title


ஆதிமங்கலத்து விசேஷங்கள்

இரவு மணி 8, அலுவலகத்திலிருந்து வந்த சித்தப்பா அதிசயமாய் என்னிடம் பேசவேயில்லை. பள்ளி விடுமுறைகளில் காங்கயம்பாளையம் செல்லும்போதெல்லாம், இரவு எந்நேரமானலும் சித்தப்பா வந்த பின்னர்தான் இரவு உணவு உண்ணுவோம். பெரும்பாலும் வேடிக்கையும் சிரிப்புமாகக் கழியும் தருணம் அது. ஆனால், அன்றைய இரவு உணவின் போதும் சித்தப்பா முகம் கொடுத்து பேசவேயில்லை. சித்தப்பாவின் கோவத்துக்குக் காரணம் மறுநாள் காலையில் அவர் ஆபீஸ் கிளம்பும் போதுதான் தெரியவந்தது. பைக்கை ஸ்டார்ட் பண்ணும் முன்னர் “TK” என அழைத்து, “ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்தா அத தேவைப்பட்டா மட்டும் செய்யணும். தேவையில்லாம எதையும் செய்யக்கூடாது” எனச்சொல்லிச் சென்றார். எனக்குப் புரிந்தது. இத்தகைய ஒரு நல்லுபதேசத்தை எனக்கு ஈட்டித்தந்தது ஒரு கருவி. அக்காலகட்டத்தில் பெரும் புரட்சியாய்க் கருதப்பட்ட அதன் பெயர் பேஜர். முந்தின நாள் காலையில்தான் தன் அலுவல்களுக்காக தரப்பட்டிருந்த பேஜரை என்னிடம் காட்டி, அதை உபயோகிக்கும் முறை, செய்தி அனுப்ப செய்ய வேண்டியவை என சொல்லிக் கொடுத்திருந்தார் சித்தப்பா. அன்று மட்டும் அவருக்கு நான் அனுப்பிய தகவல்கள் பத்துக்கும் மேல். அனைத்தும் ஒரே செய்திதான் “CALL ME “ எனத்துவங்கி ஊரில் இருக்கும் எங்கள் வீட்டு தொலைப்பேசி எண்ணில் முடியும் செய்திகள் அத்தனையும். அலுவலகத்தில் மேலாளருடன் முக்கியமாக விவாதித்துக்கொண்டிருக்கும் போதே ”கீ கீ” என தான் சத்தமிட்டு எனக்கு சங்கூதியது அக்கருவி. மேலாளர் தன்னைப் பார்த்த பார்வையை மறுநாளிரவு சிரித்துக்கொண்டே சொன்னார் சமாதானமடைந்திருந்த சித்தப்பா.

*

கண்டுபிடிப்புகள் நமக்குத் தரும் கிளர்ச்சிகள் சொல்லில் அடங்காதவை. எந்த ஒரு புது விசயத்தை அறிய நேரிடும் போதும், இதெல்லாம் நான் பாக்காததா எனும் பெரிய மனுசன் பாவனை பூண்டாலும் கூட, உள்ளூறும் நம் பால்யத்தின் குறுகுறுப்பை எவ்வயதிலும் மீட்டுத்தர வல்லவை கண்டுபிடிப்புகள். கண்டுபிடிப்புகளிலும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் உண்டாக்கும் விளைவுகள் சுவாரசியம் மிக்கவை. அத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு கிராமத்தில் முதன் முதலில் நுழைவதை அம்மக்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றிய கட்டுரைகள் என்றுதான் “ஆதிமங்கலத்து விசேஷங்கள்” தொகுப்பைச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவ்வளவு சுருக்கிச் சொல்லுவதைத் தடுப்பது கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும் விதம். எழுத்தில் துருத்திக்கொண்டிராமல் அதன் போக்கிலேயே தொடர்ந்து வரும் பகடி. இவ்வகை கட்டுரைகளில் எதிர்பார்க்கக்கூடிய பகடித்தன்மையை இன்னும் சிறப்பாக்கியிருப்பது திரு.”க.சீ.சிவகுமார்” அவர்களின் மொழி.

*

அஞ்சலகப் பணியாளர் “Particulat Person” என்பதைச் சுட்ட “இதோ நீங்க தேடின பீப்பீ பக்கத்துலதான் இருக்கார்” எனச்சொல்லி ரிஸீவரை நீட்ட, தனக்கு போன் வந்த அதிர்ச்சியைக் காட்டிலும், படித்த அதிகாரியே தன்னை ”பீப்பீ” என கிண்டல் செய்வதாக எண்ணிக் கலங்கிய நாதஸ்வர வித்வானின் கதை “டெலிபோன்” பிறந்த காலத்தில் வருவது.


புதிதாய் வாங்கிய டார்ச்லைட்டின் பேட்டரி, ஊர் முழுக்க பந்தாக்காட்டியே தீர்ந்து போக, பேட்டரியை வெய்யிலில் காயவைத்து சார்ஜ் ஏற்ற முற்பட்டதைக் கூட சகித்துக்கொள்ளலாம். அடுத்தகட்ட வளர்ச்சியாக, பல்ப் ஹோல்டரில் பேட்டரியை நுழைத்து சார்ஜ் ஏற்றச் செய்த முயற்சி நமக்கே ஷாக் அடிப்பது.


படாத பாடு பட்டு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லோன் வாங்குகிறார் சிவலிங்கம். லோன் தொகையைத் தந்த அதிகாரி “மாச மாசம் கரெக்ட்டா கட்டீருங்க சார்” என்க, காசு கைக்கு வந்தபின் சிவலிங்கம் சொன்ன குசும்பான பதில் “மாச மாசம் கரெக்டா கட்டுறதுன்னா நான் ஃபைனான்ஸ்லயே வாங்கியிருப்பேனே, உங்ககிட்ட எதுக்கு வர்றேன் ?”.


”சிரிச்சா கொஞ்சம் வயசு கூடுதலா தெரியுது” என பெண் பார்த்து வந்த அண்ணன் திருமணத்துக்குத் தயங்க, ”சல்வார் போட்டா வயசு கொறஞ்சிடும் என்றும், நம்மூட்டுக்கு வந்தா, சிரிக்கவா போகுது” என்றும் துணிந்து கல்யாணம் கட்ட வைத்த தனசேகர்கள் கிராமத்து கிராமம் உண்டுதானே. என்றாலும் தன் பெயரை மைக்செட் குழாயில் கேட்க விரும்பி, திரும்பத் திரும்ப காணாமல் போனவர்கள் அறிவிப்பில் தன் பெயரை தானே சொன்ன “குளிப்பட்டி சுப்பிரமணி” கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான்.

*

இவையெல்லாம் ஆதிமங்கலத்து விசேஷங்களின் துளிக்கூண்டு சாம்பிள்கள்தான். முழுக்கதையும் அதன் சுவாரசியங்களும் , இவற்றுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.

*

கட்டுரை சுட்டும் மனிதர்களும் ஆதிமங்கலம் கிராமமும் (புனைவுதான் என்றபோதும்), நம் கிராமங்களையும் அதன் மனிதர்களையும் நினைவுபடுத்துகின்றது. இதனால் இப்புத்தகத்துடன் நம்மால் வெகு சுலபமாக ஒன்றிப்போக முடிகிறது. நிரந்தரமான மெல்லிய புன்னகைகளும், எதிர்பாரா வெடிச் சிரிப்புகளுமாக புத்தகத்தை படித்து முடித்ததும், ஒரு மென்சோகம் மனதில் படர்ந்தது. மறைந்த க.சீ.சிவகுமார் குறித்த பதிவுகள் நினைவுக்கு வந்ததே அதற்குக் காரணம். குறிப்பாக செவேந்திரன் அண்ணனின் உறைப்புளி (http://kaleeswarantk.blogspot.com/2020/05/blog-post.html) நூலில் எழுதப்பட்ட கட்டுரை. சோகத்துடன் புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கும் க.சீ.சிவக்குமாரின் புகைப்படத்தைப் பார்த்தேன், அதனருகில் புத்தகத்திலிருந்து சில பத்திகள் அச்சிடப்பட்டிருந்தன. புன்னகை எழுந்தது. கலைஞனுக்கு மரணம் விதிக்கப்படவில்லை.

*

ஆதிமங்கலத்து விசேசங்கள் – க.சீ.சிவகுமார் – டிஸ்கவரி புக் பேலஸ்

எனது இந்தியா

எந்தப் புனைவுக்கும் சற்றும் சளைத்ததல்ல வரலாற்றின் பக்கங்கள். நாம் எண்ணி எண்ணி பெருமிதம் கொள்ளும் அதே மூதாதையர்கள் நிரையில்தான் நம்பவே முடியாத கீழ்மைமிக்க மனிதர்களும் இருந்திருக்கிறார்கள். நாம் நம்பியிருப்பதும், நாம் நம்ப விரும்புவதும் மட்டுமல்ல, உண்மை வரலாறு நாம் விழுங்க முடியாத கசப்பையும் தன்னுள்ளே அடக்கியதுதான் அது. கடந்து வந்த பாதையின் மேடு பள்ளங்களை சரிவரத் தெரிந்துகொள்வதுதான் நாம் இனி மேற்கொள்ளவிருக்கும் பயணத்துக்கான சரியான திட்டமிடலுக்கு உதவி செய்யும். அதுவே நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதற்கான தேவையும் கூட. ஆயிரமாயிரம் சுவாரசியங்களை உள்ளடக்கிய வரலாற்றை வெறுமனே வருட, மாத, தேதி வாரியான சம்பவங்களின் தொகுப்பாகப் படிக்க நேர்வது ஒரு வகை ஆவண வாசிப்பு மட்டுமே. புனைவின் வசீகர மொழியைக் கைக்கொள்ளும் ஒருவனால் எழுதப்படும் வரலாறு பெரும் வாசிப்பின்பம் தருவது மட்டுமல்ல, வரலாற்றில் ஒளிந்திருக்கும் பல கதைகளை நாம் கண்டுகொள்ளவும் வழிவகுக்கும். அப்படி ஒரு நிறைவு திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட “எனது இந்தியா” புத்தகத்தைப் படித்ததும் ஏற்பட்டது.
*
பெரும்பாலும் ஆங்கிலேயர் காலகட்ட ஆட்சியைக் குறித்தும், மன்னர்களைக் குறித்தும் பேசப்பட்டிருந்தாலும், சாமானிய மக்களின் வாழ்க்கைக்கு வரலாற்றில் இருக்கும் பங்கையும் உணர்த்தும் நூலாக “எனது இந்தியா” அமைந்துள்ளது.
 
ராதா நாத் சிக்தார் என்ற வங்காளி இளைஞனின் திறமையால் துல்லியமாக அளவு கண்டறியப்பட்ட இந்தியாவின் மிக உயர்ந்த சிகரத்துக்கு, ஆங்கிலேய சர்வேயரின் நினைவாக எவரெஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள வரலாற்றைக் கூறும் கட்டுரை, காலனியாதிக்கத்துக்கு ஆட்பட்ட ஒரு தேசத்தின் மனிதர்களுக்கு மட்டுமல்ல மலைச்சிகரங்களுக்குக் கூட அடையாளமழிப்பு நிகழ்ந்திருப்பதற்கான சான்றாக அமைந்துள்ளது. மாமனிதர்களின் எழுச்சியில் சில தலைவர்கள் மங்கிப்போவதுண்டு. அதை உறுதி செய்கின்றன இந்திய விடுதலைப் போரில் நேதாஜி வழியில் அவருக்கு முன்னே சென்ற செண்பக ராமன் பிள்ளை மற்றும் ராஷ் பீகாரி போஸ் இவர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள்.
 
பெரும் கோவில்களும், மாளிகைகளும், அணைக்கட்டுகளும் கட்டப்பட்ட அதே காலகட்டம்தான் இன்னொருவகையில் மக்களின் அன்றாட வாழ்க்கையின் இன்னல்கள் எவ்விதத்திலும் அரண்மனைச் சுவர்களைக் கூட தொந்தரவு செய்யாதிருந்த நிதர்சனத்தையும் உள்ளடக்கி இருந்திருக்கிறது. அதற்கு ஒரு சோற்றுப் பதமாக அமைந்துள்ளன மகாராஜா ஜெய்சிங் பற்றிய கட்டுரைகள். பெரும் நாகரீகம் கொண்ட சமூகம் என நம்மை நாமே எண்ணிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலேயே பழங்குடியினரின் இயற்கையுடன் இயைந்த வாழ்வுக்கு பெரும் தடைகள் இருக்கும்போது, சாதாரண மனிதர்களையே லட்சியம் செய்யாத காலனி நாடுகள் ஆட்சிபுரிந்த காலகட்டம் பழங்குடியினருக்கு இன்னும் கொடுமையாக இருந்திருக்கும். அப்பிண்ணனியில் ஏற்பட்ட ”சந்தால் எழுச்சி” மற்றும் அதிலிருந்து எழுந்து வந்த “பிர்சா முண்டா” எனும் தலைவன், அவனது மர்மச்சாவு குறித்து விவரிக்கும் “காட்டுக்குள் புகுந்த ராணுவம்”, இத்தொகுப்பின் முக்கிய கட்டுரைகளுல் ஒன்று.
 
மகாத்மா காந்தி செய்த உப்பு சத்யாகிரகம் வெளியே தெரிந்த அளவுக்கு, இந்தியாவின் ஏன் உலகத்தின் மிகப்பெரிய தடுப்புவேலிகளுல் ஒன்றாக அமைந்த உப்புவேலியைப் பற்றியும் அதனூடாக கட்டுப்படுத்தப்பட்ட உப்பு வணிகம் ஆங்கில அரசுக்குத் தந்த நன்மைகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரையும் இந்நூலில் உண்டு (உப்புவேலி எனும் நூல் இதைக் குறித்து விரிவாகப் பேசுகிறது). பொதுவாக அனைத்து அதிகாரிகளும் இந்தியாவிலிருந்தும், இந்தியர்களிடமிருந்தும் கூடுமானவரை சுரண்டித்தின்ன முற்பட்டாலும் விதிவிலக்காய் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நினைத்த, செய்த அதிகாரிகள் நிரையில் வருபவர் ஆர்தர் காட்டன். இந்திய நதி நீர் மேலாண்மை குறித்தும் அணைக்கட்டுகள் குறித்தும் அவர் காட்டிய அக்கறையும் உழைப்பும் அவரை இந்தியாவின் நீர்ப்பாசன தந்தை என அழைக்க வைத்தன.
 
துவக்க அத்தியாங்களில் வரும் நைநியாப் பிள்ளையின் கதையும், ஊழல் நாயகன் கிளைவ் மற்றும் அதைத் தொடர்ந்த கட்டுரைகளும் புதுச்சேரி மாநிலத்தைக் குறித்தவை. தவிக்கவே இயலாதபடி திரு. பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” மற்றும் “மானுடம் வெல்லும்” படைப்புகள் நினைவுக்கு வந்தன.
*
ஒருபோதும் நாம் தவிர்க்கவே கூடாத வரலாற்றின் பக்கங்களை, புனைவுக்கிணையான வசீகர மொழியில் “எனது இந்தியா” கூறுகிறது.
*
 எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன் – தேசாந்திரி பதிப்பகம்.