title


பள்ளிகொண்டபுரம்

 உடலிலும் மனதிலும் பலமில்லாத, சாமானியத்தனத்தின் பிரதிநிதியாக விளங்கும் அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்ததினத்தில் துவங்குகிறது ”பள்ளிகொண்டபுரம்” நாவல். அவரது வாழ்கையின் இறுதி நாற்பத்தி எட்டு மணி நேரங்களில் அனந்தன் நாயரின் மனவோட்டம் மூலமாக, அவரது வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, அதனூடாக அக்காலகட்டத்தை, சாமானியர்கள் மீது எவ்வித கருணையும் காட்டாத வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார் திரு.நீல.பத்மநாபன்.

.

பேரழகியான கார்த்தியாயினியை, விருப்பமின்றி மணக்கும் அனந்தன் நாயரின் தாழ்வுணர்ச்சி அதிகரிக்க, அவளது அழகே போதுமானதாக இருக்கிறது. அவர் அஞ்சும், சமயங்களில் ஆராதிக்கும் கார்த்தியாயினியின் அழகே அவர்கள் வாழ்வில் புயல் வீசுவதற்கான களம் அமைக்கிறது. கார்த்தியாயினியின் அழகால் கவரப்படும் “தகஸில்தார்” விக்ரமன் தம்பியால், அனந்தன் நாயருக்கு பதவி உயர்வுகள் கிடைக்க, அதற்கான காரணத்தை அனந்தன் நாயர் எளிதில் யூகிக்கிறார். அலுவலகத்திலோ, அதிகாரத்திடமோ அவர் காட்ட முடியாத கோபம், மனைவி மீது திரும்ப, ஒரு கட்டத்தில் அவர் பயந்தது அல்லது ஆழ்மனதில் விரும்பியது நடந்தே விடுகிறது. 41 நாட்கள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வரும் அனந்தன் நாயர் நுழைவது கார்த்தியாயினி நீங்கிச்சென்ற வீட்டில். மகன் பிரபாகரன் நாயர் மற்றும் மகள் மாதவிக்குட்டியுடன் தனித்து விடப்படும் அனந்தன் நாயர், தன் முழுவாழ்வையும் அவர்களுக்கெனவே செலவிடுகிறார். வயது வந்த மகள் மற்றும் மகனின் சமீபத்திய நட்புவட்டாரம் குறித்து அவர் கேள்விப்படும், காணும் விசயங்கள் அவருக்கு உவப்பாய் இருப்பதில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும், அவர்களுடைய எதிர்காலம் குறித்தும் தன் பிள்ளைகளிடம் அன்ந்தன் நாயர் பேசும் இரவே, அவருடைய இறுதி இரவாய் மாறுவதில் முடிகிறது இந்நாவல்.

*

நாவலின் மையக்கதாப்பாத்திரமாக வரும் அனந்தன் நாயரின் பார்வையிலேயே பெரும்பாலான சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்நாவலின் மிகப்பெரிய பலம் இதன் கூறுமுறை. திருவனந்தபுர வீதிகளையும், அதனூடே பிணைக்கப்பட்ட அனந்தன் நாயரின் நினைவுகளையும் மிகக் கச்சிதமான சொற்களால் சொல்லப்பட்டிருக்கும் விதம், திருவனந்தபுரத்தில் நாமும் அலைந்து திரிந்த உணர்வைத்தருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் இந்நாவலில் வெறுமனே நிலப்பரப்பாக காட்டப்படாமல், அவ்வூரின் தெருக்களும், கோவிலும், சிலைகளும் அனந்தன் நாயரின் வாழ்க்கைச் சம்பவங்களை அவர் நினைவிலிருந்து மீட்டெடுக்கும் கண்ணியாக அமைந்திருப்பது, அவருக்கிணையான பாத்திரமாக திருவனந்தபுரத்தையும் கருத வைக்கிறது.

இயல்பிலேயே நோய் வாய்ப்பட்டு அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அனந்தன் நாயர், மனதளவிலும் வலுவற்றவர். அவரின் தாழ்வுணர்ச்சியும் தன் மனைவிக்கு தான் எவ்விதத்திலும் தகுதியற்றவன் எனும் அவரது ஆழ்மனவோட்டமுமே, விக்கிரமன் தம்பியின் நோக்கத்தை, ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள வைக்கிறது. தொடரும் நாட்களில் இயல்பான அல்லது எப்போதுமிருக்கும் விசயங்களில் கூட குற்றம் கண்டு கார்த்தியாயினியை நோகடிக்கும் அனந்தன் நாயர், அவரைப் பிரிந்து செல்லும் முடிவை நோக்கி அவளைத் தள்ளுகிறார். அவ்வகையில், தன்னுடைய தாழ்வுணர்ச்சி எனும் பள்ளத்தை, தியாகத்தைக் கொண்டு நிரப்ப அவர் முயல்வாதக் கருதுகிறேன். 41 நாள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வருகையில், மனைவி இல்லாததை உணரும் போது, முதலில் அவருக்கும் வருத்தம் மேலிட்டாலும், நேரம் செல்லச் செல்ல அதை ஒருவகை விடுதலையாகவே உணர்கிறார். இந்நாவல் முழுவதிலும், அனைவரிடத்தும் அடங்கிய குரலில் பேசிப் பணிந்து செல்லும் அனந்தன் நாயர் தன்னுடைய குரூரத்தை வெளிப்படுத்துவது கார்த்தியாயினியிடம் மட்டுமே. நாவலின் இறுதிப்பகுதியில் அனந்தன் நாயரின் இருவித குணங்களும் அவரது பிள்ளைகளிடம் வெளிப்படுவதைக் காணாலாம்.

நினைவு தெரியுமுன்னே தன்னை நீங்கிப்போன அம்மாவிடம் மாதவிக்குட்டி கேட்ட கேள்விகள், தன் அம்மா மீதான அவளது கோபம், விலக்கம் அனைத்துமே அனந்தன் நாயருக்கு ஒருவித நிம்மதியைத் தருகின்றன. தான் கேட்க முடியாத கேள்விகளை, தன் ஆதங்கத்தை மகளாவது வெளிக்காட்டினாளே என்கிற குறைந்தபட்ச ஆசுவாசம்தான் அது. ஆனால், சற்றே நினைவு தெரியும்வரை அன்னையிடம் இருந்தவனும், நடைமுறைவாதி என தன்னைக் கருதுபவனுமான பிரபாகரன் நாயரின் பார்வை முற்றிலும் மாறானது. தன் அம்மாவின் தவறுக்கு முழுக்காரணம் அவளை அந்நிலையை நோக்கித்தள்ளிய தன் அப்பாதான் என அவனிடமிருந்து ஒலிக்கும் சொற்கள் ஒரு கோணத்தில் அனந்தன் நாயரின் மனசாட்சியின் சொற்களும் கூடத்தான். மகள் மூலம் தன் மனதுக்குக் கிடைத்த நிம்மதியை கொஞ்ச நேரம் கூட தங்கவிடாமல் குலைத்துவிட்ட மகனின் செயல் அவரை மேலும் விசனப்படுத்துகிறது. அவ்விசனத்துடனே அனந்தன் நாயரின் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.

*

அனந்தன் நாயரின் அத்தை குஞ்ஞுல‌ஷ்மி, தன் கணவனான சங்குண்ணி நாயரை நீங்கிச்செல்லும் நிகழ்வு, அனந்தன் நாயரின் சிக்கலுக்கு இன்னுமொரு பரிணாமத்தைத் தருகின்றது. அனந்தன் நாயரைப் போல தாழ்வுணர்ச்சி இல்லாத சங்குண்ணி நாயர், தன் மனைவி தன்னை நீங்கி இன்னொருவனிடம் போவதைத் தடுக்க காலில் கூட விழுகிறார். தான் குஞ்ஞுலஷ்மிக்கான சரியான துணை எனும் நம்பிக்கையில் விழுந்த அடியின் விளைவு அது. அதையும் மீறி கொச்சு கிருஷ்ண கர்த்தாவுடன் செல்லும் குஞ்ஞுலஷ்மிக்கோ தன் கணவன் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பது இன்னும் துயரமளிப்பது.

அனந்தன் நாயரின் அக்காவாக வரும் கல்யாணி அம்மாவின் பாத்திரப்படைப்பு முற்றிலும் மாறுபட்டது. மணம் முடித்து சில காலம் மட்டுமே வாழ்ந்தபோதும், அரவிந்தாக்‌ஷ குறுப்பு அவள் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிப்போகிறார். வேதாந்தியான அவரின் மறைவுக்குப் பின், அவரின் மகன் பாஸ்கரன் நாயரும் அவன் தகப்பன் வழியிலேயே பயணிக்கிறான். ஆனால், ”குருவை சோதித்துப் பார்த்து” தன் தகப்பன் செய்த தவறைத் தவிர்த்து, அவன் தன் குருவின் சொல்லுக்கிணங்கி திருமணத்துக்குத் தயாராவதில், அர்த்தப்படுகிறது கல்யாணி அம்மாவின் வாழ்க்கை.

*

இந்நாவலில் ”அணைக்க முடியுமுண்ணா தீய பத்தவைக்கணும்” என அனந்தன் நாயரிடம் கார்த்தியாயினி சொல்லும் இடம் ஒன்றுவரும். அது உண்மைதான். தன் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் தன்னால் அணைக்க முடியாத தீயைப் பற்றவைப்பவராகவே எனக்கு அனந்தன் நாயர் தெரிகிறார்.

.

நாவலின் இறுதிப்பகுதியில் வானம் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டிருக்கும், “பெயருக்குக் கூட ஒரு நட்சத்திரம் கூட இல்லாத இருண்ட சூனியமான ஆனால் பரந்த வானம்”. நாவலைப் படித்து முடித்தபின் அவ்வர்ணனை அப்படியே அனந்தன் நாயரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாகவே எனக்குத் தோன்றியது.

*

பள்ளிகொண்டபுரம்  (நாவல்) – நீல.பத்மநாபன் – காலச்சுவடு பதிப்பகம்.

#வாசிப்பு_2020

#பிடித்த_புத்தகங்கள்