title


கொடக்கோனார் கொலை வழக்கு

ஒரு மனிதனையோ அல்லது ஒரு குடும்பத்தையோ முன்னிருத்தி, அதன் மூலமாக நாம் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கச் செய்யும் நாவல்கள் ஒருவகை என்றால், ஒரு காலகட்டத்தை எடுத்துக்கொண்டு அக்காலகட்டத்தில் ஒரு நிலப்பரப்பை மையப்படுத்தி பல மனிதர்களின் வாழ்க்கைக்குள் நம்மையும் ஒரு மெளன சாட்சியாக்கும் நாவல்கள் இன்னொரு வகை. திரு. அப்பணசாமி அவர்கள் எழுதி ”எதிர் வெளியீடு” பதிப்பித்திருக்கும் “கொடக்கோனார் கொலை வழக்கு” என்னும் நாவல் இரண்டாம் வகையைச் சார்ந்தது.
*
டவுன் பஜாரில் உள்ள ஏகாம்பர முதலியார் ஜவுளிக்கடையில்தான் நாவலின் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகின்றனர். நாவல் தலைப்பின் நாயகனான கொடக்கோனாரை கொலை செய்யும் முயற்சியில் துவங்கும் நாவலில், இறுதியான சில பக்கங்களில்தான் வழக்காக மாறும் கொலை அரங்கேறுகிறது. இடைப்பட்ட பக்கங்களில் நிறைந்திருப்பதெல்லாம் 1980களின் வாழ்க்கை.. பலதரப்பட்ட மனிதர்களின் வலியும் களிப்பும் நிரம்பிய வாழ்க்கை. மில் வேலைக்கும் தீப்பெட்டி ஆபிஸ் வேலைக்கும் போகும் நடுத்தர வர்க்க மக்களுக்கான பல நவ நாகரீக கடைகளுக்கு மத்தியில், கரிசல் காட்டு விவசாய சம்சாரிகளின் தேவைக்காய் இருக்கும் சிறுகடைகளில் ஒன்றுதான் ஏகாம்பர முதலியார் ஜவுளிக்கடை. ஜவுளிக்கடை திண்ணைதான் பல முக்கியஸ்தர்களின் ஜமா. இயல்பான உரையாடல்களாலும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் உரிமையான பேரங்களாலும் நிரம்பி வழியும் திண்ணை அது. மாறி வரும் நாகரீக கூத்துகளுக்கு மத்தியிலும் எளிய மனிதர்களுக்கான ஒரு பற்றுக்கோல் இருப்பதற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது அந்த ஜவுளிக்கடை.
.
கதையில் சொல்லப்படும் பல மனிதர்களின் வாழ்க்கையில் நான் மிகவும் நெருக்கமாக உணர்ந்தது “உமர் சாயிப்பின்” கதையைத்தான். கடலங்குடி ஜமீன் என சொல்லும் அளவுக்கு பணமும் புகழும் கொண்டது வாப்பிசட்டப்பாவின் குடும்பம். வாப்பிசட்டப்பாவின் செல்லப்பேரன் உமர்சாயபு. துணிகளில் பொத்தான்களுக்கு பதிலாக விலை உயர்ந்த கற்களைப் பதித்துக்கொள்ளும் அளவுக்கு செல்வம் மிகுந்திருந்த கடலங்குடி ஜமீனின் வாரிசுகளில் ஒருவரான உமர்சாயபு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைச்சுமையாய் துணிகளை சுமந்து சந்தைகளில் ஜவுளி வியாபாரம் செய்து கழிக்க நேர்ந்ததில் இருக்கிறது வாழ்க்கையின் விசித்திரங்கள்.
.
அதைப்போலவே, தலைச்சுமை வியாபாரியாய் தன் வாழ்க்கைத்துவங்கும் ஏகாம்பர முதலியார், ஜவுளிக்கடை அதிபராகிறார்; அவரே தன் வாழ்வின் அந்திமத்தில் யாரும் எதிர்பாரா வகையில் மீண்டும் தலைச்சுமை வியாபாரியாய் அலைய நேர்வதில் இருக்கிறது காலத்தின் சுழற்சி கணிக்க முடியாதது எனும் உண்மை.
.
பலதரப்பட்ட மனிதர்கள் உலவும் நாவலில் நான் சுவாரசியமான இரண்டு கதாபாத்திரங்களாகக் கருதுவது கோமளவண்ணனையும், ஏகாம்பர முதலியாரின் மூத்த மருமகளையும்தான். பொதுவாக, பிறந்தவீட்டுப் பெருமை பேசும் பெண்கள்தான் அதிகம்; அதிசயமாய் புகுந்த வீட்டின் பெருமையை அங்கீகரிக்கும் பெண்களும் உண்டு. ஆனால், தனம் இந்த இரண்டு விதத்திலும் சேராதவள். புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் மீது குற்றம் சொல்லிக்கொண்டும்; பிறந்த வீட்டில் புகுந்த வீட்டின் குறைகளை முன்னிருத்திக் கொண்டும் அவள் அடைய விரும்புவது, அக்கரையிலும் சரி இக்கரையிலும் சரி தன் முக்கியத்துவத்தை மட்டும்தான். சில பக்கங்களே வந்தாலும் இடத்துக்குத் தக்கபடி மாறிக்கொள்ளும் அவளின் இயல்பு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
.
தான் விரும்பும் செயல்களை செய்துகொண்டு, தன் மனம் விரும்பும் வாழ்க்கையை வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதிலும், புரிந்துகொண்டோ அல்லது திருத்த முடியாமலோ, அவன் செயல்களை ஏற்றுக்கொள்ளும் குடும்பம் அமைந்தவர்கள் பாக்கியவான்கள். கோமளவண்ணனுக்கு வாழ்க்கையே சினிமாதான்; சினிமாவுக்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்துவிட்ட அவன் ப்ரியத்தை பெற்றவர்களும் மனைவியும் புரிந்துகொண்டுவிட, குடும்பம் குழந்தை என்றான பின்னரும் தன் ரசனைப்படி அமைந்த கோமளவண்ணன் வாழ்வது கிட்டத்தட்ட ஒரு connoisseur-ன் வாழ்க்கை.
*
இவை மட்டுமல்ல, இந்த நாவல் காட்டும் வாழ்க்கையும், மனிதர்களும் காலகட்டமும், முக்கியமாக கொடக்கோனார் கொலையும் அதன் விளைவுகளும் என அனைத்து அம்சங்களும் அருமை. ஒரு வாசிப்பின் வழியே இந்த நாவல் நமக்கு தானமிட்டிருப்பது பலதரப்பட்ட வாழ்க்கையை அருகிருந்து பார்த்த ஒரு அனுபவத்தை.
.
அனுபவங்களால் அமைகிறது நம் வாழ்க்கை...
 :)

No comments: