title


சீவலப்பேரி பாண்டி

வாழ்வின் மிகசிக்கலான நுட்பங்களை, சக மனிதர்களின் சூதை, எளிய மனிதர்கள் அறிவதில்லை. என்றபோதிலும், ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கின்ற வாழ்வதற்கான வேட்கை, சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள உதவுகிறது. காலப்போக்கில் எளிய மனிதர்கள் தன் இயல்புக்கு மாறாக வாழ்க்கையை வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். அப்படித்தான், சாதாரணமாக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டிய ஒருவர், காலத்தால், விளைவுகளை யோசிக்காமல் எடுத்த முட்டாள்த்தனமான முடிவால் காலம் கடந்தும் வரலாற்றில் நின்றுவிட்டார். அவர் பெயர் “பாண்டி”. இல்லை இல்லை “சீவலப்பேரி பாண்டி”.


பாளையங்கோட்டைக்கு அருகிருக்கும் சீவலப்பேரி கிராமத்தின் முன்சீப் ஊரே மதிக்கும் பெரிய மனிதர். அந்த ஊரின் எல்லா பஞ்சாயத்துகளையும் நியாயமான முறையில் தீர்த்துவைப்பவர். ஆனால் எல்லாருக்கும் நல்லவராய் இருப்பது ஆண்டவனாலேயே ஆகாத ஒன்று. அப்படித்தான் முன்சீப்பின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட முதலாளிகளுக்கு அவர் வேண்டாதவராகிவிடுகிறார். அவரை வஞ்சம் தீர்த்துக்கொள்ள எண்ணும் முதலாளிகளின் சதிக்கு இரையானவன்தான் பாண்டி. பாண்டி முன்சீப்பிடம் வேலை பார்க்கும் நம்பிக்கையான வேலையாள். தனிப்பட்ட முறையில் அவர்மீது எவ்வித காழ்ப்புணர்வும் (அவன் சிறு வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நீங்கலாக) அற்றவன்.


தன் ஜாதியை சேர்ந்த பெரியமனிதர்களின் அவதூறுகளைக் கேட்டும், தன் எதிர்காலம் குறித்த ஆசைவார்த்தைகளை நம்பியும், முன்சீப்பை கொன்றுவிடுகிறான் பாண்டி. சிறை சென்று கொஞ்சகாலம் கழிந்தபின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவருகிறது. வார்த்தை தவறிய பெரியமனிதர்களில் வஞ்சத்தால் பாண்டியின் குடும்பம் வறுமையில் விழுகிறது. மனம் பொறுக்கமுடியாமல் சிறையிலிருந்து தப்பித்து, தன்னை ஏய்த்த பெரிய மனிதர்களை கொல்கிறான் பாண்டி. தலைமறைவு வாழ்க்கையில் மனைவியை இழந்து, பின்னர் ஒரு கட்டத்தில் கைதாகி, போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுகிறார் பாண்டி.


நாம் திரைப்படமாகப் பார்த்த அதே சீவலப்பேரி பாண்டியின் கதைதான். ஆனால் உண்மைக்கு மிக மிக அருகில், அதிக விவரங்களுடன் எழுத்தப்பட்ட இந்த நாவல் வெளிவந்த ஆண்டு “1993”. திருநெல்வேலி பாஷையில், சுவாரசியமான நடையில் ”திரு.செளபா” அவர்களால் ஜூனியர் விகடனில் தொடராக எழுதப்பட்டு, பின்னர் நாவலாக விகடன் பிரசுரம் வெளியிட்டது.


புத்தகத்தின் இறுதிப்பக்கங்களில் திருமணக்கோலத்தில் இருந்த பாண்டியின் புகைப்படம், அவனை கொல்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம், கொன்ற பின்னர் எடுத்த புகைப்படன் என மூன்று புகைப்படங்கள் தரப்பட்டிருந்தன. படித்துமுடித்த பின்னர், ஏனோ, ஒருவித வெறுமையா? கவலையா? என இனம்புரியா உணர்வுடன் இரு தினங்கள் கழிந்தன.


1993 – விகடன் பிரசுரம் – செளபா

No comments: