title


அன்பின் ஆதிரா

அன்பின் ஆதிரா,

இந்தக் கடிதத்தை எப்படித்துவக்குவது என்றே அறியாமல் துவக்குகிறேன். நீ என்னை தவிர்ப்பதாய் உணர்ந்த கணத்தில் விழுந்தது இந்த கடிதத்திற்கான வித்து.

என்னையறியாமல் நான் சேமித்து வைத்துக் கொண்ட நினைவுகள், ஞாபக அடுக்கிலிருந்து ஒவ்வொரு கணமும் மீண்டெழுகின்றன. ஒற்றை ஆயுளுக்கான ஒட்டுமொத்த சுமையையும் இப்போது உணர்கிறேன். இதில் உன் பிழையென்று எதுவுமில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இது நான் விரும்பிச்செய்த பிழையல்ல என்பதும். என்றாலும், இந்தப் பிழைக்கு தண்டனை நீ என்னை தள்ளிவைப்பது என்றால் அந்த வலியை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லாதவன் நான்.

உன் அருகாமையை யாசிக்க எந்த ஒரு உரிமையும் அருகதையும் எனக்கில்லை என்பதை நான் நன்கறிவேன். அதைப் போலத்தான் உன்னுடைய கனவு வாழ்க்கையில் கல்லெறிவது எவ்விதத்திலும் அறமல்ல என்பதும். என்ன செய்ய, புத்திக்கு புரியும் எல்லாமும் மனதுக்கும் புரிந்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் சந்தோசமாய் இருந்திருப்பேன். ஒன்று மட்டும் நிச்சயம், என்னை விட்டு நீ விலகி விலகிச் செல்லும் ஒவ்வொரு அடியிலும், மேலும் மேலும் நினைவால் சூழ்கிறாய்.

உனக்கே தெரியும், என்னுடைய இந்த வலியை, என்னுடைய சுமையை உன்னையன்றி வேறு யாரிடமும் என்னால் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாது. நள்ளிரவில் ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் பைக் ஓட்டும்போது பாதையை மறைக்கும் கண்ணீர் துளிகளுடன் பயணம் செய்த அனுபவம் உனக்கிருக்கிறதா ? நேற்று வரை எனக்கும் அந்த அனுபவம் இல்லை.

உன்னிடமிருந்து எனக்கான சில சொற்களை எதிர்பார்த்து எதிர்பார்த்தே ஏமாறுகின்றேன் ஒவ்வொரு நாளும். ஒரு எளிய மனதின் அன்பை புரிந்துகொள் என்பதை மட்டுமே உன்னிடம் சொல்ல எண்ணுகிறேன். இந்தக்கடிதத்தின் ஒரு சில சொற்களாவது (என்னைப் போல் இல்லாமல்) உன் காலடி அடையும் என்ற நம்பிக்கையுடன்….


  -    நான்.

தொடுவான் தூரம்

பகிந்துகொள்ள யாருமேயில்லாமல்
ஒவ்வொரு கோப்பைத் தேநீரையும்
தனியே அருந்துகிறேன்…

கேட்பதற்கு யாருமேயில்லாத
கவிதைகளை
என்னிடமே மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொள்கிறேன்

இணைந்து வர பாதங்கள் இல்லாத
ஒரு பயணம்
எப்போதும் போகிறேன்…

சாய்ந்து அழ தோள்களில்லாமல்
விழி நீர் துடைக்கும் கரங்களில்லாமல்
ஒரு பெருந்துக்கம்
நானே விழுங்கி
என்னுள்ளே செமிக்கிறேன்

மொத்தத்தில்...

ஒருபோதும் நெருங்கமுடியாத
அடிவானம் நோக்கியே
அத்தனை அடிகளையும்
எடுத்து வைக்கிறேன் :(

முகாரி

ஒரே சூரியன்
சுட்டெரிக்கிறது
மொத்த பூமியையும்

ஒரே நிலவு
குளிர்விக்கிறது
மொத்த வெப்பத்தையும்

ஒரே ஒருத்திதான் நீயும்...
எரிந்து கொண்டே
குளிர்கின்றேன் நான் !
*

நீ அறியாமல்
உன் நிழலைத் தீண்டி
மோட்சமடைகின்றன
கல்லும் மண்ணும்
மரம் செடி கொடிகளும்

அப்படியே இருந்துவிட்டுப்
போகிறேன் நானும்...

உயிர் வளி

எட்டாவிட்டாலும்
நிலவைப் பார்த்தே சோறுண்ணும்
குழந்தையைப் போலவே

உன்னைப் பார்த்தே
ஒட்டிக்கொள்கிறேன் வாழ்க்கையை
நான் !
*

எல்லோரையும்போல்தான் நீயும்
ஆக்சிஜனை சுவாசிக்கிறாய்

முடிவில்
எனக்கான ஆக்சிஜனை
வெளியிடுகிறாய்

அறிவியல் மறுக்கும்
அதிசயம் நீ
*

ரசவாதி

அதிகாலை கோலமிட
வாசல் தெளிக்கிறாய்…
சாணிக் கரைசல் மணக்கிறது
சந்தனக் கரைசலாய்
*

8 புள்ளி 16 வரிசை என கணக்கிட்டு
விரல்களிடையே வழிய விடுகிறாய்
கோலமாவை
மண்ணில் எழுந்து வந்தது
சர்க்கரைப்பந்தல்
*

ஆங்கிலத்தில்
உன் விரல் வரையும்
எழுத்துக்களை மொய்க்கிறேன்
சர்க்கரை கண்ட எறும்பாக

அழகு தமிழ் நீ எழுத
ஆகிறேன் நான்
தேனீயாய் !

பித்தன் மொழி

ஒற்றை வளையணிந்தவை
உன்னுடைய மென்கரங்கள்
மணிகளே இல்லாதவை
உன் பாதக்கொலுசுகள்
இருப்பினும்
பித்தேறி உணர்கிறேன்
மெல்லிசையை
உன் அசைவில்…
*
எதேச்சையாகவாவது சற்றே
மெய் தீண்டு
இல்லையென்றால்
மலரிதழ் விரித்து தானமிடு
எனக்கான சில சொற்களை
அதுவும் ஆகாதென்றால்
ஓர விழியிலாவது அனுப்பு
ஒரு பார்வையை
எதுவும் முடியாதென்றால்
பேசாமல் அருகே இரு.
உன்னைத் தழுவி வரும்
காற்றில் குளித்து
சொஸ்த்தப்படுத்திக் கொள்கிறேன்
என்னை…

யாசகன்

இருட்டில்
உன் பெயர் சுமந்து ஒளிறும்
கைப்பேசி காண்கையில்
முழு நிலவு கண்ணுறும்
குழந்தையாகிறேன் நான்
*

ஆயிரமாயிரம் சொற்கள்
அகழ்ந்தெடுத்தும்
எதுகை மோனை தளை
சீர் தூக்கிப் பார்த்தும்
மனம் நிறைய காதலை சுமந்திருந்தும்
வாய்க்காமல் போகின்றது
ஒரு கவிதை….

ஆனால் நீ உன்
ஒற்றைப் புன்னகையில்
தானமிட்டுப் போகின்றாய்
ஓராயிரம் கவிதைகளை….

பன்னீர் மீன்கள்

எந்தக் கடற்கரை போனாலும்
கால் நனைத்து விடாதே

பாவப்பட்ட மீன்கள்
இன்னும் பழகவில்லை
பன்னீரில் வாழ ….

*

நுனிநாக்கை கடித்துக்கொண்டு
சாய்ந்து நீயெழுத்தும்
ஒவ்வொரு எழுத்தும்
ஆங்கிலமேயானாலும்
உயிர் கொண்டலையும் மெய் எழுத்துக்கள்….

நிமிர்ந்து என்னை நோக்கி
நீ சிந்தும் புன்னகையில்
முற்றிலும் சாய்ந்து
விழுகின்றேன் நான்….

*

மண் உணர்ந்த கலைஞன்

வாரத்தின் பெரும்பாலான நாட்கள் அலுவலகம் செல்வது பேருந்தில்தான். பூண்டியிலிருந்து அன்னூர் வரை ஒரு பேருந்து பின்னர் அங்கிருந்து சரவணம்பட்டிக்கு ஒரு பேருந்து என எப்படியும் (போக & வர) இரண்டரை மணி நேரங்கள் ஆகிவிடும். இந்தப் பயணங்களில் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது வாசிப்பைத்தான். பயணங்களில் வாசிப்பு என்பதால் பொதுவாக படிப்பதற்கு சற்று இலகுவான புத்தகங்களை தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். அப்படி தற்சமயம் நான் வாசித்துக்கொண்டிருக்கும் அற்புதமான புத்தகம் “எல்லா நாளும் கார்த்திகை”. (இந்தப் புத்தகம் பற்றி விரிவாக மற்றொரு நாள் பேசலாம் இப்போதைக்கு இது ஒரு சிறுகுறிப்பு மட்டுமே)
**

பூண்டியில் பேருந்து ஏறிய உடன் கோணங்கியைப் பற்றிய பவா. செல்லத்துரை அவர்களின் நினைவுகளை படிக்கத் துவங்கினேன். ஏற்கனவே திரு.கோணங்கியைப் பற்றிய ஜெயமோகன் பதிவுகளைப் படிந்திருந்த காரணத்தால் அவரைப் பற்றிய ஒரு மெல்லிய சித்திரம் மனதில் இருந்தது. பவா அவர்களின் பதிவு அந்தக் கணிப்பை மேலும் உறுதி செய்வதாக இருந்தது. அதிகம் பேச விரும்பும் வயதானவர்களோடான உரையாடல்களுக்கு முக்கியத்துவம் தருபவராக இருப்பவர் கோணங்கி. அவரது வருகை அவ்விடம் இருக்கும் வயதானவர்களுக்கு ஒரு தேவதூதனின் வருகையாக மட்டுமல்லாது ஒரு ஆத்ம நண்பனின் வருகையாகவும் தெரியக்கூடும். உதாரணத்துக்கு, தன் தகப்பன் தோள்பட்டையில் அவரது உற்ற நண்பன் பெயர் பச்சை குத்தியிருக்கும் என்பதை கோணங்கி சொல்லி பவா தெரிந்து கொள்ளும் சம்பவம் ஒன்று போதும். கூட்டுறவு சொஸைட்டி வேலையை உதறித்தள்ளிவிட்டு கோனங்கி ஒரு தேசாந்திரியாக சுற்றத்துவங்கின கதை, பிறக்கப்போகும் குழந்தையைப் பார்க்க கை நிறைய கருப்பட்டி மிட்டாய் சுமந்து வந்தது, எதிர்பாரா தருணத்தில் எதிர்பாராத வீச்சாய் நிகழ்த்திய உரை என கோணங்கியைப்பற்றிய பதிவுகள் எல்லாமுமே அழகானவை.

ஒரு அதிகாலையில் கிணற்றில் நீந்திக்கொண்டிருக்கும் வேலா (எழுத்தாளர் வேல ராமமூர்த்தி என நினைக்கிறேன்) “இந்நேரம் கோணங்கி இங்க வந்தா எப்படி இருக்கும் ?” எனக் கேட்டு முடிக்க. இரவெல்லாம் பயணம் செய்திருந்தாலும் அந்த களைப்பின்றி ஒடி வந்துகொண்டே சட்டையைக் கழற்றியபடி கிணற்றில் கோணங்கி குதிக்கும் சம்பவம் ஒரு அழகான கவிதை.
**

நீண்ட நாட்களுக்கு பின் நாசி உணர்ந்தது மண்வாசத்தை. நம்ம முடியாமல் கோணங்கியிலிருந்தும் பவா விடமிருந்தும் மீண்டு நிமிர்ந்து பார்த்தேன். பேருந்து கருவலூரை நெருங்கிக்கொண்டிருந்தது. பல மாதங்களுக்கு பின்னர் கண்ணெதிரே மழையைப் பார்த்தேன். மனதில் ஓடி வந்து கிணற்றில் குதித்த கோணங்கியின் சித்திரம் எழுந்தது.

வாழ்க்கை இனிதானது.

இந்த நாளுக்கான மகிழ்ச்சிக்கு பல நன்றிகள் பவா..

கானல்

மோனத்தவம் கலைத்த
தன் முதல் ஓவியத்தில்
தன்னையே கருவாக்கினாள் ஆதிரா

கட்டிவைத்திருந்த
தளைகள் அறுத்து
பறக்க எத்தனிக்கும்
ஒரு தேவதையின் பிம்பம் அது

கட்டுகளின் தழும்பு மறைக்கும்
நீண்ட வெண் அங்கி…
ஆதிராவை நகலெடுத்து ஒளிர்ந்தது

தங்கத்தூரிகைகள் கோர்க்கப்பட்ட கிரீடம்
மோட்சமடைந்தது
தேவதையின் தலையை அடைந்து

தன் ஆழ் மன ஆசைகளின்
சாறெடுத்து
நெடுந்தூரம் கடக்கும் சிறகுகள் வரைந்தாள்

பறக்கத் துவங்கிய தேவதையின்
நிம்மதிப் பெருமூச்சால்
தூ(து)க்கத்தில் சிரித்துக்கொண்டாள் ஆதிரா…

(தே)வதை

தொடர்ந்து பேசுபவள் அல்ல நீ
பொறுமையை சோதிக்கும் இடைவெளிவிட்டு
தவம் பூர்த்தியடைந்த
சொற்களுக்கு மட்டுமே மோட்சமளிப்பாய்

குழலினிது… யாழினிது…
என்பேன்
உன் முதல் சொல் கேட்கும்வரை…
**

உன் ஸ்பரிசம் தாங்கிவரும்
கையெழுத்தின் வளைவுகளில் நான்
சிக்கிக்கொள்வதுகூட புரிகிறது எனக்கு

நீ அனுப்பும்
குறுந்தகவல் எழுத்துக்களிலேயே
பித்தேறி நிற்கும்
என் எளிய மனதை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறேன் நான் ?

கண்ணீர்த் தூரிகை

தாளின் நிறமே உமிழ்கிறது
எனக்கான தூரிகை

வெறும் காற்றில்
விரலாலே வரைந்து போகிறேன்
என்னுடைய தடங்களை

யாருமறியாமல் என்னுள்ளே
புதைக்கின்றன என்னுடைய ஓவியங்கள்…

செரிக்க மறுத்து
திமிறி எழும் சித்திரங்கள்
பின்னிரவில் வெளிப்படும்
தலையணை நனைக்கும்
கண்ணீராய் !

விழல் நீர்

எவரிடமாவது நீ பேசிக்கொண்டே
ஓர விழியால் என்னைப் பார்க்கும்போதெல்லாம்
பட்டாம்பூச்சி பிடிக்க ஆசைப்பட்டு
விரலில் படிந்த வண்ணத்துடன்
சமாதானமடையும் குழந்தையாகிறேன் நான்…
வான் போல இருக்கிறாய் நீ
உன்னைத் தீண்ட நான் எறியும்
கவிதைகளெல்லாம்
மீண்டும் மீண்டும் என் முற்றத்திலேயே
விழுகின்றன
சேர்த்து வைத்த சொற்கள்தான் பாரம்…
தாங்க முடியாமல்
உன்னுடன் பேசுவதற்கான
எல்லா வார்த்தைகளையும்
என்னுள்ளே பேசிப் பேசி எரிக்கிறேன்
அன்பே…
நிழலை மட்டும் தீண்டி
சுகித்திருப்பவன் காதலை
அந்த நிழலும் கூட அறிவதில்லை !

வாழ்வில் நூறானந்தம் - 1

வாழ்வில் நூறானந்தம்

”தந்தானானே தானானே ஆனந்தமே…
தந்தானானே தானானே ஆனந்தமே…”

மிக மெல்லிய இசையுடன் துவங்கும் இந்த வரிகளை கேட்குந்தோறும் ஒரு கனவு வாழ்க்கையின் சித்திரம் என் மனதில் எழும். இந்தப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான சம்பவம் இப்போதும் நினைவில் நிற்கிறது. அப்பாவுடன் அனு அக்காவும் நானும் ஒரு விழாவுக்காக கோவை சென்றிருந்தோம். ஊருக்கு திரும்பும் வழியில் பொருட்கள் வாங்குவதற்காக டவுன் ஹாலில் இறங்கினபோது, அக்காவுக்கு பிடித்த சைடு கிளிப்பை டவுன் ஹாலில் இருந்த எல்லா பேன்சி கடைகளிலும் தேடி, ஒரு வழியாய் வாங்கி கடைசி பஸ்ஸில்தான் பூண்டி வந்தோம். இந்த மாதிரியான விசயங்களில் அப்பா எப்போதும் இப்படி மெனக்கெடுபவர் இல்லை. ( அதே நாளில் நான் கேட்ட ரப்பர் பந்துக்கு அப்பா காட்டிய Reaction அதற்கு ஒரு உதாரணம்). வீட்டுக்கு வந்து துக்கமும் தூக்கமுமாக நான் பார்த்த பாடல் இந்தியன் திரைப்படத்தில் வரும் “பச்சைக்கிளிகள் தோளோடு”. அந்தப்பாடலில் கப்பல் விடும் காகிதங்கள் தீர்ந்து போய் அழும் மகளை சமாதானப்படுத்த, தகப்பன் தன் சட்டைப்பையிலிருக்கும் பணத்தில் கப்பல் செய்து விடும் காட்சியில் நான் அன்னிச்சையாய் திரும்பிப் பார்த்தேன். அக்கா தூங்கிக் கொண்டிருந்தாள்.

பின் எப்போது அந்தப்பாடலை கேட்டாலும் என் மனதில் கோவை டவுன் ஹாலில் நாங்கள் சுற்றிய அந்த இரவுதான் நினைவில் எழும். நாளாக நாளாக பாடல் வரிகளின் அழகிற்காய் அந்தப்பாடல் மனதில் நிலைத்துவிட்டது. சில வாரங்கள் முன்பு, அந்தப்பாடலை பார்த்துவிட்டு, நான் Shaving செய்து கொண்டிருக்கும் போது “கிருத்திகா” (அந்தப்பாடலில் வரும் கஸ்தூரியை நகலெடுத்து) எனக்கு Shaving செய்ய முயன்றது சமீபத்திய கவிதை. என் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்புவதும் எனக்கான வாழ்வும் இதுதான் - “உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம்”

https://www.youtube.com/watch?v=HcLjkBdzunY

**

”நானெல்லாம் படம் வந்தப்பவே பார்த்தாச்சு….”
“என்னண்ணா, காந்தி செத்தாச்சா? ன்னு கேட்கறமாதிரி கேட்கறீங்க…”
“யோவ் சும்மா புளுகாத நீயெல்லாம் எப்பயோ பாத்திருப்ப”

ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான கேள்விகளால் (கேலிகளால் ??) என்னை கேவலப்படுத்திக்கொண்டிருந்தது “Rab Ne Bana Di Jodi” என்ற ஹிந்திப்படம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது. 2008ல் வெளிவந்த படத்தை சொல்லிவைத்த மாதிரி என்னைத்தவிர எல்லோரும் பார்த்திருந்தார்கள். எனக்கு ஆங்கிலமே அரைகுறை; ஹிந்தி அத்தனையுமே குறை என்ற வரலாறை சொல்லியும் அதான் சப்டைட்டில் இருக்கே என விடாது கறுப்பாய் வந்து விழுந்தன கேள்விகள். சரி இனி அந்த இந்தியை கடவுள்தான் காப்பாத்தணும் என குலதெய்வம் மீது பாரத்தை போட்டுவிட்டு ஒரு வழியாய் சென்ற வாரத்தில் அந்தப்படம் பார்த்து முடித்தேன். இதோ இந்த வாரம் மீண்டும் ஒரு முறை பார்த்தாகிவிட்டது. மிகவும் இலகுவான கதைதான் ஆனால் அதை சொன்ன விதத்தில் இருக்கிறது மேஜிக்.

தன் ஆசிரியருடைய பெண்ணின் (அனுஷ்கா ஷர்மா) காதல் திருமணத்துக்கு செல்லும் ஷாருக் மணப்பெண்ணை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஒரு தவிர்க்க இயலா சூழ்நிலையில் அந்தப்பெண்ணையே திருமணமும் செய்துகொள்கிறார். இழந்த காதலின் வலியால் கணவன் மீது எந்த விருப்பும் இல்லாத அனுஷ்காவுக்கு, மனம் நிறைந்த காதலை வெளிக்காட்ட இயலாமல் தவிக்கும் ஷாருக்மீது எப்படி காதல் வருகிறது என்பதுதான் (மிகசுருக்கமான)கதை. ஆண்-பெண் உறவுகளின் சிக்கலை, காதல் மலரும் நுட்பத்தை கொஞ்சம் சறுக்கினாலும் தவறாகிவிடும் திரைக்கதையில் அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா சோப்ரா. மிகவும் சிம்பிளான ஒரு Romantic படம்தான். அதனாலேயே மிகவும் பிடித்திருந்தது.

சிம்பிளா இருந்தாலும் காதல் க்ரேட்தானே :)
**
”அய்யா நாஞ்சில் நாடனே… நீயிருக்கும் திசை நோக்கி மானசீகமாக வணங்குகிறேன்” முன்னொருமுறை படித்த புத்தகத்தின் அந்த வரிகள் இன்றும் மனதில் நங்கூரமாய் இருக்கிறது. தான் இலக்கில்லாமல் ஒரு உதவாக்கரையாய் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் தான் வாசித்த ஒரு சிறுகதை தனக்கேற்படுத்திய அதிர்வுகள் குறித்த இயக்குனர் திரு.பாலா அவர்களின் பதிவுதான் அது. புத்தகத்தின் பெயர் “இவன்தான் பாலா”.

பிறந்த நாள் தொட்டு எவ்வித அறிவுரைக்கோ, அன்பிற்கோ செவி சாய்க்காமல் இருந்த ஒரு முரட்டு மனிதனின் வாழ்வை மாற்றிடும் முதல் அடியை திரு.நாஞ்சில் நாடன் எடுத்துக்கொடுத்தது தன்னுடைய “இடலாக்குடி ராசா” சிறுகதை மூலமாக.

மனவளர்ச்சி குன்றிப்போன ராசாக்கு இடலாக்குடி ஒன்றும் சொந்த ஊரல்ல; அவனுக்கு சொந்த பந்தம் கூட யாருமில்லை. தன் வயிற்றுப்பசிக்கு ஊரார் அன்பை வேண்டி நிற்கும் ஒரு ஜீவன். எப்போதும் பழைய சோறோ, பழங்கஞ்சியோ மட்டுமே உண்ணக் கிடைக்கும் ராசாவுக்கு ஒரு கல்யாண விருந்தில் இடம் கிடைக்கிறது. அந்நிலையிலும் தன் சுயம் விட்டுத்தராதவனாக சித்தரிக்கப்படும் ராசாவின் கதையை நீங்கள் “நாஞ்சில் நாடனின்” சொற்களில் வாசிக்க வேண்டும்; அது ஒரு அற்புதம்.

http://azhiyasudargal.blogspot.in/2011/01/blog-post_21.html

ஒரு கதையின் வலிமைக்கு, இலக்கியத்தின் வலிமைக்கு உதாரண சிறுகதைதான் “இடலாக்குடி ராசா” ( நாஞ்சில் நாடன் கதைகள் முழுத்தொகுப்பு - தமிழினி பதிப்பகம். )

பெரு வலி

அனல் வீசும் கோடையில்
சிறகெரிந்த பறவைக்கு அடைக்கலமானது
ஆதிரா வரைந்த மரம்…
அகம் மகிழ்ந்து
அவள் கைகளில் அணிவிக்கப்பட்டன
தங்க வளையல்கள் !
*
பின்பொரு வாடைக்காற்றில்
உயிர் நடுக்கம் போக்கியது
ஆதிரா உயிர்ப்பித்த ஆதவன்…
தங்கக் கொலுசு இரண்டை
அவள் பாதத்தில் அணிவித்து
செலுத்தப்பட்டது காணிக்கை !
*
அழுது கொண்டிருந்த குழந்தையை
ஆதிராவின் தூரிகைத்தாய்
தாலாட்டிய நன்நாளில்
அவள்தான் கலையரசி என்று
சூட்டப்பட்டது பொற் கிரீடம்.
*
தன் கலையை மறந்துபோக
காரணங்கள் கிடைத்த நாளில்
விலங்காய் மாறின
வளையல்களும் கொலுசுகளும்
முள் முடியானது பொற் கிரீடம்
*
இறுதியாய் அவள் வரைந்த
அன்னை மேரி கண்களில்
இன்னமும் வழிந்து கொண்டிருக்கிறது
ரத்தக் கண்ணீர் !

நீ ஒரு காதல் சங்கீதம்-3

Part 1    Part 2
மருந்தீஸ்வரர் கோவில், தியாகராஜா திரையரங்கம், கூட்டமில்லா கடற்கரை, பஸ் டிப்போ…. இவையெல்லாவற்றையும் மறந்து திருவான்மியூர் என்றவுடனே ”டைட்டல் பார்க் ரயில்வே ஸ்டேசன்” மட்டுமே நினைவுக்கு வரும் இரண்டு ஜீவன்கள் உண்டு சகியே. ஒன்று நான், இன்னொன்று என்னை நானாக்கிய நீ.
***
”இங்க பாரு இன்னைக்கு முடியாது. நெறைய வேலை இருக்கு. பத்தாததுக்கு weekend வேற, ஊருக்கு போகணும். நேத்து தானடா பாத்தோம், இப்ப மறுபடியும் பாக்கணும்னா என்ன அர்த்தம்?”.
சகியே நீ கோவத்தில் பேசினாலும் மெல்லிய புல்லாங்குழலின் இசை எழுகிறது.
“அப்படியில்ல மா. த பாரு, நேத்துக் கூட சாப்பிட்டோம். மறுபடியும் இன்னைக்கும் பசிக்குதுல. அப்படித்தான் இதுவும்” எப்படியும் வந்துவிடுவாய் எனத்தெரியும் இருந்தாலும் கொஞ்சம் கெஞ்ச வைப்பாய். இந்த கொஞ்சலும் கெஞ்சலும் இல்லாமல் பிறகென்ன காதல்?
”இப்படி வக்கனையா மட்டும் பேசு. வேறொன்னனும் தெரியாது” கோபம் குறையாதது வார்த்தைகளில் மட்டும்தான். அப்போது உன் இதழ் மென்புன்னகை சிந்தியிருக்குமென்பதை நானறிவேன்..
“பேச்சுதானே மாமானோட வீச்சு. சரி சொல்லு எங்க எத்தன மணிக்கு மீட் பண்ணலாம்?”
“நான் intercityல புக் பண்ணிருக்கேன். சரியா 7 மணிக்கு டைடல் ஸ்டேசன் வந்திரு. கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்புனா, ஸ்டேசன் போய்ட்டு friends கூட சாப்பிட சரியா இருக்கும். அப்புறம் லேட்டா வந்திட்டு Onsite call அப்படி இப்படின்னு ஏதாவது கத சொன்ன, அவ்வளவுதான். Bye”. நீ கால் கட் செய்த மறு நொடியே என் உள்ளம் ”டைடல் ஸ்டேசன்” சென்றுவிட்டது.
பைக்கை ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு நான் டைடல் ஸ்டேசனுள் நுழையும்போது மணி 6:45. உன் வருகைக்காக நான் காத்திருக்கத் துவங்கினேன். ஓசையெழுப்பாத மிக மெல்லிய உன் காலடித்தடங்கள், என் இதயத்தில் பூகம்பம் ஏற்படுத்தும் விந்தை இன்னொருமுறையும் நடந்தது. மூச்சு வாங்க ஓடி வந்திருந்தாய். முதன்முதலாக உன்னைப் பார்ப்பவன் போல் பிரம்மித்து அமர்ந்திருந்தேன்.
மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டு ,அப்புறம் ?” என்றாய்.
உன்னை நகலெடுத்து நானும் கேட்டேன் “அப்புறம்?”
அப்புறமென்ன, அடுத்த ஒரு மணி நேரமும் வெறுமனே அப்புறங்களால் நிரம்பி வழிந்தது நம் உரையாடல். இடையில், சென்ட்ரலுக்கு சொல்லும் இரண்டு வண்டிகளை ”அடுத்த வண்டி, அடுத்த வண்டி” என நீ தவற விட்டிருந்தாய். “வா வா” என நீ வருவதற்கு நான் கெஞ்சுவதும், வந்தபின் ”போகாதே, இன்னும் கொஞ்ச நேரம்” என நீ கெஞ்சுவதும், என நம் எல்லா சந்திப்புகளும் இப்படித்தான் இருந்திருக்கின்றன சகியே.
அடுத்து வரும் வண்டியில் நீ ஏறித்தான் ஆகவேண்டும். இணைந்திருந்த நம் கரங்களில் நான் தந்த அழுத்தத்தை உணர்ந்து கொண்டவளாய் நீ மிக மெல்லிய குரலில் பாடத்துவங்கினாய். அது நமக்கான நம் ராஜாவின் பாட்டு
”நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ….
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி….”
பாட்டு முடியவும் ரயில் வரவும் சரியாக இருந்தது. ஒரு மணி நேரமோ, ஒரு முழு நாளோ பிரியும் போது இன்னும் இன்னும் பிரியம் கூடும். துளிர்த்த இரு சொட்டு கண்ணீரை என் மீது சுண்டியவாறே ரயில் ஏறினாய் நீ. ஆசிர்வதிக்கப்பட்டவனானேன் நான்.
திங்கட்கிழமை வரை தாங்குமளவு காதலைச் சுமந்துகொண்டு மீண்டும் வண்டியில் திரும்பினேன். லேசான தூரல். காதில் ஒலித்துக்கொண்டிருந்தது ராஜ இசை
“விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே…
அடடா எங்கெங்கும் உன் அழகே”

ஆதிராவின் தூரிகை

ஐந்து வயதில் ஆதிராவுக்கு
ஓவியம்தான் உலகம்…
வெள்ளத்தாளில்
சிறு பென்சிலின் ஜாலத்தை
தானே அதிசயம் என்பதை மறந்து
அதிசயிப்பாள்
அவளுடனே வளர்ந்தன
அவளுக்கான காகிதங்களும் தூரிகைகளும்
கூடவே சித்திரத்துள் சிக்கிக்கொள்ளும்
பெருங்கனவும்
குழந்தையாக தெய்வமாக
ஓங்கி வளர்ந்த மரமாக, ஓடை நீராக
இன்னும் இன்னும் பலவாக
காகிதத்தில் தனி உலகத்தை உயிர்ப்பித்து
கன்னித் தாயானாள் ஆதிரா
காலம் அதன் சுழற்சியை
முழுவீச்சில் நிகழ்த்திட
ஆதிராவும் ஆனாள்
மந்தையில் ஆடாக
விரல் விளையாட கீ போர்டு
விருப்பமில்லாவிட்டாலும் நல்வேலை
வட்டமோ சதுரமோ செவ்வகமோ
வரையலாம் காய்கறியில்
உறங்க மட்டும் கிடைத்திடும்
ஒரு நாளின் சிறுபொழுது என
யாரோ ஒருவரின் வாழ்க்கையை
தான் வாழலானாள் ஆதிரா
சித்திரத்தில் சிக்கிக்கொள்ளும் ஆசையை
8 புள்ளி 16 வரிசையில்
முடித்துக்கொண்டு
இப்போதும் இருக்கிறாள் ஆதிரா
யாதொரு குறையுமில்லை அவளுக்கு
ஆனால்
தீண்டலில் உயிர்ப்பிக்கும் வளைகரங்களின்
கருணைக்காய் காத்திருக்கின்றன
உறைந்துபோன தூரிகையும்
உடன் சிலகட்டுத் தாள்களும்
ஓவியமெனும் கலையும்

வெறுமை

தேங்கிக் கிடக்கும்
சொற்களின் கனம் தாள மாட்டா
கவிஞன் கானகம் ஏகினான்
குழி பறித்து
சொல் உமிழ்ந்து
மண் மூடி நிமிர்ந்தான்
விருட்சமாகி சலசலத்து
தொடர்ந்து வந்தன சொற்கள் !
நொந்து போய்
மலைமுகட்டில்
பின்னர் பள்ளத்தாக்கில்
வீசி எறிந்தான் சொற்களை…
இரு மடங்கு எதிரொலிப்பாய்
மீண்டு வந்தன வார்த்தைகள் !
இறுதி முயற்சியாய்
பெருகியோடும் நதியொன்றின் நீர் மீதில்
எழுதலானான் தன் வரிகளை
கவிதையை கரைத்துக் கொண்டது நதி..
சருகானன் கவிஞன் !