title


காலம் கடந்த கலைஞனின் கலகக்குரல்


மதராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன் – 1970 களில் மலேசியாவில் பேசிய பேச்சு எனக்கு மிகவும் பிடித்த உரைகளுல் ஒன்று. தன்னுடைய வாழ்வின் ஒரு முக்கிய பின்னடைவுக்குப் பின்னர் (சிறை சென்று மீண்ட பின்) திராவிடர் கழகத்தின் அழைப்பினை ஏற்று மலேசியா சென்று நிகழ்த்திய உரை அது. என்றபோதும், சிறிதளவுகூட தன்னம்பிக்கை குறையாமல், தன் மனதிலிருந்து பேசிய அற்புத உரை.

அதுசரி யார் இந்த “மதராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன்” ? திராவிடர் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொள்ளாதபோதும், தந்தை பெரியாரின் தீவிர சீடர். தமிழகத்தின் மிக முக்கிய நாடகக் கலைஞர். சினிமா ஊடகத்தை பகுத்தறிவு பரப்பப் பயன்படுத்திக்கொண்டவர்களுல் மிக முக்கியமான ஒருவர். தான் இறந்தபின்னரும், இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தனக்கென ஒரு தனித்த செல்வாக்கு உடையவர். எனக்கு மிகப்பிடித்த சுயமரியாதையாளர். நடிப்பில் தனக்கென ஒரு தனிபாணியை உருவாகியவர். நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். அவரது இன்னொரு பெயர் “M.R.ராதா”.

சரி, இனி என்னைக் கவர்ந்த அந்த உரை குறித்து :

எனக்குத் தெரிந்தவரையில், எந்த விதமான முன்னேற்பாடுகளுமில்லாமல், குறிப்புகளில்லாமல் பேசிய ஒரு பேச்சு இது. பேச்சின் துவக்கத்திலேயே ”நான் இங்கு வரக்கூடாதென்று பெட்டிசன் போட்ட என் இனிய நண்பர்களே” என அதிரடியாகத் துவங்குகிறார் திரு.ராதா. தன்னுடைய 30 நிமிட பேச்சில் சுயமரியாதை, கடவுள் மறுப்பு, சினிமாத்துறை, அடக்குமுறை என எல்லாவற்றையும் குறித்த தன்னுடைய கருத்துக்களை எவ்வித அச்சமுமின்றி பதிவு செய்கிறார். அதிலும் சினிமாக்காரர்கள் குறித்த விமர்சனம் (”குழந்தைகள் பார்க்கக்கூடிய சினிமாவா தமிழ் நாட்டில் எடுக்கிறார்கள் ? பெரியவனே பார்த்து கெட்டுப்போய்க் கெடக்கிறான்” என்பது ஒரு சாம்பிள்), மற்றும் அவர்களது வருமானவரி பாக்கி குறித்த வெளிப்படையான பேச்சு, தனக்கும் எம்.ஜி.ஆருக்குமாக சண்டை குறித்த விசயங்கள் என்ன எல்லாவற்றையும் எவ்வித தடங்களுமின்றி பேசிப்போகின்றார். பின்வரும் பகுதியை கவனியுங்கள்

“இப்ப, நான் கூட வருமான வரி பாக்கி 10 லட்சம் கட்டணும் (1970 களில்), அவங்க எங்க கேட்கப்போறாங்க? நான் எங்க கட்டப்போறேன்?.. அதெல்லாம் ஒண்ணுமில்ல”

இப்படி ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ஒருவருக்கு என்ன ஒரு தைரியம் இருந்திருக்க வேண்டும். அந்த தைரியம்தான், அந்த சுதந்திரம்தான் “M.R.ராதாவை” காலம் கடந்தும் நினைக்கவைக்கிறது. நல்ல பேச்சைக்கேட்பதில் ரசனையுள்ளவர்கள் நிச்சயம் கேட்கவேண்டிய ஒரு கலகக்குரல் “M.R.ராதா”வுடையது.
Youtube link : (வீடியோவுக்கும் பேச்சுக்கும் தொடர்பில்லை)
http://www.youtube.com/watch?v=hnl63Uskv7I

(திரு. M.R.ராதா குறித்த “M.R.ராதாயணம்” புத்தகம் பற்றி முன்பு ஒருமுறை நான் எழுதிய ஒரு பகிர்வு :http://kaleeswarantk.blogspot.in/2010/04/mr.html)

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

எவ்வளவுதான் செல்வச்செழிப்புடன் இருந்தாலும், மிகப்பெரிய மன உறுதி கொண்டிருந்தாலும், தேர்ந்த கல்வி ஞானமும் கேள்வி ஞானமும் வாய்க்கப்பெற்றாலும், வாழ்க்கையின் மாயச்சுழலில் கட்டுண்டுதான் தீரவேண்டும். நாம் மண்ணில் பிறந்த கணத்திலேயே நமக்கான சிக்கல்களையும் காலம் சூல் கொண்டுவிடுகிறது. பிறக்கும் காலமும் வாழ்நாளும் மட்டுமே மாறுபடும். மற்றபடி, மண்ணில் பிறந்த எவருக்கும் அவருக்கான கசப்பு, அவருக்கான வலி, அவர் பங்கு துயரம் நிச்சயம் உண்டு. என்றபோதும் அவற்றையும் தாங்கவும், தாண்டவும் ஒரு பரிகாரம் - இல்லை இல்லை வாழ்க்கைமுறை இருக்கிறது. அது வேறொன்றுமில்லை “அன்பு செய்தல்”. சக உயிரின் வலியை, வேதனையை, பசியை உணர்தலும், அதைப்போக்க தன்னாலான துரும்பை நகர்த்தலும் கூட போதுமானது.

என்னைப்பொறுத்தமட்டில் அப்படி அடுத்தவர் வலியை தன்வலியாக உணரவைப்பது கலை. சக உயிரின் துயரன்றி, வேறு சரியான பேசுபொருள் எந்தக்கலைக்கும் கிடையாது. அப்படி அடுத்த மனிதனின் வாழ்வின் அவலத்தை, அவன் அன்றாடம் விழுக்கும் கசப்பின் ஒரு துளியை நமக்கும் படையலிட்டிருக்கிறார் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். சூடிய பூ சூடற்க எனும் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில்தான் படித்தேன். தொகுப்பின் பெரும்பாலான கதைகள் வாழ்வின் இருளை, அடுத்த வயிற்றின் பசியை பதிவுசெய்பவை. நாஞ்சில் நாடன், தன் தேர்ந்த கதை சொல்லும் உத்தியால், அவரது அற்புத விவரணைகள், மிரட்டாத மொழி வாயிலாக கதைக்களனில் நம்மையும் ஒரு மெளனசாட்சியாக்கி விடுகிறார். இடையிடையே வரும் கும்பமுனியின் கதைகள்தான் நம்மைக்கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகின்றன.

என்னுடைய வீட்டிலிருந்து பணிக்கு செல்ல நான் ஒரு மணி நேரம் பேருந்தில் பயணிக்க வேண்டும் (சென்று வர மொத்தம் இரண்டு மணி நேரங்கள்). நான் இந்த தொகுப்பின் பெரும்பாலான கதைகளை அப்படியான பேருந்துப்பயணங்களில்தான் வாசித்தேன். காலை நேரப்பயணங்களை நான் கும்பமுனியுடன்தான் செலவழித்தேன். கும்பமுனியின் நகைக்கவைக்கும் செய்கைகளால் என்னுடைய முழு நாளுக்குமான புத்துணர்ச்சியை நான் அடைந்தேன். ஆனால் அதுவல்ல சிறப்பு, இத்தொகுப்பின் மற்ற கதைகளை நான் வாசித்தது இரவு வேளைகளில், இருவரோ மூவரோ அமரவேண்டிய இருக்கையில் நான் மட்டும் அமர்ந்துகொண்டு, கோவையிலிருந்து அவினாசி வரும்வரையில். இரவுகளில், அடுத்தவன் பார்ப்பான் எனும் வெட்கமின்றி, துயர், பசி உரைக்கும் கதைகள் அனைத்தையுமே கலங்கிய விழிகளுடன் படித்தேன். இந்தொகுப்பின் கதைகள் நமக்குச்சொல்ல விரும்புவது, நம்மிடமிருந்து யாசிப்பது மனிதத்தை மட்டுமே.

சக மனிதனின் துயரை உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை இலக்கியம் நமக்கு நிச்சயம் தரும். அடுத்தவன் வலியை, கசப்பை தனதென எண்ணி கலங்குபவன் நிச்சயம் தன்னுடைய வலியை, கசப்பை கடக்கிறான்.

அப்படிக்கடக்க உதவும் மிக முக்கியமான தொகுப்பு திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய “சூடிய பூ சூடற்க” – தமிழினி வெளியீடு.

சீவலப்பேரி பாண்டி

வாழ்வின் மிகசிக்கலான நுட்பங்களை, சக மனிதர்களின் சூதை, எளிய மனிதர்கள் அறிவதில்லை. என்றபோதிலும், ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கின்ற வாழ்வதற்கான வேட்கை, சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள உதவுகிறது. காலப்போக்கில் எளிய மனிதர்கள் தன் இயல்புக்கு மாறாக வாழ்க்கையை வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். அப்படித்தான், சாதாரணமாக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டிய ஒருவர், காலத்தால், விளைவுகளை யோசிக்காமல் எடுத்த முட்டாள்த்தனமான முடிவால் காலம் கடந்தும் வரலாற்றில் நின்றுவிட்டார். அவர் பெயர் “பாண்டி”. இல்லை இல்லை “சீவலப்பேரி பாண்டி”.


பாளையங்கோட்டைக்கு அருகிருக்கும் சீவலப்பேரி கிராமத்தின் முன்சீப் ஊரே மதிக்கும் பெரிய மனிதர். அந்த ஊரின் எல்லா பஞ்சாயத்துகளையும் நியாயமான முறையில் தீர்த்துவைப்பவர். ஆனால் எல்லாருக்கும் நல்லவராய் இருப்பது ஆண்டவனாலேயே ஆகாத ஒன்று. அப்படித்தான் முன்சீப்பின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட முதலாளிகளுக்கு அவர் வேண்டாதவராகிவிடுகிறார். அவரை வஞ்சம் தீர்த்துக்கொள்ள எண்ணும் முதலாளிகளின் சதிக்கு இரையானவன்தான் பாண்டி. பாண்டி முன்சீப்பிடம் வேலை பார்க்கும் நம்பிக்கையான வேலையாள். தனிப்பட்ட முறையில் அவர்மீது எவ்வித காழ்ப்புணர்வும் (அவன் சிறு வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நீங்கலாக) அற்றவன்.


தன் ஜாதியை சேர்ந்த பெரியமனிதர்களின் அவதூறுகளைக் கேட்டும், தன் எதிர்காலம் குறித்த ஆசைவார்த்தைகளை நம்பியும், முன்சீப்பை கொன்றுவிடுகிறான் பாண்டி. சிறை சென்று கொஞ்சகாலம் கழிந்தபின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவருகிறது. வார்த்தை தவறிய பெரியமனிதர்களில் வஞ்சத்தால் பாண்டியின் குடும்பம் வறுமையில் விழுகிறது. மனம் பொறுக்கமுடியாமல் சிறையிலிருந்து தப்பித்து, தன்னை ஏய்த்த பெரிய மனிதர்களை கொல்கிறான் பாண்டி. தலைமறைவு வாழ்க்கையில் மனைவியை இழந்து, பின்னர் ஒரு கட்டத்தில் கைதாகி, போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுகிறார் பாண்டி.


நாம் திரைப்படமாகப் பார்த்த அதே சீவலப்பேரி பாண்டியின் கதைதான். ஆனால் உண்மைக்கு மிக மிக அருகில், அதிக விவரங்களுடன் எழுத்தப்பட்ட இந்த நாவல் வெளிவந்த ஆண்டு “1993”. திருநெல்வேலி பாஷையில், சுவாரசியமான நடையில் ”திரு.செளபா” அவர்களால் ஜூனியர் விகடனில் தொடராக எழுதப்பட்டு, பின்னர் நாவலாக விகடன் பிரசுரம் வெளியிட்டது.


புத்தகத்தின் இறுதிப்பக்கங்களில் திருமணக்கோலத்தில் இருந்த பாண்டியின் புகைப்படம், அவனை கொல்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம், கொன்ற பின்னர் எடுத்த புகைப்படன் என மூன்று புகைப்படங்கள் தரப்பட்டிருந்தன. படித்துமுடித்த பின்னர், ஏனோ, ஒருவித வெறுமையா? கவலையா? என இனம்புரியா உணர்வுடன் இரு தினங்கள் கழிந்தன.


1993 – விகடன் பிரசுரம் – செளபா

மீட்பர்

யுகங்களைக் கடந்த
பெருங்கவிஞன்

தான் எழுதிய
ஒரே கவிதையின்
இறுதிச் சொல்லுக்காகக்
காத்திருந்த அந்நாளில்தான்

பெருங்கருணை கொண்ட
தேவன்
தூக்கத்தில் சிரிக்க வைத்தான்
குழந்தைகளை

ஆதிரா என்றொரு தேவதை

ஆரஞ்சுடன் சேர்த்து
விதையையும் உண்ட ஆதிரா
பயத்திலேயே தூங்கிப் போனாள்

வயிற்றில் முளைத்த
விதை விருட்சமாகி
தலை வழியே வெளிவந்தது

மரமெல்லாம் ஆரஞ்சு பழங்களுடன்
ஒரு தேவதையாக வலம்
வந்த ஆதிரா…
விடிந்த பின் விழித்தெழுந்து
மரம் தேடி அழுதாள்..

ஆதிராவுக்காய் காத்திருந்தன
ஆரஞ்சு தோட்டங்கள்
கனவுலகில்….

**

தன் கனவில் வரும் பூக்கள் மீது
கொள்ளை ப்ரியம்
ஆதிராவுக்கு….

பெருங்கொண்ட சுகந்தம்
வீசும் மென்மலர்கள்…

அவளுக்கு மிகப்பிடித்த நிறங்களில்…
எப்போதும் புதிதாக வாடாமல்…
செல்ல மலர்களுக்கு
என்ன பெயர் வைப்பதென்று

குழம்பித் தவித்தாள் ஆதிரா….

”தேவதை” என பெயரிட்டிருந்தன
மலர்கள் ஆதிராவுக்கு

விண்ணப்பம்

என்னுடைய கனவுகளை
மட்டுமாவது
விட்டுவையுங்கள்
பேரழகூட்டுபவை என்றாலும்
உங்கள் ஒப்பனைகள்
அதற்குத் தேவையில்லை..

என் கனவுகளுக்கு
நிர்வாணம் போதுமானது
அது உங்கள் பளபளக்கும்
ஆடைகளை யாசிக்கவில்லை…

என் கனவுகள் கொஞ்சம்
சவலையானவையாகவே இருந்தாலும்
உங்கள் ஊக்கமருந்துகள்
உங்களிடமே இருக்கட்டும்

என்னுடைய கனவுகளின்
அடிப்படையே கூட
தவறானதாயிருக்கலாம்
தத்துவங்களின் விசாரணைகளிலிருந்து
அதற்கு மட்டும் கொஞ்சம்
விலக்களியுங்கள்

அய்யன்மீர்….

தயைகூர்ந்து புரிந்துகொள்ளுங்கள்…
என்னிடமிருப்பது ஒரேயொரு வாழ்க்கை
என் கனவுகளை மட்டுமாவது
என்னிடம் தாருங்கள்


ஆம்…
கனவுகளை மட்டுமாவது

காதல் காதல் காதல் - மார்ச் 2014 கவிதைகள்

என்னைத் தாண்டி
யாருக்கோதான் அனுப்பினாய்
உன் புன்னகையை
புல்லுக்கும் பொசிந்தது
புண்ணியம்
*
போதும்…
இனியொருமுறை
என் அருகே வராதே…

ஒரு சொல் கூட
என்னிடம் பேசாதே…

சம்பிரதாயத்தின் பொருட்டு கூட
புன்னகைக்காதே

கண்பார்வை ஜாடைகள்
என எதுவும் வேண்டாம்

தாங்க முடிவதில்லை
என்னால்….
*
இதுக்கு..


“போதும் இனி கவிதை எழுதாதே” ன்னு எவரேனும் பின்னூட்டமிட்டால், இதே ரீதியில் ஆயிரம் கவிதைகள் (அவர்களுக்கு மட்டும்) அனுப்பப்படும்…. ஜாக்கிரதை….

***
இருள் ஆளும்
நீண்ட இரவின்
முற்றுப்பெறா பாதையில்
உரையாடல்களே வழியாக
நீயும் நானும்…
எது சொன்னாலும்
நீ சிரிக்க
உயிர்த்தெழுந்தன விண்மீன்கள்
*
உரையாடல்களை முடிக்க
நான் முற்றுப்புள்ளி
வைப்பேன்…
நீ முத்தப்புள்ளியை…
*
உன் கடிதத்தின்
எல்லா வரிகளையும்
அதன் சொற்களையும்
அவற்றின் எழுத்துக்களையும்
ஏன் குறியீடுகளையும் கூட
காதல் கொண்டே நிரப்புகிறாய்…

பெருகியோடும் காதல்
புரியாது தவித்திருந்தேன்


காதலை அர்த்தப்படுத்த
இடைவெளிகளாய் இட்டாய்
முத்தங்களை…

***

கவிதைகள் - பிப்ரவரி 2014

மரண தண்டனை

மிகப்பெரிய சதிவலையில்
எதிர்பாராது சிக்குபவனை
நாம் சட்டத்தின் பெயரால்
தூக்கிலிடலாம்….

எவ்வித திட்டமிடலுமின்றி
அறியாமல் தவறிழைத்தவனையும்
நாம் சமன்பாடு கருதி
சாகடிக்கலாம்…

வெஞ்சினத்தால் முடிவெடுத்து
கொடும் கொலை புரிந்தவனையும்
நாம் மனிதத்தின் பெயரால்
மன்னித்து அருளலாம்…


செய்தவன்
மனிதனா, இல்லையா
என்பதல்ல பிரச்சனை

நாம் யார் என்பதுதான்….

யாசகம்

குளிரேறிய அறையிலும்
உறங்கவிடாமல் தகிக்கும்
வெம்மையை மாற்றவும்

வெகு சொகுசான பஞ்சணையில்
விரவி நிற்கும்
நினைவு முட்களைக் களையவும்

ஆகக் கசப்பேறிய
துரோகத்தின் இரவை
குறைந்தபட்ச வலியுடன் கடக்கவும்

தானமிடுங்கள் எவரேனும்….

அன்னையின் அருகாமையை
தூய காதலின் அரவணைப்பை
ஒரு பறவையின் சிறகசைப்பை
ஒரு குழந்தையின் முத்தத்தை
குறைந்த பட்சம்
கபடமற்ற புன்னகையை


தானமிடுங்கள் எவரேனும்….

ஒப்பாரி

அந்தப்புர மஞ்சத்தில்
முதல் அபலையின்
கண்ணீர் விழுந்த நாளில்
பிறந்தது

பல்லாயிர வருட
பெருமை பேசும்
ராஜ்ஜியங்களின் அஸ்தமனம்

அந்நாளில்தான்
ஆதி சூதனின் மனம்
கருவுற்றது
முதல் சொல்லை...

நான்கு கவிதைகள்

பெருவலி


வலக்கையிலிருந்து இடக்கைக்கு
இடமிருந்து வலமாக
தென்றலில் பூப்போல
புயல் கண்ட மரமாக
பெரும் யோசனைக்குப்பின்
மாற்றி மாற்றி உருட்டினாலும்
பகடைக்குத் தக்கவாறு
தன்னை மாற்றி வழிமறிக்கும்
சர்ப்பங்கள்
நெருப்புடன் வாழ்வதே விதி
குதித்தாலும் ஆவியாகும்
பெருநதியும்


அரிதாரம்

1
மனதின் ஆழ்வெளியில்
நிரம்பவும்
கள்ளத்தனம் -
நாசூக்கால் மூடப்பட்டு
மூடியை எளிதாகக்
கழற்றுகிறது
தனிமை….

2
எப்போதும் யாராவது
உடனிருக்க
வேஷமிட்டு வேஷமிட்டே
வெறுத்தான் கோட்ஷே

இருப்பது சுலபம்
நடிப்பது கடினம்
காந்தியாக !

ICU தளம்

மிக நீண்ட வாராந்தாவில்
சோகத்தை
திப்பி திப்பியாய்
குமித்து வைத்தான்
கண்ணீர்க்கடலில்
கண்களையல்ல…..
முகத்தையே மூழ்கடித்தான்
கடந்து வந்த தவறுகள்
கணிக்க மறந்த நிகழ்வுகள்
வருந்தி அழ
வாய்ப்பளித்தான்
பல வருட சண்டைகள்
பார்க்க விடாத கோபங்கள்
கண்ணீரில் கரைய வைத்தான்
பழமொழிகள் தத்துவங்கள்
பகிர்ந்து உணரப்
பார்த்திருந்தான்
ஆனந்தமோ….
ஆசுவாசமோ….
அறிவிப்புகள் ஒலிக்கவைத்தான்

அனைத்தையும் மறக்கடிக்க
சிறு குழந்தையாய்
தானே வந்தான் !

அன்னை வயல்

இந்த உலகில் எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழிலும் அதற்கான நியாயத்தை, சிறப்பை தன்னளவில் கொண்டுள்ளன.  ஆனால், நானறிந்தவரையில் வேறெவரையும் விட மீனவர்களும் விவசாயிகளும் தங்கள் தொழில் மீது காட்டும் காதல் மிகப்பெரியது. இன்னும் சொல்லப்போனால் விவசாயமோ அல்லது மீன் பிடிப்பதோ, தொழில் என்பதையும் தாண்டி வாழ்க்கையாகவே மாறிப்போனவை. அப்படி விவசாயத்தை மூச்சாகக் கொண்ட, ஒரு ரஷ்ய விவசாய கிராமத்தை அதில் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு போரின் கோரமுகத்தை பதிவு செய்திருக்கும் நாவல் “அன்னை வயல்”.

விவசாயத்தையே பிரதானமாகக் கொண்ட ரஷ்ய கிராமமொன்றின் குழுத்தலைவியாக இருந்த “தல்கோனை”யும் ஒரு வயலும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதாக கதை சொல்லப்படுகிறது. உண்மையில் ஒரு நல்ல விவசாயிக்கு, அவர்கள் ஆற்றாமையை கொட்டிக்கொள்ளவும், ஆனந்தத்தை பகிர்ந்துகொள்ளவும் உற்ற நண்பன் நிலம்தான். அப்படித்தான் தன்னையும், சுற்றியுள்ளவர்களையும் மறந்து செடி கொடிகளுடன் பேசிக்கொண்டிருப்பார்கள் முதியவர்கள்.

ஒரு அழகான விவசாயக் குடும்பத்தை உலகப்போர் எப்படி சிதைத்தது என்பதை, தல்கோனை அவளது காதல் கணவன் “ஸுவான்குல்”, அவர்களது மூன்று மகன்கள் காஸிம், மாஸெல்பேக், ஜைனாக் மற்றும் மூத்த மருமகள் ”அலிமான்”- இவர்களது வாழ்வின் மூலமாக பதிவு செய்திருக்கிறார் திரு, சிங்கிஸ் ஐத்மாத்தவ். தல்கோனை இளவயதில் ஒரு நிலப்பிரபுவிடம் கூலி வேலை செய்யும்போது, அவளைப்போலவே கூலிவேலை செய்யும் ஸுவான்குல் மீது காதல் கொண்டு மணம் புரிந்துகொள்கிறாள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட அற்புதக்காதல். சாட்சியாக மூன்று மகன்கள். கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, தன்பகுதி விவசாய கூட்டுப்பண்ணையின் தலைவனாகிறான் ஸுவான்குல். மூத்த மகன் காஸிம் விவசாயத்தின் மீது பற்றுக்கொண்டு அறுவடை இயந்திர ஓட்டியாகிறான். அவனது காதல் மனைவி அலிமான். இரண்டாவது மகன் மாஸெல்பேக் - ஆசிரியராகும் வேட்கை கொண்ட சிறந்த படிப்பாளி. கடைசி மகன் ஜைனாக் அந்தப்பகுதியின் இளம் கம்யூனிஸ்ட் கழக செயலாளர்.

இப்படி நல்லவிதமாக சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் போரின் பெயரால் அடுத்தடுத்து இன்னல்கள் வந்து சேர்கின்றன. பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து, சோவியத் நடத்திய போரில் தங்கள் பங்களிப்பை செலுத்த, நாட்டிலுள்ள எல்லா ஆண்மகன்களுக்கும் படிப்படியாக அழைப்புவருகின்றது. முதலில் காஸிம்முக்கு. ஊரே கூடி கண்ணீருடன் அவனை வழியனுப்பி வைக்கிறார்கள். படிக்கப்போன இடத்தில் மாஸெல்பேக்கும் படையில் சேர்க்கப்படுகிறான். அவனைத்தொடர்ந்து, ஒருநாள் ”ஸுவான்குல்”க்கும் அழைப்பு வருகிறது. மிச்சமுள்ள ஒரே மகன் ”ஜைனாக்”, தானே வலியப்போய் படையில் சேர்ந்துகொள்கிறான். ”ஸுவான்குல்”க்கு பிறகு தலைமைப்பொறுப்பேற்கிறாள் தல்கோனை. வீட்டிலிருந்த நான்கு ஆண்மகன்களும் போருக்கு சென்றுவிட, அவர்களைப் பற்றிய எந்த செய்தியும் தெரியாத வலியை, வேதனையை மறக்க அவளுக்கு இருந்தது இரண்டு ஆறுதல்கள்.

ஒன்று குழுத்தலைமைப் பொறுப்பு, பொதுவாக, தலைமைப்பொறுப்பு சவாலானது. அதிலும் போர்க்காலங்களில், இதுபோன்ற குழுத்தலைமை பொறுப்பு மிகவும் கடினமானது. ஆனால்,  தல்கோனை தன்னுடைய பொறுப்புகளின் வாயிலாகவே தன் துயரை மட்டுப்படுத்திக்கொண்டாள். எவ்வித சமரசமுமில்லாமல் தேர்ந்தமுறையில் தன் கடமையைச் செய்தாள்.

அவளுக்கிருந்த இரண்டாவது ஆறுதல் அலிமான். என்னதான் மருமகள் என்றாலும் சந்தித்த முதல் நாளிலேயே அவளிடம் தல்கோனைக்கு பிரியம் ஏற்பட்டுவிடுகிறது. அலிமானும் தல்கோனையை தன் தாயாகவே பாவிக்கின்றாள். இந்த நாவலில், இவர்களுக்கிடையேயான உறவு, அன்பின் மகத்துவத்தை பேசும் அத்தியாயம். காஸிம் இறந்த பின்பு அலிமானுக்கு மறுமணம் செய்ய தல்கோனை எண்ணுவதும், பின்பு வேறொருனுவன் மூலமாக அலிமான் கர்ப்பமடையும் போதும், இறுதியாக பிரசவத்தில் அலிமான் இறந்தபின்பு, அவளது மகனை தன் சொந்த பேரனாக வளர்ப்பதும் என எல்லோரையும் இழந்துவிட்ட தல்கோனையின் பெரிய சொந்தமாக இருந்தது அலிமான்தான்.

இறுதியாக ஒரு நாள் போர் முடிவுக்கு வந்தபின்னர், மெல்ல மெல்ல கிராமமும் தன் இயல்புக்கு திரும்புகிறது. நாளடைவில் தல்கோனை மூப்படைந்து தன் இறுதி நாளுக்காக காத்திருப்பதாக கதை முடிகிறது. போரின் வலியை நேரடியாக இல்லாமல், அதனால் பாதிக்கப்படும் சாமானியர்கள் வாழ்வினூடாக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் திரு. சிங்கிஸ் ஐத்மாத்தவ். நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டதைப் போல சிறந்த மொழிபெயர்ப்பு (தமிழில்: பூ. சோமசுந்தரம்.).

ஒரு விவசாயினுடைய  காதலில், சோகத்தில், களிப்பில் என எல்லாவற்றிலும் பங்கெடுத்துக்கொள்வது நிலம். அதுவே “அன்னை வயல்”

அன்னை வயல்
சிங்கிஸ் ஐத்மாத்தவ் (த: பூ. சோமசுந்தரம்.)

பதிப்பாளர் : NCBH விலை : 85