title


உரையாடும் காந்தி


உரையாடும் காந்தி
சில வருடங்களுக்கு முன் நண்பனின் அறையில் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு சுதந்திரத்தைப் பற்றி திரும்பியது. அறையில் இருந்த நண்பர்களில் பெரும்பாலானவர்களால் தூற்றப்பட்டவர் காந்தி. காந்தியின் மீதான அவர்களது விமர்சனம் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. அதீத கோபத்துடன் அவர்கள் முன்பாக சில வார்த்தைகளைச் சொல்லி அவற்றைப் பற்றி அவர்கள் அறிந்ததுண்டா எனக் கேட்டேன். உதாரணத்துக்கு, சபர்மதி, நவகாளி. காந்தியின் மீது பெரும் வசைகளை கொட்டிய ஒருவருக்கு கூட, நான் சொன்ன வார்த்தைகளைப் பற்றி எதுவும் தெரியாது. இதுதான் இன்றைய காந்தியின் நிலை.

நம் காலத்தில், குறைந்தபட்ச அறிதல் கூட இன்றி பெரும்பாலானவர்களால் வசைபாடப்படுபவர் என காந்தியைச் சொல்லலாம். அத்தனை வசவுகளுக்கும் பின்னால் இருப்பவை பெரும்பாலும் செவிவழிக் கதைகள் அல்லது ”பாதி” உண்மைகள். ஒரு தர்க்கத்துக்கான அடிப்படைத் தகவல்கள் கூட இல்லாமல், வசைச் சொற்கள் வாரிக் குவிக்கப்படுகின்றன.
**
நாம் யாரை வேண்டுமானும் ஆதரிக்கலாம் அல்லது வெறுக்கலாம். எந்தக் கருத்தியலுடனும் ஒத்துப்போகலாம் அல்லது முரண்படலாம். அது நம் உரிமை மற்றும் சுதந்திரம். ஆனால், ஆதரிப்பதையும் எதிர்ப்பதையும் அடிப்படைப் புரிதலின்றி செய்வதைப் போல அறிவீனம் பிறிதில்லை.

அவ்வகையில், காந்தியைப் பற்றி புரிந்து கொள்வதுக்கு உதவும் நூல் “உரையாடும் காந்தி”. காந்தியைப் பற்றியை தன்னுடையை வாசகர்களின் கேள்விக்கு திரு.ஜெயமோகன் அவர்களின் விரிவான பதில்கள் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொரு பதிலும் காந்தியத்தின் பல பரிமாணங்களை நாம் அறிந்துகொள்ள உதவுகின்றது (அவ்வகையில், இதற்கு முன்னோடி நூல் திரு.ஜெயமோகன் எழுதிய “இன்றைய காந்தி”).
*
திறந்த மனதுடன் காந்தியை அணுக வேண்டியதன் தேவை, மைய நீரோட்டத்தின் மீது ஒவ்வாமை கொண்டவர்களையும் மெல்ல மெல்ல அதனுடன் கலக்க வைக்கும் அணுகுமுறை, எதிரிகளை, பிழைகளைக் கனிவின் வழி கடந்து சொல்லுதல், எந்தப் பிரச்சனையிலும் மனசாட்சி மற்றும் அறத்தின் தேவை, மாற்றங்கள் நிலைத்து நிற்க வேண்டுமானால் அவை ஒருநாள் புரட்சியாக இல்லாது, சமூக மாற்றமாக இருக்க வேண்டியதன் அவசியம், முக்கியமாக தற்சார்பு பொருளாதாரத்தின் வலிமை என காந்தியத்தின் பல முகங்களை விளக்கமான பதில்களின் மூலமாக இந்நூலில் இருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. காந்தியைப் பற்றிய பெரும்பாலான அடிப்படை சந்தேகங்களுக்கு இந்தப் புத்தகம் விடை தருகிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.
உரையாடும் காந்தி – ஜெயமோகன் – தன்னறம் பதிப்பகம்
*
தன் காலடியின் மலர்கள் சமர்ப்பிப்பவர்கள், தன் மீது கல்லெறிபவர்கள் என இருவரும் எளிதில் அணுகுமிடத்தில், எப்போதும் காந்தி நின்றுகொண்டிருக்கிறார். நீங்கள் எந்த எல்லையைச் சேர்ந்தவராக இருப்பினும், உங்களுக்கான கனித்த பொக்கை வாய்ச்சிரிப்பு காந்தியிடம் எப்போதும் உள்ளது.
*
மாமனிதர் போற்றுவோம் !

#உரையாடும்_காந்தி
#படித்ததில்_பிடித்தது

ப.சிங்காரம் படைப்புகள்


ஆசான் திரு.ஜெயமோகன் அவர்களுடைய அலை அறிந்ததுஎனும் கதையில் வரும் அத்தர்பாய், வாழ்க்கையைப் பற்றி ஒரு வரி சொல்லுவார் அலை ஏறினா, இறங்கித்தானே ஆகணும்என்று. இதையே வாழ்க்கை ஒரு வட்டம்என எளிமைப்படுத்த முடியும். அந்த வட்டத்தின் மையம் அபத்தம்”.
*
ப.சிங்காரம் எனும் ஆளுமை ஒரு பெயராக என்னை வந்தடைந்து ஏறத்தாழ 7 வருடங்கள் இருக்கும். தொடர்ந்து, இலக்கிய உரைகளிலும், இலக்கியக் கட்டுரைகளிலும் தவறாமல் உச்சரிக்கப்படும் ஒரு பெயராக அவருடைய புயலிலே ஒரு தோணிநாவல் இருக்கிறது. அத்தகைய கட்டுரைகளை வாசிக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெரும் மன எழுச்சியுடன் புயலிலே ஒரு தோணி நாவலை வாசிக்கத் தொடங்குவேன். ஓரிரு அத்தியாயங்கள் கடக்கும் முன்பே, நாவலின் உள்ளே நுழைய முடியாமல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேறு புத்தகங்களை படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்நாவலை இம்முறை ஈடுபாட்டுடன் என்னால் வாசிக்க முடிந்ததற்கு சொல்முகம் வாசகர் கூடுகை மட்டுமே காரணம். அதற்கு என்னுடைய நன்றிகள்
*
தொட்டனைத் தூறும் கேணியாகவே இருந்தாலும் நாம் கொள்ளும் அளவு நம்முடைய கலனை மட்டுமே பொருத்தது. அந்தப் புரிதலுடன்  என்னுடைய வாசிப்பு சார்ந்து புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் இரு நாவல்களைப் பற்றிய என்னுடைய அவதானிப்புகளை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன்
*
புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இரண்டும் இரு நாவல்களாகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும், வாசிப்பனுபவத்தில் இரு நாவல்களையும் ஒரே நேர்கோட்டில் நம்மால் வைக்க முடியும். குறிப்பாக கடலுக்கு அப்பால்நாவலை, ”புயலிலே ஒரு தோணிநாவலின் நீட்சியாக காலம் மற்றும் கதாப்பாத்திரங்களை முன்வைத்துச் சொல்ல முடியும்.
இந்தோனேஷியாவை கைப்பற்றும் ஜப்பான் துருப்புகள் மெடான் நகரில் நுழையும் சித்திரத்துடன் துவங்கும் புயலிலே ஒரு தோணிநாவல், (பாண்டியன் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக) பினாங்கு, ஐ.என்.ஏ என சொல்லப்படும் இந்திய தேசிய ராணுவம், அதன் செயல்பாடுகள், நேதாஜி, போர்ச் சித்திரங்கள், ஜப்பானின் பின்னடைவு, அதன் விளைவுகள், பாங்காக் பின்னர் மீண்டும் பினாங்கில் இருந்து மெடான் நகருக்கு வந்து முடிகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின்னான வாழ்க்கையை, போர் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தழும்புகளை ஒரு காதல் கதையின் ஊடே பதிவு செய்கிறது கடலுக்கு அப்பால்”.
*
இவ்விரு நாவல்களின் சிறப்புகளுல் ஒன்று, அவற்றின் கூறுமுறை. நாவலின் பெரும்பாலான கதாப்பாத்திரங்களை மற்றும் விரித்தெழுத சாத்தியம் கொண்ட பல தருணங்களை சின்னச் சின்ன சித்தரிப்புகள் அல்லது ஓரிரு பத்திகளில் சொல்லிச் செல்கிறார் திரு.சிங்காரம். ஒருவகையில், அது வாசகனின் கற்பனைக்கு பெரும் இடம் தருகிறது என்றாலும், சில இடங்களில் இந்தச் சிக்கனமே கஞ்சத்தனமாகிவிடுகிறது. செட்டி வீதி குறித்த சித்திரங்கள், பாண்டியன் மற்றும் ஆவன்னா பாத்திரங்களின் நினைவுகள் மூலமாகவே மதுரை, சின்ன மங்கலம் வாழ்க்கையை மீள்கட்டமைப்பு செய்வது, சில பக்கங்களுக்காவது வர்ணிக்கச் சாத்தியமுள்ள கடற்புயலை ஓரிரு பத்திகளிலேயே கடப்பது உள்ளிட்ட சில உதாரணங்கள் நம்மால் விரித்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவை. அதைப் போலவே,  “ரோல்ஸ்ராய்ஸ்லாயர் டில்டன், “விடாக்கண்டன்செட்டி போன்ற பெயர்களும். அதேசமயம், இக்கூறுமுறையின் போதாமையினாலேயே, “பாண்டியன்எனும் பாத்திரப் படைப்பின் வீரதீரச் செயல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.
*
புயலிலே ஒரு தோணிநாவலின் பாண்டியன் கதாப்பாத்திரத்துக்குக்கும், ”கடலுக்கு அப்பால்செல்லையாவுக்கும் மெல்லிய இணைப்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன். ஒருவகையில் செல்லையா, பாண்டியனின் நீட்சி. போர்ச்சூழலில் இருந்து அன்றாடத்துக்கு திரும்பும் தருணத்தில் இறந்துபோன பாண்டியன் இழந்தது என்ன என்பதை செல்லையாவைக் கொண்டு நம்மால் ஊகிக்கமுடியும். லெளகீக வாழ்க்கைக்குத் திரும்பும் வீரனின் பெருமை, மதிப்பிழந்து போன ஜப்பான் ரூபாய் நோட்டுகளுக்கு இணை சொல்லத்தக்கது.
*
மெடான் நகரில் தங்கையா மற்றும் தில்லைமுத்துவுடனும், பினாங்கு நகரத்தில் அருளானந்த அடிகள், மாணிக்கம் உள்ளிட்டோருடனும் நடக்கும் விவாதங்களில் தமிழரின் பெருமை, வீரம், இலக்கியச் செழுமை ஆகியவை தரவுகளின் அடிப்படையில் கேள்விக்கு உட்படுத்தும் பாண்டியனின் தருக்கம் கிணற்றுத் தவளையாய் இருப்பதன் எல்லைகளைக் காட்டுகிறது. போலவே, ராணுவப் பயிற்சி முகாமில் நடைபெறும் அசைவ உணவு சார்ந்த விவாதமும், அதற்கென பாண்டியன் சுட்டிக்காட்டும் பாடல்களும். மேஜர் டில்டனுடன் தேசியம் பற்றிய விவாதம் எழும்போது, தன்னுடைய பாட்டனார் காலம் தொட்டே இந்தோனேசியாவில் பிறந்து வளர்ந்த போதும், மேஜருக்குள்ளிருக்கும் டச்சுப் பாசத்தை தன்னுடைய கேள்வி மூலம் பாண்டியன் வெளிக்கொணரும் இடம் காட்டுவது, மனித மனதின் புரிந்துகொள்ளமுடியாத ஆழத்தை.
*
போதையிலிருக்கும் பாண்டியன், பட்டினத்தார் உள்ளிட்டோரை பார்ப்பது, அவர்களுடனான உரையாடல், சங்கப்பாடல்களையே சான்றாகக் கொண்டு தமிழர் பெருமையை, தமிழ் மன்னர்கள் பெருமையை உடைத்தெறியும் பாண்டியனின் வாதங்கள், தொலைந்துபோன முக்கியமான கடிதம் குறிந்து பாண்டியன் மற்றும் கலிக்குஸீமான் இடையே நடக்கும் பேச்சில் வரும் ஜெனரல் சிவநாத்ராய்குறிந்த சித்தரிப்புகள், மாணிக்கத்துக்கும் செல்லையாவுக்கும் கடலுக்கு அப்பால்நாவலில் வரும் சிலப்பதிகாரம்சார்ந்த உரையாடல் என இவ்விரு நாவல்களிலும் (வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்)மெல்லிய அங்கதம் / பகடி நிறைந்திருந்தாலும், உண்மையில், இந்நாவல்கள் நமக்குக் காட்டுவது அபத்தங்களை.
*
உதாரணமாக இரு சம்பவங்களைச் சொல்லலாம்
கடலுக்கு அப்பால் நாவலில், தன் உயிரைப் பணயம் வைத்து வானாயீனாசெட்டியாரின் மகன் உடலை மீட்டு வருகிறான் செல்லையா. தன் மகன் வடிவேலுவின் இடத்தில் செல்லையாவைக் கருதுகிறார் செட்டியார். செட்டியாரின் மகள் மரகதம், மனைவி காமாட்சியம்மாள், வேலைக்காரர்கள் என யாவரும் செல்லையாவைப் போற்றுகின்றவர்கள். என்றபோதும், போரும், போரினால் செல்லையா கொள்ளும் நிமிர்வும் அவனை பொம்பளைத்தொழில்வட்டித்தொழிலில் இருந்து வெளியே தள்ளுகின்றன. தன் முழு வாழ்வின் பலனாக தன் தொழிலைக் கருதும் செட்டியார், அதன் பொருட்டே மரகதத்தை செல்லையாவுக்கு மணம்முடிக்க மறுக்கிறார். புயலிலே ஒரு தோணியில் அப்துல் காதர் மூலமாக, மரகதத்தின் மாப்பிள்ளையாகவே அறிமுகமாகும் செல்லையா, ஒரு போதும் அந்த நிலையை அடைய முடியாமல் போவது காலத்தின் குரூரம்.
புயலிலே ஒரு தோணியில், அர்மீனியா ஆற்றில் மணல் அள்ளும் டச்சுக் கைதிகளுக்கிடையே இருக்கும் ரோல்ஸ்ராய்ஸ்லாயட் டில்டன், தனக்கு உணவு தந்த பாண்டியனை நீடுவாழ வாழ்த்துகிறார், மட்டுமின்றி அவர் குடும்பத்து பெண்ணுக்கு தீங்கிழைத்த ஜப்பானிய ஜெனரலைக் கொன்றதால், அவர் குடும்பமும் பாண்டியனுக்கு மிகவும் நன்றியுடையது, என்றபோதும், பாண்டியனைக் கொல்லும் தோட்டா, லாயர் டில்டனின் மகன் மேஜர்டில்டனின் துப்பாக்கியிலிருந்துதான் வரவேண்டியிருக்கிறது.
*
வாழ்க்கைப் புயலில், பாண்டியனைப் போல, செல்லையாவைப் போல, வானாயீனாவைப்போல, மாணிக்கத்தைப் போல நாமும் தாக்குப் பிடிக்க முயன்று கொண்டேதான் இருக்கிறோம். அப்பாலிருந்து புயலை இயக்கும் விசையாக நம்மை நோக்கி சிரித்துக்கொண்டிருக்கிறது ஊழ்.
*


அன்பின் ஆதிரா-3

அன்பின் ஆதிரா,

இடைவெளி நாட்கணக்கு தாண்டி, வாரங்கள், மாதங்கள் கடந்து இப்போது வருடக்கணக்கில் ஆகிவிட்டது. நல்ல ஒரு துணுக்கு சங்கீதம், நள்ளிரவில் எவருடனும் பேசும் பேச்சுகள் என வாழ்வில் நான் பகிர்ந்துகொள்ள விரும்பும் நற்தருணங்கள் அனைத்தும் அதன் சாத்தியக்கூறுகளுடன் அப்படியே இருக்கின்றன. உன்னைத் தவிர. கால இடைவெளியை ஒரு நொடியில் நிரப்பவல்ல மனதின் வல்லமையை மட்டுமே நம்பி இருக்கிறேன் நான்.

தகப்பன் தினம்

கிட்டத்தட்ட ஆறு / ஏழு வருடங்களுக்கு முன்னர், நான் சென்னையில் பணியில் இருந்தேன். கார்த்திக் கைக்குழந்தை. அருணாவும் ஊத்துக்குளியில் இருந்த நாட்கள் அவை. திருமணத்துக்கு பின்னர் கிடைக்கும் பேச்சுலர் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்தாலும் எல்லா வார இறுதிகளிலும் ஊருக்கு கிளம்பிவிடுவேன். Planning என்பது ஏதோ மேல் நாட்டில் இருக்கும் ஒரு சிற்றூர் என்ற அளவுக்குதான் நம்ம புரிதல் என்பதால், எல்லாப் பயணங்களுமே சாதாரண அரசுப் பேருந்துகளில்தான். சென்னை – சேலம், சேலம் – ஈரோடு, ஈரோடு – ஊத்துக்குளி என்று மாறி மாறி வரும் பயணங்கள் அவை. பெரும்பாலும் தூக்கம் இல்லா இரவுப்பயணம் என்ற போதிலும் அதிகாலையில் இறங்கும்போது பெரும் உற்சாகமாய் உணர்வேன். அதற்கு காரணம் ”கார்த்திக்”.
*
நான் வீடடையும் போது, கார்த்திக் அப்போதுதான் தூங்கி எழுந்திருப்பான். கதவைத் திறந்து, இருட்டறையில் ஒளிரும் zero watts விளக்கொளியில் அவனது செயல்களை நான் கவனித்துக் கொண்டிருப்பேன். தூக்கத்தில் இருக்கும் அருணாவிடம் அவனுக்கு மட்டுமே புரியும் தேவபாஷையில் பேசிக்கொண்டிருப்பான். எதேச்சையாகவோ அல்லது தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வாலோ திரும்பி கதவைப் பார்ப்பான். முதல் சில நொடிகள் “யார்டா இவன்?” என்ற ரியாக்சன் தான் வெளிப்படும். அடையாளம் கண்டுகொண்ட மறுநொடியில் வெகுவேகமாக தவழ்ந்து வந்து மேலே ஏற முயல்வான். ஒருவாரம் பிரிந்திருந்த களைப்புத் தீர, ஓரிரு மணி நேரங்கள் கார்த்திக்குடன் நன்றாக விளையாடுவதுடன் சரி. பின்னர், காலை உணவு. அதற்குப் பின்னர் களைப்பு தீர நல்ல தூக்கம். அப்புறம் பழைய கதைதான், கார்த்திக் அவன் போக்கில் விளையாட நான் சித்தன் போக்கில் ஏதாவது செய்துகொண்டிருப்பேன். சமயங்களில், பாசம் மேலிட தம்பி என நான் கொஞ்சும் போது “அடப்போய்யா, உனக்கு இதே பொழப்பு” என்ற ரீதியில் அவன் கண்டுகொள்ளாதிருப்பது; தூங்குவது உள்ளிட்ட வேறு வேலைகளில் நான் பிஸியாக இருக்கும்போது கார்த்திக் எடுத்துக்கொள்ளச் சொன்னால், அவனை அருணாவிடம் கொடுப்பது என ஒருவருக்கொருவர் மாறி மாறி பல்ப் கொடுத்துக் கொள்வது வழக்கம்தான். இந்தக் கூத்தெல்லாம் ஞாயிறு மாலை வரை மட்டும்தான்.
*
ஞாயிறு இரவு மீண்டும் சென்னை திரும்ப, சோல்டர் பேக்கை எடுத்து மாட்டும்போது எங்கிருந்தாலும் தவழ்ந்து ஓடிவந்து என்மீது ஏறிக்கொள்வான் கார்த்திக். அந்த பாய்ச்சல் சனிக்கிழமை காலை என்னைக் கண்டதும் தாவி வருவதை விட வேகமாய் இருக்கும். ”தம்பி, அப்பா கிளம்பட்டா?” எனக் கேட்டவுடன், ”வேண்டாம்” என்ற பாவத்துடன், என் தோளில் இருந்து பையைக் கழற்ற முயற்சிப்பான். “என்ன பொழப்புடா இது?” என என்னை நானே நொந்து கொண்ட நாட்கள் அவை. “ஏங்க, சீக்கிரமா கோயம்புத்தூர் CTS க்கு வரப் பாருங்க” என அன்றாடம் அருணா சொன்னபோதும்; கோவை வந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தை வெகு தீவிரமாக்கியது கார்த்திக்கின் செயல்தான். இந்த கோவை வேலை, சுற்றமும் நட்பும் சூழ் நல்வாழ்க்கை, இரவில் எவ்வளவு காலம் கடந்தாலும் கூடடையும் சுகம் என எல்லாவற்றுக்கும் விதை போட்டவன் கார்த்திக்தான்.
*
முதன்முதலாக, கார்த்திக் (செல்போனின்) ”அப்பா” என்றழைத்த நாளில் அலுவலகம் மறந்து, என்னை மறந்து நான் அழுதிருக்கிறேன். ஏழு வருடங்கள் முன்பு, நாங்கள் சிரித்திருக்க, கார்த்திக் முதன் முதலாக அழுத நாள் இன்று (17-ஆகஸ்ட்-2010).

பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக்.

:

ஜனநாயக சோதனைச்சாலையில்


நம் பிறப்பில் துவங்கி நம் வாழ்வின் பெரும்பாலான தருணங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் துறை ஒன்றுண்டு. நம்மை, நம் வாழ்வை எப்படி அந்தத் துறை பாதிக்கிறதோ, அதற்கிணையாகவே நாமும் அந்தத் துறையின் போக்கைத் தீர்மானிக்க இயலும். அதாவது மறைமுகமாக நம் வாழ்வின் போக்கை நாம் முடிவு செய்ய உதவும் துறை அது. அப்படிப்பட்ட துறையின் மீது பெரும் அக்கறை காட்ட வேண்டிய நாம் காட்டுவதோ பெரும் அலட்சியம் மட்டுமே.
*
கல்வி, மருத்துவம், உணவு என அத்தியாவசிய துறைகள் அனைத்துக்குமான தாய்த்துறை அது. அத்துறை அரசியல்”.  அது நம்மைத் தற்காத்துக் கொள்ளத் தரப்பட்ட போர்வாள். ஆனால், அதை அடகுவைக்கும் வேலையைத்தான் ஆண்டாண்டு காலமாகச் செய்துவருகிறோம். மதம் சார்ந்தும், சாதி சார்ந்தும், இனம் சார்ந்தும் நம்மை வெகு எளிதில் உணர்ச்சிவயப்பட வைக்க முடியும். நம்முடைய இந்த பலவீனமே நம் வீழ்ச்சி. அரசியலைப் பொருத்தமட்டில் உணர்ச்சி நிச்சயம் தேவைதான்; ஆனால் அது உண்டாக வேண்டியது அறிவின் மீதுதான்.
*
சமீப காலகட்ட அரசியலின் மாபெரும் சாபக்கேடே நாம் விதிமீறல்களை, ஒழுக்கக்கேடுகளை சகித்துக்கொள்ள மட்டுமின்றி அது இயல்புதான் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளவும் துவங்கிவிட்டோம் என்பதுதான். இந்தச் சூழலில்தான் அறிவார்ந்த அரசியலின் தேவை மேலும் பெருகுகிறது. தற்போதைய அரசியலில் நாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை நமக்கு கோடிட்டு காட்டுகிறது திரு.ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச்சாலையில்எனும் கட்டுரைத் தொகுப்பு. காத்திரமான பல விசயங்களை சாமானிய மொழியில் சொல்லிப்போவது இந்த நூலின் பெரும் பலம்.
*
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் பற்றிய கட்டுரை மற்றும் பிரிவினைவாதம் என்பதே முற்றழிவுதான் என்பதைச்சொல்லும் கட்டுரை என இந்த இரண்டிலும் ஒலிப்பது ஒரே குரல். உணர்ச்சிக்கும், சிந்தனைக்குமான வேறுபாட்டைக் காட்ட ஹிட்லர் vs காந்தி என உதாரணம் சொல்லியிருக்கும் கட்டுரை.  ஜனநாயக மாற்றத்தில் வேகம் என்றுமே அழிவு, மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும் எனும் கட்டுரை. அரசியல் விவாதங்களில், வரலாற்று/அறிவுப்பூர்வமான அதே சமயம் நிதானமான தரப்பின் தேவையை சொல்லும் கட்டுரை. பொய்யாக ஜோடிக்கப்படும் எதிரிகளால் யாதொரு பயனும் இல்லை என்பதையும் கூடவே வெற்று இருமைகளின் சிக்கல்களைப் பேசும் கட்டுரைகள். வெறுப்பரசியலின் சிக்கல்கள்  மற்றும்  பிரிவினை அரசியலின் மடமை இவற்றைச் சொல்லும் கட்டுரைகள். கல்வி கற்றவர்களும் நிபுணர்களும் அரசியலுக்கு வரவேண்டிய தேவையை பேசும் அதே சமயத்தில் அரசியலில் கலகக்காரர்களின் இடம் மிகவும் முக்கியம் என்பதையும் பதிவு செய்தல்.
என இத்தொகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளும் நம்முடைய அரசியலை மேம்படுத்த உதவுபவை. தொகுப்பின் இறுதிக்கட்டுரை பேசும் பின்வரும் விசயம் நாம் எல்லோரும் சிந்திக்கவேண்டிய ஒன்று
வெல்ல முடியாவிட்டாலும் நேர்மையாளர்கள் வாங்கும் 10 - 20 சதவீத ஓட்டு மறைமுகமாக எல்லாக் கட்சியினரும் நேர்மையாளர்களை நிறுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தும். மாற்றங்கள் எப்போதுமே அப்படி மெல்ல மெல்லத்தான் நிகழும்
*
அரசியல் என்பது அறிவின் பாதை; அதை உரக்கச் சொல்லும் புத்தகம் இது !
*
ஜனநாயக சோதனைச்சாலையில் – ஜெயமோகன்
வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

டே தகப்பா

”டேய், மணி 8 ஆகுது பாரு. கடைல கூட்டமா இருக்குது. இன்னிக்கும் பஸ்ஸ விட்டுட்டா, யாரும் கொண்டு வந்து விடமாட்டோம்” அம்மா என்னை எழுப்ப வழக்கமான டயலாக்கை சொல்லிக்கொண்டிருந்தார்.

 9 மணிக்குத் துவங்கும் பெரியாயிபாளையம் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்வதற்கு (பூண்டிக்கு) 8:40க்கு வரும் 9-A பஸ்ஸைப் பிடிக்க வேண்டும். தவறும் நாட்களில் அப்பாவே மச்சானோ (கிட்டத்தட்ட அரிசி சிப்பம் ரேஞ்சுக்கு இருந்த என்னை) 2 கி.மீ. சைக்கிளில் கொண்டு வந்து பள்ளியில் விடுவார்கள். பெரும்பாலும் அதிகாலை 8 மணிக்கே எழுந்துஅவசர கதியில் கிளம்பி 8:40 பஸ்ஸைப் பிடித்து விடுவேன். என்றாலும் மளிகைக் கடை வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டு என்னுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது அம்மாவுக்கும் பெரும் சவாலாகத்தான் இருந்திருக்கும். நான் கொஞ்சம் கருணையுடன் இருந்திருக்கலாம்.

இவ்வளவு நாள் கழித்து இந்த ஞானோதயம் வரக்காரணம்….
வேற யாரு கார்த்திக் தான்
 **

தலைவருக்குப் பஸ் பிடிக்கும் சிரமமெல்லாம் இல்லை. 8:40க்கு பள்ளி வளாகத்தை அடைந்தாக வேண்டும் இல்லாவிட்டால், அன்னிக்கு லீவுதான். வீட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருக்கும் பள்ளியில் கார்த்திக்கை கொண்டு போய் விட 8:35க்கு வண்டியை எடுத்தாக வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் அவன் 7:30க்காவது படுக்கையில் இருந்து எழுந்தால்தான், 15 நிமிடம் பல் துலக்க (13 நிமிடம் வெறுமனே ப்ரஷ்யை வாயில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பது, 2 நிமிடம் சிட்டி ரோபோவாக மாறி பல் துலக்குவது), பின்னர் ரெஸ்ட். முடிந்த உடன் காபி முதலான கவனிப்புகள். தொடர்ந்த கெஞ்சல் & கொஞ்சல்களுக்குப் பின் போனால் போகிறதென குளியல். பின்னர் உணவூட்டும் படலம். இவை எல்லாம் முடிந்து யூனிபார்ம் மாட்டி சில பல ”சீக்கிரம் வாடா, லேட்டாச்சு” களுக்கு மனமிரங்கி வண்டிக்குப் பக்கத்தில் அவன் எழுந்தருளும் போது மணி நிச்சயம் 8:35யை தாண்டியிருக்கும்.

சில வாரங்கள் முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு. கார்த்திக்கை & அவன் காலையில் நெடு நேரம் தூங்குவதை நாங்கள் கலாய்த்துக் கொண்டிருந்தோம். சிரிப்பினூடே நான் சொன்னேன் ”காலைல 7:15யை கார்த்திக் பார்த்திருக்கவே மாட்டான்”.

 அடுத்த நாள் காலை மணி 7 இருக்கும், நான் படுக்கையறைக்குச் சென்று கிருத்திகாவை எழுப்பிக்கொண்டிருந்தேன்.

 “யாரோ சொன்னாங்க, நான் 7 மணிக்கெல்லாம் எந்திரிக்க மாட்டேன்னு. இப்ப என்ன சொல்றீங்க” தள்ளிப் படுத்திருந்த கார்த்திக்கின் குரல் மட்டும் வந்தது. பெரும் ஆச்சர்யத்துடன், அவனை உற்சாகப்படுத்த

 “செமடா தம்பி. சூப்பர். டக்குன்னு எந்திரிச்சு வா. இன்னைக்காவது சீக்கிரமா ஸ்கூலுக்கு போகலாம்” என பரபரப்படைந்தேன்.

 என்னுடைய ஆர்வத்தை கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் தொடர்ந்து சொன்னான். “அதெல்லாமில்ல, என்னால 7 மணிக்கு முழிக்க முடியும்ன்னு காட்டத்தான் எந்திரிச்சேன். நீங்க 7:30க்கு வந்து எழுப்புங்க”

#டே_தகப்பா_மை_சன் #என்னைப்போல்_ஒருவன் #டே_தகப்பா