title


டமார் - II



”ஒண்ணும் பிரச்சனை இல்லைங்க கடைசி வண்டி கண்டக்டர் நம்ம பிரண்டுதான்” நம்பரை வாங்கியவுடன் குரலில் உற்சாகம் மேலிட சொன்னார் ”திரு. ராஜ்” எங்கள் பேருந்து நடத்துனர். ”யாருப்பா?” எனக்கேட்ட ஓட்டுனரிடம் மகிழ்ச்சியுடன் சொன்னார் “அதான்பா நம்ம சுந்தரமூர்த்தி.. பல்லடத்துக்காரன்”. அதே உற்சாகத்துடன் போன் செய்து பேசத்துவங்கினார்.

“யாரு சுந்தரா? நான் ராஜ் பேசறேன்பா…. அது வேற ஒண்ணுமில்ல இன்னிக்கு ஷிப்டு என்னோடது… நம்ம வண்டி இங்க “Womens Polytechnic” கிட்ட கண்ட்ரோல் இல்லாம நிக்கிது; ஒரு 14 பேரு இருக்காங்க டிக்கட்டும் அடிச்சாச்சு; அதான் ஒங்க வண்டி இப்ப வருமுல்ல… அண்ணா செல வழியா போகாம “Womens Polytechnic” வழியா வரசொல்லலாம்னு
……
யோவ்… என்னயா சொல்லற ? இது எப்ப நடந்தது ?
…….
சரி மாப்ள…. சோலி சுத்தம் நல்லா சாப்பிட்டு தூங்கு” உற்சாகமெல்லாம் வடிந்தவராய் செல்லை வைத்தார் எங்கள் பேருந்து நடத்துனர். அதுவரை அங்கு நடந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பயணிகள் பொறுமை இழக்கத்துவங்கினோம். என்ன ஆனதென்பதை அவரும் சொல்வதாகத் தெரியவில்லை. சில நிமிடங்களிலேயே “என்ன சார் ஆச்சு?” என எல்லோரும் நச்சத்துவங்கினோம். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டு சலித்துக்கொண்டே சொன்னார் திரு. ராஜ் “அது, கடைசி பஸ்ஸூம் ஏதோ ரிப்பேராமாங்க… அதனால அது போன சிங்கிள் கூட போகாம டிப்போலதாங்க நிக்கிது”. நம்பமுடியாமல் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். “இனி வேற வழியில்ல… பேசாம ”AE” க்கு போன் போட வேண்டியதுதான்” என சொன்னார் ஒட்டுனர். இதுவரை மாற்றி மாற்றி போன் பேசியதில் நடத்துனரின் செல் balance காலி. ஒட்டுனரின் செல் எப்போதோ SwitchOff ஆகிவிட்டது. எங்களில் ஒருவரிடம் செல்லை வாங்கியவர் டிப்போவுக்கு போன் செய்து அவர்கள் மூலமாக AE விடம் பேசத்துவங்கினார்.

ஹலோ.. சார் வணக்கங்க சார். நான்ராஜ்பேசறங்க…. 7286 திருப்பூர் பஸ் கண்டக்டர்; இங்க “Womens Polytechnic” பக்கத்துல்ல பஸ்ல பேக் வீல் ரீப்பர் கட்டாயிடுச்சு; பஸ் ஓட்டறதுக்கு கண்ட்ரோல் இல்லீங்க..ஒரு 15 பேர் இருக்காங்க டிக்கட் வேற அடிச்சாச்சு;
…….
இல்லீங்க சார் வேற பஸ் எதுவும் டிப்போல இல்லையாமங்க சார்; கடைசி சிங்கிள் பஸ்ஸூம் ஏதோ ரிப்பேருன்னு டிரிப் கேன்சலாயிடுச்சு; பேசஞ்சர்ஸ் எல்லாரும் சண்டைக்கு வராங்க
…..
அதான் வேற என்ன பண்ணலாம்ன்னு… UnTime வேற ஆயிடுச்சு சார் லேடீஸ் எல்லாம் நிக்கறாங்க…
……
இதோ ஒரு நிமிஷம் சார்” என்றவர் ஓட்டுனரிடம் செல்லைக் கொடுத்தார்.

“சார் சொல்லுங்க நான் டிரைவர் பேசறேன்…
சார், அது கண்டிப்பா முடியாதுங்க.. உப்பிலிபாளையம் எங்கயிருக்கு.. பேசஞ்சர் எல்லோரையும் வச்சிகிட்டு ரிஸ்க்குங்க சார். அதுவும் வண்டி சுத்தமா கண்ட்ரோலே இல்ல.. மெயின் ரோட்ல ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா பெரிய ப்ராப்ளமாயிடும்
...
சரீங்க சார் கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க” என போனை கட் செய்தவர் நாங்கள் விசாரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் குமுறினார்

“என்ன ஒரு புத்தி பாருங்க… எல்லாரையும் ஏத்திக்கிட்டு மொல்ல மொல்ல உப்பிலிபாளையம் ஷெட்டுக்கு ஓட்டிட்டு போய் வண்டிய சரி பண்ணிட்டு, அதுக்கப்புறமா திருப்பூர் போறதாமா…. வண்டி இருக்கற நெலமைல உருட்டிட்டுதான் போக முடியும் ஒரு 2 மணி நேரமாவது ஆயிடும். அப்பக்கூட போகமுடியும்ன்னு எந்த கேரண்டியும் கெடயாது; அதான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்” மூச்சுவிடாமல் பேசியவரிடம் மீண்டும் கேட்டோம் “சார் கடைசியா என்னதான் சொன்னாரு ?”

”அவரே மறுபடியும் கூப்பிடுறாராமாங்க”

டமார் - I


டமார்……”

நேற்றிரவு 10:50 மணிக்கு கோவை காந்திபுரத்திலிருந்து அவினாசி வழியாக திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்திலிருந்து அந்த சத்தம் வந்தது 11 மணிக்கு. பேருந்தின் பின்புற சக்கரங்களின்ரீப்பர்உடைந்ததால் வந்த சத்தம். விளைவாக பின்புற சக்கரங்கள் கட்டுப்பாட்டை இழந்தன. மொத்தத்தில் அந்த பேருந்து இப்போதைக்கு கிளம்பாது. இந்தப் பேருந்தை விட்டால் திருப்பூர் புது Bus Stand செல்லவும் அவினாசி – திருப்பூர் வழியாக உள்ள ஊர்களுக்கு செல்லவும் கடைப்பேருந்து இரவு 11:35 அளவில் மட்டுமே உண்டு. பேருந்தில் ஏறத்தாழ 20 பேர் இருந்தோம் அதில் 3 பெண்கள். நடத்துனரிடம் சென்று வாக்குவாதத்தை துவங்கினார்கள் சிலர்.

“சார், இப்ப என்ன சார் பண்ணுவீங்க?”

“இருங்க சார், ஏதாவது சரி செய்ய முடியுமான்னு பாக்கலாம்” நம்பிக்கையாகச் சொன்னார் நடத்துனர்.

“இதெல்லாம் வேலைக்காவாது; மெக்கானிக் வரணும்; இல்லாட்டி நாமதான் டிப்போவுக்கு போகணும்” என உண்மையைப் போட்டுடைத்தார் ஓட்டுனர்.

“இல்லாட்டி டிப்போவுக்கு போன்போட்டு வேற பஸ்ஸாவது வர சொல்லுங்க சார்” இப்போது குரல்களின் எண்ணிக்கை அதிகமாகி இருந்தது.

”ஹலோ.. சார் நான் “ராஜ்” பேசறங்க…. 7286(பஸ் நம்பர்) திருப்பூர் பஸ் கண்டக்டர்; இங்க பஸ்ல பேக் வீல் ரீப்பர் கட்டாயிடுச்சு; பஸ் ஓட்டறதுக்கு கண்ட்ரோல் இல்லீங்க..ஒரு 20 பேர் இருக்காங்க டிக்கட் வேற அடிச்சாச்சு; அதான் வேற பஸ் அனுப்ப சொல்லலாம்னு…….
………………………………….
.செரிங்க…
………………………..
.செரிங்க… சீக்கிரம் கூப்பிடுங்க” என போனை கட் செய்தவர் எங்களிடம் சொன்னார்.

“சார், அவினாசி, கருமத்தம்பட்டி போறவங்க எல்லாரையும் ஈரோட்டு பஸ்ல அனுப்பிடலாம்; திருப்பூர் போறவங்க கொஞ்சம் Wait பண்ணுங்க”.
தொடர்ந்து வந்த ஈரோடு பஸ்ஸில் ஒரு 6 பேர் கிளம்பிவிட இப்போது இருப்பது 14 பேர் மட்டுமே. ஒரு 15 நிமிடங்களான பின்னரும் எந்த ஒரு போனும் வரவில்லை. இப்போது நாங்கள் நடத்துனரைப் பார்க்க புரிந்துகொண்ட அவர் போனை எடுத்தார். உடனே புத்திசாலி பயணி ஒருவர் (இந்தமாதிரி அனுபவம் நிறைய உள்ளவர் போல) சொன்னார்.
“சார் பஸ் எதுவும் டிப்போல இல்ல… அப்படி இப்படின்னு நிறைய சாக்கு சொன்னாங்கன்னா அவினாசி வழியாப்போற கடைசி பஸ்ஸையாவது இதே வழியில வரச்சொல்லுங்க.

பேசத்துவங்கினார் நடத்துனர்

“சார் அதான் பஸ் கண்ட்ரோல் இல்லைன்னு போன் பண்ணியிருந்தேனே 7286 கண்டக்டர்; பேசஞ்சர்ஸ் எப்ப பஸ் வரும்னு கேட்கிறாங்க சார்.
…….
சார் இல்லீங்க அப்படின்னா அந்த கடைசி பஸ்சையாவது “Womens Polytechnic” வழியா வரசொல்லுங்க. கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க சார்” சலித்துக்கொண்ட நடத்துனர் எங்களிடம் சொன்னார்

“டிப்போல எந்த பஸ்ஸும் இல்லயாமாங்க…கடைசிபஸ் கண்டக்டர் நம்பர் தரோன்னாங்க. பாப்போம்”. ஒரு 5 நிமிடம் தாண்டியும் எந்த Callம் வரவில்லை. இப்போது நாங்கள் சொல்லவேண்டிய தேவை ஏற்படவில்லை அவரே போன் செய்து கண்டக்டர் நம்பரையும் வாங்கிவிட்டார்….."



CKK அறக்கட்டளை - இலக்கிய விருது வழங்கும் விழா 2012


நேற்று (29-07-2012) ஈரோட்டில் “CKK அறக்கட்டளை”யின் இலக்கிய விருது வழங்கும் விழா “வடிவு சுப்பிரமணியன் திருமண மண்டபத்தில்” நடந்தது. இவ்வருடம் விருது வழங்கப்பட்டது எழுத்தாளர் திரு. ”ஜெயமோகன்” அவர்களுக்கு. காலை முதல் மதியம் வரை “கவியரங்கம்” பின்னர் மாலையில் விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து கருத்தரங்கமும் என்பது நிகழ்ச்சி நிரல்.

என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், நான் வாசித்ததிலேயே ஆகச்சிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு சிறப்பிடம் உண்டு. ஆன்மீகம் துவங்கி அட்டகாசமான நகைச்சுவை வரை இந்த மனிதன் எழுத்தாத துறைகளே இல்லை எனலாம். எந்தப் பொருளைப்பற்றி (Subject) எழுதினாலும், அந்தத் தலைப்பில் தவிர்க்கவே முடியாத முக்கியமான ஒரு எழுத்தாக இவரின் எழுத்துக்கள் இருக்கும். இதுநாள் வரை நான் திரு.ஜெயமோகன் அவர்களின் எழுத்தை வாசித்துள்ளேன். ஒரிரு முறை அவரது பேச்சை “Youtube”ல் கேட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவரை நேரில் பார்த்ததேயில்லை என்பது எனக்கு ஒரு வருத்தமாக இருந்தது. அந்தக் குறை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

மாலை 5 மணியளவில் துவங்கிய விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் அமர்ந்திருந்தார் திரு. ஜெயமோகன். சம்பிரதாயமான வரவேற்புரைகளுக்கு பின்னர் விருது வழங்கப்பட்டது. பின்னர் ஏற்புரை நிகழ்த்தினார் திரு. ஜெயமோகன். மிகச் சிறிய பேச்சுதான் ஆனால் சிறப்பான பேச்சு. தான் துறவியாக திருவண்ணாமலை மற்றும் காசியில் அலைந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சொன்னார். ஒரு கதையின் வலிமையை, கதை சொல்லியின் பெருமையை ”காசி”யில் தன் கண்முன்னே நடந்த சம்பவத்தின் வாயிலாக விளக்கினார். அற்புதமான ஒரு பேச்சு. எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. தொடந்து கருத்தரங்கம். திரு.ஆறுமுகத்தமிழன், திருமதி.வெண்ணிலா, திரு.இறையன்பு, திரு.பிரபஞ்சன் என அற்புதமான பேச்சாளர்கள் சிறந்த உரையாற்ற விழா 9 மணியளவில் நிறைவுற்றது.

இந்த நாள் இனிய நாள்….

கை கொடுக்கும் கை


எனக்கும் என் அலுவலக நண்பனொருவனுக்கும் சமீப காலங்களில்இளையராஜா” vs “ஹாரிஸ் ஜெயராஜ்விவாதம் நடைபெறுவதுண்டு. அவனுக்குஇசைனா அது ஹாரிஸ் இசைதான்பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கும்”. எனக்கோ ராஜாஇளையராஜா அல்லஇசையராஜா;  மட்டுமல்ல இசைக்கெல்லாம் ராஜா. அவனும் சரி நானும் சரி எங்கள் நிலையிலிருந்து மாறியதில்லை.
சென்றவாரம் எதேச்சையாக அவனை பார்க்கப்போனேன்

என்னங்கஇன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கறமாதிரி தெரியுதுஎன்றான்

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லப்பா; சும்மாதான்

இல்லரொம்ப சந்தோஷமா இருந்தா உடனே இளையராஜா பாட்டா கேட்பீங்களே..” என நக்கலடித்தான்.

அதுதான் தப்புநான் சந்தோஷமா இருந்தா கேட்க நெறையபேரு இருக்காங்க. யுவன், ரெஹ்மான், உங்காளு (ஹாரிஸ் ஜெயராஜ்) இப்படி. ஆனா மனசுல கஷ்டம்ன்னு வந்தா கேட்கறது எங்காளு (இளையராஜா) பாட்டதான்” – இதை எந்தவித யோசனையும் இல்லாமல் உடனே சொல்லிவிட்டேன்.

பின்னர், யோசிக்கும்போதுதான் நான் சொன்னது எவ்வளவு உண்மை என்பது புரிகிறது. இதுவரை நான் ராஜா பாடல்களை தேடித்தேடி கேட்டது மனம் முழுக்க வருத்தங்களுடன்தான். அப்போதெல்லாம் எனக்கே எனக்காக அவர் பாடல்கள் இருப்பதான பிரம்மை தோன்றுவதுண்டு. ஆயிரம் காதல் பாடல்கள் தராத நெருக்கத்தை ஒரு “உன்குத்தமா” தந்துவிடுகிறது. அதிலும் “how to name it” என்ற இசைத்தொகுப்பில் உள்ள “How to name it” என்ற இசைக்கோர்வை என் all-time favorite. வார்த்தைகள் ஏதுமின்றி வெறும் இசையாலேயே மனதுடன் பேசியிருப்பார் ராஜா. அந்த இசைக்கோர்வை கூட மனதின் வலியைப் பேசுவதுதான்.
வேறென்ன… மகிழ்ச்சியில் பாராட்டும், கைகுலுக்கும் கரங்களைவிட வருத்தத்தில் விழிதுடைக்கும் கை எப்போதும் உயர்ந்த்து. எனக்கு அந்த “கை” ”இளையராஜா” வின் கை.

பில்லா II


 நண்பர்களின் உயிர் போக்கும் ரீதியான எச்சரிக்கைகள், ”இதெல்லாம் ஒரு பொழப்புரீதியான நக்கல்கள், ”சொன்னா கேளு மாப்ளஎன்பதான அறிவுரைகள், கூடவேஉனக்குப் போயா இந்த நிலைமைஎனும்படி அனுதாபங்கள் இவையெல்லாவற்றையும் தாண்டி நேற்றிரவு கோவை சத்யம் சினிமாஸில் பில்லா II” படம் பார்த்தேன்.
ஈழத்தமிழர்கள் என காட்டப்படும் எல்லோருமேஇந்தியதமிழில் பேசுவது, “ஒப்புக்கு சப்பாணிலாஜிக் கூட இல்லாமல் எல்லா காரியங்களையும் பில்லா அசால்ட்டாக செய்வது, படம் பார்க்க வந்த நம்மைத் தவிர எல்லோரையும் சுட்டோ, குத்தியோ கொன்றுகொண்டேஏஏஏஏஏஏ இருப்பது, பெரும்பாலான காட்சிகளில் தெறிக்கும் ரத்தம் நம்மீதும் படுவது போன்ற உணர்வைத்தருவது என படத்தில் நிறையமைனஸ்கள் இருந்தாலும் எனக்கு படம் பிடித்தது (தம்பி நாங்கெல்லாம் “சகுனி” யவே தூக்கிப்போட்டு தூர்வாருனவிங்க… நீங்கென்னம்மோ இதுக்கு போயி அலட்டிகிட்டு).
யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, இரா.முருகன் அவர்களின் “ஷார்ப்” வசனங்கள், ஒளிப்பதிவு, எல்லாவற்றுக்கும் மேலாக “அஜித்”தின் டான் ”Appearance” என என்னைக் கவர்ந்த விசயங்கள் நிறைய. எப்படி “சைக்கோ” கேரக்டர்க்கு என ஒரு ”தனுஷ்” இருக்கிறாரோ, “மைக்” என்றாலே “மோகன்”தானோ, பசு மாட்டில் பால் கறக்க ஒரு (கி)ராமராஜனோ கேப்டனுக்கு ஒரு போலீஸ் வேசமோ, அதைப்போலவேதான் அஜித்துக்கு இந்த “டான்” கேரக்டர்களும் அசால்ட்டாக “ஸ்கோர்” செய்கிறார். (ஆனால் இந்தப் படத்தில் அஜித்துக்கு நடிக்க கிடைத்த வாய்ப்புகளை விட ”நடக்க” கிடைத்த வாய்ப்புகளே அதிகம்).
என்னைப் பொருத்தமட்டில் படம் “ஆகா, ஓஹோ” வெல்லாம் இல்லை. அதைப்போலவே ”அடச்சீ” ரகமுமில்லை. கொஞ்சம் ஓவர் வன்முறை என்றாலும் கூட தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.

ரெண்டு லட்டு

சில நாட்களுக்கு முன் எனக்கும் கார்த்திக்கும் ஒரு சின்ன சண்டை... சண்டையின் உச்சத்தில் கோபமடைந்து நான் அவனிடம் “டூ” என சத்தமாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தேன்... “அப்பா, அப்பா” என கூப்பிட்டவாறே பின்னால் வந்தான் கார்த்திக்.

எனக்கு ரொம்ப சந்தோசம். சரி நாம டூ விட்டா பையனால தாங்க முடியல என எண்ணியவாறே (கொஞ்சம் விளையாட்டு காட்ட) படுக்கையில் வந்து விழுந்தேன். அவனும் சளைக்காமல் பின்தொடந்து வந்து என்னை எழுப்பினான். எனக்கு இன்னும் சந்தோசமாகிவிட்டது. திருப்தியுடன் ”பழம்” விடலாம் என எழுந்தவுடன் கார்த்திக் சொன்னான்

“அப்பா, ரெண்டு டூ”

டர்க்கி டவல் - II


முதல் பாகம் இங்கே => டர்க்கி டவல் - I

என் கண்ணில் பட்ட அது ஒரு “டர்க்கி டவல்”. நீண்ட நாட்களாகவே ஒரு டர்க்கி டவல் வாங்கவேண்டுமென்ற ஆசை எனக்கு. எனவே கால்கள் தானாக நகரத்துவங்கின.

”வீட்ல ஊருப்பட்ட துண்டு கெடக்குது இதுல இது வேறயா?” என்ற அப்பாவை சமாதானப்படுத்த காரணங்களை (கட்டுக்கதைகளை !?) அடுக்கத்துவங்கினேன்.

அப்பா, மத்த துண்டு மாதிரி இல்லீங்கப்பா இது டர்க்கி டவல். நெறையா ஈரத்த உறிஞ்சும். சீக்கிரமா துவட்டிடலாம். அது மட்டுமில்லீங்கப்பா இது சீக்கிரமா காஞ்சிடும் (ஓ அப்படியா ?). மழக்காலம் வேற… என என்னமோ டர்க்கி டவல் ஒரு உயிர் காக்கும் மருந்து ரேஞ்சுக்கு (அளவேயில்லாமல்) அளந்துவிட்டுக் கொண்டிருந்தேன். அப்பா சமாதானமடைந்தாரோ இல்லையோ நான் சொல்லும் நான் லீனியர் கதைகளை கேட்க முடியாமல் ஒரு வழியாக துண்டுகளைப் பார்க்க ஆரம்பித்தார். அலசி ஆராய்ந்து ஒரு டர்க்கி டவலையும் பில்லில் சேர்த்த பின்தான் மூச்சே வந்தது.

சேலை, துண்டு மற்றும் லுங்கிகளுடன் (கூடவே கலர் கலர் குளியல் கனவுகளுடனும்) வீடு வந்தேன். அம்மா, அத்தை இவர்களுடன் என் தர்மபத்தினியும் புடவை, லுங்கிகளை பார்க்கலானாள். எதேச்சையாக “டர்க்கி டவலை” பார்த்தவள் அதிர்ச்சியாகி (என்னவோ வெடிகுண்டை பார்த்தமாதிரி) என் அப்பாவிடம் கேட்டாள் ( நம்மள கேட்டா உருப்படியா ஒண்ணும் சொல்ல தேறாதுன்னு அவளுக்கு தெரியும்)

“இத எதுக்குங்க மாமா வாங்கினீங்க ?”

“இல்லமா இது ஏதோ நல்லா ஈரம் உறிஞ்சும், சீக்கிரம் காயும்.. அப்படி இப்படின்னு ஏதேதோ சொன்னான்; அதான்” அப்பா போட்டு உடைத்துவிட்டார். இனி என் முறை

கோடீஸ்வரன் போட்டியில் பதினாலாவது கேள்விக்கு பதில் சொல்லும் பாவனையில் படுவேகமாய் யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்கு அவசியமேயில்லாமல் உண்மையைக் கண்டறிந்து அதை எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டாள் என் மனைவி.

“அதெல்லாம் சும்மாங்க மாமா. கணேஷ் (என் நண்பன்” வச்சிருப்பாரு, ஒடனெ இவருக்கும் வாங்கணும்னு தோணிருக்கும் அவ்வளவுதான்.”

“என்ன கொடுமை சார் இது ?”

டர்க்கி டவல் - I



அம்மா..வீட்ல ஒரு லுங்கி கூட நல்லா இல்ல; புதுசா வாங்கோணும்சலித்தவாறே கத்திக்கொண்டிருந்தேன்.

“இப்ப கூட அவநாசில புதுசா ஜவுளிக்கடை ஆரம்பிச்சிருக்காங்க; நாலஞ்சு நாளா நல்ல கூட்டம், வெல யெல்லாம் கூட ரொம்ப கம்மியாம்; அங்க போயி வாங்கலாம்என ஐடியா கொடுத்தார் அப்பா. பெரிய அளவில் எந்த எதிர்ப்புமில்லாமல் ஒரு மனதாக லுங்கி வாங்கும் மசோதா தாக்கலானது. இரவு ஒரு 9 மணியளவில் நானும் அப்பாவும் அவிநாசி தேனு சில்க்ஸுக்கு சென்றோம். இந்த நேரத்துக்கு போனாதான் கூட்டம் கம்மியா இருக்கும் என ஐடியா மணி ரேஞ்சுக்கு திட்டமிட்டிருந்தோம். நினைத்தபடியே கடையில் கூட்டம் கம்மிதான் ஆனால் எதிர்பாராத வகையில், வாடிக்கையாளர் கூட்டம் மட்டுமின்றி நேரமாகி விட்டதால் கடையில் பணியாளர்களின் கூட்டமும் நெம்பக் கம்மிதான். போனவுடனே நேராக லுங்கி செக்‌ஷனுக்கு போனோம். எங்களுக்கு உதவ அவசர அவசரமாக ஓடி வந்தார் ஒரு நல்ல பணியாளர் (சரி.. அவரு வாங்கிவந்த வரம் அப்படி.... தானா தேடிப்போய் பிரச்சனைல சிக்கவங்கள நாம என்ன செய்யமுடியும் சொல்லுங்க).

நானும் அப்பாவும் லுங்கி வகைகளை அலசி ஆராய்ந்தோம். சும்மா சொல்லக்கூடாது கடை சிப்பந்தியும் நிறைய ரகங்களை ஆர்வமாக எடுத்துக்காட்டினார் (ஆரம்பத்தில்). நேரம் போவதே தெரியாமல் நானும் அப்பாவும் கருமமே கண்ணாயினோம். சின்ன கட்டம், பெரிய கட்டம், டார்க் கலரு, பொடிக்கலரு, வரிவரியா வந்தது, ப்ரிண்டட் என மாற்றி மாற்றி நாங்கள் தேடிக்கொண்டிருந்ததை “லுங்கில என்னங்க டிசைன் வேண்டிக்கிடக்கு ? என சலித்தவாறே சொன்னபடி பார்த்துக்கொண்டிருந்தார் கடை சிப்பந்தி. அவரின் குரலைப் புறக்கணித்து தேடித் தேடி ஒருவழியாக மூணு லுங்கிகள் எடுத்தோம். (அப்படியும் ஒரே மாறி லுங்கிகளாக அமைந்துவிட்டதென்று அம்மாவுக்கு வருத்தம்). சரி இனி கிளம்பவேண்டியதுதான் என எண்ணிய போது அப்பா கைகாட்டினார் புடவைகள் வரிசையை.

”எப்படிப்பாத்தாலும் மத்த கடைகள விட அம்பது நூறாவது கம்மியா இருக்கும். வா சும்மா பாக்கலாம்” என புடவைகளை நோக்கி நகர்ந்தார். ”லுங்கிக்கே டிசைன் பாத்தவங்க பொடவைய எப்ப எடுத்து முடிப்பாங்களோ?” என்றெண்ணியோ என்னவோ யாரும் பக்கத்தில் கூட வரவில்லை. என்றாலும் மனம் தளராமல் சும்மா பார்த்த வகையில் நாலு சேலைகளை எடுத்தோம். சட்ட பேண்டெல்லாம் கூட நல்லாதான் இருக்கும் இன்னொரு நாளக்கி எடுத்துக்கல்லாம் என சொன்னபடியே (இந்த சமயத்தில் கடைச்சிப்பந்தியின் முகத்தில் தென்பட்ட சந்தோசத்தை விவரிக்க தமிழில் வார்த்தைகளில்லை. தமிழ் தவிர வேறு மொழிகளில் விவரிக்கும் எண்ணமுமில்லை. பொழச்சுபோங்க…) நடக்கத்துவங்கும்போதுதான் அது என் கண்ணில்பட்டது. (தொடரும்)