title


34 ஆவது சென்னை புத்தக காட்சி – வெள்ளி (ஜனவரி 14)

இன்று போகிப் பண்டிகை - விடுமுறை தினம். எனவே 11 மணிக்கெல்லாம் புத்தகக் கண்காட்சி துவங்கிவிடும். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால் (அதிலும் பொதுவாக மாலை நேரங்களில் நல்ல கூட்டமிருக்குமென்பது அனுபவசாலிகளின் அறிவுரை. இவன் புத்தகக் காட்சிக்கு போக முடிவு பண்ணினாலும் பண்ணினான் கேள்வி மேல கேள்வி கேட்டு நம்ம உயிர எடுக்கிறான் என அனுபவசாலிகள் அலுத்துக்கொண்டது தேவையில்லாத தனிக்கதை) நான் காலை நேரத்திலேயே சென்றுவிடுவதென முடிவு செய்திருந்தேன். அதன்படியே 11:30 மணியளவில் பைக்கில் கிளம்பி நான் கண்காட்சி திடலை 12 மணியளவில் அடைந்தேன்.

உள்ளே நுழைந்ததும் முதலிலேயே இரு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம். ஏறத்தாழ பாதி நிரம்பியிருந்தது. எனவே சுமாரான கூட்டம்தான் இருக்குமென நினைத்துக் கொண்டேன். வண்டியை நிறுத்தி விட்டு ரூ.10/- டோக்கனுக்காக செலுத்தினேன். கண்காட்சி நுழைவுக்கட்டணத்தைவிட இது இரு மடங்கு அதிகம். கண்காட்சியை நோக்கி நடக்கலானேன். கார் நிறுத்துமிடத்திலும் அவ்வளவாக கூட்டமில்லை. புத்தகக் காட்சியின் முன்புறத்தில் அரங்களுக்கு வெளியே இருந்த உணவு விடுதி மற்றும் இன்னபிற திண்பண்டங்களுக்கான கடைகளுமிருந்தன (சூப், பால்கோவா, பழரசங்கள் இத்யாதி இத்யாதி). என்றபோதும், அர்ச்சுனன் கண்ணுக்கு புறாவின் கழுத்து மட்டும் தெரிந்தது போல நேராக சென்று அரங்கத்தினுள் செல்ல நுழைவுச்சீட்டு வாங்கினேன் (காலையில் செமத்தியாக சாப்பிட்டு விட்டதால் வேறு வழியில்லை என்பது வசந்தி... இல்ல இல்ல வதந்தி).

நான் முதல்முறையாக சென்னை புத்தகக் காட்சிக்கு செல்வதால் எப்போதும் நடக்கும் சாதாரணமான விசயங்கள் கூட எனக்கு புதிதாக தெரிவதற்கான சாத்தியங்களுண்டு. நுழையுமிடத்திலேயே அரங்கங்களின் அமைப்பைக் காட்டும் “வாசகர் கையேடு” வழங்கப்பட்டது. நான் நுழையுமுன்பே தீர்மானித்திருந்தேன் எல்லா அரங்குகளுக்கும் செல்வதென. எனவே 1,2,3 என முதலிலிருந்து துவங்கினேன்.

ஏறத்தாழ எல்லாருமே புகழ்ந்திருந்த “வரலாற்றுச் சுவடுகள்” புத்தகத்தை வாங்கினேன். தினத்தந்தி அரங்கில் அந்த ஒரு தலைப்பில்தான் புத்தகம்தான் வைத்திருந்தார்கள். ஆனால் அதுவே நன்றாக விற்றது. அடுத்தடுத்த பதிப்பகங்களாக பார்த்துக்கொண்டே சென்றேன். நான் நிச்சயம் செல்ல வேண்டிய பதிப்பகங்கள் மற்றும் வாங்க வேண்டிய புத்தகங்கள் என குறிப்பொன்றை வைத்திருந்தேன். அதிலுள்ள பதிப்பகங்களில் நீண்ட நேரம் இருந்தேன். ஆர்வக்கோளாரால் சில பல ஆங்கில பதிப்பகங்களுக்கும் சென்று (வழக்கம்போல்)புரியாமல் Yes, Ya, You are correct , Thank you சொல்லி வெளியேறினேன். திரு. ஞாநி அவர்களின் ஞானபாநு பதிப்பகத்தில் நான் தேடிக்கொண்டிருந்த “தவிப்பு” நாவல் கிடைத்தது. கூடவே எந்த எதிர்கட்சி சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கான வாக்கெடுப்பும் நடந்தது. நீண்ட யோசனைக்கு பின்னர்(அரை விநாடி என்ற உண்மையை சொன்னால் என் நம்பகத்தன்மை குறையலாம்) என் வாக்கை செலுத்திவிட்டு வந்தேன்.

இந்தப் புத்தக கண்காட்சியில் நான் எதிர்பாராமல் நடந்த நல்ல விசயம் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த “அஞ்சலை” நாவலும், “கொற்றவை” நாவலும் கிடைத்ததுதான். (சார், உங்க பிரச்சனையே, புத்தகம் சுலுவா கிடைக்குற காலத்துல, ”அதான் இருக்கே பின்னால வாங்கிக்கலாம்” ன்னு விட்டுட்டு புத்தகம் தீர்ந்து பதிப்பகமும் பதிப்பை நிறுத்தின அப்புறமா அதே புத்தகத்தை காணக்கிடைக்காத பொக்கிஷம்போல தேடி அலையறதுதான் – என்பது நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் புத்தகக்கடை நண்பர் எனக்களித்த சான்றிதழ்). நான் வாங்கிய புத்தகங்களில் பட்டியல் அடுத்த பதிவில்.

பொதுவாக ஒவ்வொரு வாசகர்களிடமும் மனதில் ஒரு பட்டியல் இருக்கின்றது. அது அவரவர் ரசனையைப் பொருத்தே அமையும். சிலருக்கு சில பதிப்பக புத்தகங்கள், சிலருக்கு குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் புத்தகங்கள், சிலருக்கோ வரலாறு, சுயமுன்னேற்றம், சமையல் குறிப்புகள், ஆன்மீகம் இப்படி ஏதாவது. இதிலும் எல்லா தரப்பிலும் எல்லாவற்றையும் படிக்கவேண்டுமென்ற எண்ணம் கொண்ட ”ஆல் இன் ஆல்” அழகுராஜா மன்னிக்க ஆர்வராஜாக்களும் உண்டு. ஆனால் நான் பார்த்தவரையில் வெறுமனே பொழுதுபோக்க வந்தவர்கள் என எவருமில்லை. நான் கண்டவரையில் கண்காட்சிக்கு நல்ல கூட்டமிருந்ததாகவே கருதுகின்றேன். அதிலும் ஏறத்தாழ 4-5 மாதங்களே ஆயிருக்கும் கைகுழந்தையுடன் கண்காட்சி அரங்கை ஒரு தாய் வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சி.

இறுதியாக ஏறத்தாழ எல்லா அரங்குகளுக்கும் சென்று கை நிறைந்து மனம் நிறைந்து வெளியேறும் போது மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு எப்போது வருவோமென எண்ணிக்கொண்டேன் (அடுத்த இரு தினங்களுக்கு சென்னை சங்கமம் மற்றும் சில திரைப்படங்கள் என்பது என் திட்டம்).

ஆனால் அடுத்த தினமே மீண்டும் புத்தக கண்காட்சிக்கு வரவேண்டியதாய்ப் இருக்குமென்பதும், அன்றைய தினம் எனக்கு மிக மிக சிறப்பானதாயிருக்குமென்பதும் எனக்கு அப்போது தெரியாது.

No comments: