title


இரவு


வயிற்றுக்குள் நீ
எட்டி உதைக்கும் வலி...
சில மணித்துளிகளில்
உன்னைக் காணும் பரவசம்...
அதிகாலையில் உன்னை 
பிரசவிக்கும் வரை
பரவசம் பாதி
பயங்கர வலி மீதியாய்
நான் மாறி மாறி 
செத்துப் பிழைத்த
மார்கழி மாத  மழை இரவு !

ஆறேழு வயதில்
காய்ச்சலில் முணங்கிக்கொண்டு
என் மடியில் நீ ...
கண்மூட மறந்து
உன் அருகில் நான்...
விசும்பலும் வேண்டுதலுமாய்
நான் கழித்த அந்த இரவு !

பள்ளி இறுதிகளில்
படிக்கும் களைப்பில் நீ...
ஏதேனும் கேட்பாயென
எதிர்பார்த்து நான்...
ஓய்வு கேட்கும்
கண்கள் ஒதுக்கி
உன்னுடனிருந்த இரவுகள் !

கல்லூரி நாட்களில்
நமக்குள் வரும்
கணக்கில்லா சண்டைகள்
உணவையும் உறக்கத்தையும்
ஓன்றாய்த் தொலைத்து
என்னையே நான்
வெறுத்த இரவுகள் !

காதல் மணம் முடிக்க
சம்மதம் பெற்று
சந்தோசமாய் நீ உறங்க
சமூகத்துக்கு பயந்து 
தூங்க முடியாமல் நான்
துடித்துக் கிடந்த இரவு !

இவை மட்டுமல்ல
வேறெந்த இரவுகளையும் விட
கொடுமையான வலி தருகிறது
என்னை நீ
"
முதியோர் இல்லத்தில்"
தள்ளிப் போன 
இந்த இரவு !

1 comment:

Geethu said...

அழகிய வரிகள்.... ஒவ்வொரு இரவும் கண் முன்னால் வந்து செல்கிறது அந்த வரிகளை கடக்கும் பொழுது....
அந்தத் தாயின் வலியும் நம்மில் படர்கிறது.....