title


பரமு

சில வாரங்களுக்கு முந்தைய ஒரு ஞாயிறு இரவில், திருப்பூர் செல்வதற்காக பூண்டி (என் சொந்த ஊர்) பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். லேசான மழை பெய்து கொண்டிருந்தது. ஏதேதோ சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. பேருந்து நிறுத்தத்தில் மிக சொற்பமான பயணிகள் இருந்தனர். என்னவென்று வரையறுக்கவியலாத ஏதேதோ சிந்தனைகள் மனதுள் தோன்றியவண்ணமிருந்தன. ஒரு சில வினாடிகளாக மனதில் யாரோ என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு உள்ளுணர்வு தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தேன் தெரிந்தவர் யாரும் அருகிலில்லை. எனவே என் உள்ளுணர்வை புறக்கணித்து மீண்டும் கவனத்தை பேருந்து வரும் திசையில் செலுத்த முற்பட்ட போதுதான் கவனித்தேன், பேருந்து நிறுத்தத்தின் ஒரு இருண்ட மூலையில் யாரோ என்னை பார்த்துக்கொண்டிருப்பதை.

அந்த இடம் நல்ல இருட்டு, ஆகையால் .என்னால் அங்கிருந்த நபரை சரியாக காணமுடியவில்லை. அவர் கையிலிருந்த பீடித்துண்டின் ஒற்றை சிவப்பு வெளிச்சம் மட்டுமே அங்கு ஆளிருப்பதை உணர்த்தியது. நானும் அவரைப் பார்த்துகொண்டிருப்பதை கண்டவுடன் அந்த நபர் என்னை நோக்கி வந்தார். என்னருகே வந்த பின் இறுதியாக பீடியை ஆழமாக இழுத்துவிட்டு சுண்டி எறிந்தார். லேசான மது நெடியுடன் என்னைப் பார்த்துக் கேட்டார்....

“என்ன காளீஸ்வரா... அப்படி பாக்குற.. அடையாள்ம் தெரியலையா ?”

இந்த குரல் எனக்கு மிகவும் தெரிந்த குரல்..... நான் என் வாழ்வின் ஏதோ ஒரு கால கட்டத்தில் அடிக்கடி கேட்ட குரல். என் மனம் மிக மிக வேகமாக ஆராயத்துவங்கியது. பல நிமிடங்கள் கழிந்தபின்னரும் என்னால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“டேய்... என்னடா, நெசமாலுமே கண்டுபிடிக்க முடியலையா ?. அப்ப சரி கிளம்பவேண்டியதுதான்..... உனக்கு ஒரு அஞ்சு நிமிசம் டைம் தரேன், அதுக்குள்ள கண்டுபிடிக்காட்டி.... நான் பாட்டுக்கு போய்க்கிட்டேயிருப்பேன்”

யோசிக்கத்துவங்கிய அந்த நிமிடமே எனக்குத் தெரிந்துவிட்டது அஞ்சு நிமிசமில்லை அஞ்சு மணிநேரமானாலும் என்னால் அவனை அடையாள்ம் காணவியலாதென்று.

ஓரிரு நிமிடங்களில் அவனே என்னால் கண்டுபிடிக்க முடியாதென எப்படியோ தெரிந்து கொண்டான் (என்ன எப்படியோ தெரிந்து கொண்டான், பாண்டியராஜன் ரேஞ்சுக்கு அழகான திருட்டு முழி முழிச்சு..பாக்கியராஜ் மாதிரி பம்முனா, எவனா இருந்தாலும் நீ வேஸ்டுன்னு தெரிஞ்சுக்குவாங்கடா முட்டாள்.....). பின்னர் அவனே பேசத்துவங்கினான்.

”ம்.. எப்படியாவது கண்டுபிடிச்சுருவன்னு நெனச்சேன்... பரவாயில்ல... பல வருசமயிருச்சுல்ல... அதான் மறந்துட்ட.. நான் தான்டா பரமசிவம். உங்கூட…”

அவனுடைய பெயரைக் கேட்டவுடனே எனக்கு அவனைத் தெரிந்துவிட்டது. என்னுடன் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ”திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி” யில் ஒன்றாகப் படித்தவன். நெருங்கிய தோழன் என சொல்லமுடியாவிட்டாலும், மறக்குமளவு அன்னியனில்லை.

