title


அஞ்சலி - விஜயகுமார் D


24/9/2008 புதன் காலை விஜய் இறந்து விட்டானாம், அதுவும் தற்கொலை செய்து கொண்டானாம், புதன் மாலை நண்பர்கள் வாயிலாக நான் அறிந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.

நானும் அவனும் ஒரே கால கட்டத்தில் கோவை PSG பொறியியல் கல்லூரியில் வேறு வேறு பிரிவுகளில் படித்த போதிலும், அவன் எங்களுடன் நெருக்கமானது " TCS ILP @ NOIDA" வில் தன். (ILP - டாடா குழுமம் தன் புதிய பணியாளர்களுக்கு நடத்தும் 2 மாத பயிற்சி முகாம்). ஒரு சின்ன சிரிப்பில் துவங்கிய உறவு, பின்பு சிரிப்பாய் தொடர்ந்தது. எங்கள் குழுவிலேயே இளையவன் விஜய் தான். அவனை நாங்கள் என்னதான் ஓட்டினாலும் மனதில் தம்பி என்ற உணர்வே இருந்தது.எவ்வளவு ஓட்டினாலும் என்னதான் திட்டினாலும் முகம் கோணாமல் சிரித்துக்கொண்டே இருப்பான். எங்களுல் அரிதாக கருத்து வேறுபாடுகள் வந்த போதிலும் மனதறிந்து யாரும் யாரையும் காயப்படுத்தியதில்லை.

அங்கிருந்த 2 மாதங்களும் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியை நாங்கள் (விஜய், அருண், பரத், ப்ரனேஷ், சதிஷ், நான், அண்ணாமலை, சேது மற்றும் டேஃப்) அனைவரும் இணைந்தே கழித்திருக்கிறோம். பயிற்சியில் இரு நபருக்கு ஒரு கணினி என ஒதுக்கப்பட்ட போதெல்லாம் நானும் அவனுமே பெரும்பாலும் இணைந்திருக்கிறோம். அதில் நான் இசை கேட்பேன் அவன் நண்பர்களுடன் "சாட்" செய்வான். இடையிடையே அவனை நான் தொந்தரவு செய்த போது அவன் சலிப்புடன் சொன்ன வார்த்தைகள், அவன் ஆங்கிலத்தில் உரையாடுவதை "வாட் யா?" , "டெல் யா?" என ஓட்டியது இப்படி எல்லாமே இன்னும் நினைவில் இருக்கின்றது. அவனை நாங்கள் விஜய் என்று அழைத்த தருணங்கள் மிக குறைவு. "மாமா" என்று தான் அழைப்போம். மொழியறியாத வட இந்திய நண்பர்களும் மாமா என்று அழைத்ததும் நினைவிலிருக்கிறது.

2 மாதம் கழிந்து விஜய் மட்டும் புவனேஸ்வர் செல்ல நாங்கள் சென்னை திரும்பினோம். டெல்லி - சென்னை வந்த அந்த 36 மணி நேரங்களும் அவனை முன்னெப்போதும் இல்லாத படி அதிக முறை நினைத்திருப்போம். அவனில்லாத வெறுமையை உணரும் வண்ணம் 2 மாதமும் இணைந்திருந்தான் விஜய். நாங்கள் சென்னை வந்த 2 மாதம் கழித்து விஜயும் சென்னைக்கு மாற்றலாகி வந்தான். அதன் பின் சில முறை நேரில் சந்தித்திருக்கிறேன். குறுஞ்செய்தி, மின்னஞ்சல், தொலைபேசி உரையாடல் என பல வழிகளிலும் மிகச் சில முறைகள் தொடர்பு கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவன் வலிகளை பகிர்ந்ததாக நினைவில்லை.

திருமணமான எங்கள் நண்பன் வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் அவனை கடைசியாக பார்த்தேன் அப்போதும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தான். அவன் எங்களுடன் பழகத் துவங்கி ஒரு வருடம் முற்றுப் பெற்ற நிலையில் அவன் வாழ்வை முடித்துக் கொண்டான். இது தான் காரணம் என எதுவும் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் விஜய் நல்லவன் , மிக நல்லவன். இந்த முட்டாள்த் தனத்தினால் அவன் வேண்டுமானால் பிரச்சனைகளில் இருந்து தப்பி இருக்கலாம் ஆனால் அவன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் எல்லாம் என்ன செய்வது? குழப்பம் தான் எஞ்சுகிறது. என்றாலும் இதுதான் காரணம் என எதுவும் தெரியாமல் இதில் எதை சொல்ல...எதை விட...

அன்பு நண்பனுக்கு எங்கள் அஞ்சலி...
(Batch D08, TCS ILP @ NOIDA)

வன்மம்

மனதுள் வரைமுறையில்லாது
வன்மம் கட்டவிழ்ந்து
கொண்டேயிருக்கிறது !

என்ன மூலம்?
எவரெவர் பயனாளி?
எதுவும் எண்ணாது !

எது துவக்கப்புள்ளி ?
எப்படி முடிவுறும் ?
வரையறுக்கவியலாத
காட்டாறு போல்
பெருகி ஓடுகிறது !

அடிபட்ட பாம்பின்
சீற்றமா?
அணையப்போகும் விளக்கின்
பிரகாசமா?
வன்மத்தின் வரலாறு
வார்த்தைகளுல் அடங்காது!

பாலையின் சூறைக்காற்றென
மணல் மூடி மழுங்கடிக்கப்பட்டது
மனம் !

அறிவிற்கும் மனதுக்குமிடையே
ஆயிரமாயிரம் தர்க்கங்கள்
தர்க்கத்தில் தோற்றுப்போய்
சூதால் கவ்வப்படுகிறதென்
வாழ்க்கை !

நினைவிருந்த போதும்
வன்மத்தால் நிரம்பி
வழிகிறதென் மனம் !

அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்சாகும்....
நஞ்சு அமுதாகுமோ?

விடையறிந்த காலதேவன்
விளையாட்டை தொடருகின்றான் !