title


குரு தெய்வம்

” நாளைக்கி எங்கப்பன கூட்டிட்டு வாரென், அப்புறமிருக்குது கச்சேரி” பக்கத்தில் அமர்ந்திருந்த பெஞ்ச் மேட் சொல்லும்போது எனக்கு கலக்கமாகத்தான் இருந்தது. சமூக அறிவியல் மேப் முடிக்காதது மட்டுமில்லாமல், அந்த பயமுமின்றி பேசிக்கொண்டும் இருந்தது குற்றம். இருந்தாலும் ஆறாம் (ஏழாம் ?) வகுப்பு பையனுக்கு அந்த அடி கொஞ்சம் கூடுதல்தான்.
.
அவனது அப்பாவின் அதிவீரபராக்கிரமங்களை நண்பனே பலமுறை சொல்லிக்கேட்டதுண்டு. அந்தக் கதைகள் தந்த எதிர்பார்ப்பில், ஒரு விஜயகாந்த் அல்லது சரத்குமார் படக்காட்சியை எதிர்பார்த்து (எம்பட பையன நீயெப்புடிடா அடிக்கலாம் ? டிஷ்யூம் டிஷ்யூம்) ஆவலுடன் அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றேன். ”வாத்தியாரு அடிச்சாருன்னு சொன்னேன். மதியானச் சாப்பாடு முடிச்சிட்டு எங்கப்பன் வருவாரு” என்றான் நண்பன். அன்னைக்குன்னு பார்த்து சமூக அறிவியல் பாடமும் மதியானம்தான். காலையிலிருந்தே ஒரு சினிமா பட கீரோ ரேஞ்சுக்கு நண்பன் அலப்பறை பண்ணிட்டிருந்தான் (கூட, எங்க மாமனும் வருவாருண்ணு நெனக்கிறேன், அவரு சொன்னாத்தான் அப்பன் அடங்குவாரு; இல்லாட்டி நெம்ப பிரச்சன ஆயிடும்).
.
எதிர்பார்த்தபடியே, சரியாக சமூக அறிவியல் பாடம் நடந்துகொண்டிருக்கையிலேயே வந்து சேர்ந்தார் அவன் தந்தை. தனியாகத்தான் வந்திருந்தார். வகுப்பறைக்குள் வந்து தான் இன்னாருடைய தகப்பன் என அறிமுகம் செய்து கொண்டார். விசயத்தை கிட்டத்தட்ட யூகித்துக் கொண்ட ஆசிரியர், “அது வந்துங்க” என தன் தரப்பு நியாயத்தை சொல்லத்துவங்கினார். இருங்க என அவரை அமைதிப்படுத்திவிட்டு நண்பனை அருகில் அழைத்தார் அவன் தந்தை. எங்களையெல்லாம் கெத்தாக பார்த்தபடி சென்ற அவன் தலைமுடியை கொத்தாகப் பிடித்து ”சப்”பென்று ஒரு அறை விட்டார் அவனது தந்தை. பொறி கலங்கிப்போய் பெஞ்சு மீது சாய்ந்திருந்த நண்பனை, அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி ஆசிரியரைப் பார்த்து சொன்னார்
“இவன் ஒங்க புள்ள மாதிரி வாத்தியாரே, கண்ணு காத வுட்டுட்டு தோலை உரிச்சுப்புடுங்க .. இந்த நாய் படிச்சா போதும்”.
**
குருதான் தெய்வம் என சொல்லாமல் போதிக்கும் பெற்றோருக்கும்
எல்லாப் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாய் நினைத்து அறிவூட்(டிய)டும் ஆசிரியர்களுக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !

செடல்


பல ஆயிரம் பக்கங்களிலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்படுத்தும் உணர்வினை, சில நூறு பக்கங்களில் எழுதப்பட்டஒரு புனைவால்  ஏற்படுத்த முடியும். கூடவே புனைவு தன்னுடைய வசீகர சதுரங்கத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் வாசிப்பவனும் களமிறங்க அனுமதிப்பதினுடாக, அக்களத்தில், அக்கணத்தில், அவ்வாழ்வை நாமும் வாழ்ந்து பார்க்கும் பேரனுபவத்தைத் தருகிறது. இந்த வசதிதான் கலையின் வேறெந்த வடிவத்தை விடவும் நாவலை என் மனதுக்கு மிக அணுக்கமாக்குகிறது.

