title


ஜனநாயக சோதனைச்சாலையில்


நம் பிறப்பில் துவங்கி நம் வாழ்வின் பெரும்பாலான தருணங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் துறை ஒன்றுண்டு. நம்மை, நம் வாழ்வை எப்படி அந்தத் துறை பாதிக்கிறதோ, அதற்கிணையாகவே நாமும் அந்தத் துறையின் போக்கைத் தீர்மானிக்க இயலும். அதாவது மறைமுகமாக நம் வாழ்வின் போக்கை நாம் முடிவு செய்ய உதவும் துறை அது. அப்படிப்பட்ட துறையின் மீது பெரும் அக்கறை காட்ட வேண்டிய நாம் காட்டுவதோ பெரும் அலட்சியம் மட்டுமே.
*
கல்வி, மருத்துவம், உணவு என அத்தியாவசிய துறைகள் அனைத்துக்குமான தாய்த்துறை அது. அத்துறை அரசியல்”.  அது நம்மைத் தற்காத்துக் கொள்ளத் தரப்பட்ட போர்வாள். ஆனால், அதை அடகுவைக்கும் வேலையைத்தான் ஆண்டாண்டு காலமாகச் செய்துவருகிறோம். மதம் சார்ந்தும், சாதி சார்ந்தும், இனம் சார்ந்தும் நம்மை வெகு எளிதில் உணர்ச்சிவயப்பட வைக்க முடியும். நம்முடைய இந்த பலவீனமே நம் வீழ்ச்சி. அரசியலைப் பொருத்தமட்டில் உணர்ச்சி நிச்சயம் தேவைதான்; ஆனால் அது உண்டாக வேண்டியது அறிவின் மீதுதான்.
*
சமீப காலகட்ட அரசியலின் மாபெரும் சாபக்கேடே நாம் விதிமீறல்களை, ஒழுக்கக்கேடுகளை சகித்துக்கொள்ள மட்டுமின்றி அது இயல்புதான் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளவும் துவங்கிவிட்டோம் என்பதுதான். இந்தச் சூழலில்தான் அறிவார்ந்த அரசியலின் தேவை மேலும் பெருகுகிறது. தற்போதைய அரசியலில் நாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை நமக்கு கோடிட்டு காட்டுகிறது திரு.ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச்சாலையில்எனும் கட்டுரைத் தொகுப்பு. காத்திரமான பல விசயங்களை சாமானிய மொழியில் சொல்லிப்போவது இந்த நூலின் பெரும் பலம்.
*
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் பற்றிய கட்டுரை மற்றும் பிரிவினைவாதம் என்பதே முற்றழிவுதான் என்பதைச்சொல்லும் கட்டுரை என இந்த இரண்டிலும் ஒலிப்பது ஒரே குரல். உணர்ச்சிக்கும், சிந்தனைக்குமான வேறுபாட்டைக் காட்ட ஹிட்லர் vs காந்தி என உதாரணம் சொல்லியிருக்கும் கட்டுரை.  ஜனநாயக மாற்றத்தில் வேகம் என்றுமே அழிவு, மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும் எனும் கட்டுரை. அரசியல் விவாதங்களில், வரலாற்று/அறிவுப்பூர்வமான அதே சமயம் நிதானமான தரப்பின் தேவையை சொல்லும் கட்டுரை. பொய்யாக ஜோடிக்கப்படும் எதிரிகளால் யாதொரு பயனும் இல்லை என்பதையும் கூடவே வெற்று இருமைகளின் சிக்கல்களைப் பேசும் கட்டுரைகள். வெறுப்பரசியலின் சிக்கல்கள்  மற்றும்  பிரிவினை அரசியலின் மடமை இவற்றைச் சொல்லும் கட்டுரைகள். கல்வி கற்றவர்களும் நிபுணர்களும் அரசியலுக்கு வரவேண்டிய தேவையை பேசும் அதே சமயத்தில் அரசியலில் கலகக்காரர்களின் இடம் மிகவும் முக்கியம் என்பதையும் பதிவு செய்தல்.
என இத்தொகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளும் நம்முடைய அரசியலை மேம்படுத்த உதவுபவை. தொகுப்பின் இறுதிக்கட்டுரை பேசும் பின்வரும் விசயம் நாம் எல்லோரும் சிந்திக்கவேண்டிய ஒன்று
வெல்ல முடியாவிட்டாலும் நேர்மையாளர்கள் வாங்கும் 10 - 20 சதவீத ஓட்டு மறைமுகமாக எல்லாக் கட்சியினரும் நேர்மையாளர்களை நிறுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தும். மாற்றங்கள் எப்போதுமே அப்படி மெல்ல மெல்லத்தான் நிகழும்
*
அரசியல் என்பது அறிவின் பாதை; அதை உரக்கச் சொல்லும் புத்தகம் இது !
*
ஜனநாயக சோதனைச்சாலையில் – ஜெயமோகன்
வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்