title


தேடல்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவரும்
எதையாவது
தேடித் தேடியே
சலிப்படைகிறோம்...

சலிப்பதேயில்லை
தேடல் !

நான் யார்?

எல்லோரும் சொல்கிறார்கள்...

என் நடை
தகப்பனைப் போன்றதாம்..

கோபத்தில்
பாட்டன் முகமாம்..

உறங்கும் போது
பாட்டியின் சாயல்..

தூரத்து மாமன் போன்ற
அசிங்க அழுகையாம்..

அழகுப் புன்னகை
அன்னையின் அச்சாம்..

இப்படி என்
எல்லாவற்றிலும்
தெரிவது யாராவதானால்

நான் யார்? யார் நான்?

நானே தானா?
பல நான்களின் தொகுப்பா?

கழைக் கூத்தாடி

ஆடுபவன் அவன்
ஆடுவது...
ஆட்டுவிப்பது...
பசி !

கொடை

வெயில்...
மரம் பொழியுது நிழல்
வெட்டுபவனுக்கும் சேர்த்து !

ஈழத்தமிழர்கள்

சொத்துக்களை விட்டு வந்தோம்
சொந்தங்களை நம்பி வந்தோம்
சொந்தமான சொத்து போச்சு
இன்று
சொந்தங்களே சொத்தாய் ஆச்சு !

விற்பனை

வாங்கிப் போனார்கள்
வாசனையை மட்டும்
வாடிப்போயின
பூவும்
பூக்காரி வயிறும் !

வறட்சி

மரணித்தது மழை
மழிக்கப்பட்டது தலை

தென்னை மகன்கள்!

முதியோர் இல்லத்தில் பெற்றோர்

மரம் தாங்கும்
வேர் வலி
விழுதுகள் உணர்வதில்லை !

வேர் விரும்பா
விழுதுகள் வெறுக்க
பாவம்
வேர்கள் விரும்பவில்லை !

வானம்

கொத்துப் பழங்களும்
கொண்டாடும் கூட்டமும்
வேளைக்கு வேண்டியவையும்
எப்படி இருப்பினும்
எத்தனை கிடைப்பினும்
மகிழாது பறவை
கூண்டைத் திறக்கும் வரை...

நானும் ஓர் பறவை
வேண்டுவது
வசதியல்ல வானம் !

சுகம்

தாய்மைக்கும்
காதலுக்கும்
மட்டுமே சாத்தியம்
சுமப்பது சுகம் !

காதல்

மடையனை மகானாக்கும்
வரத்துக்கும்

மகானை மடையனாக்கும்
சாபத்துக்கும்

ஒரே பெயர் "காதல்"