title


காதல் பூதம்

என்னை எண்ணையாக்கி
என்னுள்ளே எரியவைத்து
முன்னம் முளைத்திருந்த
மூடத்தனம் முடித்த
ஒற்றைப் பொறி
நீ என் வாழ்வின் நெறி
காதல் தீயே
நீ என் கண்மணித் தாமரையே !

குடிக்கையில் உன் அருகிருக்கையில்
குளிக்கையில் உன்னை நினைக்கையில்
குளிரவைத்தாய்
சோகங்கள் மாசுகள் குறைய வைத்தாய்
உடலுக்குள் உதிரமானாய்
ஊற்றெடுக்கும் திரவத்தின்
வேரானாய் நீரே
நீயே நீரே !

உடல் இல்லாமல் உடனிருப்பாய்
உயிர் முழுக்க
நிறைவாய் நின்றாய்
புயலாய் சினந்தாலும்
ஆடிக்காற்றாய் எறிந்தாலும்
தென்றலாய் நாணி
தேவதை நீ நின்றாலும்
உனை நீங்காதிருக்க
தவம் கிடப்பேன்
வாசமுள்ள காற்றடி நீ
என் வண்ணத்தமிழ் மோகினியே !

அருவியாய் கடும் சொற்கள்
அறைந்து நான் இறைத்தாலும்
அமைதியையே அளிப்பாய் - பின்
அழகாய் வழி நடத்துவாய்
வண்ண மண்
வாச மண்
விழுந்த மண் - என்
வேர் தாங்கும் மண்
என் தடம் பதிந்த மண் - நீ
என்னுள் தடம் பதித்த பெண்
பொன்னான மண் - நீ
எனக்கான பெண் !

என்னுள் உனக்கு
எல்லையே இல்லை
நீ இல்லாமல் எனக்கு
யாவுமே தொல்லை
உன் நிழலுக்கும்
என் நெஞ்சில் அந்தமே இல்லை
உன் நினைவுதான் என் வேலை
ஒட்டுமொத்த உலகுக்கும்
ஒரே வானம் - என்
ஒட்டுமொத்த வாழ்வுக்கும்
நீதான் பிரதானம் !


ஐம்புலன் அடங்கும் காதலில்
ஐம்பூதங்களும் அடங்கும் உன்னுள்

நீ தேவதை !
என் காதல் தேவதை !

காதல் இம்சை !

துடித்துச் சிதறும்
ஒவ்வொரு துளிக் கண்ணீரும்

வெடித்துவிடத் துடிக்கும்
மௌன மொழிகளும்

உண்ண மறந்து
உணர்விழந்த வலிகளும்

உன் ஒருத்தியைத் தவிர
உலகமே மறந்து போய்
எங்கோ நிலைகுத்திப்போன
பார்வையுமாய்

மொழியறியா தேசத்தில்
சிக்குண்ட குருடன் போல
....

இன்னும் எப்படியெல்லாமோ
இனிமையாய்த்தான் இம்சிக்கிறதடி
காதல் !

உபயம்

அகண்ட கோவிலின்
கதவு துவங்கி
திரைச்சீலை வரை
மின்னிக்கொண்டிருந்தது
உபயமளித்தவர் பெயர்...

அம்மன் சிரித்துக்கொண்டிருந்தாள்
பாவம் சிற்பி !

ராட்டினம்

ஆசையா இருக்குடா
என ராட்டினம் ஏறினாய்...

இப்போது பார்
என்னைப் போலவே
ராட்டினமும் சுற்றுதடி
உன்னை !

நட்சத்திரப்பூ

மொட்டை மாடி
அமாவாசை இருட்டு
காற்றும் புகமுடியா
இடைவெளிவிட்டு நாம்

அறிவியல் பொய் - நான்
எப்படி ? - இது நீ

அமாவாசை இரவில்
என்னருகே நிலா நீ...

டேய்!
வெட்கப்பட்டு நீ சிரித்தாய்
செத்து விழுந்தன
நட்சத்திரங்கள் !

நிழல்

நீ விரும்பினாலும்
வெறுத்தாலும்
உன்னை தொடர்வதன்றி
வேறறியேன் தேவதையே
நான் உன்
நிழல் !

பிரிவு - Dedicated to Ram

காலப்பெருவெளி தன்
கணக்கை கூட்டிக்கொண்டேயிருக்க
ஞாலப்பெரும்பரப்பில்
நாமெல்லாம் சிதறலானோம் !

பனிக்குடத்தே அன்னை வசம்
அவள் வாசம் நம் சுவாசம்
பத்தாம் மாத பிறப்பில்
பிறந்தது " பிரிவு " !

கடற்கரை மணலை
கடத்திச் செல்லும் காலடி போல்
நம்மையும் எடுத்துக்கொண்டது
காலம் !

ஆறுகள் கடல் கலக்கும்
நியாயம் தான் !
வரும் வழியில் ஆவியாகும்
துளி வலி யாரரிவார் ?
அஞ்சியதுண்டு ...
அத்துளி போல் நீயோ ? நானோ?

காலத்தின் மூடியுள்ள கை விரியும்போது
பெரும்பாலும் ஆச்சர்யம் காத்திருக்கும்
எதிர்பாரா ஏதேனும் நடக்குமென
எதிர்பார்த்தே காத்திருப்போம்
காலம் ஒரு வித்தைக்காரன் !

பருத்தி வீரன் - ஒரு பார்வை

இயக்குனர் அமீர்ன் முந்தைய படங்களினால் நான் கொண்டிருந்த அமீர் மீதான் நல்லதோர் எண்ணம் ஒரு படி உயர்ந்தது "பருத்தி வீரன்" பார்த்த பின்.
ரகளையான கிராமத்து திருவிழா தொடரும் பழி வாங்கும் படலம் என அமர்க்களமாய் துவங்குகிறது படம்.

சாதியை காரணம் காட்டி ஒதுக்கப்பட்டு சண்டியராய் திரியும் வீரன் மீது முறைப்பெண் முத்தழகு கொள்ளும் காதலும் அதைத் தொடர்ந்து வரும் சம்பவங்களுமாய் நகர்ந்து திடுக் நிகழ்வுடன் முடிகின்றது படம்.

முத்தழகாக வரும் ப்ரியாமணி பக்கத்து வீட்டு கிராமத்து பெண் போல தேர்ந்த வசன உச்சரிப்பும் எதார்த்த நடிப்புமாக அசத்தியுள்ளார். அதிலும் வீட்டில் காதலுக்காக அவர் நடத்தும் திமிர் கலந்த போராட்டம் அருமை.
சித்தப்புவாக சரவணன். மனிதர் பட்டையை கிளப்பிவிட்டார்.இத்தனை திறமையான நடிகரா இவர் என ஆச்சர்யம் தருகிறார்.அற்புதம்.

முதல் மேட்சில் சென்சுரி , முதல் பந்தில் சிக்சர் இன்னும் எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம் கார்த்தியை.குடித்துவிட்டு படம் முழுக்க இவர் அடிக்கும் லூட்டியில் அசல் கிராமத்து சண்டியராகவே தெரிகிறார். மிக நல்ல துவக்கம் .

ஒளிப்பதிவும்,இசையும் பலம் கூட்டுகின்றன.யுவனின் இசையில் எல்லா பாடல்களும் கிராமத்து பாணியில் ஜொலிக்கின்றன.கிராமத்து குத்துப்பாடல்களிலும்,இளையராஜா பாடும் "அறியாத வயசு" பாடலிலும் நிறையவே பாராட்டலாம்.

சரியான பாத்திர தேர்வு, நல்ல கிராமத்து பின்னணி,தொய்வில்லாத திரைக்கதை என வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் இயக்குனர் அமீர்.

திணிக்கப்பட்ட சோகமோ,சறுக்கலோ .....இறுதிக்காட்சிகளைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. மொத்தத்தில் "பருத்தி வீரன் " தமிழ் சினிமாவின் முக்கிய பதிவுகளுல் ஒன்று.இயக்குனர் அமீர் மீண்டும் ஒரு முறை வென்று விட்டார் .

குருதி

மின்னல் வாளெடுத்து
இயற்கை வானத்தை வெட்டியது...

கொட்டியது இரத்தம்
மழை !

என் சிநேகிதியே

உன் நகங்களை
வெட்டி எறியும்போதெல்லாம்

முத்துக்களின் பெருமை அறியா
சிப்பியாகிறாய் நீ !