title


பரிணாமம்

கார் வாங்கின பின்னர், நடப்பதே பெரும்பாலும் அரிதாகிவிட்டது. சில சமயங்களில் நேரத்தின் அருமை கருதியும், பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளை சாக்கிட்டும், காரிலோ பைக்கிலோதான் பயணிப்பது வழக்கம். குறைவான படிக்கட்டுகள் இருந்தபோதும், ஊத்துக்குளி கதித்தமலைக்குக் கூட அடிவாரத்தில் இருந்து காரில்தான் செல்வோம். ஆனால் இன்று மாலை, கோவிலுக்கு செல்லும்போது, அடிவாரம் அடைந்தவுடன் கார்த்திக் படிக்கட்டில் நடந்து செல்லவேண்டும் என அடம் பிடித்தான். நாங்கள் அனைவரும் இறங்கி நடக்கலானோம்.
*
மென்காற்றுதான் இருந்தாலும் நன்கு வேகமாக வீசுக்கொண்டிருந்தது. குழந்தைகள் வேகமாக ஓட அவர்களுக்கிணையாய் நாங்கள் வேகமாய் நடந்து கொண்டிருந்தோம். பாதித்தூரம் கடந்திருப்போம். ”அருணா” என்று யாரோ ஒரு பெண் அழைக்கும் குரல் கேட்டு சற்றே நிதானித்தோம். அருணாவுக்கு நன்கு பழக்கமானவர் அவர். அவருடன் பேசிக்கொண்டே அருணா வர நாங்கள் நடக்கலானோம். நீண்ட நாட்கள் கழித்து பார்த்த ஒரு பரவசத்தில் அவ பல விசயங்களை பகிர்ந்து கொண்டு வந்தார். அதில் பெரும்பாலானவை அருணாவின் பால்யம் / பள்ளி சம்பந்தப்பட்டவை. அவர்கள் பேசிக்கொண்டே வர, தொந்தரவாயிருக்குமோ என சற்றே முன்னால் நான் நடந்து கொண்டிருந்தேன். இருந்தபோதும் அவர்கள் பேசியது எனக்கும் கேட்டது.
.
எவ்வளவுதான் நாம் வளர்ந்திருந்தாலும் நம்முள் நம் பால்யம் உயிர்ப்புடன் தான் இருக்கும். ஏதேனும் சம்பவங்கள் அல்லது உரையாடல்களால் அவை வெளிப்படும் தருணம் அற்புதமானது. இன்று அந்த அக்காவின் வார்த்தைகளில் அருணாவின் பால்ய / பள்ளி நினைவுகள் மீண்டெழுந்து வந்தன. அதில் பல சம்பவங்கள் ஏற்கனவே அருணா எனக்கு சொன்னதுதான். இருந்தபோதும் இன்னொருவர் அதை சொல்லுவதை நான் கேட்பது இதுவே முதல்முறை. அதில் ஒரு சம்பவம் அருணா பள்ளிக்கு கிளம்பும் சமயத்தில், ஒருவர் தலைவாரிவிட, அருணாவின் பாட்டி அவளுக்கு ஊட்டிவிட, அவள் படிப்பாளாம் (ஆத்தாடி! நாமெல்லாம் கிளாஸ்ல உக்காந்தே டிபன் போசியை தொறந்துபாத்த பரம்பரை). இந்தக்கதையை அருணா என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள். அதனால் மெல்லிய சிரிப்புடன் நான் திரும்பிப்பார்த்தேன்.
.
அருணா மீண்டும் அந்த காலத்துக்கே (தன் நினைவுகள் வாயிலாக) சென்ற மாதிரி இருந்தது. அங்கிருப்பவர் எவரையும் பார்க்காமல், தன் நினைவுகள் தந்த, பரவசம் கலந்த நெகிழ்ச்சியில் இருந்தாள் அருணா. ஏதாவது சொல்ல வேண்டும் போல் தோன்ற அவள் முகம் பார்த்தேன். அதில் தெரிந்தது என் மகள் முகம்.
*
பால்யத்தின் நினைவுகள் மேலெழும் தருணம் இயல்பாகவே மிக அழகானது. இன்றைய மாலைப் பொழுதின் ரம்மியத்தால் அது இன்னும் இன்னும் அழகாய் மாறியது.
:)

No comments: