title


டே தகப்பா

”டேய், மணி 8 ஆகுது பாரு. கடைல கூட்டமா இருக்குது. இன்னிக்கும் பஸ்ஸ விட்டுட்டா, யாரும் கொண்டு வந்து விடமாட்டோம்” அம்மா என்னை எழுப்ப வழக்கமான டயலாக்கை சொல்லிக்கொண்டிருந்தார்.

 9 மணிக்குத் துவங்கும் பெரியாயிபாளையம் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்வதற்கு (பூண்டிக்கு) 8:40க்கு வரும் 9-A பஸ்ஸைப் பிடிக்க வேண்டும். தவறும் நாட்களில் அப்பாவே மச்சானோ (கிட்டத்தட்ட அரிசி சிப்பம் ரேஞ்சுக்கு இருந்த என்னை) 2 கி.மீ. சைக்கிளில் கொண்டு வந்து பள்ளியில் விடுவார்கள். பெரும்பாலும் அதிகாலை 8 மணிக்கே எழுந்துஅவசர கதியில் கிளம்பி 8:40 பஸ்ஸைப் பிடித்து விடுவேன். என்றாலும் மளிகைக் கடை வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டு என்னுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது அம்மாவுக்கும் பெரும் சவாலாகத்தான் இருந்திருக்கும். நான் கொஞ்சம் கருணையுடன் இருந்திருக்கலாம்.

இவ்வளவு நாள் கழித்து இந்த ஞானோதயம் வரக்காரணம்….
வேற யாரு கார்த்திக் தான்
 **

தலைவருக்குப் பஸ் பிடிக்கும் சிரமமெல்லாம் இல்லை. 8:40க்கு பள்ளி வளாகத்தை அடைந்தாக வேண்டும் இல்லாவிட்டால், அன்னிக்கு லீவுதான். வீட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருக்கும் பள்ளியில் கார்த்திக்கை கொண்டு போய் விட 8:35க்கு வண்டியை எடுத்தாக வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் அவன் 7:30க்காவது படுக்கையில் இருந்து எழுந்தால்தான், 15 நிமிடம் பல் துலக்க (13 நிமிடம் வெறுமனே ப்ரஷ்யை வாயில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பது, 2 நிமிடம் சிட்டி ரோபோவாக மாறி பல் துலக்குவது), பின்னர் ரெஸ்ட். முடிந்த உடன் காபி முதலான கவனிப்புகள். தொடர்ந்த கெஞ்சல் & கொஞ்சல்களுக்குப் பின் போனால் போகிறதென குளியல். பின்னர் உணவூட்டும் படலம். இவை எல்லாம் முடிந்து யூனிபார்ம் மாட்டி சில பல ”சீக்கிரம் வாடா, லேட்டாச்சு” களுக்கு மனமிரங்கி வண்டிக்குப் பக்கத்தில் அவன் எழுந்தருளும் போது மணி நிச்சயம் 8:35யை தாண்டியிருக்கும்.

சில வாரங்கள் முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு. கார்த்திக்கை & அவன் காலையில் நெடு நேரம் தூங்குவதை நாங்கள் கலாய்த்துக் கொண்டிருந்தோம். சிரிப்பினூடே நான் சொன்னேன் ”காலைல 7:15யை கார்த்திக் பார்த்திருக்கவே மாட்டான்”.

 அடுத்த நாள் காலை மணி 7 இருக்கும், நான் படுக்கையறைக்குச் சென்று கிருத்திகாவை எழுப்பிக்கொண்டிருந்தேன்.

 “யாரோ சொன்னாங்க, நான் 7 மணிக்கெல்லாம் எந்திரிக்க மாட்டேன்னு. இப்ப என்ன சொல்றீங்க” தள்ளிப் படுத்திருந்த கார்த்திக்கின் குரல் மட்டும் வந்தது. பெரும் ஆச்சர்யத்துடன், அவனை உற்சாகப்படுத்த

 “செமடா தம்பி. சூப்பர். டக்குன்னு எந்திரிச்சு வா. இன்னைக்காவது சீக்கிரமா ஸ்கூலுக்கு போகலாம்” என பரபரப்படைந்தேன்.

 என்னுடைய ஆர்வத்தை கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் தொடர்ந்து சொன்னான். “அதெல்லாமில்ல, என்னால 7 மணிக்கு முழிக்க முடியும்ன்னு காட்டத்தான் எந்திரிச்சேன். நீங்க 7:30க்கு வந்து எழுப்புங்க”

#டே_தகப்பா_மை_சன் #என்னைப்போல்_ஒருவன் #டே_தகப்பா