title


முதல் ஆசான்

என்னுடைய வாழ்வில் நான் முதன்முதல் சந்தித்த ஆசிரியர் (ஆசிரியராக இருந்த என் தாய்மாமாவைத் தவிர்த்து..) திரு. மாரிமுத்து அய்யா அவர்கள். நான் பார்த்த முதல் பகுத்தறிவுவாதியும் அவரே. எங்களூர் பள்ளியின் நான்காம் வகுப்பு ஆசிரியர். அய்யாவின் மனைவியும் (அவரது பெயர் எனக்கு மறந்துவிட்டது. “பாலம்மா” என்பதாக நினைவு) எங்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு ஆசிரியை.

தூய வெள்ளை வேட்டி, கறுப்புசட்டை, கறுப்புக்கண்ணாடி போட்டு “Hero Honda CD100” வண்டியில் (வண்டி நிறமும் கறுப்புதான்) முறுக்கிவிட்ட வெள்ளை மீசையுடன் அவர் வருவதைப் பார்த்தாலே பயமாக இருக்கும், அவர்பற்றி அறியாதவர்களுக்கு. சொல்பேச்சு கேட்காத மாணவர்களை அவர் அடி பின்னிவிடுவார். என்றபோதிலும், அடுத்த நிமிடமே அதை மறந்தும் விடுவார் என்பதால் அவரைக் காலையில் காணும்போது அனைவருக்கும் உற்சாகமே மேலிடும்.

அய்யாவுக்கு குழந்தைகள் இல்லை. அனைத்து மாணவர்களையும் அவர் “மாப்பிளே” என்றுதான் அழைப்பார். மாணவிகளை “பாப்பா” என்றழைப்பார். அவர் கேள்விகள் கேட்கும்போது கூட “மொத வரிசைல மூணாவது மாப்பிளே பதில் சொல்லு”, “நாலாவது வரிசைல கடைசி பாப்பா பதில் சொல்லு” எனும் ரீதியில்தான் அழைப்பார்.

ஒருவன்மீது கடும் கோபத்திலிருந்தால் மட்டுமே அவனை பெயர் சொல்லி கூப்பிடுவார். அப்போதெல்லாம் அய்யா ஒருவனை பெயரைச்சொல்லி கூப்பிட்டுவிட்டால் அது அவனுக்கு பெருத்த அவமானமாக கருதப்பட்டது. மீண்டும் அவனை அய்யா “மாப்பிளே” என்றழைக்கும்வரை அவனை கிண்டல் செய்தே கலங்கடித்துவிடுவோம்.

முன்னமே சொன்னதுபோல் அதிதீவிர பகுத்தறிவுவாதி, நான் என் நினைவறிந்து ஒரு நாள் கூட அவர் கறுப்பன்றி வேறு நிறத்தில் சட்டை அணிந்து பார்த்ததில்லை. என்றபோதிலும் ஆச்சரியத்திலும் ஆச்சர்யமாக கடவுள்குறித்த வசைகளை அவர் பொழிந்ததேயில்லை. “பல நாடுகள்ல பசில எல்லாரும் சாகுறாங்கல்லப்பா அவங்களை காப்பத்தகூடவா கடவுளுக்கு சக்தியோ புத்தியோ இல்ல” என்பதான மிக மென்மையாக விமர்சனங்களை மட்டுமே செய்துள்ளார். அதுவும் அரிதாக. மிகவும் தமிழ்ப்பற்று மிக்கவர் கூடுமானவரையில் தமிழில் மட்டுமே பேச வேண்டுமென்பது அவர் கடுமையாக கடைபிடித்த நியதிகளுல் ஒன்று. அனைவரிடமும் மிக மிக மரியாதையாக பேசுவார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக சாதி, மத, பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாமல் எல்லாரிடமும் ஒரேபோல் பழகுவார்.

அவரிடமிருந்து நான் பாடத்தை தவிர நல்ல பல விசயங்களைக் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்பது தெரியாமலேயே அவருடனான என் தொடர்பு முடிந்து போனது. நான் வளர்ந்து மேல்நிலைக்கல்வி, கல்லூரி படிப்பெல்லாம் முடித்து இப்போது பணியிலிருக்கின்றேன். சமீபத்தில் எதேச்சையாக அய்யாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அப்பா அய்யா அவர்களின் மறைவைப் பற்றி சொன்னார். சட்டென்று ஒரு வெறுமை படர்ந்தது.

உள்ளூரிலேயே பள்ளி இருந்தும் நான் ஒருமுறை கூட அவரை சென்று பார்த்ததில்லை என்பது என்னை மென்மேலும் காயப்படுத்துகிறது. குறைந்தபட்சம் சில சந்திப்புகள் மனம் நிறைந்த நன்றி என எதையும் செய்யாமல் விட்ட மடமை இன்னும் இன்னும் உறுத்துகின்றது. நிழலின் அருமை இப்போதுதான் புரிகின்றது. அன்புக்குரிய அய்யாவுக்கு உங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களுல் ஒருவனது அஞ்சலி.