title


மண் உணர்ந்த கலைஞன்

வாரத்தின் பெரும்பாலான நாட்கள் அலுவலகம் செல்வது பேருந்தில்தான். பூண்டியிலிருந்து அன்னூர் வரை ஒரு பேருந்து பின்னர் அங்கிருந்து சரவணம்பட்டிக்கு ஒரு பேருந்து என எப்படியும் (போக & வர) இரண்டரை மணி நேரங்கள் ஆகிவிடும். இந்தப் பயணங்களில் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது வாசிப்பைத்தான். பயணங்களில் வாசிப்பு என்பதால் பொதுவாக படிப்பதற்கு சற்று இலகுவான புத்தகங்களை தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். அப்படி தற்சமயம் நான் வாசித்துக்கொண்டிருக்கும் அற்புதமான புத்தகம் “எல்லா நாளும் கார்த்திகை”. (இந்தப் புத்தகம் பற்றி விரிவாக மற்றொரு நாள் பேசலாம் இப்போதைக்கு இது ஒரு சிறுகுறிப்பு மட்டுமே)
**

பூண்டியில் பேருந்து ஏறிய உடன் கோணங்கியைப் பற்றிய பவா. செல்லத்துரை அவர்களின் நினைவுகளை படிக்கத் துவங்கினேன். ஏற்கனவே திரு.கோணங்கியைப் பற்றிய ஜெயமோகன் பதிவுகளைப் படிந்திருந்த காரணத்தால் அவரைப் பற்றிய ஒரு மெல்லிய சித்திரம் மனதில் இருந்தது. பவா அவர்களின் பதிவு அந்தக் கணிப்பை மேலும் உறுதி செய்வதாக இருந்தது. அதிகம் பேச விரும்பும் வயதானவர்களோடான உரையாடல்களுக்கு முக்கியத்துவம் தருபவராக இருப்பவர் கோணங்கி. அவரது வருகை அவ்விடம் இருக்கும் வயதானவர்களுக்கு ஒரு தேவதூதனின் வருகையாக மட்டுமல்லாது ஒரு ஆத்ம நண்பனின் வருகையாகவும் தெரியக்கூடும். உதாரணத்துக்கு, தன் தகப்பன் தோள்பட்டையில் அவரது உற்ற நண்பன் பெயர் பச்சை குத்தியிருக்கும் என்பதை கோணங்கி சொல்லி பவா தெரிந்து கொள்ளும் சம்பவம் ஒன்று போதும். கூட்டுறவு சொஸைட்டி வேலையை உதறித்தள்ளிவிட்டு கோனங்கி ஒரு தேசாந்திரியாக சுற்றத்துவங்கின கதை, பிறக்கப்போகும் குழந்தையைப் பார்க்க கை நிறைய கருப்பட்டி மிட்டாய் சுமந்து வந்தது, எதிர்பாரா தருணத்தில் எதிர்பாராத வீச்சாய் நிகழ்த்திய உரை என கோணங்கியைப்பற்றிய பதிவுகள் எல்லாமுமே அழகானவை.

ஒரு அதிகாலையில் கிணற்றில் நீந்திக்கொண்டிருக்கும் வேலா (எழுத்தாளர் வேல ராமமூர்த்தி என நினைக்கிறேன்) “இந்நேரம் கோணங்கி இங்க வந்தா எப்படி இருக்கும் ?” எனக் கேட்டு முடிக்க. இரவெல்லாம் பயணம் செய்திருந்தாலும் அந்த களைப்பின்றி ஒடி வந்துகொண்டே சட்டையைக் கழற்றியபடி கிணற்றில் கோணங்கி குதிக்கும் சம்பவம் ஒரு அழகான கவிதை.
**

நீண்ட நாட்களுக்கு பின் நாசி உணர்ந்தது மண்வாசத்தை. நம்ம முடியாமல் கோணங்கியிலிருந்தும் பவா விடமிருந்தும் மீண்டு நிமிர்ந்து பார்த்தேன். பேருந்து கருவலூரை நெருங்கிக்கொண்டிருந்தது. பல மாதங்களுக்கு பின்னர் கண்ணெதிரே மழையைப் பார்த்தேன். மனதில் ஓடி வந்து கிணற்றில் குதித்த கோணங்கியின் சித்திரம் எழுந்தது.

வாழ்க்கை இனிதானது.

இந்த நாளுக்கான மகிழ்ச்சிக்கு பல நன்றிகள் பவா..

No comments: