title


சாயாவனம் (நாவல்) – பகிர்தல்

நாகரீகமாகிவிட்ட உலகின், எல்லா மூலைகளிலும் தொழிற்சாலைகள் பெருகிக்கிடக்கின்றன, பயணங்களின் போது பெயர் தெரியாத ஏதேனும் ஒரு கிராமத்தில் தொழிற்சாலை புகைபோக்கிகள் நச்சுப்புகை உமிழ்வதை நாம் கண்டிருக்கலாம். அந்த தொழிற்சாலைகள் எப்போது / எப்படி உண்டாகின ? அதற்கு முன்பு அந்த நிலம் எப்படி இருந்திருக்கும் ? அது நல்ல விளைச்சலைத் தரும் விளைநிலமாகக் கூட இருந்திருக்கலாம்.

எனில், தொழிற்சாலை உண்டானபின் அந்த நிலங்களின் விளைச்சல் முற்றிலுமாய் நின்று போய்விட்டதே... அதை நம்பியிருந்த குடும்பங்களின் கதி என்னவாயிருக்கும் ? நிலத்தை நம்பியிருந்த குடும்பங்களிலாவது மூன்றாம் தலைமுறையினர் எவராவது அந்த தொழிற்சாலையின் கடைநிலை உழியராகும் பேறு பெற்றிருக்கலாம். ஆனால் அந்த நிலத்தின் விளைச்சல் முற்றிலுமாக நின்றுவிட்டதே, அப்படியானால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு உணவுப்பொருள் குறைந்திருக்குமே அதை, அந்த நின்றுபோன விளைச்சலை சரி செய்யவழி என்ன?

இப்படியெல்லாம் நாம் சிந்தித்து இருக்கலாம்... மாறாக இவற்றை கண்டும் காணாமலும் இருந்திருக்கலாம். “சா.கந்தசாமி” அவர்கள் எழுதியுள்ள “சாயாவனம்” என்னும் நாவல் ஒரு வனம் அழிக்கப்பட்டு அதில் ஒரு சர்க்கரை ஆலை கட்டப்படும் நிகழ்வை விவரிக்கின்றது.

மூங்கில், தேக்கு, சீமைக்கருவேலம் உள்ளிட்ட மரம் செடிகொடிகள், சிட்டுக்குருவி, காகம், மைனா என பலவகையான பறவையினங்கள் என எல்லாமும் கலந்து நல்லமுறையிலிருந்த ஒரு வனம் மனிதனின் சுய நலத்தை முன்னிட்டு அழிய நேரிடும் அவலத்தை இந்நாவல் மிகச்சிறப்பான முறையில் பதிவுசெய்துள்ளது.

பலநூறு வகையான மரங்கள் அடர்ந்திருந்து, பல வகைகளில் மக்களுக்கு பயன்பட்ட அவ்வனத்தை இளமையின் வேகமும், முதுமையின் அனுபவமும் கூட்டணி அமைத்துக் கொண்டு அழித்துமுடிப்பதும் அதன்பின் ஒரு கட்டத்தில் வனத்தையே நெருப்புவைத்து பொசுக்குவதுமாக அழிவின் கோரமுகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வாரக்கணக்கில் நெருப்பு அந்த வனத்தை உண்டுமுடித்து சாம்பலாகி உமிழ்ந்த காட்சி மிக்க மனவருத்தம் உண்டாக்கியது.

இறுதியாக தொழிற்சாலை உண்டானது. அதுநாள் வரை இலவசமாகவே வனத்திலிருந்து பெற்று வந்த புளியை அவ்வூர் மக்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் நிலையுடன் நாவல் முற்றுப் பெறுகின்றது. மிக மிக தேர்ந்த நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நாவல் : சாயாவனம் (நாவல்)
எழுத்தாளர் : சா. கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு (கிளாசிக் வரிசை நாவல்)
பக்கங்கள் : 199
விலை : ரூபாய் 150.00

வனம்

ஆயிரம் நபர்களும்
அதிநவீன ஆயுதங்களும் கூடி
பெரும் வனத்தை
மாதங்களில் அழித்துவிடலாம் !

