title


பெரியார் பட பாட(ங்)ல்கள்

முதலில் பெரியார் பட பாடல்களை தவற விட்டது மாபெரும் தவறென்பதை எனக்கு புரியவைத்தமைக்கு நண்பர் பிரதீபின் பதிவுக்கு நன்றிகள் பல.
ஏற்கனவே இருக்கும் நண்பரின் பதிவில் எனக்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

பின் எதற்கு இந்தப் பதிவு ?

மொத்தம் ஐந்து பாடல்கள் என்ற போதிலும் பெரியார் பாடல்களாக நான் கருதுவது இரு பாடல்களை மட்டுமே. உடனே மற்ற பாடல்கள் எல்லாம் தேவையற்றவைகள் என நான் கூறுவதாக எண்ணுதல் வேண்டாம்.
அந்த பாடல்களை பற்றியெல்லாம் நான் எந்த ஓரு கருத்தையும் முன்வைக்க விரும்பவில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்த பதிவின் நோக்கமே நான் முற்சொன்ன அந்த இரு பாடல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுதல் மட்டுமே. இதோ என்னை பெரிதும் ஈர்த்த அந்த இரு பாடல்கள் பற்றி...

பாடல் 1 : பகவான் ஒரு நாள்...

ஆத்திகர்களும் நாத்திகர்களும் விவாதம் செய்துகொள்ளுவதைப் போன்றதொறு பாடல். நாத்திகர்கள் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் மிக அருமை .அதைப் போலவே ஆத்திகர்களின் கேள்விகளுக்கு ஏற்றதொரு மறுப்பை பாடலாக சொல்லுவதும் அற்புதம்.

இப்பாடலின் இடையில் நாத்திகர்கள் எழுப்பும் வினாக்கள் சில...

குளிக்காத பசுவை கும்பிடுறீங்க..
அதை குளிப்பாட்டும் மனிதனை ஏன் கொல்றீங்க ?

.
.
பிறன் மனை கவர்ந்த இந்திரன் - தேவன்
பிறன் மனை நோக்கினும் அவரை கற்போடு விட்டவன் ராவணண் - அசுரன்
உயர்ந்தவர் யார் அசுரரோ ? தேவரோ ?

.
.
நந்தனுக்கு பகவான் மோட்சம் தந்ததாக ஆத்திகர்கள் சொல்ல அதற்கு மறுப்பு வருகிறது இப்படி...

நந்தனுக்கு மோட்சம் தந்தீரோ?
அவன் சந்ததியெல்லாம் சந்தியில் ஏன் நின்றார்?

இவை யாவைக்கும் சிகரம் வைத்தது போன்ற (சர்ச்சைக்கு உள்ளான) அந்த இறுதி இரு வரிகள் அருமை. சிலர் அவ்வரிகளால் வருத்தமடையக்கூடும். மற்றோர் மனதை புண்படுத்த விரும்பததால் சுட்டிக் காட்டவில்லை.


பாடல் 2 : கடவுளா நீ கல்லா ? ...

ஒடுக்கப்பட்ட சகோதரர்கள் எழுப்பும் கேள்விக்கணைகளே இப்பாடல். ஒடுக்கப்பட்ட சகோதரர்களின் கோவம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரித்து விழுகிறது .

உதாரணம் இதோ...

நாயும் பூனையும் நடந்தால் புண்ணியம்
மனிதர் நடந்தால் பாவம்.

.
.
எங்கள் கைகளும் கால்களும் தீண்டியிராவிடில் கோவில்கள் ஏதுமில்லை
எங்கள் தோள்கள் தொடாவிடில் கடவுளர் யாருமே கருவறை சேர்வதில்லை

அற்புதமான இப்பாடல் மிக அற்புதமாக முடிகிறது இப்படி

மனிததர்மம் பொதுவாகட்டும்
மனுதர்மம் உடையட்டும்
வானவில்லில் மட்டும் இனிமேல்
வர்ண பேதம் இருக்கட்டும்



இசை : வித்யாசாகர்

அற்புதமானதொரு பங்களிப்பை மேற்சொன்ன இரு பாடலுக்கும் தன் இசை மூலமாக செய்துள்ளார்.வார்த்தைகளின் கழுத்தை நெரித்துக் கொல்லும் இன்றைய சூழலில்.வார்தைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் வராமல்அர்த்தத்தை விளங்கிக்கொள்ளும் வண்ணம் நல்லதொரு இசையை வழங்கியுள்ளார்.


பாடல்கள் : வைரமுத்து

முதலில் மேற்ச்சொன்ன இரண்டும் வெறும் பாடல்களல்ல ... பாடங்கள்.இவை உண்மையிலேயே வைரமுத்து அவர்களின் மாபெரும் படைப்புகளுக்கு இணையானதொரு கருத்துச் செறிவினை கொண்டுள்ளன.

அதிலும் என்னை மிகவும் அதிர வைத்த வரிகள் ...(கடவுளா நீ ?எனத் துவங்கும் பாடலில் வரும் வினா ... பின் வருமாறு)

நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் மட்டும் நாங்கள் மட்டும் எச்சில் விழுந்தா பிறந்தவர்கள் ?

வணங்குகிறேன் வைரமுத்து அவர்களை.

இந்த இரு பாடல்களும் என்னை ஈர்த்ததில் என்னளவில் வியப்பில்லை.
நன்றி.

No comments: