title


100 ஆண்டு திராவிட இயக்கம் – செய்ததும் செய்யத்தவறியதும் - சிந்தனை அரங்கம்



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய “100 ஆண்டு திராவிட இயக்கம்செய்ததும் செய்யத்தவறியதும்சிந்தனை அரங்கம் அற்புதமாக நடந்தது. திருப்பூரில் அக்டோபர் 2, 2012 மாலை 5:45 மணியளவில் நாட்டுப்புறப் பாடல்களுடன் துவங்கியது கருத்தரங்கம். அனைத்துப் பாடல்களும் அற்புதமானவை. நாட்டுப்புறப் பாடல்களைத் தொடர்ந்து சிந்தனைக் கருத்தரங்கம் ஏறத்தாழ 6:30 மணியளவில் துவங்கியது. கவிஞர். நந்தலாலா தலைமையில் நடந்த கருத்தரங்கின் உரைவீச்சு விவரம் :

தலைப்பு : 100 ஆண்டு திராவிட இயக்கம்செய்ததும் செய்யத்தவறியதும் -
மொழியில்        : திரு. சு. வெங்கடேசன்    
பொருளாதாரத்தில் : திரு. பாரதி கிருஷ்ணக்குமார்
சமூக மாற்றத்தில் : திரு. பேராசிரியர். அருணன்

கவிஞர். நந்தலாலாவின் அற்புதமான துவக்க உரைக்குப் பின்னர் மொழியில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பைப் பற்றி ஒரு சிறந்த உரையாற்றினார் எழுத்தாளர். திரு. சு.வெங்கடேசன். இவரது பேச்சை நான் கேட்பது இதுவே முதல் முறை. எனவே பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றியே கேட்டேன். ஆனால் கேட்டு முடித்த பின்னர்தான் அந்த உரையின் மகத்துவம் புரிந்தது. என்ன ஒரே ஒரு குறை (விமர்சனம் பண்ணுமளவு நான் பெரிய ஆள் இல்லீங்க, சும்மா தோணியத சொல்றேன்) மொழியின் மீதான தமிழர்களின் வெறியையும் அதே சமயம் மொழியின் வளர்ச்சி மீதான அக்கறையின்மையையும் விளக்க அடிக்கடி பக்கத்து மாநிலங்களை ஒப்பிட்டதுதான். ஏற்கனவே எவனும் நமக்கு தண்ணி தர மாட்டேங்குறாங்க, இதில அவங்கள ”மொழிக்காக சொட்டு ரத்தம் கூட சிந்தாத” ரீதியில ஒப்பிட்டா நெலம இன்னும் சுத்தமாயிடும்.

அடுத்து பொருளாதாரத்தில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பை பற்றிப் பேச வந்தவர் நம்மாளு திரு. பாரதி கிருஷ்ணக்குமார் அவர்கள். வழக்கம் போலவே மிக மிக அற்புதமான, தலைப்பை விட்டு விளகாத அட்டகாச உரை. இந்த மனிதரின் உரை மீதான் என் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்ததை விட அற்புதமாக பேசிவிடுகிறார். இம்முறை பொருளாதார மேம்பாட்டில் (சரியா படீங்க மக்கா.. மேம்பாலத்தில் அல்ல) திராவிட இயக்கங்களின் கையாலாகாத்தனத்தை (கொஞ்சம் நையாண்டியுடன்) பல சான்றுகளுடன் எடுத்துரைத்தார். இன்றைய நிகழ்ச்சிக்கு நான் வர முடிவெடுத்ததே போஸ்டரில் இவரது பெயரை பார்த்தவுடன்தான். வீணாகவில்லை.

பொதுவாக திரு. பாரதி கிருஷ்ணக்குமார் அவர்கள் பேசின பின் மற்றவர்கள் பேசுவதில் என்னால் லயிக்க முடியாது. இந்நிகழ்வில் அந்தக்குறையும் தீர்ந்தது எனக் கூறலாம். அப்படி ஒரு அட்டகாச உரை நிகழ்த்தினார் பேராசிரியர். திரு.அருணன் அவர்கள் (சமூக மாற்றத்தில் எனும் தலைப்பில்). பெரியார், அண்ணா காலம் துவங்கி இப்போதையை ”மானாட மயிலாட”, தென்றல் முடிய பெரும்பாலான முரண்பாடுகளை தொட்டுச் சென்ற சிறந்த உரை. இன்னும் சொல்லப்போனால் இவரது உரையை திராவிட இயக்கங்களின் மீதான விமர்சனமாகக் கொள்வதை விடவும் திராவிட இயக்கங்கள் இழைத்த துரோகத்தை தாளமாட்டாத ஒரு கண்டனக்குரலாக கொள்வது மிகப்பொருத்தமாக இருக்கும். கூடியிருந்த பெரும் கூட்டம் 10 மணிவரைக்கும் கலையாமல் இறுதிவரை கேட்டது என்றால் கடைசியாக பேசியவரின் உரையின் வன்மையை புரிந்துகொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு உரையின் முடிவிலும் திரு. நந்தலாலா அவர்கள் ஆற்றிய தொகுப்புரை ஒவ்வொன்றும் அற்புதம். வெறுமனே தொகுப்புரை மாதிரியில்லாமல், பல புதிய புதிய கருத்துக்களுடன் அவர் பேசியது சிறப்பு. மாலை 5:45 துவங்கி இரவு 10 மணி முடிய ஒரு நிமிடம் கூட சலிப்பு ஏற்படாமல் (நான் நம்பர் 1 போகக் கூட நகரவில்லைன்னா பாத்துக்கங்க) சிறப்பாக நடந்தது கருத்தரங்கம்.