கோடி நபர்கள் கூடினாலும்
ஆனானப்பட்ட ஆயுதங்கள்
துணை நின்றாலும்
பல வருடங்களாகும்
ஒரு விதை மரமாக !

விடியலில் நகரம்

எல்லா மனிதர்களைப் போலவே
நகரங்களும் தூங்கும் போது
அழகாய்த்தான் இருக்கின்றன,

விழித்த பிறகு தான்
அழகிழந்து அமைதியிழந்து
விகாரமாகின்றன !

மனிதர்களைப் போலவே !

மனிதன் வளர்ந்த கதை

நமக்குக் கற்றுத்தரும்
தேவதைகளாகத்தான்
பிறக்கின்றன குழந்தைகள்...

நாம்தான் கற்பித்து
பாவம் அவர்களை
மனிதர்களாக்கி விடுகிறோம் !

பெசன்ட் நகரில் ஒரு அதிகாலை – 3

ஏறத்தாழ 6 மணி இருக்கும், நாங்கள் நால்வரும் கடலின் முன்பு நின்றிருந்தோம். இன்னும் விடியாத, வைகறை முடியாத கலக்கமான வானம் சாம்பல் நிறத்தில் இருந்தது. கடல் தண்ணீர் சற்றே வெளுத்துப் போன சாம்பல் நிறத்தில் இருந்தாலும் அலைகள் மட்டும் சற்றே வெண்ணிறமாக இருந்தது. சீற்றத்துடன் வந்து பாதம் தடவிப் போகும் அலைகள் குதூகலமாய் ஒலியெழுப்பியபடி விளையாடும் சிறுவர்களை நினைவூட்டியன.

அக்கம் பக்கத்தில் பெரிய அளவு கூட்டம் இல்லாததால் நன்கு அமைதி நிலவியது. ஈர மணலில் புதையப் புதையப் பாதங்கள் அமிழ்ந்திருந்தன. அடிவானத்தின் வர்ணம் மெல்ல மெல்ல மாறத்துவங்கி விடியலின் வரவினைக் கட்டியம் கூறி உரைத்தது. கடலும் வானத்துக்கு நிகராக விடியலை வழிமொழிந்தது. கடல் கொஞ்சமே கொஞ்சம் வெளுத்துப் போன தன் சாம்பல் நிறத்துக்கும் விடை கொடுக்கத் துவங்கியது. கடலலைகளின் வெண்ணிறம் நேரத்தைப் போலவே அதிகமாக ஆரம்பித்தது.

கண்கள் எல்லைகளைக் கடக்க விரும்பி விரியத்துவங்கின. ஒரு உன்னத அனுபவத்தை போதுமான அளவு அள்ளிப் பருகத் தயாராகின. விடியல் இன்னும் சில நொடிகளில் வந்துவிடும் என உள்மனம் சொன்னது. அதை ஆமோதிப்பது போலவே வானில் ஆங்காங்கே பரவிக் கிடந்த கருமையும் காணாமல் போகத்துவங்கியது. அதைப் போலவே சுற்றுப்புறங்களும் விடியலுக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டன. நகரம் தன் அமைதியை இழப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் கனகச்சிதமாக செயல்படலாயின. நகரம் அதுவரை தான் அணிந்துவந்த அமைதியையும் அழகையும் கைவிடத்தயாராகிக் கொண்டிருந்தது. எந்த நேரத்தில் விடியல் சட்டென்று புலப்படுமென்ற ஆர்வம் மிகுதியாகிக் கொண்டேயிருந்தது.

ஆனால் இயற்கை மனிதனை விடவும் எவ்வளவோ மேலானது. இதை தன் எல்லா அசைவிலும் காலந்தோறும் காட்டிக்கொண்டேயுள்ளது. அதைத் தான் அன்றும் நிலைநாட்டியது. என்னதான் விழியசைக்க மறந்து காத்துக்கிடந்தாலும் முற்றிலும் விடியல் வந்த தருணத்தை என்னால் வரையறுக்க முடியவில்லை. யாரால் தான் முடியும்? வானம் நன்கு வெளுத்திருந்தது. கடல் நீலம் பாரித்திருந்தது பால் பொங்குவது போல கடலலைகள் பொங்கி வந்தன. காற்றும் சென்னைக்கென வைத்திருக்கும் சிறப்பு முகத்தைக் காட்டத்துவங்கியது (வேறொன்னுமில்ல வெய்யில் அடிச்சதுப்பா..). வழக்கம்போல் தன் இயல்புக்கு கடற்கரையும் நகரமும் வந்திருந்தன. சிறிது நேரம் கடலலைகளில் விளையாடிவிட்டு வீடு திரும்பினோம்.

வரும் வழியில் ஒரு சின்னக் கடையில் குடித்த சூடான தேநீர் தந்த சுகத்தை சொல்லிப் புரியவைக்க என்னால் முடியவில்லை. வெற்றிகரமான எங்கள் பயணம் காலை 7: 30 மணிக்கு நாங்கள் வீடடைந்ததும் முற்றுப்பெற்றது.

----------முற்றும்----------

பெசன்ட் நகரில் ஒரு அதிகாலை – 2

நாங்கள் பெசன்ட் நகர் கடற்கரையை அடையும்போது மணி 5:45 இருக்கும். திட்டுதிட்டாய் இருட்டு கொட்டிக்கிடந்தது. கடலலைகளின் இரைச்சல் மட்டுமே எங்கோ தொலைவில் ஒலிப்பது போல் கேட்டது. வண்டிகளை நிறுத்திவிட்டு ஒரு சிறு நடைபயிற்சிக்கு ஆயத்தமாகும் போதுதான் கவனித்தேன், அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கூட ஏராளமான மக்கள் “வாக்கிங்” சென்றுகொண்டிருப்பதை. அதிலும் பெரும்பான்மை அளவு இருந்தவர்கள் முதியவர்கள் என்பது நிஜமாகவே ஆச்சர்யம் தந்தது. இளைய வயதினர் கூட எழுவதற்கு சிரமப்படும் அந்த அதிகாலை வேளையில் எதையும் பொருட்படுத்தாமல் நடக்கும் அவர்களைப் பார்க்கப் பார்க்க ஆனந்தமாய் இருந்தது.

அதிலும் வயதான தாத்தா ஒருவர் ஒரு கையில் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு மறுகையில் மிக மிக ஆதரவுடன் தன் மனைவியை அழைத்துச் சென்ற காட்சி எனக்கு வாழ்வின் உன்னதமான தருணங்கள் ஏராளமிருப்பதை உணர்த்தியது.

மெல்ல நடக்கத்துவங்கினோம். வெயில் கொளுத்தும் சென்னையின் அதிகாலைக் காற்று மிக மென்மையாக இருந்தது. முதன்முதலாய் மென்காற்று ஆடைக்குள் ஊடுருவியதும் எடுத்த நடுக்கம் உடல் முழுவதும் பரவலானது. துவக்கத்தில் சற்றே கலக்கமூட்டிய மென்குளிர்காற்று பழகியதும் நல்ல சுகம் தந்தது.

திரும்பிய பக்கமெல்லாம் மெல்லியதாய் இருள் சூழ்ந்திருந்தது. மூச்சை நன்றாக இழுக்கும் போதெல்லாம் அதிகாலைக் காற்று நுரையீரலை சுத்தப்படுத்துவதாய் ஒரு பிரேமை உண்டாவதை என்னால் உணரமுடிந்தது. ஒரு நீளமான கோட்டைப் போல் அமைந்திருக்கும் பெசன்ட் நகர் பீச்சின் நடைபாதையில் நாங்கள் நான்கு பேரும் நடக்கத்துவங்கி இருந்தோம். அந்த நடைபாதை ஏறக்குறைய 1 – 1.5 கி.மீ தூரம் கொண்டது. பேசிக்கொண்டே நடந்ததில் தூரம் பெரிய விசயமாகப் படவில்லை. என்னதான் பேச்சில் லயித்திருந்தாலும் நாங்கள் நால்வருமே இயற்கையின் அழகையும் காணத்தவறவில்லை.

குடும்ப விசயங்கள், பணி மற்றும் தொழில் நிமித்தமான பகிர்தல்கள், வருங்காலம் பற்றிய கனவுகள் இப்படியாக துவக்கமும் முடிவும் ஒரே புள்ளியாக இல்லாமல் ஒரு அமீபாவின் உடலைப் போல நீண்டுகொண்டிருந்தது பேச்சு. பேச்சினூடேதான் நால்வரும் கவனித்தோம், நடக்கத்துவங்கின இடத்துக்கே மீண்டும் வந்துவிட்டதை. அதுமட்டுமின்றி விடியலுக்கான நேரம் நெருங்கி விட்டதைப் போன்ற அறிகுறிகளும் தென்படத்துவங்கின. தரையில் நீண்ட நடையை முடித்துக்கொண்டு, மணலில் கால் புதையப் புதைய கடல் நோக்கி நடக்கலானோம்.

- தொடரும்

பெசன்ட் நகரில் ஒரு அதிகாலை - 1

” என்ன சகல, நாளைக்கு காலைல நேரத்துல சூரியோதயம் பார்க்க பெசன்ட் நகர் போலாமா ?“ என கேட்டபடி என்னைப் பார்த்தார் என்னுடைய சகலை ( சகலை - மனைவியின் அக்கா அல்லது தங்கையின் கணவர்).

2009 நவம்பர் மாதத்தின் கடைசி சனிக்கிழமை சென்னை TTK சாலை, ”Sachin Ka Dhabha” வில் அமர்ந்து தந்தூரி சிக்கனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தவன் கலக்கமாய் பார்த்தேன். பொதுவில் எனக்கும் இந்த மாதிரியான விசயங்களில் ஆர்வமிருந்தாலும் விடுமுறை தினங்களில் அதிகாலை என்பதே 9 மணிக்கு மேல் தான் என்பது என் மற்றும் என் மனைவியின் அரிய கண்டுபிடிப்பு. நிலைமை இப்படி இருக்க ”ஞாயிறு அதிகாலை சூரியோதயமா...” என அரண்டாலும் குலசாமியை வேண்டிக்கொண்டு “அதுக்கென்ன சகல, தாராளமா போலாமே” என பலியாடு ரேஞ்சுக்கு தலையாட்டி வைத்தேன்.

அன்றிரவு வீடு திரும்பினதும், “மும்பை எக்ஸ்பிரஸ்” படம் மற்றும் பேச்சு இப்படியாக இரவு உறங்குவதற்கு மணி 1 (அதிகாலை ?!) ஆகியிருந்தது.

சரி, ஆன நேரம் ஆயிடுச்சு.. இன்னும் சித்த நேரம் பேசிட்டே இருந்தா விடியக்காத்தால ஆயிடும்...பீச்சுக்கு போய் SUNRISE இல்லாட்டி BRU பாத்துட்டு வந்திடலாம்னு யோசனை பண்ணி திரும்பிப் பார்த்தா எல்லாரும் பாயை விரிச்சு போட்டு படுத்து தூங்க ஆரம்பிச்சுட்டாங்க.

இவ்வளவு தூரம் ஆனதுக்கப்புறம் நாம சும்மா இருந்தா சரிப்படாதுன்னு நானும் படுத்து தூங்கிட்டேன். ஆனா பாருங்க 5 மணிக்கு நான் அலறி அடிச்சு எழுந்து பாத்தா அம்புட்டு பேரும் ரெடியா நின்னாங்க.

பீச்சுக்கு போறதால குளிக்கிற தொந்தரவு இப்பத்திக்கு இல்லைன்னு சந்தோசப்பட்டுட்டு பாத்ரூமுக்குள்ளார போறப்பவே சீக்கிரம், சீக்கிரமுன்னு அவசரப்படுத்தினா என் தர்மபத்தினி. சரி சரி “சிங்கம் தூக்கத்துல சிக்கினா சிட்டுக்குருவி கூட தொட்டு விளையாடச் சொல்லும்” னு நெனச்சுகிட்டு அவசர அவசரமா பல்லு விளக்கி, மூஞ்சி கழுவி, துணியெல்லாம் மாட்டி கிளம்பும்போதே கெடியாரம் மணி 5:30 ன்னு காட்டுச்சு.

வீட்ட பூட்டிட்டு, சகலையும் அவரு வீட்டுக்காரம்மாவும் ஒரு வண்டியிலயும், நானும் என் வீட்டுக்காரம்மாவும் இன்னொரு வண்டிலயும் “பெசன்ட் நகர்” கிளம்பினோம்.

- தொடரும்

மழை

ஒரு மிகப்பெரிய நகரத்தை
அதன் அகன்ற சாலைகளை
நெடிதுயர்ந்த கட்டிடங்களின்
வெளிப்புறத்தை

தூய்மையாக்குவதென்பது
இயலாத காரியம்...

அதை எளிதாக...
மிக எளிதாக
செய்து முடிக்கின்றது
மழை

54 கி.மீ / லிட்டர்

கடந்த சனிக்கிழமை (28-11-2009) என்னுடைய வண்டியை சர்வீஸ் செய்ய வேண்டிய கெடு. எனவே பக்கத்திலிருக்கும் ”யமஹா” நிலையத்துக்கு சென்றிருந்தேன்.

நான் சென்றிருந்த நேரம் கூட்டம் மிக குறைவாக இருந்ததால் குறைகளை கேட்க வருபவரிடம் இயல்பாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவான குறைகளை கூறியபடியே வந்தவன் பின்னர் தான் கவனித்தேன் எனக்கு அருகிலேயே என் வண்டியைப் போலவே ஒரு புத்தம் புதிய ”யமஹா க்ளேடியேட்டர்” இருந்தது.

சரி புதிய வண்டியாச்சே மைலேஜ் பத்தி விசாரிக்கலாமென்று அவரிடம் பேசினேன்.

“அண்ணா, இது யாரோட வண்டி ?”

“என்னுது தான் சார்”

“ஓ, அப்படியா? புத்தம் புதுசா இருக்கு..”

“ஆமா சார், கொஞ்ச நாள் முன்னாடி தான் எடுத்தேன்”

“ஓகே ஓகே மைலேஜ் எவ்வளவுண்ணா தருது ?”

சற்றே யோசித்தவர் சொன்னார்...

“அதுக்கின்னா சார், 54 தருது, சூப்பர் என்ஜின், பக்கா பிக்கப், டிஸ்க் பிரேக், ஆட்டோ ஸ்டார்ட் ...... ” என்றேல்லாம் சுமார் 15 நிமிடங்கள் விவரித்தார்.

அதன் பின்னர் சற்று நேரம் பொறுத்து கிளம்பும் முன் மீண்டும் ஒருமுறை அந்த வண்டியை பார்த்தவாறே கிளம்ப எத்தனித்தவன் எதேச்சையாக ஸ்பீடா மீட்டரை பார்த்தேன்.
அதிர்ந்தே போனேன். அந்த வண்டி மொத்தமாகவே 6 கி.மீ தான் ஓடியிருந்தது.

மொத்தமாக 6 கி.மீ மட்டுமே ஓடியிருந்த அந்த வ்ண்டிக்கு அவர் கொடுத்த பில்டப்பை எண்ணி நொந்தவாறே வீடு திரும்பினேன்.