title


34 ஆவது சென்னை புத்தக காட்சி – புத்தகப்பட்டியல் (ஜனவரி 14)

சென்ற ஜனவரி 14 வெள்ளியன்று நான் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே.

முன்னரே சொன்னதுபோல நான் நீண்ட நாட்களாக தேடிவந்த சில புத்தகங்கள் இந்தமுறை எனக்குக் கிடைத்தன. அவை “அஞ்சலை”, “கொற்றவை” மற்றும் ”தவிப்பு”. அதிலும் அஞ்சலை மற்றும் தவிப்பு நாவல்கள் இனி நிச்சயம் கிடைக்காதென நானே என்னை சமாதானப்படுத்தி இருந்தேன். என்றபோதும் ஒவ்வொரு மாதமும் புத்தகம் வாங்கச் செல்லும் போதும், எல்லா புத்தகங்களையும் பார்த்து விட்டு இறுதியாக நான் மேற்சொன்ன புத்தகங்களை கேட்பதும், “சார் அது அவுட் ஆப் பிரிண்டு சார், நீங்க எங்க தேடினாலும் கிடைக்காது” என பதில் வருவதும் இயல்பான விசயங்கள். அதைப்போலவே நீண்ட நாட்களாக தேடி வந்த பொழிபெயர்ப்பு நூலகளும் இம்முறை கிடைத்தது நிறைவான விசயம்.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் எல்லா புத்தகங்களையும் இப்போதுதான் வாங்கியுள்ளேன், இன்னும் படிக்கவில்லை. எனவே புத்தகம் பற்றிய குறிப்புகள் ஏற்கனவே நான் பல்வேறு தளங்கள் வாயிலாக அறிந்தவை மட்டுமே.

1. அஞ்சலை – கண்மணி குணசேகரன் (தமிழினி பதிப்பகம்)
நீண்ட காலமாக நான் தேடி வந்த இந்த நாவல். பெண்மையின் அவலங்களை மட்டுமின்றி ஆளுமையையும் பதிவு செய்துள்ளதாக பாராட்டப்பட்டது. தமிழின் ஆகச்சிறந்த பெண் கதாபாத்திரங்களில் அஞ்சலையும் ஒருவர்.

2. கொற்றவை – ஜெயமோகன் (தமிழினி பதிப்பகம்)
சிலப்பதிகாரதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள புதுக்காவியம். நான் இந்த புத்தகதை வாங்க முற்ப்படுகையில் அருகிலுருந்த பெரியவர் “ஒவ்வொரு தமிழனுடைய வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம் தம்பி” என்றது கூடுதல் சிறப்பு.

3. பேயோன் 1000 - பேயோன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
ட்விட்டரில் பேயோன் அவர்களது நுண்பதிவுகளின் தொகுப்பு. சிரிக்க, சிந்திக்க, குழம்ப, குதூகலப்பட என எல்லா வகையிலும் அறியப்பட்ட “காக்டெய்ல்”.

4. திசை காட்டிப் பறவை – பேயோன் (ஆழி பப்ளிஷர்ஸ்)
நிச்சயமாக இவரின் எழுத்து நானறிந்தவரை மிக மிக புதுமையானது. இவரே எழுதும் இவரின் கதையில் இவர்தான் மூன்றாம் நபர்.

5. தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் – திரட்டித் தொகுத்தவர் ஏ.கே.செட்டியார் (சந்தியா பதிப்பகம்)
தமிழின் முதல் சிறந்த பயணி என்று அறியப்படுபவரும், சிறந்த பயணக்கட்டுரைகள் எழுதியவரும், உலகம் சுற்றிய தமிழருமான ஏ.கே.செட்டியார் தொகுத்த பயணக்கட்டுரைகள் (பிறர் எழுதியவை).

6. தவிப்பு – ஞாநி (ஞானபாநு)
அதிதீவிர அரசியல் கட்டுரைகளுக்கு பேர்போன திரு.ஞாநி அவர்களின் நாவல். இதுலும் அரசியல்தான் களம். என்றபோதிலும் அதை சொன்னவிதம்தான் இந்த நாவலின் சிறப்பு.

7. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி (வம்சி புக்ஸ்)
எழுத்தாளர் திரு. பாஸ்கர் சக்தியின் ஒன்பது சிறுகதைகள் மற்றும் இரண்டு குறுநாவல்கள் (ஏழு நாள் சூரியன் ஏழு நாள் சந்திரன், அழகர்சாமியின் குதிரை) கொண்ட தொகுப்பு.

8. நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா (சந்தியா பதிப்பகம்)
தன் தினசரி வாழ்வின் சம்பவங்களின் தொகுப்பு நூல் என்றபோதிலும் அதை கலாப்ரியா சொன்னவிதத்தில் வசீகரிக்கின்றார். மிகுந்த பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் பெற்ற நூல்.

9. இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர் - தமிழில் குறிஞ்சிவேலன் (சாகித்திய அக்காதெமி)
மகாபாரதக்கதையை முன்வைத்து மலையாளத்தில் எழுதப்பட்ட நூல். அதிக கற்பனைகள் கலவாமல் எதார்த்தமாக நகரும் நாவல். எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் பரிந்துரை.

10. ஒரு கிராமத்தின் கதை – எஸ்.கே.பொற்றெக்காட் – தமிழில் சி.ஏ.பாலன் (சாகித்திய அக்காதெமி)
கிராமிய வாழ்வின் நேர்மையையும் மகத்துவங்களையும் காட்சிப்படுத்தும் இந்த நாவல் மலையாள மொழியில் எழுதப்பட்டது. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் பரிந்துரை.

எல்லா நூல்களின் விலையையும் பதிவிட ஆசைதான் என்றாலும் வருமான வரித்துறையை சமாளிக்க விலையைக் குறிப்பிடவில்லை (என்று சொன்னாலும் உண்மையான காரணம் உள்நாட்டுப் போரை தவிர்ப்பதே என்பதை மணமானவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்).

(ஜனவரி 15 சனிக்கிழமை வாங்கிய புத்தகங்கள் பிறிதொரு பதிவில்)

2 comments:

Anonymous said...

9. இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர் - தமிழில் குறிஞ்சிவேலன் (சாகித்திய அக்காதெமி) - இந்த புத்தகம் எந்த பதிப்பகத்தாரிடம் வாங்க முடியும் என்று சொல்ல முடியுமா?

காளீஸ்வரன் said...

@Anonymous : நண்பரே நான் அந்த புத்தகத்தை வாங்கியது புத்தக கண்காட்சியின் “சாகித்ய அகாதெமி” ஸ்டாலில். எனக்கு தெரிந்து நான் சென்னையில் இருந்தவரை வேறு எங்கும் கிடைக்கவில்லை.
நீங்கள் எந்த ஊர் ? என் தொலைபேசி எண் : 9790987448. முடிந்தால் அழைக்கவும்.