title


ஆடல் கலையே தேவன் தந்தது....

ரஜினியின் நூறாவது படமான ஸ்ரீராகவேந்திரர் என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்கு அறிமுகமான விதமே அலாதியானது...

நான் பள்ளி இறுதிகளில் படித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் மற்ற பாடங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருப்பேன் (அதிலும் உயிரியலும் , இயற்பியலும் எந்தன் முன்னை வினைப் பயன்களோ என எண்ணி பல நாட்கள் பயந்திருக்கிறேன்).

என்ற போதிலும் என்னை உயிர்ப்போடு நான் வைத்துக்கொள்ள உதவிய ஒரே பாடம் (வேறென்ன) தமிழ் தான்.

எங்கள் தமிழ் அய்யாவுக்கு ஒரு எண்ணம் உண்டு , "இந்தக்கால பசங்க உருப்படணும்னா சினிமக்காரங்களப் பூராம் நாடு கடத்தணும்" என சொல்லுவார்.

அப்படிப்பட்ட தமிழ் வகுப்பில் அந்த அய்யாவே ஒரு திரைப்பாடலை உதாரணமாக சொன்னால் நமக்கு புல்லரிக்காதா என்ன?.

அன்றைய தினம் அவர் நடத்திக்கொண்டிருந்த பாடம் கம்பராமாயணம் (அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் , கம்பராமாயணம் நடத்தியதை விட ராமரையும் கம்பரையும் துவைத்து தொங்கவிட்டது தான் அதிகம்).

அப்போது தான் திடீரென அவர் வகுப்பை பார்த்துக் கேட்டார் "யாரெல்லாம் ஸ்ரீராகவேந்திரர் படம் பார்த்திருக்கிறீர்கள் ?" என்று .எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி.. என்னடா சினிமான்னாலும் சாமின்னாலும் கடுப்பாகிற அய்யா இன்னிக்கு இப்படியொரு கேள்வி கேட்கிறாரே .. ஏதாவது விவகாரம் இருக்கும்டான்னு கப்சிப்னு இருந்தோம்.

அப்புறம் அய்யா என்ன நினைத்தாரோ அவரே சொல்ல ஆரம்பித்தார்....

ஆடல் கலையே தேவன் தந்தது....ன்னு துவங்கும் பாடலின் இசை மற்றும் வரிகளை மிகவும் புகழ்ந்த அவர் செய்கை எங்களுக்கு வியப்பளித்தது. அதிலும் பின்வரும் வரிகளை அவர் மிகவும் ரசித்ததாக சொன்னார்.
.
.
.
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள்
.
.
.
அதன் பின்னர் பல முறை அந்தப்பாடலைக் கேட்டும் பார்த்தும் ரசித்திருக்கிறேன். எனக்கு அந்தப்பாடலின் அனைத்து வரிகளுமே பிடித்துப்போயின.

அய்யா போன்ற முற்றிலும் எதிர் கருத்து உடைய ஒருவர் இப்பாடலை புகழ்ந்தது குறித்து மெல்லிய பிரமிப்பு இருக்கின்ற போதிலும் இப்பாடலின் வெற்றி இத்தகைய பிரமிப்புகளில் தான் இருக்கிறது எனலாம் .

No comments: