title


கலை இரவு 2012


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் அவிநாசி கிளை நடத்திய “கலை இரவு 2012” மிக இனிதே நடந்து முடிந்தது. நேற்று (12-மே-2012) மாலை 6:30 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சிகள் இன்று (13-மே-2012) அதிகாலை 2:15 மணியளவில் முடிந்தன. நான் முழு நிகழ்ச்சியையும் (இரவு உணவு உண்ணப்போன 30 நிமிடங்கள் நீங்கலாக) கண்டுகளித்தேன். என்னுடன் அப்பா 10:30 மணியளவில் இணைந்து கொண்டார்.

ஏறத்தாழ 8 மணி நேரம் இடைவிடாத கலை நிகழ்ச்சிகள். அருகி வரும் அழிந்து வரும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளான கரகம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் இவற்றுடன் நாதஸ்வர கச்சேரி, கீபோர்டு இசை, கிராமிய நடனம் இவைகளும் உண்டு. எல்லாவற்றையும் விட சிறப்பான தலைப்புகளில் “உரைவீச்சு”. பேசவந்த இருவரில் ஒருவர் என் மனம் கவர்ந்த பேச்சாளர் ”பாரதி கிருஷ்ணகுமார்”. போதாதா….. நிகழிடமான அவிநாசி-வ.வு.சி திடலை ஆறு மணிக்கே சென்றடைந்தேன்.
முதல் நிகழ்வாக “ நாதஸ்வர கச்சேரி” சிறப்பாக நடந்தது (எனக்கு ”இசை” அப்படின்னா மனசுக்கு புடிச்ச சத்தம் என்பது மட்டும்தான் தெரியும். ஸ்வரமெல்லாம் சுத்தம். அதனால இந்த ஏரியாவ “Choice” ல விட்டுடலாம்). அதைத் தொடர்ந்து வரவேற்புரைகளும் வாழ்த்துரைகளும். (எல்லா மேடைகளைப் போலவே), பலமுறை 2 நிமிடம் என கேட்டுக் கொண்டபின்பும் பெரும்பாலான “வாழ்த்துரைகள்” 5 நிமிடத்துக்கு மேலான பின்பே முடிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து தப்பாட்டம், கரகாட்டம், கீபோர்டு இசை, பாட்டு, கிராமிய நடனம் என இரவு 10 மணிவரை நிகழ்ச்சிகள் களைகட்டின. இடையிடையே 10 மணிக்கு வருவதாகச் சொன்ன அப்பாவுக்கு தொலைபேசிக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் பத்து மணியளவில் பேச இருந்தவர் “திரு. பாரதி கிருஷ்ணகுமார்” அவர்கள்.

நான் இதற்கு முன்பு இருமுறை திரு. பாரதி கிருஷ்ணகுமார்” அவர்கள் பேசிக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை எழுத்தாளார் “திரு.சாரு நிவேதா” அவர்கள் நூல் வெளியீட்டு விழாவில். அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றாலும் “youtube” ல் வீடியோவைப் பார்த்தேன். அந்த முதல் பேச்சிலேயே என்னை மிகவும் கவந்த பேச்சாளராகி விட்டார் திரு. பாரதி கிருஷ்ணகுமார்” அவர்கள். அதில் கொஞ்சம் நகைச்சுவை கலந்து சமூக அவலங்களை பட்டியலிட்டு மிக நல்ல உரை நிகழ்த்தியிருந்தார். இரண்டாம் முறை நான் கேட்டது கவிஞர் திரு.மனுஷ்ய புத்திரன் நூல் வெளியீட்டு விழாவில். அதில் திரு.மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி மிக அற்புதமாகப் பேசியிருந்தார். ஆக அவரது பேச்சு என்னை கட்டிப்போட்டது. ( இங்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும், ”கலை இரவு 2012” அழைப்பிதழ்களில் இருந்த “உரைவீச்சு- திரு. பாரதி கிருஷ்ணக்குமார்” என்ற வரிகள்தான் நான் இந்த கலை இரவுக்கு சென்று ரசிக்க காரணமாய் இருந்தன). அவரது பேச்சு சிறப்பாய் இருக்குமென எனக்குத்தெரியும்; அதை அப்பா கேட்கவேண்டுமென விரும்பினேன்.

ஒருவழியாக அப்பா பத்தரை மணியளவில் வந்தார். அப்போதுதான் பேசத்துவங்கி இருந்தார் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள். ஆவேசமான பேச்சு. எடுத்துக்கொண்ட தலைப்பு “உண்மை நின்றே தீரும்”. உண்மையை தர்மாவேசத்தோடு பேசினார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு திருப்தி தந்த உரை. இடையிடையே அப்பா எப்படி ரசிக்கிறார் என்பதையும் கவனித்து வந்தேன். அதற்கு அவசியமேயில்லை என்பது போல இறுதியில் அப்பா சொன்னார் “கலக்கிட்டாரு”. ஏறத்தாழ 50 நிமிடங்கள் உரை மழை பொழிந்தார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் கரகாட்டம், ஏணியில் கரகம், கோலாட்டம், தப்பாட்டம், “அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் உரைவீச்சு என நேரம் போனதே தெரியாமல் திளைத்திருந்தேன். இறுதியாக ஒயிலாட்டத்துடன் நிகழ்ச்சி முடியும்போது மணி அதிகாலை 2 ஆகியிருந்தது. எனக்கும் சரி அப்பாவுக்கும் சரி பரம திருப்தி மற்றும் ஆனந்தம். இன்றைய நிகழ்வின் மறக்கமுடியாத இன்னுமொரு சிறப்பு நான் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் கையொப்பம் (ஆட்டோகிராப்-புங்கோ..) பெற்றேன்.

வாழ்க்கை மிகவும் அழகானது !