title


ஒரு ஆங்கில மேதையும், அன்னை நிலமும்

சில மாதங்களுக்கு முன் ஒரு நாள், “புத்தகம் பேசுது” என்கிற தலைப்பில் திரு. பாரதி கிருஷ்ணக்குமார் அவர்கள் கடந்த 2005 ல் ஈரோடு புத்தகத்திருவிழாவில் பேசின CDயை கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் படித்ததில், அவருக்கு பிடித்த புத்தகங்களிலிருந்து அவர் மனம் தொட்ட சம்பவங்கள், பொருத்தமான உவமைகள் என (வழக்கம்போல்) மிகக் கச்சிதமான உரை. எனக்கு மிகப் பிடித்த பேச்சாளர் என்பதாலோ என்னவோ, அவர் அன்று சொன்ன புத்தகங்களின் காட்சிகள் அப்படியே ஒரு படம் போல மனதில் ஓடிக்கொண்டிருந்தன. தன்னுடைய ஒட்டு மொத்த உரையிலும் தன் மனம் கவர்ந்த முக்கியமான மூன்று புத்தகங்களைப் பற்றிப் பேசினார். ஒன்று நேரடியான தமிழ்ப் புத்தகம் “ஆழி சூழ் உலகு”; ஏற்கனவே படித்தாகிவிட்டது, அடுத்தது “The Roots” ஆங்கிலப் புத்தகம், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு “ஏழு தலைமுறைகள்” தற்போது Out Of Print என்பதால் அதை ஆங்கிலத்திலேயே படிக்கும் விபரீத முடிவுடன் வாங்கிவிட்டேன். மூன்றாவது புத்தகம்தான் இந்த கதையின் நாயகன் (நானும்தான்). அதுவும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்தான். தமிழ் மொழிபெயர்ப்பின் பெயரை “அன்னை நிலம்” என்று சொன்னார். மூலத்தை எழுதியவர் பெயர் மாமேதை “ஜிங்கிஸ் ஐத்தாவ்”. ஆனால் மூலப்புத்தகத்தின் பெயரை சொல்லவில்லை. ஆனாலும் வாங்கும் ஆசை எனக்கு.

இது என்ன பிரமாதம் அதான் எழுத்தாளர் பெயர் தெரியுமே என்றால் இங்குதான் இக்கதையின் முடிச்சு விழுகிறது. நேக்கு ஆங்கிலம் ஓரளவு பேசத் தெரியும். எழுதவும் தெரியும். இருந்தாலும் இந்த spelling தான் எப்பவும் பிரச்சனை பண்ணும். அப்பெல்லாம் Microsoft MSWord dictionary தான் என்னைக் காப்பாற்றும். இதோ இப்ப முந்தின வரில கூட spelling குக்கு ஒரு ”L” மட்டும் போட்டு பின்னர் அருள்மிகு WORDஆண்டவர் கருணையினால்தான் திருத்தினேன். கவனியுங்க இப்பகூட திருந்தினேன் இல்ல திருத்தினேன் மட்டும்தான். அதுமட்டுமில்லாம நம்ம STDய (அதான்ங்க வரலாறு) திரும்பிப் பாத்தா நம்ம ஆங்கிலப்புலமையால ஆட்டத்த விட்டே போனவங்க எண்ணிக்கை எண்ணி மாளாது. இருந்தாலும் சாம்பிளுக்கு இந்த ஒரு கதைய கேளுங்க….

அப்ப நான் கோவை கல்லூரியில MCA படிச்சுட்டு இருந்தேன் (இப்பவரைக்கும் அவ்வளவுதான் படிச்சிருக்கேன் என்பது ”தூள்” காமெடி, நமக்கு அது தேவையில்ல). முதல் Class Test க்கு வீட்ல இருந்து படிச்ச லட்சணம் உடனடியா ஹாஸ்டலில் தஞ்சமடையவைத்தது. அப்பெல்லாம் நைட்டு முழுக்க ஹாஸ்டலில் நடக்கும் Interaction Session (இத ராக்கிங்க்கு எதிர்க்கட்சிகாரங்க சொல்வாங்க) ரொம்ப பயமுருத்தும். விடிய விடிய கொண்டாட்டம்தான் (சீனியர்களுக்கும் மட்டும்). Technical, Communication, GK என கிட்டத்தட்ட VIJAY TV ரேஞ்சுக்கு பல ரவுண்டு உண்டு. அதுல இந்த ”Communication” ரவுண்டுலதான் நாஞ்சொல்லப்போற கத வருது. Communication Round முழுக்க முழுக்க இங்கிலீபீசுதான். தப்பித்தவறிக்கூட தமிழு வந்திடக்கூடாதுன்னு தமிழ் தெரியாத North Indian சீனியர்ஸ்தான் அந்த Room ல இருப்பாங்க. உள்ள போய் மாட்டினா, ஒண்ணா நாம இல்லாட்டி இங்கிலீசு ரெண்டுல ஒண்ணு கதறி அளுவாம அந்த Room கதவு தொறக்காது.

சம்பவத்தன்னிக்கு, அங்க இருந்த ரெண்டு பேரோட கெரகம் நான் அந்த ரூமுக்குள்ளாற போனேன். நம்ம பேவரைட்டி கீரோ கம் டைரக்டர் ”திரு. பாக்கியராஜ்” என்பதால் மண்டபத்துக்குள்ளாற செருப்ப திருடும் பார்வையுடன் அறையில் நுழைந்த என்னை வெவரம் புரியாம Welcomeமின்னாங்க ரெண்டு பேரும். மொத ரவுண்டுலயே என்கூட தஸ் புஸ் இங்கிலீசுல அவங்க பேச நானும் பதிலுக்கு தமிழ அப்படியே இங்கிலீசாக்கி தாளிச்சுவிட்டேன். அடுத்த ரவுண்டு “Writing Test” லதான் அந்த சோகம் நடந்தது. ரவுண்டு ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிசமே அந்த Room கதவு தெறந்தது. கலங்கிய விழிகளுடன் அறையை விட்டு ஓடினது…….. நம்புங்க மக்களே நானில்ல, அவங்க ரெண்டு பேரும்தான். விவகாரம் வேறோண்ணுமில்ல, இருந்த ரெண்டு பேருல ஒருத்தர் பேரு “vaibhav dutt” அதாவது வைபவ் தட். இப்ப அவர் பேர இந்த Google கூட கரெக்டா தந்துடுச்சு. ஆனா அவரு என்னை பாத்து ஸ்டெயிலா Write My Name அப்படிக்கு சொன்னாரு. எம்மேல தப்பில, அவர் பேரு எனக்கு “வேபவ் தட்”ன்னு காதுல கேட்டது. சரி ஆசையா கேட்கிறாரேன்னு எழுதிக்காட்டினதுக்குதான் அவங்க அந்த ஓட்டம் எடுத்தாங்க. அப்படி என் இங்கிலீஸ் writing skillன் உச்சம் தொட்ட படைப்பு அவர் பேருதான். அதுக்கு நான் எழுதின Spelling இதுதான் “WAYBAAV THAT”.

இப்படிப் பின்புலம் கொண்ட நாம கேள்வி ஞானத்த வெச்சு ஒரு ஆங்கில எழுத்தாளர தேடினா என்ன நடக்கும். என்னவெல்லாம் நடக்ககூடாதோ அதுதானே நடக்கும். அதுதான் நடந்தது. “ஜிங்கிஸ் ஐத்தாவ்” என்ற பெயரை என்னுடைய புத்திக்கூர்மையினால் எல்லா permutation combination லயும் போட்டுப் பாத்தும் ஒண்ணும் வேலைக்காவல. நானும் விடக்கூடாதுன்னு ஒரு ரெண்டு மூணு வாரம் “ginkis ithaav”, ”chinkis aithaav”, ” jinkies aithaav”, “ginkees aithaav” அப்படி இப்படின்னு போட்டும் பாத்தேன். Google ம் கடுப்பாகி இவராடான்னு(http://en.wikipedia.org/wiki/Genghis_Khan) கூட கேட்டுச்சு. கட்டக்கடேசீல ரெண்டு பேர் கொண்ட குழு அமைச்சு ரெண்டு மூணு நாளு கேட்டுக் கேட்டு கண்டேபுடுச்சுட்டோம். அதுல பாருங்க நம்ம விதி அவரு பேரு “ஜிங்கிஸ் ஐத்மாத்தாவ்”வாமா (Chinghiz Aitmatov), “ஜிங்கிஸ் ஐத்தாவ்” இல்லியாமாங்க. அல்லாரும் என்னையவே குத்தம் சொன்னாங்க, செரீன்னு மறுக்க ஒருதடவ நம்மளாளு பேசுன CDய கேட்ட அவர்கூட இப்ப கரெக்டா (ஒரு வேள அவரும் Google பாத்து மாத்தியிருப்பாரோ) சொல்லுறார். ஒரே ஒரு சின்ன தப்பு புக்கு பேரு “அன்னை நிலம்” இல்ல, அது “அன்னை வயல்”. ஒருவழியா கோவை NCBH புத்தக நிலையத்தில் ஆசைப்பட்ட மாதிரியே “அன்னை வயல்” வாங்கியாகிவிட்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கின அந்த புக்கு எப்புடி இருந்தது ? அடுத்த பதிவுல சொல்லுறேன்.

என் பெயர் ராமசேஷன்


நம்மில் பெரும்பாலோனோர்க்கு இந்த அவஸ்த்தை இருக்கும். வேரொன்றுமில்லை, பிறர் நம்மீது கொண்டிருக்கும் எண்ணங்களை காக்க வேண்டி, அவர்கள் நம்மைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் விசயங்கள் யாவையும் உண்மை என்பதை நிருபிக்க வேண்டி நாம் வேஷம் போடுவது. நாய் வேஷம் போடும் போது குரைக்கவும், குரங்கு வேஷம் போடும் போது குட்டிக்கரணம் அடிப்பதும் நமக்கொன்றும் பெரிய பிரச்சினை இல்லை. சிறு வயது முதலே நாம் அதற்கென மிகத்திறமையாக வளர்க்கப்பட்டதால் வேஷமிடுவது குறித்த வெட்கமுமில்லை. ஒருவேளை எப்போதாவது மனசாட்சி உறுமினால் இருக்கவே இருக்கிறது – “Survival of the Fittest”, ஊரோடு ஒத்துவாழ்வதற்கான உபதேசங்கள். அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாங்கி நெடுநாட்கள் ஆகியிருந்த போதும் மிக சமீபத்தில்தான் ஆதவன் அவர்கள் எழுதிய “என் பெயர் ராமசேஷன்” நாவலை படிக்க நேர்ந்தது. நாவலை கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ராமசேஷனின் இளமைகாலங்களின் பதிவு என சுருக்கமாக சொல்லலாம். ஆனால், இந்த நாவலின் ஊடாக ஆதவன் சொல்லியிருக்கும் வாழ்க்கை ராமசேஷனுடையது மட்டுமல்ல. மாறாக பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை. வழியாக வாழ்க்கை எனும் பரமபதத்தில் பிறர்கையில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பகடைக்காய்களின் கதை.

அப்பா, அம்மா, அத்தை, பங்கஜம் மாமி, மாலா, ராவ், பிரேமா, கணக்கு வாத்தியார் என தன்னைச் சூழ்ந்துள்ளவர்கள் தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்து அதற்குகந்த செயல்பாடுகளால் நிரம்பியது ராமசேஷனின் கல்லூரிக்காலம். தனக்கு, தன் இயல்புக்கு ஒத்துவராதபோதும் தற்காலிக இன்பம் அல்லது பிறரது அன்புக்கு பாத்திரமாக வேண்டி, தன்னைப் பற்றிய பிறரின் கற்பனைகள் சுமந்து அலைகிறான் ராமசேஷன். ஒருகட்டத்தில் வேஷம் அலுத்துப்போய் / அண்மை சலித்துப்போய் வேஷத்தை கலைக்க முற்படும்போதெல்லாம் அவனைப்பற்றிய அவதூறுகள் மட்டுமே எஞ்சுகின்றன. ஒரு கணமும் அல்சேஷனாகவும் சலிப்புற்று ஆதிசேஷனாகவும் என மாறி மாறி வேடிக்கைகாட்டும் ராமசேஷன், வெறுமனே “ராமசேஷனாக” இருப்பது வெகு சொற்பமான தருணங்களிலேயே.



இந்த நாவலின் முதற்பதிப்பு வெளிவந்தது 1980ல். நான் பிறக்கும் முன்பே. ஆனால் இந்த நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் / சம்பவங்கள் யாவையும் எனக்கு என் கல்லூரிக்காலத்தை அதில் நான் பார்த்த நண்பர்களை நினைவூட்டியது. சுற்றியிருக்கும் எல்லோருக்குமான ஒரு வாழ்வை / அடையாளத்தை நாம் வைத்துக்கொண்டு நம்முடையதை நாம் எப்போதும் தொலைத்துக்கொண்டேயிருக்கிறோமோ ?

ஆதவனின் அற்புத மொழியில் சொல்லப்பட்டிருக்கும் ராமஷேசனின் கதை நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம்.

உரையாடல்


ஒவ்வொரு முறையும்
புதிது புதிதாய்
குழந்தையின்
வார்த்தைகள்

உலகத்தின்
ரகசிய கதவுகளை
திறக்கும் சாவிகள்
குழந்தைகளின் பொறுப்பில்….

ஆதிரா


மைதானத்தில்
பெய்து கொண்டிருக்கும் மழையை
பள்ளிச் சிறைக்கம்பியின் பின்னிருந்து
பார்க்கிறாள் ஆதிரா…

அவளுடைய மழையை
களவு செய்து
காத்திருந்தது பெருமரம்…

மழைக்காலம்


பெருமழை…
நனைந்தவன் ஏறினான்
பேருந்திலும் மழை

*

பின்மதிய வெயில்
குடையாய் வந்தது
மழை

*

மழை அம்பு
உடம்பெங்கும்
நீர்க்குருதி

*

வெகு அமைதியாய்
இருந்த இரவுக்கு
இசை தானமிட்டது
மழை

1921• September 11, 2013


ஆசைப் பிள்ளைகளின் அழுகுரல்,
அன்பு மனைவியின் கண்ணீர்,
ஒரு வேளை பட்டினிக்கே
உயிர் போக்கும் கும்பி
மானத்தை ஆடையிலும்
மாண்பை பணத்திலும்
அளவிடும் ஆறறிவு
காக்கை கூட்டம்
இப்படி எத்தனை எத்தனையோ
நியாயங்கள் ஒவ்வொருவருக்கும்…
ஊரோடு ஒத்து வாழ….

அப்படியே அவனுக்கும் ஆனாலும்

எந்நிலையிலும் சமரசம் மறுத்தவன்..
அறிவாசான் ஞானசூரியன்
மூத்தகுடியின் மகாக்கவிஞன்
மரணத்திலும் பிறந்தவன்
மகாக்கவி பாரதி நினைவு தினம் இன்று (September 11, 1921).

பாரதி போற்றுவோம் !
———————
ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே.

நீ ஒரு காதல் சங்கீதம்-2


பொதுவாக நீ பேசினாலே பாடுவது போலதான் இருக்கும். அதனால்தான் நான் உன்னை பாடச்சொன்னதே இல்லை. இருந்தாலும் என் மனதறிந்து (அதிலொன்றும் வியப்பில்லை) நீயாக பாடுவாய். என்னை, என்னை விட நன்கறிந்தவள் நீ.

 
இதைச் சொல்லாத காதலன் எவனாவது இருப்பானா?

*

“ஏதாவது பாடுடா Please”; நீ எப்போதும் கேட்பவளல்ல… அழைக்கும் முன்னரே மழலை வருவது போலவோ, கண்ணெதிரே விழும் முதல்துளி மழையாவது போலவோ அதிசய நிகழ்வுதான். என்பதால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெல்லிய பரபரப்படைவேன் நான். அன்றும் அதே பரபரப்புடன் பாடத்துவங்கினேன்….

வீணையடி நீயெனக்கு!
மேவும் விரல் நானுனக்கு!
பூணும்வடம் நீயெனக்கு!
புதுவயிரம் நானுனக்கு!

தேர்ந்த இசைஞானம் கொண்டவன் போன்ற பாவத்துடன் நான் பாட, நீ பாவமாய் கேட்டிருந்தாய்.

பாடல் முடிந்ததும் புருவமுயர்த்தி “எப்படி ?” என்றேன்.

“என்னதான் சொல்லு நீ படிக்கிற அளவுக்கு நல்லா பாடமாட்டேங்கிற…”

“தெரியுதுள்ள.. பின்ன எதுக்கு பாட சொல்லுற” எனக் கோவமாய் கேட்டவனிடம்…

“டேய் லூசு… குழந்தை தத்தக்கா பித்தக்கா-ன்னு பேசுறத ரசிச்சு கேட்குறது பேசறது புரியுதுங்கறதால இல்ல….. புரியுதா ?” என்றாய்.

புரிந்தது.

பேரன்பு வழியும் உன்காதல் என்னைக் கொல்(ள் )லா(ளா )மல் விடாது.

வட்டம்


ஏதோ ஒரு கணத்தில்
ஒருத்தியின் மென் புன்னகை
என் தூக்கத்தை கெடுக்கவல்லது
இப்போதும்

இன்னும் கூட
சுகந்தத்துடன் தடவிப்போகும்
ஏதாவதொரு தாவணியால்
என் மனதில் பூகம்பம்
விளையக்கூடும்

முன் நெற்றி முடிகளை
புறங்கையால் ஒதுக்கி
எவளாவது வீசும் கள்ளப்பார்வை
இன்றும் நெஞ்சில் தீ மூட்டுகிறது

நியாய தர்மங்கள்
விதிமுறைகள் தர்க்கங்கள்
எல்லைகள் என
எதற்குள்ளும் அடங்காமல்
வாதிக்கிறது
என் வாழ்க்கை !

நீ ஒரு காதல் சங்கீதம் – 1


நீ ஒரு காதல் சங்கீதம்… உன்னைப் பற்றி எழுதவேண்டுமென்று நினைத்தவுடன், எனக்குத் தோன்றிய தலைப்பு இது.

நம்முடைய எல்லா சந்திப்புக்கும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாட்டை முணுமுணுத்தபடியேதான் நீ வந்திருக்கிறாய். மட்டுமல்ல, நம்முடைய ரசனை வேறெந்த விசயங்களையும் விட ராஜாவின் பாட்டில்தான் ஒரே மாதிரியானது.

உனக்கு நினைவிருக்கிறதா..? சென்னை திருவான்மியூர் கடற்கரையில், ஒரு மெல்லிய மழைத்தூறலில் என் காதருகே நீ பாடிய “அந்திமழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…”, மழைத்தூறல்கள் நம்மை நனைக்க உன் மெல்லிய எச்சில் தெறிப்புகள் என் காதை நனைக்க ஒரு சேர இருவரும் சிலிர்த்த கணம். உனக்கு மறந்திருக்காது. இதோ இன்றும் கூட எப்போது மழை வந்தாலும் உடனே சாரல்களுடன் சேர்ந்து உன் பாடலும் என்னை நனைக்கிறது.

இந்த FM வந்தபிறகுதான் உன் முகத்தில் அடிக்கடி நான் குழந்தையை பார்த்தது. எப்போதுமே என் இடது காதில் ஒன்றும் உன் வலது காதில் ஒன்றுமாக ஒரே “hearphone”னில் தான் நாம் பாட்டு கேட்பது. ஒரு முறை கூட நீ இடம் மாறி அமர்ந்ததில்லை. கேட்டால் “அர்த்தனாரீஸ்வரனில் இடப்பக்கம்தான் அம்மைக்கு” என்பாய். ஒரு அரை மணி நேரம் பாட்டு கேட்டால் அதில் எப்படியும் நான்கு பாடல்களாவது இளையராஜா பாடல்களாக இருக்கும். அத்தருணங்களிலெல்லாம் லேசாக கிள்ளி “நம்மாளு” என்றவாறே கண்ணடிப்பாய்.

உன்னைப் பற்றி எழுதுவதற்கு இதைவிடப் பொருத்தமான தலைப்பு.. எனக்குத் தெரிந்து இல்லை.

நீ ஒரு காதல் சங்கீதம். ஆம் நீ ஒரு காதல் சங்கீதம்.

சமாதி


நஞ்செய் புஞ்செய்
பாகுபாடில்லாமல்
விளைந்து நிற்கின்றன
எல்லா நிலங்களும்…

மாதம் மும்மாரி
மழைப்பொழிவு தேவையில்லை
காலம் பார்த்து களை பிடுங்கும்
கட்டாயம் ஏதுமில்லை
பூச்சிகொல்லி உரம் தெளித்து
பக்குவப்படுத்தல் பழைய கதை

மகசூல் அறுவடை
எல்லாம் மறந்துபோய்
வெறும் வீடுகளாய்
விளைந்து நிற்கின்றன
“விலை” நிலங்கள்

காய்கறிபோல் கான்கிரீட்டை
உண்ணமுடியாது எனும்
உண்மையை சுமந்து கொண்டு…

ஒரு முட்டாளின் மூன்று கவிதைகள்


1.
உயிர் கசிந்து எழுதப்படும்
ஒவ்வொரு காதல் கவிதையின்
முடிவிலும் அயர்ச்சியுடன்
எண்ணிக்கொள்கிறேன்
கவிதை புரியாத சிலரையும்
என் காதலே புரியாத
உன்னையும்…

2.
நான் எண்ண பேசினாலும்
அதை எண்ணி எண்ணி
சிரிப்பாய்…
அப்படியே கடந்து போனாய்
நான் காதல் சொன்ன
கணத்தையும்

3.
தூக்கம் போர்வையாகி
நகரையே மூடிப்போன
பின்னிரவுப் பொழுதுகளில்
உன் நினைவைப்
போர்த்தி விழித்திருக்கிறேன்….
எல்லாவற்றையும்
தன்னுள் கரைத்து
கரைந்து கொண்டிருக்கிறது
காலம்

முள்

பிதுங்கி வழியும் பேருந்தில்
வியர்வை ஆற்றின் மத்தியிலும்

அனலடிக்கும் காற்றில்
நெடுந்தூரம் நடக்கும் போதும்

ஏன்
சமயங்களில் மயான வெளிகளில் கூட

ஒரு குழந்தை
பொம்மையை சுமப்பது போல...

முடியாவிட்டாலும்
சுமந்து கொண்டே திரிகிறேன்

தன்னைத் தான் மட்டுமே
அழிக்கவல்ல “பஸ்மாசுரன்”

காமம்

ஒரு கண்ணாடியின் கதை

யார் வந்து முன்நின்றாலும்
பாவக்கணக்குப்படி பிம்பம் காட்டும்
அது மாயக்கண்ணாடி…

ஒரு அரசியல்வாதி
அடுத்து ஒரு கல்வித்தந்தை
ஒரு தொழிலதிபர்
தொடர்ந்து ஒரு மருத்துவர்

மாறி மாறி நின்று பார்க்க

சுனாமிப் பேரலைகள்
ஓநாய்க்கூட்டம்
காட்டேரிகள்
மட்டுமின்றி எரிமலைகள்

என காட்டிக் காட்டி
களைத்துப்போனது கண்ணாடியும்…

கடைசியாக
தன்பலன் பார்க்க வந்தார்
கடவுளும்…

வெடித்துச் சிதறியது
கண்ணாடி!

சுழியம்

எந்தவொரு
மூடப்பட்ட கதவினையும்
உச்சகட்ட எச்சரிக்கையுடனே
திறக்கிறேன்

எதிர்பாரா ஏதேனும்
நிகழக்கூடுமென

எல்லாமுறையும்
ஏமாறுகிறேன்
எதிர்பாரா நிகழ்வினால்.

கனவாய்ப் பழங்கதையாய்

காலங்காலமாய்
புனைந்துகொண்டேயிருந்த
கதைசொல்லி பாட்டியின்
வாய் போலவே
என் காதலும்

அனுபவிக்க ஆளில்லாவிட்டாலும்
ஊற்றெடுக்கிறது
அதன் போக்கில்

***

ஆகச் சிறந்த
ஆழ்முத்தத்தில் கூட
எச்சில் தவிர்க்கும்
நாசூக்குக்காரி நீ !

அதனால்தான் கடந்தாய்
கண்ணீர்த்துளிகளை
வெறும் உப்புநீர் என…

சுழற்சி

மொழியின் சாத்தியங்கள்
நீர்த்துப்போய்
குறியீடுகள் ஆள்கின்றன

அழுகை, சிரிப்பு
அவமதிப்பு, பெருமை
பசி, பரிதவிப்பு
கோபம், நிராகரிப்பு …

எல்லா உணர்வுகளும்
வெறும் குறியீடுகளாய்

குறியீடுகளும் கசந்து போன
ஒரு நன்நாளில்
ஆதி மொழி மீண்டும்
அரியணையில்

மௌனம்!

மோட்சம்


இரவின் கொடுந்துயர்கூட்டும்

தனிமை அறுத்தெறிகிறது

காலத்துடனான பிணைப்பை…



இன்றிலிருந்து நேற்றுக்கும்

பின்னர் அதற்கு முன்பும்

ஊஞ்சலாட்டம் துவங்குகிறது

எண்ணம்



ரணப்பட்ட என் மனது

தனிமையில்

குத்திக்கிழித்த வாளும்

வாதை குறைக்கும் மருந்தும்

உன்னிடம்



என்னதான் சூடுபட்டிருந்தாலும்

அடுப்பன்றி வேறு அபயமில்லை

உன்னை நாடாமலிருக்க

மனம் ஒன்றும் பூனையல்ல

குரங்கு.

வதைப்படலம்…


நீண்ட நாட்களுக்குப்பின் எழுத வைத்த நண்பனுக்கு நன்றி.

நமக்கு இது எப்போதுமே நடப்பதுதான் என்றாலும், இந்த முறை கொஞ்சம் அதிகம். 

வர வர இந்த வார்த்தைகளின் தொந்தரவு தாங்க முடிவதில்லை. சொல் பேச்சு கேட்காமல் அவைகளாகவே வந்து குவிகின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் பேசுவது தவிர்த்து சேமித்துவைக்கும் வார்த்தைகள் உள் நிரம்பி பின் தானாகவே வழிகின்றன. தொட்டிக்கு நீரேற்றும் இயந்திரத்தில் இருப்பது போல் வார்த்தைகளை நிறுத்திவைக்கும் வசதியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். இத்தனைக்கும் வார்த்தைகளின் மீதான காதல் ஒன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் அதைக் குறைசொல்லியும் பயனில்லைதான்.
**
இப்போதெல்லாம் நண்பர்களிடம் பேசும்போது கூட மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது. மனதிலிருந்து ஊற்றெடுக்கும் சொற்களை வடிகட்டி பேசுவது கூட சங்கடமாய்ப்படவில்லை. மாறாக நம்முடைய பிம்பத்திடமே அவ்வேலையை செய்ய நேர்ந்தது நிச்சயம் துரதிஷ்டவசமானதுதான். என்னதான் சொல்லவந்த விசயத்தை தெளிவாக விளக்கிவிடும் போதிலும் மனதிலிருந்து வரும் வார்த்தைகள் தரும் அருகாமையை புத்தி தேர்வுசெய்து தரும் வார்த்தைகளில் பெறமுடிவதில்லை. மொத்தத்தில் தண்ணீர்தான் என்றாலும் அருவியும் ஷவரும் வேறுவேறுதானே!
**
மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே ஆகக் கடினமானது. அதிலும் மூலத்தின் பொருள் மாறாமலும் அழகியல் அழியாமலும் மொழிபெயர்ப்பது சவாலானது. இருப்பினும் துணிந்து சொல்வேன், அத்தகைய சவால்கள் இல்லாத போதும், தமிழிலிருந்து தமிழுக்கே மொழிபெயர்க்கும் சூழல் வாய்ப்பது நிச்சயம் சாபம்தான். முதலில் என் எண்ணங்களை எனக்கான சொற்களில் சொல்லிவிட்டு (அல்லது எண்ணிவிட்டு) பின்னர் அதையே உனக்கேற்றபடி மாற்றிச் சொல்லமுயலும் போது நான் மட்டுமல்ல மொழியே கூட கொஞ்சம் குழம்பித்தான் போகும்.
**
நான் சொல்லவந்தது அல்லது சொல்லிப்போனது எதுவுமே உன்னை நோகடிக்கும் எண்ணம் கொண்டதல்ல என்பதை வார்த்தைகள் மூலம்தான் விளக்கமுடியுமென்பது உறவுக்கு எதிராக கோரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம்தானே. தீர்மானம் தோற்கவேண்டுமென்பதுதான் என் ஆசை. என்றாலும் அரசியலைப் போலத்தான், சதுரங்கத்தை போலத்தான் நம்முடைய வெற்றியிலும் தோல்வியிலும் எதிராளிக்கு இருக்கிறது சமபங்கு.
**
இதோ மேலே எழுதியிருக்கும் எல்லாவற்றையும் கூட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைதான். ஆனாலும் ஒரு பயம், மீண்டும் நேர்ந்து விடுமோ ஒரு அவலம்? தமிழிலிருந்து தமிழுக்கே மொழிபெயர்ப்பது ஆகப் பெரிய சோகம்.

புத்தம் சரணம்


நள்ளிரவுகளில் துரத்தும்
கனவுகளின் கோர முகம்
அலறி எழுகிறாள் யசோதரை

ஹம்சதூளிகா மஞ்சத்தின்
வற்றாத கண்ணீர் நதி கடக்க
ஓடம் தேடி அலைகிறான் புத்தன்
ஒவ்வொரு மரமாய்.


***

போதுமட்டும் பிள்ளைக்கறி
உண்டும் கூட
தாகத்துக்கு குருதிமழை
பொழிந்த பின்னும்
இன்னும் இன்னும் என ஏங்குகிறான் புத்தன்

வீடு வாசல் செல்லடித்து
வாழ்ந்ததடம் அழித்துமுடித்து
பாலூட்டும் முலையறுத்து
யுகம் பல தாண்டிய நூல்களை
”தீ” க்கு தின்னக் கொடுத்து
இன்னும் எப்படி எப்படியோ
கட்டப்படுகின்றன பெளத்த விகாரங்கள்

அனுதினமும் விகாரமாகிக்கொண்டே
போகிறான் புத்தன்.

முகவரி



அனலிலிட்ட பொன்னாய்
உருகியோடும் தார் ஆற்றின்
நடுவிருக்கும்
ஒற்றைச் செருப்பின் முகவரி
தோய்ந்த ரத்தம்…

***

எல்லைகளும் அடையாளமுமற்ற
மிக நீண்ட வான்பரப்பில்,
வழிந்தோடும் காற்றில்
ஒரு பறவையின்
சிறகசைப்பு பதித்துப்போவது
திரும்ப கூடடைவதற்கான
தடம்!

வாஸ்து

மேற்கே கதவு வைக்காதே
கிழக்கே உயரமாக்காதே
வடக்கே பீரோ கூடாது
தெற்கே வாசல் சிறக்காது

இன்னும் இன்னும்
ஆயிரமாயிரம் கட்டளைகள் உண்டு
ஒரு வீடு கட்ட
மட்டுமல்ல
கோவில் கட்டவும்

எத்தனை விதிகள்
அனுதினம் வந்தாலும்
எந்த சாஸ்திரத்தாலும்
கட்டமுடிந்ததேயில்லை
துக்கம் சமீபிக்காத
ஒரேயொரு வீட்டை…

மாதொருபாகன் (நாவல்)



தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை எந்தச் சொல் மிக மிக உருக்குலைக்கும்? ஒரு ஆணை எந்த வசை மிகக் கொடுமையான வதை புரியும்? நம்முடைய சூழலில் எது ஒரு நிறைவான வாழ்க்கையாக மதிப்பிடப்படுகிறது? இவை அனைத்துக்கும் விடை ஒரு குழந்தையை அடிப்படையாகக் கொண்டது. “மலடிஎன்ற ஒற்றை சொல் கொடுக்கும் வலி பிரசவ வலியை விடவும் பல மடங்கு மிகக் கொடூரமானது. எந்த தர்ம நியாயம் பேசும் ஆணாலும், இகழ வேண்டிவறடன்என்று ஏசுபவர்களின் இழிசொல்லுக்கு பதிலுரைக்க முடிவதில்லை. என்னதான் மற்றவர் போற்ற வாழ்ந்தாலும் சந்ததி இல்லாவிட்டால் வாழ்வுக்கே அர்த்தமில்லை என்னும்படியான ஒரு பெரும்போக்கு இன்னும் உயிர்த்திருக்கிறது.

இந்த பிரச்சனையை மையமாக வைத்து “திருச்செங்கோடு” மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களை, அதன் மக்களை பின்புலமாகக் கொண்டு ”திரு. பெருமாள்முருகன்” அவர்கள் எழுதியுள்ள நாவல் “மாதொருபாகன்”. மாதொருபாகன் என்பது சிவனின் பெயர் (மாது ஒரு பாகன் – பெண்ணை ஒர் பாகமாக கொண்டவன்). உண்மையில் பெண்களை தெய்வமாக கொண்டாடப்படுவதான பிம்பம் கொண்ட, தன் உடலின் சரிபாதியை மனைவிக்கு தந்த கணவரை தெய்வமாக கருதும் சமூகம் நம்முடையது. ஆனால் உண்மையில் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலான இந்தியப் பெண்கள். முன்னர் சொன்ன குழந்தையில்லாத தம்பதிகளிலும் முதலில் (அல்லது முற்றாக) பாதிக்கப்படுவது பெண்தான். அத்தகைய பெண்களைப் பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை பற்றியும் ஓரளவுக்கு பதிவுகள் இருக்கின்றன. ஆனால் (எனக்குத் தெரிந்து) ஒரு கணவனின் துயரை அவன் எதிர்கொள்ளும் வலிகளை பெரும்பாலும் நாம் பதிவு செய்ததேயில்லை. அந்த குறையை மிக செறிவான தனது இந்த நாவல் மூலம் தீர்த்துள்ளார் “திரு. பெருமாள்முருகன்”.


எல்லா கிராமங்களிலும் சுணங்காமல் வேலை செய்யும் மன வலிமையும் உடல் தினவும் கொண்ட இளைஞர்களை பார்த்திருப்போம். அப்படியொரு மனிதன்தான் “காளி”. அவனது உற்ற நண்பனின் தங்கை “பொன்னாள்”. ஆசை ஆசையாய் நண்பனின் தங்கையையே மணம் புரிந்து ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவந்த போதும், வாரிசு இல்லை என்பதை கனமான சுமையாக சுமப்பவர்கள். சமயங்களில் அவர்கள் அதை மறந்தாலும் சமூகம் விடாமல் நினைவூட்டிகொண்டே இருக்கும் சாபம் பெற்றவர்கள். அடிப்படையில் இருவரும் ஒருவர்மீது ஒருவர் அபரிமிதமான காதல் கொண்டவர்கள். அதனால்தான் ”காளி”க்கு (வழக்கம்போல) இன்னொரு பெண்ணை திருமணம் செய்யும் யோசனையை “பொன்னா”வின் அம்மாவே முன்வைத்தாலும் அவனால் அதை ஒப்பமுடியவில்லை. குழந்தை வேண்டி எல்லாவிதமான பரிகாரங்களையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றிய பின்னரும் எந்த மாற்றமும் நிகழவில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் ஊராரின், உற்றாரின் விஷம் தோய்ந்த வார்த்தைகளுக்கு அரணாகவாவது ஒரு குழந்தை வேண்டுமென்னும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என்றாலும் நாளாக நாளாக காதல் கூடியதேயல்லாமல் குறையவில்லை.

இதன் பிண்ணனியில், இப்படிப்பட்ட மக்களின் துயர்தீர்க்க சென்ற நூற்றாண்டின் முற்பகுதிவரை “திருச்செங்கோடு” ஆண்டவரை முன்னிருத்தி இருந்த (வெளியில் யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்காத) வழக்கத்தையும் பதிவு செய்துள்ளார். எந்த ஆணும், பெண்ணும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத, நமக்கெல்லாம் அதிர்ச்சியளிக்கக் கூடிய வழக்கம் அது. இப்படியான செறிவான கதையில் சமூகத்தை, அதன் மூளைமழுங்கிப்போன மூடக்கருத்துக்களை சாடும் ஒரு பாத்திரமாக வருபவர் காளியின் சித்தப்பா “நல்லுப்பையன்”. திருமணம், குழந்தை, சாதி என எல்லா நம்பிக்கைகளையும் நக்கலடிக்கும் ஒரு கலக்ககாரராக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவரது பாத்திரம்தான் இந்த படைப்பில் என்னைக் கவர்ந்த பாத்திரம்.

கிராம மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, உறவுகளுக்கிடையேயான மெல்லிய முடிச்சுகள், அற்புதமாக வாசிப்புத்தீனி என எல்லாவிதத்திலும் ஒரு நிறைவைத்தந்த படைப்பு. நாவலின் உச்சமான இறுதி அத்தியாயங்கள் (எனக்கு) கொஞ்சம் ஒட்டாமல், சினிமாத்தனமாக இருந்தது மட்டுமே ஒரு சின்ன உறுத்தல். மற்றபடி ஒரு அற்புதமான நாவல் “திரு.பெருமாள்முருகன்” எழுதிய “மாதொருபாகன்”.
காலச்சுவடு பதிப்பகம் – 190 பக்கங்கள் – ரூபாய்: 140/-