title


தகப்பன்சாமி

 ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு,

மச்சீ, தண்ணீர்ப்பந்தல் பஸ்ஸ்டாப்க்கு எதுத்தாப்புல புதுசா ஒரு ஓட்டல் தொறந்திருக்காங்க. ஹை க்ளாசு. புரோட்டா, ரொட்டி, பிரியாணின்னு எல்லாமே நல்லா இருக்கு. ஒருநா போயிப்பாருங்க

எங்கள் மளிகைக்கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரின் புண்ணியத்தால், அன்றிரவே அப்பா என்னை அந்தக் கடைக்கு அழைத்துப்போனார். மிகப்பெரிய ஹாலில் குறைவான டேபிள்கள் மட்டுமே ஏராளமான இடைவெளியில் போடப்பட்டிருந்ததும், எதிரில் இருப்பவர் மட்டும் தெரியுமளவுக்கே இருந்த மிகக்குறைவான வெளிச்சமும் அதுவரை நாங்கள் கண்டிராதது. சைக்கிள் கேரியரில் என்னை வைத்துக்கொண்டு ஏறத்தாழ மூன்று கி.மீ.கள் மிதித்துக்கொண்டு வந்த களைப்பைப் போக்க தன்முன் தண்ணீர் நிரம்பி இருந்த கண்ணாடித் தம்ளரை ஒரே மூச்சில் காலி செய்தார் அப்பா. உக்கார்ந்து வந்த களைப்பு போக நானும் ஒரு மிடறு தண்ணீர் குடித்தேன். ஜில்லென்று இருந்த அந்த தண்ணீரே தனிசுவையாகத் தோன்றியது. இதற்கு முன் பார்த்திருந்த, ”மாஸ்டர் ஒரு முட்டைபுரோட்டாஎன உரக்க ரசித்துச் சொல்லும் சர்வர்கள் அங்கில்லை, மிக நெருங்கி வந்துஎன்ன சாப்பிடுறீங்க?” என சன்னமான குரலில் கேட்ட சர்வரிடம், அதனினும் மெல்லிய குரலில் ஏதோ சொன்னார் அப்பா. கொஞ்சம் யோசித்தவராக சரி எனும்படி தலையாட்டினார் அவர். பின்னர் என்னிடம்என்ன சாப்பிடுற?” எனக்கேட்டார் அப்பா. வீட்டிலிருந்து கிளம்பும் போதே யோசித்து வைத்திருந்த பதிலை உடனடியாக சொன்னேன்பரோட்டா”.

ரெண்டு புரோட்டா, கொடுங்க

சரீங்க சார். கிரேவி தனியாதான் ஆர்டர் பண்ணனும்கொஞ்ச நேரம் மெளனம். அப்பாவின் தயக்கத்தை உணர்ந்துகொண்டவராய் சர்வர் தொடர்ந்தார்எக் கிரேவி கொண்டு வரேன்ங்க சார். செரியா இருக்கும்”.

சம்மதமாய் தலையாட்டினார் அப்பா.

இளஞ்சூடான நீரால் கழுவப்பட்டிருந்த இரண்டு பீங்கான் தட்டுகள் எங்கள் முன் வைக்கப்பட்டன. ஒன்று மட்டும் போதுமெனெ சொல்லி மற்றொன்றை எடுத்துச்செல்லச் சொன்னார் அப்பா. தொடர்ந்து இரண்டு புரோட்டாவும், அலங்கரிக்கப்பட்ட முட்டை கிரேவியும் தனித்தனி கிண்ணங்களில் வந்தன. வெகு கெட்டியாக சமைக்கப்பட்டிருந்த முட்டை கிரேவியின் வாசம் கூடவே நன்கு சூடான பொன்னிற புரோட்டா என பசியில்லாதவரைக்கூட சாப்பிடத்தூண்டும் கூட்டு அது. இரண்டு புரோட்டாவுக்கு துணையாக, ஒட்டு மொத்த கிரேவியும், அதிலிருந்த முட்டைகளும் என்னுள் போன வேகம் தெரியவில்லை. அதிகாலையில் இருந்து மளிகைக்கடையில் வேலை செய்த களைப்பையோ அல்லது அரைமூட்டை அரிசி மாதிரி இருந்த என்னை சைக்கிளில் வைத்து மிதித்து வந்த களைப்பையோ, பசியையோ எதையுமே காட்டி கொள்ளாமல், நான் சாப்பிடுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. இடைஇடையே இரண்டு மூன்று டம்ளர் தண்ணீரையும் காலி செய்திருந்தார்.

பில் வந்தது. 45 ரூபாய். 5 ரூபாய் டிப்ஸ். மொத்தம் 50 ரூபாய்.

வீட்டுக்கு வந்த பின்னர்தான் அப்பா என்னிடம் சொன்னார் ”கடைக்கு போன ஒடனே சர்வர் கிட்ட சொல்லிட்டேன் அம்பது ரூபாதான் இருக்கு. அத தாண்டுறமாதிரி இருந்தா சொல்லிடுங்கன்னு. நல்லவேள நீ அதுக்குள்ள வர அளவுக்குத்தான் சாப்பிட்ட”

அவருக்கு எப்போதுமே என்னுடைய தேவைகள் புரிந்திருந்தது. எனக்குத்தான் அவரைப் பற்றிய பல விசயங்கள் புரியாமலேயே போனது.

*

அநீதி திரைப்படத்தில், காளி வெங்கட்டின்தங்கப்புள்ள” எனும் குரல் கேட்கும்போதெல்லாம், என்னுடையதகப்பன்சாமியின் நினைவுகள் கண்ணீருடன்....

*

#அப்பா

#தகப்பன்சாமி