title


34 ஆவது சென்னை புத்தக காட்சி – புத்தகப்பட்டியல் (ஜனவரி 15)

சென்ற ஜனவரி 15 சனிக்கிழமையன்று நான் சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் எல்லா புத்தகங்களையும் இப்போதுதான் வாங்கியுள்ளேன், இன்னும் படிக்கவில்லை. எனவே புத்தகம் பற்றிய குறிப்புகள் ஏற்கனவே நான் பல்வேறு தளங்கள் வாயிலாக அறிந்தவை மட்டுமே.

1. நத்தை போன பாதையில் (ஹைக்கூ கவிதைகள்) - தமிழில் மிஷ்கின் (வம்சி)
பிற மொழிகளிலிருந்து சிறந்த ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் மிஷ்கின். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மூன்று மழை நாட்களில் ஒரு விளையாட்டைப்போல் மொழிபெயர்க்கப்பட்டவையாம்.


2. பட்டினி வயிறும் டப்பா உணவும் – தமிழில் போப்பு (பூவுலகின் நண்பர்கள் - வம்சி)

”WORLD WATCH PAPER 150” என்ற உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நூலின் தமிழாக்கம். தனி மனிதனின் நலம் மட்டுமின்றி சமூகத்தின் நலமும் அலசப்பட்டுள்ள நூல்.

3. சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் (தமிழினி)
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு. நாஞ்சில் நாடனுக்கே உண்டான எள்ளலும் எதார்த்தமும் கலந்த சிறுகதைகளின் தொகுப்பு நூல். இவ்வருட புத்தக்காட்சியின் “பெஸ்ட் செல்லர்” என்பதும் விற்பனையில் புது வரலாறு படைத்த நூல் என்பதும் கூடுதல் செய்திகள்.

4. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை – பவா செல்லத்துரை (வம்சி)
திரு. பவா செல்லத்துரை அவர்களின் பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு. ஒரு கதை கூட சோடைபோகவில்லை என திரு. பிரபஞ்சன் அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

5. நண்பர்களோடு நான் – கி.ராஜநாராயணன் (அன்னம்)
தன் நண்பர்களுடனான அனுபவங்களை கட்டுரைகளாகத் தொகுத்துள்ளார் கி.ரா. ஜெயக்காந்தன் துவங்கி சுந்தர ராமசாமி, மீரா, கு.அழகிரிசாமி என கி.ரா-வின் மனம் கவர்ந்த பத்து நண்பர்களைப் பற்றிய அனுபவப் பகிர்வு நூல்.

6. பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள் (பாரதி புத்தகாலயம்)
புதுவையில் பாரதியார் இருந்த போது அவருக்கு உற்ற துணையாயிருந்த மண்டபம் ஸ்ரீ சீனிவாச்சாரியாரின் மகள் யதுகிரி அம்மாள் பாரதியாரைப் பற்றிய தன் நினைவுகளை எழுதியுள்ள நூல்.

7. வரலாற்றுச் சுவடுகள் – தொகுப்பு தினத்தந்தி
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட செய்திகளின் தொகுப்பு. உலகம், இந்தியா, தமிழ்நாடு என எல்லா பிரிவுகளிலும் முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

8. கந்தர்வன் கதைகள் – தொகுப்பு பவா செல்லத்துரை (வம்சி)
தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுல் ஒருவரான திரு. கந்தர்வன் அவர்களுடைய 61 கதைகளின் தொகுப்பு. தன் 59 ஆவது வயதில் மறைந்த திரு. கந்தர்வன் அவர்களது இறுதி உரையாடலும் இடம் பெற்றுள்ளது.

9. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் – தமிழில் கி.இலக்குவன் (பாரதி புத்தகாலயம்)
இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய மிகச்சிறந்த நூல். அன்னியர் பிடியில் சிக்குவதற்கு முன்பிருந்த இந்தியா துவங்கி இந்திய விடுதலைப் போரின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் மிகக் கவனமாக ஆராயும் நூலின் தமிழாக்கம்

முன்னரே சொன்னதுதான் என்றாலும் மீண்டும் ஒருமுறை.....

எல்லா நூல்களின் விலையையும் பதிவிட ஆசைதான் என்றாலும் வருமான வரித்துறையை சமாளிக்க விலையைக் குறிப்பிடவில்லை (என்று சொன்னாலும் உண்மையான காரணம் உள்நாட்டுப் போரை தவிர்ப்பதே என்பதை மணமானவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்).

(ஜனவரி 14 வெள்ளிக்கிழமை வாங்கிய புத்தகங்கள் பழைய பதிவில்)

34 ஆவது சென்னை புத்தக காட்சி – சனி (ஜனவரி 15)

”சொன்னா கேளுப்பா, நேத்துதான் புத்தகக் கண்காட்சிக்கு போனேன் போதுமான அளவு புத்தகமும் வாங்கியாச்சு, இப்ப மறுபடியுமா? “

இன்று புத்தகக் காட்சிக்கு அழைத்த என நண்பரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். (ஆனால் மனம் முழுக்க எத்தனை மணிக்கு கிளம்பினால் நிறைய நேரம் புத்தகங்களைத் தேடலாம் என கணக்கிடத்துவங்கிவிட்டது. என்னதான் வெட்டிப்பயல்னாலும் கேட்டவுடனே சரின்னு சொன்னா நம்ம கெளரதை என்ன ஆகறது ?)

விசயம் இதுதான்....

பொங்கல் சமயமாகையால் அவர் ஊரிலில்லை என நான் எண்ணிக்கொண்டு தனியாக முந்தைய தினமே புத்தகக் காட்சிக்கு சென்று வந்துவிட்டேன். என்னை போலவே அவருக்கும் அலுவலகத்தில் வேலையாம் (?) அதனால் அவரும் போகவில்லை. புத்தகக் காட்சிக்கு போலாமென்று எண்ணி என்னைக் கடுப்பேத்த தொலைபேசியில் அலைத்தார். ஆனால் நான் சென்னையில் இருந்ததும் நேற்றே புத்தகங்கள் வாங்கியதும் தெரிந்து ஆவேசப்பட்டார்.

”நீ தான் அரை நாள் லீவுவிட்டாலே அவினாசிக்கு பஸ் பிடிக்கறவனச்சே... பொங்கல் நாளதுவுமா இங்க என்ன பண்ணுற ? குறைந்தபட்சம் நேத்து போறதுக்கு முன்னாடி என்ன ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் (இப்ப அவுரு போறதுக்கு முன்னாடி என்னை கேட்டுட்டாராமா...). இப்ப மட்டுமென்ன கிளம்பி வா ... “

சரி ரொம்ப பிகு பண்ணினா “வந்தா வா.. இல்ல வராட்டி போ...” என கழட்டிவிடும் அபாயம் உள்ளதால்.... “சரி சரி.. உங்களுக்காக வரேன்...” என பெருந்தன்மையாக சொல்லிவைத்தேன். அடுத்த 30 நிமிடங்களில் அரக்கப் பறக்க கிளம்பி புத்தகக் கண்காட்சியை அடைந்தபோது மணி 3 இருக்கும். நேற்றைவிட இன்று மிக அதிகமான கூட்ட்மிருக்குமென்பது எனக்கு அங்கேயே தெரிந்துவிட்டது (பெரிய கின்னஸ் கண்டுபிடிப்பு நிறைய வண்டிகளிருந்தால் நிறைய கூட்டமிருக்குமென்பதை சின்னக் குழந்தைகூட சரியா சொல்லிடும்).

நான் வண்டியை நிறுத்திவிட்டு அதற்குறிய ரசீதை வாங்கிக்கொண்டிருக்கும்போது என் அலுவலக நண்பர் கணேஷ் செல்போனில் அழைத்தார். அவரும் அவருடைய நண்பர் மகேஷும் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருப்பதாகவும் சில புத்தகங்கள் பரிந்துரைக்கும்படியும் கேட்டார். பேசிக்கொண்டேயிருக்கும்போதுதான் கவனித்தேன் அவர் எனக்கு அருகில்தான் நின்றிருந்தார். ஆகவே செல்போனை அணைத்துவிட்டு அவர்களுடன் இணைந்து கொண்டேன்.

நான் சென்றமுறை வந்தபோது என்னிடம் முக்கியமான பதிப்பகங்கள் மற்றும் புத்தகங்கள் என ஒரு பட்டியல் இருந்தது. (நான் எப்போது புத்தகம் வாங்க சென்றாலும் அத்தகைய ஒரு பட்டியலுடன் செல்லக் காரணம் ”முழுசா மூணு புக் பெயர கூட ஞாபகம் வச்சுக்க முடியாதென்ற” தங்கமலை ரகசியம்தான்). ஆனால் இம்முறை ஒரு மாறுதலுக்காக நான் எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி வந்திருந்தேன்

நேற்றைப் போலவே இன்றும் தினத்தந்தியிலிருந்து கணக்கைத்துவக்கினேன். இம்முறை வரலாற்றுச்சுவடுகள் வாங்கியது நண்பருக்காக. அடுத்து ஓரிரு பதிப்பகங்களுக்குச் சென்றுவிட்டு கணேஷிடமும் வஸந்திடமும் இல்ல இல்ல கணேஷிடமும் மகேஷிடமும் (வேற ஒண்ணுமில்லீங்க சுஜாதா பாதிப்பு) விடைபெற்றுக் கொண்டு என் நண்பரை செல்போனில் அழைத்தேன்.

வந்த நண்பரின் முதல் பார்வையிலேயே “என்னடா வரல வரலன்னு பிகு பண்ணிட்டு இப்ப இவ்வளவு பரபரப்பா வந்திருக்கானேன்னு” கேள்வி தெரிந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் சேர்ந்து மீண்டும் முதலிலிருந்து துவங்கினோம். என்னுடைய முந்தைய நாள் அனுபவத்திற்கும் இன்றைக்கும் முக்கியமான சில வேறுபாடுகளுண்டு

1. நேற்றைப் போலல்லாமல் இன்று இலக்கில்லாமல் சுற்றியது (கூட பேச்சுத்துணைக்கு நண்பனும்).
2. கண்காட்சியில் கூட்டம் நிரம்பியிருந்தது
3. மிக மிக முக்கியமானதொரு விசயம், நல்ல நல்ல இலக்கியவாதிகளை நேரில் பார்க்க நேரிட்டது (அந்த அனுபவம் பின்னொரு பதிவில்)

இம்முறை நானே எதிர்பார்க்காமல் நல்ல நல்ல புத்தகங்கள் வாங்கினேன். (“ஏங்க நேத்தே நீங்க புக்கெல்லாம் வாங்கியாச்சு இன்னிக்கு போறது சும்மா உங்க நண்பருக்காக... மறந்துடாதீங்க” என்ற என் மனைவியின் எச்சரிக்கையையும் மீறி). நான் இம்முறை வாங்கிய புத்தகங்கள் அடுத்த பதிவில்.

பொதுவாக என்னுடைய இந்த இரு நாள் புத்தகக் காட்சியின் வாயிலாக நான் உணர்ந்துகொண்ட ஒரு முக்கியமான உண்மை புத்தகக் காட்சி என்பது வெறுமனே புத்தகங்கள் வாங்க மட்டுமல்ல, அதுவொரு கொண்டாட்டம். தினந்தொரும் கடவுளைக் கும்பிட்டாலும் திருவிழாவன்று கும்பிடுவது எப்படி தனி சிறப்போ அதைப் போலவேதான் புத்தகப்பிரியர்களுக்கு புத்தகக் காட்சியும். ஆகவே இனி ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சிக்கு செல்ல எண்ணம், பார்ப்போம்.

34 ஆவது சென்னை புத்தக காட்சி – புத்தகப்பட்டியல் (ஜனவரி 14)

சென்ற ஜனவரி 14 வெள்ளியன்று நான் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே.

முன்னரே சொன்னதுபோல நான் நீண்ட நாட்களாக தேடிவந்த சில புத்தகங்கள் இந்தமுறை எனக்குக் கிடைத்தன. அவை “அஞ்சலை”, “கொற்றவை” மற்றும் ”தவிப்பு”. அதிலும் அஞ்சலை மற்றும் தவிப்பு நாவல்கள் இனி நிச்சயம் கிடைக்காதென நானே என்னை சமாதானப்படுத்தி இருந்தேன். என்றபோதும் ஒவ்வொரு மாதமும் புத்தகம் வாங்கச் செல்லும் போதும், எல்லா புத்தகங்களையும் பார்த்து விட்டு இறுதியாக நான் மேற்சொன்ன புத்தகங்களை கேட்பதும், “சார் அது அவுட் ஆப் பிரிண்டு சார், நீங்க எங்க தேடினாலும் கிடைக்காது” என பதில் வருவதும் இயல்பான விசயங்கள். அதைப்போலவே நீண்ட நாட்களாக தேடி வந்த பொழிபெயர்ப்பு நூலகளும் இம்முறை கிடைத்தது நிறைவான விசயம்.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் எல்லா புத்தகங்களையும் இப்போதுதான் வாங்கியுள்ளேன், இன்னும் படிக்கவில்லை. எனவே புத்தகம் பற்றிய குறிப்புகள் ஏற்கனவே நான் பல்வேறு தளங்கள் வாயிலாக அறிந்தவை மட்டுமே.

1. அஞ்சலை – கண்மணி குணசேகரன் (தமிழினி பதிப்பகம்)
நீண்ட காலமாக நான் தேடி வந்த இந்த நாவல். பெண்மையின் அவலங்களை மட்டுமின்றி ஆளுமையையும் பதிவு செய்துள்ளதாக பாராட்டப்பட்டது. தமிழின் ஆகச்சிறந்த பெண் கதாபாத்திரங்களில் அஞ்சலையும் ஒருவர்.

2. கொற்றவை – ஜெயமோகன் (தமிழினி பதிப்பகம்)
சிலப்பதிகாரதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள புதுக்காவியம். நான் இந்த புத்தகதை வாங்க முற்ப்படுகையில் அருகிலுருந்த பெரியவர் “ஒவ்வொரு தமிழனுடைய வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம் தம்பி” என்றது கூடுதல் சிறப்பு.

3. பேயோன் 1000 - பேயோன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
ட்விட்டரில் பேயோன் அவர்களது நுண்பதிவுகளின் தொகுப்பு. சிரிக்க, சிந்திக்க, குழம்ப, குதூகலப்பட என எல்லா வகையிலும் அறியப்பட்ட “காக்டெய்ல்”.

4. திசை காட்டிப் பறவை – பேயோன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
நிச்சயமாக இவரின் எழுத்து நானறிந்தவரை மிக மிக புதுமையானது. இவரே எழுதும் இவரின் கதையில் இவர்தான் மூன்றாம் நபர்.

5. தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் – திரட்டித் தொகுத்தவர் ஏ.கே.செட்டியார் (சந்தியா பதிப்பகம்)
தமிழின் முதல் சிறந்த பயணி என்று அறியப்படுபவரும், சிறந்த பயணக்கட்டுரைகள் எழுதியவரும், உலகம் சுற்றிய தமிழருமான ஏ.கே.செட்டியார் தொகுத்த பயணக்கட்டுரைகள் (பிறர் எழுதியவை).

6. தவிப்பு – ஞாநி (ஞானபாநு)
அதிதீவிர அரசியல் கட்டுரைகளுக்கு பேர்போன திரு.ஞாநி அவர்களின் நாவல். இதுலும் அரசியல்தான் களம். என்றபோதிலும் அதை சொன்னவிதம்தான் இந்த நாவலின் சிறப்பு.

7. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி (வம்சி புக்ஸ்)
எழுத்தாளர் திரு. பாஸ்கர் சக்தியின் ஒன்பது சிறுகதைகள் மற்றும் இரண்டு குறுநாவல்கள் (ஏழு நாள் சூரியன் ஏழு நாள் சந்திரன், அழகர்சாமியின் குதிரை) கொண்ட தொகுப்பு.

8. நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா (சந்தியா பதிப்பகம்)
தன் தினசரி வாழ்வின் சம்பவங்களின் தொகுப்பு நூல் என்றபோதிலும் அதை கலாப்ரியா சொன்னவிதத்தில் வசீகரிக்கின்றார். மிகுந்த பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் பெற்ற நூல்.

9. இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர் - தமிழில் குறிஞ்சிவேலன் (சாகித்திய அக்காதெமி)
மகாபாரதக்கதையை முன்வைத்து மலையாளத்தில் எழுதப்பட்ட நூல். அதிக கற்பனைகள் கலவாமல் எதார்த்தமாக நகரும் நாவல். எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் பரிந்துரை.

10. ஒரு கிராமத்தின் கதை – எஸ்.கே.பொற்றெக்காட் – தமிழில் சி.ஏ.பாலன் (சாகித்திய அக்காதெமி)
கிராமிய வாழ்வின் நேர்மையையும் மகத்துவங்களையும் காட்சிப்படுத்தும் இந்த நாவல் மலையாள மொழியில் எழுதப்பட்டது. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் பரிந்துரை.

எல்லா நூல்களின் விலையையும் பதிவிட ஆசைதான் என்றாலும் வருமான வரித்துறையை சமாளிக்க விலையைக் குறிப்பிடவில்லை (என்று சொன்னாலும் உண்மையான காரணம் உள்நாட்டுப் போரை தவிர்ப்பதே என்பதை மணமானவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்).

(ஜனவரி 15 சனிக்கிழமை வாங்கிய புத்தகங்கள் பிறிதொரு பதிவில்)

34 ஆவது சென்னை புத்தக காட்சி – வெள்ளி (ஜனவரி 14)

இன்று போகிப் பண்டிகை - விடுமுறை தினம். எனவே 11 மணிக்கெல்லாம் புத்தகக் கண்காட்சி துவங்கிவிடும். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால் (அதிலும் பொதுவாக மாலை நேரங்களில் நல்ல கூட்டமிருக்குமென்பது அனுபவசாலிகளின் அறிவுரை. இவன் புத்தகக் காட்சிக்கு போக முடிவு பண்ணினாலும் பண்ணினான் கேள்வி மேல கேள்வி கேட்டு நம்ம உயிர எடுக்கிறான் என அனுபவசாலிகள் அலுத்துக்கொண்டது தேவையில்லாத தனிக்கதை) நான் காலை நேரத்திலேயே சென்றுவிடுவதென முடிவு செய்திருந்தேன். அதன்படியே 11:30 மணியளவில் பைக்கில் கிளம்பி நான் கண்காட்சி திடலை 12 மணியளவில் அடைந்தேன்.

உள்ளே நுழைந்ததும் முதலிலேயே இரு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம். ஏறத்தாழ பாதி நிரம்பியிருந்தது. எனவே சுமாரான கூட்டம்தான் இருக்குமென நினைத்துக் கொண்டேன். வண்டியை நிறுத்தி விட்டு ரூ.10/- டோக்கனுக்காக செலுத்தினேன். கண்காட்சி நுழைவுக்கட்டணத்தைவிட இது இரு மடங்கு அதிகம். கண்காட்சியை நோக்கி நடக்கலானேன். கார் நிறுத்துமிடத்திலும் அவ்வளவாக கூட்டமில்லை. புத்தகக் காட்சியின் முன்புறத்தில் அரங்களுக்கு வெளியே இருந்த உணவு விடுதி மற்றும் இன்னபிற திண்பண்டங்களுக்கான கடைகளுமிருந்தன (சூப், பால்கோவா, பழரசங்கள் இத்யாதி இத்யாதி). என்றபோதும், அர்ச்சுனன் கண்ணுக்கு புறாவின் கழுத்து மட்டும் தெரிந்தது போல நேராக சென்று அரங்கத்தினுள் செல்ல நுழைவுச்சீட்டு வாங்கினேன் (காலையில் செமத்தியாக சாப்பிட்டு விட்டதால் வேறு வழியில்லை என்பது வசந்தி... இல்ல இல்ல வதந்தி).

நான் முதல்முறையாக சென்னை புத்தகக் காட்சிக்கு செல்வதால் எப்போதும் நடக்கும் சாதாரணமான விசயங்கள் கூட எனக்கு புதிதாக தெரிவதற்கான சாத்தியங்களுண்டு. நுழையுமிடத்திலேயே அரங்கங்களின் அமைப்பைக் காட்டும் “வாசகர் கையேடு” வழங்கப்பட்டது. நான் நுழையுமுன்பே தீர்மானித்திருந்தேன் எல்லா அரங்குகளுக்கும் செல்வதென. எனவே 1,2,3 என முதலிலிருந்து துவங்கினேன்.

ஏறத்தாழ எல்லாருமே புகழ்ந்திருந்த “வரலாற்றுச் சுவடுகள்” புத்தகத்தை வாங்கினேன். தினத்தந்தி அரங்கில் அந்த ஒரு தலைப்பில்தான் புத்தகம்தான் வைத்திருந்தார்கள். ஆனால் அதுவே நன்றாக விற்றது. அடுத்தடுத்த பதிப்பகங்களாக பார்த்துக்கொண்டே சென்றேன். நான் நிச்சயம் செல்ல வேண்டிய பதிப்பகங்கள் மற்றும் வாங்க வேண்டிய புத்தகங்கள் என குறிப்பொன்றை வைத்திருந்தேன். அதிலுள்ள பதிப்பகங்களில் நீண்ட நேரம் இருந்தேன். ஆர்வக்கோளாரால் சில பல ஆங்கில பதிப்பகங்களுக்கும் சென்று (வழக்கம்போல்)புரியாமல் Yes, Ya, You are correct , Thank you சொல்லி வெளியேறினேன். திரு. ஞாநி அவர்களின் ஞானபாநு பதிப்பகத்தில் நான் தேடிக்கொண்டிருந்த “தவிப்பு” நாவல் கிடைத்தது. கூடவே எந்த எதிர்கட்சி சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கான வாக்கெடுப்பும் நடந்தது. நீண்ட யோசனைக்கு பின்னர்(அரை விநாடி என்ற உண்மையை சொன்னால் என் நம்பகத்தன்மை குறையலாம்) என் வாக்கை செலுத்திவிட்டு வந்தேன்.

இந்தப் புத்தக கண்காட்சியில் நான் எதிர்பாராமல் நடந்த நல்ல விசயம் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த “அஞ்சலை” நாவலும், “கொற்றவை” நாவலும் கிடைத்ததுதான். (சார், உங்க பிரச்சனையே, புத்தகம் சுலுவா கிடைக்குற காலத்துல, ”அதான் இருக்கே பின்னால வாங்கிக்கலாம்” ன்னு விட்டுட்டு புத்தகம் தீர்ந்து பதிப்பகமும் பதிப்பை நிறுத்தின அப்புறமா அதே புத்தகத்தை காணக்கிடைக்காத பொக்கிஷம்போல தேடி அலையறதுதான் – என்பது நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் புத்தகக்கடை நண்பர் எனக்களித்த சான்றிதழ்). நான் வாங்கிய புத்தகங்களில் பட்டியல் அடுத்த பதிவில்.

பொதுவாக ஒவ்வொரு வாசகர்களிடமும் மனதில் ஒரு பட்டியல் இருக்கின்றது. அது அவரவர் ரசனையைப் பொருத்தே அமையும். சிலருக்கு சில பதிப்பக புத்தகங்கள், சிலருக்கு குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் புத்தகங்கள், சிலருக்கோ வரலாறு, சுயமுன்னேற்றம், சமையல் குறிப்புகள், ஆன்மீகம் இப்படி ஏதாவது. இதிலும் எல்லா தரப்பிலும் எல்லாவற்றையும் படிக்கவேண்டுமென்ற எண்ணம் கொண்ட ”ஆல் இன் ஆல்” அழகுராஜா மன்னிக்க ஆர்வராஜாக்களும் உண்டு. ஆனால் நான் பார்த்தவரையில் வெறுமனே பொழுதுபோக்க வந்தவர்கள் என எவருமில்லை. நான் கண்டவரையில் கண்காட்சிக்கு நல்ல கூட்டமிருந்ததாகவே கருதுகின்றேன். அதிலும் ஏறத்தாழ 4-5 மாதங்களே ஆயிருக்கும் கைகுழந்தையுடன் கண்காட்சி அரங்கை ஒரு தாய் வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சி.

இறுதியாக ஏறத்தாழ எல்லா அரங்குகளுக்கும் சென்று கை நிறைந்து மனம் நிறைந்து வெளியேறும் போது மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு எப்போது வருவோமென எண்ணிக்கொண்டேன் (அடுத்த இரு தினங்களுக்கு சென்னை சங்கமம் மற்றும் சில திரைப்படங்கள் என்பது என் திட்டம்).

ஆனால் அடுத்த தினமே மீண்டும் புத்தக கண்காட்சிக்கு வரவேண்டியதாய்ப் இருக்குமென்பதும், அன்றைய தினம் எனக்கு மிக மிக சிறப்பானதாயிருக்குமென்பதும் எனக்கு அப்போது தெரியாது.

34 ஆவது சென்னை புத்தகக் காட்சி – தயாரிப்பு

”ஏங்க பொங்கலுக்கு வரதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா ?”

தொலைபேசியில் கேட்டாள் என் மனைவி.

“இல்லம்மா, இந்த வாரம் முக்கியமான டெஸ்டிங் வேலை இருக்கும் போல தெரியுது. அதனால வரது ரெண்டு அர்த்தம்தான்”

“என்னங்க இப்படி சொல்லுறீங்க.... நோம்பி (விழா நாள் என்பதற்கான கொங்கு பாஷை) நாளாதுவுமா சென்னைல தனியா நீங்க என்ன பண்ணப்போறீங்க ?”

“அப்படியில்லமா, வேலை இருந்ததுன்னா நாம என்ன செய்யுறது சொல்லு ? அதுமட்டுமில்லாம புத்தக கண்காட்சிக்கு போலாம்னு ஒரு ஐடியா...” என்று லேசாக பிட்டைப் போட்டேன்.

“அதான பாத்தேன், ஏற்கனவே வாங்கின புத்தகத்த மொதல்ல படிச்சு முடிங்க, அப்புறம் வாங்கலாம்.” எதிர்பார்த்த பதிலாகையால் மேற்கொண்டு பயமில்லை. திட்டமிட்ட வசனங்களே போதும்.

”அருணா, உங்கிட்ட நான் பலமுறை சொல்லியிருக்கேன், நான் படிக்க ஆசைப்பட்ட, நேரமிருந்த போதெல்லாம் வாங்க காசிருந்ததில்லை. அதனால இப்ப வாங்க காசிருக்கு வாங்கி வைப்போம். என்ன சொல்லுற ?”

சில நிமிடங்களுக்கு மெளனம்...

“ஹலோ.. ஹலோ...”

“சொல்லுங்க...”

“என்ன ஆச்சு ? பேச்சையே காணோம்? “

“இல்லீங்க, தண்ணிகுடிக்க போயிருந்தேன், அதான் போன இங்கயே வச்சுட்டு போய்ட்டேன். என்ன சொன்னீங்க?”

என்ன ஒரு வில்லத்தனம்....பேசும்போது கேட்காமல் கேட்கும்போது பேசணுமான்னு எனக்கு ஏக கடுப்பு. இருந்தாலும் இப்ப வீரம் முக்கியமில்லை விவேகம்தான் முக்கியமாதலால். மீண்டும் துவங்கினேன்.

”அருணா, உங்கிட்ட நான் பலமுறை சொல்லியிருக்கேன், நான் படிக்க ஆசைப்பட்ட.....”

“ஏங்க இருங்க. தெரியும் தெரியும்... பழைய வசனம்தானே”

“ஆமா. ஆமா “ (பின்ன இதுக்காக தனியா வசனகர்த்தாவா வைச்சுக்க முடியும்..)

“சரி முடிவு பண்ணீட்டீங்க.... உங்க இஸ்டம் ”

“இல்லமா புத்தக கண்காட்சின்னு இல்ல. நெசமாலுமே வேலை இருக்கு”

“சொன்னா கேட்க மாட்டீங்க. ஆனா அப்பாகிட்டயும், மாமாகிட்டயும் ஒரு பேச்சு சொல்லிடுங்க”

என்னடா இது... இவ்வளவு சுலபமா வேலை முடிஞ்சிருச்சேன்னு ஒருபக்கம் சந்தோஷம். ஆனா இனி அப்பாகிட்டயும் மாமனார்கிட்டயும் பேசணுமேன்னு ஒரு தயக்கம் வேறு. என்ற போதிலும் இந்த புத்தகக் கண்காட்சி துவங்கிய நாள்தொட்டு பெரும்பாலும் நான் படிக்கும் தளங்களில் எல்லாம் வெளியாகியிருந்த புத்தக காட்சிப் பதிவுகள் ஏகத்துக்கு என்னை உசுப்பேற்றியிருந்ததன. அதிலும் பா. ராகவன் மற்றும் தமிழ்பேப்பரில் தினமும் போடும் பதிவுகள் புத்தக கண்காட்சிக்கு சென்றே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை உண்டாக்கின. பத்தும் பத்தாததற்க்கு நம்ம எஸ்.ராமகிருஷ்ணனும் அவருடைய சிபாரிசுகளைச் சொல்லியிருந்தார்.

எனவே ஒருவழியாக அப்பாவிடமும், மாமாவிடமும் பேசி அவர்களிடம் சம்மதம் வாங்கியாகிவிட்டது (பேசியது புத்தக கண்காட்சியைப் பற்றியல்ல அலுவலக வேலையைப் பற்றி). முடித்தபின் மீண்டும் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.

எனக்கு சம்பந்தமேயில்லாமல் “முடிவில் ஒரு திருப்பம்” என்ற புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு தொலைபேசியை எடுத்தேன்.

“சொல்லும்மா, இப்பதான் அப்பாகிட்டயும் மாமாகிட்டயும் பேசினேன். ஒண்ணும் பிரச்சனை இல்ல”

“ஏங்க நெசமா சொல்லுங்க... புத்தக கண்காட்சி மட்டும்தானா ? வேற ப்ளான் ஒண்ணுமில்லைல”

“சே என்ன இப்படி ஒரு கேள்வி. பசங்க எல்லாருமே ஊருக்கு வந்திருப்பாங்க தெரியுமில்ல”

“தெரியும். இருந்தாலும்... அடுத்த வாரம் போய்க்கோங்களேன்.... பொங்கலுக்கு இங்க வாங்க”

“என்னப்பா இது... வேலை இருக்கறதாலதான நான் வரமாட்டேங்கிறேன்...”

ஒருவழியாக இப்படியான பல கட்ட விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளைத் தாண்டி புத்தக கண்காட்சிக்கு செல்வது உறுதிப்படுத்தப்பட்டது.

பின் வந்த ஓரிரு நாட்களும் முக்கியமான அரங்களையும் புத்தகங்களையும் குறித்து வைப்பதில் கழிந்தது. ஜனவரி 13 வியாழன் வரை பல்வேறு தளங்களில் புத்தக கண்காட்சி குறித்த தகவல்களை திரட்டிக்கொண்டேயிருந்தேன். ஜனவரி 14 வெள்ளி காலை செல்வதாக திட்டம்.

34 ஆவது சென்னை புத்தகக் காட்சி – முன்கதை சுருக்கம்

நான் சென்னை வந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவரை ஒருமுறை கூட நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றதில்லை. புத்தகங்கள் படிப்பதில் எனக்கு ஆர்வமிருந்த போதிலும் சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்லாமலிருந்ததற்கு சில காரணங்களிருக்கின்றன.

பொதுவாக புத்தக கண்காட்சி நடைபெறும் வார நாட்களில் அலுவலக பணிகளால் போக இயன்றதேயில்லை. அதுமட்டுமின்றி, புத்தக கண்காட்சி நடைபெறும் பொங்கல் பண்டிகை (தைப்பொங்கல் மட்டுமல்ல என் சொந்த ஊர் அம்மன் பொங்கலும்தான்) சமயங்களில் வார விடுமுறைகளில் அவசியம் நான் ஊருக்கு செல்லவேண்டியிருக்கும் (இல்லாட்டி மட்டுமென்ன.... எல்லா சனி, ஞாயிறும் ஊருக்கு போறவந்தான, இதில பொங்கல் கெடா வெட்டுன்னு சாக்கு வேற). நான் வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் பண்டிகைதினங்களில் என்னுடைய இருப்பு பெற்றோர்களுக்கு அவசியமாகின்றது (என்று என்னால் நம்பப்படுகின்றது, அவங்களைக் கேட்டாதான் உண்மை தெரியும்).

இதைத்தவிர இன்னுமொரு முக்கியமான காரணமுண்டு. பொதுவாக மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ நான் தொடர்ந்து புத்தகங்கள் வாங்கும் இயல்பினன். அனைத்தையும் உடனடியாக படித்து முடிக்க முடியாவிட்டாலும், பணமிருக்கும் போது வாங்கிக் கொண்டு, நேரம் கிடைக்கும்போது வாசிப்போம் என்ற எண்ணம்தான் காரணம். அதனால் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்க வேண்டுமென்று தோன்றவில்லை.

என்றபோதிலும் ஈரோடு, கோவை என இரண்டுமுறை எதேச்சையாக புத்தக கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்பு நேர்ந்தது. அப்போதெல்லாம் சென்னை புத்தக கண்காட்சிக்கும் செல்ல வேண்டுமென்ற ஆவல் மனதில் எழும். காரணம் என்னவென்றால் மற்ற ஊர்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை விடவும் சென்னை புத்தக கண்காட்சி அதிக அரங்குகள் கொண்டது என்பது மட்டுமல்ல.

நான் என் வாழ்வின் ஒரு கட்டத்தை சென்னையில் கழித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் புத்தக கண்காட்சிக்கு ஒருமுறைகூட சென்றதில்லை என்பதை பெரும் குறையாகவே உணர்ந்திருக்கின்றேன். என்னுடைய அந்தப் பெரும் குறை இந்த வருடம் தீர்ந்தது.

34 ஆவது சென்னை புத்தக காட்சி 2011 க்கு இவ்வருடம் செல்ல நேர்ந்தது. அதன் அனுபவங்களை பதிவிட எண்ணியிருக்கின்றேன்.

பரமு

சில வாரங்களுக்கு முந்தைய ஒரு ஞாயிறு இரவில், திருப்பூர் செல்வதற்காக பூண்டி (என் சொந்த ஊர்) பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். லேசான மழை பெய்து கொண்டிருந்தது. ஏதேதோ சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. பேருந்து நிறுத்தத்தில் மிக சொற்பமான பயணிகள் இருந்தனர். என்னவென்று வரையறுக்கவியலாத ஏதேதோ சிந்தனைகள் மனதுள் தோன்றியவண்ணமிருந்தன. ஒரு சில வினாடிகளாக மனதில் யாரோ என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு உள்ளுணர்வு தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தேன் தெரிந்தவர் யாரும் அருகிலில்லை. எனவே என் உள்ளுணர்வை புறக்கணித்து மீண்டும் கவனத்தை பேருந்து வரும் திசையில் செலுத்த முற்பட்ட போதுதான் கவனித்தேன், பேருந்து நிறுத்தத்தின் ஒரு இருண்ட மூலையில் யாரோ என்னை பார்த்துக்கொண்டிருப்பதை.

அந்த இடம் நல்ல இருட்டு, ஆகையால் .என்னால் அங்கிருந்த நபரை சரியாக காணமுடியவில்லை. அவர் கையிலிருந்த பீடித்துண்டின் ஒற்றை சிவப்பு வெளிச்சம் மட்டுமே அங்கு ஆளிருப்பதை உணர்த்தியது. நானும் அவரைப் பார்த்துகொண்டிருப்பதை கண்டவுடன் அந்த நபர் என்னை நோக்கி வந்தார். என்னருகே வந்த பின் இறுதியாக பீடியை ஆழமாக இழுத்துவிட்டு சுண்டி எறிந்தார். லேசான மது நெடியுடன் என்னைப் பார்த்துக் கேட்டார்....

“என்ன காளீஸ்வரா... அப்படி பாக்குற.. அடையாள்ம் தெரியலையா ?”

இந்த குரல் எனக்கு மிகவும் தெரிந்த குரல்..... நான் என் வாழ்வின் ஏதோ ஒரு கால கட்டத்தில் அடிக்கடி கேட்ட குரல். என் மனம் மிக மிக வேகமாக ஆராயத்துவங்கியது. பல நிமிடங்கள் கழிந்தபின்னரும் என்னால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“டேய்... என்னடா, நெசமாலுமே கண்டுபிடிக்க முடியலையா ?. அப்ப சரி கிளம்பவேண்டியதுதான்..... உனக்கு ஒரு அஞ்சு நிமிசம் டைம் தரேன், அதுக்குள்ள கண்டுபிடிக்காட்டி.... நான் பாட்டுக்கு போய்க்கிட்டேயிருப்பேன்”

யோசிக்கத்துவங்கிய அந்த நிமிடமே எனக்குத் தெரிந்துவிட்டது அஞ்சு நிமிசமில்லை அஞ்சு மணிநேரமானாலும் என்னால் அவனை அடையாள்ம் காணவியலாதென்று.

ஓரிரு நிமிடங்களில் அவனே என்னால் கண்டுபிடிக்க முடியாதென எப்படியோ தெரிந்து கொண்டான் (என்ன எப்படியோ தெரிந்து கொண்டான், பாண்டியராஜன் ரேஞ்சுக்கு அழகான திருட்டு முழி முழிச்சு..பாக்கியராஜ் மாதிரி பம்முனா, எவனா இருந்தாலும் நீ வேஸ்டுன்னு தெரிஞ்சுக்குவாங்கடா முட்டாள்.....). பின்னர் அவனே பேசத்துவங்கினான்.

”ம்.. எப்படியாவது கண்டுபிடிச்சுருவன்னு நெனச்சேன்... பரவாயில்ல... பல வருசமயிருச்சுல்ல... அதான் மறந்துட்ட.. நான் தான்டா பரமசிவம். உங்கூட…”

அவனுடைய பெயரைக் கேட்டவுடனே எனக்கு அவனைத் தெரிந்துவிட்டது. என்னுடன் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ”திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி” யில் ஒன்றாகப் படித்தவன். நெருங்கிய தோழன் என சொல்லமுடியாவிட்டாலும், மறக்குமளவு அன்னியனில்லை.

எங்கள் பள்ளி ஒரு கிராமப்புறப் பள்ளி. பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தினரும் அதற்கும் கீழிருப்பவர்களும் படிக்கும் பள்ளி. இங்கு நான் குறிப்பிடும் நடுத்தரவர்க்கத்தினர் என்பவர்கள் சத்துணவை நம்பியிராத குடும்ப மாணவர்கள் அவ்வளவே. அதைபோலவே பெரும்பாலும் விவசாயத்தை நம்பிருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். என்னுடைய நண்பர்கள் பலரும் விடுமுறைதினத்தில் கூலி வேலை செய்தவர்கள். ஒருவகையில் நான் வாழ்வின் முகங்களை அறிந்துகொள்ளச் செய்தவர்கள்.
அந்த பள்ளியில் ஒரு மூன்றாண்டு காலம் என்னுடன் படித்தவன்தான் இந்த பரமசிவம். இருவரும் பெரும்பாலும் அடுத்தடுத்த பெஞ்ச்களில்தான் அமருவோம். என்றாலும் வகுப்பறையினுள் அதிகம் பழக்கமில்லை. மற்றபடி கிரிக்கெட் விளையாட்டிலும், மதிய உணவுவேளைகளிலும் பலமுறை பேசி சிரித்து பழகியிருக்கின்றோம். விவசாயக் குடும்பத்திலிருந்து படிக்கவந்தவன், சுமாராகத்தான் படிப்பான்.

அவன்தான் என்னெதிரே மது நெடியுடன், பீடிப்புகையுடன் நிற்கின்றான். அந்த நொடியில் நானடைந்த வெட்க உணர்ச்சிக்கு அளவே இல்லை. அவனிடம் முகத்திலும் சரி, உடல் பருமன், உயரம் இப்படி எதிலும் பெருமளவு மாற்றம் இல்லாத போதும் என்னால் அவனைக் கண்டறிய இயலாமல் போனதையெண்ணி மிக வருத்தமடைந்தேன்.

”என்னடா இப்பவாச்சும் அடையாளம் தெரிஞ்சதா..இல்லியா ?”

”சொல்லுடா பரமு, ஸாரிடா என்னால டக்குன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியல. எப்புடி இருக்க ? என்ன பண்ணுற?”

“நா நல்லாதாண்டா இருக்கேன், நீ என்ன பண்ணுற ? எங்கியோ பயணம்வெச்சுடாப்புல தெரியுது”

”நா மெட்ராஸ் ல வேலைல இருக்கேண்டா. லீவுக்கு ஊருக்கு வந்தேன். இப்ப திரும்ப மெட்ராஸ் போறேன்”

“நீ, பரவாயில்லடா நல்லா படிச்ச, இப்பபாரு மெட்ராஸ்ல வேலைல இருக்க. என்ன பாரு, படிடா படிடான்னு எங்கையன் சொன்ன போதும் கேக்கல, வாத்தியாருங்க சொன்னபோதும் புரியல... இப்ப என்னடான்னா....”

“ஏன்டா நீ இப்ப என்ன பண்ணுற?”

டக்கென்று சிரித்தான். எனக்கு ஒரு நிமிடம் என் பள்ளி நினைவு வந்து போனது.

“என்ன பண்ணலன்னு கேளு”

”.....”

“கஞ்சா, கடத்தல், பீடி, குடி, கம்பெனி வேல இப்படி எதயும் விட்டுவக்கல. சோத்துக்கு என்ன வேணுமோ அத எல்லா வழியிலும் சம்பாதிக்கிறேன். அவ்வளவுதான். நான் நல்லாதாண்டா இருக்கறேன். நீயும் நல்ல இரு”

நான் பேசமறந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சரிடா உனக்கு பஸ் வந்திருச்சு, பாத்து போ. இப்படி எப்பயாவது பாத்த ரண்டு வார்த்த பேசு என்ன...”

சொன்னவன், பதிலுக்கு காத்திராமல் லேசான தள்ளாட்டத்துடன் சாலையைக் கடந்து சென்றான். கனத்த மனதுடன் பேருந்து ஏறி இருக்கையில் அமர்ந்த பின்னர் அவனிடம் கூற மறந்ததை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

“இல்லடா பரமு, வெறும் படிப்பு மட்டுமில்ல எங்கப்பா, அம்மா அங்க இங்க கடன் வாங்கித்தந்த காசும்தான் என்னோட இந்த நிலைக்கு காரணம். விதியோ இல்ல வேற எதாவதோ உனக்கும் உன்ன போல நெறைய பேருக்கும் அது அமையல”