title


ததாஸ்த்து

1.
என்னுடைய கனவுகளை
தின்னப் பிறந்தவள்
நீ!

உன்னுடைய கனவுகளை
தினமும் செமிப்பவன்
நான்!

இருக்கட்டும்…

இருவரும் பசியாறினால்
கூடப் போதும்…
குறைந்தபட்சம்!
******
2.
உலகின்
ஆகப்பெரிய வலியை

ஒட்டுமொத்த
துக்கத்தை

மாறி மாறி
பரிசளித்துக்கொண்டே
இருக்கிறோம் நாம்…

போகட்டும் சகியே…
சிலுவை சுமக்காத ஏசு
கடவுளே இல்லை…

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது வழங்கும் விழா 2012


கடந்த 22-12-2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவை R.S.புரம் மாநகராட்சி கலை அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது வழங்கும் விழாவுக்கு (http://www.jeyamohan.in/?p=32837) சென்றிருந்தேன். அன்றைய விழா உண்மையிலேயே சிறப்பானது. ஏனென்றால் அன்றைய விழாவுக்கு இரண்டு நாயகர்கள். ஒருவர் விருதினை பெற்றுக்கொள்ளும் கவிஞர் தேவ தேவன், மற்றொருவர் விருதினை வழங்கிய  ராகதேவன் இளையராஜா.

வாழ்த்துரை வழங்கிய திரு.மோகனரங்கன், திரு.சுகா, திரு.ராஜகோபாலன், திரு. கல்பற்றா நாராயணன் என அனைவரின் பேச்சுமே நன்றாக இருந்தது. என்றாலும் நான் வெகுவாக ரசித்தது  திரு.நாஞ்சில் நாடன், திரு.ஜெயமோகன் மற்றும் திரு.இளையராஜா அவர்களின் வாழ்த்துரைகளை. இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். திரு.கல்பற்றா நாராயணன் அவர்களின் மலையாள பேச்சை திரு.கே.பி.வினோத் அவர்கள் மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்புக்கு அவசியமேயில்லாதவண்ணம் மலையாளம் பெரும்பாலும் புரிந்தது [மலையாளம் இவ்வளவு ஈஸின்னு கல்யாணத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே :(].

இளையராஜா ஏறத்தாழ 9 நிமிடங்கள் மட்டுமே பேசினார். நல்ல நிறைவான உரை. அதிலும் பேச்சு, எழுத்து, கவிதை, கதை என எல்லாவற்றையுமே அவர் இசையாக சொன்னது அருமை.



ஜெயமோகன் சொன்னதுதான் மிக அற்புதம் "இன்னும் 500 ஆண்டுகள் கழித்தும் நம் காலத்தின் 10 வரிகள் நிலைத்து நிற்குமானால் அது இந்த (தேவ தேவன்) எளிய மனிதன் எழுதிய வரிகளாகத்தான் இருக்கும்" என்றார்.



ஏறத்தாழ 9 மணிக்கு முடிவடைந்த விழா மிகவும் அற்புதமானது.

எல்லாரும் சிலாகித்த அந்தக் கவிதையை சொல்லி நிறைவு செய்வதுதான் சிறப்பு. அந்த அற்புதக் கவிதை இதோ 
நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.





















இசைத்தமிழ்

சென்ற 14-12-2012 வெள்ளி இரவு 10 மணிக்கு ஒரு வேண்டுதலை நிறைவேற்ற திருத்தணிக்கு சென்றோம். எங்கள் குடும்பத்தில் ஒரு 15 பேர் வேனில் கிளம்பினோம். 11 மணி வரை எல்லோரும் “காஞ்சனா” படம் பார்த்தார்கள். பின்பு அனைவரும் தூங்கிவிட நானும் டிரைவர் அண்ணாவும் மட்டும் விழித்திருந்தோம். கையுடன் கொண்டு போயிருந்த பழைய பாடல்களடங்கிய Pen Drive விலிருந்து பாடல்களை கேட்கத்துவங்கினோம்.

மொத்த வண்டியிலேயே Driver Cabinல் மட்டும் இருக்கும் மெல்லிய வெளிச்சம், எதிர் திசை வண்டிகளின் உபயத்தில் சமயங்களில் பளிச்சிடும் ஒளி, நள்ளிரவின் அற்புதத்தை பறைசாற்றும் அமைதி, தேர்ந்த ரசனையுடன் பாடல்களை முணுமுணுக்கும் Driver அண்ணா எல்லாவற்றுக்கும் மேலாக காலத்தை வென்ற அற்புதமான பாடல்கள் என அதிகாலை 3 மணி வரை வெகு ஜோராய் இருந்தது.

எம்.எஸ்.வி, கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், ஸ்ரீதர் என தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களை நினைவூட்டின ஒவ்வொரு பாடலும். அதிகாரவர்க்கத்தின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் எம்.ஜி.ஆர். பாடல்கள், ஆண்டவனையே அழ வைத்துவிடும் சிவாஜி பாடல்கள், காதல் ரசம் பிழிந்தெடுக்கும் ஜெமினி கணேசன் பாடல்கள் என எல்லாம் கலந்துகட்டிய ஒரு ரகளையான கலவை.

மொத்தத்தில் அது ஒரு அற்புத இரவு !

கார்த்திக் கலாட்டா

நிறம், மணம் மற்றும் சுவை நிரம்பிய “Dabur Red tooth paste” என்றால் கார்த்திக்கு நெம்ப இஷ்டம். தெனமும் காலைல பல் தேய்க்கும்போது ஒரு முழு pasteயும் காலி பண்ண முயற்சிக்கிறான். சரி இப்படியே விடமுடியாதுன்னு, ஒரு பொறுப்பான(?) அப்பாவா அவன மிரட்டினேன். என்ன, மீறிப் போன அழுவான் சமாதானப்படுத்திடலாம்-ன்னு நெனைச்சேன். ஆனா, பயபுள்ள நாம நெனக்கிறத விட டபுள் மடங்கு யோசிக்கறான்.

“தம்பி பேஸ்ட்ட எடுத்தா சாமி கண்ணகுத்தும்”ன்னு மிரட்டினேன் (!). அதுக்கு அவன் சொன்னான் “சும்மாயிருப்பா உனக்கு ஒண்ணும் தெரியாது”.

அது நோக்கும் தெரிஞ்சுடுத்தாடா மவனே…

பிம்பம்

எனக்கான நியாயங்களை…
நான் நிறுவும் உண்மைகளை…
எல்லா தர்க்கங்களிலும்
என்னுடைய வாதங்களை…
எனக்கே எனக்கென
நான் விரும்பும் எதையும்…

நானே மறுக்கிறேன்

வேறெவனைக் காட்டிலும்
என்னை சமாளிப்பதுதான்
என்னுடைய வலி !

இறைவா என்னிடமிருந்து
என்னைக் காப்பாற்று…
நண்பனோ எதிரியோ
நாளை பார்க்கலாம் !

கால் முளைத்த கதைகள்

கதை சொல்லக் கேட்டு
நச்சரித்த மகனோ
சடுதியில் உறங்கிப்போக

மனம் போன போக்கில்
கண்ணிகள் வைத்து
கதை வளர்த்த அப்பனும்
பாதியில் தூங்கிவிட

சம்பந்தமேயில்லாமல் போடப்பட்ட
முடிச்சுகளை அவிழ்க்கவும்
முடிவைத் தேடியும்
தனியே அலைந்து
திரிகின்றன கதைகள் !

கள்வெறி

எளிதில் கிடைத்தாலோ
கேட்காமல் கிடைத்தாலோ
எதையும் மதிக்காத
மனதின் விசித்திரத்தை
சுலபமாய் புரட்டிப்போடுகிறது
குழந்தையின் முத்தம் …

முரண்

எவனுக்காவது
புரைதீர்ந்த நன்மை
பயப்பதாகவே இருக்கின்றன
எல்லாப் பொய்களும்

***

புகைவண்டிக்கு கண்டக்டரும்
வயிற்றுவலிக்கு ஊசியாக
செல்ல கிள்ளலும்
ஆண் வீட்டில் சமைக்க
குடித்துவிட்டு அடிக்கும் பெண்களும்
எந்த வட்டத்துக்குள்ளும்
அடங்குவதில்லை
பிள்ளை விளையாட்டு !

இருப்பு

மரணம் நேர்ந்த வீட்டிலிருந்து
வெளியேறிவரும்போது
கைப்பிடித்தே உடன்வருகின்றன
மரணம் குறித்த வருத்தங்களும்
வாழ்வு குறித்த நிச்சயமின்மையும்
இருத்தலினாலான ஆசுவாசங்களும்


அன்று மட்டும்
கொஞ்சம் அதிகமாகக்
கொஞ்சுகிறேன் குழந்தைகளை

துணைநலம்

என்னுடைய
எல்லாப் பிரச்சனைக்கும்
ஏதாவது தீர்விருக்கிறது
உன்னிடம்
*
தீர்வில்லாத போது
அமைதிப்படுத்தும்
ஆறுதல் வார்த்தைகளையாவது
வைத்திருக்கிறாய்
*
ஆறுதல் கூறவும்
முடியாவிட்டால்
அமைதிப்படுத்தும் ஒரு
புன்னகையையாவது உதிர்க்கிறாய்
*
எதுவுமே செய்யவியலா
தருணங்களில்
வெறுமனே கைகளைப்
பிணைத்து அழுத்தி
கண் பார்க்கிறாய்
*
இதற்காகவே
வந்து தொலையட்டும்
எல்லாப் பிரச்சனைகளும் !