title


சிறுதுளி


புறங்கை மீதோ
உச்சந்தலையிலோ
அண்ணாந்து பார்க்கும்போது
முன் நெற்றியிலோ
அன்றி வேறெங்குமோ
பட்டுத் தெறித்துவிழும்
முதல் ஒற்றை மழைத்துளி
உணர்த்துவதேயில்லை
காத்திருக்கும் கனமழையின்
அடர்த்தியை !

போலவே
ஒற்றைச் சொல்லும்
ஓராயிரம்
வருடச்சண்டைகளும் !

மழைத்தண்ணியும் யேசு மேஸ்த்திரியும் - II


யேசு, அந்த வண்டி இப்ப வராது போலருக்கு; என்ன பண்ணுறது?

“சரீங்க மொதலாளி அர(அரை)நாள் கூலி மட்டும் கொடுங்க. நாளக்கி இல்லாட்டி நாளனக்கி தண்ணிய புல்ல எடுத்த பிப்(ற்)பாடு வேல செய்யலாம்

“ஏண்டா புரியாம பேசற? நாளக்கி நாளனக்கின்னெல்லாம் தள்ளிப்போடுற வேல்யே ஆவாது. ஒரே முட்டா வேல நடக்கணும். எவன் உம்மட பின்னாடி அலையறது?

“தண்ணி ரொம்பி கெடக்குங்க மொதலாளி. அத எடுக்காம வேல செய்ய முடியாதுங்க

ஆர்ரா இவன்.. சொன்னதயே மறுக்கா மறுக்கா சொல்லீட்டு...

மீண்டும் சில நிமிடங்கள் பேச்சு நீண்டது...

“சரீங்க... நாந்தா விவரமில்லாம பேசுறேன்... நீங்களே சொல்லுங்க என்ன பண்ணுறது ? சலித்தவாறே சொன்னார் யேசு.

இதற்காகவே காத்திருந்ததைப்போல அவர்கள் சொன்னார்கள். இன்றளவும் என்னால் மறக்கமுடியாத, மறக்கவும் கூடாத அந்த வலிமிகுந்த நிகழ்விற்கு அச்சாரம் போடப்பட்டது.

“இதப்பாரு யேசு வேல நடந்தே தீரோணும்; நல்ல பாரு இது மழத்தண்ணி மாறிதான கெடக்கு; அவனயும் இவனயும் புடுச்சு தொங்கறதுக்கு உங்க ஆளுங்களயே உட்டு சுத்தப்படுத்த சொல்லு. உண்டானத கேளு தந்துரலாம்பீடிகை ஏதுமின்றி துவங்கினார் என் நண்பனின் தாய்.

கொஞ்ச நேரத்துக்கு யேசுவால் பேசவே முடியவில்லை. பின்பு துவங்கினார்.

“ஏனுங்மா... இப்புடி சொல்லுறீங்க. அதெல்லாம் முடியாதுங்க. உள்ளுக்குள்ள இறங்கணும்னு நெனச்சாலே கொமட்டுதுங்க. உங்களுக்கே இது நல்லா இருக்கா?

“ஏண்டா இப்ப அவ என்ன சொல்லீட்டான்னு இந்த பேச்சு பேசற... அவ சொல்லுறதும் செரிதான. அதுக்கு உண்டாக காச கேளு தந்துடாலம்னு சொல்லுறாள்ள பொறகென்ன?இணைந்து கொண்டார் நண்பனின் தகப்பனார்.

“மொதலாளி....இழுத்தார் யேசு.

“என்ரா மொதலாளி கிதலாளின்னுட்டு... நல்லா பரு இது மழத்தண்ணி மாறிதான கெடக்கு குரல் உயர்த்தினார் நண்பனின் அப்பா.

இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்த நண்பனின் அண்ணனும் இப்போது வெளியே வந்தார். இப்போது நண்பனின் குடும்பமே சேர்ந்துகொண்டு யேசு மேஸ்த்திரியை கட்டாயப்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் மழத்தண்ணி மாறிதான கெடக்கு... மழத்தண்ணி மாறிதான கெடக்கு என சொல்லிவைத்தமாதிரி இறங்கச் சொன்னார்கள்.

ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாமல் அவர்கள் தொந்தரவும் தாங்காமல், அதுவரை மனதில் அடக்கிவைத்திருந்த அந்தக் கேள்வியை, கொஞ்சம் பணிவுடன் சிரித்துக்கொண்டு கேட்டே விட்டார் யேசு மேஸ்த்திரி.

“சரீங்க மொதலாளி நீங்களே சொன்னாப்புல மழத்தண்ணி மாறிதான கெடக்கு; பேசாம நீங்களே எறங்கிடுங்களேன்.

ஒரு நிமிடம் அவர் கேட்டதின் அர்த்தம் விளங்காமல் அல்லது அவரால் அப்படி கேட்க முடியுமென்பதை நம்பாமல் அமைதியாகினார் மூவரும்.

“அடி செருப்பால நாயி, என்னடா சொன்ன?பேச்சு வார்த்தையைத் துவக்கின நண்பனின் தாயே இம்முறை தமிழிலுள்ள அத்தனை கெட்டவார்த்தைகளின் பேச்சையும் துவக்கினார். தொடந்து அவர்கள் மூவரும் யேசுவின் குடும்பத்தையே வசைமாறிப்பொழிந்தனர். அதிலும் மேஸ்த்திரியின் வயதில் பாதிகூட நிரம்பியிராத என் நண்பனின் அண்ணன் அவரை செருப்பாலடிக்கப் பாய்ந்தார்.
இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் யேசு மேஸ்த்திரி அவர்களுக்கொன்றும் இளைத்தவரில்லை. இரு விரல்களில் மோதிரம், நல்ல தடிமனான மைனர் சங்கிலி, தங்க கெடியாரம் அணிந்து “HERO HONDA CD100பைக்கில்தான் பவனிவருவார். பின்பு ஊரில் நாலு பெரிய மனிதர்கள் இந்தப்பிரச்சனையைத் தீர்த்து விட்டார்கள். அந்த பிரச்சனை எப்படி தீர்ந்திருக்கும் / தீர்க்கப்பட்டிருக்கும் என என்னால் இப்போது ஊகிக்கமுடிந்தாலும், அப்போது எப்படி தீர்த்தார்களோ என்னவோ...ஆனால், மீண்டும் அந்த கட்டிடத்தை நல்ல முறையில் கட்டித்தந்த தந்ததென்னவோ யேசு மேஸ்த்திரிதான்.
சுட்டாலும் வெண்மை தரும் சங்கு திட்டினால் மட்டும் கோபிக்கவா செய்யும்?

மழைத்தண்ணியும் யேசு மேஸ்த்திரியும் - I


எனக்கு அப்போது ஏறத்தாழ பத்து வயதிருக்கும். என் நண்பனொருவன் வீட்டுக்கு விளையாடச் சென்றிருந்தேன். அவன் வீட்டில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இப்போது சர்வாதிகாரம் புரியும் “வாஸ்து சாஸ்த்திரம்அப்போது என்ன நிலையிலிருந்ததோ தெரியவில்லை. அவன் வீட்டில் நடந்துகொண்டிருந்த வேலையின் பிண்ணனி இதுதான் “தற்போது கழிவறையும் செப்டிக் டேங்க்கும் உள்ள இடத்தில் ஒரு புதிய அறை அமைப்பது. கழிவறையையும் செப்டிக் டேங்க்கையும் பக்கவாட்டிலுள்ள காலி இடத்தில் புதிதாக கட்டிக்கொள்வது.

எங்கள் ஊரில் அந்தக் காலகட்டத்தில் கட்டிட வேலைகளில் கலக்கிக்கொண்டிருந்தவர் “யேசு மேஸ்த்திரி. அது புதிதாக கட்டுவதானாலும், பழைய கட்டிடங்களில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்வதானாலும் அனைவரின் முதல் தேர்வு அவராகத்தான் இருந்தார். அவருக்கு முன்னும் சரி பின்னும் சரி அவரளவுக்கு தனிக்காட்டு ராஜாவாக ஜொலித்த மேஸ்த்திரி எவருமில்லை. ஒரே சமயத்தில் எங்கள் ஊரில் கட்டப்பட்டுவந்த ஐந்தாறு கட்டிடங்களுக்கு அவரே மேஸ்த்திரியாக பணியாற்றிய பெருமையும் அவர்க்குண்டு. குடிப்பழக்கம், வேலையில் கொஞ்சம் சுணக்கம் என்றாலும் பொதுவில் நல்ல திறமைசாலி. அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து கிறித்தவராக மாறியிருக்க வேண்டும்.

நண்பனின் வீட்டு கட்டிட வேலைகள் அவர் பொறுப்பில்தான் விடப்பட்டிருந்தது. அன்றைய தினம் கட்டிட வேலைகளை முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தார் யேசு. நண்பன் வீட்டு கழிவறை முற்றிலுமாக இடிக்கப்பட்டுவிட்டது. அடுத்த வேலை செப்டிக் டேங்க்கை மூடுவது. அதுநாள்வரை உபயோகத்தில் இருந்ததால் செப்டிக் டேங்க்கின் முக்கால் பகுதிவரை தண்ணீர் நிரம்பியிருந்தது. அதை அப்புறப்படுத்தாமல் செப்டிக் டேங்க்கை மூடமுடியாது. இப்போது சென்னை போன்ற நகரங்களில் இருப்பதுபோல் கழிவு நீரெடுக்கும் இயந்திரங்களோ வாகனங்களோ பெருகியிருக்காத காலமது. எங்கள் பேரூராட்சிக்கென இருப்பது ஒரே ஒரு கழிவு நீரெடுக்கும் டிராக்டர். அதுவும் அன்றைய தினம் வரமுடியாத சூழல் (ஒன்று பழுதாயிருக்கும் அல்லது வேறெங்காவது அனுப்பியிருப்பார்கள்). நண்பன் வீட்டாருக்கு வேலையை தொடர்ந்து நடத்தியாக வேண்டும் என்ற எண்ணம். மேஸ்த்திரியை அழைத்து பேசத்துவங்கினர்.

இருப்பு



எல்லா மரணவீட்டிலிருந்து
நான் வெளியேறிவரும்போதும்
என் கைப்பிடித்தே உடன்வருகின்றன
மரணம் குறித்த வருத்தங்களும்
வாழ்வு குறித்த நிச்சயமின்மையும்
இருத்தலினாலான ஆசுவாசங்களும்...

அன்று மட்டும்
கொஞ்சம் அதிகமாகக்
கொஞ்சுகிறேன் குழந்தைகளை !

இரவு


வயிற்றுக்குள் நீ
எட்டி உதைக்கும் வலி...
சில மணித்துளிகளில்
உன்னைக் காணும் பரவசம்...
அதிகாலையில் உன்னை 
பிரசவிக்கும் வரை
பரவசம் பாதி
பயங்கர வலி மீதியாய்
நான் மாறி மாறி 
செத்துப் பிழைத்த
மார்கழி மாத  மழை இரவு !

ஆறேழு வயதில்
காய்ச்சலில் முணங்கிக்கொண்டு
என் மடியில் நீ ...
கண்மூட மறந்து
உன் அருகில் நான்...
விசும்பலும் வேண்டுதலுமாய்
நான் கழித்த அந்த இரவு !

பள்ளி இறுதிகளில்
படிக்கும் களைப்பில் நீ...
ஏதேனும் கேட்பாயென
எதிர்பார்த்து நான்...
ஓய்வு கேட்கும்
கண்கள் ஒதுக்கி
உன்னுடனிருந்த இரவுகள் !

கல்லூரி நாட்களில்
நமக்குள் வரும்
கணக்கில்லா சண்டைகள்
உணவையும் உறக்கத்தையும்
ஓன்றாய்த் தொலைத்து
என்னையே நான்
வெறுத்த இரவுகள் !

காதல் மணம் முடிக்க
சம்மதம் பெற்று
சந்தோசமாய் நீ உறங்க
சமூகத்துக்கு பயந்து 
தூங்க முடியாமல் நான்
துடித்துக் கிடந்த இரவு !

இவை மட்டுமல்ல
வேறெந்த இரவுகளையும் விட
கொடுமையான வலி தருகிறது
என்னை நீ
"
முதியோர் இல்லத்தில்"
தள்ளிப் போன 
இந்த இரவு !

நாகம்மாள்


ஒவ்வொரு முறை மதுரையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைப் பார்த்தபின்னும் நான் பிறந்த கொங்கு மண்டலத்தின் கலைவீச்சில் ஒரு தேக்கம் இருப்பதாகத் தோன்றும். அதைப்போலவே ஏதேனும் நல்ல நாவல் படித்தபின் என் மண் சார்ந்து இப்படிப்படிப்பட்ட நல்ல படைப்புகள் இல்லையே எனும் ஏக்கம் தோன்றுவதுண்டு. ஆனால் இவை அனைத்துக்கும் என் அறியாமைதான் காரணம் என்பதை “நாகம்மாள்” நாவலைப் படித்தபின் உணர்ந்து கொண்டேன். மண் சார்ந்த மக்களின் வாழ்வை அந்த வாழ்வின் இயல்பு கெடாமல் அப்படியே பதிவு செய்துள்ளார் திரு. ஆர். ஷண்முகசுந்தரம்.

”தமிழ் நாவல்களின் தலைசிறந்த பெண்பாத்திரப் படைப்புகளுல் நாகம்மாளும் ஒருத்தி” என்ற விமர்சனவரிகளின் மூலமாகத்தான் எனக்கு நாகம்மாள் நாவல் அறிமுகமானது. அந்த வரிகள் என்னுள் ஏற்படுத்திய சித்திரத்துக்கும் நாகம்மாள் கதாபாத்திரத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. நாகம்மாள் நம் அன்றாட வாழ்வில் கண்டுவரும் ஒரு மிக மிக சாதாரணமான, இயல்பான பெண்.

இந்த கதை நிலம் சார்ந்த தொழில்புரியும் குடும்பங்களின் ஆகப்பெரும் ஒரே சொத்தான நிலத்தை அடிப்படையாக கொண்டு ஏற்படும் கலகங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அத்தகைய கலகங்களில், கதை நாயகியாக முன்னிறுத்தப்படும் நாகம்மாள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பெரும் குழப்பத்தினூடே எடுக்கப்பட்டவை. தன்னுடைய சுய அறிவை புறந்தள்ளிவிட்டு அடுத்தவர் சொல்படி ஆடும் நாகம்மாள், இடையிடையே தன்னுடைய முடிவுகள் தவறோ என எண்ணுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இயல்பான ஒரு மனித சித்திரத்தை நாகம்மாளுக்கு வழங்குகிறது.

தன் முடிவுகள் யாவையும் தன்னுடைய முழு மனதோடு எடுக்கப்பட்டவையல்ல என்று தெரிந்தபோதும் ஒன்றும் செய்யவியலாத நிலையில் அகப்பட்டுக்கொண்டு அதையே தன் விருப்பமாக எண்ணிக்கொள்ளும்போது நாகம்மாளின் மீது கோபம் வருவதைப்போலவே பரிதாபமும் எழுகின்றது.

மொத்தத்தில் நாகம்மாள் நாவலை படித்து முடித்தபின் எஞ்சுவது நல்லதொரு அனுபவம். நூறு சதவிகித நல்லவன், நூறு சதவிகித கெட்டவன் என எவருமில்லை என்பதே யதார்த்தம். காலத்தின் கோலத்தில் எல்லாரும் வெறும் புள்ளிகள் மட்டுமே

நூல்                : நாகம்மாள்
எழுத்தாளர் : ஆர். ஷண்முகசுந்தரம்
பதிப்பகம்    : காலச்சுவடு (கிளாசிக் வரிசை)
விலை          : 90 ரூபாய்

பாவப்பட்ட பாஞ்சாலிகள்

யுகந்தோறும்
துகிலுரியப்பட்டுக்
கொண்டேயிருக்கின்றனர்
பாஞ்சாலிகள்....

காக்க எதிர்நோக்கும்
கண்ணனின்
கண்களும் கைகளும்
கருந்துணியால்
கட்டப்பட்டு.....

பணயம் கேட்பவனும்
கேட்பதையே வைப்பவனும்
என எல்லாமுனைகளிலும்
சகுனியே நிறைந்திருக்க
என் செய்யக்கூடும்
பணயப்பொருள் ?

கும்பிக்கு உணவுக்கே
கும்பிட்டு விழவேண்டியிருக்க
குருதித்தைலம் தேய்த்து
கூந்தல் முடியும்
சபதமெல்லாமில்லை...

ஐந்தாண்டுக்கொருமுறை
ஆட்களும் ஆட்சியும்
மாறினாலும்
மாறுவதேயில்லை
பகடையாட்டம்....

எவன் வந்தாலும்
இயல்பு மாறாமல்
எண்ணிக்கை மட்டுமே
மாறுமிந்த திருநாட்டில்

லட்சங்களென்பதும்
கோடிகளென்பதும்
லட்சம் கோடிகள் என்பதும்
எண்கள்.....
வெறுமனே எண்கள்...

முக்கிய முடிவு !?!

”மறுபடியும் தி.மு.க உயர்நிலை செயற்குழு கூட்டம்.. முக்கிய முடிவு எடுக்கப்படும் ?” – என்ன முக்கு முக்கினாலும் முடிவெல்லாம் எடுக்க முடியாது... தமிழ்நாட்டில் ”ஜெ” டெல்லியில் “சோனியா” இப்படி அம்மாக்கள் ஆடும் ஆட்டத்தை வேடிக்கை வேணும்னா பாக்கலாம்...

பூமேடை – தோட்டிகளின் காந்தி

கொள்கைப் பிடிப்புள்ள, தன்னலமற்ற, மக்களின் மீது உண்மையான பரிவு கொண்ட எண்ணற்ற தலைவர்கள் இப்போதும் இந்தியாவில் உண்டு. ஆனால் அவர்கள் எவரும் முற்குறிப்பிட்டது போல் தலைவர்களாக கருதப்படுவதில்லை. மாறாக மாறிவரும் நவீன உலகின் மாற்றத்துக்கு ஈடுகொடுக்கவியலாத அறிவீனர்களாகவும், கோமாளிகளாகவுமே கருதப்படுகின்றனர். வெட்டப்பட்ட மரங்களின் அருமை மழையில்லாது தவிக்கும் நாட்களில் மட்டுதான் புலப்படவேண்டுமென்பது மரங்களின் தலையெழுத்து. போலவே இவர்களுக்கும் வாழ்ந்து முடிந்தபின் போடப்படும் வாய்க்கரிசியின் அளவு அரிசி கூட வாழும்போது கிடைப்பதில்லை. ஆனால் இவ்வளவுக்குப் பின்னரும் தன்னை பழிப்போருக்காகவும் சேர்த்தே குரலெழுப்பும் மனிதர்களும் இருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட ஒரு காந்தியவாதியின் கதையை “கோட்டி” எனும் தலைப்பில் எழுதியுள்ளார் திரு. ஜெயமோகன். கதையின் தலைப்பே உண்மையான சேவகனுக்கு மக்கள் மத்தியிலிருக்கும் மரியாதையை காட்டிவிடுகின்றது. கதை நாகர்கோயிலில் வாழ்ந்த இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் ’பூமேடை’ எஸ். ராமையா (1924-1996) அவர்களின் அந்திமக்காலத்தில் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. இடைவிடாத போராட்டங்கள், கேட்க பெரும் கூட்டமில்லாவிட்டாலும் தளராமல் நடத்தப்பட்ட கூட்டங்கள் என திரு. பூமேடை அவர்களின் போராட்ட வாழ்க்கை கதையில் ஒரு சோற்றுப்பதம் என்ற அளவில் மெல்லிய நகைச்சுவையினூடே பதிவுசெய்யப்பட்டுள்ளது. எவ்வித சமரசமுமின்றி தன் வாழ்வினை மேற்கொண்ட திரு. பூமேடை ராமையா தன் இறுதி தினத்திலும் கூட அரசாங்க மருத்துவமனையில் அநீதிக்கெதிராக குரலெழுப்பி மடிவதாக முடிகின்றது கதை.

நிச்சயம் இந்த கதை ஒரு உண்மைச்சம்பவமல்ல. ஆனால் இவாறெல்லாம் நடந்திருக்காது என்றோ நடக்க இயலாது என்றோ கூறிவிடமுடியாது. கதை முழுவதும் ஏறத்தாழ இறுதி வாக்கியம் வரை நகைச்சுவை இழையோடினாலும் முடிவில் தங்கிவிடுவதென்னவோ பணியன்றி வேறொன்றறியாத பெரியவர்கள் சந்தித்த/சுமந்த ரணங்கள் மட்டுமே.

இணைப்பு
"கோட்டி – 1"
"கோட்டி - 2"

கானல்

நகரங்களிலும்
வாழ்கின்றன எறும்புகள்...

ஒட்டப்பட்ட
பிளாஸ்டிக் கோலங்களில்
ஊர்ந்துகொண்டு...

(ஒரு தொலைபேசி உரையாடலின் போது இந்த கவிதைக்கு கரு தந்த ”அண்ணன் கண்(ர்)ணன்” னுக்கு நன்றி)

இரண்டு படி ( மொழிபெயர்ப்பு நாவல்)

உலகத்திலுள்ள தொழில்களிலேயே மிகவும் சிறந்ததும் பயனுள்ளதும் வேளாண்மை. அதைப்போலவே மிகவும் கடினமானதும் சபிக்கப்பட்டதும் அதுவே. இந்தியாவில் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை வேளாண் மற்றும் பண்ணைத்தொழில் வேலைகளில் அடிமைகள்தான் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். உடல் நோகுமட்டும் உழைத்தாலும் வயிறு நனையுமட்டும்தான் வாழ்க்கை அமைந்திருந்தது. அதைவிட கொடுமையான விசயம் தம் உழைப்புக்குண்டான அங்கீகாரம் ஏதுமில்லை என அவர்கள் தலைமுறை தலைமுறைகளாக போதிக்கப்பட்டனர்.

இப்போதெல்லாம் உழைப்புக்கு கூலி பணமாக தரப்படுகின்றது. அந்த பணத்தைக் கொண்டு தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் குறைந்தபட்ச சுதந்திரம் (சுதந்திரம் மட்டுமல்ல சம்பளமும் குறைந்தபட்சம்தான் என்பது தனிக்கதை) உள்ளது. ஆனால் முற்சொன்ன காலகட்டத்தில் உழைப்பவர்களுக்கு என தனியாக ஊதியம் கிடையாது. அதற்குப்பதிலாக உணவும், உறைவிடம் உள்ளிட்ட தேவைகளும் மட்டுமே அவர்தம் எஜமானர்களால் தரப்பட்டு வந்தது. இதிலுள்ள சூட்சுமம் அறியாத அடிமைகளும் தம் எஜமானரை இந்திரர் சந்திரர் என எண்ணியதும் கடவுளுக்கிணையாக அவர்களைப் போற்றியதும் உண்டு. என்னதான் காலம் காலமாக பொய்மை கற்பிக்கப்பட்டாலும், என்றாவது ஒருநாள் உண்மை உதிக்கும்.

அப்படி தம்முடைய நியாமான கோரிக்கைகளுக்காக கேரளத்தின் குட்ட நாட்டு பண்ணை அடிமைகளாக கருதப்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை ஒட்டி திரு. தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட மலையாள நாவல் “இரண்டங்கழி”. அதை தமிழில் ”இரண்டு படி” எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார் திரு. டி. ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.




சிருதை, சாத்தன், கோரன் என மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அவர்களுக்கிடையேயான அன்பு, காதல் உள்ளிட்ட உணர்வுகள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்வினூடாகவே குட்ட நாட்டு பண்ணையாட்களின் அவல நிலையைக் காட்டுகின்றார் தகழி. போராட்டம் துவக்கப்பட வேண்டியதன் காரணங்களையும் அதனால் தனி மனித வாழ்வில் சந்திக்க நேரிடும் அவலங்களையும் மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார். மேலும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொண்டுள்ள உறவின் மகத்துவம் மூவரின் (சிருதை, சாத்தன், கோரன்) வாழ்க்கையால் நிறுவப்படுகின்றது.

ஆரம்பத்தில் இந்த நாவலின் மொழிபெயர்ப்பு எனக்கு மலையாளத்தை தமிழில் படிப்பது போன்ற உணர்வைத் தந்தது. ஆனால் பின்பு அதுவே நாவலுடன் ஒன்றிப்போக வழிவகுத்தது.

வாழ்வில் மற்றவர்கள் சுகத்துக்காக தாம் சிலுவை சுமந்தாலும் அதை அறியாத ஏசு பெருமான்கள் நம்மிடையே இன்னமும் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் வலியை அறிந்துகொள்ள இந்த நூல் நிச்சயம் உதவும்.

நூல் : இரண்டு படி (மொழிபெயர்ப்பு நாவல்)
எழுத்தாளர் :
மலையாள மூலம் : தகழி சிவசங்கரப் பிள்ளை
மொழிபெயர்ப்பாளர் : டி. ராமலிங்கம்
பதிப்பகம் : சாகித்திய அக்காதெமி
விலை : 50 ரூபாய்

முதல் ஆசான்

என்னுடைய வாழ்வில் நான் முதன்முதல் சந்தித்த ஆசிரியர் (ஆசிரியராக இருந்த என் தாய்மாமாவைத் தவிர்த்து..) திரு. மாரிமுத்து அய்யா அவர்கள். நான் பார்த்த முதல் பகுத்தறிவுவாதியும் அவரே. எங்களூர் பள்ளியின் நான்காம் வகுப்பு ஆசிரியர். அய்யாவின் மனைவியும் (அவரது பெயர் எனக்கு மறந்துவிட்டது. “பாலம்மா” என்பதாக நினைவு) எங்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு ஆசிரியை.

தூய வெள்ளை வேட்டி, கறுப்புசட்டை, கறுப்புக்கண்ணாடி போட்டு “Hero Honda CD100” வண்டியில் (வண்டி நிறமும் கறுப்புதான்) முறுக்கிவிட்ட வெள்ளை மீசையுடன் அவர் வருவதைப் பார்த்தாலே பயமாக இருக்கும், அவர்பற்றி அறியாதவர்களுக்கு. சொல்பேச்சு கேட்காத மாணவர்களை அவர் அடி பின்னிவிடுவார். என்றபோதிலும், அடுத்த நிமிடமே அதை மறந்தும் விடுவார் என்பதால் அவரைக் காலையில் காணும்போது அனைவருக்கும் உற்சாகமே மேலிடும்.

அய்யாவுக்கு குழந்தைகள் இல்லை. அனைத்து மாணவர்களையும் அவர் “மாப்பிளே” என்றுதான் அழைப்பார். மாணவிகளை “பாப்பா” என்றழைப்பார். அவர் கேள்விகள் கேட்கும்போது கூட “மொத வரிசைல மூணாவது மாப்பிளே பதில் சொல்லு”, “நாலாவது வரிசைல கடைசி பாப்பா பதில் சொல்லு” எனும் ரீதியில்தான் அழைப்பார்.

ஒருவன்மீது கடும் கோபத்திலிருந்தால் மட்டுமே அவனை பெயர் சொல்லி கூப்பிடுவார். அப்போதெல்லாம் அய்யா ஒருவனை பெயரைச்சொல்லி கூப்பிட்டுவிட்டால் அது அவனுக்கு பெருத்த அவமானமாக கருதப்பட்டது. மீண்டும் அவனை அய்யா “மாப்பிளே” என்றழைக்கும்வரை அவனை கிண்டல் செய்தே கலங்கடித்துவிடுவோம்.

முன்னமே சொன்னதுபோல் அதிதீவிர பகுத்தறிவுவாதி, நான் என் நினைவறிந்து ஒரு நாள் கூட அவர் கறுப்பன்றி வேறு நிறத்தில் சட்டை அணிந்து பார்த்ததில்லை. என்றபோதிலும் ஆச்சரியத்திலும் ஆச்சர்யமாக கடவுள்குறித்த வசைகளை அவர் பொழிந்ததேயில்லை. “பல நாடுகள்ல பசில எல்லாரும் சாகுறாங்கல்லப்பா அவங்களை காப்பத்தகூடவா கடவுளுக்கு சக்தியோ புத்தியோ இல்ல” என்பதான மிக மென்மையாக விமர்சனங்களை மட்டுமே செய்துள்ளார். அதுவும் அரிதாக. மிகவும் தமிழ்ப்பற்று மிக்கவர் கூடுமானவரையில் தமிழில் மட்டுமே பேச வேண்டுமென்பது அவர் கடுமையாக கடைபிடித்த நியதிகளுல் ஒன்று. அனைவரிடமும் மிக மிக மரியாதையாக பேசுவார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக சாதி, மத, பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாமல் எல்லாரிடமும் ஒரேபோல் பழகுவார்.

அவரிடமிருந்து நான் பாடத்தை தவிர நல்ல பல விசயங்களைக் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்பது தெரியாமலேயே அவருடனான என் தொடர்பு முடிந்து போனது. நான் வளர்ந்து மேல்நிலைக்கல்வி, கல்லூரி படிப்பெல்லாம் முடித்து இப்போது பணியிலிருக்கின்றேன். சமீபத்தில் எதேச்சையாக அய்யாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அப்பா அய்யா அவர்களின் மறைவைப் பற்றி சொன்னார். சட்டென்று ஒரு வெறுமை படர்ந்தது.

உள்ளூரிலேயே பள்ளி இருந்தும் நான் ஒருமுறை கூட அவரை சென்று பார்த்ததில்லை என்பது என்னை மென்மேலும் காயப்படுத்துகிறது. குறைந்தபட்சம் சில சந்திப்புகள் மனம் நிறைந்த நன்றி என எதையும் செய்யாமல் விட்ட மடமை இன்னும் இன்னும் உறுத்துகின்றது. நிழலின் அருமை இப்போதுதான் புரிகின்றது. அன்புக்குரிய அய்யாவுக்கு உங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களுல் ஒருவனது அஞ்சலி.

நிழலின் அருமை – அறத்தை முன்வைத்து

தான் வாழ்ந்த காலத்தில் சாப்பாட்டுக்கே தத்தளித்து ஒரு வழியாய் விதியோ அல்லது பசியோ கொண்டுசென்ற எண்ணற்ற நல்ல எழுத்தாளர்கள் / கலைஞர்கள் ( அட அவரில்லைங்க....) தமிழில் நிறையவே உண்டு. வாழும் காலத்தில் ஏளனங்களை சகித்துக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போல எண்ணிக்கொள்ளும் சமூக மற்றும் குடும்ப சூழலுக்கு மத்தியிலிருந்து கொண்டு ஆகச்சிறந்த படைப்புகளைத் தந்த அவர்களது வாழ்க்கையை “அறம்” என்ற சிறுகதையில் மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்.

இதுதான் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்தது. என்ன, கொடுமைகளில் கொஞ்சம் கூட, குறைய இருந்திருக்கலாம் அவ்வளவே. வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான (என்று கருதப்படும்) அம்சங்களிலும் கையாலாகாதவனாக அறியப்பட்டும் தன் ஆளுமையை படைப்புகளில் நிலைபெறச் செய்வது என்பது மிகப்பெரிய சவால். நெடுநாட்களுக்குப்பின் கண்கலங்கவைத்த சிறந்த கதை அறம்.

நானறிந்தவரை இந்த கதையில் வரும் எழுத்தாளர் திரு. எம்.வி.வெங்கட்ராம் அவர்களாக இருக்கலாம். “காதுகள்” என்ற மிகவும் பாராட்டுப்பெற்ற நாவலை எழுதியவர். நான் அவரது மற்றுமொரு சிறந்த படைப்பான ”நித்யகன்னி” என்ற நாவலைப் படித்திருக்கின்றேன்.

34 ஆவது சென்னை புத்தக காட்சி – புத்தகப்பட்டியல் (ஜனவரி 15)

சென்ற ஜனவரி 15 சனிக்கிழமையன்று நான் சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் எல்லா புத்தகங்களையும் இப்போதுதான் வாங்கியுள்ளேன், இன்னும் படிக்கவில்லை. எனவே புத்தகம் பற்றிய குறிப்புகள் ஏற்கனவே நான் பல்வேறு தளங்கள் வாயிலாக அறிந்தவை மட்டுமே.

1. நத்தை போன பாதையில் (ஹைக்கூ கவிதைகள்) - தமிழில் மிஷ்கின் (வம்சி)
பிற மொழிகளிலிருந்து சிறந்த ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் மிஷ்கின். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மூன்று மழை நாட்களில் ஒரு விளையாட்டைப்போல் மொழிபெயர்க்கப்பட்டவையாம்.


2. பட்டினி வயிறும் டப்பா உணவும் – தமிழில் போப்பு (பூவுலகின் நண்பர்கள் - வம்சி)

”WORLD WATCH PAPER 150” என்ற உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நூலின் தமிழாக்கம். தனி மனிதனின் நலம் மட்டுமின்றி சமூகத்தின் நலமும் அலசப்பட்டுள்ள நூல்.

3. சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் (தமிழினி)
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு. நாஞ்சில் நாடனுக்கே உண்டான எள்ளலும் எதார்த்தமும் கலந்த சிறுகதைகளின் தொகுப்பு நூல். இவ்வருட புத்தக்காட்சியின் “பெஸ்ட் செல்லர்” என்பதும் விற்பனையில் புது வரலாறு படைத்த நூல் என்பதும் கூடுதல் செய்திகள்.

4. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை – பவா செல்லத்துரை (வம்சி)
திரு. பவா செல்லத்துரை அவர்களின் பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு. ஒரு கதை கூட சோடைபோகவில்லை என திரு. பிரபஞ்சன் அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

5. நண்பர்களோடு நான் – கி.ராஜநாராயணன் (அன்னம்)
தன் நண்பர்களுடனான அனுபவங்களை கட்டுரைகளாகத் தொகுத்துள்ளார் கி.ரா. ஜெயக்காந்தன் துவங்கி சுந்தர ராமசாமி, மீரா, கு.அழகிரிசாமி என கி.ரா-வின் மனம் கவர்ந்த பத்து நண்பர்களைப் பற்றிய அனுபவப் பகிர்வு நூல்.

6. பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள் (பாரதி புத்தகாலயம்)
புதுவையில் பாரதியார் இருந்த போது அவருக்கு உற்ற துணையாயிருந்த மண்டபம் ஸ்ரீ சீனிவாச்சாரியாரின் மகள் யதுகிரி அம்மாள் பாரதியாரைப் பற்றிய தன் நினைவுகளை எழுதியுள்ள நூல்.

7. வரலாற்றுச் சுவடுகள் – தொகுப்பு தினத்தந்தி
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட செய்திகளின் தொகுப்பு. உலகம், இந்தியா, தமிழ்நாடு என எல்லா பிரிவுகளிலும் முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

8. கந்தர்வன் கதைகள் – தொகுப்பு பவா செல்லத்துரை (வம்சி)
தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுல் ஒருவரான திரு. கந்தர்வன் அவர்களுடைய 61 கதைகளின் தொகுப்பு. தன் 59 ஆவது வயதில் மறைந்த திரு. கந்தர்வன் அவர்களது இறுதி உரையாடலும் இடம் பெற்றுள்ளது.

9. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் – தமிழில் கி.இலக்குவன் (பாரதி புத்தகாலயம்)
இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய மிகச்சிறந்த நூல். அன்னியர் பிடியில் சிக்குவதற்கு முன்பிருந்த இந்தியா துவங்கி இந்திய விடுதலைப் போரின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் மிகக் கவனமாக ஆராயும் நூலின் தமிழாக்கம்

முன்னரே சொன்னதுதான் என்றாலும் மீண்டும் ஒருமுறை.....

எல்லா நூல்களின் விலையையும் பதிவிட ஆசைதான் என்றாலும் வருமான வரித்துறையை சமாளிக்க விலையைக் குறிப்பிடவில்லை (என்று சொன்னாலும் உண்மையான காரணம் உள்நாட்டுப் போரை தவிர்ப்பதே என்பதை மணமானவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்).

(ஜனவரி 14 வெள்ளிக்கிழமை வாங்கிய புத்தகங்கள் பழைய பதிவில்)

34 ஆவது சென்னை புத்தக காட்சி – சனி (ஜனவரி 15)

”சொன்னா கேளுப்பா, நேத்துதான் புத்தகக் கண்காட்சிக்கு போனேன் போதுமான அளவு புத்தகமும் வாங்கியாச்சு, இப்ப மறுபடியுமா? “

இன்று புத்தகக் காட்சிக்கு அழைத்த என நண்பரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். (ஆனால் மனம் முழுக்க எத்தனை மணிக்கு கிளம்பினால் நிறைய நேரம் புத்தகங்களைத் தேடலாம் என கணக்கிடத்துவங்கிவிட்டது. என்னதான் வெட்டிப்பயல்னாலும் கேட்டவுடனே சரின்னு சொன்னா நம்ம கெளரதை என்ன ஆகறது ?)

விசயம் இதுதான்....

பொங்கல் சமயமாகையால் அவர் ஊரிலில்லை என நான் எண்ணிக்கொண்டு தனியாக முந்தைய தினமே புத்தகக் காட்சிக்கு சென்று வந்துவிட்டேன். என்னை போலவே அவருக்கும் அலுவலகத்தில் வேலையாம் (?) அதனால் அவரும் போகவில்லை. புத்தகக் காட்சிக்கு போலாமென்று எண்ணி என்னைக் கடுப்பேத்த தொலைபேசியில் அலைத்தார். ஆனால் நான் சென்னையில் இருந்ததும் நேற்றே புத்தகங்கள் வாங்கியதும் தெரிந்து ஆவேசப்பட்டார்.

”நீ தான் அரை நாள் லீவுவிட்டாலே அவினாசிக்கு பஸ் பிடிக்கறவனச்சே... பொங்கல் நாளதுவுமா இங்க என்ன பண்ணுற ? குறைந்தபட்சம் நேத்து போறதுக்கு முன்னாடி என்ன ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் (இப்ப அவுரு போறதுக்கு முன்னாடி என்னை கேட்டுட்டாராமா...). இப்ப மட்டுமென்ன கிளம்பி வா ... “

சரி ரொம்ப பிகு பண்ணினா “வந்தா வா.. இல்ல வராட்டி போ...” என கழட்டிவிடும் அபாயம் உள்ளதால்.... “சரி சரி.. உங்களுக்காக வரேன்...” என பெருந்தன்மையாக சொல்லிவைத்தேன். அடுத்த 30 நிமிடங்களில் அரக்கப் பறக்க கிளம்பி புத்தகக் கண்காட்சியை அடைந்தபோது மணி 3 இருக்கும். நேற்றைவிட இன்று மிக அதிகமான கூட்ட்மிருக்குமென்பது எனக்கு அங்கேயே தெரிந்துவிட்டது (பெரிய கின்னஸ் கண்டுபிடிப்பு நிறைய வண்டிகளிருந்தால் நிறைய கூட்டமிருக்குமென்பதை சின்னக் குழந்தைகூட சரியா சொல்லிடும்).

நான் வண்டியை நிறுத்திவிட்டு அதற்குறிய ரசீதை வாங்கிக்கொண்டிருக்கும்போது என் அலுவலக நண்பர் கணேஷ் செல்போனில் அழைத்தார். அவரும் அவருடைய நண்பர் மகேஷும் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருப்பதாகவும் சில புத்தகங்கள் பரிந்துரைக்கும்படியும் கேட்டார். பேசிக்கொண்டேயிருக்கும்போதுதான் கவனித்தேன் அவர் எனக்கு அருகில்தான் நின்றிருந்தார். ஆகவே செல்போனை அணைத்துவிட்டு அவர்களுடன் இணைந்து கொண்டேன்.

நான் சென்றமுறை வந்தபோது என்னிடம் முக்கியமான பதிப்பகங்கள் மற்றும் புத்தகங்கள் என ஒரு பட்டியல் இருந்தது. (நான் எப்போது புத்தகம் வாங்க சென்றாலும் அத்தகைய ஒரு பட்டியலுடன் செல்லக் காரணம் ”முழுசா மூணு புக் பெயர கூட ஞாபகம் வச்சுக்க முடியாதென்ற” தங்கமலை ரகசியம்தான்). ஆனால் இம்முறை ஒரு மாறுதலுக்காக நான் எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி வந்திருந்தேன்

நேற்றைப் போலவே இன்றும் தினத்தந்தியிலிருந்து கணக்கைத்துவக்கினேன். இம்முறை வரலாற்றுச்சுவடுகள் வாங்கியது நண்பருக்காக. அடுத்து ஓரிரு பதிப்பகங்களுக்குச் சென்றுவிட்டு கணேஷிடமும் வஸந்திடமும் இல்ல இல்ல கணேஷிடமும் மகேஷிடமும் (வேற ஒண்ணுமில்லீங்க சுஜாதா பாதிப்பு) விடைபெற்றுக் கொண்டு என் நண்பரை செல்போனில் அழைத்தேன்.

வந்த நண்பரின் முதல் பார்வையிலேயே “என்னடா வரல வரலன்னு பிகு பண்ணிட்டு இப்ப இவ்வளவு பரபரப்பா வந்திருக்கானேன்னு” கேள்வி தெரிந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் சேர்ந்து மீண்டும் முதலிலிருந்து துவங்கினோம். என்னுடைய முந்தைய நாள் அனுபவத்திற்கும் இன்றைக்கும் முக்கியமான சில வேறுபாடுகளுண்டு

1. நேற்றைப் போலல்லாமல் இன்று இலக்கில்லாமல் சுற்றியது (கூட பேச்சுத்துணைக்கு நண்பனும்).
2. கண்காட்சியில் கூட்டம் நிரம்பியிருந்தது
3. மிக மிக முக்கியமானதொரு விசயம், நல்ல நல்ல இலக்கியவாதிகளை நேரில் பார்க்க நேரிட்டது (அந்த அனுபவம் பின்னொரு பதிவில்)

இம்முறை நானே எதிர்பார்க்காமல் நல்ல நல்ல புத்தகங்கள் வாங்கினேன். (“ஏங்க நேத்தே நீங்க புக்கெல்லாம் வாங்கியாச்சு இன்னிக்கு போறது சும்மா உங்க நண்பருக்காக... மறந்துடாதீங்க” என்ற என் மனைவியின் எச்சரிக்கையையும் மீறி). நான் இம்முறை வாங்கிய புத்தகங்கள் அடுத்த பதிவில்.

பொதுவாக என்னுடைய இந்த இரு நாள் புத்தகக் காட்சியின் வாயிலாக நான் உணர்ந்துகொண்ட ஒரு முக்கியமான உண்மை புத்தகக் காட்சி என்பது வெறுமனே புத்தகங்கள் வாங்க மட்டுமல்ல, அதுவொரு கொண்டாட்டம். தினந்தொரும் கடவுளைக் கும்பிட்டாலும் திருவிழாவன்று கும்பிடுவது எப்படி தனி சிறப்போ அதைப் போலவேதான் புத்தகப்பிரியர்களுக்கு புத்தகக் காட்சியும். ஆகவே இனி ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சிக்கு செல்ல எண்ணம், பார்ப்போம்.

34 ஆவது சென்னை புத்தக காட்சி – புத்தகப்பட்டியல் (ஜனவரி 14)

சென்ற ஜனவரி 14 வெள்ளியன்று நான் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே.

முன்னரே சொன்னதுபோல நான் நீண்ட நாட்களாக தேடிவந்த சில புத்தகங்கள் இந்தமுறை எனக்குக் கிடைத்தன. அவை “அஞ்சலை”, “கொற்றவை” மற்றும் ”தவிப்பு”. அதிலும் அஞ்சலை மற்றும் தவிப்பு நாவல்கள் இனி நிச்சயம் கிடைக்காதென நானே என்னை சமாதானப்படுத்தி இருந்தேன். என்றபோதும் ஒவ்வொரு மாதமும் புத்தகம் வாங்கச் செல்லும் போதும், எல்லா புத்தகங்களையும் பார்த்து விட்டு இறுதியாக நான் மேற்சொன்ன புத்தகங்களை கேட்பதும், “சார் அது அவுட் ஆப் பிரிண்டு சார், நீங்க எங்க தேடினாலும் கிடைக்காது” என பதில் வருவதும் இயல்பான விசயங்கள். அதைப்போலவே நீண்ட நாட்களாக தேடி வந்த பொழிபெயர்ப்பு நூலகளும் இம்முறை கிடைத்தது நிறைவான விசயம்.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் எல்லா புத்தகங்களையும் இப்போதுதான் வாங்கியுள்ளேன், இன்னும் படிக்கவில்லை. எனவே புத்தகம் பற்றிய குறிப்புகள் ஏற்கனவே நான் பல்வேறு தளங்கள் வாயிலாக அறிந்தவை மட்டுமே.

1. அஞ்சலை – கண்மணி குணசேகரன் (தமிழினி பதிப்பகம்)
நீண்ட காலமாக நான் தேடி வந்த இந்த நாவல். பெண்மையின் அவலங்களை மட்டுமின்றி ஆளுமையையும் பதிவு செய்துள்ளதாக பாராட்டப்பட்டது. தமிழின் ஆகச்சிறந்த பெண் கதாபாத்திரங்களில் அஞ்சலையும் ஒருவர்.

2. கொற்றவை – ஜெயமோகன் (தமிழினி பதிப்பகம்)
சிலப்பதிகாரதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள புதுக்காவியம். நான் இந்த புத்தகதை வாங்க முற்ப்படுகையில் அருகிலுருந்த பெரியவர் “ஒவ்வொரு தமிழனுடைய வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம் தம்பி” என்றது கூடுதல் சிறப்பு.

3. பேயோன் 1000 - பேயோன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
ட்விட்டரில் பேயோன் அவர்களது நுண்பதிவுகளின் தொகுப்பு. சிரிக்க, சிந்திக்க, குழம்ப, குதூகலப்பட என எல்லா வகையிலும் அறியப்பட்ட “காக்டெய்ல்”.

4. திசை காட்டிப் பறவை – பேயோன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
நிச்சயமாக இவரின் எழுத்து நானறிந்தவரை மிக மிக புதுமையானது. இவரே எழுதும் இவரின் கதையில் இவர்தான் மூன்றாம் நபர்.

5. தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் – திரட்டித் தொகுத்தவர் ஏ.கே.செட்டியார் (சந்தியா பதிப்பகம்)
தமிழின் முதல் சிறந்த பயணி என்று அறியப்படுபவரும், சிறந்த பயணக்கட்டுரைகள் எழுதியவரும், உலகம் சுற்றிய தமிழருமான ஏ.கே.செட்டியார் தொகுத்த பயணக்கட்டுரைகள் (பிறர் எழுதியவை).

6. தவிப்பு – ஞாநி (ஞானபாநு)
அதிதீவிர அரசியல் கட்டுரைகளுக்கு பேர்போன திரு.ஞாநி அவர்களின் நாவல். இதுலும் அரசியல்தான் களம். என்றபோதிலும் அதை சொன்னவிதம்தான் இந்த நாவலின் சிறப்பு.

7. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி (வம்சி புக்ஸ்)
எழுத்தாளர் திரு. பாஸ்கர் சக்தியின் ஒன்பது சிறுகதைகள் மற்றும் இரண்டு குறுநாவல்கள் (ஏழு நாள் சூரியன் ஏழு நாள் சந்திரன், அழகர்சாமியின் குதிரை) கொண்ட தொகுப்பு.

8. நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா (சந்தியா பதிப்பகம்)
தன் தினசரி வாழ்வின் சம்பவங்களின் தொகுப்பு நூல் என்றபோதிலும் அதை கலாப்ரியா சொன்னவிதத்தில் வசீகரிக்கின்றார். மிகுந்த பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் பெற்ற நூல்.

9. இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர் - தமிழில் குறிஞ்சிவேலன் (சாகித்திய அக்காதெமி)
மகாபாரதக்கதையை முன்வைத்து மலையாளத்தில் எழுதப்பட்ட நூல். அதிக கற்பனைகள் கலவாமல் எதார்த்தமாக நகரும் நாவல். எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் பரிந்துரை.

10. ஒரு கிராமத்தின் கதை – எஸ்.கே.பொற்றெக்காட் – தமிழில் சி.ஏ.பாலன் (சாகித்திய அக்காதெமி)
கிராமிய வாழ்வின் நேர்மையையும் மகத்துவங்களையும் காட்சிப்படுத்தும் இந்த நாவல் மலையாள மொழியில் எழுதப்பட்டது. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் பரிந்துரை.

எல்லா நூல்களின் விலையையும் பதிவிட ஆசைதான் என்றாலும் வருமான வரித்துறையை சமாளிக்க விலையைக் குறிப்பிடவில்லை (என்று சொன்னாலும் உண்மையான காரணம் உள்நாட்டுப் போரை தவிர்ப்பதே என்பதை மணமானவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்).

(ஜனவரி 15 சனிக்கிழமை வாங்கிய புத்தகங்கள் பிறிதொரு பதிவில்)

34 ஆவது சென்னை புத்தக காட்சி – வெள்ளி (ஜனவரி 14)

இன்று போகிப் பண்டிகை - விடுமுறை தினம். எனவே 11 மணிக்கெல்லாம் புத்தகக் கண்காட்சி துவங்கிவிடும். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால் (அதிலும் பொதுவாக மாலை நேரங்களில் நல்ல கூட்டமிருக்குமென்பது அனுபவசாலிகளின் அறிவுரை. இவன் புத்தகக் காட்சிக்கு போக முடிவு பண்ணினாலும் பண்ணினான் கேள்வி மேல கேள்வி கேட்டு நம்ம உயிர எடுக்கிறான் என அனுபவசாலிகள் அலுத்துக்கொண்டது தேவையில்லாத தனிக்கதை) நான் காலை நேரத்திலேயே சென்றுவிடுவதென முடிவு செய்திருந்தேன். அதன்படியே 11:30 மணியளவில் பைக்கில் கிளம்பி நான் கண்காட்சி திடலை 12 மணியளவில் அடைந்தேன்.

உள்ளே நுழைந்ததும் முதலிலேயே இரு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம். ஏறத்தாழ பாதி நிரம்பியிருந்தது. எனவே சுமாரான கூட்டம்தான் இருக்குமென நினைத்துக் கொண்டேன். வண்டியை நிறுத்தி விட்டு ரூ.10/- டோக்கனுக்காக செலுத்தினேன். கண்காட்சி நுழைவுக்கட்டணத்தைவிட இது இரு மடங்கு அதிகம். கண்காட்சியை நோக்கி நடக்கலானேன். கார் நிறுத்துமிடத்திலும் அவ்வளவாக கூட்டமில்லை. புத்தகக் காட்சியின் முன்புறத்தில் அரங்களுக்கு வெளியே இருந்த உணவு விடுதி மற்றும் இன்னபிற திண்பண்டங்களுக்கான கடைகளுமிருந்தன (சூப், பால்கோவா, பழரசங்கள் இத்யாதி இத்யாதி). என்றபோதும், அர்ச்சுனன் கண்ணுக்கு புறாவின் கழுத்து மட்டும் தெரிந்தது போல நேராக சென்று அரங்கத்தினுள் செல்ல நுழைவுச்சீட்டு வாங்கினேன் (காலையில் செமத்தியாக சாப்பிட்டு விட்டதால் வேறு வழியில்லை என்பது வசந்தி... இல்ல இல்ல வதந்தி).

நான் முதல்முறையாக சென்னை புத்தகக் காட்சிக்கு செல்வதால் எப்போதும் நடக்கும் சாதாரணமான விசயங்கள் கூட எனக்கு புதிதாக தெரிவதற்கான சாத்தியங்களுண்டு. நுழையுமிடத்திலேயே அரங்கங்களின் அமைப்பைக் காட்டும் “வாசகர் கையேடு” வழங்கப்பட்டது. நான் நுழையுமுன்பே தீர்மானித்திருந்தேன் எல்லா அரங்குகளுக்கும் செல்வதென. எனவே 1,2,3 என முதலிலிருந்து துவங்கினேன்.

ஏறத்தாழ எல்லாருமே புகழ்ந்திருந்த “வரலாற்றுச் சுவடுகள்” புத்தகத்தை வாங்கினேன். தினத்தந்தி அரங்கில் அந்த ஒரு தலைப்பில்தான் புத்தகம்தான் வைத்திருந்தார்கள். ஆனால் அதுவே நன்றாக விற்றது. அடுத்தடுத்த பதிப்பகங்களாக பார்த்துக்கொண்டே சென்றேன். நான் நிச்சயம் செல்ல வேண்டிய பதிப்பகங்கள் மற்றும் வாங்க வேண்டிய புத்தகங்கள் என குறிப்பொன்றை வைத்திருந்தேன். அதிலுள்ள பதிப்பகங்களில் நீண்ட நேரம் இருந்தேன். ஆர்வக்கோளாரால் சில பல ஆங்கில பதிப்பகங்களுக்கும் சென்று (வழக்கம்போல்)புரியாமல் Yes, Ya, You are correct , Thank you சொல்லி வெளியேறினேன். திரு. ஞாநி அவர்களின் ஞானபாநு பதிப்பகத்தில் நான் தேடிக்கொண்டிருந்த “தவிப்பு” நாவல் கிடைத்தது. கூடவே எந்த எதிர்கட்சி சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கான வாக்கெடுப்பும் நடந்தது. நீண்ட யோசனைக்கு பின்னர்(அரை விநாடி என்ற உண்மையை சொன்னால் என் நம்பகத்தன்மை குறையலாம்) என் வாக்கை செலுத்திவிட்டு வந்தேன்.

இந்தப் புத்தக கண்காட்சியில் நான் எதிர்பாராமல் நடந்த நல்ல விசயம் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த “அஞ்சலை” நாவலும், “கொற்றவை” நாவலும் கிடைத்ததுதான். (சார், உங்க பிரச்சனையே, புத்தகம் சுலுவா கிடைக்குற காலத்துல, ”அதான் இருக்கே பின்னால வாங்கிக்கலாம்” ன்னு விட்டுட்டு புத்தகம் தீர்ந்து பதிப்பகமும் பதிப்பை நிறுத்தின அப்புறமா அதே புத்தகத்தை காணக்கிடைக்காத பொக்கிஷம்போல தேடி அலையறதுதான் – என்பது நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் புத்தகக்கடை நண்பர் எனக்களித்த சான்றிதழ்). நான் வாங்கிய புத்தகங்களில் பட்டியல் அடுத்த பதிவில்.

பொதுவாக ஒவ்வொரு வாசகர்களிடமும் மனதில் ஒரு பட்டியல் இருக்கின்றது. அது அவரவர் ரசனையைப் பொருத்தே அமையும். சிலருக்கு சில பதிப்பக புத்தகங்கள், சிலருக்கு குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் புத்தகங்கள், சிலருக்கோ வரலாறு, சுயமுன்னேற்றம், சமையல் குறிப்புகள், ஆன்மீகம் இப்படி ஏதாவது. இதிலும் எல்லா தரப்பிலும் எல்லாவற்றையும் படிக்கவேண்டுமென்ற எண்ணம் கொண்ட ”ஆல் இன் ஆல்” அழகுராஜா மன்னிக்க ஆர்வராஜாக்களும் உண்டு. ஆனால் நான் பார்த்தவரையில் வெறுமனே பொழுதுபோக்க வந்தவர்கள் என எவருமில்லை. நான் கண்டவரையில் கண்காட்சிக்கு நல்ல கூட்டமிருந்ததாகவே கருதுகின்றேன். அதிலும் ஏறத்தாழ 4-5 மாதங்களே ஆயிருக்கும் கைகுழந்தையுடன் கண்காட்சி அரங்கை ஒரு தாய் வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சி.

இறுதியாக ஏறத்தாழ எல்லா அரங்குகளுக்கும் சென்று கை நிறைந்து மனம் நிறைந்து வெளியேறும் போது மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு எப்போது வருவோமென எண்ணிக்கொண்டேன் (அடுத்த இரு தினங்களுக்கு சென்னை சங்கமம் மற்றும் சில திரைப்படங்கள் என்பது என் திட்டம்).

ஆனால் அடுத்த தினமே மீண்டும் புத்தக கண்காட்சிக்கு வரவேண்டியதாய்ப் இருக்குமென்பதும், அன்றைய தினம் எனக்கு மிக மிக சிறப்பானதாயிருக்குமென்பதும் எனக்கு அப்போது தெரியாது.

34 ஆவது சென்னை புத்தகக் காட்சி – தயாரிப்பு

”ஏங்க பொங்கலுக்கு வரதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா ?”

தொலைபேசியில் கேட்டாள் என் மனைவி.

“இல்லம்மா, இந்த வாரம் முக்கியமான டெஸ்டிங் வேலை இருக்கும் போல தெரியுது. அதனால வரது ரெண்டு அர்த்தம்தான்”

“என்னங்க இப்படி சொல்லுறீங்க.... நோம்பி (விழா நாள் என்பதற்கான கொங்கு பாஷை) நாளாதுவுமா சென்னைல தனியா நீங்க என்ன பண்ணப்போறீங்க ?”

“அப்படியில்லமா, வேலை இருந்ததுன்னா நாம என்ன செய்யுறது சொல்லு ? அதுமட்டுமில்லாம புத்தக கண்காட்சிக்கு போலாம்னு ஒரு ஐடியா...” என்று லேசாக பிட்டைப் போட்டேன்.

“அதான பாத்தேன், ஏற்கனவே வாங்கின புத்தகத்த மொதல்ல படிச்சு முடிங்க, அப்புறம் வாங்கலாம்.” எதிர்பார்த்த பதிலாகையால் மேற்கொண்டு பயமில்லை. திட்டமிட்ட வசனங்களே போதும்.

”அருணா, உங்கிட்ட நான் பலமுறை சொல்லியிருக்கேன், நான் படிக்க ஆசைப்பட்ட, நேரமிருந்த போதெல்லாம் வாங்க காசிருந்ததில்லை. அதனால இப்ப வாங்க காசிருக்கு வாங்கி வைப்போம். என்ன சொல்லுற ?”

சில நிமிடங்களுக்கு மெளனம்...

“ஹலோ.. ஹலோ...”

“சொல்லுங்க...”

“என்ன ஆச்சு ? பேச்சையே காணோம்? “

“இல்லீங்க, தண்ணிகுடிக்க போயிருந்தேன், அதான் போன இங்கயே வச்சுட்டு போய்ட்டேன். என்ன சொன்னீங்க?”

என்ன ஒரு வில்லத்தனம்....பேசும்போது கேட்காமல் கேட்கும்போது பேசணுமான்னு எனக்கு ஏக கடுப்பு. இருந்தாலும் இப்ப வீரம் முக்கியமில்லை விவேகம்தான் முக்கியமாதலால். மீண்டும் துவங்கினேன்.

”அருணா, உங்கிட்ட நான் பலமுறை சொல்லியிருக்கேன், நான் படிக்க ஆசைப்பட்ட.....”

“ஏங்க இருங்க. தெரியும் தெரியும்... பழைய வசனம்தானே”

“ஆமா. ஆமா “ (பின்ன இதுக்காக தனியா வசனகர்த்தாவா வைச்சுக்க முடியும்..)

“சரி முடிவு பண்ணீட்டீங்க.... உங்க இஸ்டம் ”

“இல்லமா புத்தக கண்காட்சின்னு இல்ல. நெசமாலுமே வேலை இருக்கு”

“சொன்னா கேட்க மாட்டீங்க. ஆனா அப்பாகிட்டயும், மாமாகிட்டயும் ஒரு பேச்சு சொல்லிடுங்க”

என்னடா இது... இவ்வளவு சுலபமா வேலை முடிஞ்சிருச்சேன்னு ஒருபக்கம் சந்தோஷம். ஆனா இனி அப்பாகிட்டயும் மாமனார்கிட்டயும் பேசணுமேன்னு ஒரு தயக்கம் வேறு. என்ற போதிலும் இந்த புத்தகக் கண்காட்சி துவங்கிய நாள்தொட்டு பெரும்பாலும் நான் படிக்கும் தளங்களில் எல்லாம் வெளியாகியிருந்த புத்தக காட்சிப் பதிவுகள் ஏகத்துக்கு என்னை உசுப்பேற்றியிருந்ததன. அதிலும் பா. ராகவன் மற்றும் தமிழ்பேப்பரில் தினமும் போடும் பதிவுகள் புத்தக கண்காட்சிக்கு சென்றே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை உண்டாக்கின. பத்தும் பத்தாததற்க்கு நம்ம எஸ்.ராமகிருஷ்ணனும் அவருடைய சிபாரிசுகளைச் சொல்லியிருந்தார்.

எனவே ஒருவழியாக அப்பாவிடமும், மாமாவிடமும் பேசி அவர்களிடம் சம்மதம் வாங்கியாகிவிட்டது (பேசியது புத்தக கண்காட்சியைப் பற்றியல்ல அலுவலக வேலையைப் பற்றி). முடித்தபின் மீண்டும் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.

எனக்கு சம்பந்தமேயில்லாமல் “முடிவில் ஒரு திருப்பம்” என்ற புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு தொலைபேசியை எடுத்தேன்.

“சொல்லும்மா, இப்பதான் அப்பாகிட்டயும் மாமாகிட்டயும் பேசினேன். ஒண்ணும் பிரச்சனை இல்ல”

“ஏங்க நெசமா சொல்லுங்க... புத்தக கண்காட்சி மட்டும்தானா ? வேற ப்ளான் ஒண்ணுமில்லைல”

“சே என்ன இப்படி ஒரு கேள்வி. பசங்க எல்லாருமே ஊருக்கு வந்திருப்பாங்க தெரியுமில்ல”

“தெரியும். இருந்தாலும்... அடுத்த வாரம் போய்க்கோங்களேன்.... பொங்கலுக்கு இங்க வாங்க”

“என்னப்பா இது... வேலை இருக்கறதாலதான நான் வரமாட்டேங்கிறேன்...”

ஒருவழியாக இப்படியான பல கட்ட விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளைத் தாண்டி புத்தக கண்காட்சிக்கு செல்வது உறுதிப்படுத்தப்பட்டது.

பின் வந்த ஓரிரு நாட்களும் முக்கியமான அரங்களையும் புத்தகங்களையும் குறித்து வைப்பதில் கழிந்தது. ஜனவரி 13 வியாழன் வரை பல்வேறு தளங்களில் புத்தக கண்காட்சி குறித்த தகவல்களை திரட்டிக்கொண்டேயிருந்தேன். ஜனவரி 14 வெள்ளி காலை செல்வதாக திட்டம்.

34 ஆவது சென்னை புத்தகக் காட்சி – முன்கதை சுருக்கம்

நான் சென்னை வந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவரை ஒருமுறை கூட நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றதில்லை. புத்தகங்கள் படிப்பதில் எனக்கு ஆர்வமிருந்த போதிலும் சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்லாமலிருந்ததற்கு சில காரணங்களிருக்கின்றன.

பொதுவாக புத்தக கண்காட்சி நடைபெறும் வார நாட்களில் அலுவலக பணிகளால் போக இயன்றதேயில்லை. அதுமட்டுமின்றி, புத்தக கண்காட்சி நடைபெறும் பொங்கல் பண்டிகை (தைப்பொங்கல் மட்டுமல்ல என் சொந்த ஊர் அம்மன் பொங்கலும்தான்) சமயங்களில் வார விடுமுறைகளில் அவசியம் நான் ஊருக்கு செல்லவேண்டியிருக்கும் (இல்லாட்டி மட்டுமென்ன.... எல்லா சனி, ஞாயிறும் ஊருக்கு போறவந்தான, இதில பொங்கல் கெடா வெட்டுன்னு சாக்கு வேற). நான் வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் பண்டிகைதினங்களில் என்னுடைய இருப்பு பெற்றோர்களுக்கு அவசியமாகின்றது (என்று என்னால் நம்பப்படுகின்றது, அவங்களைக் கேட்டாதான் உண்மை தெரியும்).

இதைத்தவிர இன்னுமொரு முக்கியமான காரணமுண்டு. பொதுவாக மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ நான் தொடர்ந்து புத்தகங்கள் வாங்கும் இயல்பினன். அனைத்தையும் உடனடியாக படித்து முடிக்க முடியாவிட்டாலும், பணமிருக்கும் போது வாங்கிக் கொண்டு, நேரம் கிடைக்கும்போது வாசிப்போம் என்ற எண்ணம்தான் காரணம். அதனால் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்க வேண்டுமென்று தோன்றவில்லை.

என்றபோதிலும் ஈரோடு, கோவை என இரண்டுமுறை எதேச்சையாக புத்தக கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்பு நேர்ந்தது. அப்போதெல்லாம் சென்னை புத்தக கண்காட்சிக்கும் செல்ல வேண்டுமென்ற ஆவல் மனதில் எழும். காரணம் என்னவென்றால் மற்ற ஊர்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை விடவும் சென்னை புத்தக கண்காட்சி அதிக அரங்குகள் கொண்டது என்பது மட்டுமல்ல.

நான் என் வாழ்வின் ஒரு கட்டத்தை சென்னையில் கழித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் புத்தக கண்காட்சிக்கு ஒருமுறைகூட சென்றதில்லை என்பதை பெரும் குறையாகவே உணர்ந்திருக்கின்றேன். என்னுடைய அந்தப் பெரும் குறை இந்த வருடம் தீர்ந்தது.

34 ஆவது சென்னை புத்தக காட்சி 2011 க்கு இவ்வருடம் செல்ல நேர்ந்தது. அதன் அனுபவங்களை பதிவிட எண்ணியிருக்கின்றேன்.

பரமு

சில வாரங்களுக்கு முந்தைய ஒரு ஞாயிறு இரவில், திருப்பூர் செல்வதற்காக பூண்டி (என் சொந்த ஊர்) பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். லேசான மழை பெய்து கொண்டிருந்தது. ஏதேதோ சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. பேருந்து நிறுத்தத்தில் மிக சொற்பமான பயணிகள் இருந்தனர். என்னவென்று வரையறுக்கவியலாத ஏதேதோ சிந்தனைகள் மனதுள் தோன்றியவண்ணமிருந்தன. ஒரு சில வினாடிகளாக மனதில் யாரோ என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு உள்ளுணர்வு தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தேன் தெரிந்தவர் யாரும் அருகிலில்லை. எனவே என் உள்ளுணர்வை புறக்கணித்து மீண்டும் கவனத்தை பேருந்து வரும் திசையில் செலுத்த முற்பட்ட போதுதான் கவனித்தேன், பேருந்து நிறுத்தத்தின் ஒரு இருண்ட மூலையில் யாரோ என்னை பார்த்துக்கொண்டிருப்பதை.

அந்த இடம் நல்ல இருட்டு, ஆகையால் .என்னால் அங்கிருந்த நபரை சரியாக காணமுடியவில்லை. அவர் கையிலிருந்த பீடித்துண்டின் ஒற்றை சிவப்பு வெளிச்சம் மட்டுமே அங்கு ஆளிருப்பதை உணர்த்தியது. நானும் அவரைப் பார்த்துகொண்டிருப்பதை கண்டவுடன் அந்த நபர் என்னை நோக்கி வந்தார். என்னருகே வந்த பின் இறுதியாக பீடியை ஆழமாக இழுத்துவிட்டு சுண்டி எறிந்தார். லேசான மது நெடியுடன் என்னைப் பார்த்துக் கேட்டார்....

“என்ன காளீஸ்வரா... அப்படி பாக்குற.. அடையாள்ம் தெரியலையா ?”

இந்த குரல் எனக்கு மிகவும் தெரிந்த குரல்..... நான் என் வாழ்வின் ஏதோ ஒரு கால கட்டத்தில் அடிக்கடி கேட்ட குரல். என் மனம் மிக மிக வேகமாக ஆராயத்துவங்கியது. பல நிமிடங்கள் கழிந்தபின்னரும் என்னால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“டேய்... என்னடா, நெசமாலுமே கண்டுபிடிக்க முடியலையா ?. அப்ப சரி கிளம்பவேண்டியதுதான்..... உனக்கு ஒரு அஞ்சு நிமிசம் டைம் தரேன், அதுக்குள்ள கண்டுபிடிக்காட்டி.... நான் பாட்டுக்கு போய்க்கிட்டேயிருப்பேன்”

யோசிக்கத்துவங்கிய அந்த நிமிடமே எனக்குத் தெரிந்துவிட்டது அஞ்சு நிமிசமில்லை அஞ்சு மணிநேரமானாலும் என்னால் அவனை அடையாள்ம் காணவியலாதென்று.

ஓரிரு நிமிடங்களில் அவனே என்னால் கண்டுபிடிக்க முடியாதென எப்படியோ தெரிந்து கொண்டான் (என்ன எப்படியோ தெரிந்து கொண்டான், பாண்டியராஜன் ரேஞ்சுக்கு அழகான திருட்டு முழி முழிச்சு..பாக்கியராஜ் மாதிரி பம்முனா, எவனா இருந்தாலும் நீ வேஸ்டுன்னு தெரிஞ்சுக்குவாங்கடா முட்டாள்.....). பின்னர் அவனே பேசத்துவங்கினான்.

”ம்.. எப்படியாவது கண்டுபிடிச்சுருவன்னு நெனச்சேன்... பரவாயில்ல... பல வருசமயிருச்சுல்ல... அதான் மறந்துட்ட.. நான் தான்டா பரமசிவம். உங்கூட…”

அவனுடைய பெயரைக் கேட்டவுடனே எனக்கு அவனைத் தெரிந்துவிட்டது. என்னுடன் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ”திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி” யில் ஒன்றாகப் படித்தவன். நெருங்கிய தோழன் என சொல்லமுடியாவிட்டாலும், மறக்குமளவு அன்னியனில்லை.

எங்கள் பள்ளி ஒரு கிராமப்புறப் பள்ளி. பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தினரும் அதற்கும் கீழிருப்பவர்களும் படிக்கும் பள்ளி. இங்கு நான் குறிப்பிடும் நடுத்தரவர்க்கத்தினர் என்பவர்கள் சத்துணவை நம்பியிராத குடும்ப மாணவர்கள் அவ்வளவே. அதைபோலவே பெரும்பாலும் விவசாயத்தை நம்பிருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். என்னுடைய நண்பர்கள் பலரும் விடுமுறைதினத்தில் கூலி வேலை செய்தவர்கள். ஒருவகையில் நான் வாழ்வின் முகங்களை அறிந்துகொள்ளச் செய்தவர்கள்.
அந்த பள்ளியில் ஒரு மூன்றாண்டு காலம் என்னுடன் படித்தவன்தான் இந்த பரமசிவம். இருவரும் பெரும்பாலும் அடுத்தடுத்த பெஞ்ச்களில்தான் அமருவோம். என்றாலும் வகுப்பறையினுள் அதிகம் பழக்கமில்லை. மற்றபடி கிரிக்கெட் விளையாட்டிலும், மதிய உணவுவேளைகளிலும் பலமுறை பேசி சிரித்து பழகியிருக்கின்றோம். விவசாயக் குடும்பத்திலிருந்து படிக்கவந்தவன், சுமாராகத்தான் படிப்பான்.

அவன்தான் என்னெதிரே மது நெடியுடன், பீடிப்புகையுடன் நிற்கின்றான். அந்த நொடியில் நானடைந்த வெட்க உணர்ச்சிக்கு அளவே இல்லை. அவனிடம் முகத்திலும் சரி, உடல் பருமன், உயரம் இப்படி எதிலும் பெருமளவு மாற்றம் இல்லாத போதும் என்னால் அவனைக் கண்டறிய இயலாமல் போனதையெண்ணி மிக வருத்தமடைந்தேன்.

”என்னடா இப்பவாச்சும் அடையாளம் தெரிஞ்சதா..இல்லியா ?”

”சொல்லுடா பரமு, ஸாரிடா என்னால டக்குன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியல. எப்புடி இருக்க ? என்ன பண்ணுற?”

“நா நல்லாதாண்டா இருக்கேன், நீ என்ன பண்ணுற ? எங்கியோ பயணம்வெச்சுடாப்புல தெரியுது”

”நா மெட்ராஸ் ல வேலைல இருக்கேண்டா. லீவுக்கு ஊருக்கு வந்தேன். இப்ப திரும்ப மெட்ராஸ் போறேன்”

“நீ, பரவாயில்லடா நல்லா படிச்ச, இப்பபாரு மெட்ராஸ்ல வேலைல இருக்க. என்ன பாரு, படிடா படிடான்னு எங்கையன் சொன்ன போதும் கேக்கல, வாத்தியாருங்க சொன்னபோதும் புரியல... இப்ப என்னடான்னா....”

“ஏன்டா நீ இப்ப என்ன பண்ணுற?”

டக்கென்று சிரித்தான். எனக்கு ஒரு நிமிடம் என் பள்ளி நினைவு வந்து போனது.

“என்ன பண்ணலன்னு கேளு”

”.....”

“கஞ்சா, கடத்தல், பீடி, குடி, கம்பெனி வேல இப்படி எதயும் விட்டுவக்கல. சோத்துக்கு என்ன வேணுமோ அத எல்லா வழியிலும் சம்பாதிக்கிறேன். அவ்வளவுதான். நான் நல்லாதாண்டா இருக்கறேன். நீயும் நல்ல இரு”

நான் பேசமறந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சரிடா உனக்கு பஸ் வந்திருச்சு, பாத்து போ. இப்படி எப்பயாவது பாத்த ரண்டு வார்த்த பேசு என்ன...”

சொன்னவன், பதிலுக்கு காத்திராமல் லேசான தள்ளாட்டத்துடன் சாலையைக் கடந்து சென்றான். கனத்த மனதுடன் பேருந்து ஏறி இருக்கையில் அமர்ந்த பின்னர் அவனிடம் கூற மறந்ததை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

“இல்லடா பரமு, வெறும் படிப்பு மட்டுமில்ல எங்கப்பா, அம்மா அங்க இங்க கடன் வாங்கித்தந்த காசும்தான் என்னோட இந்த நிலைக்கு காரணம். விதியோ இல்ல வேற எதாவதோ உனக்கும் உன்ன போல நெறைய பேருக்கும் அது அமையல”