title


நெடுங்குருதி

2007 ஜுலை மாதம், நள்ளிரவு, டெல்லிக்கருகில் நொய்டாவில் ஒரு விடுதியறையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். வெய்யிலோ மழையோ நானறிந்த அதிகபட்சம் என்பது நான் அங்கிருந்த இரண்டு மாதங்களில் கண்டதுதான். பெருமழை பொழிந்துகொண்டிருந்த அந்த நள்ளிரவில், நான் மட்டும் கடும் வெப்பத்தை உணர்ந்தேன். மட்டுமல்ல, மனதளவில் மிகவும் தனியனாக உணர்ந்திருந்த நாட்கள் அவை. அத்தனிமை உணர்ச்சியின் வலி அவ்விரவில் மென்மேலும் பெருகியது. இவ்விரண்டுக்கும் காரணம் ஒன்றே, அது நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் “நெடுங்குருதி”. கதையின் இயல்பாலும், என்னுடைய அப்போதைய மனநிலையினாலும், எப்போது வேண்டுமானாலும் நான் அப்புத்தகத்தை விலக்கி விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருந்தது. ஆனால், படிக்கத்துவங்கிய பின்னர் கூறுமுறையிலிருந்த வசீகரம் என்னை கட்டிப்போட்டது. பகலில் IT நிறுவனத்தின் ஆரம்பநிலை ஊழியனாக நொய்டாவிலும், பின்னிரவுகளில், நாகுவாக, ரத்னாவதியாக, ஆதிலட்சுமியாக ”வேம்பலை”யின் தெருக்களிலும் வாழ்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. இம்முறை மறுவாசிப்பு சொல்முகம் வாசகர் கூடுகைக்காக.

*

நாகு, அவனது பெற்றோர், நாகுவின் அடுத்த தலைமுறை என ஒரு குடும்பத்தின் கதையையும், அதனூடே, அதற்கிணையாக வெய்யிலுடன் நிரந்தர உறவேற்படுத்திக் கொண்ட வேம்பலை கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் பிண்ணிச் சொல்லப்பட்ட கதை “நெடுங்குருதி”. இந்நாவல், கோடை, காற்று, மழை, குளிர் என நான்கு பருவ காலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், என்னைப் பொருத்தமட்டில், இந்நாவலின் களமும் காலமும் கோடை மட்டுமே. வேறு பருவ காலங்களில் சொல்லப்படும் கதையில் கூட, கதாப்பாத்திரங்களின் வாழ்வில் நாம் காண்பது கோடையின் வறட்சியையே.

*

நாகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துவக்க அத்தியாயங்களிலே உண்டாகும் சண்டை கடும் கோடை ஏற்படுத்தும் எரிச்சல் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் வன்முறைக்கான சரியான உதாரணம். நாகுவின் அப்பா உப்பை மிதித்ததால் உண்டான எரிச்சலாலும் கூடவே அதைக் கழுவக்கூட நீரில்லாத சூழலில் மீதான வெறுப்பினாலும் விளைகிறது அந்தச் சண்டை. நாவலின் பெரும்பாலான மாந்தர்களின் இயல்பிலேயே வெளிப்படும் எரிச்சல் வெயில் காயும் பூமியின் ஒரு கொடைதான்.

*

நாவலின் / வேம்பலையின் பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக, சூல்நிலைக் கைதிகளாக காட்சிப்படுத்தப்பட்ட போதும், பெண்கள் எந்நிலையிலும் கருணையைக் கைக்கொள்பவர்களாகவே உள்ளனர். கோவிலின் வாசலின் வெள்ளரிப்பிஞ்சு விற்கும் தன் அண்ணியிடம் நாகுவின் அம்மா தன்னிடமுள்ள பணத்தை தருமிடம் அதற்கொரு உதாரணம். அந்த சந்தர்ப்ப்பத்தில் எழும் அவளது அண்ணியின் அழுகையை சுற்றிலுமிருப்பவர்கள் ஒரு பொருட்டாகவே கருதாமலிருப்பது அந்நில மக்கள் ஒவ்வொருவருக்குமே அப்படி அழுவதற்கான வாழ்க்கையே விதிக்கப்பட்டிருப்பதற்கான ஒரு அடையாளம். அடுத்தவர்களால் கவனிக்கப்படாமல் போகும் கண்ணீர்தான் பெரும் துரதிர்ஷ்டம் மிக்கது.


வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வாழ்வின் அலைக்கழிப்புக்கு ஆளாகி, ஊரை விட்டு வேறு ஊர் தேடிப்போகும் தன் மக்களை, விதியின் மாயக்கரங்களால் மீண்டும் மீண்டும் தன்னுள் இழுத்துக்கொள்கிறது வேம்பலை. நாகுவுக்குள், இறந்துபோன அவனுடைய இரண்டாவது அக்கா நீலாவின் நினைவுகள் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. போலவே அவனது அப்பாவுக்கும் நீலா மீது இருப்பது பெரும் வாஞ்சை. ரேகை சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு மீண்டும் வேம்பலைக்குத் திரும்பிய பின்னர் நாகுவின் அப்பா செய்யும் முதல் வேலை தன் மகளைப் புதைத்த இடத்தைத் திருத்துவதே. ஒரு மழைக்காலத்தில் மகளின் புதைகுழியிலிருந்து வரும் மண்புழுவை தன் வீட்டில் சேர்ப்பித்து கொஞ்சம் ஆறுதலடைகிறார் அவர்.

*

பகலில் வெய்யிலின் ஆளுமைக்கு சற்றும் குறைவில்லாதது வேம்பலையின் இரவுகள். இருளன்றி வேறெதுவும் அறியா இரவுகள் அவை. ஒருவகையில் பகலெல்லாம் வாட்டி வதக்கிய வெய்யிலுக்கான (வெளிச்சத்துக்கான) ஒரு பெரும் ஆசுவாசமே அவ்விருள். களவுக்குப் போகும் வேம்பர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என இருளையே சொல்ல முடியும். காயாம்பு அக்கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரத்தை கொண்டுவரும் போது அக்கிராமமே அதை எதிர்ப்பதற்க்கு இவ்விரண்டும் காரணமாக அமையந்திருக்கக்கூடும் எனவும் எண்ணத் தோன்றுகிறது. மரித்துப்போனவர்கள் மீண்டும் வாழ்வதான ஒரு சாத்தியக்கூறை தன்னுள் கொண்டிருப்பது இருள் மட்டும்தான். இரவில் அப்பாவும் அவனும் மட்டும் உணவுண்ணும் போது, நாகு தன்னைச் சுற்றிலும் தன்னுடைய அம்மா, அக்கா என அனைவரையும் உணர நேர்வதும் இருளின் கருணையினால்தான்.


இந்நாவலின், முக்கியமான இன்னொரு அம்சம் நாவலின் போக்கிலேயே கலந்துள்ள நாட்டார் தன்மை. நடக்க முடியாத ஆதிலட்சுமி நாகுவிடம் கூறும் கதைகள், குறிப்பாக இறந்தவர்கள் பறந்து போனதை தான் கண்டதாக ஆதிலட்சுமி கூறுவது, தாழியில் வைத்து மூடப்பட்ட சென்னம்மாவின் தாகம் அவ்வூர் மக்கள் எடுத்து வரும் குடத்து நீரைக் காலி செய்வது, இறந்து போனவர்கள் வாழும் இன்னொரு வேம்பலை கிராமம், சிங்கிக் கிழவன் இறந்துபோன குருவனுடன் ஆடு-புலி ஆட்டம் ஆடுவது என விரித்தெடுக்க சாத்தியமுள்ள நாட்டார் கதைகள் நாவலினூடே நிறைந்துள்ளன.


வேம்பலை கிராமம் பற்றிய சித்திரங்களும், வேம்பர்களின் வாழ்க்கைமுறையும் மிகவும் குறைவாக, அதே சமயம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். வெல்சி துரையால் 42 வேம்பர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும், அவர்களில் கூட்டத்திலிருந்து எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படாதிருப்பது, தேடிவரும் காவலர்களிடமிருந்து தப்பிக்க நீர் நிரம்பிய கிணற்றுள் மறைந்திருப்பது, ரேகை சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் ஊரில் அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை எரிப்பது என பல சம்பவங்கள் வேம்பர்களின் மன உறுதியைக் காட்டுகின்றன. ஒருவகையில், வேம்பர்களின் அழுத்தமான பாத்திரப்படைப்பு எனக்கு நாவலில் கூறப்படும் ஊமைவேம்பினை நினைவூட்டியது.


வெய்யிலின் உக்கிரத்தை, வறட்சியை, கண்ணீரை, வலியைப் பேசும் நாவலின் ஒரே ஒரு இடம் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைத்தது. அது சிங்கிக்கிழவன் தன் வாலிபத்தில் மாட்டுவண்டியை மறித்து களவு செய்ய முயலுமிடம். சிறுமிகளிடமிருந்து அவன் களவு செய்வதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட வண்டிக்காரர்கள், தங்கள் நகைகளை வண்டியிலிருக்கும் சிறுமி கழுத்தில் அணிவிப்பதும் அதை தொடர்ந்து நடக்கும் சிறு உரையாடலும் கடும் வெய்யில் பயணத்தில் வாய்க்கப்பெற்ற சிறு நிழல் போன்றவை .(இதற்கிணையான காட்சி எஸ்.ரா. வசனமெழுதிய அவன் இவன் திரைப்படத்திலும் இருக்கும்)


நாவலின் கதை மாந்தருக்கிணையாக இன்னுமொரு பாத்திரமாக வெயில் வார்க்கப்பட்டுள்ள இடங்களும், வெய்யில் குறித்த வர்ணிப்புகளும் இந்நாவலின் கவித்துவம் மிளிருமிடங்கள். உதாரணங்களாக


·         கத்தியை சாணை பிடிப்பது போல, தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது.


·         கழுத்தடியில் ஒரு கையைக் கொடுத்து நெறிப்பதுபோல், வெயில் இறுக்கத்துவங்கியது.


·         விரியன் பாம்பைப் போல உடலை அசைத்து அசைத்து சீறியபடி போய்க் கொண்டிருந்தது வெயில்.


·         வகுந்துருவேன் வகுந்து. சூரியன்னா பெரிய மசிரா ? சங்கை அறுத்துப்புடுவேன் (சிங்கிக்கிழவன்)


·         கிணற்றுத் தண்ணீரில், வெயில் ஊர்ந்து ஊர்ந்து ஏதோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தது.


ஆகிய இடங்களைச் சொல்லலாம்.


வெயிலுக்கு நிரந்தரமாய் வாக்கப்பட்டு, நீரின்றி சபிக்கப்பட்ட எந்தவொரு இந்திய கிராமத்தின் சித்திரமும் வேம்பலை கிராமத்துக்கும் பொருந்தும். வரலாற்றின் கொடூரப் பக்கங்களில், கால சூழ்நிலைகளால் மைய மக்கள் கூட்டத்திலிருந்து விலக் நேர்ந்துவிட்ட இனக்குழுக்களுல் வேம்பர்களும் உண்டு.

*

கடும் கோடையில் ஓரிரு குடங்கள் நீருக்காக சில கிலோமீட்டர்கள் அலைய நேரிட்ட என்னுடைய பாட்டிமார்கள், கடும் வெயிலில் புழுதி பறக்க விளையாடிய வடுகபாளையம், மணியம்பாளையம் கிராமத்து காடுகள், சூடு பிடித்துக் கொண்டு தூக்கம் தொலைத்த கோடைகால இரவுகள் என என் பால்யத்தின் நினைவுகளை கிளர்த்தெழச் செய்தது “நெடுங்குருதி”.