title


கன்னி - நாவல் ஒரு அனுபவம்

பால்யத்தின் சில நினைவுகள் நம் மனதில் எப்போதும் நீங்காதிருப்பவை. அதில் சில சம்பவங்கள் , நம் வாழ்க்கையில் எவ்வித முக்கியத்துவமும் இல்லாதபோதும் நினைவிலிருப்பவை. ஏறத்தாழ 10 – 12 வயதிருக்கும்போது கடும் காய்ச்சல் கொண்டிருந்தேன். மருத்துவமனை சென்றுவந்த பின்னரும் காய்ச்சல் குறைந்தபாடில்லை; அம்மா என்னை அழைத்துக்கொண்டு, மந்திரிப்பதற்காக என் நண்பனொருவன் வீட்டுக்குச் சென்றார்கள். நான்கு குடித்தனங்கள் இருந்த அந்த காம்பவுண்டில், நண்பன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அம்மா என் நண்பனின் தாயாரோடு பேசிக்கொண்டிருந்தார். நண்பனின் அப்பா எனக்கு மந்திரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார்.

திண்ணையில் தனித்து அமர்ந்திருந்த நான் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நண்பனின் வீட்டுக்கு முன்பிருந்த சின்ன கிணற்றை ஒட்டியபடி ஒரு பெரிய மரம் இருந்தது. உயர்ந்திருந்த அம்மரத்தின் கிளைகளை, இலைகளை வெறுமனே பார்த்தபடி, சுர வேகத்தில் முனங்கிக்கொண்டிருந்தேன். நொடிப்பொழுதில், கிளைகளும் இலைகளும் காணாமல் போய், அவ்விடத்தில் நிறைய போர்வீரகள் தோன்றலானார்கள். இலக்கின்றி அலைந்து கொண்டிருந்த அவர்கள் கையிலிருந்த ஆயுதங்களும் அவர்களின் பரபரப்பும் ஒரு சண்டைக்கான ஆயத்தமாகவே இப்போது தோன்றுகிறது. ஆனால் அந்நாளில் எவ்வித எண்ணமும் இல்லாமல் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். மரத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த என்னை உலுக்கி, மந்திரித்து அனுப்பி வைத்தார் நண்பனின் தந்தை. மந்திரம் மருந்தானது.
*

ஜே. பிராசிஸ் கிருபா அவர்களின் ”கன்னி” சமீபத்தில் நான் படித்த மிகச் சிறந்த நாவல்.

மனம் நிலைகுலைந்து போகும்போது கற்பனை அதன் உச்சங்களை அடைகிறது போலும். என் பால்யத்தில் எனக்கு நேர்ந்து மனதின் அடியாழத்தில் ஒளிந்திருந்த பிறழ்ந்த நினைவுகள் எனக்கு மீண்டும் நினைவுக்கு வரக் காரணம் இந்த நாவலின் துவக்க அத்தியாயங்களில் வரும் பாண்டியின் மனப்பிறழ்வு குறித்தான சித்திரங்கள். கடலும், நாயும் பாண்டியின் பிறழ்வு உலகத்தின் எப்போதுமான அங்கத்தினர்கள். உண்மையை சொல்வதனால் பாண்டியின் பிறழ்வு குறித்தான ஆரம்ப அத்தியாயங்களை படித்துக் கடக்க எனக்கு பல நாட்கள் பிடித்தன. பாண்டியின் பிறழ்வுக்கான உக்கிரமான காரணங்கள் பின் வந்த அத்தியாயங்களில்தான் தெரியவந்தது அதற்கான ஒரு காரணமாக இருக்கக்கூடும். அடியின் உக்கிரம் அறியாமல் வலியைப் புரிந்துகொள்வதில் எனக்கிருந்த சிக்கலும் ஒரு காரணம். ஆனால் நெடு நாட்கள் செலவிட்டு ஆரம்ப அத்தியாயங்களை கடந்து வந்ததற்கான மிகப்பெரிய பரிசைத் தருகிறது பாண்டியின் கதை.

இதை பாண்டியின் கதை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. வாழ்வின் ஏதேனும் ஒரு கணத்திலாவது பெண்ணின் அன்பை / காதலை உணர்ந்த ஆண்மகன் ஒவ்வொருவனும் பாண்டியின் அனுபவங்களை கடந்துதான் வந்திருப்பான். அனுபவத்தின் வீச்சில் கொஞ்சம் முன்பின் இருக்கலாமே ஒழிய அடிநாதம் ஒன்றுதான். வயது பேதமின்றி ஆணொருவன் தன் வாழ்வில் உணரும் பெருவலியின் மூலம், நிச்சயமாக ஒரு பெண் மீது கொண்ட பேரன்பாகத்தான் இருக்கமுடியும்.

பேரன்பு(?) கொண்ட தன்னுடைய அக்காள் “அமலா”, பெருங்காதல் கொண்ட காதலி “மரிய சாரா”, இருவரின் வாழ்க்கையும், அவர்களது அனுமதி இன்றி பரிக்கப்பட, அதன் வீச்சு தாளாமல் மனப்பிறழ்வைச் சந்திக்கிறான் பாண்டி. இது பாண்டியின் கதையுடைய சுருக்கம். இதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் திரு. பிரான்சிஸ் கிருபா. பாண்டி கவிஞனும் கூட என்பதாலோ என்னவோ நாவல் நெடுகிலும் அதிகம் கவிதைகள் வருகின்றன (கவிதைகள் கவிஞர் தேவதேவனுடையவை). ஆனால், என்னால் பிறழ்வுப்பகுதிகளையோ அல்லது கவிதைகளையோ ஆழ்ந்து படிக்கமுடியவில்லை (மறு வாசிப்பில் இதை சரி செய்யவேண்டும்). ஆனால் அந்த குறையையே அறியா வண்ணம் ஒரு அற்புத வாசிப்பனுபவம் பாண்டியின் கதை வாயிலாக கிடைத்தது. கதையின் பெரும்பாலான நிகழ்வுகள் என் வாழ்வில் கடந்து வந்த துயரத்தின் கசப்பை மீண்டும் ஒரு முறை மீண்டெழ வைத்தன.
இந்த கதையை வாசித்த நேரம் பெரும்பாலும் நள்ளிரவாக அமைந்தது ஒரு வரம்தான். யாருமறியா துக்கத்தை நாம் மீண்டுமொருமுறை அசைபோடும்போது மனம் தனிமையைத் தானே நாடும்? அதைப்போலவே ஒரு பித்தேறிய நிலையில்தான் இந்த நாவலை என்னால் கடக்க முடிந்தது. பாண்டியின் தலையில் விழுந்த இடியின் அதிர்வுகளை என்னுடலில் உணர்ந்தேன் என்றால் அது மிகையல்ல.
*

வாழ்வில் ஒரு முறையேனும் பேரன்பை , பெருங்காதலை கண்டவர் / கொண்டவர் என்றால் இந்த நாவல் உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாயிருக்கும். ஜாக்கிரதை! நீங்கள் மறக்க விரும்பும் அல்லது மறந்துபோனதாய் எண்ணிக்கொண்டிருக்கும் பழைய காயத்தை இந்நாவல் கீறக்கூடும்; மீண்டும் மீண்டும் ”கன்னி”யின் வாசிப்பே அதற்கு மருந்தாகவும் கூடும்!

கன்னி (நாவல்) – ஜெ.பிராசிஸ் கிருபா - தமிழினி
*


நல்லதொரு நாவல் குறித்த தொடந்த பகிர்வுகளுக்கு நன்றிகள் ராஜன் !; வாசிப்பை தொடர்த்து ஊக்குவித்தமைக்கு நன்றிகள் நஸ்ருதீன்.