டுரை, கற்றுக்கொள்ளுதலை அட்டவணைப்படுத்தி இயந்திரத்தனமாக்கும் நிலையை மறுத்து, தன் குழந்தைகளுக்கு கற்பித்தலை ஆர்வமுடையதாக்கிய திரு.ரோச் அவர்கள் குறித்த “ஒரு அப்பாவும் இரு பிள்ளைகளும்” கட்டுரை, அதிகமும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கொண்டுள்ள நம் நாட்டில் காலை உணவையும் பள்ளிகளில் வழங்க வேண்டிய அவசியத்தையும் அதற்கு நம் முன் உள்ள வாய்ப்புகளையும் பேசும் “காலை உணவுத் திட்டம்”, அனைத்தையும் போட்டியாக மாற்றிவிட்ட சூழலில் வளரும் குழந்தைகள், தங்கள் மீதான அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை / கொலை செய்வதில் உள்ள பிண்ணனி சொல்லும் “எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள்” கட்டுரை, மாற்றுக் கல்விமுறை என்ற அடிப்படையில், குழந்தைகளுக்கு அதிகபட்ச மகிழ்ச்சி + சுதந்திரத்துடனான கல்வியை சாத்தியப்படுத்தியிருக்கும் “தி ஸ்கூல்” பற்றிய கட்டுரை, விளையாட்டுத்துறையில் நம் நாடு அடைந்த வீழ்ச்சியின் காரணங்களை அலசும் “வேடிக்கை விளையாட்டு”, அரசுப்பள்ளிகளின் தேவையையும் வீழ்ச்சியையும் கவனப்படுத்தும் “அரசுப்பள்ளிகள் படுகொலை யார் காரணம்?” எனும் கட்டுரை, இப்படி இத்தலைப்பின் எல்லாக் கட்டுரைகளும் பெரும் முக்கியத்துவம் மிக்கவை. அதே அளவு கணமும், முக்கியத்துவமும் கொண்டவை பிற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளும்.

இத்தொகுப்பின் கட்டுரைகள் பெரும்பாலும் 2004-2014 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அக்காலகட்டத்து ஆட்சியாளர்களின் நிலைப்பாடுகளை, அரசியல் நகர்வை பகுத்தாய்பவை. இன்று இத்தொகுப்பை வாசிக்கும்போதும் இக்கட்டுரைகள் இன்றைக்கும் பொருந்துபவை என்பது சோகம்தான்.

இத்தொகுப்பின் கட்டுரைகளுக்கும் பல்வேறு புள்ளிவிவரங்கள் / தரவுகள் ஆதாரமாக இருப்பினும், எழுதியுள்ள திரு.சமஸின் மனசாட்சியின் குரல் இது என்பது அதைவிட முக்கியம். அக்குரல் சாமானியன் வாழ்வின் பக்கம் நின்று சமகால அரசியலை பேசுகிறது. ஒரு காலகட்டத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கும் புத்தகம் என இதை தயங்காமல் சொல்லலாம்.
*
யாருடைய எலிகள் நாம் ? – சமஸ் – துளி வெளியீடு