காலகாலமாக, தன்னுடைய சுகத்துக்காக இன்னொருவரை அலைக்கழிக்கும் / அடிமைப்படுத்தும் பேதமை  மனித குலத்துக்கு ஒரு பொதுப்புத்தியாகிவிட்டது. அத்தகைய கீழ்மைக்கு நிறம், மதம், இனம், மொழி, சாதி என பல காரணிகள் துணை. அதைப்போலவே நம்பிக்கைகளும் சடங்குகளும். அப்படி சடங்கின் பெயரால் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவந்த ஒரு கொடுமைதான் பொட்டுக் கட்டி விடுதல். மேடைப் பேச்சுகள் மற்றும் வரலாற்றுப் பதிவுகள் வாயிலாக மட்டுமே பொட்டுக் கட்டி விடும் பழக்கத்தைப் பற்றி அறிமுகமாயிருந்த எனக்கு, பொட்டுக் கட்டி விடப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒரு மெளன சாட்சியாக இருக்கும் வாய்ப்பைத் தந்தது இமையத்தின் செடல் நாவல் .

ஒரு கிராமத்தின் நலனை முன்னிறுத்தி பொட்டுக் கட்டிவிடப்படும் சிறுமி செடல். அவளின் வாழ்க்கையை மூன்று பகுதிகளாக நம்முன் வைக்கிறது செடல் நாவல். சிறு வயதில் பொட்டுக் கட்டி விடுவதில் துவங்கி பருவமெய்தும் மழை நாளில் செடல் ஊரை விட்டு நீங்குவது வரையிலானது முதல் பாகம். எதேச்சையாக சந்திக்கும் உறவினர் பொன்னனுடன் இணைந்து கூத்துக்கலையில் ஈடுபட்டு பெரும் புகழ் ஈட்டி, பொன்னன் மறைவுக்குப் பின்னர் தன் சொந்த ஊருக்குத் திரும்புவது இரண்டாம் பாகம். செடல் தன் சொந்த ஊருக்குத் திரும்பி வருவதும், வந்த பின்னர் நிகழும் மாற்றங்களையும் விவரிப்பது மூன்றாம் பாகம்.
*
மழை பொய்த்துப் போனதை காரணம் காட்டி, அதற்கு தீர்வாக பொட்டுக் கட்டி விடும் சடங்கை துணைக்கொண்டு கோபால் - பூவரும்பு அவர்களின் எட்டாவது மகளை செல்லியம்மன் கோவிலுக்கு பொட்டுக் கட்டி விட வைக்கிறது ஊர். விவரமறியாமலும், விருப்பமில்லாமலும் தன்னுடைய வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டு சின்னம்மாள் கிழவியின் துணையுடன் கோவில் நிலத்தில் குடியமர்த்தப்படுகிறாள் செடல். பஞ்சத்தின் காரணமாக பெற்றோரும் ஊரை விட்டு சென்று விட, கொஞ்சம் கொஞ்சமாக சூழலுக்குப் பொருந்திக் கொள்கிறாள் செடல். செடலை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை, அந்திமக்காலத்தில் வயிரார சாப்பிட கிடைத்த ஒரு நல்வாய்ப்பாக சின்னம்மாள் கிழவி கருதினாலும்; செடலுக்கு உற்ற துணையாக இருக்கிறாள். கோவில் காரியங்களை செய்வதும், சுகமில்லாத குழந்தைகளுக்கு திருநீறு இடுவதும் என கிழவியின் துணையுடன் வாழப் பழகிக்கொண்ட செடலுக்கு இன்னுமொரு இக்கட்டாக அமைகிறது கிழவியின் மரணம். இருந்தவரை, செடலுக்கு உரிமையானவற்றை கேட்டுப் பெறும் வாயாக இருந்தாள் சின்னம்மாள் கிழவி. பொட்டுக் கட்டி விடுவதற்கு முன்னர் "உம் பொண்ணுக்கு ஊரே பொறுப்பு" எனும் ரீதியில் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகளை (வழக்கம் போல) மறப்பதற்கு இருந்த ஒரே தடையும் நீங்கியாகிவிட்டது. 
இதற்கிடையில், தன்னைப் போலவே பொட்டுக் கட்டிக் கொண்டவர்களை செடல் சந்திப்பது, அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது போன்ற சம்பவங்களை வாயிலாக அக்காலகட்டத்தில் பொட்டுக்கட்டி விடப்பட்டவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைக்கிறது. இந்நிலையில், ஒரு கொட்டும் மழை நாளில் பூப்பெய்துகிறாள் செடல். தீட்டுடன் கோவில் வளாகத்தில் இருக்கமுடியாமல், ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று கொட்டும் மழையில் திருப்பி அனுப்பப்படுகையில் செடல் தன் ஊருடன் மனவிலக்கடைகிறாள். ஊருக்கே பிள்ளை என சக்கரை வார்த்தை பேசினாலும் தான் ஒருவருக்கும் பிள்ளையில்லை என்பதை உணரும் தருணம் அது. எந்த மழை இல்லை எனக் காரணம் காட்டி செடல் பொட்டுக் கட்டி விடப்பட்டாளோ, அதே மழை நாளில் ஒதுங்க இடமில்லாமல், ஒருவருக்கும் மனமுமில்லாமல் தன் ஊரை விட்டு நீங்குகிறாள் செடல். ஒரே பிடிப்பாய் இருந்த ஊருடன் ஏற்பட்ட விலக்கத்தில், கால் போன போக்கில் போகும் செடல், தன் உறவினரான பொன்னனை எதேச்சையாக சந்தித்து அவனுடன் செல்லும் இடத்தில் முடிகிறது முதல் பாகம்.

நாவலின் இந்தப்பகுதி முழுவதிலும் செடல் கிட்டத்தட்ட எடுப்பார் கைப்பிள்ளைதான். சொல்லப்போனால் அவளின் பெற்றொரும், அவர்தம் சாதியினரும் கூட. அவருக்கென தனிக்குரல் ஏதுமில்லை. அதிசயமாய் எழும் குரல்களைக்கூட "செரீங் சாமி"யில் முடித்துவிடுகிறது நம் சமூகக் கட்டமைப்பு. ஊரின் நிலையைக் காரணம் காட்டியும், சடங்கை முன்னிறுத்தியும் வாக்குறுதிகளை அள்ளிவீசும் ஊர், தங்கள் தேவை (பொட்டுக் கட்டி விடுதல்) தீர்ந்ததும் காட்டும் அலட்சியம் மனித மனதின் பொது இயல்பு. உறுதி செய்யப்பட்ட / உரிமையான விசயங்களைக் கூட கேட்டுக் கேட்டுதான் பெறவேண்டியிருப்பதை சின்னம்மாள் கிழவி பாத்திரம் மூலமாக பதிவு செய்கிறார் இமையம். தனிப்பட்ட முறையில், முதல் பாகம் மட்டுமே ஒரு பெரும் நாவலுக்கு உண்டான கதைப்பரப்பு உடையது. இருந்தாலும் சுருங்கச் சொல்லி நம்மை விரிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பளித்திருக்கிறார் திரு.இமையம். முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் கால இடைவெளி ஏதுமில்லை. இருந்தாலும் நாவல் நிகழும் களம் மாறுபடுவதால் இந்தப் பாகப்பிரிப்பு தேவைப்பட்டிருக்கலாம்.

கூத்துக்காரனான பொன்னனுடன் அவனது ஊருக்குச் செல்லும் செடல், தவிர்க்க இயலாத நிலையில் கூத்துக்கலையில் ஈடுபடுகிறாள். ஒருகட்டத்தில் "பொன்னன் செட்டு" என்றிருந்த கூத்துக்குழு "செடல் செட்டு" என்றே மாறிப்போகிறது. இடையில் பொன்னனின் மனைவி அவர்கள் உறவை சந்தேகிப்பதும் பின்னர் உறவுமுறை அறிந்து (தற்காலிகமாக) சமாதானமடைவதும் என அக்கால கூத்துக்கலைஞர்கள் மேலிருந்த " நம்பிக்கை" காட்டப்படுகிறது. நாவலின் இந்தப்பகுதியின் சிறப்பே கூத்துதான். கூத்துக்கலையின் தயாரிப்புகள், அந்தக்காலகட்டத்தில் கூத்தாடுபவர்களுக்கு இருந்த "மவுசு", கூத்துக்கலை நிகழ்த்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் என அனைத்தும் பதிவாகியுள்ளன. நம் கற்பனையில் ஒரு கூத்தை நிகழ்த்திப்பார்க்கும் அனுபவம் பல இடங்களில் வாய்க்கிறது. முதல் பாகத்தில் வெள்ளந்தியாக இருந்த செடலின் ஆளுமை வளரும் இடமாக இப்பாகத்தைக் கருதலாம். வெளியிடங்களுக்கு கூத்துக்காக சென்றுவருவது, பாத்தியப்பட்ட ஆலயங்களில் பணிசெய்வது, இவற்றின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் என பல கோணங்களில் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறாள் செடல். இடையிடையே தன் சொந்த ஊர் (குறிப்பாக உடல் நலமில்லாத குழந்தைகளுக்கு திருநீறு இடமுடியாத வருத்தம்) நினைவுகளில் மூழ்குகிறாள்.

சிறுமியாக இருந்த செடலின் வனப்பு கூடக்கூட அவள் மீதான இன்னுமொரு சுரண்டலுக்கான வாய்ப்புகளும் கூடுகின்றன. அது சாதி, மத பாகுபாடின்றி பெண்கள் மீதான பாலியல் சுரண்டல். அதிலும், கூத்தாடும் பெண் என்றாலோ அல்லது பொட்டுக் கட்டி விடப்பட்ட பெண் என்றாலோ நிலைமை இன்னமும் மோசம். அத்தகைய சமூக கண்ணோட்டம் ஆரான், வீரமுத்து (சமயத்தில் பொன்னன்) உள்ளிட்ட பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுகிறது. ஓரளவு செடல் தெளிச்சி அடையும் சமயம் நிகழ்கிறது பொன்னனின் மறைவு. அதன்பின்னர், பொன்னன் குடும்பத்தினர் செய்யும் தகராறு, தன் இச்சைக்கு இணங்க மறுத்த கோபத்தால் செட்டை பிரித்துக் கொள்ளும் ஆரானின் செயல் என பலவகைகளில் சங்கடம் ஏற்பட, மீண்டும் தன் சொந்த ஊருக்கே செடல் திரும்பும் இடத்தில் முடிகிறது இரண்டாம் பாகம்.

சொந்த ஊருக்கு திரும்பி வரும் செடல் இப்போது பழைய செடல் இல்லை. ஊரை உதறிப்போன செடல் அறியாச் சிறுமி, பொட்டுக் கட்டி விடப்பட்ட சாமி புள்ள. ஆனால் திரும்பி வந்திருக்கும் செடல், பொட்டுக் கட்டி விடப்பட்டவள் கூடவே தனக்கென ஒரு தனி செட்டு கொண்டு கூத்தாடுபவள் என இரட்டை அடையாளம் கொண்டவள். அவளின் வருகை அவளது ஊருக்கு அப்படி ஒன்றும் ஏற்புடையதாக இல்லை (இந்த இடத்தில் செடலுக்கு பொன்னனின் ஊர் தன்னை போகவேண்டாமென கொஞ்சிய காட்சி நினைவுக்கு வருவது வெகு பொருத்தம்). செடலுக்கு ஆதரவாக ஒலிக்க பழைய குரல்கள் பெரிய அளவில் இல்லை. என்றபோதும் இருக்கும் ஓரிருவரின் கட்டாயத்தால் ஊரில் தங்குகிறாள் செடல். அந்த ஊரில் கிறித்துவ மிஷனரிகளின் வருகை, மக்களின் மனதில் ஏற்படும் மாற்றம், கூத்தாடும் கலையில் ஏற்படும் மாற்றங்கள் என அசல் பிரச்சனைகள் பதிவாகியுள்ளன. இறுதிக் காலத்தில் இருக்கும் "பேர் பெற்ற" கூத்தாடி பாஞ்சாலியை செடல் சந்திப்பது, அவளின் வேண்டுகோளை ஏற்று பாஞ்சாலியின் செட்டை நடத்த சம்மதிப்பது என தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செடல் நகருமிடத்தின் முடிகிறது நாவல்.

மூன்று பாகங்களாக விரியும் செடலில் வாழ்க்கையினூடே எளிய மனிதர்களின் பிரச்சனையை (எவ்வித கழிவிரக்கமும் இல்லாமல்) தனக்கே உரிய இயல்பான நடையில் சொல்லிச் செல்கிறார் இமையம். சாதியின் பெயரால், துவங்கும் அடிமைத்தனம், செய்யும் தொழிலின் காரணமாக காட்டப்படும் பாகுபாடு, பாலின ரீதியிலான சுரண்டல் என ஒரு சமூகத்தில் எளிய மனிதர்கள் சந்திக்கும் சவால்களை ஆவணப்படுத்திய வகையில், என்னைப் பெரிதும் கவர்ந்தது இந்நாவல்.

நாமறியாத வெளியில் நம்மை ஆடவைக்கும் வல்லமை கொண்டது புனைவெழுத்து. அப்புனைவின் வாயிலாக சகமனிதனின் துயரை அறிய நேருகையில், நிகழ் வாழ்வில், அதைப் போன்ற துயரும் மக்களின் பக்கம் நிற்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அந்த அடிப்படையில் நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நாவல் "செடல்".
*
செடல் - இமையம் - க்ரியா பதிப்பகம்