எங்கள் பள்ளி ஒரு கிராமப்புறப் பள்ளி. பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தினரும் அதற்கும் கீழிருப்பவர்களும் படிக்கும் பள்ளி. இங்கு நான் குறிப்பிடும் நடுத்தரவர்க்கத்தினர் என்பவர்கள் சத்துணவை நம்பியிராத குடும்ப மாணவர்கள் அவ்வளவே. அதைபோலவே பெரும்பாலும் விவசாயத்தை நம்பிருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். என்னுடைய நண்பர்கள் பலரும் விடுமுறைதினத்தில் கூலி வேலை செய்தவர்கள். ஒருவகையில் நான் வாழ்வின் முகங்களை அறிந்துகொள்ளச் செய்தவர்கள்.
அந்த பள்ளியில் ஒரு மூன்றாண்டு காலம் என்னுடன் படித்தவன்தான் இந்த பரமசிவம். இருவரும் பெரும்பாலும் அடுத்தடுத்த பெஞ்ச்களில்தான் அமருவோம். என்றாலும் வகுப்பறையினுள் அதிகம் பழக்கமில்லை. மற்றபடி கிரிக்கெட் விளையாட்டிலும், மதிய உணவுவேளைகளிலும் பலமுறை பேசி சிரித்து பழகியிருக்கின்றோம். விவசாயக் குடும்பத்திலிருந்து படிக்கவந்தவன், சுமாராகத்தான் படிப்பான்.

அவன்தான் என்னெதிரே மது நெடியுடன், பீடிப்புகையுடன் நிற்கின்றான். அந்த நொடியில் நானடைந்த வெட்க உணர்ச்சிக்கு அளவே இல்லை. அவனிடம் முகத்திலும் சரி, உடல் பருமன், உயரம் இப்படி எதிலும் பெருமளவு மாற்றம் இல்லாத போதும் என்னால் அவனைக் கண்டறிய இயலாமல் போனதையெண்ணி மிக வருத்தமடைந்தேன்.

”என்னடா இப்பவாச்சும் அடையாளம் தெரிஞ்சதா..இல்லியா ?”

”சொல்லுடா பரமு, ஸாரிடா என்னால டக்குன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியல. எப்புடி இருக்க ? என்ன பண்ணுற?”

“நா நல்லாதாண்டா இருக்கேன், நீ என்ன பண்ணுற ? எங்கியோ பயணம்வெச்சுடாப்புல தெரியுது”

”நா மெட்ராஸ் ல வேலைல இருக்கேண்டா. லீவுக்கு ஊருக்கு வந்தேன். இப்ப திரும்ப மெட்ராஸ் போறேன்”

“நீ, பரவாயில்லடா நல்லா படிச்ச, இப்பபாரு மெட்ராஸ்ல வேலைல இருக்க. என்ன பாரு, படிடா படிடான்னு எங்கையன் சொன்ன போதும் கேக்கல, வாத்தியாருங்க சொன்னபோதும் புரியல... இப்ப என்னடான்னா....”

“ஏன்டா நீ இப்ப என்ன பண்ணுற?”

டக்கென்று சிரித்தான். எனக்கு ஒரு நிமிடம் என் பள்ளி நினைவு வந்து போனது.

“என்ன பண்ணலன்னு கேளு”

”.....”

“கஞ்சா, கடத்தல், பீடி, குடி, கம்பெனி வேல இப்படி எதயும் விட்டுவக்கல. சோத்துக்கு என்ன வேணுமோ அத எல்லா வழியிலும் சம்பாதிக்கிறேன். அவ்வளவுதான். நான் நல்லாதாண்டா இருக்கறேன். நீயும் நல்ல இரு”

நான் பேசமறந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சரிடா உனக்கு பஸ் வந்திருச்சு, பாத்து போ. இப்படி எப்பயாவது பாத்த ரண்டு வார்த்த பேசு என்ன...”

சொன்னவன், பதிலுக்கு காத்திராமல் லேசான தள்ளாட்டத்துடன் சாலையைக் கடந்து சென்றான். கனத்த மனதுடன் பேருந்து ஏறி இருக்கையில் அமர்ந்த பின்னர் அவனிடம் கூற மறந்ததை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

“இல்லடா பரமு, வெறும் படிப்பு மட்டுமில்ல எங்கப்பா, அம்மா அங்க இங்க கடன் வாங்கித்தந்த காசும்தான் என்னோட இந்த நிலைக்கு காரணம். விதியோ இல்ல வேற எதாவதோ உனக்கும் உன்ன போல நெறைய பேருக்கும் அது அமையல”

No comments: