title


நீலகண்டப் பறவையைத் தேடி

எதிரிலிருந்த பெரிய வேப்பமரத்தின் இலைகள் அனைத்துமே, ஒரு நொடியில் பறவைகளாக உருமாற்றமடைந்தன. மறுநொடியில் மீண்டும் இலைகளாக. இம்முறை இலைகளின் இடைவெளியில் போர்வீரர்கள் தோன்றலாயினர். தொடர்ந்து சம்பந்தமில்லாத மனிதர்களும் சம்பவங்களும். ஒரு மாபெரும் மந்திரவெளியில் இருப்பதான பயம் பீடித்தது. நல்லவேளையாக அம்மா என் எண்ணவோட்டத்தைக் கலைத்தாள். கடும் காய்ச்சலால் முணங்கிக்கொண்டிருந்த எனக்கு அப்போது 13-14 வயதிருக்கும். காய்ச்சலுக்கு மந்திரிக்க (கொங்கு வட்டார மொழியில் சொல்வதானால் ”செரவடிக்க”), நந்தகுமார் அண்ணன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது கிடைத்த அனுபவம் மேற்சொன்னது. பால்யத்தின் எண்ணற்ற அனுபவங்களுக்கு மத்தியில் இவ்வனுபவம் நிலைத்து நிற்க தன் அமானுஷ்த்தன்மையும் அந்தக் கனவுவெளியும் ஒரு முக்கியமான காரணம் என இப்போது தோன்றுகிறது. 

.

அவ்வனுபவத்துக்கிணையான கனவுத்தன்மையில் சஞ்சரிக்க வைத்தது “நீலகண்டப் பறவைத் தேடி” நாவல் (வங்க மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய; தமிழாக்கம்:சு.கிருஷ்ணமூர்த்தி; நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு). 1971ல் எழுதப்பட்ட இந்நாவல், சுதந்திரத்துக்கு முந்தைய, தேசப் பிரிவினை எண்ணம் துளிர்விடத் துவங்கிய காலகட்டத்தைச் சித்தரிக்கின்றது. ஒரு குடும்பத்தையோ அல்லது தனி நபரையோ மையப்படுத்தாமல், கிழக்கு வங்காளத்தில் பாயும் “ஸோனாலி பாலி” நதியையும், அதன் கரையிலிருக்கும் கிராம மக்களின் வாழ்க்கையையும் இந்நாவல் பேசு பொருளாகக் கொண்டுள்ளது. நதிக்கரையில் வாழும் வசதி மிக்க இந்துக்கள், அவர்களிடம் பணி செய்யும் ஏழைகளான இஸ்லாமியர்கள். இவ்விரு மக்களிடையே நிலவும் இணக்கமும் பிணைப்பும், மாறிவரும் அரசியல் சூழல், அது அம்மக்களின் வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் என ஒரு தளத்தில் கதை கூறப்பட்டாலும், மற்றொரு தளத்தில் இந்நாவல் காட்டும் விவரணைகள் நம்மை அந்நிலப்பரப்புக்குள், அந்த நதியில், வானில் திளைக்கச்செய்கின்றன.

*

இந்நாவலின் முக்கியக் கதாப்பாத்திரம், ஊரின் மிகப் பெரிய டாகூர் குடும்பத்தின் மூத்த பிள்ளை மணீந்தரநாத். உடலளவிலும் மனதளவிலும் பழுதற அமைந்தவர். எவரும் சுட்டிக் காட்டுவதற்கான ஒரு குறை கூட இல்லாதவர். அப்படியொரு முழுமையான மனிதர், நம்மைப் போல சாதாரணமாக உண்டு, களித்து, உறங்கி மடிந்தால் பின்னர் ”விதி” என்ற சொல்லுக்கு என்ன மரியாதை இருக்கமுடியும்? சிறுவயதிலேயே மணீந்தரநாத்தின் கண்ணைப் பார்த்து அவர் பைத்தியமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது எனக் கூறிகிறார் ஒரு பீர். அவர் வாக்கு பொய்த்துப்போகாமல் காத்த பெருமை வெளிநாட்டுப் பெண் ”பாலின்” உடனான மணீந்தரநாத்தின் காதலுக்குக் கிடைக்கிறது. கூடவே, மகனின் ஆசையை நிறைவேற்றாமல், அவன் மனப்பிறழவுக்கு தானே காரணம் என மகேந்திரநாத் வருந்தவும் அதுவே வழிவகுக்கிறது. இந்நாவல் முழுவதிலும் தான் இழந்தவொன்றை தேடி அலையும் மணீந்தரநாத்தின் சித்தரிப்புகள் அனைத்துமே கனவுத்தன்மை கொண்டவை. மணீந்தரநாத்தின், சாயலுள்ளவன் என நாவலில் சொல்லப்படும் சோனா, அவரது தம்பி மகன். தன் பெரியப்பா உடனான சோனாவின் நெருக்கமும், அவனது அலைக்கழிப்புகளும் அவன் இன்னொரு “பைத்தியகார டாகூராக” மாறுவதற்கான சாத்தியங்களைக் காட்டுகின்றன. இதை மணீந்தரநாத்தே, சோனாவிடம் கூறும் காட்சி, இந்நாவலின் உச்சதருணங்களுல் ஒன்று.   

*

ஊரில் இருக்கும் வயதான முஸ்லீம்கள் பெரும்பாலும் தங்கள் இந்து எஜமானர்கள் மீது எவ்வித வருத்தமுமற்றவர்கள். நிலச்சொந்தக்காரங்கள் பசியின் சுவடே அறியாதிருக்க, விளைச்சலைக் காவல் காத்துக்கொண்டு கொடும் பசியை எதிர்கொள்ள நேரும் போதும் தங்கள் எஜமானர்களின் பெருந்தன்மை மீது எவ்வித சந்தேகமும் அற்றவர்கள். மாறிவரும் அரசியல் களம், பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் இவை எதுவும், இக்கிராம மக்களை பெரிதும் பாதிப்பதில்லை. இந்நாவல் காட்சிப்படுத்தும் காலகட்டம் பிரிவினை எண்ணம் முளைவிட்ட சமயம் என்பதால், இவ்விரிசல் பொது மக்களிடையே பெரிதாகத் தென்படுவதில்லை என எண்ணுகிறேன். என்னதான் மதத்தின் பெயரிலான வேறுபாடுகளை பரப்பினாலும், தானறிந்த சமூகத்தைக் கொண்டே அதைக் கடக்கும் மனநிலை இருபக்கத்திலும் இருக்கிறது. டாக்கா கலவரத்தில் மாண்டுபோன மனிதர்கள் (குறிப்பாக இஸ்லாமியர்கள்), குறித்து மனம் வருந்தும் ஆபேத் அலி, தன் உள்ளூர் இந்து மக்களின் தாராள மனப்பான்மையை எண்ணி அமைதியடைகிறார். கிட்டத்தட்ட இதைப்போன்ற ஒரு அணுகுமுறையே, அவ்வூரின் முந்தைய தலைமுறை முஸ்லீம் பெரியவர்களிடமும் இருக்கிறது. அதைப்போலவே, தன்னுடைய கணவனை டாக்கா கலவரத்தில் பலிகொடுத்த இந்துப் பெண் மாலதி, தன் பால்ய சிநேகிதர்களான உள்ளூர் இஸ்லாமிய நண்பர்கள் மீது எவ்வித காழ்ப்பும் கொள்வதில்லை. 

பொதுவில் வைக்கப்படும் பிரச்சாரங்களை, தானறிந்த சமூகம் மூலம் எதிர்கொள்ளும் இம்மனநிலைக்கான உச்சகட்ட உதாரணமாக கொள்ளத்தக்கவர் ஆசம். டாகூர் குடும்பம் மீதான அவருடைய விசுவாசத்தை, எஜமான் குடும்ப உறுப்பினர்கள் மீது அவர் கொண்டுள்ள உரிமையை எந்தப் பிரச்சாரமும் சிதைப்பதில்லை. வீட்டில் உள்ளோர் பேச்சையும் மீறி சோனாவை திருவிழாவுக்கு அழைத்துப் போவதில் அவர் காட்டும் உரிமையும், எதிர்பாராத கலவரத்தால் குழந்தைகளைத் தொலைத்துவிடும் சமயத்தில் ஈசத்தின் தவிப்பும் அவரது மனநிலைக்கான சான்றுகள். ஈசத்தின் இந்தப் பதைபதைப்பு, பீரின் தர்க்காவில் சோனாவைத் தவறவிட்டு பின்னர் கண்டுபிடித்த மணீந்தரநாத்தின் பதைபதைப்புக்கு சற்றும் சளைத்தில்லை என எண்ணத் தோன்றுகிறது.

விரிசல் விடத்தொடங்கிவிட்டால், சாதாரண நிகழ்வுகள் கூட அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தமுடியும். உதாரணங்களாக, இந்நாவலில் வரும் இரு சம்பவங்களைக் கூறமுடியும். டாக்காவிலிருந்து ”ஷாஹாபுத்தீன் சாகேப்” வருவதை முன்னிட்டு, லீக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் யானையில் பவனி வரும் பெரிய டாகுர் ”மணீந்தரநாத்தால்” குளறுபடி உண்டாகிறது. இதை திட்டமிட்ட சதியாக எண்ணும் சாம்சுதீன் சின்ன டாகுர் ஏற்பாடு செய்யும் காங்கிரஸ் கூட்டத்தில், தாங்களும் இதைப்போலவே பிரச்சனை செய்யலாம் என எண்ணுகிறான். இது தற்செயலான ஒரு விபத்தை திட்டமிட்ட சதியாக பார்க்கும் மனநிலையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் பெரிய டாகூரின் மனநிலைப்பிறழ்வு அந்த ஊருக்கே நன்றாக தெரிந்த ஒன்றுதான். இதைப்போலவே தனி நபர் பிரச்சனைகளால் பெரும் கலவரம் உண்டாகும் நிகழ்வையும் சொல்லலாம். இந்துப் பெண்களை வேற்று சமூக ஆண்கள் கிண்டல் செய்ய, அதைத் தட்டிக்கேட்டதால் திருவிழாவில் கலவரம் வெடிக்கிறது. விளைவாக, பிரச்சனையில் எவ்வித தொடர்பும் அற்ற இருதரப்பினருக்கும் அப்பாவிகளுக்கும் சேதாரம் விளைகிறது.

இந்நாவலின் முக்கியமான இணைகதாப்பாத்திரங்கள் இஸ்லாமியப் பெண்ணான ஜோட்டனும், இந்துப் பெண்ணான மாலதியும். நான்காவது திருமணத்துக்கு காத்திருக்கும் இஸ்லாமியப்பெண் ஜோட்டனும், கணவனை டாக்கா கலவரத்தில் இழந்த இந்துப்பெண் மாலதியும் சந்திப்பது உடல் சார்ந்த தேவையை. ஜோட்டனைப் பொருத்தமட்டில் உடலென்பது நிலம் போல அதில் அல்லாவுக்கு வரி தருவதே தனக்கு விதிக்கப்பட்ட கடன் என எண்ணுகிறாள். அதன் பொருட்டு அவள் செய்துகொள்ளும் மறுமணங்களை மிக இயல்பான ஒன்றாக அவளால் கடக்க முடிகிறது. மறுபுறம் மாலதி, தான் வளர்ந்த கலாச்சாரப் பின்னணியால், தன்னுடைய ஆசைகளை மறுதலிக்க, சமூகத்தால் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறாள். மட்டுமல்ல, அவளது தேவைகள் கூட வெளிப்படையாக பெரிய அளவில் காட்டப்படுவதில்லை. பழைய நினைவுகளாகவோ, கனவாகவோதான் மாலதியின் எண்ணவோட்டத்தை நாம் காணமுடிகிறது. 

*

இரண்டு எதிரெதிர் கலாச்சாரப் பிண்ணனி கொண்டவர்கள் என்றபோதும், மக்களின் ஆழ்மனதில் இம்மண்ணின் மரபின் ஒரு துளியாவது தங்கிவிடுகிறது. பக்கிரி சாயிபு, ஜோட்டனை அழைத்துக்கொண்டு தன்னுடைய குடிசைக்கு முதன்முறை செல்லும் போது, ”பாபா லோக்நாத் பிரம்மச்சாரி”யின் ஆசிரமத்துக்குச் சென்று அவரை தரிசிக்க எண்ணும் சம்பவம் அத்தகைய ஒன்று. போலவே, மானபங்கப்படுத்தப்பட்ட, மாலதியை ஜோட்டனும் பக்கிரி சாயிபும் காணும்போது, மாலதியின் கால் அவர்களுக்கு துர்க்கையம்மனைத்தான் நினைவுறுத்துகிறது. லீக்கில் சேரவிருக்கும் ஜப்பாரால், மாலதிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து, தன் கையறு நிலையை நொந்துகொண்டு, ஊரை விட்டுக்கிளம்பும் சாம்சுத்தீனுக்கு கூட, கார்த்திக் விழாவுக்கு அம்மனுக்குப் படைப்பதற்கு சிறிய கதிர்கள் போதாது எனும் எண்ணம் எழுகிறது. “லட்சுமி அம்மனுக்கு இத்தணூண்டு கறிதானா” என தன் அதிருப்தியை வெளிப்படுத்தி பெரிய கதிர்களை பறித்துக்கொடுக்கும் மனநிலையே அவனுக்கும் வாய்க்கிறது. 

*

சுதேசி இயக்கத்துக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ரஞ்சித்துக்கும், லீக்குக்கு ஆதரவான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சாம்சுத்தீனுக்கும் ஆற்றங்கரையில் நிலவொளியில் நடக்கும் உரையாடல் மிகச்சிக்கனமான வார்த்தைகளில் சொல்லப்பட்ட ஒன்று. அவர்கள் இருவரும், தங்கள் முரண்களை மறந்து பால்ய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி துயர்மிக்கதாக இருந்தது. தன் மகனின் பிறழ்வு தான் எதிர்பாரா ஒன்று எனவும், தெரிந்தே, அவளது வாழ்க்கையை தான் சிதைக்கவில்லை என்றும் மகேந்திரநாத் தன் மருமகளிடம் சொல்லும் இடமும், மிகப்பெரிய உணர்வுகள், மிகக் குறைவான வார்த்தைகளால் காட்சிப்படுத்தப்பட்டதன் இன்னொரு உதாரணம். 

*

நாவலில் ஒரு காட்சியில், யானை மீது ஏறி ஊரைப் பவனி வரும் பெரிய டாகூர் பற்றிய சித்திரம் வருகிறது, சொல்லப்போனால், மானசீகமாக, அந்த யானையை சவாரி போலத்தான் பெரிய டாகூரின் அலைக்கழிப்புகள் இருக்கின்றன. தனக்கு கீழிருப்பவர்கள் எவரையும் அவர் பொருட்படுத்துவதில்லை. அல்லிக்கிழங்கு பறிக்கப்போய் தண்ணீரில் மூழ்கி இறக்கும் ஜாலாலியை அனைவரும் தேடிக்கொண்டிருக்க, ஆற்றில் குதித்து அவள் சடலத்தை மீட்டெடுக்கும் சந்தர்ப்பம் உட்பட மணீந்தரநாத்தின் செயல்களில் பெரும்பாலும் ஒரு நாட்டார்கதைத்தன்மை காணக்கிடைக்கிறது.

*

ஒட்டுமொத்தமாக ”நீலகண்டப் பறவையைத் தேடி” நாவலை, அதன் பரப்பை நான் அதன் கதாப்பாத்திரங்களுடன் இணைத்து பின்வருமாறு தொகுத்துக்கொள்கிறேன்.

பெருகியோடும் ஆற்றின் கரையில் நின்று அதை ஏங்கிப் பார்க்கும் மாலதி. அவளுக்கு தன் வாழ்வும் தேவையும் அந்த ஆறாகவும், அதை அவள் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாகவும் அமைகிறது. மாலதி இறங்கத் தயங்கும், சமூகத்தின் பெயரில் அவளுக்கு மறுக்கப்படும் ஆற்றில் அதே சலுகையால் நீந்தித் திளைக்கும் ஜோட்டன். இன்னொருபுறம் ஆற்றில் மூழ்கி மடியும் ஜாலாலி போன்றவர்களுக்கு மீளமுடியாத சுழலாக அமையும் பசி. இவை அனைத்தையும் கடந்து, கரையோரங்களிலும், நதியின் ஆழத்திலும், வான் நோக்கியும் தனக்காக தேடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் “மணீந்தரநாத்”க்கோ அனைத்தும் ஒன்றே ”கேத்சோரத்சாலா” 

 

புத்துயிர்ப்பு

அன்னா கரீனினா, போரும் அமைதியும் ஆகிய மாபெரும் இரண்டு செவ்வியல் படைப்புகளுக்குப் பிறகு, ஏறத்தாழ பத்தாண்டுகள் இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய 78 ஆவது வயதில் “புத்துயிர்ப்பு” நாவலை தல்ஸ்தோய் எழுத நேர்ந்த சந்தர்ப்பமே ஒரு புனைவாக எழுதப்படக்கூடிய சாத்தியம் கொண்டது. ரஷ்யாவில், மதத்தின் வெற்றுச் சடங்குகள், மூட நம்பிக்கை, பழமைவாதங்களைக் கடந்து, அறத்தின் பால் நிற்கும் பிரிவினர் ”டுகோபார்ஸ்”. அரசாங்கமும், ருஷ்ய சமூகமும் தந்த அழுத்தத்தால், 1898ல் 12000 ”டுகோபார்ஸ்” குடும்பங்கள், ரஷ்யாவிலிருந்து கனடாவுக்கு அகதிகளாக பயணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 6000 மைல் தொலைவுகொண்ட அப்பயணத்துக்கு உதவும் பொருட்டு தல்ஸ்தோய் அவர்களால், 1899 இல் எழுதப்பட்டது “புத்துயிர்ப்பு”. தல்ஸ்தோயின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமும், வழக்கறிஞராய் இருக்கும் அவருடைய நண்பர் சொன்ன ஒரு உண்மைச் சம்பவமும், இந்நாவலுக்கான தூண்டுதல்கள். இந்நாவலின் பேசுபொருளினாலும், “டுகோபார்ஸ்” மீதான தல்ஸ்தோயின் பரிவினாலும் சமூகத்தின் அழுத்தங்கள், வழக்குகள் இவற்றுக்கிடையேதான் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. 

*

ஒரு குற்றவழக்கு விசாரணைக்காக, சான்றோயர்களுல் ஒருவராக வரும் கோமகன் நெஹ்லூதவ், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வேசை மாஸ்லவாவின் வாழ்க்கை தடம் மாறிப்போக தன்னுடைய இளவயதில் தான் செய்த காரியமே காரணம் என எண்ணுகிறார். அவரது குற்றத்துக்கான விசாரணையையும், அதற்கான பரிகாரத்தையும் அவரது மனமே தேடுகிறது. அத்தேடலின் நீட்சியாக, கொலைக் குற்றத்துக்காக சைபீரிய குற்றத்தண்டனை விதிக்கப்படும் மாஸ்லவாவுக்காகப் பரிந்து, மேல்முறையீடு உள்ளிட்ட வாய்ப்புகளை பயன்படுத்தும் நெஹ்லூதவ், ஒரு கட்டத்தில், அவளைத் தொடர்ந்து சைபீரியாவுக்குச் செல்கிறார். இதற்கிடையே, தன்னுடைய நிலங்களை விவசாயிகளுக்கே குத்தகைக்கு விடுகிறார், அவற்றின் மீதான தன் உரிமையையும் துறக்கிறார், வாய்ப்புக் கிடைப்பின் மாஸ்லவாவை மணந்து கொள்ளவும் எண்ணுகிறார். இவற்றின் மூலமாக, இளவயதில் லட்சிய வேட்கை கொண்டிருந்து, பின்னர் ராணுவ வேலையால் அதிகார நிழலின் கருமை படிந்து போன தன்னுடைய ஆளுமையை சீர்படுத்திக்கொள்ள முயல்கிறார் நெஸ்லூதவ். தொடர்ந்து நாவல் முழுவதிலும் நெஹ்லூதவ்வின் எண்ணங்களும் மனமாற்றங்களும் சொல்லப்பட்டுக் கொண்டே வர, உயிர்த்தெழுதலை நோக்கிய நெஹ்லூதவ்வின் பயணம் என்பதாகவும் இந்நாவல் எனக்குப் பொருள்படுகிறது.

இப்பெரும் படைப்பு, ஒட்டுமொத்த சமூகத்தின், நீதி/அதிகார அமைப்புகளின் பார்வைகள், செயல்பாடுகளை ஒருபுறமாகவும், அதற்கிணையான மறுபுறமாக தனிமனிதனின் மனசாட்சியை, அவனது அந்தரங்க தன்விசாரணையையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலைகள், புற அழுத்தங்கள், அலட்சியங்கள் என பற்பல காரணிகளால்தான் விடுதலையோ தண்டனையோ விதிக்கப்படுகின்றது. ஒரு கொலைக் குற்றம், அதன்மீதான விசாரணை, முறையற்ற தீர்ப்பு, சிறை, கைதிகள், அவர்களது வாழ்க்கை, குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்களை அதிகாரவர்க்கம் நடத்தும் விதம் என சமூகத்தின், நீதி மற்றும் அதிகார மையங்களின் இருண்ட பக்கம் மிக வலுவாகக் காட்டப்படுகிறது. அதே சமயம், மாஸ்லவாவின் வாழ்வு பிறழ்ந்துபோக தான் ஒரு முதன்மைக் காரணம் என எண்ணும் நெஹ்லூதவ் தன் ஆன்மவிசாரணையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை. தன் மனசாட்சியின் உந்துதலால், தன்னுள் புதைந்துபோன இளவயது, லட்சியவாத நெஹ்லூதவை மீட்டெடுக்க, சாமனிய மனிதனுக்கே உரிய அலைக்கழிப்புகளுடனே தனக்கான உயிர்த்தெழுதலை நோக்கி அவர் பயணப்படுகிறார். வெளிப்புற விசாரணைகள் அனைத்துமே தர்க்கம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய, ஆத்மவிசாரணை முழுவதும் அறத்தை அச்சாகக் கொண்டு அமைகின்றது.

*

நாவலின் துவக்க அத்தியாயங்களில் காட்சிப்படுத்தப்படும் நீதிமன்றமும் அதன் செயல்பாடுகளும் விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன. தலைமை நீதிபதி முதற்கொண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சொந்த அலுவல்களும் அதற்பொருட்டு விரைவிலேயே வழக்கை முடிக்க வேண்டிய எண்ணமும் விசாரணையில் செலுத்தும் ஆதிக்கம் மாஸ்லவாவுக்கு எதிராகவே முடிகிறது. பிராசிக்யூட்டர் அசுவாரஸ்யத்துடன் இவ்வழக்கு விசாரணைக்கு தயாராதல், தன்னுடைய தரப்பை மாஸ்லவா சொல்லிக் கொண்டிருக்கும்போது தலைமை நீதிபதி தன்னருகே இருக்கும் இரண்டாம் நீதிபதியுடன் பேசிக்கொண்டிருப்பது, விசாரணையின் வாதங்களை அலட்சியத்துடன் கேட்கும் நீதிபதிகள் என விசாரணையில் நிலவும் முறையின்மை காட்டப்படுகின்றது. சான்றோயர்களின் கவனக்குறைவால் விடுபட்டுப்போகும் ஓரிரு சொற்களால் மாஸ்லவாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்படுவது வரை இத்தவறுகள் நீள்கின்றன. முடிவில், விசாரணையால் அல்ல, சந்தர்ப்பத்தினாலேயே ஒரு வழக்கின்/தீர்ப்பின் போக்கே மாறுவதைக் காண்கிறோம்.

நெஹ்லூதவின் இளமைக்காலத்தில் இருக்கும் லட்சிய வேட்கை தன்னுடைய சொத்துக்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அளவுக்கு ஆழமானது. அவனுடைய தனிப்பட்ட ஆளுமையில் பெரும்பகுதி அவரது வாசிப்பினால் விளைந்தது. ஆரம்ப காலத்தில் மாஸ்லவாவுடனான அவனது நெருக்கம் அவன் சுற்றத்துக்கு கவலை அளிப்பதும் அந்த லட்சிய வேட்கையின் நீட்சியே. மூன்றாண்டு கால ராணுவ சேவையும் அதிகார தோரணையும் தன்னை நம்பும் நெஹ்லோதவ்வை பிறரை நம்பும் நிலைக்கு “உயர்த்துகின்றன”. நாவலின் பிற்பாதியில் சைபீரிய சிறைக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் வழியில், ஒரு கர்ப்பிணிக் கைதி நடத்தப்படும் விதமும், தகப்பனிடமிருந்து ஒரு பெண் குழந்தை பிரிக்கப்படும் விதமும், சாமானிய மக்களிடையே பெரும் சஞ்சலத்தை உண்டாக்குகின்றன. அதே விசயங்களைக் கண்ணுறும் அதிகாரிகள் அதை எளிதாகக் கடந்து போவதும் இதே வகையான தரம் உயர்த்தப்பட்டதன் விளைவுகளே. 

இப்படி நீதிபதிகள் முதற்கொண்டு, அதிகாரிகள் வரை தத்தம் எல்லைக்களுக்குற்பட்ட நெறிமீறல்களைக் கைக்கொள்ளும்போது, தன்னில் ஒருவனை குற்றவாளி என தண்டிக்கும் உரிமையை ஒரு சமூகம் தானாகவே இழக்கிறது. இதே கருத்தை சான்றோயர்களில் ஒருவராக வருபவரும், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுதலைத் தீர்ப்பை நாடுபவருமான “அர்த்தேல்ஷிக்” முன்வைக்கிறார். நாவலில் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் காண நேரிடும் பலதரப்பட்ட மக்களும் அவர்தம் செயல்பாடுகளும், அவர்களை வெளியிலிருக்கும் குற்றவாளிகள் என எண்ணவைக்கின்றன. அதேபோல ஒரு வலுவான சிபாரிசுக் கடிதம் பல நாட்களாக சிறையில் வாடிய கைதியை விடுவிக்கப்போதுமானதாக இருக்கும்போது, கைதிகள் அனுபவிக்கும் தண்டனை என்பது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்காகவா அல்லது அவர்களுக்கு சரியான சிபாரிசு கிடைக்காத குற்றத்துக்காகவா எனும் எண்ணம் எழுகிறது. 

மனிதரில் நிலவும் கீழ்மை, அதிகார வர்க்கத்தில் மட்டுமல்ல எல்லாவிடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. சாதாரண குற்றத்தண்டனைக் கைதிகளைப் போலன்றி, வஞ்சிக்கப்படும் மக்கள் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் கைதிகளுக்குள்ளும் தன்னையும் தன் நலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும் ”நவதுவோரவ்” வகையினரும் இருப்பது அதற்கொரு நல்ல உதாரணம்.

நெஹ்லூதவ்வைக் காட்டிலும் மிக வலுவான பாத்திரமாக மாஸ்லவா விளங்குகிறாள். இத்தனைக்கும், நாவல் முழுவதிலும் தன் தரப்பை சரி தவறுகளுடன் நெஹ்லூதவ் முன்வைத்துக் கொண்டே இருக்க, மாஸ்லவாவின் மனக்குரல் எங்கும் பெரிய அளவில் ஒலிப்பதில்லை. தன்னை தேடிவந்த கோமகன் யாரென தெரிந்து கொள்ளும் ஆரம்ப சிறைச்சாலை சந்திப்புகளும், மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை நெஹ்லூதவ் சந்திக்கும் தருணமும் என மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சற்றே தன்னிலையை இழக்கிறாள் மாஸ்லவா. தனக்கு உதவக்காத்திருக்கும் நெஹ்லூதவ்விடம் பிற சிறைக்கைதிகளின் சிக்கல்களைச் சொல்லி அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதும், தனக்கு விடுதலை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நெஹ்லூதவ்வை மணக்கும் ஆசையை கைவிட்டு அரசியல் கைதி “சிமன்சனுடன்” செல்ல எண்ணுவதும், மாஸ்லவாவை ஒரு வலுவான பாத்திரப் படைப்பாக மாற்றுகின்றது.

நாவலில் வரும் இடங்களைக் குறித்த சித்தரிப்புகளும், துணைக் கதாப்பாத்திரங்களைப் பற்றிய விவரணைகள், அவற்றை ஒரு புனைவாகக் கூட விரித்தெழுதக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருப்பதும், இந்நாவலுடன் நம்மைப் பிணைத்துக்கொள்ள, நம்முள் விரித்தெடுக்க உதவியாய் இருக்கின்றன.          

ஒட்டுமொத்தமாக இந்நாவல் நமக்குச் சித்தரித்துக்காட்டும் உலகம் வேறொரு நாட்டிலோ, பழைய காலகட்டத்திலோ இருப்பதாகவோ என்னால் எண்ண முடியவில்லை. இந்நாவல் கேள்விக்குட்படுத்தும் தண்டனை vs ஆத்ம விசாரணை என்னும் கருத்து எங்கும் என்றும் இருப்பதுவே. அவ்வெண்ணமே, காலத்தைக் கடந்து எப்போதைக்குமான ஒரு செவ்வியல் படைப்பாக “புத்துயிர்ப்பு” நாவலைக் கருத வைக்கின்றது. 


பின்குறிப்பு:

இந்நாவல் உருவான பின்புலத்தைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை, அவருடைய “எனதருமை டால்ஸ்டாய்” புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அக்கட்டுரை, அவரது வலைத்தளத்திலும் வாசிக்கக்கிடைக்கின்றது. சுட்டி : https://www.sramakrishnan.com/?p=2135


கொற்றவை

சொல்லில் உறையும் தீ தன் சிறை மீறுதலே காப்பியம் என்றனர் கற்றோர்.

*

சிலப்பதிகாரம் என்றவுடனே நமக்கு பொதுவாக நினைவுக்கு வரும் விசயங்கள் என்னென்ன ? கண்ணகி, கோவலன், மாதவி, நெறி பிறழ்ந்த பாண்டிய மன்னன், எரிக்கிரையான மதுரை, இளங்கோ, சேரமான். பின்பு, இவர்களின் வாழ்வினூடே தமிழர் பெருமையை, கற்பை, மாண்பை கூடவே அறம் கூற்றாகும் உண்மையை சொல்லிச்செல்லும் கதை. உண்மையில் கொற்றவை நாவலை துவங்கும் போது எனக்கும் அப்படியொரு எண்ணம்தான். கூடவே, மேற்சொன்ன களத்தை ஆசான் திரு.ஜெயமோகன் எப்படி எழுதியிருப்பார் எனும் ஆவலும். ஒரு வாசகனாக என்னுடைய எதிர்பார்ப்பை நாவல் கடந்து சென்றுவிட்டது. நாவல் அல்ல. இது புதுக்காப்பியம். வெறுமனே பெயரளவில் காப்பியம் என்றல்ல. உண்மையில் கையாண்ட மொழியில் கூடி வந்திருக்கிறது அக்காப்பியத்தன்மை.

காப்பியம் பஞ்சபூதங்களான நீர், காற்று, நிலம், எரி, வான் என ஐம்பகுதிகளாகப் பஞ்சபூதங்களை நினைவுறுத்தும்படி பகுக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பு வெறுமனே பாகம் பிரிப்பதாயன்றி, காப்பியத்தின் நடைக்கு வலுசேக்கும் படி அமைந்திருக்கிறது.

1.   நீர்

”புன்னகைக்கும் கருமையே நீலம்” முதல் பத்தியில் வரும் இவ்வரிகளில் துவங்கிய மொழியில் வசீகரத்தில் ஆழ்ந்த என்னுடைய திளைப்பு நாவல் முழுவதுமே தொடந்து வந்தது. ஆதியில் புழங்கி வந்த பல மனிதர்கள், அவர்தம் நகரங்கள், காவல் தெய்வமாயமைந்த முக்கண்ணன் மற்றும் அன்னையர். கடல்கோள் நிகழ்ந்து ஆழத்தில் அவர்கள் உறைதல் என இப்பகுதி பேசுவது பண்டைய காலம். கூடவே ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவர்தம் பெயர் துலங்கி வந்த காரணம். இவை பேசும் பொருளைத் தாண்டி குறிப்பிடத்தக்க அம்சம் அது சொல்லப்பட்ட விதம். உதாரணமாக சொல்வதென்றால், சீவங்களின் தலைவன் சிவனென்றாதல், மதுரை என்றான மதில் நிரை, எல்லை மீது கடல் அலை பரவும் அலைவாய், பழையோனும் பண்டையோனும் மருவி பாண்டியனாதல், அகத்திலிருந்து வந்த அகத்தவன், அதுவும் மருவி அகத்தியனாதல் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விவரணைகளின் உட்சமாக எனக்குத் தோன்றியது “தன்னை இமிழும் மொழியானாதால் அது தமிழானது”. தமிழில் புழங்கிவரும் சொற்கள்/பெயர்கள் உருவான விதம் அழகு என்றால், மொழிக்கு தமிழ் எனப்பெயர் வந்த இடம் பேரழகு.

2.   காற்று

கண்ணகி பிறப்பு, கோவலனுடனான திருமணம், கோவலனுக்கு மாதவியுடன் காதல், பின் ஊடல், கண்ணகியுடன் மதுரை செல்லுதல். போலவே, மோகூர்ப் பழையன் குட்டுவன் மகள், தென்னவன் பாண்டியனின் கோப்பெருந்தேவியாதல் என நானறிந்த சிலப்பதிகாரத்தின் துவக்கப்பகுதிகள் அனைத்தும் நிகழ்வது “காற்று” எனும் இப்பிரிவில். கண்ணை அன்னையில் வடிவமென கண்ணகியும், கொற்றவையின் வடிவமென கோப்பெருந்தேவியும் அவரவர் குலங்களால் சீராட்டப்படுகின்றன. அவ்வன்னைகளின் காற்சிலம்புகளின் ஒரு நகலே இவர்களிடமும் இருக்கிறது. வணிகக்குடியில் பிறந்த கோவலனின் யாழ் இசை ஆர்வம் வரும் பகுதிகள் அவன் தடம் மாறியதற்கான காரணத்தை சுட்டுகின்றன. இப்பகுதிகளும், போலவே ஒரு நள்ளிரவில் வணிகம் மறந்து மூடப்பட்ட தன் கடைமுன் நின்று கோவலன் வருந்துமிடமும், உணர்வுப்பூர்வமானவை. இத்தகைய விவரிப்புகள் எப்பாத்திரத்தையும் ஒற்றைத்தன்மையுடன் அணுகாமல் அவர்தம் நிலையையும் உணர வழிவகுக்கின்றன.

3.   நிலம்

மாதவியுடனான ஊடலுக்குப் பின்னர், கண்ணகியும் கோவலனும் மதுரை செல்கிறார்கள். ஐவகை நிலங்களைக் கடந்து மதுரையை அவர்கள் அடைவது வரை நிலம் என பகுக்கப்பட்டுள்ளது. கவுந்தி அடிகளாக மதுரை வரை துணைவரும் நீலிக்கும் கண்ணகிக்குமான உரையாடல்கள் இப்பகுதியின் அற்புதங்கள். கட்டற்ற நீலியை அஞ்சும் கண்ணகி, ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு விதமாக அன்னை வெளிப்படும் தருணங்கள், நீலியுடனான கண்ணகியின் உரையாடல்கள், அவ்வுரையாடல்களினூடே, பயணம் நீள நீள அதற்கேற்ப கண்ணகி அடையும் மாற்றங்கள், ஒவ்வொரு வகை நிலத்தின் சிறப்பியல்புகளையும் அந்நிலத்துக்குரிய கண்களைக் கொண்டு கண்ணகியை (நம்மையும்) காணவைக்கும் நீலி என இப்பகுதியில் என்னைக் கவர்ந்த அம்சங்கள் பல. ”வருபவர்களுக்கும் நீங்குபவர்களுக்கும் நடுவே துலாக்கோலென அசைகிறது இந்நகர்” என சுட்டப்படும் மதுரையின் துணைவாயிலில் வழியே கண்ணகியும் கோவனும் நுழைகிறார்கள்.

4.   எரி

மதுரையில் கண்ணகி-கோவலன் வாழ்வும், சிலம்பு விற்கச்சென்ற கோவலன் அநீதியால் கொல்லப்படுவதும், சினந்தெழுந்த கண்ணகியால் மதுரை எரிக்கப்படுவது என எரி பகுதி பகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி சுருக்கிச் சொல்லி விட முடியாத வண்ணம் இருக்கிறது கதை நகர்வு. மனைவிக்கு அஞ்சியோ அல்லது அவள் மீதான காதலாலோ மதுரையை அவள் பிறந்த மறவர் குலம் மறைமுகமாக ஆள, கண்டும் காணாமலும் இருக்கிறான் மன்னன், அதனாலேயே அறம் பிழைத்தது பலமுறை நிகழ்ந்திருக்கிறது. அத்தனை பிழைக்குமான மொத்தப் பிழையீடாக தன் உயிரை நிகர் செய்கிறான் பாண்டியன். மன்னவன் கொஞ்சம் சிந்திக்கும் தருணத்திலும் “மறவர் இட்டதே மண்ணில் அறம்” என அல்லவை சொன்ன கோப்பெருந்தேவிக்கும் மெய்யறமே கூற்றாகிறது. ஒவ்வொரு முறையும் மறவர் குடித் தலைவன் பழையன் குட்டுவனின் அடாத பேச்சுக்களால் சினம் கொள்ளும் எண் குடித்தலைவர்களின், அம்மக்களின் உள நெருப்பும் மதுரையை எரித்த பெரு நெருப்பினுள் சிறு துகள்களாகவேனும் அமைந்திருக்கக்கூடும்.    

5.   வான்

விண்ணேகிய கண்ணகியின் தடங்கள், மலைமக்கள் மூலம் அதை அறியவரும் சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகளான ஐய்யப்பனின் கதை, மலையேறிச்சென்று அன்னையில் அடிகளை பார்க்கும் தருணம், சேரமான் செல்லும் வழியில் சந்திக்கும் பல்வேறு மக்கள், அவர்தம் சடங்குகள், எங்கும் மாறாத ஒன்றாய் தொடர்ந்து வரும் பேரன்னை, கண்ணகி சென்ற வழியில் தானும் செல்லும் பெருந்தோழி, இளங்கோ என இப்பகுதி பகுக்கப்பட்டுள்ளபடியே உச்சம். பல இடங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாந்தர் தம் மெய்மையின் மூன்று நிலைகளை அரசவையில், படிவர் தாமரையைக் கொண்டு விளக்கும் (முகிழ்த்தாமரை, ஓரிதழ் விரிந்தது, முற்றிலும் விரிந்தது) இடமும், கொடுங்கோளூர் (கோள் ஓயா ஊர் ) பெயர் வந்திருக்கக்கூடிய விதமும், அறிவுக்கும் அறியாமைக்குமான ஒப்பீடும் (உதாரணம் : அறிவு என்பது அறியவொண்ணாமையின் வான் முன் எழுந்த குன்று) மிகவும் அற்புதமான விவரிப்புகள்.  

*

அன்னையர் மறைய, அன்னையர் பிறக்க, தாய்மை மட்டும் அழியாமல் இம்மண்ணில் வாழ்கிறதென்று கொள்க – என இக்காப்பியத்தில் ஒரு வரி வருகிறது. நான் எண்ணியிருந்தது போல, இக்காப்பியம் கண்ணகியின் கதையல்ல, மண்ணில் யுக யுகமாய் வாழ்ந்து வரும் அன்னைகளின் கதை, அன்னைகளுக்கெல்லாம் அன்னையாய் அமைந்த பேரன்னையின் கதை.

*

”உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாப்பெருநடனமே காப்பியம் என்க” இது காப்பியம் குறிந்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது; இவ்வரிக்கு மிகச்சிறந்த உதாரணமாக “கொற்றவை” எனும் புதுக்காப்பியம் அமைகிறது.

பின்குறிப்பு :

நாவலின் இறுதிப்பகுதியில் வருகின்றன ஆசிரியரின் கன்னியாகுமரி பயண நினைவுகள். அதுவரை பஞ்சபூதங்கள், ஐவகை நிலங்கள் ஊடே வரலாற்றில் முன்னும் பின்னுமாக இந்நாவலில் திளைத்த நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தரும் பகுதி அது. எப்போதுமே அபுனைவுகள் என்றாலும் கூட, ஆசிரியர் திரு. ஜெயமோகனுக்குள்ளிருந்து ஒரு வசீகர கதைசொல்லி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பார். இப்பகுதி அதற்கான சரியான உதாரணம். இப்பகுதியை வாசிக்கும்போதே என்னுள் தோன்றிய இன்னொரு புத்தகம் “ஜெ சைதன்யாவின் சிந்தனைமரபுகள்”. அதன் ஒரு (அல்லது முதல் ?) கட்டுரையில் இதே அனுபவம் வேறொரு கோணத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

இறுதிப்பகுதியில் வரும் இன்னொரு சம்பவம் – வெறியாட்டு கொண்டெழுந்து ஆடும் பெண்ணின் கணவனை (மாணிக்கம்) அவளின் பார்வையிலிருந்து வெளியேறும்படி அனைவரும் சொல்லுமிடம். கிட்டத்தட்ட இதே சம்பவத்தை பின்புலமாகக் கொண்டு, திரு.ஜெயமோகனால் எழுதப்பட்ட ஒரு அற்புதமான சிறுகதை நினைவுக்கு வருகிறது. (சிறுகதையின் தலைப்போ, சுட்டியோ கிடைத்தால் பகிர்கிறேன்).